அறையின் கதவு அன்றிரவு திறந்திருந்தது. அதுவொரு சமிக்ஞை. எனக்கு இன்றைக்கு ஆறுதலாய்ப் பேச யாராவது வேண்டும் என்பதன் விண்ணப்பம். நான் கதவு வழி உள்ளே பார்த்தேன். ஆள் இல்லை. அதுவும் ஒரு வாடிக்கைதான். மனதின் உக்கிரம் தணிய இந்த நடுச் சாமத்தில் காலாற எங்காவது போயிருப்பான்.

**

அறை நேற்றுப் போல் இல்லை. அதாவது, நேற்று இருந்த எதுவும் இன்று இல்லை. வாரமாய் அவனுடைய அறை தகுந்த வெளிச்சத்துடனும் சுத்தமாகவும் பூவின் வாசமும் அத்தர் மணமும் இசையுமாகவும் இருந்தது. இன்று அவ்வாறு எதுவும் இருக்கப் போவதில்லை என்பதை உள்ளே நுழைந்ததும் வெளிப்பட்ட ஒருவித ஈரத்துணியின் வாடை போன்ற கவிச்சு எனக்கு உணர்த்தியது. ஒரு நாள் சுத்தம் செய்யாமல் விட்டால் கூட கூடு கட்டிவிடும் சிலந்திகள் மேற்குப் புறமாய் இருந்த அவன் கட்டிலின் தலைமாட்டிற்கு மேல் உள்ள குட் வைப்ஸ் ஒன்லி என்று அலங்காரமாய் எழுதப்பட்டிருந்த சட்டகத்தைப் பற்றி கொண்டு, தெற்குச் சுவரை அணைத்து வலை பின்னி இருந்தது. அதைப் பார்த்ததும் அதில் சிக்கித் தவிக்கும் திருமிகு தட்டான் பூச்சி இவன்தான் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

இப்போது எதுவுமே வாடிக்கையாய்த் தோன்றுவதால்தான் சிரிக்கிறேன். முன்பு, முதல், இரண்டாம் தடவைகள் நடந்த போது எல்லாம் அப்படி ஒன்றும் நான் இரக்கமற்றுச் சிரிக்கவில்லை. அப்போதெல்லாம் நானும் அவனோடு சேர்ந்து அவனுக்காக அழுதேன். பாவம் நீ என்று ஆறுதல் சொன்னேன். சரி போகட்டும் விடு என்று தேற்றினேன். ஆனால், ஓரிரு நாள் தேறியபின் மீண்டும் ஓரிரு வாரங்கள் கழித்து அறையை நடுச்சாமத்தில் திறந்துவைத்துப் பிரக்ஞை இன்றி உட்கார்ந்து கொண்டிருப்பான் அவன்.

நான் எத்தனை முறைதான் அவனுக்காக அழுவது. சலித்து முடிந்ததும் சிரிப்புத்தான் நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது.

**

ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கிறேன். என் காதலனைக் கண்டு பிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தன் இறைவனைத் தவிர பிறிதொருவனைத் தொடமாட்டேன் என்று சொன்ன என் கவிதாயினியைப் போல நானும் அவனுக்காய் நோன்பு நோற்பேன்.

அவன் அத்தனை வனப்பு. அவன் தேகம் சூரியக் கீற்றால் மின்னும் தண்ணீரின் மேற்பரப்பினைப் போலப் பளபளப்புற்று ஜொலிக்கிறது. அவனை நான் அள்ளிப் பருகுவேன்.

**

அவனுடைய அந்தக் காதல் தோற்றுப் போய்விட்டது. அதுவொரு கானல் நீர்.

**

மிகவும் தாமதமாக எழுந்துப் புறப்படுவதற்குள் அந்தி வந்துவிட்டது. இப்போது புறப்பட்டால் விடியற் காலையிலேயே போய்ச் சேர வேண்டி வரும். யாரையும் அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது என்று, பேருந்து நிலையத்திலேயே நேரத்தைக் கடத்த வேண்டி உட்கார்ந்திருந்தேன், நடு ஜாமத்தில் வண்டி ஏறலாமென.

அவன் என் கண்ணில் படுகிறான். நான் அடுத்த கணம் மய்யல் கொள்கிறேன். உடம்பு வியர்க்கிறது. படபடப்புக் கூடவும், அவன்  என்னருகே  அமர வேண்டும் என்று  தீர்க்கமாய்த் தோன்றுகிறது. விலகிப்போனால்தான் சௌகர்யம் என்றும் மனம் ஒருமுறை சொல்கிறது. எதை நான் தேர்வு செய்வது. அவன் கையில்தான் உள்ளது அது.

அவன் அருகே அமர்கிறான். வறண்ட தொண்டையை எச்சிலால் நனைத்து, தைரியம் வரவழைத்துக் கொண்டு கேட்டேன்,

ஹாய். எங்க போகனும்.

ஹே, ஹாய் ப்ரோ.

கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. என்னை ப்ரோ என்று கூப்பிடாதே என்று எப்படி உடனே அவனிடம் சொல்வது. சொன்னால் என் லட்சணம் உடனே வெளிப்பட்டுவிடும்.

சேலம்

ஓ. நானுந்தான்.

சேர்ந்து போகலாமா?

ரொம்ப அவசரப்படுகிறேன் என்று பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது.

ஓ!

இது என்ன பதில். கொஞ்சம் மிடுக்குக் காட்டி இருக்க வேண்டும்.

ஒரு ஆண், பிறிதொரு ஆணிடம் பார்த்த நொடி வழிவது அத்தனை யதார்த்தமில்லை இங்கு. நம்மை அது உடனே காட்டிக் கொடுத்துவிடும். எனக்கு நாணமாய்ப் போயிற்று.

**

பேருந்து ஏறி ஆகிவிட்டது. ஆனால் எனது துரதிஷ்டங்களின் துரதிஷ்டமாய், அவனுக்கும் எனக்கும் வேறு வேறு இருக்கை. கடவுளுக்கு நிச்சயம் அடுக்காது. நீ நாசமாய்ப் போக என்று அவரைச் சபித்தேன்.

**

அருகே அமர்ந்திருந்த அந்நியன் என்னைத் தினுசாய்ப் பார்த்தான். என்னால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், என்னால் அவன் சமிக்ஞையைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது அப்படித்தான். எல்லோரோடும் சம்பவிக்காது மனசு. என் உடல், ஒரு பாம்பைப் போல உள்ளே இருக்கும் எலும்புகளை மறந்துவிட்டு நெளிந்தது.

அந்த அந்நியனின் கை என் தொடைகளைத் தொட்டதும், அடிக்கலாம் என்ற ஆத்திரம் வந்தது எனக்கு.

**

நிறுத்தமொன்று வந்ததும், அவனருகே இருப்பவன் எழுந்து செல்வதைப் பார்க்கிறேன். ‘ப்ரோ’ என – ஆங்கில வார்த்தைதான் என்பதால் அர்த்தம் ஒன்றைத் தமிழுக்கு ஏற்றாற் போல் நாமாகக் கற்பித்துக் கொள்ளலாம். பின்னே, புதியவனை எப்படித்தான் அழைக்க – நான் குரலெடுப்பதற்குள்ளாகவே, அவன் என்னைக் கண்ணுற்றான்; அருகே வா என்பதைப் போல. நான் பெரிய விமோசனம் கிடைத்தவனைப் போல அவனை நோக்கி ஓடினேன்.

அவனை நெருங்கியதும் முகம் பளிச்சென்று பிரகாசித்தது எனக்கு. அப்போது எனக்குள் இருந்து ஒரு பெண் தன் பருவத்தை வாரிச்சுருட்டிச் சிரித்திருக்க வேண்டும். பிறகு ஏன் அவனுக்கு என்னைப் பார்த்தும் அத்தனைப் பெரிய புன்னகை தோன்றியது.

நான் நிலையுற்று, மீண்டும் ஆணாகி அந்த இருட்டில் அவனை அணைக்க முயன்றதுதான் தாமதம்; விளக்கு பளிச்சென்று ஒளிர்ந்தது. அவன் விழித்துக்கொண்டான். அந்தப் பார்வை. சற்று முன் என்னை நெருங்கியவனை நான் ஒதுக்கியதை ஒத்திருந்தது.

நான் சர்வத்தையும் ஒடுக்கி ஒரு கூர்மத்தைப் போல என் உள்ளமர்ந்து கொண்டேன். ஆனால் அந்த என் மோசமான மனதை ஒடுக்க மட்டும் என்னிடம் ஒரு உபாயமும் இல்லை. அப்போதும். எப்போதும்.

என் கண்களை மீறி கண்ணீர் சிந்தியது.

**

இப்படிப் பலபல கதைகள்.

**

அவனை இந்த முறை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். ‘எதுவும் இல்லை. பட் சம் திங் ஸ்ப்ருச்சுவல் அர்ஜ் இருக்கான்னு யோசிக்கனும். பெட்டர்.’ இது டாக்டர்.

**

உடம்பு எதையோ ஒன்றைக் கேட்கிறது. அது உடம்பு இல்லை. வேறெதுவோ. அது தன்னைக் கேட்கிறது. தன்னைப் போல ஒரு ஆணை. தன்னில் இருக்கும் பெண்ணை அடைய ஒரு ஆணை. தன்னைப் போல ஓர் ஆணை.

**

மேத்யூ எனக்கு அறிமுகமாகி இரண்டொரு வாரங்கள் ஆகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. அவன் என்னைப் போல ஒரு ஆண் நேயன் இல்லை. சுத்த பெண் மோகி. ஆனால், அப்படியான ஒரு பிறவி இல்லை என்பது என் முடிவு. சரி, போகட்டும். ஆனால், அவன் என்னை விட்டு விலக மாட்டேன் என்கிறான். அதுதான் என்னை வாட்டுகிறது. அவன் சுடர். நான் மெழுகு. வாஸ்தவம்தான். ஆனால் என்னை ஏற்றாத சுடர் என் அருகிருந்துதான் என்ன லாபம். அருகிருந்து தொடாமலேயே என் மேனியை வீணாய் உருக்குவானேன். அத்தனை வலி. இது சுத்த அபத்தம். எனவே எப்படியாவது சண்டை போட்டுவிட வேண்டும் அவனிடம் என்று முடிவெடுத்தேன்.

**

இவனே வலிந்து போய் ஏன் அப்பட்டமாய் தன்னை நேசிக்காதவர்களாகப் பார்த்துப் பார்த்து நேசிக்கிறான் என்பதுதான் இன்றைய தேதி வரை எனக்குப் புரியமாட்டேன் என்கிறது.

**

எனக்குச் சுயமோகம் அதிகமாகிவிட்டது. என்னை நான் காதலுறுகிறேன். என்னைப் போன்றவனைக் காதலுறுகிறேன். என்னை யாரெல்லாம் காண்கிறார்களோ அவர்களைக் காதலிக்காமல் நான் விட்டதில்லை. என் கண்களில்பட்ட பூராபேரையும் காதலிக்கிறேன். அவர்களை நான் வதைப்பேன், கொஞ்சல் மொழி பேசி; ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்களோ என்னைச் சித்ரவதைச் செய்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் என்னைத் தீண்டாமலேயே அன்பு செய்கிறார்கள்.

**

வாதை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதுதான் கணிப்பு. அப்படி இல்லாவிட்டால், தன்னை நேசிப்பவர்களை அவன் ஏன் இதுவரை நேசித்ததே இல்லை.

**

இம்முறை இந்த மேத்யூ என்கிற புதியவனின் பித்து தலைக்கேறிவிட்டது அவனுக்கு.

**

மேத்யூ என்னைப் போன்றவன் என்பதைச் சமீபத்தில் நான் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிலும் அவன் என்னைப் போன்றவன் என்பதை, பார்த்த கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்துவிட்டேன். அவன் என் கண்ணாளனைப் போல இருந்தான். கனவாளனைப் போலவும். தேனை ஈர்க்கும் மலரைப் போன்ற அவனுடைய சிரிப்பில் அடுத்த நொடி சொக்கிவிட்டேன். ஆனால், அவன் என்னைப் போன்றவன் அல்ல. எந்த விசயத்தில்? ’என்னைப் போல’ அவன் என்னை நேசிக்க வில்லை.

இருந்தும், அதை நான் பொருட்படுத்தாமல், என் சௌந்தர்யத்தில் அவன் சௌந்தர்யத்தைப் பொத்திப் பொத்தி அடைகாத்தேன். அத்தனை லகுவான அந்தக் கற்பனை என்னில் இதத்தைத் தந்தது. சௌந்தர்யம் என்பது என் பாஷையில் அவன் குறி.

**

அது வளர்ந்து வளர்ந்து ஒரு பெரிய சௌந்தர்யமாய்  ஆனது. இருவருடையதும் இரண்டற்று, சேர்ந்திறுகி ஒன்றாய், சௌந்தர்யத்தின் உச்சமாய் ஆனது. மேலும் அது என்னில் வளர்ந்து ஒரு ரோஜாவைப் போல மணத்தது.

**

கற்பனையை அதிகமாய் வளர்க்க முடியாது என்றுதான் படுகிறது. என்னை நெருங்காமல் என்னை நேசிக்கும் எந்த ஆணையும், அவனையும் எனக்குப் பிடிக்காமல் போகிறது. அவர்களை நான் ‘கொடும் பாவை’களாய்ச் செய்து கொல்வேன்.

**

மேத்யூ, நான். இதில் யார் குறி என்னுடையது. நான் அவனுடையதை என் கலாப வெளியில் ஏந்தி ஏந்தி கற்பனா சன்னதம் ஆடுகிறேன். ஆடி ஆடி. ஆடி ஆடி. ஓய்ந்து ஓய்ந்து. இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் ஆற்றலையும் திரட்டித் திரட்டி. ஓய்ந்து மூச்சிரைக்க, கால் சறுக்கி, விழ விழ ஆடுகிறேன். அந்தச் சௌந்தர்யம் என்னைவிட்டுப் போய்விட வேண்டும். அழகே ஆசை. ஆசையே அழகு. அழகு எனும் ஆணை, அவன் குறியைக் கொல்வேன் என்று கத்திக் கூப்பாடு போட்டேன்.

**

அவன் அறையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன குறி மொட்டுக்கள். நான் அவற்றைப் போல் ஒன்றைப் புதிதாய் அப்படித் திருகிப் போட்டேன். அது ஒரு சடங்கு. முன்னதைப் போலப் பிறிதொரு சடங்கு. அதன் பொருட்டு அவன் கொஞ்சம் ஆசுவாசம் அடைவான்; திரும்ப ஒரு புதிய காதலனைக் கண்டுபிடிக்கும் மட்டும்.

**

உறக்கம். இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்றுதான்படுகிறது.

****

நாய்ப்பூனையூர் மழைச் சடங்கு என்ற முந்தைய கதையின் உபகதை.

aishavimall@gmail.com