அயோத்தி ராமர் கோயில் வடிவமைப்பளர் சந்திரகாந்த் சோமபுராவின் நேர்காணல், சமீபத்திய ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியாகியிருந்தது.
”அயோத்தி ராமர் கோயில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்” என்ற கேள்விக்கு சோமபுராவின் பதில் இது
“அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கோயில் கட்ட வடிவமைப்பு செய்து தரவேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். 1989ல் நான் கோயிலுக்குச் சென்றபோது அது ராணுவப் பாதுகாப்பில் இருந்தது. என்னால் பென்சில், பேப்பரை எடுத்துச்செல்ல முடியவில்லை. மனதிலேயே குறிப்பு எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் வரைபடத்தை உருவாக்கினேன்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் அவர்.
சந்திரகாந்த் சோமபுரா குறிப்பிடும் 1989ல் அது பாபர் மசூதியாக இருந்தது என்பது குறித்த தன்னுணர்வோ அதை இடித்துத்தான் ராமர் கோயில் கட்டப்படுகிறது என்கிற குற்றவுணர்வோ அவருக்கு இல்லை என்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆனால் இந்தக் குற்றவுணர்வு இந்தியாவில் பெரும்பான்மையினருக்கு இப்போது இல்லை என்று உறைக்கும்போது தலைகவிழ்ந்து கண்ணீர் சிந்தவே முடிகிறது.
1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது சிறுதரப்பில் இருந்தாவது கடும் கண்டனங்கள் எழுந்தன. சிறுபான்மையினர் மட்டுமல்ல மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளும் பாபர் மசூதி இடிப்பு என்பதை இந்திய ஜனநாயகத்தின் மீதான பலத்த அடியாகக் கருதினர். ஆனால் 31 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தக் கூச்சமும் இல்லாமல் ஜனவரி 22ல் நடைபெறவுள்ள, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கைத் திருவிழாவாகக் கொண்டாட இந்தியாவே தயாராகிவிட்டது.
ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி, ராமர் பிறந்த இடத்தில் அமைந்துள்ளது என்ற சர்ச்சை 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. இந்தியா விடுதலை அடையும் காலம் வரை இது சிறுசிறுமோதல்களை உருவாக்கும் பிரச்னையாக மட்டுமே இருந்தது. 1949ல் நள்ளிரவில் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் கொண்டுபோய் வைக்கப்பட்டதன் விளைவே அது மாபெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர ஜா இணைந்து எழுதிய ‘அயோத்தி ; இருண்ட இரவு’ நூல் (விடியல் பதிப்பகம் வெளியீடு) விரிவாக விளக்குகிறது.
அயோத்தி பிரச்னையைப் பெரியளவில் ஆக்கியதன் பின்னணியில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று, அயோத்தியில் மதத்தின் மூலம் தன் அதிகாரத்தை வளர்க்க முனைந்த மடாதிபதிகள், இன்னொன்று காங்கிரஸில் இருந்த இந்துத்துவச் சக்திகள். அயோத்தியில் இருக்கும் மடங்கள், அதன் அதிகாரம், மடங்களுக்கு இடையிலான அதிகாரப்போட்டி, தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக இந்த மடங்கள் செய்த தந்திரங்கள் ஆகியவை மாபியாக்களின் கேங் வாரை ஒத்தவை. அபிராம் தாஸ் என்னும் மடாதிபதி இந்து ஆன்மீக இலக்கியங்கள் குறித்தோ சம்பிரதாயங்கள் குறித்தோ எந்த அறிவுமற்றவர்.ஆனாலும் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக உள்ளூர் இந்துமகா சபை நிர்வாகி ராமச்சந்திர பரமஹன்சுடன் இணைந்து திருட்டுத்தனமாக ராமர். சீதை சிலைகளை பாபர் மசூதிக்குள் வைத்தார்.
அப்போது உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் (அன்றைய காலகட்டத்தில் அவர் உ.பி.யின் பிரதமர் என்றழைக்கப்பட்டார்) காங்கிரஸில் தன் இடத்தை உறுதி செய்யவும் இந்துத்துவவாதிகளின் செல்வாக்கை காங்கிரஸில் நிறுவவும் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய சோசலிஸ்ட்கள் தனியாகத் தேர்தலை எதிர்கொண்டனர். அயோத்தி நகரம் அமைந்திருக்கும் பைசலாபாத்தில் போட்டியிட்ட சோசலிஸ்டான ஆச்சார்ய நரேந்திர தேவை எதிர்த்து பாபா ராகவதாஸை நிறுத்தினார் வல்லப பந்த்.
நாத்திகரான சோசலிஸ்ட்டுக்கா வாக்களிக்கப்போகிறீர்கள் என்ற கோவிந்த் வல்லப பந்தின் பிரச்சாரம் ராகவதாஸுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. காந்தி மறைவுக்குப் பிறகு நேருவுக்கும் வல்லபாய் படேலின் தலைமையிலான இந்துத்துவவாதிகளுக்கும் இடையில் பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. அயோத்தி பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டபோதே அதைத் தடுக்காத கோவிந்த் வல்லப பந்துக்கு நேரு கண்டனத் தந்தியை அனுப்பினார். “அயோத்தியில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி கவலை அடைந்துள்ளேன். இந்த விஷயத்தில் நீங்கள் தனிப்பட்ட அக்கறை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு ஆபத்தான முன் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்,”என்று அதில் நேரு குறிப்பிட்டிருந்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ‘இந்தியாவில் பாசிசம் வரும் என்றால் அது பெரும்பான்மைவாதத்தின் மூலமே நிகழும்’ என்று சரியாகவே கணித்துச் சொன்னார் நேரு.
இந்திரா, ராஜீவ்காந்தி காலத்திலும் அயோத்தி பிரச்னை நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது. ஆனாலும் உத்திரப்பிரதேசம் அளவிலான பிரச்ன என்ற அளவிலேயே எதிர்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்னையைத் தேசியப்பிரச்னையாக மாற்றியது ஜனசங்கமாக இருந்து மாறிய பாரதிய ஜனதா கட்சியே. 1990ல் வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதும் அதை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். நேரடியாக எதிர்க்காமல் தந்திரத்துடன் ராமர் கோயில் பிரச்னையைக் கையிலெடுத்து ரத யாத்திரையைத் தொடங்கினார் அத்வானி.
வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்ததுடன் 1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி இந்துத்துவ மதவெறியர்களால் இடிக்கப்பட்டது. இந்திய வரலாறே டிசம்பர் 6க்கு முன், பின் என பிளவுண்டது. ராமர் கோயில் பிரச்னையை முன்வைத்து இந்துத்துவ அரசியல் ஒருபுறம் எழுச்சிபெற்றது. பாபர் மசூதி இடிப்பின் விளைவாக ஏமாற்றமும் அவநம்பிக்கையும் அடைந்த சில இஸ்லாமிய இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து வன்முறையைக் கையிலெடுத்ததன் விளைவாக மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வன்முறையின் மூலமாக மீண்டும் பா.ஜ.க.வே அரசியல் ஆதாயத்தை அனுபவித்தது. இஸ்லாமியர்கள் பொது இடங்களில் சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர். தொப்பியும் தாடியும் லுங்கியும் பயங்கரவாதிகளின் அடையாளங்களாகச் சித்திரிக்கப்பட்டன. இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்ததில் இந்திய சினிமாக்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கியப்பங்குண்டு. தனிமைப்பட்ட இஸ்லாமியர்கள் மத்தியில் தங்கள் மத அடையாளங்களை உறுதி செய்யும் அடிப்படைவாதப்போக்கும் தலை தூக்கியது. இவற்றில் எல்லாம் படு உற்சாகமாக அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தது.
இந்துத்துவவாதிகள்தான். ஒவ்வொரு டிசம்பர் 6ன்போதும் பயங்கரவாதப் பீதியூட்டப்பட்டது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. முற்றிலும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. மேல்முறையீடு செய்யப்பட்டு 2019ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்போ அநீதியின் பரப்பை அகலமாக்கியது.
மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகச் சொன்ன உச்சநீதிமன்றம் வரலாற்று ஆதாரங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை. பாபர் மசூதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வு மசூதிக்கு அடியில் ஒரு கட்டுமானம் இருந்ததாக உறுதி செய்தது. அது இந்துக்கோயிலின் கட்டுமானம் என்று உறுதி செய்யப்படாவிட்டாலும் அதையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலத்தை உ.பி அரசு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எல்லோரும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது, குறிப்பாக இஸ்லாமியர்கள். பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த வன்முறைகளும் பழிசுமத்தல்களும் இஸ்லாமியர்களை விரக்தி மனநிலைக்குத் தள்ளியிருந்தன. அதன் காரணமாகவே தீர்ப்புக்கு எதிராக அவர்களிடமிருந்து பெரியளவில் எந்த எதிர்வினைகளும் இல்லை.
பாபர்மசூதி அமைந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும், கண்ணுக்கெதிரில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக ஒரு மசூதி இருந்தது என்பதும் அது அத்வானியின் ரத யாத்திரையால் வெறியூட்டப்பட்ட மதவெறியர்களால் இடிக்கப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே! அதற்கு இஸ்லாமியர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பத்தாவது நாளில் அந்தக் குற்றச்செயல் குறித்து விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. 2009ல் வெளியான லிபரான் கமிஷன் ‘பாபர் மசூதி இடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பா.ஜ.க போன்ற இந்துத்துவ அமைப்புகளே காரணம்’ என்றும் ‘வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, உமாபாரதி, அசோக் சிங்கால், முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், பிரவீண் தொகாடியா போன்றவர்களே பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகள்’ என்றும் தெளிவாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான அடுத்த ஆண்டு, 2020ல் வெளியான லக்னோ சி.பி.ஐ நீதிமன்றத் தீர்ப்போ ‘பாபர் மசூதி இடிப்பில் இந்துத்துவத் தலைவர்கள் குற்றவாளி இல்லை’ என்று 32 பேரை விடுதலை செய்தது.
ரதயாத்திரை தொடங்கிய அத்வானியை முதன்முதலில் கைது செய்த லாலுபிரசாத் யாதவ் இப்போது ‘ஊழல் குற்றவாளி’ என்ற அடையாளத்துடன் இருக்கிறார். ஆனால் அத்வானி உள்ளிட்ட பாபர் மசூதி இடிப்புடன் தொடர்புடைய யார்மீதும் ‘குற்றங்களின் கறை’ இல்லவே இல்லை.
அப்படியானால் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார், அதற்குக் காரணமானவர்கள் யார், ஒருவேளை இஸ்லாமியர்கள்தான் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளா, உண்மையிலேயே பாபர் மசூதி இடிக்கப்பட்டதா அல்லது பழமையான மசூதி என்பதால் அது தானாகவே இடிந்து விழுந்துவிட்டதா?
சட்டத்தின் மீதும் ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய விழுமியங்களின்மீதும் இருந்த நம்பிக்கைகளை இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளும் தகர்த்துவிட்டன.
இதோ ராமர் கோயில் குடமுழுக்கு திருவிழா தொடங்கிவிட்டது. அது இஸ்லாமியர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளின் சமாதியின்மீது எழுப்பப்பட்ட கட்டடம் என்பதை இப்போது எல்லோரும் மறந்துவிட்டார்கள். ராமரின் பெயரால் மீண்டும் ஓர் அரசியல் ஆட்டத்தைப் பா.ஜ.க தொடங்கியிருக்கிறது.
வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தன் சாதனைகள் என்று சொல்ல மோடியிடம் ஒன்றுமில்லை. ராமர் கோயில், காஷ்மீரில் 370 பிரிவு நீக்கம் என்று தன் எல்லா அஜெண்டாக்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய பா.ஜ.க இந்தத் தேர்தலில் கையில் எடுக்கவிருந்த ஆயுதம் ‘பொதுசிவில் சட்டம்’. ஆனால் பொது சிவில் சட்டத்துக்கு சிறுபான்மையினரைவிட அதிகம் எதிர்ப்பு தெரிவித்தது வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பழங்குடிகள். அது தங்கள் வாக்குவங்கியின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்று பா.ஜ.க அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி, ‘இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்’ போல அவசர அவசரமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உருவாக்கி, கொண்டுவந்தார்கள். ஆனால் ஆணாதிக்கத்தையே அடிப்படையாகக் கொண்டவர்களால் தேர்தல் ஆதாயத்துக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த வெற்று மசோதா, உடனடிப் பலனளிக்காத கண் துடைப்பு என்பது அம்பலப்பட்டது. மோடியோ மற்ற பா.ஜ.க.வினரோ மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அதற்குப்பிறகு எங்காவது வாய்திறந்து பார்த்தீர்களா?
இல்லை. இப்போது அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. எனவே மீண்டும் பா.ஜ.க ராமரைக் கையிலெடுத்திருக்கிறது. எந்த ராமரை முன்வைத்து ரதயாத்திரை நடத்தி இந்தியாவைத் துண்டாடினாரோ அந்த அத்வானிக்கு, ராமர் கோயில் குடமுழக்கு விழாவில் கலந்துகொள்ள அனுமதியில்லை. தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்று சிவராஜ்சிங் சௌகான், வசந்தராராஜே சிந்தியா, ராமன்சிங் எனப் பலரையும் ஓரம்கட்டிய மோடியால் முதன்முதலில் ஓரம் கட்டப்பட்ட அத்வானி பரிதாபகரமாக ராமர் கோயில் குடமுழுக்கைத் தொலைக்காட்சியில் பார்த்து கண்ணீர் சிந்தலாம். அது ஆனந்தக் கண்ணீராக இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
வறுமை, வேலையின்மை, தொழில்கள் முடக்கம், இந்துத்துவ இயக்கங்களின் பாலியல் சுரண்டல்கள், மாநில உரிமைகள் பறிப்பு, மொழித்திணிப்பு, சாதிய ஒடுக்குமுறை, பெண்கள்மீதான வன்முறை என எல்லாவற்றின் மீதும், எல்லாவற்றையும் மறைக்க இதோ ராமர் கோயில் குடமுழுக்கு என்னும் பிரமாண்டத் திருவிழா தொடங்கவிருக்கிறது. ஊடகங்களின் நேரலைகள் முதல் உணர்ச்சி சுகுணாதிவாகர்
யூட்டும் மோடியின் சவடால் உரை வரை பார்க்கப்போகிறோம். ஆம் வேடிக்கை பார்க்கப்போகிறோம். வெறுமனே வேடிக்கை பார்க்கப்போகிறோம். நல்லவேளையாக நம்மோடு ஒரு துயர சாட்சியாக இருக்கவேண்டியவர் 75 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.ஹே ராம்!