கருப்பசாமி கோயிலில் நாங்கள் சென்றிறங்கிய காலை எட்டுமணிக்குச் சூரியன் தொலைவானில் எரிந்து கொண்டிருந்தான். வெளிநாடு கிளம்பும் நண்பனின் நலனுக்காக ஐந்து ஆடுகளைப் பலியிட வேண்டியிருந்தார் அவன் அம்மா. சிறுதெய்வங்கள் மீதான இயல்பான ஈடுபாட்டின் காரணமாகவும் மக்கள்கூட்டத்தை விட்டு விலகி நல்ல காற்றை சுவாசிக்கக் கிட்டும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை என்பதற்காகவும் நானும் அவர்களோடு இணைந்திருந்தேன்.
ஒரு சிற்றோடையைக் கடந்துதான் கோயிலுக்குப் போகவேண்டும். அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு புங்கை மரத்தடியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். இரண்டு சிறுவர்களையும் உள்ளடக்கிய எட்டுபேர் கொண்ட குழு. ஆடுகளை ஓட்டிக்கொண்டு மற்றவர் முன்னால் செல்ல நான் பின்தங்கினேன். சிலர் ஓடையில் குளித்துக்கொண்டிருந்தனர். கிராமவாழ்வின் தடங்களைச் சுமந்திருந்த அம்மனிதர்களின் கண்களில் ஒருவித சந்தேகம் உறைந்திருக்க பார்வையை அங்கிருந்து விலக்கி ஓடையில் பதித்தேன். நீர் சற்றுக்கலங்கி செந்நிறமாய் ஓடுவதைப் பார்த்தபடி, நடுவிலிருந்த பாறைகளில் கவனமாகக் கால்பதித்து ஓடையைக் கடந்தேன். இப்போது எனக்கு எதிரிலிருந்த செம்மண் பாதை சட்டென்று செங்குத்தாக மேலேறியது. பாதையின் இருபுறமும் சிறிய இடைவெளிகளில் தெய்வத் திருமேனிகள். அத்தனை சிலைகளுக்கும் நீலநிறச் சாயம் பூசியிருந்தது. காலமும் கடந்துவந்த பருவங்களும் காரணமாகச் சிலைகள் சிதைந்து உருமாறியிருந்தன. அப்பாதை முடிவடைந்த இடத்தில் கோயிலைக் கண்டேன்.
அதை முழுமையான கோயில் என்று சொல்லமுடியாது. பெரிய ஆலமரத்தை ஒட்டி வேய்ந்திருந்த தகரக்கூரைக்குக் கீழே சிறுதெய்வங்களின் சிலைகளை வரிசையாக நிறுத்தியிருந்தார்கள். கையில் அரிவாளுடன் எழுந்து வரட்டுமா என்பதைப்போல ஒற்றைக்காலை மடித்து அமர்ந்திருந்த கருப்பசாமி. அதை ஒட்டி துப்பாக்கியேந்திய காவலர் மற்றும் குதிரைச் சிலைகள். அதற்குமருகில் சப்தகன்னிமார் கற்சிலையாக. மரத்தின் பின்னால் கட்டியெழுப்பிய சுவரில் தெய்வ ஓவியங்கள். சுவரைத்தாண்டி நீண்ட பாதை காட்டின் இருளுக்குள் சென்று கலந்தது.
என்னுடன் வந்தவர்கள் பூசைக்கான ஆயத்தங்களைத் தீவிரமாகச் செய்தனர். கருப்பசாமியின் பாதங்களில் வாழையிலையில் படையல். சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் கட்டியிருந்த ஆடுகள் தீனமான குரலில் அரற்றின. அனைவரும் அங்கு யாருக்காகவோ காத்திருந்ததை நான் உணர்ந்தேன்.
ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பியபோது சுவரின் பின்னிருந்து ஒரு முதியவள் வெளிவரக்கண்டேன். அவளுக்கு அறுபது வயதிருக்கக்கூடும். அச்சூழலுக்கு முற்றும் பொருந்தாமல், காலத்தின் துருவேறியபிறகும் அவளது பழுப்புநிறக் கண்களில் கனிவும் கருணையும் விலகாதிருந்தன. கறுப்புச்சேலையில், தாழ்நெற்றியின் அகலக்குங்குமப்பொட்டில், வலிந்து கொணர்ந்த முகத்தின் கடுமையில், தன்னியல்புக்கு மாறான ஏதோவொன்றை வரித்துக்கொள்ள அவள் முயற்சிப்பதாய் எனக்குப்பட்டது. அவளுடைய இடுப்பின் இடப்புறம் ஒரு பெரிய தழும்பு – சூரியனை அதன் கதிர்களோடு வரைந்த ஓவியம் போல – அநேகமும் தீக்காயமாக இருக்கலாம் என்றெண்ணினேன். நான் அவளைக் கவனிப்பதை உணர்ந்ததும் அவள் முகத்தின் கடுமை இன்னும் தீவிரமானது. என்னைத்தாண்டிச் சென்று கருப்பனின் முன்னாலிருந்த படையலிடம் குனிந்தபோதே அந்தக்கோயிலின் பூசாரி அவளென்பது எனக்குப் புரிந்தது.
படையலில் இருந்த சாராயத்தை தீர்த்தம்போல ஒவ்வொரு சிலையின் மீதும் தெளித்து அவள் அரிவாளைக் கையிலெடுத்த கணம் நான் அங்கிருந்து விலகி நடந்தேன். கால்களைத் தூக்கிவைக்க மறுத்த ஆட்டைக் கயிற்றால் அடித்து நகர்த்த ஒருவர் முயற்சித்தார். அந்தத் திசையில் பார்க்காமல், வந்தவழியே கீழிறங்கி, ஓடையின் பாறைகளில் நின்றேன். சற்று நேரத்தில், தலை வெட்டிய ஆடுகளை, கழுத்துக்கு நெகிழிப்பையால் உறையிட்டு, கால்களைப் பிடித்துத் தூக்கியவாறு மக்கள் இறங்கி வந்தார்கள். அவர்கள் வந்தவழியில் உதிரம் சிந்தி செம்மண்பாதையின் நிறம் கூடியது. ஓடையிலமர்ந்து, அவர்கள் ஆட்டைக் கழுவத்தொடங்கினார்கள். நீரின் சிவப்புக்கான காரணம் புரிபட எனக்குள் ஏதோ என்னைப் பாரமாக அழுத்தியது. நான் நின்ற இடத்திலிருந்து ஒரு வழி பிரிந்து ஊருக்குள் போவதைக் கண்டேன். சட்டென்று அதற்குள் நுழைந்து நடக்கத்தொடங்கினேன்.
ஊர்ச்சாவடிக்கருகே கவனிப்பாரற்றுக் கிடந்த மண்பீடத்தைக் காணும்வரை தொடர்ந்து நடந்தேன். சற்று மூச்சிறைக்க, பீடத்தினருகில் சென்றமர்ந்தேன். வெறுமையாயிருந்த பீடத்தினடியில் முத்தாலம்மன் என்று கறுப்புச்சாந்தால் எழுதியிருந்தது. முன்பு அந்தப்பீடத்தில் ஏதும் கடவுள் இருந்திருக்கலாம் என நான் நினைத்தவேளையில் எனக்குப்பின்னால் ஒரு குரல் ஒலித்தது. ₺இதுக்கு முன்னால நீ முத்தாலம்மன் பத்திக் கேள்விப்பட்டதில்லையா?” நான் திரும்பினேன். ஒரு முதியவர் – உயிரற்ற சிலைபோல, எந்த அசைவுமின்றிக் – குத்தவைத்திருந்தார். நான் இல்லை எனத் தலையசைக்க ஓர் ஆச்சரியம் அவரது முகத்தை நிறைத்தது. கந்தல்துணிகளை ஆடையாய்ச் சுற்றியிருந்த அவரின் உதடுகள் மெல்லக்கோணின. அவர் சிரிக்கிறார் எனப் புரிந்தது. ”முத்தாலம்மன் கதை என்ன?” என்றேன். “இங்கன நாட்டுல எத்தனை ஊர் இருக்கோ அத்தனை முத்தாலம்மன். எத்தனை முத்தாலம்மன் இருக்கோ அத்தனை கதையும்.” அவரது உதடுகள் மீண்டும் கோணின. தனக்கருகே வைத்திருந்த துணிமூட்டைக்குள் கைவிட்டு எதையோ எடுத்தார். ஒரு சிறிய புத்தகம். “இதைப் படி. யாரும் சொல்லாத கதை.” அதை வாங்கினேன். வெகுகாலம் முன்பெழுதிய சிறு கையேடு. அதன் முதல் பக்கங்கள் கிழிந்து நைந்திருந்தன. எழுதியவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் அதில் காணவில்லை. கையேட்டை நான் வாசிக்கத் தொடங்கினேன்:
“…சரியாகத் திருவிழா துவங்கிய முதல்நாளில் நான் ஊருக்குள் நுழைந்தேன்.
மதுரைக்குக் கிழக்கே அமைந்த இக்கிராமமும் இதன் திருவிழாவும் குறித்து அறிந்த நாள்முதல் இங்கு வரும் ஆவல் எனக்குள் கிளர்ந்திருந்தது. எப்போதும் ஏழு ஊர் திருவிழாவாக கொண்டாடப்படும் சப்தகன்னிமார் கதையின் ஒரு பகுதியாகத்தான் முத்தாலம்மனை நான் அறிந்திருந்தேன். அதற்கு முற்றிலும் மாறாக வேறொரு கதை இங்கு வழங்கப்படுவதைச் சொல்லக்கேட்டு எனக்குள் ஆர்வம் பொங்க அம்மன்குடிலுக்கு வந்திருந்தேன்.
பிரதானவீதியை நடுவில் வகிர்ந்து மேல்பாதியாகவும் கீழ்பாதியாகவும் ஊர் இரண்டாய்ப் பிரிந்திருந்தது. விழாநாள்கள் தவிர கீழ்பாதி சனங்களுக்கு மேல்பாதியில் நுழைய அனுமதியில்லை. கீழ்பாதியில் மக்களின் தொகை ஐநூற்றுக்கும் குறைவானாலும் சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்து உறவுகள் குவிந்திருக்க மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. வெகுசில டாணாக்காரர்களும் பாதுகாப்புக்கு வந்திருந்தார்கள்.
விழாவின் முதல்நாள் நிகழ்வென ஊர்வலம் தொடங்கியிருந்தது. சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்க்கும் மேல்பாதி சனங்கள் நிறைந்திருந்தார்கள். சில பொடிசுகளும் பெண்களும் தங்களுக்குள் பேசியவாறு கடந்துபோக ஒரு மாட்டுவண்டி வீதிக்குள் நுழைந்தது. ஆனால் அதில் மாடுகளுக்குப் பதிலாக அதுபோல வேடமணிந்த இரு இளைஞர்கள் வண்டியை இழுத்து வந்தார்கள். உடல் முழுக்க கரியைப் பூசிக்கொண்டு எமகிங்கரன் ஒருவன் முன்பகுதியில் நின்றிருக்க ஜ்வலிக்கும் ஆடைகளும் நகைகளும் அணிந்து சித்திரகுப்தனும் எமனும் பின்னால் இரு சிம்மாசனங்களில் அமர்ந்திருந்தார்கள். நடமாடும் நாடகநிலையமாய்க் கிறீச்சிடும் சக்கரங்களோடு அந்த வண்டி மக்களினடுவே மிதந்து நேராக அரிசிக்கடைக்காரரின் வீட்டிற்குமுன் சென்று நின்றது. ஒரு கேலிச்சிரிப்போடு எமன் உரத்தகுரலில் கேட்டான். “அடேய் குப்தா, இந்த மானிடனின் பாவக்கணக்கு என்ன?” அதே கேலியோடு சித்திரகுப்தனும் பதிலளித்தான். “ராசா, இவன் எல்லாருக்கும் புழுத்துப்போன அரிசியை விக்குறான். தட்டிக்கேக்குற ஆளுங்க வீட்டுக்குச் சத்தமில்லாத நெருப்பு வைக்குறான். இவனச் சும்மா விடக்கூடாது. எண்ணெய்க்கொப்பறைல தள்ளி வறுத்தபிறகு தேளுங்களை விட்டுக் குண்டியிலேயே கடிக்க வைக்கணும்.” கூட்டம் ஓவென்று வெடித்துச் சிரித்தது. வாசலில் இருந்த அரிசிக்கடைக்காரர் ஏதும் சொல்லமுடியாமல் நெளிந்து வளைந்து ஒருமாதிரிச் சிரித்தார். வண்டி அங்கிருந்து நகர அடுத்து அது யார் வீட்டின் முன் நிற்குமோ என்ற ஆவலோடு மக்களும் தங்களுக்கு முன்னால் நிற்குமோ என்ற பீதியில் வீட்டுக்காரர்களும் நின்றிருந்தார்கள். மாட்டுவண்டி ஊர்ப்பால்காரரின் வீட்டின் முன்னால் நின்றது. சித்திரகுப்தன் வாயைத் திறக்குமுன்னே அவசரமாக வெளியே வந்த பால்காரர் அவன் காலடியில் ஒரு துணிப்பையை வைத்தார். எமனும் சித்திரகுப்தனும் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க கிங்கரன் பையை எட்டியுதைத்தான். தரையில் விழுந்த பைக்குள்ளிருந்து நாணயங்கள் தெறித்து வீழ்ந்தன. மறுபடியும் அனைவரும் ஓவென்று சிரிக்க பால்காரர் சிவந்தமுகத்துடன் தலையைக்குனிந்தபடி காசுகளைப் பொறுக்கினார். கருமேகம் வானில் நகர்வதாய் மெதுவாக ஊர்ந்து வண்டி அடுத்த வீதியின் திருப்பத்தில் சென்று மறைந்தது.
சற்று நேரத்தில், நீண்ட கழிகளைச் சுழற்றியபடி சிலம்பாட்டக்காரர்களின் அணிவரிசை வீதியில் நுழைந்தது. சிறார் முதல் முதியோர்வரை அனைவரும் அதிலிருந்தனர். வரிசையாக வருவதுபோலத் தோன்றினாலும் அவ்வப்போது அவர்களின் கழிகள் – ஒருவித சவாலைப் போல – தெருவோரங்களில் நின்ற மக்களின் பக்கமும் சென்றதை என்னால் உணரமுடிந்தது. பலகாலமாகத் தாங்கள் சந்தித்த அவமானத்தின் தழும்புகளை ஒரேநாளில் இறக்கிவைக்கும் வேகத்தோடு சிலம்பாடினார்கள். மேல்பாதி கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் கோபமாக அவர்களை நோக்கிக் கிளம்பியபோது ஊர்ப்பெரியவர்கள் தடுத்து ஆற்றுப்படுத்தினர். “இந்த மூணுநாளுதான? விட்டுத் தள்ளுங்கப்பா..” பேசிக்கொண்டிருக்கும்போதே சில கழிகள் அவர்களின் திசையிலும் சென்று மீள ஊர்வலம் சென்றவர்கள் ஓவென்று அலறினார்கள். டாணாக்காரர்கள் காணாததுபோலத் தலையைத் திருப்பிக்கொண்டனர். இருண்டமுகங்களுடன் மேல்பாதி இளைஞர்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெறுப்புடன் வெளியேறிச் செல்வதைக் கண்டேன்.
ஊர்வலத்தில் அடுத்து வந்த மனிதரைக் கண்டவுடன் அங்கு நிலவிய கூச்சல் யாவும் குறைந்து சட்டென்று அமைதியானது. அநேகமாக அவர் கீழ்பாதியின் தலையாரியாக இருக்கக்கூடும். வீதியின் இருபுறமும் நின்றிருந்த மக்களை நோக்கிக் கைகூப்பிப் புன்னகையோடு நடந்துபோனார். அவருக்குப் பின்னால் கையில் தடிமனான புத்தகத்தோடு கண்ணாடியணிந்த ஒரு வயதான மனிதர் நடந்துவர அருகில் மற்றொருவர் அவருக்குக் குடைபிடித்தவாறே சென்றார். அவர்களின் தலைகள் மறைந்த மறுகணம் சத்தமும் பரபரப்பும் மீண்டும் கூட்டத்திற்குள் வந்தமர்ந்தது.
தொட்டிகளில் அல்லது காவடி வடிவில் வளர்ந்திருந்த முளைப்பாரியைத் தலையிலேந்திய பெண்களின் நீண்டவரிசை அடுத்து வீதியில் நுழைந்தது. கையில் மஞ்சள்கயிற்றோடு முகத்தில் பெருமிதம் பொங்க அப்பெண்கள் நடந்து சென்றார்கள். திருவிழாவுக்குத் தண்டோரா போட்டுக் கொடிமரம் நட்ட நாள்முதல் ஊருக்குள் தனியாக இடம்பிரித்து நெல், நவதானியம், கோதுமை, கேழ்வரகு, பயறுவகைகளைப் பயிரிட்டு அதனுடன் இயற்கைஉரமும் கலந்து வளர்க்கும் முளைப்பாரி சுமந்துசென்று அம்மனுக்கு மாவிளக்குப் போடுவது பெண்களின் முக்கியச்சடங்கு. அவர்களுக்கு வழிவிட விலகுகையில் ஒரு மூதாட்டியின்மீது தெரியாமல் இடித்துக்கொண்டேன். நிறைய வருடங்களைக் கடந்திருந்தாலும் அவை விட்டுச்சென்ற நினைவுகள் இன்னும் அவளுக்குள் தேங்கியிருந்தன. ஊரையும் திருவிழாவையும் பற்றி அவளிடம் விசாரித்தேன். முதியவள் சொன்ன அம்மன்குடிலின் கதை இதுதான்.
முத்தாலம்மன் சரிதம்
ஆலயத்தில் கூடிமகிழ உலகத்தாயான
எங்க முத்தாலம்மனுக்கு
தனித்துநின்ன தாயான தங்கமுத்தாலம்மனுக்கு
வாருமம்மா முத்தாலம்மா உனக்கேத்த ஆலயமும்
நாங்கள் அமைத்துத்தாறோம் என்றுசொல்லி மக்களெல்லாம்
சொல்லிவருகையிலே என்தாயே முத்தாலம்மா
எனக்கேத்த கோயிலும் எங்குமே இல்லையே
எனக்கேத்த இடமும்தான் முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயே முத்தாலம்மா அன்றுபிறந்து அன்றழிவேன்
மக்கள் செய்யும் பூஜையிலே மனமுவந்து வந்திடுவேன்
(முத்தாலம்மன் கதைப்பாடலின் ஒரு பகுதி)
ஊருக்குள் சீரும்சிறப்புமாய் வாழ்ந்த தனவந்தனுக்கு இரு பெண் பிள்ளைகள். மூத்தவளுக்குப் பட்டத்தரசி, சின்னவளுக்கு முத்தாலம்மா எனப் பெயரிட்டு, வாழ்வின் அர்த்தமாய் வந்த தவப்புதல்விகளை அவன் கண்ணுங்கருத்துமாய் வளர்த்துவந்தான். நீர்விட்டு வளரும் நெடுமரமாய் குற்றங்குறை ஏதுமின்றிப் பெண்களிருவரும் வளர்ந்து மகிழ்ந்திருந்தனர். ஊரே கண்போடும்விதமாக அக்காளும் தங்கையும் அனைவருக்கும் செல்லப்பிள்ளைகளாக இருந்தனர். விளையாட்டு ஒருபுறமிருக்க தந்தையின் பேர் எங்கும் கெட்டுவிடாதபடிக்குக் கவனமாகவும் பொறுப்போடும் இருவரும் விளங்கினர். பெண்டுகளுக்கு மணக்காலம் வர, நல்வரன்களைத் தேடி இருவரையும் வெவ்வேறு ஊர்களில் கட்டித்தந்தான் அப்பன். பிரிவெண்ணி வருந்தினாலும் எங்கிருந்தபோதும் தங்களின் அன்பு குறையாதெனும் உறுதியோடு புகுந்தஊர் கிளம்பினார்கள் சகோதரிகள்.
பட்டத்தரசிக்கு அடுத்தடுத்து பதினாறு பிள்ளைகள் பிறக்க இளையவளுக்கு ஏனோ குழந்தைபாக்கியம் இல்லையென்றாலும் அதையெண்ணி எந்நாளும் அவள் கவலைகொண்டாளில்லை. அக்காளின் பிள்ளைகளைத் தன்னதாய் வரித்துக்கொள்ள குழந்தைகள் அவளிடம் பிரியத்தோடு ஒட்டிக்கொண்டன. தினமும் சூரியன் உதிக்கும் முன்னெழுந்து ஏழுகாத தூரம் நடந்து அக்கா வீடடைந்து பிள்ளைகளை எழுப்பிக் குளிப்பாட்டி, சீவிச்சிங்காரித்து, உணவூட்டிக் கொண்டாடி, சேர்ந்து விளையாடி, அதுகள் விளையாடும் அழகை ரசித்து, இரவானபிறகு உறங்கவைத்து, அதன்பிறகு வீடு திரும்புவாள் முத்தாலம்மா. தன்னை விடவும் தங்கையிடம் பிள்ளைகள் கொண்ட அன்பை எண்ணிப்பூரித்தாள் பட்டத்தரசி.
நல்லதொன்று நடக்கையில் அதைக்கண்டு எரிச்சலுறும் சனங்கள் இல்லாத ஊரென்று ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதானே?
சகோதரிகள் ஒற்றுமையாய் இருப்பதுகண்டு பொறுக்காத குரூரமனங்கள் இல்லாததும் பொல்லாததும் அக்காளிடம் சொல்லத்தொடங்கின. மெல்லக் குழந்தைகளைத் தன்பக்கம் இழுத்துப் பிறகு உன் தாலியையும் சொத்தையும் பிடுங்கிக்கொண்டால் நீ என்ன செய்வாய்? தன்னைக் கேட்டவர்களை எள்ளி நகையாடிக் கடந்தாள் பட்டத்தரசி. ஆனால், அதற்காக அவர்கள் கேட்பதை நிறுத்தவில்லை. சந்தேகம் எனும் எறும்பூர மனம் எனும் கல் மெல்லத் தேய்ந்திட அச்சம் ஆட்கொண்டது பட்டத்தரசியை. பிள்ளைகளையும் கணவனையும் எண்ணிக் கலக்கம்கொண்டு தன்னைமீறித் தங்கையிடமிருந்து மனதளவில் விலகவாரம்பித்தாள். ஒருபோதும் அவளிடம் சந்தேகம் கொண்டிராத முத்தாலம்மாவுக்கு அக்காளின் விலக்கம் புரிபடவில்லை. எப்போதும்போல அவள் அக்காளின் ஊருக்கு வருவதும் போவதுமாக இருந்தாள்.
அன்று அனைவருக்கும் முன்பு எழுந்தாள் பட்டத்தரசி. பிள்ளைகளை இனியும் தங்கையிடம் பகிர்ந்திட அவள் தயாராயில்லை. உறங்கிய பிள்ளைகளைத் தட்டியெழுப்பி தான் சொல்லும்வரை வெளியே வரக்கூடாது என மிரட்டி நெல் அவிக்கும் குதிருக்குள் பதினாறு பேரையும் மறைத்தாள். பிள்ளைகளைத் தேடிவந்த முத்தாலம்மாவிடம் அப்பனோடு அனைவரும் வெளியூருக்குப் போனதாகக் கதை சொன்னாள். தன்னிடம் கூறாது சென்ற பிள்ளைகளை எண்ணி விசனம் கொண்டவளாக அங்கேயே அமர்ந்திருந்தாள் தங்கைக்காரி. தலைக்குமேலே உச்சிக்கு வந்த சூரியன் எதிர்த்திசை சென்று சாயும்வரை பிள்ளைகளை அவள் கண்கள் பார்க்கவில்லை. அவளின் இருப்பை மறுத்து கேலிச்சிரிப்போடு சுற்றிவந்த வாய்களும் கண்களும் முதன்முறையாக அவளுக்கு வேறுகதை சொன்னபிறகே தன்னுடைய சூழல் புரிபட்டது. ஆற்றில் புரண்டோடும் வெள்ளமாய்க் கண்களில் நீரோடு அக்காவைத் தேடினாள். பட்டத்தரசியோ மனம் இளக விரும்பாமல் வீட்டுக்குள் தன்னை ஒளித்துக்கொண்டாள்.
வாழ்க்கை முழுக்கக் கட்டியெழுப்பிய அன்பின் மாளிகை ஊரார் பேச்சால் சிதைந்ததெண்ணிக் கோபமும் ஆவேசமுமாகக் கிளம்பினாள் முத்தாலம்மா. அவள் சென்ற பாதையெங்குமிருந்த பச்சைப்பொட்டு யாவும் கருகி ஊரே சாம்பல்நிறமானது. நேரேசென்று அவள் ஊருக்குப் புறத்தேயிருந்த கிணற்றில் பாய்ந்தாள்.
தங்கை புறப்பட்டவுடன் வேகமாக ஓடிப்போய் நெற்குதிரின் கதவைத்திறந்த பட்டத்தரசி திகைத்தாள். பதினாறு குழந்தைகளும் நெல்லோடுநெல்லாக அவிந்துகிடந்தன. ஓவென்று அலறியரற்றியவளுக்குத் தனது தவறு புரிந்தது. அனைவரையும் அள்ளிச்சுருட்டிக்கொண்டு தங்கையைத் தேடியோடினாள். ஆனால், அவளோ கிணற்றுக்குள் பிணமாகக் கிடக்கக்கண்டு பட்டத்தரசியின் அழுகை கூடியது. செய்வதறியாது தங்கையின் உடலைக் கட்டிக்கொண்டு கதறினாள். பிள்ளைகளைத் திருப்பித்தந்தால் காலமெல்லாம் வழிபட்டுக் கொண்டாடுவதாக முத்தாலம்மாவின் பாதங்களைச் சரணடைந்தாள்.
அப்போதுதான் அசரீரியாக அந்தக்குரல் ஒலித்தது: “உன் பிள்ளைகள் உனக்கு மீண்டும் கிடைப்பார்கள். அதற்காக என்னை நீ வழிபட வேண்டாம். வாழ்வில் ஏதும் நிரந்தரமில்லை என்பதைச் சொல்லும்விதமாக அன்றேபிறந்து அன்றே அழிவேன். எனக்கு எந்தக் கோயிலும் தேவையில்லை.”
குரல் ஓய்ந்த மறுகணம் பதினாறு குழந்தைகளும் உயிர்பெற்று வந்தனர். அன்றிலிருந்து முத்தாலம்மன் சாமியாக நின்று ஊரைக் காத்துவருகிறாள்.
ஊர்முச்சந்தியில் வைத்து வழிபட்டு ஒரேநாளில் அம்மன் தோன்றி மறையும் திருவிழாவும் அவளுக்காகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் திருவிழாவைக் கொண்டாட அம்மனிடம் அனுமதி பெற ஊருக்கு வெளியே ஓலைக்கீற்றால் கூரைவேய்ந்து ஒரு வேலிப்படல் அமைப்பார்கள். ஆனால், சாதாரணமாக அப்படலை அமைத்து விடமுடியாது. பட்டத்தரசி வழிவந்தர்களின் குடும்பத்தில் மிக மூத்தவரும் இருப்பதில் இளையவனும் ஊரின் அருகிலிருக்கும் காட்டுக்குள் நுழையவேண்டும். மனிதவுரு அல்லது மிருகமென ஏதேனும் வடிவில் படல் அமைக்கும் மரத்தை அவர்களுக்குக் காட்டித்தருவாள் முத்தாலம்மன். பெரும்பாலும் நாகவடிவில் வருவாள் என்பதால் ஊருக்குள் ஏகப்பட்ட நாகர் சிலைகளைக் காணலாம். அடையாளங்காட்டப்பட்ட மரத்தின் இரு நுனிக்கிளைகளை வெட்டிவந்து அவற்றால் வேலிப்படல் அமைக்கவேண்டும். படல் அமைத்த மூன்று தினங்களுக்குள் அதற்குள் கெவுளிச்சத்தம் கேட்டால் திருவிழாவுக்கு அம்மன் அனுமதி வழங்கியதாக அர்த்தம். இல்லையெனில் அவ்வருடம் அம்மனுக்குத் திருவிழா நடத்தாமல்போய் ஊரே துயரத்தில் சிக்கிச்சுழலும். அதிலிருந்து விடுபடவும் அம்மனின் பாதம் பணிவதுதவிர அவ்வூர் மக்களுக்கு வேறேதும் தெரியாது.
திருவிழாக்காலத்தில் அம்மனுக்கு இரண்டு வழிகளில் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன. முதலில் – ‘உருண்டு கொடுப்பது.’ அம்மனின் பீடம் அமைந்த இடத்தைச்சுற்றி நீர் நிறைத்து அப்பகுதி முழுக்கச் சேறாக்கியபின் ஆள்கள் அச்சேற்றில் விழுந்துபுரண்டு நெடுஞ்சாண்கிடையாகக் கோயிலைச் சுற்றி வருவார்கள். இவர்களைச் சேத்தாண்டிகள் என்றழைப்பர். தூசியும் துரும்பும் விடச்சிறியது மானிடப்பிறவி என்பதே இந்தப் பிரார்த்தனையின் தாத்பர்யம். அடுத்ததாக – ‘தழும்பு போடுவது.’ வெகுகாலம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அம்மனுக்கு வேண்டிக் குழந்தை பிறந்தால் அதன் வயிற்றில் நெருப்புக்கோலால் சூடு போடுவார்கள். மேல்பாதியைச் சேர்ந்தவர்கள் சூரிய வடிவிலும் கீழ்பாதி மக்கள் பிறைநிலவின் வடிவிலும் சூடு வைப்பது வழக்கம். அம்மன் அருளால் பெற்ற பிள்ளைகள் என்றும் அவளை மறக்காதவண்ணம் இயற்கையின் இருபெரும் சக்திகள் குழந்தைகள் உடலில் என்றைக்குமாகத் தழும்பாக நிலைத்திருக்கும்.
பிறப்பும் இறப்பும் இங்கு அவளின் பெயராலே நிகழ்கிறது.
இதுவே முத்தாலம்மன் சரிதம்..!!!
[கையேட்டை வாசித்துக்கொண்டிருந்த எனக்குக் கருப்பன் கோயிலில் பார்த்த முதிய பெண்மணி நினைவில் இடறினாள். வாசிப்பதைத் தொடர்ந்தேன்]
மூதாட்டி போனபின் கவனத்தை நான் மீண்டும் ஊர்வலத்திடம் திருப்பினேன். அங்கு இறுதியாக, ஆண்களும் சிறுவர்களும் அம்மன்போல பெண்வேடமிட்டு வந்தார்கள். அவர்களும் சென்றபிறகு மக்கள்திரள் அங்கிருந்து கலைந்து அம்மன் பிறப்பு மண்டபம் நோக்கி நகரத்தொடங்கியது.
அதற்குள் வெயில் சாய்ந்திருக்க, ஊர்மைதானத்தில் திருவிழா ஆட்டங்கள் களைகட்டத் தொடங்கின. நான் மைதானத்துக்குள் நுழைந்தேன். கையால் சுற்றும் ரங்கராட்டினத்தை குழந்தைகள் மொய்த்திருந்தன. வித்தை காட்டுபவர்களும் தந்திரநிகழ்ச்சி நடத்துபவர்களும் மக்களைத் தங்களின் பக்கம் இழுக்க உரக்கச் சத்தம் போட்டவாறிருந்தார்கள். தள்ளுவண்டியில் இரட்டைக்கட்டைகளோடு லங்கர் உருட்டியவனிடமும் நல்ல கூட்டம். “நாலணா வச்சா எட்டணா, எட்டணா வச்சா ஒர்ருவா, ஒர்ருவா வச்சா ரெண்ர்ருவா.. எதுவச்சாலும் டபுளு. ஓடியா, ஓடியா” அவனது குரல் கணீரென்று ஒலித்தது. நான் நெருங்கிச்சென்று பார்த்தேன். அந்தப்பயல் ஜெய்சங்கர் ரசிகனாயிருக்க வேண்டும். பொதுவாக லங்கர்கட்டைகளில் காணக்கூடிய எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகைகளின் படங்களுக்குப் பதிலாக விதவிதமான ஜெய்சங்கர் புகைப்படங்களைக் கட்டைகளில் ஒட்டி இருந்தான். “டவுன்ல இருந்து வந்திருக்குற சாருக்காக ரெண்டு ரூபா,” என்னை யாரென்றே அறிந்திராத ஒருவன் என் பேரில் பணம் கட்டுவதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது. இது எங்கு முடியுமென்பதும் எனக்குத் தெரியும். ஆரம்பத்தில் ஜெயிப்பதுபோல உள்ளேயிழுத்துக் கையிலிருக்கும் மொத்தப்பணத்தையும் உருவிக்கொண்டு விடுவார்கள். நான் சிரித்தவாறே தலையை அசைத்தபடி அங்கிருந்து வெளியேறினேன். பயந்தாங்கொள்ளி என்று என்னைக் கேலிசெய்து அவன் பேசிய வார்த்தைகள் என் முதுகுக்குப் பின்னால் காற்றில் கரைந்தன.
மெல்ல நடந்து அம்மன் பிறப்பு மண்டபத்தை வந்தடைந்தேன். பீடத்தினருகில் களிமண், சாந்து, முட்டை கலந்து உருவான சிலையை வைத்திருந்தார்கள். இதுதான் வடிவம் என்று சொல்லமுடியாத ஒரு வடிவத்துடன் கூடிய சிலை. மக்கள் பயபக்தியுடன் சுற்றி நின்றிருந்தார்கள். அம்மனின் சிலை செய்வது முதல் அவளுக்குக் கண்திறந்து பூசைகளிட்டுக் கடைசியாக முச்சந்தியில் உடைப்பதுவரை சடங்குகள் யாவும் கீழ்பாதி மக்கள்தாம் செய்யவேண்டும். அம்மனுக்குக் கண்திறக்கும் நிகழ்வு அடுத்து நடைபெறக்கூடும். எனவே பூசாரியின் வருகைக்கு அனைவரும் காத்திருக்க நானும் அவர்களோடு போய் நின்றேன்.
வெகுநேரம் ஆகியும் பூசாரி வரவில்லை. மக்களுக்குள் சின்னதாகச் சலசலப்பு எழுந்தது. இதுபோன்ற நேரங்களில் பூசாரிகள் சில எடக்குகளைச் செய்வது வழக்கம்தான். தனக்குரிய மரியாதை தரவில்லை, வேண்டியதைச் செய்தால் மட்டுமே அம்மனின் கண் திறப்பேன் என அடாவடி செய்யும் பூசாரிகள் நிறைய உண்டு. அதிலும் ஒருசிலர் யாரும் பார்க்காதபடி மரக்கிளைகளின் உச்சியில் ஒளிந்துகொள்ள ஊர்மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கும். இதுவும் அப்படித்தான் என மக்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்தார்கள். என்றாலும் நேரம் செல்லசெல்ல ஒரு சிறிய பதற்றம் பரவத்தொடங்கியது. எல்லோரும் சேர்ந்து பூசாரியைத் தேடத்தொடங்கினர். ஆனால் எங்குத் தேடியும் பூசாரியைக் காணவில்லை. ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகுதான் அந்த உண்மை தெரிய வந்தது. பூசாரியும்…”
அதன்பிறகு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க கையேடு முடிந்திருந்தது. நான் குழப்பமாய் நிமிர்ந்தேன். முதியவர் இன்னும் அதே இடத்தில் இளித்தவாறே அமர்ந்திருந்தார்.
“பிறகு? பூசாரி கிடைச்சாரா? இந்தப் புத்தகத்தின் கடைசியைக் காணோம்?” நான் கேட்டேன்.
முதியவரின் கண்கள் இருண்டன. “அன்னைக்கு ஊருக்குள்ள பெரிய கலவரம். இதை எழுதினவரும் செத்துட்டாரு. அவர் ஒரு பத்திரிக்கைக்காரரு. இதையும் அழிக்கப் பார்த்தாங்க. கடைசில இதுதான் மீந்துனது”
நான் அதிர்ந்தேன். “எப்படி?”
“பூசாரி காணாமப்போன நேரம் மேல்பாதில ஒரு பொண்ணும் காணலை. ஊர்ப்பெரியவரோட பொண்ணு அது. அவங்க ரெண்டுபேரும் ஓடிப்போனதா சனங்க தங்களுக்குள்ள அடிச்சுக்க ஆரம்பிச்சு பெரிய கலவரமாச்சு. நிறைய சேதாரம், உயிர்ப்பலி. பாவம், எதுக்குமே சம்பந்தமில்லாத சீவனெல்லாம் போச்சு. இதெல்லாம் நடந்து முப்பது வருசமாகியும் இன்னும் திருவிழாவே நடக்குறதில்லை. அதுக்குப்பிறகு அவ திருவிழாக்கு அனுமதி தரவேயில்லை.”
அவர் பேச்சிலிருந்த பூடகம் என்னைக் குழப்பியது. “உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்? அந்தப்பூசாரியும் பொண்ணும் என்ன ஆனாங்க?”
முதியவர் பதிலேதும் சொல்லாமல் கையை நீட்டினார். கையேட்டை மீண்டும் நான் அவரிடம் தர அதை வாங்கிக்கொண்டே மெல்ல எழுந்தார். அருகில் இருந்த மூட்டைக்குள் கையேட்டை வைக்கப்போனவர் ஏதோ யோசித்தவராக மெல்லத் தன்மீது போர்த்தியிருந்த கந்தல்துணியை விலக்கி அதை இடுப்பில் செருகினார். அவர் வயிற்றின் இடப்பகுதியின் எனது பார்வை நிலைக்க நான் அதிர்ந்தேன்.
அதேவேளை எனக்குப் பின்புறம் ஓர் ஒலிகேட்டுத் திரும்பினேன். கருப்பசாமி கோயிலில் நான் பார்த்த முதியவள் எங்களிடம் வந்துகொண்டிருந்தாள்.