இந்தத் தலைமுறை குறித்த பலரின் அங்கலாய்ப்புகளை உற்றுக் கவனித்தால் அவற்றை வெறும் தலைமுறை இடைவெளியாகக் கடந்து விட முடியாது.ஒரு பிரளயம் நிகழ்வதை உள்ளுணர்ந்த பதற்றத்தை நாம் அவர்களின் சொற்களிலும் , உடல் மொழியிலும் உணர முடியும். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் , லட்சியவாதிகள், சிந்தனையாளர்கள் , மதத்தலைவர்கள், தந்தைகள் ஆகியோரிடம் இந்தப் பதற்றத்தைக் கூடுதலாகக் காண முடிகிறது. ஒப்பீட்டளவில் தாய்மார்கள் , பெண் ஆசிரியர்கள் , பெண் செயல்பாட்டாளர்கள் இந்த மாற்றத்தை தன்னம்பிக்கையுடனே எதிர் கொள்கிறார்கள்.
அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. உயிரினங்களின் வரலாற்றில் ‘ தந்தை ‘ என்கிற பிம்பம் உருவாகி பேருருக் கொண்டது மனிதர்களிடம் மட்டுமே. விலங்குகளைப் பொறுத்தவரை ‘தந்தை ‘என்பது ஒரு தற்செயல் நிகழ்விற்கான ஸ்தூல வடிவம் மட்டுமே. இணை தேடல் மற்றும் தாய்மை மட்டுமே மனிதன் தவிர்த்த பிற ஜீவராசிகளின் ஆதார இயல்பு. மனித குல வரலாற்றிலும் ஆரம்பத்தில் தந்தைக்கென்று தனியிடம் இல்லை.
உண்மையில் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி ‘ தந்தை ‘ என்கிற பிம்பத்தாலேயே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது . தந்தையின் சொல் கேட்டு தாயை வெட்டுகிற பரசுராமர் என்பது வெறும் கதை அல்ல. அன்னை மடியில் இருந்து இறங்கி வந்து சமூக மனிதனாவதற்கான குறியீடே அந்தக் கதை. தந்தையால் தலை வெட்டப்பட்டு யானைத்தலை சுமந்து தாய் போன்ற சாயலுடன் பெண் தேடி பிரம்மச்சாரியாகவே குளத்தங்கரையில் குத்த வைத்திருக்கும் பிள்ளையார் இதன் எதிர் வடிவம்.
நுட்பமாகக் கவனித்துப் பார்த்தால் சங்க அக இலக்கியங்களில் தந்தை மற்றும் தனயனுக்கு முக்கியத்துவம் இல்லாமலிருப்பதற்கான காரணமும் அதுவே. பாலருந்திய முலைகளை விட்டு விலகி பற்றிக் கொள்கிற முலைகள் நோக்கி நகர்வதற்கான பயணமாக மட்டுமே அக வாழ்க்கை சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அன்னையரின் ‘இற்செறிப்பு ‘கூட மெல்லிய பொறாமையாகவோ , ஊர் குறித்த அச்சமாகவோதான் இருக்கிறது.
பெரு மதங்களின் தோற்றமும் , பேரரசுகளின் உருவாக்கமும்தான் ‘தந்தை’ பிம்பத்தை அதிகாரத்தின் குறியீடாக்குகிறது. அதற்கு முன்னால் தந்தை என்பது தாயின் கணவர் மட்டுமே.
‘ ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே ‘ என்று தன்னை ‘ பிள்ளை பெறுகிறவளாக மட்டுமே சுருக்கிக் கொண்டு, ‘ சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே ‘ என்று அன்னைகள் சொல்ல ஆரம்பித்த காலத்தில்தான் ‘தந்தை’ என்கிற பிம்பம் சமூகவெளியில் தன் கொடியை வெற்றிகரமாக நாட்ட ஆரம்பித்தது.
‘சமூக மயமாதல்’ என்பதே தந்தை சொல் கேட்டல் அல்லது தந்தையை மீறி வளர்தல் என்பதாகவே அர்த்தப்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு வீடே உலகமாக கற்பிக்கப்பட்டதால் அவர்களுக்கு அன்னைகளைப் பிரதி எடுப்பதே போதுமானதாக இருந்தது.
செமிட்டிக் மதங்களின் அடிப்படையே ‘தந்தை’ என்கிற பிம்பத்தால் கட்டமைக்கப்பட்டது.அதற்கு முந்தைய கிரேக்க , ஆசிய தொல் தெய்வங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் தந்தை பிம்பத்தை மதம் தாண்டி அரசியலுடன் இணைத்ததன் வாயிலாகவே வெற்றி கொண்டனர்.
தந்தை சொல்லை அப்படியே கேட்காமல் அதை மீறிய ‘ஆப்ரஹாம்தான்’ மூன்று மதங்களின் தந்தையாகக்( யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) கட்டமைக்கப்பட்டார். தந்தை இல்லாமல் பிறந்த இயேசுவின் வழியாக ‘கடவுள்தான் தந்தை ‘ என்கிற கட்டமைப்பு உணர்வுப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. வளர்ப்புத் தந்தையை அழித்தொழித்த மோசஸே யூதர்களின் மேய்ப்பராக உருவகிக்கப்பட்டார்.
சைவத்திலும், வைணவத்திலும் கூட தந்தை உருவாக்கம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. திருஞானசம்பந்தர் வழியாக கடவுளை தந்தையாக உருவகிக்கும் ‘ சத்புத்திர மார்க்கம் ‘ இயக்கமாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. தன்னை மீற முயன்ற முருகனை சிவன் புறக்கணிக்கிறார். திருமாலின் பத்து அவதாரங்களிலும் ஏதோ ஒரு வகையில் தந்தை பிம்பத்துடனான தொடர்ச்சியும் , மீறலும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்யனைக் கொன்ற பிரகலாதன் ஒரு துருவம் என்றால் , தந்தை சொல்லுக்காகக் காடேகி துன்பங்களை அனுபவித்த இராமன் மறு துருவம்.
இந்து சமயத்தின் ஆறு மதங்களில் தந்தை பிம்பத்தை முன்னிறுத்திய சைவமும், வைணவமுமே பல இடங்களில் அரச மதங்களாக நீடித்ததையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து சமய மரபில் பெண்களுக்கு இடமளிக்காத சமணமும், பௌத்தமும்தான் பல நூற்றாண்டுகளாக நீடித்த அறக்கருத்துகளைத் தீர்மானித்தன. அறம் சார்ந்த சிந்தனைகளில் ‘ தந்தை பிம்பமும்’ நீங்கா ஓவியமாக நிலைத்திருந்தது.
சமயங்கள் அல்லாத சிந்தனை மரபின் தொடக்கம் என்று சாக்ரடீஸைக் கூற முடியும். சாக்ரடீஸ் என்கிற மனிதரை சீடர்களுடன் யோசிக்கிற போது நம் மனதில் அறிவார்ந்த தந்தை பிம்பமே வந்து போகிறது.அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டு வரை நீடித்த சிந்தனையாளர்களும் அதே படிமத்துடன் பொருந்திப் போகின்றனர்.
அதிகாரத்தை உருவாக்கும் தந்தை , சிந்தனையைப் பகிர்ந்தளிக்கும் தந்தை , கருணையைக் கற்றுத் தந்து உலகியலைக் கடக்க உதவும் தந்தை ஆகிய மூன்று பிம்பங்களே இத்தனை நூற்றாண்டுகளின் அரசியல் , சிந்தனை , பண்பாடு , வரலாறு , பக்தி ஆகியவற்றைத் தீர்மானித்தன. தந்தையைத் தொடர்வது அல்லது மீறுவதன் வாயிலாக தந்தையாக உரு மாற விழையும் பிள்ளைகளின் தவிப்பே வாழ்வென்று அர்த்தப்படுத்தப்பட்டது.
இதனுடைய தொடர்ச்சியாகவே உளவியலிலும் ஃபிராய்டு ‘ தந்தை மனநிலையை ‘ முன் வைத்தார்.
கடந்த இரு நூற்றாண்டுகளில் உருவாகி வந்த தேசியவாதங்களும் ( தாராளவாத அரசு , பொதுவுடைமை அரசு , பாசிச அரசு, முதலாளித்துவ அரசு ) கூட தந்தை பிம்பத்தையே கட்டமைத்தன. நேரு, ஸ்டாலின் , ஹிட்லர் , ரூஸ்வெல்ட் ஆகியோரை இவற்றின் உதாரணங்களாகக் காண முடியும்.
‘ தன்னைப் பெண்ணாக உணர்ந்த ‘ காந்தியும் , பெண்களின் உரிமைகளை பெண்ணியவாதிகளுக்கு முன்பாகவே தீவிரமான மொழியில் பேசிய பெரியாரும் உலகின் மகத்தான அரசின்மைவாதிகள். ஆனால் இந்த அரசின்மைவாதிகளும் பெண்கள் உள்ளிட்ட அனைவராலும் ‘தேசப்பிதா’ என்றும் , ‘தந்தை பெரியார்’ என்றும் ‘ தந்தை பிம்பமாகவே ‘ உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். கடவுள் இல்லாத ஆன்மீகத்தை கடந்த நூற்றாண்டில் ஒரு இயக்கமாகவே உருமாற்றிய ஓஷோ மனித குல வரலாற்றால் இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்தையும் புரட்டிப் போட முயன்றாலும் தன் அணுகுமுறையால் தந்தை பிம்பமாகவே நீடித்தார்.
பெண்ணியம் உருவான பிறகு ‘ தந்தை பிம்பம் ‘ என்பது ஆண்களின் திட்டமிட்ட சதியாகவே பலராலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது . பால் சமத்துவத்திற்கு எதிரான ஒன்றாகவே அவர்கள் ‘ தந்தை பிம்பத்தை ‘ புரிந்து கொண்டு ஒட்டு மொத்த வரலாற்றையே ஈவிரக்கமில்லாமல் அடித்துத் துவைத்தனர்.
சதியாலும் , சுரண்டலாலும் உருவாகிற எந்த ஒன்றும் வரலாற்றிலும் , மொழியிலும் , பண்பாட்டிலும், இலக்கியத்திலும் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்க முடியாது. இயல்பான பரிணாம வளர்ச்சியின் விளைவாகவும் , மனித மனங்களின் கூட்டு உளவியல் உருவாக்கிய பண்பாட்டுக் காரணியுமாகவே ‘ தந்தை பிம்பத்தை ‘ நாம் ஊகிக்க முடியும்.
அதன் பொருளை சமகாலத்தில் நாம் பாலின பேதமின்றியும் நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இன்றைய அரசியலிலும் , சமூக வெளியிலும் வழி காட்டும் இடத்தில் இருக்கிற பெண்களும் கூட ‘ தந்தை பிம்பத்தின் ‘ நீட்சியாகவே பின்பற்றுகிறவர்களால் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.சமூக , பண்பாட்டு அம்சங்களில் அதற்கான உளவியல் தேவை இருப்பதையே இந்த உள்வாங்கல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
அறிவு வழங்குதல் , வழிகாட்டுதல் , ஒருங்கிணைத்தல் ,முன்னாள் நிற்கிற அடையாளமாதல், போராடுதல் ஆகிய அனைத்திற்கும் உரிய ஒற்றைக் குறியீடாகவே ‘ தந்தை பிம்பம் ‘ மனித குல வரலாற்றின் இத்தனை ஆண்டுகளில் நீடித்து வருகிறது.
உண்மையில் தந்தை பிம்பத்தின் ஆதாரமாக இருப்பவை இரண்டு மட்டுமே.
- அறிதலின் மீதான ஆர்வம்
- இலட்சியவாதத்தின் மீதான பற்று
உண்மையில் இந்த இரண்டும்தான் மனித குல வரலாற்றை ஆக்கப்பூர்வமான பாதையில் வழி நடத்தின.
ஆனால் தொன்னூறுகளுக்குப் பின் உலகெங்கும் லட்சியவாதம் என்பது ‘ தன் பங்கிற்காகப் போராடுதல் ‘ என்கிற அளவில் சுருங்கி விட்டது. வேட்டைச் சமூகத்தில் சமமாகப் பகிராத அன்னையின் முன்பு கூச்சலிடும் சிறுவர்களாக மட்டுமே நாம் வாழ்வைப் புரிந்து வைத்திருக்கிறோம்.
ஜெயகாந்தன் போல் ஒருவர் இன்று ‘நாங்கள் பாரதியின் முண்டாசிலிருந்து வந்தவர்கள் ‘ என்று மேடையில் நீட்டி முழக்கினால் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மீசையின் அசைவைக் கிண்டலடிப்பார்கள். சுந்தர ராமசாமியே பக்கம் பக்கமாய் எழுதி மின்னஞ்சல் செய்தாலும் ‘ தேங்க்ஸ் புரோ ‘ என்று ஒரே வரியில் அவருக்கு விடை தந்து அமைதியாக்கி விடுவார்கள்.
இணைய வெளியின் அதீதப் பயன்பாடு , மிகை திறன் பேசிகளின் வருகை , கூகுளில் நிரம்பி வழியும் தகவல்களின் பெருக்கு ஆகியவை ‘ அறிதல் ‘ என்பதன் அடிப்படையையே மாற்றி அமைத்திருக்கின்றன. மீன்கள் நிரம்பி வழியும் கடலுக்கு அருகில் வலையை தலையணையாக வைத்துத் தூங்கி, கனவில் மீன் பிடிக்கும் மீனவனின் படிமமே சம கால இளைஞனுக்குப் பொருந்தக் கூடியது.
ஆகவே அவனுக்குக் கிட்டத்தட்ட தந்தை பிம்பத்தின் தேவையே இல்லாமலாகி விட்டது. நவீன மனம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் தந்தை மனநிலைக்கு மாற்றாக நட்பு மனநிலை கொண்ட தலைவர்களைத்தான் இந்தத் தலைமுறையில் கொண்டாட முயன்றிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவே இல்லை. அவர்கள் தந்தைகளிம் கற்கவோ , தந்தைகளை மீறவோ முயல்வதில்லை. ‘தந்தையே சுமை’ என்கிற இடத்தை நோக்கி நகரந்திருக்கிறார்கள். தந்தை பிம்பத்தின் இடம் என்பது அவர்களைப் பொறுத்தவரை வாசலில் நிற்கிற கூர்க்காக்களின் இடம். தங்கள் தேவைகளை நிறைவேற்றுகிற , தங்களை தூரத்தில் இருந்து பாதுகாக்கிற வேலையாள் பாதி , காவலாளி மீதியுமான இயந்திர உருவகமாக ‘ தந்தை பிம்பம் ‘ மாறி விட்டது. அந்தத் தந்தை காந்தி போன்ற லட்சியவாதியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மண்டையில் எதுவுமே இல்லாமல் வெறுமனே உதார் விடுகிற கோமாளிகளே கூட அவர்களுக்குப் போதும். அவர்களின் தந்தை கண்ணுக்கே தெரியாமல் காற்று வெளியில் தகவல்களாய், ஆணைகளாய், குறிகளாய் , குறியீடுகளாய், பிம்பங்களாய் மிதந்தபடி அவர்களை போதையில் வைத்திருக்கிறார். தங்களின் தூக்கம் கலையாமல் பாதுகாக்க வாசலில் நிற்கிற ஒருவனை ‘தந்தை ‘ என்றழைக்க வேண்டிய துர்பாக்கியமே அவர்களை துயர் கொள்ளச் செய்கிறது.அவர்களை நினைத்து நாம் துயர் கொள்வது கூட ஒரு வகையில் அந்த இளைஞர்களுக்குத் தொந்தரவாகவே இருக்கக் கூடும்.