அண்மையில் நடந்த ஒரு வள்ளிக் கும்மி நடன நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களைக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி. பாலு “கல்யாணம் செய்துக்கறோம், கவுண்டர் வீட்டு பையனையே” என்று சத்தியம் செய்ய வைத்தார்.

இது பற்றிக் கடும் விமர்சனங்கள் எழுந்த போது கவுண்டர் இளைஞர்களுக்கு அந்தச் சாதியில் பெண் கிடைப்பதில்லை, பெண்களின் தொகை குறைந்து விட்டது, பெண்கள் விவசாயிகளான கொங்கு வேளாளர்களை மணமுடிக்க விரும்புவதில்லை, வேறு சாதியினருடன் காதல் வயப்படுகின்றனர், காதல் பெண்களுக்கும் சாதிக்கும் பல நெருக்கடிகளைக் கொண்டு வருகிறது, எனவே இந்த சத்தியத்தில் பெண்களின் நலனும் இருக்கிறது போன்ற காரணங்கள் கூறப்பட்டன.

இதற்கு ஏற்ப திருமணத் தகவல் மையங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் குவிந்து போக்குவரத்து நெருக்கடியே ஏற்படுவதாகவும், கவுண்டர் சாதி ஆண்கள் கேரளாவில் இருந்தும், சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் இருந்தும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு அழைத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களிலும், நாளிதழ்களிலும் அடிக்கடி காண்கிறோம்.

பெண் கிடைக்காததற்குச் சொல்லப்படும் இரண்டு காரணங்களும் எந்த அளவுக்கு உண்மை என்பது ஆராயத் தக்கது. உண்மையிலேயே நாமக்கல், சேலம் பகுதிகளில் 1000 கொங்கு வேளாள ஆண்களுக்கு 946 பெண்களே இருப்பதாக Between daughter deficit and development deficit: The situation of unmarried men in a south Indian community என்ற தலைப்பில்  சாரதா சீனிவாசன் எழுதிய ஆய்வேட்டில் கூறப்படுகிறது. இது 2015 காலகட்டத்தைச் சேர்ந்த புள்ளிவிவரமாகும். இதனடிப்படையில் பார்த்தால் ஆண்களை விடப் பெண்கள் ஐந்து சதவீதம் குறைவாக உள்ளனர். இது உண்மை என்றால் பெண்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிய அளவுக்குக் குறைந்து போய் விட்டதாகக் கூற முடியாது. ஆண்களின் இளவயது விபத்து மரணங்கள், பெண்களை விட அதிக எண்ணிக்கையில் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஐந்து சதவீதப் பெண்கள் குறைவாக இருப்பது ஒரு பிரச்சினையே இல்லை.

இந்த ஐந்து சதவீதப் பெண்கள் குறைவாக இருப்பதற்கு இந்தப் பகுதிகளில் கருவிலேயே பெண்குழந்தைகளைக் கண்டறிந்து கலைக்கும் வழக்கம் 90 களில் பெரிய அளவுக்கு இருந்ததும், குடும்பத்தில் முதல் குழந்தை மகனாகப் பிறந்துவிட்டால் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திவிடுவதும் காரணம் என்று மேற்சொன்ன ஆய்வில் கூறப்படுகிறது. இதே அளவுக்கு அல்லது இதைவிடப் பெரிய அளவுக்கு உசிலம்பட்டி, தர்மபுரி பகுதிகளில் பெண் சிசுக் கொலைகள் நடந்தன. பிறந்த குழந்தைகளே பெரிய அளவில் கொல்லப்பட்டதும் பதிவாகியிருந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் இது போன்ற பெண் கிடைக்காத சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.

தவிர கொங்கின் மேற்குப் பகுதிகளான கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் பெண் சிசுக் கொலை சுத்தமாக இல்லை. இங்குள்ள மருத்துவமனைகளில் பெரிய அளவுக்குச் செல்வாக்கு இருந்தால் மட்டுமே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு அது சாத்தியமில்லை. கொங்கின் மேற்குப் பகுதியில் குறிப்பாகக் கோவையிலும் அதைச் சுற்றிய பகுதியிலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 997 பெண்கள் என்ற அளவில் உள்ளது. ஆனால், இந்தப் பகுதிகளிலும் கவுண்டர் சாதியில் பெண் கிடைக்காத பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. எனவே முதல் காரணமாகச் சொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பதை ஆதாரப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தோன்றுகிறது.

அடுத்ததாகச் சொல்லப்படும் விவகாரம்தான் வள்ளிக் கும்மியில் சொல்லப்பட்ட விஷயம். கவுண்டர் வீட்டுப் பையனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை கூறிச் சத்தியம் வாங்கவேண்டிய அவசியம் உள்ளது என்று கே.கே.சி. பாலு கூறியுள்ளார். அப்படியென்றால் கொங்கு வேளாள சமூகப் பெண்கள் பெரிய அளவில் வேறு சாதிப் பையன்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள், இதைத் தடுக்க வேண்டும் என்கிறார் என்பது இதன் பொருளாகிறது. இதற்கும் ஆதாரமில்லை. தமிழகத்தில் மூன்று சதவீதத் திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் கொங்கு வேளாளக்  கவுண்டர் சாதியில் காதல் திருமணங்கள் நடப்பதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. அப்படி காதல் திருமணங்கள் பெரிய அளவில் நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரியவில்லை.

ஒருகாலத்தில் வட தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலிமையுடன் இருந்த காலத்தில், வன்னியர், ஆதிதிராவிடர் இருவர் வாழ்நிலையும் ஏறக்குறைய சமமாக இருந்த காலத்தில் காதல் திருமணங்கள் இப்பொழுது நடப்பதை விட அதிகம் நடந்தன. ஆனால், சாதிய அமைப்புகள் உறுதியாக வேறூன்றிக் காதல் மீது புனிதப் போர் தொடுக்கத் தொடங்கிய கடந்த பத்தாண்டுகளில் வட தமிழகத்திலேயே காதல் திருமணங்கள் அதிசயமாக மாறிவிட்டன. கொங்கின் நிலைமை இன்னும் மோசமாகத்தானிருக்கும். கொங்கின் பெருநகரங்களும் பெங்களூர், மும்பை போல கிராம உறவுகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டவையல்ல. எனவே ஒரு சாதியே பயப்பட்டு சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் காதல் இருக்க வாய்ப்பே இல்லை.

அப்படியென்றால் வள்ளிக்கும்மியை முன்னிறுத்தி ஏன் இந்த சத்தியம் வாங்கப்படுகிறது?  இதற்கான விடை தேடக் கொங்குப் பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றைக் கொஞ்சம் பார்க்க வேண்டியது அவசியம்.

———————————-

”திருமணம் ஆகாத ஆண்கள் பற்றிய ஆய்வில் திருமணம் நடக்காமல் இருப்பதற்கான மூன்று காரணங்கள் சொல்லும்படி கேட்கப்பட்டது. ஜாதகப் பொருத்தம் முக்கியமான காரணம் என்று 229 பேரில் 89 பேர் கூறினர். படிப்பு இன்மை என்று 73 சதவீதம் பேர் கூறினர். 19 சதவீதம் பேர் மட்டுமே பெண் கிடைக்கவில்லை, பெண்களின் எண்ணிக்கை குறைவு என்று கூறியுள்ளனர்” என்று சாரதா சீனிவாசன் ஆய்வு கூறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஆண் பெண் விகிதாச்சாரம் 2011 இல் ஆயிரம் ஆண்களுக்கு 912 பெண்கள் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், பஞ்சாப் ஹரியானாவில் பெண்களின் எண்ணிக்கை 900 க்கும் குறைவாக உள்ளது.

எனவே கவுண்டர் சமூகம் மொத்தத்திலும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில்லை என்ற பேச்சு இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வில் 89 பேர் திருமணம் தாமதம் ஆவதற்கு ஜாதகம் பார்ப்பதே காரணம் என்று கூறியுள்ளனர். இது மிக முக்கியமான சமூக மாற்றத்தைக் காட்டுகிறது. முன்பு உறவு முறைகளுக்குள் திருமணம் நடந்து வந்த காலத்தில் ஜாதகம் பார்க்கும் வழக்கம் கிராமப்புற விவசாயக் குடும்பங்களில் இருந்ததில்லை. இந்துச் சட்டம் 1956 வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுக் குடும்பங்கள் சிதறி சொத்துகள் ஆண் வாரிசுகளிடையே பிரித்துக்கொள்ளப்பட்டு வந்தன. நிலம் விற்று வாங்கப்படும் பண்டமாக மாறிவந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பு கொங்குப் பகுதியில் ஒரு சிறு பிரிவு பெரும் பணக்காரர்களாக மாறி உபரியை வேறு தொழில்களில் முதலீடு செய்தது. பெரும் பகுதி மக்கள் லாபமில்லாத விவசாயத்துக்கும் தள்ளப்பட்டு வேறு தொழில்களுக்குச் செல்லவேண்டிய தேவை உருவானது. இந்த இரண்டு தரப்புக்கும் தொழில் முதலீட்டுக்கு நிலமும், மணப்பெண் கொண்டுவரும் வரதட்சணையும், பெண்வீட்டார் தொடர்புகளும் அவசியமாகக் கருதப்பட்டன.

இந்த நிலை வந்ததும் பழைய திருமண முறைகள் சிதறிவிட்டன. ஒவ்வோர் ஆணும் மிக அதிக வசதி கொண்ட பெண்ணைத் தேடினான். ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் தரும் வரதட்சணைக்கு ஏற்ற விதத்தில் படித்த வசதியுள்ள ஆணைத் தேடினாள். கொங்கு வேளாளக் கவுண்டர்களில் கணிசமான ஒரு பகுதி கோவைக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் சேலத்துக்கும் குடி பெயர்ந்தது. பழைய கிராமப்புற முறையில் பெண் பார்ப்பது என்பது சாத்தியமற்றதாக மாறிவிட்டது.

இதே இடத்தில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் இருந்தனர். இவர்களில் பெரும்பகுதியினர் சென்னை போன்ற பெருநகரங்களில் குவிந்த பின்பு திருமணத்துக்குத் ‘திருமணத் தகவல் மையங்கள்’, தரகர்கள், நாளிதழ்களை நம்பியிருக்க வேண்டிவந்தது. நகரங்களில் தாக்குப்பிடித்து நிற்கத் தேவையான செலவை வரதட்சணை மூலம் ஈடுகட்ட ஒவ்வொரு குடும்பமும் நினைத்தது. இது ஆண் பெண் இருவரின் திருமண வயதையும் அதிகரித்தது. இலக்கியங்களில் பலமுறை எழுதப்பட்ட வரதட்சணைக் கொடுமைகள் இக்காலத்தில்தான் நடைபெற்றன. இப்போது இந்தச் சமூகங்களில் பெண்கள் படித்து ஊதியம் ஈட்டத் தொடங்கியவுடன் இந்த நெருக்கடி தீர்ந்துவிட்டது.

அந்த இடத்தில் இப்போது கொங்கு வேளாள சமூகம் இருக்கிறது. குடும்பங்கள் பெரும்பாலும் நியூக்கிளியர் கருக் குடும்பங்களாக மாறிவிட்டன. திருமண விஷயங்களை உறவினர் உதவியின்றி மணமகன்/மணமகள் வீட்டாரே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. படிப்புக்கும், வசதிக்கும், தேவைக்கும் ஏற்ற மணப்பெண் தேட வேண்டியிருக்கிறது. திருமணத் தகவல் மையங்கள் ஊருக்கு ஊர் முளைக்கின்றன. சம்பந்தம் இல்லாத குடும்பங்களில் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள ஏற்படும் அச்சத்தை ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் மூலம் கடக்கக் குடும்பங்கள் முயல்கின்றன. நகரங்களின் இயல்பான மேல்நிலையாக்கம் அதாவது பார்ப்பனியப் பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொள்வதும் ஜாதகம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம்.

இந்த ஜாதகம் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள், ஆயில்யம், பெண் மூலம் போன்ற நட்சத்திரங்கள் என்று சம்பந்தமில்லாத விவகாரங்கள் எல்லாம் திருமணக் கனவுகளைத் தகர்க்கின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு தவிப்பதைக் காண முடிகிறது.

தீவிர நகரமயத்தின் காரணமாக விவசாயம் போன்ற போராட்டமில்லாத, அமைதியான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் கணினிப் பணிகள், அரசு வேலைகள் ஆகியவற்றிலிருக்கும் மணமகன்கள் மணப்பெண் வீட்டாரால் விரும்பப்படுகின்றனர். மற்றவர்கள் இந்த ஓட்டத்தில் பின் தங்கிப் போகின்றனர். இது தவிர்க்க முடியாதது. நடந்தேதான் தீரும். உதாரணமாக நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் லாரி ஓட்டுநர்களுக்கு அதிக அளவில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. லாரி டிரைவர்களை முன் வைத்து எய்ட்ஸ் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்போது திருமண மார்க்கெட்டில் லாரி டிரைவர்கள் விரும்பப்படுவதில்லை. இது மிக இயல்பானது. புரிந்து கொள்ளக் கூடியது. தக்காளி விலை  கிலோ ஐந்து ரூபாய் என்று டிவியில் பார்க்கும் மணப்பெண் எப்படி விவசாயியை விரும்புவாள்?

தொண்ணூறுகளில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கியவுடன் தொழில்கள் நவீனமாக மாறின. கல்வியும் தனியார் மயமானது. புதிதாக உருவான கொங்கு முதலாளிகள் பெரிய அளவுக்குக் கல்வியில் முதலீடு செய்ததால், கொங்குப் பகுதிகள் முழுவதும் கல்லூரிகளும் பள்ளிகளும் முளைத்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களைப் படித்த வைத்தால் போதும், குடும்பச் சொத்தை விற்காமல், நகைகள் போன்ற மூலதனத்தைச் சிதைக்காமல் திருமணம் செய்துவிட முடியும் என்று குடும்பங்கள் நினைத்ததால் பெண்கள் பெரிய அளவில் படிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.

அதே நேரம் ஆண்கள் சொத்துக்குரியவர்களாகக் கருதப்பட்டதால் விவசாயவேலைகள் அவர்கள் தலையில் விழுந்தன. தவிர, பணம் ஈட்டுவது போன்றவற்றில் கவனம் சென்றதால் எண்ணற்ற இளைஞர்கள் படிப்பதற்கான மனநிலையை இழந்து விட்டனர்.

படித்து நல்ல வேலைக்குப் போகும் பெண்கள் அதிக லாபம் இல்லாத வெளியுலகத் தொடர்பு இல்லாத முதுகொடிக்கும் வேலை வாங்கும் விவசாயக் குடும்பங்களில் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இப்படிப் பல காரணங்கள்.

ஆண்களின் திருமணப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால் ஜாதகத்துக்கு எதிராகப் போராட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிராகப் போராட வேண்டும். திருமணத் தகவல் மையங்களின் கொள்ளையைத் தடுக்க முயல வேண்டும். பெண்களைக் கூட்டிவைத்து சத்தியம் வாங்குவது என்பது மிகவும் மேம்போக்கான விஷயம். இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் இதன் பின்னே முக்கியமான அரசியல் இருக்கிறது.

குறைந்தது 97 சதவீதப் பெண்கள் சாதிக்குள்ளேதான் திருமணம் செய்துகொள்கின்றனர். இவர்களிடம் மீண்டும் சத்தியம் வாங்குவதில் என்ன பலன்? வள்ளிக்கும்மி இதற்கு ஏன் பயன்படுத்தப்படுகிறது?

இந்த வள்ளிக்கும்மி கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி மக்களைச் சாதி ரீதியில் அணிதிரட்ட உதவுகிறது. பெண்களுக்கு ஆபத்து என்ற பீதியைக் கிளப்ப உதவுகிறது. கொஞ்ச நாள் முன்பு ராமதாஸ் தலித்துகள் ஜீன்சும் கூலிங்கிளாசும் போட்டு வன்னியர் பெண்களை மயக்குகிறார்கள், நாடகக் காதல் செய்கிறார்கள் என்று இன்றும் கதறிக் கொண்டிருக்கிறார்களே அது போல இதுவும் பீதியூட்டி சாதியை அணிதிரட்டும் உத்திதான். எல்லாச் சாதியவாதிகளும் தங்கள் பெண்களை ஏமாற்றி, மயக்கிக் கடத்திப் போக வேறு சாதி ஆண்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அடித்துப் பேசிச் சாதிக்க விரும்புகின்றனர். இதன் மூலம் தங்கள் சாதி மக்களைத் தங்கள் பின்னால் அணிதிரட்ட முயல்கின்றனர்.

சாதிய அணிதிரட்டல் என்பது வாக்கு வங்கி என்பதோடு, மூலதனத் திரட்டல், தொழில் அமைதி, அரசை நெருக்கடிக்குள்ளாக்கிக் காரியம் சாதிக்கும் வாய்ப்பு என்று பல சாத்தியங்களை அளிக்கிறது.

சாதிய அணிதிரட்டலில் ஈடுபடுபவர்கள் யார்? அவர்களுக்குச் சாதியால் என்ன லாபம்? வள்ளிக்கும்மிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள, கடந்த முப்பது நாற்பதாண்டு கொங்கு வேளாளக் கவுண்டர்களின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வது அவசியம்.

—————————————–

கவுண்டர் சமூகம் ஒரு கலவையான சமூக அந்தஸ்த்து கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தச் சாதியில் பல செல்வாக்கு வாய்ந்த ஜமீன்தார்கள் இருந்தனர். பணக்கார விவசாயிகளும் இருந்தனர். அதே நேரம் நீர்ப்பாசன வசதியற்ற மேட்டு நில விவசாயத்தில் முதுகொடியப் பாடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தரச் சிறு விவசாயிகளும் ஏராளமாக இருந்தனர். உயர்வர்க்கத்தைத் தவிர மற்றவர்கள் 1980 வரை படிப்பைப் பற்றிப் பெரிய அளவில் கவலைப்பட்டதில்லை. எண்பதுகளில் நீதிமன்றங்களில் முதல் முதலாகக் கவுண்டர் இளைஞர்கள் வழக்குரைஞர்களாகப் பணிபுரிய வந்த போது “குடியானவர்களுக்கு ஏன் இந்த வேலை?” என்று கிண்டல் செய்யப்பட்டதாகக் கூறுவார்கள்.

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், சுஜாதாவின் வைரம் போன்ற கதைகளில் பார்ப்பனர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்களைப் படிப்பறிவற்றவர்கள், பெரிய செல்வம் இருந்தாலும் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத கிராமத்து மனிதர்கள் என்ற ரீதியிலேயே நடத்தியது பதிவாகியிருக்கும்.

ஆழியார், திருமூர்த்தி அணை, கீழ் பவானி அணை போன்றவை உருவான பின்பு கொங்குப் பகுதியில் பல வறண்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. பின்பு வந்த பசுமைப் புரட்சி விவசாயத்தைப் பெரிய அளவுக்கு வணிகமயமாக்கியது.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் புதிதாகப் பாசன வசதிபெற்ற பகுதிகளில் ஏராளமான நிலங்களைக் கொண்டிருந்த விவசாயிகள் பெரும் செல்வம் ஈட்டி மேலும் வலிமை பெற்றனர். இவர்களில் சிலர் மாநிலத்தில் இருந்த மிகப் பெரிய நிலப்பிரபுக்கள் பட்டியலிலும் இடம்பெற்றனர். இந்த அபரிமித விளைச்சலில் கிடைத்த லாபத்தை இந்தப் பெரும் பணக்கார விவசாயிகள் கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களில் மற்ற தொழில்களில் முதலீடு செய்தனர். இதிலிருந்தே சக்தி குழுமம், பண்ணாரியம்மன் சுகர்ஸ், எஸ்.கே.எம் மாட்டுத் தீவனம் போன்ற பெரிய கொங்கு வேளாளக்கவுண்டர் வணிகக் குழுக்கள் வளர்ச்சி பெற்றன. இந்தக் குழுக்கள் சர்க்கரை ஆலைகள், ஆல்கஹால், டெக்ஸ்டைல், கல்வி, ஆட்டோமோபைல், நிதி நிறுவனங்கள், காற்றாலைகள் ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

அதே நேரம் சிறு குறு விவசாயிகள் மோசமான விளைச்சல் மற்றும் போதுமான ஊதியம் கிடைக்காத காரணத்தால் நகரங்களுக்கு வந்து ஹார்டுவேர் கடைகள், டையிங், பிரிண்டிங் தொழில்கள் ஆகியவற்றில் இறங்கினர்.

தென்னிந்திய ஹோசியரி உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (south India Hosiery Manufacturers Association AIHMA) 56 சதவீதம் பேர் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திலும் (Tiruppur Exporters’ Association- TEA) கொங்கு வேளாளக் கவுண்டர்களே முதன்மை இடம் வகிக்கின்றனர். (Chari 2004). இவற்றின் துணைத் தொழில்களும், வணிக வலைப்பின்னலும் இந்தch சாதியினரின் ஆதிக்கத்திலேயே இருந்தன.

திருப்பூர் இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதி மையமாகும். இந்நகரம் நாட்டின் மொத்த பருத்தி நூல் ஏற்றுமதியில் 15 சதவீதத்தையும், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 45 சதவீதத்தையும் அளிக்கிறது. (Damodaran 2008) . இந்த அடிப்படையில் பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட சங்கங்களில் கொங்குக் கவுண்டர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது  என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தச் சமூக வளர்ச்சி சமச்சீரற்ற முறையில் உள்ளது என்பதைப் புரிந்துகொண்ட அரசு தாட்கோ மூலம் திருப்பூர் முதலிபாளையத்தில் தலித் தொழில் முனைவோருக்கு 100 ஏக்கர் நிலத்தில் ஆலைகள் அமைக்க உதவிகள் செய்தது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் குழுமம் (Tamilnadu Industrial Investment corporation- TIIC) இதற்கு நிதியுதவி செய்தது. 15 சதவீத முதலீடு மானியத்தில் வழங்கப்பட்டது. தொழிற்கூடங்களையும் அரசே அமைத்துத் தந்தது. பல நன்கு படித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அனுபவம் பெற்ற முன்னாள் பனியன் ஆலை ஊழியர்கள் ஆகிய ஓரளவு வசதி படைத்த தலித்துகள் இந்தப் பணியில் இறங்கினர் என்றாலும் 50 சதவீதத் தொழிற்கூடங்கள் காலியாகவே கிடந்தன.

இதற்கு ஒரே காரணம்தான். முதலீடு செய்ய அரசு உதவுகிறது என்றாலும் உற்பத்தி தொடர்பான அனைத்து வலைப்பின்னலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கரங்களிலேயே இருந்தன. இதைத் தாண்டி தலித் தொழில் முனைவோரால் உலக, உள்ளூர் சந்தையை அணுக முடியவில்லை. எனவே இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

இதேபோல கோவையில் உலகமயத்துக்குப் பின் உருவாகிய அதிநவீன தொழில்களிலும், சிறுதொழில்களிலும், ஒப்பீட்டளவில் சிறிய நகரங்களான நாமக்கல், திருச்செங்கோடு, கரூர் நகரங்களில் உருவான கோழி உற்பத்தி, வாகனங்களுக்கு பாடி கட்டுதல், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் இயந்திரங்கள் உருவாக்குதல், கிணறுகள் அமைத்தல் போன்ற தொழில்களிலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

தொழில் துறையில் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள அரசு அதிகாரத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியம் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிக்கு ஏற்பட்டது. தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு வசதிகள், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை சாதகமான அரசு இல்லாமல் சாதிக்க முடியாது. எனவே கொங்கு வேளாளர் சாதியின் முக்கியப் புள்ளிகள் திமுக, அதிமுக போன்ற அமைப்புகளில் முக்கியப் பதவிகளை விரும்பினர். அந்தக் கட்சிகள் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கொங்கு வேளாளரைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் கொங்கு வேளாளருக்குத் தனி அமைப்பு வேண்டும் என்ற தேவை பெரிய அளவில் உணரப்பட்டது.

இதை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளிலேயே உணர்ந்து கொண்டவர் ‘கோவை செழியன்’. இவர் திமுகவின் மாவட்டச் செயலாளராகவும், கொங்குப் பகுதியில் முக்கியமான திராவிட இயக்கத் தலைவராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார். இது பின்பு 2009 ஆம் ஆண்டு கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியது.

அதே நேரம் கொங்கு வேளாள கார்ப்பரேட் அமைப்புகளும் முதலாளிகளும் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் ஓர் அரசியல் கட்சியைத் தேடி வந்தனர். இதே போல நாயுடு சாதியினரும் தமிழக அரசியலில் அவர்களுக்குப் போதுமான முக்கியத்துவம் இல்லை என்ற கருத்துக் கொண்டிருந்தனர். வைகோ திமுகவில் இருந்து பிரிந்த போது இந்த இரண்டு சாதியினரும் கொங்குப் பகுதியில் அவரை ஆதரித்தனர். ஆனால், மதிமுக அடுத்த கட்டத்துக்கு வளரவில்லை.

இதையொட்டிய காலகட்டத்தில் திமுக, அதிமுகவில் பெரிய அளவுக்கு தலைமைப் பொறுப்புகளுக்குக் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வந்தாலும் அவர்கள் சாதியை விட கட்சிக்கே விசுவாசமாக இருந்தனர். கவுண்டர் லாபி என்று ஒன்று பெரிதாக உருவாகவில்லை. அதே நேரம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என்று மூன்று மாநகரங்கள் கொங்குப் பகுதியில் உருவாகின. சென்னைக்கு வெளியே உள்ள மிகப் பெரிய வணிக மையம் இந்தக் கொங்குப் பகுதி என்றாகியது. கொங்குப் பகுதிகள் வழியாகச் செல்லும் சென்னை-கொச்சி நெடுஞ்சாலை நவீனப்படுத்தப்பட்டது வணிக வளர்ச்சிக்கு மேலும் உதவியது. நாமக்கல், கரூர் திருச்செங்கோடு, அவினாசி போன்ற வளம் மிக்க சிறு நகரங்களும் உருவாகின. இவையும் அகில இந்தியச் சந்தைகளுடன் இணைக்கப்பட்டது கொங்கு வேளாளக் கவுண்டர்களின் செல்வாக்குக்குக் காரணமானது.

கொங்கு வேளாளர் சாதி ஏற்கனவே எண்பதுகளில் இருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் பொருளாதாரகச் சீர்திருத்தங்கள் தொடங்கியதும் இன்னும் பெரிய அளவில் ஆலை மற்றும் வணிகத்தில் இறங்கியது. இங்கே உள்ள நிலங்களில் சுமார் எண்பது சதவீதம் இந்தச் சாதியினரின் கரங்களில் இருந்ததால் அது மூலதனம் திரட்ட மிக முக்கியமான மூலவளமாக அமைந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்  தேர்தலில், 2009 பாராளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து நின்று கொங்குப் பகுதியில் மட்டும் 6 லட்சம் வாக்குகள் பெற்றது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 2013 ஆம் ஆண்டு இந்தக் கட்சி உடைந்து ஈ ஆர் ஈஸ்வரன் தலைமையில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உருவாகியது. இதன் பொறுப்பாளர்தாம்  வள்ளிக்கும்மியில் சத்தியம் வாங்கிய பாலு.

இந்தக் கொங்கு அமைப்புகள் அசுர வளர்ச்சி பெறுவது போலத் தோன்றியது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அரசியல் அதிகாரத்தை அடையப் போராடுவதையும், அவர்களது  பலத்தையும் முதலில் புரிந்துகொண்டவர் ஜெயலலிதா. அதிமுகவுக்கு இந்த வரலாறு உண்டு. திமுகவை ஆதரித்த முக்குலத்தோர் அதில் உயர்பதவிகளுக்கு வரமுடியாத நிலையில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவை ஆதரித்தனர். பின்பு ஜெயலலிதா அதிமுக தலைவரானதும் முக்குலத்தோர் ஏறக்குறைய அதிமுகவின் முதுகெலும்பாகக் கருதப்படும் அளவுக்கு அந்தக் கட்சியில் செல்வாக்கு பெற்றனர். அதே போல இப்போது கொங்கு வேளாளச் சாதி அதிகாரத்தை நோக்கி நகர்வதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா அந்தச் சாதியினருக்குப் பெரிய அளவு கட்சியில் முக்கியத்துவம் அளித்தார்.

அவரது அமைச்சரவையில் கவுண்டர்கள் எட்டுப் பேரும், முக்குலத்தோர் ஆறு பேரும், வன்னியர் ஐந்து பேரும் அமைச்சர்களாக்கப்பட்டனர். இது டெக்ஸ்டைல் பள்ளத்தாக்குக் கவுண்டர் லாபியின் பலத்தை முதல் முதலாகத் தமிழக அளவில் பறைசாற்றியது. கவுண்டர் லாபி மேலும் வலிமை பெற்று உக்கிரமடைந்தது. கொங்குப் பகுதியில் அனைத்து கட்சிகளின் தலைமைப் பொறுப்பையும் கவுண்டர்கள் கைப்பற்றினர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற திட்டங்களில் முக்கியமான ஒப்பந்தங்களை இந்தச் சமூகம் அடைந்தது.

அதிமுக தங்களுக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் தனியாக ஒரு கட்சியைக் கடும் முயற்சி செய்து வளர்க்க வேண்டியதில்லை என்ற முடிவுக்குக் கொங்கு முதலாளித்துவ வர்க்கம் வந்தது. மாபெரும் வலிமை வாய்ந்த அதிமுக இருக்கும் போது உள்ளூர் மட்டத்திலான கொங்குக் கட்சிகள் தேவையில்லை என்றே அவர்கள் கருதினர். தனியரசு, ஈஸ்வரன் போன்ற தலைவர்கள் சிறிய அளவில் பெரும் கட்சிகளைச் சார்ந்து இயங்குபவர்களாக மாறினார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயலலிதாவும் கொங்குக் கட்சித் தலைவர்கள் மீது தனக்கேயுரிய முறையில் தாக்குதல் தொடுத்து வழக்குகள் போட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கொங்கு முதலாளித்துவ வர்க்கமும், பெருவணிக வர்க்கமும் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி தலைமையில் இணைந்து முக்குலத்தோரைத் தோற்கடித்து அதிமுகவைக் கைப்பற்றின. மிகவும் வலிமை வாய்ந்த தொழில் மூலதனம், வணிகம், கல்வி, மருத்துவம் என்று பல துறைகளில் பரந்து விரிந்த செல்வாக்கு கொண்டு எல்லையற்ற பணபலத்தையும் அதன் மூலமாக ஏற்பட்டிருந்த மக்கள் செல்வாக்கையும் கொண்டிருந்த கொங்கு வேளாளர் லாபியை எதிர்ப்பதற்கான மூலவளங்கள் முக்குலத்தோரிடம் இல்லை. தமிழக அளவில் இது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இதுவரை சென்னைக்கு வெளியே உள்ள ஒரு பகுதி முதலாளித்துவ வர்க்கம் மாநில ஆளும் கட்சியில் இத்தனை செல்வாக்கு வகித்ததில்லை.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஒரு குழுவாக இருந்து அதிகாரத்தை அடைந்தது ஒரு பகுதி வெற்றி மட்டுமே. ஆனால், இப்படிப்பட்ட சாதிரீதியிலான குழுக்கள் உருவாவதற்கான கோட்பாட்டு அடிப்படையை  குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களே வழங்கினர். குருமூர்த்தி சாதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் (caste based economy) என்ற கோட்பாட்டை முன்வைத்தார். சாதி இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது; நம்பகத் தன்மையை வழங்குகிறது; மூலதனத் திரட்டலுக்கு உதவுகிறது; தொழிலாளர் பிரச்சினை, ஊதியப் பிரச்சினை போன்றவற்றைக் கடக்க உதவுகிறது; இந்தியா போன்ற நாடுகளில் அரசு உதவியும், வங்கிகள் அளிக்கும் கடன் உதவியும் போதாத நிலையில் சாதிரீதியில் திரட்டப்பட்ட மூலதனத்தைக் கொண்டே பனியா, நாயுடு, நாடார், கவுண்டர் போன்ற சாதியினர் முன்னேறினர். சாதி சமூகத்தைப் பிளவுபடுத்தினாலும்கூடப் பொருளாதார அடிப்படையில் உதவவே செய்கிறது, முதலீட்டாளர்களுக்குச் செல்வத்தை அளிக்கிறது என்று “Cast as Social Capiral”  என்ற நூல் வெளியீட்டு விழாவில் குருமூர்த்தி பேசினார். இந்த நூலின் ஆசிரியர் ஆர். வைத்தியநாதன். இவரும் இது போன்ற பார்வையையே முன்வைத்தார்.

வைத்தியநாதன் விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற அமைப்பில் ஆலோசகர் குழுவில் உள்ளார்.  இப்போது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ‘சோ.ராமசாமி இருக்கைப் பேராசிரியராக’ உள்ளார். சாதி ஒரு காலாவதியான சமூக அமைப்பு முறை என்பது பொதுவாக உள்ள கருத்து. ஆனால், சாதி தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது, சமூகத்துக்குப் பயன்படுகிறது என்கிறது வைத்தியநாதனின் நூல். சாதிகுறித்த இந்துத்துவப் பார்வை இது.

இந்தியா வைசிய மயமாகவேண்டும் என்கிறது நூல். “அரசானது சத்திரியனின் பாதுகாப்பளிக்கும் பணியை முதன்மையாகச் செய்ய வேண்டும். நமது சமூகத்தின் பெரும் பகுதிகள் வைசியர்களாக அதாவது வணிகர்களாக மாற வேண்டும். இதைக் கடன், வரி, சமூகப் பாதுகாப்பு, உள்ளூர் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்ட குழுக்களின் மூலம் சாதிக்க வேண்டும்” என்கிறார் வைத்தியநாதன்.

வைத்தியநாதன் பெரும்பாலும் செல்வவளம் கொண்ட சலுகை பெற்ற சாதிகளைப் பற்றியே பேசுகிறார். சாதியைப் பொருளாதாரம், முதலீடு, தொழில் முனைதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அணுக வேண்டும் என்கிறார். சாதிகள் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சாதியும் தன்னை விடக் கீழாக உள்ள சாதியைச் சுரண்டுகிறது, அடக்கியொடுக்குகிறது என்பது இந்த ஆய்வில் இடம்பெறுவதே இல்லை. சாதியைப் புதிய பார்வையில் பார்ப்பதாகக் கூறி அதற்குப் புதிய பெருமைகளை அளிக்கும் பணியையே செய்கிறது இந்த நூல்.

இது போன்ற சாதி ஒற்றுமை அதே சாதியைச் சேர்ந்த தொழிலாளர் நலன்களுக்கும், மற்ற பிரிவினரின் நலன்களுக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் எதிரானதாக இருக்கிறது, வலிமை வாய்ந்த சாதி அனைத்தையும் அடைகிறது, வலிமையற்ற சாதி அனைத்தையும் இழக்கிறது என்பதை நியாயப்படுத்தும் கோட்பாட்டை ஆர்.எஸ்.எஸ் வழங்கியது.

குறிப்பிட்ட சாதிகள் வளர்ச்சியடைவதையும், சாதி ஆதிக்கத்தை அரசியலிலும், பொருளாதாரத்திலும் நிலைநாட்டுவதை இந்துத்துவ ஆய்வாளர்களும், பேராசிரியர்களும், தலைவர்களும் வரவேற்று ஊக்குவித்தனர். இது போன்ற வளர்ச்சியடையும் சாதிகளின் முன்னணியாளர்களும் பல உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் செயல்களுக்குக் கோட்பாட்டு அடிப்படையை அளித்தனர். உழைப்பின் மூலமே இவ்வளவு வளர்ச்சியடைந்தோம் என்று சற்றே பாமரத் தன்மையுடன் சாதியத் தலைவர்கள் கூறிவந்ததற்கு இந்துத்துவவாதிகள் நவீன, போலி அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்தனர். இந்த வைசியர் ஆக்கும் விளக்கம் அபத்தமானது என்பதற்கு இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்ட தலித் தொழில் முனைவோரின் தோல்வி நல்ல உதாரணமாகும்.

அதே நேரம் கொங்கு வேளாளர் சாதி ஆளும் வர்க்கமானது ஜனநாயகத்தில் எவ்வளவு அதிகாரத்தை அடைந்தாலும் வாக்கு வங்கி அரசியலில் வெற்றி பெறாவிட்டால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து இருக்கிறது. எனவே தங்கள் சாதியினர் அனைவரையும் ஒன்றாகத் திரட்டித் தங்கள் பலத்தை அரசியல் கட்சிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை கவுண்டர் லாபிக்கு இருக்கிறது.

இந்துத்துவ அமைப்புகள் விளக்கு பூஜை, ஷாகாக்கள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்றவற்றை நடத்தி மக்களைத் தங்கள் பக்கம் திரட்டுவதைப் போல கவுண்டர் லாபி கண்டுபிடித்த வழிதான் வள்ளிக்கும்மி.

———————————

குழு நடனம் ஆதிகாலந்தொட்டே ஒரு கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. ஒற்றுமை உணர்வை, அடையாளத்தை உருவாக்குகிறது என்கிறது Piotr Sorokowski, Jerzy luty and Marta Kowal இணைந்து எழுதிய– Group dance, social cohesion and social identiy in yali society form Papua என்ற ஆய்வுக் கட்டுரை. யாலி என்ற பழங்குடிப் பிரிவினரிடம் இதைப் பரிசோதித்த போது குழு நடனம் அவர்களது சமூக அடையாளத்தை வலிமைப்படுத்துகிறது, ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும் உணர்வை ஏற்படுத்துகிறது என்ற முடிவுகள் எட்டப்பட்டன. Oxford handbook of Dance and Politics  என்ற நூலில் Rebekah J.Kowal, Gerald Siegmund, Randy Martin  ஆகியோர் நடனமும் அரசியலும் பல சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன என்கின்றனர். குழு நடனமானது ஏற்படுத்தும் ஒற்றை அடையாளமானது மெல்ல மெல்ல ஒற்றை அரசியலையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு இழுத்துச் செல்கிறது.

நடனத்தைத் திரும்ப திரும்பச் செய்யும்போது பங்கேற்பவர்களை, இயக்குபவர்களின் சிந்தனையை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. இந்த இடத்தில் வள்ளிக் கும்மி, தமிழர் என்ற இனம், வர்க்கம் ஆகிய அடையாளங்களுக்கு மாறாகக் கவுண்டர் என்ற ஒற்றைச் சாதி அடையாளத்தை உருவாக்குகிறது. தாங்கள் புகழ் வாய்ந்த பாரம்பரியம் என்று சொல்லப்படுவதோடு இன்றைய மக்களை உளவியல் பூர்வமாக இணைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. வள்ளிக்கும்மி பண்பாட்டோடு இணைந்தது என்பதால் உயர்வாக மதிக்கப்படுகிறது. சிறப்பான தேர்வு இது.

கட்சிகள் பதாகைகள் தாங்கிய ஊர்வலங்கள் நடத்துகின்றன. ராணுவத் தன்மை கொண்ட அமைப்புகள் சீருடை அணிந்த ஆண்கள் மட்டுமே ஆயுதங்களுடன் பங்குபெறும் அணிவகுப்புகள் நடத்துகின்றன.  கொங்கு வேளாள அமைப்புகள் இன்றுள்ள நிலையில் பார்வையாளர்கள் நடுவே வியப்பையும் திகைப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதை விட தங்கள் சாதியினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களை ஓர் அரசியல் அலகாக மாற்றுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளன.

எனவே வள்ளிக் கும்மி மிகச் சிறந்த தேர்வு.

குறவர் மகளான வள்ளியைக் குறவர் வீட்டில் வளர்ந்த முருகன் திருமணம் செய்து கொள்வதைப் பாட்டாகப் பாடுவது வள்ளிக் கும்மி. பெரும்பாலும் கொங்கு வேளாளர் மக்களுக்கு இந்தக் கட்சியினர் பயிற்சியளித்து வருகின்றனர்.

பாலு கொங்கு நாடு கலைக் குழு என்ற பெயரில் குழு அமைத்து ஈரோடு பகுதியில் வள்ளிக் கும்மி பயிற்சியளித்து வருகிறார். 2021இல் திமுக சின்னத்தில் பெருந்துறையில் போட்டியிட்டவர்.

பாலு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும், கவுண்டர் பெண்கள் கவுண்டர் சாதி ஆண்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

“வள்ளிக்கும்மி மூலம் பல கிராமங்களில் இருக்கும் மக்கள் தங்களுக்குள் சமூகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆண்களுக்குத் திருமணம் செய்து கொள்ளப் பெண் கிடைக்காத ஆதங்கத்தில் பாலு பேசிவிட்டார்” என்றார் கொங்குநாடு மக்கள் கட்சியின் செயலாளர்  ஈஸ்வரன். இந்தப் பேச்சின் முதல் வாக்கியம் வள்ளிக் கும்மி கவுண்டர் சமுக மக்களை ஒன்று திரட்டப்பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை உடைக்கிறது.

வள்ளிக்கும்மிக்கு இசைக்கருவிகள் எதுவும் தேவையில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இந்தப் பயிற்சி நடந்து வருகிறது. வேறு சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் உள்ளது.

“இந்த வள்ளிக்கும்மி குறித்து ஆய்வு செய்ததில் இவை மங்கை வள்ளி கலைக்குழு, மகா மாரியம்மன் கலைக்குழு, கொங்கு நாடு கலைக்குழு போன்ற சில கலைக்குழுக்களின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்குப் பயிற்சியளித்ததையும் நூற்றுக்கணக்கான அரங்கேற்றங்கள் நடத்தியுள்ளதையும் பார்க்கும் போது வள்ளிக் கும்மியின் திடீர் வளர்ச்சி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் இளம் தலைமுறையினரிடம் சாதிவெறியைப் புகுத்தும் செயலோ என்ற சந்தேகம் எழுகிறது. (வள்ளிக்கும்மி என்ற பெயரில் நடத்தப்படும் சாதி அரசியலும் பின்னணீயும்- எஸ். கிருஷ்ணவேணி). (Youturn.in).

வள்ளிக்கும்மியில் இது போன்ற சத்தியம் வாங்கப்பட்டது பெண்கள் காதல் வயப்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ள பெற்றோர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களைத் தங்கள் பெண்களை இந்த வள்ளிக் கும்மி ஆட்டத்துக்கு அனுப்பிவைக்க உதவுகிறது. பெண் கிடைக்காமல் அலையும் ஆண்களுக்குச் சாதகமாக இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி அவர்கள் ஆதரவையும் பெற முயல்கிறது.

ஆனால், திருமணம் தள்ளிப் போவதற்குக் காரணமான ஜாதகம் போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிப்பதைப் பற்றிப் பேச்சே எடுப்பதில்லை. விவசாயிகளான ஆண்களைப் பெண்கள் விரும்பாததற்குக் காரணம் அந்தத் தொழிலின் வீழ்ச்சி. அது குறித்து இந்த வள்ளிக்கும்மி ஆட்கள் கண்டுகொள்வதே இல்லை. கவுண்டர் சாதியில் உள்ள வர்க்க வேறுபாடு குறித்தும் பேசுவது இல்லை.

ஓரத்துப்பாளையம் அணையால் பாதிக்கப்பட்டவர்களும் கவுண்டர்கள்தாம். ஓரத்துப் பாளையம் அணை அமில அணையாக மாறியதற்கு முக்கியக் காரணமும் கவுண்டர் சாதி பனியன் கம்பெனி முதலாளிகள்தாம். விசைத்தறி உரிமையாளர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குக் காரணம் பெரிய மில் உரிமையளர்கள். இரண்டு பேரும் ஏறக்குறைய ஒரே சாதியினர்.

இதைப் பற்றியெல்லாம் பேசாமல் வள்ளிக்கும்மி சாதிக்கு வேறு இடத்திலிருந்து ஆபத்து வருகிறது என்று பேசுகிறது. ஆண்களையும் பெண்களையும் அணிதிரட்டுவதன் மூலம் கவுண்டர் லாபியின் பலத்தை அதிகரிக்கிறது. கவுண்டர் லாபி தங்கள் சமூக மக்களின் ஆதரவையும் தங்கள் பண பலத்தையும் பயன்படுத்திப் பொருளாதாரச் சலுகைகளையும், அதிகாரத்தையும் அடைகிறது.

கொண்டாட்டங்களற்ற சலிப்பூட்டும் தமிழக நகரச் சூழலில் இந்த வள்ளிக் கும்மி பெண்களுக்குச் சிறந்த வடிகாலாக, மன அழுத்தத்தை நீக்கும் கருவியாக அமைகிறது. அரசியல் மட்டத்தில் அவர்களை மிகச் சிறந்த ஆதரவுத் தளமாக வளர்த்தெடுக்கவும் பயன்படுகிறது.

அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். அண்மையில் நடந்த மதுரை அதிமுக மாநாட்டில் வள்ளிக்கும்மி நடனம் நிகழ்த்தப்பட்டது. திமுக, பிஜெபி அமைப்புகளும் தங்கள் நிகழ்வுகளில் இந்த நடனத்தை நிகழ்த்துகின்றன.

எனவே கட்சிகள் கடந்த சாதி அடிப்படையிலான ஒற்றுமை உணர்வை ஓரளவுக்கு இந்த வள்ளிக்கும்மி உருவாக்குகிறது. இது இந்த நடனங்களை நிகழ்த்தும் அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் புரவலர்களாக இருக்கும் டெக்ஸ்டைல் பள்ளத்தாக்கு முதலாளித்துவத்துக்கு நெருக்கடி நேரங்களில் மிகச்சிறந்த கருவியாக அமையும். தவிர சாதி ரீதியிலான அணிதிரட்டல் என்பது பல சிக்கல்களைக் கொண்டுவரும் வாய்ப்பும் உள்ளது.

இக்கட்டுரையானது ஒரு விவாதத்தின் தொடக்கம் மட்டுமே. இன்னமும் கொங்குத் துகில் பள்ளத்தாக்கு மூலதனம் குறித்தும், அதிகாரத்தை நோக்கிய சாதிய அணிதிரட்டல் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

–––