இப்படி ஒரு கொலை செய்வதை  இன்னும் தாமதமாக ஆரம்பித்திருக்கலாம் அல்லது தன்னைக் கொலை செய்யச் சொல்லி  சீனு தாமதமாகத்தான் வேலை கொடுத்திருக்கிறார் என்பது சுரேஷுக்கு விளங்கியது.

வழக்கமாய் மிதிவண்டியில் வரும் சீனு அவரின் இரட்டைச் சக்கர வாகனத்தில் மது போதையில் இருந்த ஒருவரை கூட்டி வந்து வண்டியை நிறுத்தியபடி பின்னால் உட்கார்ந்து இருந்தவரை வலது கையால் எம்பி கீழே விழ வைத்தார். வந்தவர் முழு போதையில்  இருப்பது நன்கு தெரிந்தது. விழுந்த வேகத்தில் எந்த வலியையும் அவர் முகம் காட்டாதபடி இறுகிப் போய்விட்டது. கண்களை அவர் திறக்க முயன்று பின்பு மூடிக்கொண்டார் இவன் தலையில ஒரு அடி கொடுத்து சாகடித்துப் புதைத்திரு என்று சொன்னார். : போட்றா ஒரு போடு

அரைகுறையாக இருந்த ஒரு குழியை  சரியாக ஒரு குழியை மூட வேண்டிய வேலை இருந்ததால் கையில் கடப்பாரையும் மம்பட்டியும் சுரேஷ் கையில் இருந்தது.

“ போடணும்னு சொல்றேனே போட்டுடு”  சீனுவின் முகம் இன்னும் இறுக்கமாகத்தான் இருந்ததுக் கண்கள் சிவந்து இருந்தன. நன்கு குடித்து இருக்கிறார் என்பதுதான் தெரிந்தது. ஏதோ கோபப்பட்டு சொல்கிறார் என்று தான் சுரேஷ் நினைத்தான்.

. ” போடறான்னு சொல்றனே போடு. போட்றா ஒரு    போடு  “

.    சுரேஷ் எதுவும் பேசாமல் தூரத்தில் இருந்த சிதைந்த கல்லறைகளைப்  பார்த்துக்கொண்டிருந்தான்.

“அடுத்த வாரம் தங்கச்சி கல்யாணம் இருக்கு இல்ல. அதுக்குப் பணம் வேண்டாமா. போடு ஒரே போட்ல போட்டுத் தள்ளு .புதுக்குழி போட்டு அவனை மூடிவிடு”. சுரேஷுக்கு அவனின் தங்கை திருமணத்திற்கு பணம் தேவையாகத்தான் இருந்தது. ஆனால், அவன் கொடுக்கிற வேலை அபாயகரமாகத் தோன்றியது. இதுவரைக்கும் அப்படி வேறு மாதிரி  எதுவும் வேலை தந்ததில்லை.

“ காசு வேணும்னா போடு நான் போட்டுடுவேன். ஆனா நீ போட்டுப்  பாக்கணும். அதுக்காகத்தான்  இங்கிருந்து ஆரம்பிக்கச் சொல்றேன் ”என்று சீனு சொன்னார். சுரேஷ் வேறு வழியில்லாமல் கையில் இருந்த மம்பட்டியால் கீழே போதையில் விழுந்து கிடந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க ரத்தம் பீறிட்டது.

” புதுக்குழி ஒன்னு தோண்டி உள்ள போட்டுட்டு. அவ்வளவுதான். ஒன்னும் நினைக்காதே. முதல் வேலைதான் சிரமமா இருக்கும் அப்புறம் போகப் போக இதுவே சுலபமாயிடும்.  உங்க தங்கச்சி கல்யாணம்,  அம்மாவுக்கு ஆபரேஷன்,  அப்பாவுக்கு வைத்திய  செலவு எதுவேணும்னாலும்  பார்த்துக்கிறேன். இங்கிருந்து நீ ஆரம்பிக்க வேண்டியிருக்கும்”

0

வேறு வழியில்லாமல் புதுக்குழியை அன்று சுரேஷ் தோண்ட  வேண்டியிருந்தது. செத்துப் போனவனை அப்படியே காலால் உருட்டித் தள்ள வேண்டி இருந்தது. இதுவரை சீனு இது மாதிரியான வேலை அவனுக்குக் கொடுத்ததில்லை. இதுதான் முதல் முறை. சீனு வந்த இரட்டைச் சக்கர வாகனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பலமுறை சீனுவின் மிதிவண்டியில் அவன் சென்றிருக்கிறான்.சுகமான பயணம் என்கிற வகையில்தான் இருந்திருக்கிறது

0

அவன் அந்தக் கல்லறை தோட்டத்திற்கு வந்தபோது கல்லறைக் குழி வெட்டுபவனாகத்தான் வந்தான்

“  குழி வெட்ற வேலைதா  இருக்கு வேற ஒன்னும் வேலை இல்லை “ என்றார்.

”  செய்யறேங்க “

“ சரி பொணம்  வரும்போது குழி வெட்டணும். அவ்வளவுதான். எதுத்த மாதிரி  மின்மயானம் வரப்போகுதாம். அது வர்ற வரைக்கும்தான் நமக்கெல்லாம் வேலை இருக்கும். அதுவரைக்கும்தான் காசு எல்லாம் சேர்க்க முடியும். இந்த  வேலையிலதா  காசு பார்க்க முடியும்”

குழி வெட்டும் மற்றும்   பிணங்களை அடக்கம் செய்யும் வேலையைத்தான் சுரேஷ் செய்துகொண்டு இருந்தான்.

ஒரு நாள் ரோஸ் நர்சரிக்கு கூட்டிக் கொண்டு போனார். ரோஸ் நர்சரி என்பது ஒர் ஆரம்பப் பாடசாலை. ஆங்கிலப் பாடசாலை. மாலையில் நான்கு மணிக்கு அந்தப் பள்ளி வகுப்புகள் முடிகிறபோது வெளியே வரும்போது  ஒரு குழந்தையைப் பார்க்கச் சொன்னார் சீனு. இரண்டு நாட்கள் அப்படித்தான் அந்தப் பெண் குழந்தையைப்  பார்த்தான். அழகாகத்தான் இருந்தது.

“ அந்தக் குழந்தையை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போயி ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்துட்டு எங்காச்சு ஒரு இடத்துல விட்டுட்டு வந்துரு. வேற ஒன்னும் பண்ணாதே”

“ நான் குழி வெட்ற வேலையைப் பண்ணுகிறேன். அது போதும்”

“  இதையும் பண்ணனும். இல்லைனா தங்கச்சி, அப்பா, அம்மா இவங்களையெல்லாம் யார் காப்பாற்றுவா. நான் கொடுக்கிற காசுதான் காப்பாற்றும்”

அந்தக் குழந்தையை அவன் அப்படித்தான் தினமும் கவனித்திருந்து விட்டு  நான்காவது நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிக்கொண்டு போய் கொண்டத்துக் காளியம்மன் பின்புறம் இருந்த முனியப்பன் சிலை அருகில் விட்டுவிட்டு வந்து விட்டான். அதற்குள் மூன்று மணி நேரம் ஆகிவிட்டதுக் குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்துக்குப் போனார்கள். பல இடங்களுக்கும் செய்திகள் பரவின. கடைசியில் அழுது கொண்டிருந்த குழந்தையைச் சிலர் காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள்.

“ அந்த மூன்று மணி நேரம் அந்தக் குழந்தையை காணமுன்னு அந்த நாயி பதற்றப்பட்டு அலைஞ்சா பாரு எனக்கு அது போதும். அதுதான் பழிவாங்க சரியானது”

“  அந்த நாய் என்னங்க அப்படி பண்ணினான்.”

“ அந்த நாய் .. அவ .. அவளை இந்தக் கல்லறைத் தோட்டத்துல ஒரு குழிதோண்டிப் புதைத்து இருக்கணும். ஆனா நான் விட்டுட்டேன். இப்போ சின்ன சாக்கா அவள பழிவாங்க இது பண்ணி இருக்கேன் .போதும். ஆரம்பம்தான் ”

“ அவளுக்காக அந்தக் குழந்தையை எதுக்குங்க கஷ்டப்படுத்தணும்”

“ அவளெ பழிவாங்க  எங்க ஆச்சு ஆரம்பிக்கணும்ன்னு சரியா ஆரம்பிச்சிருக்கேன் .”

அதுதான் சுரேஷ் செய்த முதல் குற்ற காரியம்..சவக்குழி வெட்டும் வேலையைத் தவிர சீனு சொன்ன  பிற வேலைகளில் முதலாவது அது. . அதன் பிறகு சில கொலைகளைச் செய்யச் சொன்னார். எல்லாம் சுலபமாக முடிந்தது. ஆனால், இதெல்லாம்  எங்க போய் மாட்டும் என்றுதான் அவனுக்குப் பயம் இருந்து கொண்டே இருந்தது. அவனுக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் ஏதாவது இப்படி செய்யச் சொல்வர் சீனு.

“ அம்மாவெ நல்லாப் பார்க்க வேண்டாமா? அப்பாவைப்  பார்க்க வேண்டாமா? இல்ல அவங்களுக்கு இந்த கல்லறைத் தோட்டத்துல குழியை  வெட்டி பொதைச்சிடுவியா? அதன்பின் குழி வெட்ற வேலையினால உனக்கு எல்லாம் ஃப்ரீயா  வந்துடுமா ”

இப்படிக் கொலை செய்வதை விட திருட்டு எவ்வளவோ மேல் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. திருட்டுப் பட்டத்திற்குள் போய் விடக்கூடாது என்று தான் அவன் நேர்மையாக வேலை செய்ய ஆசைப்பட்டு இந்தத்  தோட்டத்திற்கு சவக்குழி வெட்டும் வேலைக்கு வந்தான்.

குழந்தையைக் கடத்திக் கொண்டு போன மாதிரி   அப்படி சின்ன சின்னதாய் பல விஷயங்கள் செய்ய வேண்டி இருந்தது. யாரையாவது மிரட்ட வேண்டி இருந்தது. கொஞ்சம்  நாலு தட்டு தட்ட  வேண்டி இருந்தது.

ஆனால், திரும்பத் திரும்ப கொலை செய்ய சீனு தூண்டவில்லை என்பதுதான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. .ஆனால் சுரேஷ் செய்த காரியங்களில் பல  குற்ற காரியங்கள் என்று பட்டியலிடும் வகையில்தான் இருந்தது. அது சீனுவுக்கும் தெரிந்தது.  இது எல்லாம் விட்டுவிட்டு  வேறு வேலைக்குப் போய் விடலாமா பக்கத்தில் புதுசா புதிதாய் ஏதோ மில்லொன்று வந்திருந்தது. தற்காலிகமாகத் தொழிலாளர்களை எடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதற்குப் போய் விடலாமே என்று கூட நினைத்தான்.

“ அப்படியெல்லாம் விட்டு விட மாட்டேன். நீ பண்ண காரியம் எல்லாம் என்கிட்ட இருக்கு. அதை வைத்து நான் உன்னை மிரட்டிடுவேன் எனக்குத் துணையா நான் சொல்ற காரியத்தைப் பண்ணிட்டு தங்கச்சி அப்பா அம்மா குடும்பம் அப்புறம் இனி வரப்போற பொண்டாட்டி இவங்களையெல்லாம் நல்லா வச்சுக்க நீ என்னோடு இருக்கிறதா சரியா இருக்கும்.”

வேறு வழி இல்லாமல் சுரேஷுக்கு அது கூட சௌரியமாகத்தான் தோன்றியது. ஆனால் சீனு என்ன சொல்லப் போகிறார், குழி வெட்டுவதைத் தவிர  என்ன வேலை தரப் போகிறார் என்பதுதான் அவனுக்குள் பயத்தை கிளப்பிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் சவக்குழி வெட்டும் வேலையைத்தான் அவர் சொன்னார் என்பது ஆறுதலாக இருந்தது ..அந்த வேலையைச் செய்வதற்கு அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வேறு ஆட்கள் இல்லை. ஒரு ஆள் போதும் என்று சொல்லிவிட்டார் சீனு. .அவ்வப்போது வந்து சுத்தம் செய்துவிட்டுப் போகிற ஒரு முதியவள் சுரேஷ்சை ஏறிட்டும் பார்த்ததில்லை. காரணம் அவன் முகத்தில் தெரிகிற கொலைக் களையை அவள் கண்டுபிடித்து இருப்பாளா என்று சுரேஷிற்கு சந்தேகம் இருந்தது. கிறிஸ்துவர்களைப் புதைப்பதில்லை . ஆனால் கல்லறைத்தோட்டம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

சீனு கொலையாளிதான் என்ற சந்தேகம் சுரேஷுக்கு அவன் வேலைக்கு வந்த இரண்டாவது நாளில் தெரிந்துவிட்டது கல்லறைத் தோட்டத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. வீட்டு முன்புறத்தில் இருந்த அடைக்கப்பட்ட அறையில் தட்டு முட்டு சாமான்களும் பழைய மரச் சாமான்களும் கிடந்தன அதில் ஒரு மூட்டை ஒன்று கட்டப்பட்டுக் கிடந்தது. அதை ஆவலுடன் ஒரு நாள் அவன் பிரித்துப் பார்த்தான். கடப்பாரை கத்தி போன்றவை அந்த மூட்டையில் இருந்தன. எல்லாவற்றிலும் சிவப்புச் சாயம்..  இது ரத்தக் கறையா அல்லது சிவப்புச் சாயமா என்று சுரேஷுக்குச் சந்தேகமாக இருந்தது. ரத்தக்கறை என்றால் ஏதாவது காவல்துறை நாய் கூட இந்த மூட்டையை வந்து முகர்ந்து பார்த்து அவரைக் காட்டி கொடுத்திருக்கும். ஆனால், ரத்த கறையாகத் தெரியவில்லை

ஒருநாள் அந்த மூட்டையை அவிழ்த்து  எச்சிலைத் தொட்டு அந்தச் சிவப்பு வர்ணத்தைக் கொஞ்சம் அழுக்காக்கிப் பார்த்தான். அப்போதுதான் அது ரத்தம் அல்ல சிவப்பு வர்ணம் பூசப்பட்ட கத்தி கபடாக்கள் என்பது தெரிந்தது. அந்த சாக்கு மூட்டையைத் திறந்ததை சீனு தெரிந்து கொண்டார்.

“  அதுல ரத்தக் கரை இருக்குனு பாத்தியாயா… இல்ல. சிவப்பு கலர் பெயிண்ட்தான். உனக்கு பயத்தை கொடுக்கணும், இந்த விஷயத்துல எல்லாம் சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னுதான் நான் சிவப்பு கறை பண்ணி அங்க வச்சிருந்தேன்.. நீ அதைத் திறக்கணும். பாக்கணும் அப்படி நினைச்சேன்.. ரத்த கலர், ஆயுதம் இதெல்லாம் பாக்குறப்போ உன் மனசுக்குள்ள ஏதோ பயம் தோணும். அப்படித் தோணி நீ ரத்தக்கறை,  கொலை, சாவு இதையெல்லாம் சுலபமா புரிஞ்சுக்கணும். அதுக்குதான் நான் இந்த ஏற்பாட்டை பண்ணனன் ”  என்று சொன்னார். அவர் தன்னை இந்தப் படுகுழிக்குள் தள்ளுவதற்காக இப்படி ஒரு விஷயத்தை வைத்து இருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், ஏதோ பயம் காட்டுவதற்காகத்தான் இதைச் செய்கிறார். பரவாயில்லை என்றுதான் முதலில் நினைத்தான். அதன் பின் சீனு சொல்கிற காரியங்களைச் செய்வது,  பிறகு சமாதானப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சுரேஷ்க்கு குடும்பம் சுலபமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. சீனு சொல்கிற மாதிரி ஒரு பொண்டாட்டியைத் தேட வேண்டிய அவசியமும் இருந்து கொண்டிருந்தது.  தன்னைத் தேடி வருபவளை இங்கேயே கொண்டு வந்து வைத்து விடலாமா அல்லது வேறு இடத்தில் குடி வைக்கலாமா? கல்லறைத் தோட்டம் என்றால் அந்தப் பெண்ணுக்கு பிடிக்காமல் போகும். கல்லறைத் தோட்டம் நகரத்தில் இருந்து தள்ளித்தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் பாதுகாப்புதான். ஆனாலும், தனியாக வீடு இருப்பது என்பது சௌரியமாகத்தான் இருக்கும் என்று நினைத்தான். திருமணம் ஆகும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்

அப்போது அவனுக்குச் சித்தி வீட்டுக் கல்யாண காரியங்களுக்காகப் பணம் தர வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. சீனு அலட்சியமாகத் தான் இருந்தார். அதனால் அவரிடம்  கடுமையாகப் பேசிப் பணம் வாங்க முடியவில்லை. கடுமையாக அவரிடம் பேச முடியாது . அரசாங்க்க் கட்டுப்பாட்டுக் கல்லறை என்பதால் யாராவது ஏதாவது சீனுவுக்கு சங்கடங்கள் தந்துகொண்டிருந்தார்கள் என்பது ஞாபகம் வந்து ஆறுதல் அடைந்தான் . தி.மு.க, அரசாங்கத்தைக் கலைத்திருந்தார்கள் . அந்தக் கவலை அவரை ஆட்கொண்டு விட்டதா என்ற சந்தேகம் இருந்தது.

அந்த அரசாங்க அலுவலகத்தில் அன்றைக்குச் சம்பளப் பட்டு வாடா என்பதை அவன் அறிந்திருந்தான். யாரிடமிருந்தாவது பணப்பையைப் பிடுங்கி விட்டால் போதும் சித்தி வீட்டுக் கல்யாணத்திற்குச் சரியாகிவிடும் என்பது அவனுடைய தீர்மானமாக மாறி இருந்தது. அப்படித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டு காலி சோத்துப் பொட்டலத்தைச் சேர்த்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தவனை ஒதுக்குப்புறமான இடத்தில் தலையில் அடித்து விழவைத்தான் சுரேஷ். அவன் கீழே விழுந்த பின்னால் அவன் கக்கத்தில் வைத்திருந்ததில் காலி சோற்றுப் பொட்டலப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு நகர்ந்து விட்டான்.

இரண்டு நாள் கழித்து அடிபட்டவன் செத்துப் போனது தினசரி செய்தித்தாளின் ஒரு பகுதியாக வந்து இருந்தது. அந்தச் செய்தியில் செத்துப்போனவனுடைய வாழ்விடம் பற்றிய சின்ன குறிப்பு இருந்தது அதைத் தேடிப் போய் செத்துப் போனவன் யார் என்று தெரிந்து கொண்டான் சுரேஷ்

0

அவன் பக்கத்தில் வந்து நின்ற மிதிவண்டியைக் கவனித்தான் பதினைந்து வயது இருக்கும். ஒரு சிறுவன் அந்த வண்டியை ஓட்டி வந்திருந்தான். டபுள்ஸ் உக்காரலாமே என்றான்

” எதுக்கு “

“ என்ன ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கீங்க. அதனாலே நானும் டபுள்ஸ் கூட்டிட்டு போலாம்னு.. .சைக்கிள்ல ஜாக்கிரதையா ஓட்டுவேன்”

முகத்தில் பூத்திருந்த வியர்வையைச் சட்டை நுனியால் துடைத்துக் கொண்டான் சுரேஷ். சுரேஷின் சட்டையில் பூக்கள் பூத்திருந்தன பல வர்ணங்களில்.

மிதிவண்டியில் ஏறி சவுகரியமாகத்தான் உட்கார்ந்தான் சுரேஷ். “நீ யாருன்னு எனக்கு தெரியும்” என்றான் அந்தப் பையன்

“  யாரு நான் ?”

“ எங்க அப்பாவைக் கொன்னவன்”

“ அப்படி சொல்றியா.. ஆமா அப்புறம் ஏன் போலீஸில் சொல்லல? வண்டியே நிறுத்தறையா.”

“ எங்க அம்மாதான் காரணம்”

“ அப்படியா! எங்க அம்மா உன்னுடைய சின்ன வயசுக் காதலி அப்படிங்கிறது எனக்குத் தெரியும் ”

“ஓ அது தெரிஞ்சிருச்சா… செத்துப் போனது யாருன்னு இடத்தைத் தேடிப் பார்த்தப்போ உங்க அம்மாவைப் பல வருஷங்கள் கழித்து பார்த்தேன். அப்பதான் எனக்கு ரொம்ப வயசாயிருச்சுன்னு தெரிஞ்சது. உங்க அம்மாவுக்கு உன்னை மாதிரி ஒரு பையன் இருக்கிறது தெரிஞ்சது..அது நீதானா. ஆனா நான் எதிர்பார்க்கலை, செத்துப் போனவன் என்னுடைய காதலியோட புருஷனா இருக்கணும்னு நான் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத மாதிரி வாழ்க்கையில் நிறைய நடக்குது.”

“ இந்த சைக்கிளை வாங்கிக் கொடுக்க எங்க அப்பா கஷ்டப்பட்டார். அதெல்லாம் நெனச்சா கண்ணீர் வருது”

“ நான் என்ன சொல்றதுன்னு தெரியல. எல்லாமே எதிர்பாராமல் நடந்துருச்சு. சரி நான்தான் கொலைகாரன்னு தெரிஞ்சு நீ ஏன் போலீசுக்கு சொல்லல. கண்டு பிடிக்காமெ அலையறாங்க . உங்க அம்மாவுக்குத் தெரியுமா “

“  எனக்குத் தெரியும். எங்க அம்மாவுக்கு தெரியுமான்னு தெரியாது போலீஸ்ல சொன்னா எங்க அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்க வேண்டி இருக்கும். உனக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் இதனால யாருக்கு என்ன பிரயோஜனம்னு ஒரு நினைப்பு வந்தது. ஆனால், அது சரியா..”

“ அது சரியான்னு கேக்குற ஆள் நீ இல்லயா . தெரியுது சரி நான் இறங்கிக்கிறேன் “

“ ஏன் இறங்கறே “

“ கொஞ்சம் பயமா இருக்கு நான் கொன்னு போட்டவனுடைய பையன் என்ன கூட்டிட்டு போறான் அப்படிங்கறது…. பையனுடைய அம்மா என்னுடைய காதலியா ஒரு காலத்துல இருந்தாங்க.”

“ அது சரி. தப்பிச்சு போறியா”

“ இனிமேல் தப்பிக்க முடியும்ன்னு தோணவில்லை. சரி என்ன பண்ணனும்”

“ ஒன்னும் பண்ண வேண்டாம் எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பழைய காதலிதானே.. தாராளமா பண்ணிக்கோ. எங்க அம்மா வறுமையில, ஒரு விபச்சாரியாக ஆகாமெ இருக்க அது உதவும் .அப்புறம் நானும் என்னுடைய வாழ்க்கையை சுலபமாக ஓட்ட உதவும். இல்லைன்னா குடும்பத்தில் இருக்கிற பிரச்சனைகள் எல்லாம்  பெரிசாயிட்டே இருக்கும். எங்க அம்மா பெரிய பிரச்சனையா விதவையா வாழ வேண்டி இருக்கும். அதனால தான் அப்படி சொல்கிறேன்”

அந்தப் பையனின் மிதிவண்டி கொஞ்சம் நகர்ந்துபோய் நின்றதை முன்பே இறங்கிய  சுரேஷ் கவனித்தான்

“ நீ சொல்றதெல்லா நல்லாத்தா இருக்கு. போலீஸ் நாய் சீக்கிரம் மோப்பம் புடிச்சிரும்ன்னு மனசு சொல்லிட்டிருக்கு”

subrabharathi@gmail.com