50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் (2023) அண்மையில் இந்தியாவில் நடந்து (அக்டோபர் 5 — நவம்பர் 19) முடிந்திருக்கிறது. மொத்தமாகப் பத்து அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் மோதின. தரவரிசைப்படி பார்த்தால் இத்தொடரில் ஆடிய அணிகளை இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய முதல் நிலை அணிகள், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய இரண்டாம் நிலை அணிகள், அப்கானிஸ்தான், நெதர்லேண்ட்ஸ் ஆகிய மூன்றாம் நிலை அணிகள் என வகுக்கலாம். இவற்றில் இரண்டாம் நிலை அணிகள் மொத்தமாகவும், முதன்மை நிலை அணிகளில் இங்கிலாந்தும், கல்யாணத்தின் போது பாக்கெட்டில் பழைய காதலியின் கடிதமும், விம்மும் இதயமுமாக வந்தமர்ந்த மாப்பிள்ளையைப் போல ஆடினர். அவர்களுடைய சோபையில்லாத ஆட்டம் காரணமாக இத்தொடரின் முதற்பகுதி சோர்வூட்டியது. பல போட்டிகள் ஒரு தலைபட்சமாக முடிந்தன. கடைசியில் எதிர்பாராதவிதமாக அப்கானிஸ்தானும் நெதர்லேண்ட்ஸும் களத்தில் இறங்கி அந்த இடைவெளியை இட்டு நிரப்பினர். அதுவே நாற்தரப்புத் தொடராகவிருந்த உலகக்கோப்பையை ஒர் உலகப் போட்டித் தொடராக மாற்றியது.

இத்தொடரின் சில இனிய ஆச்சரியங்கள் இந்தியா அரை இறுதியையும் உள்ளடக்கிப் பத்துப் போட்டிகளையும் தொடர்ந்து அதிரடியாக வென்றது. இது நிஜமா கனவா எனப் பார்வையாளர்கள் தம்மை மாறி மாறி கிள்ளிப் பார்த்துக்கொண்டனர். தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தின் அதிரடியான மட்டையாட்டம், தம்முடைய வலுவற்ற பந்துவீச்சைக் கொண்ட அவர்கள் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு பல போட்டிகளை ஆதிக்கம் செலுத்தி வென்றது, குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவுக்காக டிகாக், கிளாஸன், மில்லரின் மட்டையாடிய விதம் மக்கள் மனத்தை வென்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியுசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஒரு திறமையான, ஸ்டைலான இடதுகை மட்டையாளர். அவரது ஆட்டத்தைப் பார்ப்பதே சுகானுபவம். அவர் 10 போட்டிகளில் 69.00 சராசரியில் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்களுடன் 578 ரன்களை எடுத்தார். அதே ரச்சினின் பாதித் திறமையே கொண்ட டேரல் மிச்சல் தன் புத்திசாலித்தனத்தையும் உடல் வலிமையையும் உயரத்தையும் பயன்படுத்தி அற்புதமாக மத்திய ஓவர்களில் சுழலர்களை சிக்ஸர்கள் அடித்து 10 போட்டிகளில் 552 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்காக கோலி ஒர் அரவை எந்திரத்தைப் போல இடைவிடாமல் ஓடி ரன் மாவாகக் கொட்டிக் கொண்டிருந்தார். 11 போட்டிகளில் 95.62 சராசரியில் 765 ரன்கள். அவரே இந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அவர் தனிமனிதனாக இந்திய அணியின் மத்திய வரிசையைத் தோளில் தாங்கினார். அவருக்குப் பெரிய வசதியாக அமைந்தது ரோஹித் ஷர்மா தொடர்ந்து அளித்த அதிரடித் துவக்கங்கள். 11 போட்டிகளில் 54.27 சராசரியுடன் ரோஹித் எடுத்த 597 ரன்கள். ஆனால் மற்ற அணிகளைப் போல் அல்லாமல் இந்திய அணியில் அனைத்து மட்டையாளர்களுமே நல்ல ஆட்டநிலையில் இருந்தார்கள். நிதானமான கே. எல் ராகுலும், எதிரணிச் சுழலர்களைக் கூலிப்படையைப் போல் தாக்கி நாசம் செய்த ஷ்ரேயாஸ் ஐயரும் இந்தியா தம் ஆட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் எதிரணியை ஆதிக்கம் செலுத்த உதவினர். பந்துவீச்சில் ஹர்த்திக் பாண்டியா காயம் காரணமாகத் தொடரின் பாதியில் விலக நேர்ந்தது இந்தியாவைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக இன்னும் வலுவாக்கியது. ஷமி அணிக்குள் வந்து 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனிமனிதனாகப் பந்துவீச்சைக் கொண்டே ஒருவர் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்தது உலகக்கோப்பை வரலாற்றிலேயே இது முதன்முறையாக இருக்கும். குல்தீப், ஜடேஜா இருவரும் நன்றாக வீசி மத்திய ஓவர்களில் எதிரணியை மூர்ச்சையடைய வைத்தார்கள். சிராஜ் மட்டுமே சரியான லயமின்றித் திணறினார். ஒருவேளை ஹர்த்திக் காயம் ஆறி மீண்டு வந்திருந்தால் சிராஜின் இடத்தில் அவர் ஆடியிருக்கக் கூடும். அது இந்தியாவின் மட்டையாட்டத்தை 8ஆவது எண் வரை நீட்டித்திருக்கும். இவர்களே இணைந்து நிலைகுலையாத உருக்கு அணி எனும் பிம்பத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தினர். சூர்யகுமார் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. இந்திய அணியின் நிர்வாகம் மழையில்லாதபோது பிடித்து நடந்த குடை அவர்.

இந்தியா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளின் தயாரிப்பும், உடற்தகுதியும் அவர்களுடைய சிறந்த ஆட்டங்களில் தெரிந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவோ அரைகுறையான அணியுடன் வந்து உடைந்த கையுடன் ரிங்கில் நின்று சண்டை செய்யும் குத்துச்சண்டை வீரரைப் போல ஆடியது. அவர்களுடைய மத்திய வரிசையில் மேக்ஸ்வெல் மட்டுமே ஆட்டநிலையில் இருந்தார். அடுத்து தம் துவக்க வீரர்களான வார்னரையும் ஹெட்டையும், சில போட்டிகளில் மார்ஷையும் நம்பியிருந்தார்கள். பந்துவீச்சில் தாமதமாக ஆட்டநிலைக்குத் திரும்பிய ஸாம்பாவும் ஸ்டார்க்கும், எப்போதுமே ஜொலிக்கும் ஹேசல்வுட்டும் உதவினாலும், கடைசி சில போட்டிகளிலேயே தன் பந்துவீச்சின் லயத்தை அடைந்த அணித்தலைவர் கமின்ஸுமே அவர்களுடைய பந்துவீச்சு அணி. இவர்கள் 2011 இந்திய உலகக்கோப்பை அணியை ஒருவிசயத்தில் நினைவுறுத்தினார்கள். அந்த அணியிலும் பாதிக்கு மேல் வீரர்கள் நல்ல ஆட்டநிலையில் இருக்கவில்லை. அதிலும் யார் யாரோ கைகொடுத்துத் தள்ளித் தான் ‘கரகாட்டக்காரன்’ படத்து காரைப் போல இந்திய அணி இறுதிப்போட்டியை அடைந்தது. அங்கு வந்ததும் சட்டென வேகமெடுத்து அட சொப்பன சுந்தரி காரா என்று சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் வருகிறேன்.

இத்தொடரில் லீக் அளவில் நான் ரசித்தவை தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த, அப்கானிஸ்தான் இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் தண்ணீர் குடிக்க வைத்த, அப்கானிஸ்தானால் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யப்பட்ட, பின்னர் எதிர்பாராமல் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலியா காப்பாற்றப்பட்ட, நெதர்லேண்ட்ஸ் தென்னாப்பிரிக்காவைக் கடத்தி வந்து கண்ணில் மிளகாய்த் தூள் வீசிய, பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற, ஆஸ்திரேலியாவின் மகத்தான 389 இலக்கைத் துணிந்து விரட்டிச் சென்று 383 ரன்களை நியுசிலாந்து அடைந்து மயிரிழையில் தோற்ற, இலங்கையின் 344 ஸ்கோரை பாகிஸ்தான் விரட்டிச் சென்ற போது ஷபீக்கும், ரிஸ்வானும் அபாரமாக சதமடித்து வென்றளித்த போட்டிகள்.

அரை இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வந்தடைந்தன.

முதலாவது அரை இறுதியில் இந்தியா நியுசிலாந்தை மும்பையின் வான்கடே மைதானத்தில் நன்றாக ஆடி வென்றது. இந்தியா முதலில் மட்டையாடி 397 அடித்தது. நியுசிலாந்து துணிந்து இலக்கை, சின்ன பதற்றத்தை இந்திய வீச்சாளர்கள் வெளிப்படுத்தினாலும் நியுசிலாந்தால் அந்த இமாலய இலக்கை இந்தப் பந்துவீச்சு வரிசைக்கு எதிராக அடைய முடியாது என்றே நிபுணர்களும் இந்திய அணித்தலைவரும் நம்பினர். அவ்வாறே நடந்தது. நியுசிலாந்தின் தீபம் ஆவேசமாக எரிந்து 327க்கு அணைந்தது.

இரண்டாவது அரை இறுதியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் கொல்கொத்தாவின் சுழலும் ஆடுதளத்தில் மோதிய போட்டி மிக நெருக்கமாகச் சென்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களும் அதிக விக்கெட்டுகள் இழக்காமல் ஆடியிருந்தால், 212க்குப் பதில் கூடுதலாக முப்பது ரன்கள் எடுத்து 242 வந்திருந்தால் கூட நிச்சயமாக வென்றிருப்பார்கள். அப்போட்டி ஆஸ்திரேலியாவின் மனத்தகுதிக்குச் சான்றாகியது.

அதென்ன மனத்தகுதி? நாம் அதைப் புரிந்துகொள்ள இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும்.

ஆஸ்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் மட்டையாட இந்தியாவை அழைத்தது – ஒரு பக்கம் கடும் அழுத்தம், அதை எதிர்கொள்ளும் அகவலிமை இல்லாதது, பயம், உள்ளுக்குள் நடுக்கம், இவற்றுடன் மிக மெதுவாகப் பந்து வரும், நின்று வரும், தாழ்வாக வரும் மோசமான ஆடுதளம். இந்த இரண்டு விசைகளுக்கும் நடுவே இந்தியா மாட்டிக்கொண்டு 240க்கு ஆல் அவுட் ஆனது. குறிப்பாக, துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அவுட் ஆன பிறகு இந்திய மத்திய வரிசை மட்டையாளர்கள் சற்றுத் துணிவின்றி தடவிக்கொண்டே இருந்தது பார்வையாளர்களையும் நிபுணர்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் இதே தொடரில்தான் இந்தியா மெதுவான சிக்கலான ஆடுதளங்களில் லட்சிய ஸ்கோரை விட 30-50 ரன்கள் கூடுதலாக விளாசி பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெற்றது. இந்திய மத்திய வரிசை மட்டையாளர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும் கவலைப்படாமல் சுழலர்களை அடித்தாடி அச்சுறுத்தினர். இப்போட்டியிலோ அவர்கள் ஒரு பக்கம் தன் உள்பூதத்திடமும் ஆடுதளப் பூதத்திடமும் சரணடைந்தனர். ஆஸ்திரேலியா மட்டையாட வந்த போது ஆடுதளம் சற்று மேம்பட்டிருந்தாலும் அவர்களும் மூன்று விக்கெட்டுகளைத் துவக்கத்தில் இழந்தனர். ஆனால், அதனால் அவர்கள் அஞ்சவில்லை. எதிர்த்து அடித்தனர். அதிரடியாக ஆடி ஆட்டத்தை மீட்டனர். ஹெட் சதமடிக்க, லேபுஷேன் அரைசதம் அடிக்க 43 ஓவர்களில் போட்டியை வென்றனர். இதன் பெயர்தான் மனத்தகுதி. திறமை, ஆட்டநிலை என்று எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஒரு போதும் நிகர் அல்ல. ஆனால், மனத்தகுதி என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் அதில் இந்தியாவை விட வெகுசிறப்பானவர்கள். எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளாமல் கடைசி வரை போராடுவது வெற்றியாளர்களின் அடிப்படையான குணம். அது ஆஸ்திரேலியாவிடம் நிறையவே உண்டு. இந்தியாவோ மனத்தகுதியில் மிக மோசமானவர்கள். உலகக்கோப்பை 2023ஐத் திறமையோ உடற்தகுதியோ அல்ல, மனத்தகுதியும் சிறிது அதிர்ஷ்டமுமே வென்றன.

கூடுதலாக, இறுதிப் போட்டியில் இந்தியாவுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது. அப்போட்டியை ஒரு பெருங்கொண்டாட்டமாக, இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக்க வேண்டும் எனும் தேவை இந்திய ஒன்றிய அரசுக்கு இருந்தது. அதனாலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் அப்போட்டியை குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தியது. இப்போட்டியில் இந்தியாவின் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். விமானப்படை சாகசங்களை நிகழ்த்தி மகிழ்வித்தது. இப்போட்டி ஊடகங்களாலும் அரசியல் தலைமையின் பங்கெடுப்பாலும் ஊதிப்பெருக்கப்பட்ட விதம் இது ஏதோ இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வரலாற்றுத் தருணம் எனும் தோற்றத்தைக் கொடுத்தது. (2015இல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையைத் தன் சொந்த நாட்டில் நடத்தி இறுதிப்போட்டியில் நியுசிலாந்துடன் ஆடிய போது இப்படி எதுவும் அங்குள்ள அரசால் நடத்தப்படவில்லை.) இதுவும் அணி மீதான நெருக்கடியைப் பலமடங்காக்கியது. இன்னொரு பக்கம் ஒரு நிர்வாகக் குளறுபடியால் தவறான மைதானம் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அதனால் சர்க்கஸ் துப்பாக்கி பின்னாலேயும் சுடும் என்பதைப் போல ஆட்டச்சூழல் இந்தியாவையே சுட்டது. அது என்ன குளறுபடி?

குஜராத் மைதானத்தின் ஆடுதளம். அது இறுதிப்போட்டிக்கு ஏற்ற ஆடுதளம் அல்ல. ஏனென்றால், அங்கு முதலில் மட்டையாடும் போது மெதுவாகப் பந்து வரும், மாலையில் விளக்கொளியின் கீழே சற்றுச் சில்லென்ற சீதோஷ்ண நிலையில் ஆடும் போது மட்டையாட்டத்துக்குச் சாதமாக மாறும் அளவுக்கு அது ஒருதலைபட்சமானது. அங்கு நாணயச் சுழற்சியின் முடிவு மிக முக்கியமானதாகும். மேலும், அங்கு ஆடுதளத்தை சரியாகக் கணிப்பதே பாதி வெற்றியைத் தந்துவிடும். ஆனால், இறுதிப்போட்டிக்கான ஆடுதளம் இப்படி இருக்கலாகாது. அது இரு இன்னிங்ஸிலுமே பந்துவீச்சுக்கும் மட்டையாட்டத்துக்கும் ஒரே அளவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும், முக்கியமாக இரண்டாவது இன்னிங்ஸில் தன் இயல்பை மாற்றக் கூடாது. சரியான ஆடுதளம் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெங்களூரையோ மும்பையையோ தேர்ந்திருக்க வேண்டும். ஆனால், பிரமதர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்தில் ஆட்டம் நடப்பதே, அதன் மூலம் அரசியல் நிகழ்வாக அதை மாற்றுவதே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷாவுக்கு அவசியம் என்பதால் இந்தக் குளறுபடி நிகழ்ந்தது. விளைவாக அவர்களுடைய முகத்திலே கரி பூசப்பட்டது. இதுவே வாழ்க்கையின் நகைமுரண்.

இந்த ஆஸ்திரேலிய வெற்றி ஒன்றைக் காட்டுகிறது – உலகில் மிகத்திறமையாளர்களோ தகுதியாளர்களோ அல்லர் எக்கட்டத்திலும் விட்டுக்கொடுக்காமல், அஞ்சாமல் போராடுவோரே வெற்றியைப் பறிப்பார்கள். ஆட்டத்தை வெறும் அரசியல் பிரச்சாரமாக, ஊதிப்பெருக்கப்பட்ட தேசியக் கொண்டாட்டமாக மாற்றுபவர்கள் தோல்வியில் உழல்வார்கள்.