இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை நழுவவிட்டதைத் துயரத்தோடு கடந்து சென்றாலும், அரசியல் கூறுணர்ச்சி கொண்ட பெரும்பாலான இந்தியர்கள் இதற்காக வருத்தப்படவில்லை. நுணுக்கமாக அவதானித்தால், ஒன்பது ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோற்க வேண்டும் என்ற அவா இருந்ததைக்கூட அறிய முடிகிறது. இறுதிப் போட்டிக்கு முன்பு அரசல் புரசலாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள்கூட, இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, வெளிப்படையாகத் தோல்வியைக் கொண்டாடுவதைக் காண முடிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி மீது சுமத்தப்படும் சாதி ஆதிக்க மனோபாவம் ஓரளவுக்குத் தணிந்திருந்தாலும், அதன் மேல் ஒட்டியிருக்கும் பிசுக்கு இன்னும் முழுமையாக அகலவில்லை என்பது, இந்த அவாவுக்கான காரணமாக இருக்கலாம்.
தவிர, இப்போது பாஜக-வின் அரசியல் பிரச்சாரத்திற்குப் பலியாகிக் கொண்டிருப்பதால், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோற்பதால் தேசத்திற்கு எந்தப் பங்கமும் வந்து விடாது எனத் தீவிர கிரிக்கெட் ரசிகர்களே கருதுகின்றனர்.
பிறரின் வெற்றியைத் திருடி, எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் ‘பெருமை’ பெற்ற பாஜக, விளையாட்டு வீரர்களின் வெற்றியையும் அதேபாணியில் தனதாக்கிக் கொள்வதால், விளையாட்டு ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்திற்குச் சென்றதில் வியப்பில்லை.
இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்ற போது, ‘விளையாட்டுத் துறையில் தொலைநோக்குப் பார்வையோடு இந்தியப் பிரதமர் எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த பரிசு இந்த வெற்றி’ எனத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து, இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் எனக் கூப்பாடு போட்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, ஆசியக் கோப்பைக் கால்பந்து தொடரை, 2027-ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான போட்டியில் இருந்து பின்வாங்கியது ஏன்? கடந்த ஆண்டு, 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியிருந்தும்கூட, ஆசியக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்துவதற்கான தைரியம் மத்திய அரசுக்கு இல்லை என்பதுதான், விளையாட்டுத் துறையின் தொலைநோக்குப் பார்வையா?
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போனதுகூட, தொலைநோக்குப் பார்வையின் கீழ்தான் வருமா? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதை விளையாட்டு ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள்தானே.
ஒருவேளை இந்திய அணி வெற்றி வாகைசூடிக் கோப்பையைக் கைகளில் ஏந்தியிருந்தால், பிரதமரும் பாஜக அரசும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றியிருப்பார்கள்? கோப்பையைபின் தொடரும் நிழலின் குரலைக் கேட்டால், முதுகுத் தண்டு சில்லிட்டுப் போயிருக்கும். கோப்பையோடு இந்திய அணி வீரர்களை எங்கெங்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்? நினைத்துப் பார்க்கவே பதைபதைப்பாக இருக்கிறது. உலகக் கோப்பைக்கு ஒரு பெயரும் வைத்திருப்பார்கள். விளையாட்டு ஆர்வலர்கள் இதனைக் காறித் துப்பும் அவலமும் அரங்கேறியிருக்கும்.
ஜெய் ஸ்ரீராம் என்ற இறைவழிபாட்டு மந்திரத்தை, போர் வெறி பிடித்த தேசபக்தச் சொல்லாக (Jingoism) மாற்றிய இந்துத்துவவாதிகள், கிரிக்கெட் விளையாட்டை, குறிப்பாக பாகிஸ்தானுடனான ஆட்டத்தைப் போர் நடவடிக்கையாகவே பார்க்க ரசிகர்களை வற்புறுத்துகின்றனர்.
விளையாட்டில் அரசியல் கலப்பதைத் தவறெனச் சொல்ல முடியுமா? எதில்தான் அரசியல் இல்லை? இந்தியப் பிரஜை என்றில்லை, உலகம் முழுவதும் அரசியல் தாக்கமின்றிக் குடிமக்கள் இல்லை என்ற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கத்தான் வேண்டும். ஆனால் எந்த அரசியல் வேண்டும் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. ஆதி மனிதன் ஆதாமுக்கும், சாத்தானுக்கும் ஏற்பட்ட மோதலின் போதே அரசியல் என்பது தொடங்கி, அது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆதாம் எதிர் சாத்தான், நன்மை எதிர் தீமை, இடது எதிர் வலது. இதில் எந்த அரசியலின் பக்கம் நாம் நிற்கிறோம் என்பதில்தான் நம்முடைய நேர்மை அடங்கியுள்ளது.
இந்தப் பின்னணியில், இறுதி ஆட்டத்துக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், இறுதிப் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் நாசூக்காகப் பேசுவது போலவே பொத்தாம் பொதுவாகப் பேட்டியளித்தார் பேட் கம்மின்ஸ். வார்தைகளை விட்டால், வியூகமோ பலஹீனமோ வெளிப்பட்டு விடும் என்பதால், அப்படிப் பேசுவதுதான் வழக்கம்.
லீக் ஆட்டத்தில் சவால் அளித்த ஜடேஜாவின் சுழலை எதிர்கொண்டு முறியடிக்கத் தயாராக இருக்கிறோம் என்றோ; பந்துவீச்சின் போது கடந்த ஆட்டத்தைப் போலவே தொடக்க விக்கெட்டுகளை ஐந்து ஓவர்களுக்குள் எடுக்க விரும்புகிறோம், எங்களுடைய டார்கெட் கோலியின் விக்கெட்டுதான் என்றோ குறிப்பாகப் பேட்டி அளித்திருக்கலாம். ரசிகர்களின் வருகையை அதிகப்படுத்த, ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கச் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேட்டி கொடுக்கிற வழக்கமும் உண்டு.
ஆனால், இது எதைப் பற்றியும் குறிப்பிடாமல், இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில் ஆட்ட நுணுக்கங்களைத் தாண்டி, வேறு விஷயங்கள்தாம் முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிந்திருந்தது போல, “இறுதி ஆட்டத்தில், ரசிகர்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பார்கள் என்பது வெளிப்படையான விஷயம்தான். அதேசமயம், அந்தக் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான விஷயம் வேறு எதுவும் இல்லை. நாளை எங்களுடைய இலக்கு இதுதான்” என பேட் கம்மின்ஸ் பேட்டியளித்தார்.
போட்டி நடைபெறும் நாட்டின் பிரதமர் பெயரில் உள்ள ஒரு மைதானம், உலகிலேயே மிகப் பெரிய மைதானம், லட்சத்தைத் தாண்டிய உள்ளூர் ரசிகர்கள், தோல்வியையே சந்திக்காத பலமிக்க உள்ளூர் அணி என மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில், ‘ரசிகர்களை அமைதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்கு’ என்ற பேட் கம்மின்ஸின் வார்த்தைகள் தாறுமாறான வாய்ச்சவடால். கிரிக்கெட்டைப் போர் வெறிக்கு நிகராக அணுகும் இந்துத்துவவாதிகளைக் கொம்புசீவி உருவேற்ற இதுபோதாதா?
குத்துச் சண்டை ஜாம்பவான் முஹம்மது அலீயின் பேட்டியை நினைவுபடுத்தின பேட் கம்மின்ஸின் வார்த்தைகள்.
1961-ஆம் ஆண்டு, ஜெர்மனி வீரர் வில்லி பெஸ்மனாஃப் உடனான போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த அலீ, 7ஆவது சுற்றில் பெஸ்மனாஃபை வீழ்த்துவேன் என்றார். இந்த அறிவிப்பு, குத்துச்சண்டை உலகில் பூகம்பத்தைக் கிளப்பியது. சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்துவேன், எதிராளியை வீழ்த்துவேன், துவம்சம் செய்வேன் எனக் கூறுவதுதான் குத்துச்சண்டை வீரர்களின் வழக்கம். ஒரு குறிப்பிட்ட சுற்றைக் குறிப்பிட்டு, அந்தச் சுற்றில் எதிராளியை வீழ்த்துவேன் என்று பேட்டியளிப்பதெல்லாம் மட்டுமீறிய சுயபுராணத் தன்னம்பிக்கை மட்டுமல்ல, கோமாளித்தனமும்கூட.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோம் ஒலிம்பிக் போட்டியில், 18 வயதில் அமெரிக்க தேசத்துக்காகத் தங்கப் பதக்கம் வென்று சாதித்த அலீ, அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை ஈட்டி வந்தார். இருந்தாலும், சுய விளம்பரத்தில் அதீத ஆர்வம் கொண்ட கறுப்பின இளைஞரான முஹம்மது அலீயின் மற்றுமொரு கிறுக்குத்தனம்தான் இந்தப் பேட்டி என அன்று ஊடகங்களும், குத்துச்சண்டை ஆர்வலர்களும் கருதினர்.
அப்படி குறிப்பிட்ட சுற்றைச் சுட்டிக்காட்டி அவர் பேட்டியளிக்க்க் காரணம் இருந்தது.
முஹம்மது அலீ குத்துச் சண்டைக் களத்தில் நுழைந்த காலத்தில், குத்துச் சண்டை விளையாட்டுக்கு இறுதி அத்தியாயம் எழுதிக் கொண்டிருந்தனர். சூதாட்டப் புகாரால், குத்துச்சண்டை விளையாட்டு மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். இந்தப் பின்னடைவையெல்லாம் மடைமாற்றி, மீண்டும் குத்துச் சண்டைப் பக்கம் ரசிகர்களை ஈர்க்கப் பிரயத்தனப்பட்டார் முஹம்மது அலீ.
அலீ – பெஸ்மனாஃப் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் ஏன் வரவேண்டும்? குறிப்பிட்ட அந்தச் சுற்றில் போட்டி நிறைவடையுமா, 7வது சுற்றில் அலீ வெற்றி பெறுவாரா என்பதைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதற்காகவே, பரபரப்பை ஏற்படுத்த அப்படியொரு பேட்டியளித்தார். தன்னுடைய குத்துகளால் நிலைகுலைந்த பெஸ்மனாஃபை ஐந்தாவது சுற்றிலேயோ அல்லது ஆறாவது சுற்றிலேயோ அலீயால் வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், சொல்லியதைச் செய்து காட்டுவதற்காகவே 7ஆவது சுற்றுவரை போட்டியை நீட்டிக்கச் செய்ததாக அலீ பின்னர் தெரிவித்தார். (Blood Brothers: The Fatal Friendship Between Muhammad Ali and Malcolm X by Randy Roberts, Johnny Smith)
இதன் பின்பு, அமெரிக்காவில் குத்துச்சண்டைப் போட்டி மீதான நம்பகத்தன்மை பழையபடி மீண்டு, ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதும், முஹம்மது அலீ உலக ஹெவி வெயிட் சாம்பியனானதும் வரலாறு. அலீயைப் போலவே சொல்லியடித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அரங்கில் நிரம்பி வழியும் ஒருதலைப்பட்சமான ரசிகர்களை, ஆழ்ந்த மௌனத்தில் நீட்டிக்கச் செய்து தன்னுடைய வாக்கைக் காப்பாற்றித் திறமையை நிரூபித்து விட்டார்.
பேட் கம்மின்ஸ் ஒன்றே கால் லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்கி, இந்தியாவிடமிருந்து உலகக் கோப்பையை மட்டும் காப்பற்றவில்லை. இந்தியாவிடமிருந்து கிரிக்கெட்டையே காப்பாற்றி இருக்கிறார், முஹம்மது அலீ குத்துச்சண்டையைக் காப்பாற்றியது போல.