ஒரே ஒரு பார்வையிலேயே நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும் நான் ஒரு பறவை என்று.
***
நீங்கள் எனக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்களோ அதையெல்லாம் நான் சேர்த்து வைத்துச் சுமந்து பறக்கத் தயாரில்லை. எனக்குச் சிறகுகள் உண்டு. கூர்மையான அலகுகள் உண்டு. தெளிவான பார்வை உண்டு. நழுவிக் கீழே விழுந்து விடாமல் கிளைகளைப் பற்றி அமர்ந்துகொள்ளக் கால்கள் உண்டு. என்னைப் போலவே சிறகுகள் கொண்ட இன்னொரு பறவையை நான் எதிர்கொண்டதில்லை.
என் குரல் எனக்குப் பிடிக்கும். எனது இந்தக் குரல் நாள் தவறாமல் இந்தச் செழுமையான மலையடிவாரத்தில் ஒலிக்க விரும்புகிறேன்.
நானும் முட்டையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மற்றபடி நான் பிறந்த சரித்திரம் எனக்குத் தெரியவில்லை.அன்பின் பொருட்டோ காழ்ப்பின் பொருட்டோ யாரும் எனக்கு அது பற்றிப் பாடம் எடுக்க முன் வரவில்லை.
***
முதன் முதலில் பூச்சிகள் புழுக்கள் மர எறும்புகளைத்தான் உணவாக எடுத்து வந்தேன்.
ஒரு சாரல் நாளில், குடிசை வேய்ந்த எளிமையான வீட்டுப் பக்கத்துத் தேநீரகத்தின் முன்பு தலைமுடி நரைத்த இருவர் மர இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டேன். “இங்கே எத்தனை எத்தனை மரங்கள் செடிகள்” என்று அதில் ஒருவர் வியந்தார்.
அதற்கு மற்றொருவரும் , “ ஆமாம், இதுவெல்லாம் எத்தனை எத்தனை பறவைகள் விலங்குகள் எத்தனையோ காலங்களாகத் தாங்கள் உண்டு கழித்த எச்சத்தினால் இந்தப் பெருவனத்தை உண்டாக்கியிருக்குமோ” என்று ஆமோதித்தார்.
வார்த்தைகளைக் கேட்ட பிறகு நான் புழு பூச்சிகளைத் தவிர்த்துவிட்டேன். சிறு இனிப்பான பழங்களைச் சிறு தானியங்களை அலைந்து தேடி உணவாகக் கொண்டேன். வனத்தில் வேறுவேறு இடம் தேடி எச்சம் கழிப்பேன். வனத்தின் மலையடிவாரச் சாலையில் அமைந்திருக்கும் இந்தப் பழைய வீட்டைச் சுற்றி நிறைய பெரிய நெருக்கமான மரங்கள். அடர்த்தியான இலைகள் மஞ்சள்,சிவப்புப் பூக்கள் இனிக்கும் கனிகள்.
எங்கே பறந்து மிதந்தாலும் முன்னிரவுக்குள் இங்கே வந்து விடுவேன். கொஞ்ச தூரத்திற்கு, கொஞ்ச தூரத்திற்குத்தான் இரு புறமும் இந்த வீட்டைப் போலவே சில வீடுகள். எல்லாம் ஆங்கிலேயர் காலத்தை நினைவுறுத்தும் பழைய கால வீடுகள்.சில வீடுகளில் கறவை மாடுகளும் உண்டு. எல்லா வீட்டைச் சுற்றிலும் பெரிய மருத மரங்கள், பலாப்பழ மரங்கள், கொய்யா நெல்லி மரங்கள், பன்னீர்ப் பூக்கள் மரம். எல்லாம் பெரிய பெரிய காட்டு மரங்கள். கனிகளும் மதர்ந்துதான் காய்த்துத் தொங்கும்.
***
இங்குள்ள அனைவரும் சேர்ந்து மலையடிவாரத்தின் கொஞ்சம் உள்பக்கத்தில் ஒரு மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்துதான் கவனித்துக் கொள்கிறார்கள். எருமை மாட்டுப் பண்ணை. மாடுகள் இருபதுக்கும் மேல் தேறும்.இந்த அடர்த்தியான பாலை வாங்கிச் செல்ல எங்கிருந்தோ வியாபாரிகள் நாள்தோறும் சிற்றுந்தில் வந்து போவார்கள்.
வன அதிகாரிகளின் வாகனங்கள், மரங்களை அறுத்து சைக்கிளில் கடத்திப் பக்கத்து கிராம உணவகங்களுக்கு விற்கும் சிறு அன்றாடம் காய்ச்சிகள், எப்போதாவது லாரிகள் வேன்கள். இவைகளால் இந்தச் சிற்றூரின் மவுனம் கலையும். இதோடு தினத்திற்கு மூன்று தடவைகள் இந்த வழியில் சிறிய பேருந்துகளும் வரும், போகும்.
மவுனத்திற்குப் பங்கம் ஏற்பட்டு வனம் துயருற்று நிற்கையில் தவறாமல் பாடுவேன்.வனம் இன்னும் செழிக்க வனத்தை ஆற்றுப்படுத்துவேன்.
சாரைகள் வரும் போகும். எப்போதாவது கரடிகள் வரும். யானைகள் வந்து போனதாகக் கதைகள் உலாவும். எதற்கும் இருக்கட்டுமேயென்று பாதுகாப்புக்காக எல்லோர் வீட்டில் சிறுசிறு நாட்டு வெடிகள் உண்டு.
***
இந்த வீட்டில் ஒரு பெரியவர் அவரது துணைவியாரோடு இருந்து வருகிறார். அவரது மகள் ஆண்டுக்கு ஒரு முறை குழந்தைகளோடு வந்து போகிறார்கள். குழந்தைகள் ஆண்டுக்காண்டு வளர்ந்து வருகிறார்கள்.
மலையில் சேகரிக்கப் பட்டவற்றை மலைவாழ் மக்களிடமிருந்து வாங்கி விற்பனைக்காக முன் அறையில் வைத்திருக்கிறார்கள்.
பழக்கமானவர்கள் வாகனத்தை நிறுத்தி தேன், பலாப்பழம், மலைக் கொய்யா,
பெரு நெல்லிகள், மருத்துவ குணமுள்ள வேர்கள், குழந்தைகளுக்கு சக்தி தரும் கிழங்குகள் உள்படத் தேவையானவற்றை வாங்கிப் போவார்கள்.
எந்த வீட்டில் காசு கொடுத்தால் குடிக்கத் தேநீர் கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.
***
பெரியவரின் துணைவியாருக்கு உயரமான மரத்தின் கிளைகளில் நான் தங்கி வருவது தெரியும். வீட்டின் மாடியில் ஒரே ஒரு அறை இருக்கிறது. அதைத் திறந்துகொண்டு காலையில் வெளியே வருவார். நான் எங்கே இருக்கிறேன் என்று ஒவ்வொரு கிளையாகக் கூர்ந்து கவனிப்பார். அவர் என்னைத் தேடுவது எனக்குப் பிடிக்கும். அவர் என்னைத் தேடுவதை ரசிப்பேன்.அப்புறமாகச் சிறிது நேரம் கழித்துக் கிளைகளிலிருந்து வெளிவந்து நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வேன். அம்மையாரின் முகத்தில் கீற்றுப்புன்னகையோடு இரு கை நிறைய காட்டுத் தானியங்களை இறைப்பார். ஒரு அகண்ட பாத்திரத்தில் நீரூற்றிவிட்டு அறைக்குள் மறைந்து விடுவார்.
***
வானின் வரைபடத்தை எனக்கு யார் அருளினார்களோ தெரியவில்லை. பறப்பேன் மிதப்பேன். வழி பிசகாமல் திருப்பி வந்து விடுவேன். இங்கே துப்பாக்கி தூக்கிக் கொண்டு அலையும் வேடர்கள் இல்லை. வலை வீசிப் பறவைகளைக் கவரும் வலைஞர்களும் இல்லை.
மனிதர்கள்கூட மனவலையில் சிக்கிக்கொண்டவர்களில்லை.
***
தசை கொத்திக் கிழித்துத் தின்னும் அலகுகள் எனக்கு உண்டு.ஆனால் எனக்கு வாய்த்த அலகுகளால் பெரும்பாலும் தான்யங்களைச் சிறு பழங்களை உணவாக்கிக் கொள்வேன்.
எப்போதாவது மீன் உண்ண ஆசைப்படுவேன். எங்குச் சின்ன, பெரிய நீர் நிலைகள் இருக்கிறதென அறிவேன்.கொஞ்ச மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும் சிற்றோடைகளில் நான் மீன் பிடிப்பதில்லை .அவைகள் நீந்தும் உற்சாகத்தைப் பார்ப்பதோடு சரி. நிறைய மீன்கள் உலாவும் நீரோசைகள் நிறைந்த பெரிய ஓடைகளில் காத்திருந்து ஒன்றிரண்டை கொத்திப்போய்த் தின்று விடுவேன்.
மழைக்காலம் எனக்குப் பிடிக்கும். மழையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். மழையில் நனைவது கூட விருப்பம்.கொஞ்ச நேரம் , கொஞ்ச தூரம் மழையில் நனைந்துவிட்டுத் திரும்பிவிடுவேன். மழையில் இரை தேடி வெகு தூரம் செல்ல இயலாது. சீக்கிரம் இருட்டி விடும்.மழைக் காலத்தில் இரை கிடைக்காதபோது பசிக்கும் என்றாலும் பசியைத் தாங்கிக் கொள்வேன்.
***
இன்று காலை கிளைக்குக் கிளை தாவி நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது கவனித்தேன், மாட்டுப் பண்ணையை கவனித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வீட்டுப் பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நாங்கள் மூன்று நாளில் திரும்பி வந்து விடுவோம். இரவில் மட்டும் இங்கு வந்து தங்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். போன வாரம் கரடியைப் பார்த்ததாகச் சொல்லுகிறார்கள். பெரிய நாகமொன்றும் ரோட்டின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் கடந்து இறங்கி மறைந்தது என்றும் பேச்சு. உங்களையும் வீட்டையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சொன்னபடி மூன்றாம் நாள் கடந்ததும் வந்து விடுவோம்.”
பெரியவரும் தலை அசைக்க வீட்டைப் பூட்டி விட்டு வெளி கேட்டையும் பூட்டி அந்த சாவியை மட்டும் கொடுத்துவிட்டுப் பெரியவரும் அம்மையாரும், வந்த ஒரு பேருந்தை கைகாட்டி மறித்து ஏறிச் சென்றனர். போகும் போது அம்மையார் கிளையில் நான் இருக்கிறேனா என்று பார்த்தார். கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.
***
இன்று காலையும் எனக்கான தானியங்களை வைத்துவிட்டுப் பாத்திரம் நிறைய நீரும் வைத்து விட்டுத்தான் வீட்டுப் பெரிய மனுஷி போயிருக்கிறாள்.இரவில்தான் காவல் காப்பவர் வந்து போவார்.மீதி நேரங்களில் இந்த வீடு என் வீடுதான். வீட்டிற்குள் நான் இதுவரை போய்ப் பார்த்ததில்லை.
மகிழ்வாக வானத்தில் அதிக நேரம் அதிக தூரம் மிதந்துவிட்டு நடு உச்சிக்குத் திரும்பினேன். பொதுவாக இந்த நேரத்தில் நான் எனது கிளைகளுக்குத் திரும்பி வருவதில்லை. இன்று மட்டும் ஏன் இப்படி என்று மரங்களும் கிளைகளும் பூக்களும் ஆச்சர்யமாகப் பார்த்தன. இன்று மழை கூட விழவில்லையே?
***
மெதுவாக மாடி அறைப் பக்கம் வட்டம் போட்டுப் போய் இறங்கினேன். சுற்றி வந்து உள்ளே நுழைய வழி இருக்கிறதா? கவனித்தேன்,ஒரே ஒரு சன்னல் கதவு அவ்வளவாக மூடியிருக்கவில்லை. அதுதான் எனக்கான கதவு.
உள்ளே நுழைய முடிவு செய்துவிட்டேன். அதற்கு முன் பெருமிதமாக மாடி விளிம்பு சுவரில் நின்று பார்த்தேன். ஒருவருக்குத் தனக்கென வீடு இருந்தால் அதிகாரமாகத்தான் உணருவார்கள். இப்போது நான்தான் இந்த வீட்டின் மொத்த அதிகாரி. மரங்களின் பாதி உயரத்தில் இருந்தேன். மரத்திலிருந்த எல்லாப் பூக்களும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
***
அலகால் நெம்பி நெம்பித் தலையை நுழைத்து சன்னல் வழியாக அறைக்குள் வந்து சேர்ந்தேன். அகலமான அறைதான். ஒர் ஓரத்தில் ஒரு கோணிப்பையில் கொஞ்சம் தான்யம் நிறைதிருந்தது. அது எனக்குத்தான். மறு ஓரத்தில் ஒரு தண்ணீர்க் குழாய் இருந்தது. கீழே ஒரு நீர் நிறைந்த பாத்திரம்.
சிறகசைத்துப் பறக்காமல், அவசரம் காட்டாமல் அறை முழுவதும் நடந்து சுற்றிப் பார்த்தேன். மறக்காமல் “இப்போது இது என் வீடு” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேன். குரலெழுப்பிப் பாட வேணுமெனத் தோன்றியது. இந்த அறையில் என் குரலை ஒன்றுக்கு மேலாகப் பல தடவைகள் பதிவு செய்தேன்.
ஒவ்வொரு படியாய் மாடிப் படி இறங்கினேன்.ஒரு பெரிய அறையும் ஒட்டினாற்போல ஒரு அடுப்பாங்கரையும் பக்கவாட்டில் இரண்டு அறைகளும் இருந்தன. ஒர் அறையில் அவர்கள் விற்பனைக்காகச் சேகரித்து வைத்த மலை தந்த பொருள்கள் குவிந்திருந்தன. பெரிய அறையில் அகலமான படுக்கை இருந்தது. எதிரே இரண்டு நாற்காலிகள் இருந்தன. எல்லாம் மரத்திலானாவை. ஒரு மேஜை வேறு.
நான் கிளையிலேயே தங்கி இரவைக் கழிக்கும் பிறவி.சில இரவுகளில் ஒற்றைக் காலில் நின்றே உறங்கி விடுவேன்.எனக்கும் மனிதர்கள் படுக்கும் இந்தப் படுக்கையில் படுத்து உறங்கத் தோணியது.அப்படியே செய்தேன். ஒவ்வொரு நாற்காலியிலும் அமர்ந்து பார்த்தேன். கர்வமாக இருந்தது.
அறையின் ஒரு சுவரின் நடுவில் பெரிய நிலைக்கண்ணாடி மேஜையோடு இருந்தது.
நிலைக் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் நம்ப முடியவில்லை.நான் இதுவரை என்னைப் பார்த்ததே இல்லை. இதுதான் முதல் தடவை. உண்மையில் நானேதானா? எவ்வளவு அழகாக யார் மனத்துக்கும் பிடித்தமாக இருக்கிறேன். இவ்வளவு அழகோடா யார் கண்ணிலும் தினமும் படுகிறேன்? யாரும் என்னை வியந்து பார்த்ததாகத் தெரியவில்லையே. ஒருவேளை என்னைச் சுற்றியுள்ள உலகின் அழகில் நான் கரைந்து போய் விட்டேனோ? சிறகுகளில் வண்ணத்தை யார் இவ்வளவு கச்சிதமாக வரைந்திருக்கிறார்கள். பறக்காமலே பறக்கிற மாதிரிதான் எனக்கு இருந்தது. மேஜையின் மீது நடந்து நடந்து என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்.
கண்ணாடி முன் நின்று குரலெழுப்பிப் பார்த்தேன். ஒர் அறை விடாமல் எல்லா அறைகளிலும் என் குரலை அழுத்தமாகவும் சத்தமாகவும் பதிவு செய்தேன்.
எப்படிப் பார்த்தாலும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம். மனிதர்கள் உலகில் நான் இருக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளவா அல்லது என் உலகில் மனிதர்கள் இருக்கிறார்களா? இந்த நாள் கழிந்த விதம் மறக்க இயலாது.
***
வெளியே வந்து விட்டேன். மறுபடியும் மரக் கிளையில் அமர்ந்தேன். இன்று நான் பார்க்க நேர்ந்த உலகம் என்னைக் கிறங்க அடித்து விட்டது. பெருமையாகவும் தாபம் பெருக்குவதாகவும் இருந்தது.
இது இன்று என் வீடு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும் வீட்டுக்குள் நுழையும்போது நான் ஏன் ஒரு திருடனைப் போல யாராவது என்னைப் பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே நுழைகிறேன்?
அடர்ந்த நிழல் சாலையில் காதலியோடு தனியே நடந்து போகிறவன் காதலியை முத்தமிடத் தோன்றினால் முத்தமிட வேண்டியதுதானே? அதற்குப் பதிலாக அங்கும் இங்கும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத்தான் முத்தமிடுவேன் என்றால் அது கள்ள முத்தமாகி விடாதா?
***
இன்னும் இரண்டு நாள்களும் இப்படியே கழிந்தன. யாராலும் என்னைத் தடுக்க முடியவில்லை.
இரவில் மட்டும் அந்தக் காவலாளி ஒரு கயிற்றுக் கட்டிலோடு வருவார். படுக்கையை விரித்து விட்டு, வீட்டைச் சுற்றி நடந்து பார்ப்பார். தலைக்குப் பக்கத்தில் பெரிய டார்ச் லைட் வைத்திருப்பார். கூட ஒரு கம்பளிப் போர்வை. சிறிய சத்தம் கேட்டாலும் விழித்து விடுவார். இருட்டில் கூர்ந்து கவனிப்பார். மனம் சமாதானம் அடைந்த பிறகே உறங்குவார். காவலாளிகளுக்கு நினைத்தவுடன் தூங்கவும் விழிக்கவும் முடியும்.அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுற்றி ஒரு தரம் பார்த்துவிட்டுப் படுக்கை, தலையணை, டார்ச் லைட்டோடு புறப்பட்டுப் போவார். கயிற்றுக் கட்டிலை ஓரமாக வைத்து விடுவார். நான் அவரைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.
***
இரவின் கடைசிப் பேருந்து வீட்டு வாசலை விட்டுத் தள்ளி நின்றது. இறங்கியவர்கள் நாளை வருவதாகச் சொல்லிப் போன வீட்டுப் பெரியவரும் அம்மையாரும்தான்.
வீட்டை விட்டு வெளியே போனவர்கள், வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார்கள். தங்கியிருந்த கிளையிலிருந்து நான் வெகு தூரம் பறந்து திரிந்தாலும் நானும் கிளைகளுக்கே அன்றாடம் திரும்பிவிடுகிறேன்.
அப்போதுதான் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கட்டிலில் வந்து உறங்க ஆரம்பித்த காவலுக்கு வந்தவர், சத்தம் கேட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு மரக்கேட்டுக்கு ஓடி வந்தார். உள்ளே நுழையும் போதே அம்மையார் கவனம் நான் தங்கியிருந்த மரத்தின் உச்சியில் இருந்தது. கண்களைச் சுருக்கிப் பார்த்தார். நான் தென்படவில்லை.அவர் என்னை நினைக்கிறார் என்பதே மகிழ்சிதான்.நானும் சற்று முன்தான் என் கீழ் இமைகளை இழுத்து உறங்க ஆரம்பித்திருந்தேன் .
வீட்டு பெரியவர் “நீங்கள் வேண்டுமானால் புறப்படுங்கள் அல்லது காலை வரை இருந்து செல்லுங்கள். கட்டில் இங்கேயே இருக்கட்டும் நாளை பகலில் நேரம் வாய்க்கும் போது வந்து எடுத்துக்கொள்ளுங்கள். அம்மையார் கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லி கொண்டு வந்த பைகளை இறக்கி சில தின்பண்ட சமாச்சாரங்களைக் கையில் திணித்து, “வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு கொடுங்கள்” என்றார். பெரியவர் தோற் பை திறந்து சில ரூபாய் நோட்டுகளைத் தந்தார்.
கட்டிலை ஓரமாக வைத்துவிட்டு டார்ச் லைட், கம்பளிப் போர்வை, படுக்கையோடு அவர் புறப்பட்டுச் சென்றார்.
வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அம்மையார் சாவி தேடி வீட்டைத் திறக்கும் நேரத்திற்குள் பெரியவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு முன் வாசல் விளக்கை அணைத்து உள்ளே நுழைந்தார்.
உள்ளே நுழைந்த வெகு நேரம் கழித்துத்தான் வீட்டுக்குள் விளக்குள் மொத்தமாக அணைந்தது. அம்மையார் நான் உள்ளே வந்து போனதைத் தெரிந்திருப்பார்கள்.அது வரைக்கும் என் வீடாக இருந்தது அவர்கள் வந்த பிறகு இனி இது அவர்கள் வீடு.
***
காலை, வழக்கம் போல மாடிக் கதவைத் திறந்து அவர்கள் வந்தார்கள் நான் ஒளிந்து நிற்கவில்லை. பார்க்கும் படியாகத்தான் நின்றேன்.
குறும்புப் புன்னகையோடு என்னைப் பார்த்தார்கள்.ஒரு மர நாற்காலியில் அமர்ந்து என்னைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். கை நீட்டி என்னை அழைத்தார்கள். தயக்கமில்லாமல் அவர்களின் கைகளுக்குள் அடங்கினேன். தான்யமும் கொடுத்துத் தண்ணீரும் தந்தார்கள். அவர்கள் முகத்தில் தனிமை மட்டுமே இருந்தது. வெளியே சென்று வந்த மூணுநாள் பயணம் மகிழ்ச்சி தரவில்லை.
நந்தியாவட்டை மொட்டுகள் முற்றாக மலரச் சில நாள்கள் ஆகுமாம். அதே போலச் சில நாள் கழித்துத்தான் பூக்கள் உதிருமாம்.
மரத்திலிருந்தே கீழே பறந்து இறங்கி வரும்போதே கவனித்தேன். வெள்ளை இதழ்கள் விரித்துப் பன்னீர்ப் பூக்கள் இளம் பசுமை நிற நீளக் காம்புகளோடு வாசலில் கொட்டிக் கிடந்தன. இந்த மரங்கள் மாடி விளிம்புச் சுவர் தாண்டியும் வளர்ந்திருந்தன.
என்னைப் போல அம்மையாருக்கும் நாலு அறை இதயம்தான். நாலு அறையில் குறைந்தது நாலு பேராவது வேண்டாமா.
என் கண்களுக்குக் கீழே உள்ள சிறு துளைதான் என் காதுகள்.அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
நாங்கள் எங்கள் மகளையும் குழந்தைகளையும் பார்க்கப் போயிருக்கக் கூடாது.
போனதால்தானே விமான நிலையத்தில் கையசைத்து அவர்களை வழியனுப்ப வேண்டியதாயிற்று. கடல் கடந்து போகிறார்களாம். திரும்பி வரும் நாளும் தெரியாதாம். கொடுமையான வார்த்தைகள்.
இரண்டு என்பது துணையில்லை.குறைந்தது மூன்றுதான் துணை. நீயும் என்னை விட்டு அதிக தூரம் போய்விடாதே. நாங்கள் இருவரும் என்னதான் செய்வோம் ?
நீ வீட்டிற்குள் வந்து போயிருக்கிறாய். உனக்காகத்தான் சன்னல் கதவைச் சின்னதாக திறந்து வைத்திருந்தேன். நீ அழகாக இருக்கிறாய். என் கண்ணே பட்டுவிடும்.
நீயும் கூட இந்த வீட்டுக் கண்ணாடியில் உன்னைப் பார்த்திருக்கலாம். நானே உனக்கு உன்னை முன்னமே கண்ணாடிக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்க வேண்டும்.
இந்த வீடு உன் வீடு. உனக்குப் பாடத் தெரியும். உன் மொழியின் எழுத்துகளை, வார்த்தைகளை, வாக்கியங்களை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், உன் பாடலோடு என்னைப் போன்ற பெண்கள் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். கிளை அடர்ந்த மரங்களில் காலைச் சூரியனில் ஒளிரும் உன் கருநீலத்தோடு மஞ்சள் நிறத்தையும் தெளிவான தூரிகையினால் மழையால் கழுவிட முடியாதபடி யாரோ வரைந்திருக்கிறார்கள்.
நான் காயம் பட்டு அடிபட்டுத் திரும்பியிருக்கிறேன்.
உணவாகப்பயன் படும் பறவைகள் உண்டு. கடவுளின் ஊர்தியாக மாறும் பறவைகளும் உண்டு. நீ இப்போதும் எப்போதும் பறவையாக இரு.
பறவைகள் என்றாலே உற்சாகமும் சுறுசுறுப்பும்தான்.
பறவைகள் ஆண்டுக்கொரு முறையாவது தன் சிறகுகளை உதிர்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளுமாம். நீயும் உன்னை இன்று புதுப்பித்துக் கொள்.
உனது குரல் தனித்துவமானது. உன் குரலால் உன்னை ஒத்த பறவைகளைத் தொடர்பு கொள்ள முடியும். தேடி அவர்களைக் கண்டுபிடி.
இரை தேடவும் உண்ணவுமே உனது பெரும்பாலான நேரங்கள் கழிகின்றன.
உனக்கு இணை வேண்டும். உன் பாடலில் மயங்கக் காத்திருக்கும் இணையைத் தேடு. தேடிக் கண்டு கொள். அந்தப் பெண்ணிடம் உன் சிறகுகளின் அலங்காரத்தைக் காட்டி ஈர்த்து வா.
இந்த மலைப் பிரதேசம் உயிர்களை மலைகளைக் காட்டி ஈர்க்கிறது. இந்தப் பிரதேசத்தின் செழுமையான பச்சை வண்ணத்திற்கு நீங்கள்தானே காரணம்.
இந்த வீட்டு மரங்கள் பெரியன. அதன் கிளைகளில் பூக்கள் போல நீ அழைத்து வரும் பறவைகளால் மரங்கள் நிறைய வேண்டும். உன் கூட்டம் சேர். உன் தலைமையில் உன்னைத் தொடர்ந்து நான் வலசை செல்லும் நாளும் வரலாம்.
காத்திருக்கிறேன்.
போகும் வழியில் நாம் என் மகளையும் அவளின் குழந்தைகளையும் பார்க்க முடியலாம்
காத்திருக்கிறேன்.