வீட்டிலிருந்து வெளியே சுதாவும் குழந்தைகளும் கிளம்பி போகிறார்கள். அவர்களை வழியனுப்பி விட்டு மீண்டும் எனதருகே முழங்கால்கள் காதுகளை இடித்தபடி இருக்கக் கைகளை அவற்றைச் சுற்றிப்போட்டபடி அமர்ந்து கொள்கிறாய்.

உன் கண்கள் இருந்த இடத்தில் அநாதி காலமாய்ச் செய்ய ஏதுமில்லாததால் தொடர்ந்து ஏற்பட்ட கொட்டாவியைப்போல் இலக்கின்றி விரிந்த குழிகள் உள்ளன.

“சுதா ரொம்பவும் இளைச்சுட்டா, இல்லையா?” என்கிறேன். நாம் அமர்ந்திருக்கும் ஆள் அரவமற்ற வரவேற்பு அறையின் அடிப்பாகத்தில் சோம்பலோடு அலைந்து திரும்பும் வெப்பம் நிறைந்த காற்றின் கன பரிமாணம் ஏதுமின்றி என் குரல் மிக ஆழமான இருட்டுக்குள் நெளியும் பாம்புகளின் தண்ணென்ற நாவுகளின் சீறலாக வெளிப்படுகிறது. தலைமுறை தலைமுறையாய் வாழப் போகிறோம் என்று எண்ணி நான் குடி புகுந்து இப்போது பல வருடங்களாய் அநாதையாகக் கிடக்கும் இந்த வீட்டைபோல் வெறுமையாய்க் கிடக்கும் என் உதடுகளில் நான் உச்சரிக்கும் வார்த்தைகளின் ‘ச’கரங்களும் ‘ஷ’கரங்களும் மட்டும் தீப்பற்றி எரிகின்றன.

பதிலுக்கு நீ உறுமுகிறாய். அதுதான் உன் மொழி. வயிற்றுப்பசி என்றாலும், கோபம் என்றாலும், பெருமிதம் என்றாலும், அடங்காத பெருங்காமம் என்றாலும் நீ அடிபட்டுச் தரையோடு சுணங்கிக் கிடக்கும் ஒரு முரட்டு மிருகத்தின் எச்சரிக்கை நிறைந்த முனகலில் வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கிறாய்.

அன்றொரு நாள் காவலுக்கு நின்றிருந்த ஜப்பானியப் படைவீரனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தான் வாழ்ந்திருந்த வீட்டின் நடுவிலேயே கண்முன்னால் மனைவி, திருமணமாகாத இரண்டு மகள்கள் என்ற மூன்று பெண்களும் மீண்டும் மீண்டும் முப்பது நாற்பது ஜப்பானியர்களால் கற்பழிக்கப்பட்டுத் தொடைகளுக்கு நடுவே ரத்தம் பெரிய வட்டமாய்ப் பெருக மூர்ச்சையானதைப் பார்த்த பிறகு துப்பாக்கியில் செருகப்பட்டிருந்த நாயின் நாவைப்போல் கூர்மையான முனையுடைய கத்தியால் கண்கள் பிடுங்கப்பட்டு குடும்பமாகப் பலகைகளில் கைகள் விரியக் கட்டப்பட்டுப் பலவிதமான சித்ரவதைகளுக்குப் பின் கதறல்களுக்கு நடுவே எது உடல் எது உருவம் என்று தெரியாத வகையில் சிதைந்து செத்துப்போன நம் பழைய சீன முதலாளியின் வீட்டிலிருந்த ரத்தம் காய்வதற்கு முன்னாலேயே கோழி ஒன்றைத் திருடிக் கொண்டு அதன் கழுத்துப் பகுதியை உயரத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நீ நுழைந்த போதும் பெருமிதத்தில் ஜொலித்த உன் முகத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிப்பட்டது இந்தச் சின்ன உறுமல்தான். அப்படி வந்து நின்ற உனது கையில்லாத அழுக்குப் பனியனுக்குள்ளிருந்த கறுத்த உடலையே நினைத்தபடி நான் அன்று கோழிக் குழம்பு வைத்தது இன்னமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அன்றிரவு நாம் மிக நெடுநேரம் உடலுறவு வைத்துக் கொண்டோம். நண்பகல் நேரத்தில் சுடச்சுட கோழிக்குழம்பு ஊற்றித் தின்ற சோற்றைப்போலவே அன்றிரவு உன்னை என் உடல் அள்ளித் தின்ன ஆசைப்பட்டது என்று சொல்லலாம். உன் பலத்தையும் வன்மத்தையும் உணரும் வகையில் நீ என்மீது இயங்கிக் கொண்டிருந்த நேரம் முழுக்க உன் பிருஷ்டத்தில் என் கைகளைப் பிரிக்காமல் கோர்த்து வைத்திருந்தேன்.

அன்றிரவு நான் சூல் கொண்டதும் சுதாவின் அப்பன் கோபாலகிருஷ்ணன் என் வயிற்றில் வந்து ஒட்டிக்கொண்டதும் வியப்பே இல்லை. நமது முதலாளி சீனனின் சூறையாடப்பட்டிருந்த பங்களாத் தோட்டத்தில் வளர்ந்திருந்த் வெள்ளைச் சம்பங்கி மரங்களில் குப்பென்று பூத்திருந்த மலர்களில் ரத்த வாடையும் வியர்வை நாற்றமும் கிளம்பி வருவதாகவும் அம்மரங்களின் இலைகள் அந்திக் காற்றில் அசையும்போதெல்லாம் அநாதரவான மூன்று பெண்களின் அலறல்களும் கேட்பதாகக் கம்பத்து மக்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் வீட்டைக் கடந்து போன போதெல்லாம் கையில்லாத அழுக்குப் பனியனுக்குள் ஒற்றைக் கையில் திருடிய கோழியைக் கழுத்துப் பகுதியால் அழுந்தப் பிடித்து உயரத் தூக்கிக் கொண்டு நின்ற உன் பொங்கித் திரண்ட கறுப்பு உடம்பையும் அதன்மீது ஒட்டியிருந்த வியர்வை நாற்றத்தையும் நான் நினைத்துக் கொண்டேன்.

“வர்ர்லாமில்லையா…”

உன் குரல் திடீரென ஒலிப்பதைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்கிறேன்.வெறும் குழிகளாக மாறிப் போயிருக்கும் உன் கண்கள் வாசல் கதவிலேயே நிலைகுத்தி நிற்கின்றன. பேராசை கொண்டவைபோல், பெருங்காமம் நிறைந்தவைபோல்,. என்றுமே வற்றாத வன்மத்தில் ஊறிக்கொண்டிருப்பவையாக.

“…ன்ன கேஏஏடோ?”

சுதா தன் நடுவயதிலிருந்து இங்கு வந்துகொண்டிருக்கிறாள். சுதா மட்டுமே இப்போது இங்கு வருகிறாள். சில நேரங்களில் கம்பியை வளைத்து செய்ததுபோல் மூக்குக்கண்ணாடியைக் குதிரைபோன்று நீண்டிருக்கும் முகத்தில் அணிந்திருக்கும் நெட்டையான சிவந்த தோலுடைய அவள் கணவனும். அல்லது முழங்கால்வரை இளஞ்சிவப்பு வண்ண ரிப்பன்களால் செய்யப்பட்டதுபோல இருக்கும் குதியலான பளபளப்பு ஆடையில் தலைமயிரை இரட்டைச் சடைப்பின்னலாகப் படியச் சீவியிருக்கும் ஆறு வயதுச் சிறுமியும் அரைக்கால்சட்டையில் கொழுகொழுவென்றிருக்கும் மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் சிறுவனும். சுதா தன் கணவனோடோ அவள் குழந்தைகளோடோ பேசிக் கொள்ளும் மொழி உனக்கும் எனக்கும் புரிவதே இல்லை. இத்தனைக்கும் நீ அந்தச் சீன முதலாளியின் ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்த வகையில் கொஞ்சம் இங்கிலீஷு, மலாய், டச்சு, சீன மொழியில் இரண்டு மூன்று வகைகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாய். ஆனாலும் நாம் வழக்கமாய் அமர்ந்திருக்கும் அலமாரியின் உச்சியிலிருந்து தரைக்கு இறங்கி அவர்கள் தாழ்ந்த குரல்களில் பேசிக் கொள்வதை நமது உடல்கள் முழுவதும் காதுகளாக மாறியிருக்க மெல்லிய நடுக்கத்துடன் கேட்டுக் கொண்டிருப்போம். தனது பிள்ளைகளுடன் பேசும் போதெல்லாம் வீட்டின் ஏதோ ஒரு திக்கைச் சுட்டிக் காட்டி ‘தாத்தா’ என்றோ ‘பாட்டி’ என்றோ நமது மொழியில் உச்சரிக்கும்போது நம்மிருவரின் உடல்களும் சிலிர்த்து நிற்கும்.

ஆனால், இத்தனைக்கும் மொழிகூடத் தேவையில்லைதான். நம்மிருவரின் காமம் நிறைந்த சமிக்ஞைகளும், அசைவுகளும் எப்படி வெகு ஆழத்தில் ஓயாமல் கடந்துபோய்க்கொண்டிருக்கும் நீரோட்டம்போல் நம்மிருவரின் அடிவயிற்றின் வேர்வரை நமக்குப் பரிச்சயமாகி இருந்தோ அதுபோலவே ரத்தவாடை என்பதும் சந்ததி என்பதும் நமது உள்ளே வெகு ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய ஊசிகளின் அளவே பருமனுள்ள ரகசியப் பாதைகளுக்கும் பரிச்சயமாகி இருக்கிறது. முதன்முறையாகச் சுதா தனது கனமான மார்புகள் குலுங்க இடதுகையில் புடவையின் முந்தானையைச் சுருட்டி வைத்தபடி குனிந்து இந்த வீட்டின் பழைய. கதவின் பூட்டைச் சாவியால் அசைத்து அசைத்து திறக்க முயல நாமிருவரும்பல வருடங்களாய் எந்த அந்நிய நடமாட்டமும் இல்லாத மிக ஆழமான குகைக்குள் காலடிச் சத்தங்களைக் கேட்ட ராட்சச வௌவால்களாகக் கலவரப்பட்டோம். அந்தப் பழைய வீட்டின் அலங்காரப் பூவேலைப்பாடுகள் அமைந்த அறையின் உச்சிகளில் ‘இது முறையா, இது முறையா’ என்று மறுபடியும் மறுபடியும் சத்தமில்லாத வார்த்தைகளால் கூவியபடி மோதிச் சிதறுண்டு மீண்டும் புகைபோன்ற உருவத்தை எடுத்துக் கொண்டோம்.

சுதா எப்படியோ கதவைத் திறந்து அந்த வீட்டிற்குப் பரிச்சயமில்லாத புதிய காற்றுடனும் வெளிச்சத்துடனும் நுழைந்தபோது அவளிடமிருந்து வீசிய ரத்தவாடைதான் இறுதியில் நம்மிருவரையும் ஆசுவாசப்படுத்தியது. மீண்டும் இந்த அலமாரியின் உச்சியில் ஏறி முழங்கால்களை நம் காதுகளில் உரசுவதுபோல் மடித்து வைத்து அமர்ந்து யானையில் தந்தத்தால் செய்ததுபோல் நடுவில் சின்ன குழிவோடு இருந்த அவளது நீண்ட உறுதியான தோள்களையும், கனிந்து திரண்டிருந்த அவளது பெரிய முலைகளையும், புடவை மடிப்பின் மேல்புறத்தில் பொன்னிறமாய்ச் சுடர்விட்ட அவளது மெல்லிய வயிற்று மயிர்த்தடத்தையும் உறுதியான பின்புறத்தையும் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

“அவளுக்கு ஏதாச்சும் வேலை இருக்குமாக்கும். அவ வர ஆரம்பிச்சு பத்து வருஷமிருக்குமா? இன்னும் சின்ன வயசுதான. ஆயிரம் வேலை இருக்கும். நாம ரெண்டு பேரும் சின்னதுல ஆடாத ஆட்டமா?”

உடம்பில்லாத இந்த நேரத்தில்தான் உடம்பின் ஞாபகமும், அது இருந்த நேரத்தில் நம்மால் அனுபவிக்க முடிந்த காரியங்களும் அதிகமாக நினைவுக்கு வந்து துன்புறுத்துகின்றன. உடம்பால் இயன்றவைகளில் உச்சமானது காமம். வெறும் உடம்பால் மற்றொருவரின் உடலையும், உடைமைகளையும், மனோதிடத்தையும், உயிரின் சாரத்தையுமேகூட ஒரு கணம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொள்வது. அடுத்தது பெருந்தீனி. நான் அந்தக் கணமே என் அருகில் அமர்ந்திருக்கும் உன்னை சூடான வாசமிக்க குழம்பு ஊற்றிப் பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் சோறாக அள்ளி உண்ண ஆசைப்படுகிறேன். அப்படிச் செய்ய முடியாத எனக்கு பெருத்த துயரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

நீ இடைவிடாமல் வாசல் கதவையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

“…வடியா றுக்கி.”

சதைவற்றி முற்றிலும் சுருங்கிப் போயிருக்கும் உன் கறுத்த உதடுகள் கதவின்வெளிச்சம் மிகுந்த உட்புறத்தை ரொட்டித் துண்டாகப் பார்த்துத் தவிக்கும் மீனின் வாயாக அகலத் திறந்து மூடிப் பின்பு தம்மைத் தாமே சப்ப ஆரம்பித்திருக்கின்றன.

“பசிக்குதா?” என்று கேட்கிறேன் .அந்த வார்த்தையிலிருக்கும் சீயன்னாவில் விஷம் நிறைந்த சர்ப்பங்கள் ஒன்றோடொன்று பிணைந்து பின்பு பளபளக்கும் சாட்டைகளை கைவீசிச் சொடுக்கியதுபோல் சீறிப் பிரிகின்றன.

சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று, உனக்கு ஞாபகமிருக்கிறதா. யுத்தம் முடிந்தது என்று ஜப்பானியப் பேரரசர் வானொலியில் அறிவித்த நன்னாளுக்கு அடுத்த நாலாவது நாளில் நாமிருவரும் கட்டியிருந்த புதுவீட்டுக்குள் நுழைந்த கம்பத்து ஆட்கள் நம் துணிகளைக் கிழித்து அம்மணமாக்கி, வீட்டின் நடுக்கூடத்திலிருந்து இழுத்து தெருப்புழுதியில் பிரட்டிக் கால்களால் மிதித்துத் துவைத்தபோது மதியம் ஒரு மணி இருக்கும். அன்று உனக்குப் பிடிக்குமே என்று கருவாட்டுக் குழம்பு வைத்திருந்தேன். குழந்தையை அம்மா கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்கிறேன் என்று அழைத்துப் போயிருந்தாள். வானொலியில் அறிவிப்பு வந்த நாளிலிருந்து கடந்து போயிருந்த அந்த ஐந்து நாள்களும் நீ வீட்டில் பரபரப்போடு எரிச்சல் நிறைந்த முகத்தோடு வலம் வந்து கொண்டிருந்தாய். கம்பத்தைச் சுற்றிப் பல்வேறு பணிகளுக்காக அமர்ந்தப்பட்டிருந்த ஜப்பானிய வீர்ர்கள் அனைவரும் தங்கள் முகாமுக்குத் திரும்பியிருந்தார்கள். கடைசியாகக் கள்ளச் சந்தையில் பழைய டச்சுப் பால் டின்னில் மனந்து ஊற்றி விற்றதாக நீ காட்டிக் கொடுத்த சைக்கிள் கடை ஆ சானுக்காக உனக்குக் கிடைக்க வேண்டிய சன்மானத்தை வாங்கி வரலாமா என்று நீ பரிதவித்தாய். ஆனால், நீயே உனக்கு முணுமுணுப்பான குரலில் ஏதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டாய்.

ஆசான் உண்மையில் கள்ளச் சந்தையில் எதையும் விற்கவில்லை. போரின் கடைசி நாட்களில் பசியால் செத்துக் கொண்டிருந்த தனது மூன்று மாதக் கைக்குழந்தைக்காக உண்மையில் பால் பவுடர் வாங்கத்தான் கள்ளச் சந்தைக்காரர்கள் புழங்கும் இடத்தில் சுற்றி வந்தான். போரின் கடைசி தினங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவியோடு ஊருக்குள் பெருக ஆரம்பித்திருந்த மலாயா கம்யூனிஸ்ட் படை இளைஞர்களில் அவனும் ஒருவன் என்று மிகுந்த கற்பனை நயத்தோடு நீ பின்னிய பொய்யை ஜப்பானியர்கள் நம்பத் தயாராய் இருந்தார்கள். அவர்கள் நிலைமை அப்படி இருந்தது.

சிங்கப்பூரைப் படையெடுத்துக் கைப்பற்றிக் கடந்துபோன தொழில்முறை ஜப்பானியப் படைவீரர்கள் வேறுவிதமானவர்கள், போரின் இறுதியில் இங்குத் தங்கிவிட்டவர்கள் வேறுவிதமானவர்கள். அவர்களின் பெரும்பான்மையினர் த்ஸூஸிமா, நாகானோ போன்ற நகரமும் அல்லாத முழுக்க கிராமமும் அல்லாத ஒதுக்குப்புறமான நடுத்தரப் பட்டணங்களைச் சேர்ந்தவர்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர், கணக்கு, விவசாயம், வலை பின்னுதல், சோயா சாஸ் தயாரித்தல் போன்ற தொழில்களைப் பரம்பரையாகச் செய்து வருபவர்கள். அவர்கள் காதல் கடிதங்கள் எழுதிப்போட அழகிய பெண்களோ இசையிலும் சல்லாபக் கலைகளிலும் தேர்ந்த உயர்தர கெய்ஷாவகைப் பெண்களோ யாரும் இல்லை. இடை பெருத்து, அன்றாட அலைச்சல்களின் பலனாய் உடல்நிறம் கறுப்பாகிக் கைகள் காய்த்துப்போய் முலைப்பிளவுகளுக்கிடையே கடுமையான வியர்வை நாற்றத்தையுடைய பெண்களையே அவர்கள் அன்றாட வாழ்க்கை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தது. ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கப் போவதாக அவர்கள் நம்பியிருந்த விஸ்தீரணமான ஜப்பானியப் பேரரசின் இந்த அவமானம் நிறைந்த திடீர் முடிவானது அவர்களுக்குச் சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தது. உன்னையும் என்னையும்போல அவர்கள் வாழ்க்கை நயவஞ்சகம் நிறைந்தது என்று நம்பினார்கள். போரின் முடிவு வானொலியில் அறிவிக்கப்பட்டபோது கள்ளத்தனம் நிறைந்த சீட்டாட்டத்தை ஒரு கணத்தில் உதறி அருவருப்புடன் எழுந்து போகும் மனிதர்களைப்போல தங்கள் பணியிடங்களைவிட்டுக் கண்மூடித் திறப்பதற்குள் தங்களை அண்டியிருந்தவர்களைக் கைவிட்டு விட்டு மாயமாய் மறைந்து போனார்கள்.

அவர்களை அண்டியிருந்தவர்கள் யார் யார்? உனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. உதிர்ந்துபோன உதடுகளையுடைய உனது வாயோரங்கள் சிரிப்பதைப்போல் விகாரமாய் விரிந்து ஒரு பெருத்த கேவலோடு விக்கி விக்கி அடங்குகின்றன. ஒரு மனிதனுடைய எல்லா உணர்ச்சிகளையும் சரிவரக் காட்டக்கூடியதாகவே இருக்கும் இந்நிலையில் சிரிப்பு மட்டுமே சாத்தியமில்லாமல் போய்விட்டிருக்கிறது. தையற்கடை சட்டைக்காரியைச் சொல்ல வருகிறாயா? சரக்குக் கப்பலில் மாலுமியாயிருந்த ஆஸ்திரேலியக் கணவன் போர் தொடங்குவதற்கு முன்னாலேயே நடந்த விமானத் தாக்குதலில் தென்சீனக் கடலில் மூழ்கி இறந்துபோக ஜப்பானிய மேஜர் ஒருவனிடம் தன் இரண்டு வயது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆசைநாயகியாக இருந்தவள். மேஜர் யோஷிமுரா இந்தோனேசியப் போர் முனையில் இருந்த நேரத்தில் நீ அவளைப் பலமுறை தின்றிருக்கிறாய். எனக்குத் தெரியும். பிறகு இதையே அவளிடம் காரணம் காட்டி மேஜரிடம் சொல்லப் போவதாக மிரட்டி அவளை மற்ற ஜப்பானியர்களுக்கு விபச்சாரம் செய்ய வைத்துவிட்டாய். அதுவும் உனக்கு ஒரு சாமர்த்தியமான சம்பாத்தியம்..

நீ கடைசியாய் அவளிடம் அழைத்துப் போனது பிலிப்பைன்ஸ் தீவுகளில் குண்டடி பட்டுச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்ட ஒரு முரட்டு சார்ஜெண்ட்டை. விபச்சாரியானாலும் குறைந்தபட்சம் பண்பும் படிப்புமுடைய அதிகாரிகளிடம் மட்டும்தான் படுப்பேன் என்று அவள் சொன்னபோது நீ அவளை பலமுறை அந்த மனிதனின் முன்னாலேயே அறைந்தாய். அவள் குழந்தையை அவளிடமிருந்து தரதரவென்று இழுத்துப்போய்ச் சமையலறை அலமாரிக்குள் பூட்டிவிட்டு அவளை அவள் நின்ற இடத்திலேயே புணரும்படி அந்தச் சார்ஜெண்டை வற்புறுத்தினாய். அன்றைக்கு நீ வீடு திரும்பியபோது உன் சீன முதலாளியின் வீட்டிலிருந்து கோழி திருடிவிட்டு வந்த நேரத்தில் அதே பெருமித்தைப் பார்த்தேன்.

ஆனால், மரியா கோமெஸ் மானமுள்ளவள். நீயும் சார்ஜெண்டும் கிளம்பிப் போன பிறகு பையனுக்கு பூச்சி மருந்தை ஊட்டிவிட்டு நடுகூடத்தில் தூக்கு மாட்டிச் செத்துப்போனாள். விறைத்திருந்த அவள் கைவிரல்களின் இடுக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஜபமாலையிலிருந்து வெகுநாள்களாக தேவாலயச் சாம்பிராணியின் நறுமணம் பெருகிக்கொண்டிந்ததாகக் கம்பத்திலுள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.

போரின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு விரக்தியில் மாயமாய்த் தங்கள் முகாம்களுக்குள் கரைந்துபோன ஜப்பானியர்கள் கம்பத்துக் கிட்டங்கியில் விட்டுப்போன முரட்டு ராணுவக் காலணிகளையே நம்மை வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு இழுத்துப் போன வாலிபர்கள் அணிந்திருந்தார்கள். அவற்றின் கனமான அடிப்பகுதியில் விரிய மலர்ந்த பூவைப்போல் சுவடு பூத்திருந்தது. அந்த மலரை என் முலைகளின்மீதும் அடிவயிற்றிலும் அந்தரங்கத்திலும் மீண்டும் மீண்டும் சூட்டுவதைப்போலவே அந்த இளைஞர்கள் என்னை ஒருவித நாட்டிய அலங்காரத்தோடு பலம்கொண்ட மட்டும் மிதித்தார்கள். பெண்கள் என்னை இரும்புக் கழிகளாலும் மீண்டும் மீண்டும் அடித்தார்கள். அது ஒரு பழத்தை மீண்டும் மீண்டும் கனிய வைக்க முயல்வதைப்போல் இருந்தது.

அப்போதைக்கெல்லாம் நீ செத்துப் போயிருந்தாய். வீங்கிப் பழுத்திருந்த என் ஓரக் கண்ணால் என் அருகில் சிவந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த சேற்றில் உன் உடம்பு பாதி புதைந்திருந்ததை நான் பார்த்தேன். அடிக்கடி என் பெருத்த முலைகளில் தேய்த்து இன்பம் கண்ட உனது கன்ன எலும்பு உடைந்து உன் முகம் வடிவமற்றுச் சிதைந்திருந்தது. என் உடலை ஆரத் தழுவி வெறியேற வைத்த உன் கைகளும் கால்களும் விசித்திரமான கோணங்களில் நீட்டி விரிந்திருந்தன. உன் ஆண்குறியை யாரோ அறுத்து உன் வாய்க்குள் செருகியிருந்தார்கள்.

அவர்கள் என் நடுமண்டையில் ஒரு கூர்மையான இரும்பு ராடை இறக்கும்போது மதியம் இரண்டு மணி இருக்கலாம் அன்று உனக்குப் பிடிக்குமே என்று புளிக்குழம்பு வைத்திருந்தேன். ராடு என் நடுமண்டையில் இறங்கிய சமயத்தில் என் மேலுதட்டில் பலமான புளிவாசம் வீசிக் கொண்டிருந்தது.

வீட்டுப் பாடலின் வெளியே சரக்-சரக் என்று ஏதோ சத்தம் கேட்கிறது, இரு, கலவரமாகதே. சுதாதான் யாரேனும் வீடு விற்றுத்தரும் புரோக்கரை அனுப்பி இருப்பாள். இதுவே அவளுக்கு வேலையாகப் போய்விட்டது. கலவரப்படாதே. இதுவரை எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். எல்லோரையும் நாமிருவரும் சமாளித்துத்தானே அனுப்பினோம். சுதாவுக்குப் பணக்கஷ்டம் என்றால் நமக்கு என்ன போனது. மனிதன் தனக்கென்று ஒரு மதிப்பான வீட்டைக் கட்டிக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா என்ன?சுதாவும்தான் இந்த வீட்டை எப்படியாவது விற்றுக் காசு பார்க்காத்தானே ஆசைப்படுகிறாள். இப்போது வாசலில் நின்று கொண்டு நாம் கட்டிய இந்த வீட்டை ஜன்னல் உடைசல்களின்வழி நோட்டம் பார்ப்பவனும் அவள் அனுப்பிய வேறொரு வீட்டு ப்ரோக்கராகத்தான் இருப்பான்.

சீன முதலாளியும் அவன் குடும்பப் பெண்களும் சடலங்களாய்க் கிடந்த வீட்டின் பின்புறத்திலிருந்து நீ கோழியைத் திருடிக் கொண்டு வந்ததிலிருந்து நாம் வாழ்ந்த கம்பத்திலும் அக்கம்பக்கத்திலும் பூட்டிக் கிடந்த வீடுகளிலிருந்து ஜப்பானியர்களின் கண்ணுக்குத் தெரியாமல் திருட்டுகள். அவ்வீடுகளின் சீன உரிமையாளர்கள் பெரும்பாலும் அந்தக் கறுப்பு பிப்ரவரி மாதத்தில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டிருந்தார்கள். அல்லது தீவின் பல பகுதிகளில் முளைத்திருந்த கெம்பெய்தாய் என்ற ஜப்பானிய ராணுவக் காவல்துறையின் விசாரணை மையங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாத வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்காலங்களில் திருட்டுக்கு ஜப்பானியர்கள் வழங்கிய ஒரே தண்டனை திருடனின் தலை முச்சந்தியில் ஜப்பானியப் போர் வீர்ர்கள் அணிந்திருக்கும் நீண்ட வாளால் துண்டிக்கப்படுவதுதான். திருட்டுக்கான வாய்ப்புகள் வற்றிப்போக திருட்டைவிட லாபகரமானது என்று நீ கண்டெடுத்த தொழில்தான் கெம்பெய்தாய் படைக்குக் கைக்கூலியாக மாறி பெரியவர்களும் சிறியவர்களுமாக எழுபது எண்பது பேர்களை நீ அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் பிடித்துத் தந்தது. அப்படிப் பிடித்துத் தந்தவர்கள் யாரும் வீடு திரும்பியதில்லை. அதில் வந்த பணத்தில்தான் ஒர் உலகப் போருக்கு நடுவிலேகூட எட்டுப் படுக்கையறைகளோடு மேல்மாடியும் கீழ்மாடியுமாக நாம் வாழ்ந்த கம்பத்தில் இந்த வீட்டைக் கட்டிக் குடிபுகுந்தது. இதில் மூன்று பௌர்ணமிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போமா?

நீ யாரையாவது ஜப்பானியர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைக் கைநிறைய பொலிவான முகத்தோடு கொண்டுவரும்போது அந்த பிப்ரவரியில் நீ திரண்ட தேகத்தோடு கையில்லாத அழுக்கு பனியனில் வீட்டுக்குள் நுழைந்தபோது அடிவயிற்றில் அனுபவித்த அதே குழைவையே நான் மீண்டும் உணர்ந்து கொள்வேன்.

காதுகளில் உரசும் உன் முழங்களைக் கைகளால் மேலும் இறுகக் கட்டி அலமாரியின் உச்சியில் இன்னமும் உடலைக் குறுக்கி அமர்ந்து கொள்கிறாய். இதுதான் இப்போது நமது இடம். நீ ஆசையாய் வாங்கிப்போட்ட இந்த அலங்கார அலமாரி. இதில் நாமிருவரும் அணிந்து மகிழ்வதற்காக வாங்கி மாட்டியிருந்த பளபளப்பான ஆடைகள் யாவும் மக்கித் தூசாகிவிட்டன.

வாசலில் சரக்-சரக் என்ற சத்தம் தொடர்ந்து கேட்கிறது. வீட்டுக்கு முன்னால் நிற்பவன் பசியுள்ளவன் போலும். நீயும் பசியுள்ளவன்தான். ஒருமுறை சுதா வீட்டிலே இருக்கும் நம் இருப்பை விரட்ட ஒரு புரோகிதனைக் கொண்டு வந்தாள். வாழையிலைத் துணுக்கில் புரோகிதன் எள் கலந்த சோற்று உருண்டைகளை வைத்தபோது நீயும் நானும் தரையில் இறங்கி சந்தோஷத்தில் நாய்களாட்டம் நாக்கை வாயிலிருந்து தொங்கப்போட்டபடி சோற்றுருண்டைகளையே சுற்றிச் சுற்றி வந்தோம். அப்போது உன் வாய்க்கடை ஓரங்களில் உன் எச்சில் தேன் துளிகளாகப் பிரகாசமாய்க் கனத்திருந்தது. ஆனால், நம்மால் உணவை உண்ண முடியவில்லை. சோற்றுக்குக் கை நீட்டும்போதெல்லாம் யாரோ அவசரமாய் நமது கைகளைத் தட்டிவிட்டார்கள். அந்தப் புரோகிதனின் மந்திரங்களைவிட நமது ஆசையும் பசியும் பெரிதாக இருந்தன.

ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. கோழியைத் திருடிவிட்ட அடுத்த நாள் ஜப்பானியப் போர்வீரன் சீன முதலாளியின் வீட்டுக்கு முன்னால் காவல் பணியிலிருந்து அகற்றப்பட்டபோது நீயும் நானும் அந்த வீட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்தோம். அந்தத் திருட்டுத்தான் நம் செல்வத்துக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி. நிழல்கள் பசியுள்ள சுறாமீன்களாய் நீந்திக் கொண்டிருந்த கூடத்தில் நாமிருவரும் நுழைந்தபோது அதன் நடுவில் நான்கு பிணங்கள் கிடந்தன. அலங்கோலமாய்க் கிடந்த கால்களையும் கைகளையும் நாம் அணிந்திருந்த செருப்பால் எட்டித் தள்ளிவிட்டு வீட்டின் உட்புறத்துக்குள் நாம் நுழையப் போனபோது ஓர் அசைவு. இடுப்புக்கு மேலே ஆடை விசிறிவிடப்பட்டு ரத்தக் கறைபடிந்த தரையில் கிடந்த முதலாளியின் இளைய பெண் நம்மை அடையாளம் கண்டுகொண்டு தொண்டையில் கொர்-கொர் என்ற சத்தமெழ ஏதோ முனகினாள். அவள் கைகள் நகக்கீறல் காயங்கள் நிறைந்திருந்த அவள் சிதைந்த மார்புகளுக்கு முன்னால் கூப்பியிருந்தன.

அப்போதுதான் பள்ளிக்கூடம் முடித்த பெண். எப்போதும் நம்மிடம் கனிவாகப் பேசுகிறவள். அவள் பெற்றோருக்குத் தெரியாமல் பல முறை நாம் கஷ்டத்தில் இருந்தபோது ஐந்தோ பத்தோ தந்து உதவியிருக்கிறாள். அவள் அப்படி முனகியபோது நீயும் நானும் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டோம். பிறகு நீ உனது செருப்புக் காலால் அவள் குரல்வளையை மிதித்து அவளைக் கொன்றாய். கைகளை தனக்கு முன்னால் கூப்பியபடியே அவள் தொண்டையில் கொர்-கொர் என்று சத்தம் எழச் செத்துப் போனாள்.

வாசலில் நின்றிருந்தவன் போய்விட்டான். சகஜமாக உட்கார்ந்து கொள். நாமிருவரும் செத்த நாளிலிருந்து இந்த அலமாரியின் உச்சியில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கும் அசாதாரணமான குளிர் மீண்டும் கடுமையாக வாட்ட ஆரம்பித்திருக்கிறது.

writersithurajponraj@gmail.com