நிம்மி வைரஸ்

பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா ?

புகழ்பெற்ற இந்த வரிகளுக்கான நேரடி விளக்கமும், பாம்புக்குப் பதிலளித்த கருடன் சொற்களும் நம் வாழ்க்கைக்கு மிகவும் உதவுபவை.

இன்று இந்தியத் துணைக்கண்டத்தையே ஆட்டுவிக்கும் பரமசிவன் மோடியோ, அமித்ஷாவோ, நட்டாவோ கிடையாது.  நாக்பூரின் RSS அமைப்புதான் அது.  மக்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு முகம் நிர்மலா.  நாக்பூரான்கள் விரும்பும் பார்ப்பனர் என்கிற ஒரே தகுதிதான், 2008இல் கட்சியில் சேர்ந்த நிர்மலா சீத்தாராமனுக்கு ஒன்றியத்தின் புகழ்வாய்ந்த துறைகளான பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் பதவிகளைப் பெற்றுத் தந்தன !

நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பாதுகாப்புத் துறையை வகித்தபோதுதான் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தது.  அன்றைய தேதியில் ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் காட்டுக்குள் போட்டோ சூட்டில் இருக்க, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இவர் பங்கருக்குள் போய் ஒளிந்துகொண்டார்.  அதைக்காட்டிலும் பெருந்தருணம் நம் விமான ஓட்டி அபிஷேக் நந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியபோது, இவர் பங்கருக்குள் இருந்து வெளிவரச் சில நாட்கள் ஆயின.  அதற்குள் பாகிஸ்தான் இராணுவம் நம் வீரரை நம் எல்லையில் பத்திரமாக ஒப்படைத்திருந்தது !

அந்தப் புல்வாமா தாக்குதல்தான், நம் இந்திய வீரர்களின் இரத்தம்தான், அந்தச் செயற்கைப் பேரிடர்தான், நிர்மலாவுக்குப் பதவி உயர்வைப் பெற்றுத் தந்தது என்றால் நம்மால் நம்ப முடியாதல்லவா ?  உண்மை கசப்பானது. 2019இல் அவர் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவுடன்தான் கோவிட்-19 வைரஸ் சீனாவில் உருவானது.  ஆனால், அதற்கு முன்பே இந்தியப் பொருளாதாரத்தை நிம்மி வைரஸ் தாக்கிவிட்டது.  இப்போது வரை அதற்கு எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை !

மாமழை உருவாக்கிய பேரிடர்

Michaung என்ற பர்மியச் சொல்லிலும், மிக்ஜாம் என்று தமிழிலும் அழைக்கப்பட்ட ஒரு புயல் உருவாகவிருக்கிறது என நவம்பர் 2023 இறுதியிலேயே நமக்குச் சொல்லப்பட்டாலும், அந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை படிப்படியாகப் புயல் உருவம் கொண்டது டிசம்பர் 1 வெள்ளி அன்றுதான்.

புயலாக மாறிய பின்னர்தான் அது சென்னைக்கு வந்து பின் ஆந்திராவில் கரையைக் கடக்குமெனக் கணித்தார்கள்.  அப்போது டிசம்பர் 2 சனிக்கிழமை ஆகிவிட்டிருந்தது !

இந்திய வானிலை மய்யம் மற்றும் சென்னை வானிலை மய்யம் புயல் எச்சரிக்கைகளைக் கொடுத்தன என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை.  மணிக்கு 70முதல் அதிகபட்சம் 100கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்திருந்தபடியால், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டது !

அதற்கேற்ப தாழ்வான பகுதிகளிலிருந்த மக்கள் பல்லாயிரம் பேரை, அருகிலிருந்த பள்ளிகள், அவசரகால முகாம்களுக்கு இடப்பெயர்ச்சி செய்திருந்தனர்.  அவர்களுக்குக் குடிநீர், உணவு, பாய், தலையணை, போர்வை, பால், தேநீர், பிரட், பிஸ்கட் என அனைத்தும் வேளா வேளைக்கு வழங்கப்பட்டன.  இவையாவும் டிசம்பர் 2, 2023 சனிக்கிழமை காலை ஆரம்பித்து மாலைக்குள் முடிந்திருந்தன !

புயல் சென்னையை நோக்கி வருகிறது என அனைத்துத் தனியார் வானிலைக் கணிப்பாளர்களும் உறுதிபடச் சொல்லிவிட, புயலால் வீழும் மரங்கள், கம்பங்கள், மின்சாரக் கம்பிகள் பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகள், அவற்றை உடனுக்குடன் அகற்ற அனைத்துப் பொருட்களுடன் அரசு இயந்திரம், சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தயாராக இருந்தனர் !

ஒரு சில இடங்களில் மிக அதீத கனமழை பெய்யக்கூடும் என்று ஒருசேர தனியார் வானிலைக் கணிப்பாளர்களும், இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யமும் எச்சரித்திருந்தனர்.  ஆனால், அவர்கள் அதீத கனமழை அளவாகச் சொல்லியிருந்தது 20முதல் 25செ.மீ.

சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த வடிகால் அமைப்புகள் 20செ.மீ மழை பொழிந்தாலும், உடனடியாக நீர் தேங்காமல் வடிகால்களுக்குள் பாய்ந்தோடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தார் !

டிசம்பர் 3 ஞாயிறு மற்றும் டிசம்பர் 4 திங்கள் இரண்டு நாட்களுக்கும் பொதுவிடுமுறையை அறிவித்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.  புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதீத கனமழை ஆபத்தையும் சொல்லியிருந்ததால், மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்கிற கோரிக்கைகள் செய்திகளில் வந்தவண்ணமிருந்தன.  அனைத்து சமூகவலைத்தளங்களிலும் அது பரப்பப்பட்டது.  அலைபேசிகளில் பொதுமக்கள் அனைவருக்கும் அவை குறுஞ்செய்திகளாகப் பலமுறை அனுப்பப்பட்டன !

விடிந்தது ஞாயிறு.  தேதி 03/12/2023.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காற்று மெல்ல வீசினாலும் மழை இல்லை.  அனைத்து வானிலைக் கணிப்பாளர்களும் ஒரு சில இடங்களில் மட்டும் 20முதல் 25செ.மீ மழைப்பொழிவு இருக்கலாம் எனச் சொல்லியிருந்ததாலும், இதர பகுதிகளில் 5முதல் 10செ.மீ வரைக்குமே மழை இருக்கலாம் என்று கணித்திருந்ததாலும், 20செ.மீ மழையைத் தாங்கவல்ல கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன எனப் பொறுப்புமிக்க அமைச்சரே உறுதியளித்திருந்ததாலும், இந்த நான்கு மாவட்டங்களைச் சார்ந்த பல இலட்ச மக்கள் அந்த ஞாயிறு, வீட்டுக்குள் முடங்கினர்.  இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர்.  மின்சாரம் தடைப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் என எச்சரித்திருந்ததால் செல்போன் சார்ஜ், நீரேற்றுத் தொட்டிகளில் நீரை நிரப்பி வைத்தல், அவசர கால விளக்குகள், மெழுகுவர்த்தி என அனைத்துக்கும் மக்கள் தயாராகிப் புயலை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் !

இப்பதான் அந்த ட்விஸ்ட்.

மாலை வரை பெருமழைக்கான எந்த அறிகுறியும் தென்படாத சூழலில், அந்த மிக்ஜாம் புயல் சென்னைக்கருகே நெருங்க நெருங்க, தீவிர மழைப்பொழிவு அந்தியில் துவங்கியது.  அது படிப்படியாக வேகமெடுத்தது.  மேடான பகுதிகளில் இருந்தவர்களோ, ஒழுகாத வீடு வாய்த்தவர்களோ, மாடிகளில் குடியிருந்தவர்களோ கொஞ்சம் மழையை இரசித்துவிட்டு, ஞாயிறு படங்கள், குடும்பத்துடன் பொழுதுபோக்கு என முடித்துவிட்டுத் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள் !

அதன்பின்னரே இயற்கை தன் கோர முகத்தை நள்ளிரவில் காட்டத்துவங்கியது !

மேகம் கிழிந்துக் கொட்டுவதைப் போலப் பெய்த அந்தப் பேய் மழை, திங்கள் விடியும் முன்பே பல சாலைகளை மூழ்கடித்திருந்தது.  ஆனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை War Rooms மூலம் இணைத்துக் கண்காணித்ததால், வீழ்ந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.  அடைத்த கால்வாய்களைச் சீராக்கி வெள்ளத்தை வடிகால்களுக்குள் அனுப்பிய வண்ணமிருந்தனர்.  பள்ளமான பகுதிகளுக்கு மோட்டார் மூலம் நீரை இறைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  சென்னையிலிருந்த பல  சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  ஆனால் ;

ஆமாம்.  இதுதான் முக்கியமான பத்தி.

திங்கள் 04/12/2023.  புயல் நெருங்கும் போது மழை குறையும்.  புயல் ஓர் ஆட்டம் போட்டுவிட்டு ஆந்திரா நோக்கிப் போகும்போது கொஞ்சம் மழையிருக்கும் என்கிற அத்தனை கணிப்புகளும் பொடிப் பொடியாகின.

ஒரு சில இடங்களில் அதீத கனமழை 20முதல் 25செ.மீ பெய்யலாம் என்கிற கணக்குகளும் பொய்யாயின.

முந்தைய நாள் மாலை ஆரம்பித்த மழை இடைவிடாமல் காலையிலும் பொழிந்த வண்ணமிருக்க, அப்போதே பெரும்பாலான பகுதிகளில் மழையளவு 15முதல் 30செ.மீ என்கிற அபாய அளவைக் கடந்திருந்தது !

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.  மழை பெய்ய ஆரம்பித்த நாளிலிருந்து அல்ல.  கார்த்திகை மாதம் முதல் தொடர்ந்த மழையால் நீர் கடல் போய் ஏரியை நிறைத்திருந்தது.  அதனால் மழைக்கான முன்னறிவிப்பு வரும் போதெல்லாம் 1000கன அடி என ஆரம்பித்து உச்சபட்சமாக 12000கன அடி நீர் வரை செம்பரம்பாக்கத்தில் திறந்துவிடப்பட்டது !

இன்னொரு திசையிலிருந்த புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளிலிருந்தும் 1000முதல் 3000கன அடி நீர் மழை நாளுக்கு முன்பும், மழை நாளன்றும் திறந்து விடப்பட்டன.  ஏன் இதைச் சொல்ல வேண்டும் ?  அதெல்லாமே அவரவர் பார்க்கவேண்டிய கடமைகள்தாமே ?

உண்மை.  ஆனால் 2015இதே டிசம்பர் அப்படி நடக்கவில்லையே ?  போயஸ் தோட்டத்திலிருந்து வரும் உத்தரவுக்காகக் காத்திருந்து காத்திருந்து, பின் நள்ளிரவு 33000கன அடி நீரையல்லவா தடாலென்று மடை திறந்துவிட்டார்கள் ?  பாதிச் சென்னையே மூழ்கிக் கிடந்ததே ?  ஒரு வாரத்திற்கு அல்லவா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டிருந்தது ?

புது வடிகால் கால்வாய் கதைகளில் ஏமாந்தோமா ?

இல்லை.  அப்படி எதிர்கட்சிகள் பரப்புவது பொய். வடிகால் கால்வாய்கள் 20செ.மீ மழையை உடனடியாக வடித்து ஆற்றில் போய்ச் சேர்த்துவிடும் என்பதுதான் அமைச்சரின் கூற்று.  ஆனால், பெய்த மழை அளவு பெருங்குடியில் மட்டும் 60செ.மீ.  நுங்கம்பாக்கத்தில் 45செ.மீ.  வடிகால் அமைப்புகளில் பெருவெள்ளம் அடையாறு நோக்கி ஓட, வீசிக்கொண்டிருந்த புயலால் வங்கக்கடலில் அலைகள் மிகுந்து, அடையாற்று முகத்துவாரத்திலேயே அத்தனை வெள்ளத்தையும் ஒரு சுவர்போலத் தடுத்து நிறுத்தின.  கடல் நோக்கிப் போய்க்கொண்டிருந்த வெள்ளம் அப்படியே திரும்ப வர, வடிகால் கால்வாய்கள் பல அடி ஆழத்தில் பல இடங்களில் மூழ்கிப் போயின.

குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, அடையாற்றுக் கரை ஓரங்களான வளசரவாக்கம், மீனம்பாக்கம் பகுதிகள் வெள்ளக்காடாகின !

சென்னைக் கரைக்கருகே நின்று நிதானமாக வீசிக்கொண்டிருந்த மிக்ஜாம், டன் டன்னாய் மழை நீரைக் கொட்டியவண்ணமிருந்தது. இவ்வளவு நீர்கொண்ட புயல் என்கிற கணிப்பைக் கோட்டை விட்டிருந்தது இந்திய வானிலை மய்யம் !

இத்தகைய இயற்கைப் பேரிடர்களால் சற்றே வழுவ நேர்ந்ததே அன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவ்வளவு மாமழை பொழிந்து, புயலுமடித்து, பெருவெள்ளமும் வந்த மறுநாள் அதாவது செவ்வாய் காலை 05/12/2023 75% சென்னை வழக்கம்போல் இயங்கியது.  அந்த நாளையும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை என்று அறிவித்திருந்ததால் சீரடைந்த பகுதிகளில் திரள் திரளாய் சாலைகளில் மக்கள் கூட்டம் !

அவ்வளவு பெரிய மழையும், புயலும் Switch Off செய்யப்பட்டதைப்போல செவ்வாய் பகலில் அணைந்துபோயிருந்தன.  ஆனால் எஞ்சிய 25% சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மக்கள் பல அடி ஆழ வெள்ளத்தில் கடுமையாகத் தத்தளித்தனர் !

உடனடியாக முதலமைச்சர் தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்து அறிக்கை வெளியிட்டார்.  பேரிடர் நிவாரணக் குழுக்களை அனுப்பிவைக்க வேண்டுகோள் விடுத்தார்.  பல அமைச்சர்களை மீட்புக் குழுக்களுக்குத் தலைமை தாங்கச்செய்தார் !

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, 03 டிசம்பர் சனிக்கிழமையிலிருந்தே களத்தில் இருந்தவர், ஓய்வெடுக்காது பம்பரமாகச் சுழன்று பணியாற்றிப் பலரிடமும் நற்பெயர் ஈட்டினார்.  முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி, மா.சுப்பிரமணியம், நேரு, வேலு வரை அத்தனை பேரும் வெள்ளக்களத்தில் இருந்தனர்.  அப்படி ஓர் அற்புதமான மீட்பு நடவடிக்கை இருந்தது.  போர்க்கால நடவடிக்கை, இராணுவம் போன்ற மீட்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நேரடியாகக் கண்டது இம்முறைதான் !

ஒங்கப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை

ஒன்றிய அமைச்சர் ஒருவரிடம் வெள்ளச் சேத நிவாரணம் குறித்து 12டிசம்பர் செவ்வாய் அன்று கேட்கப்படுகிறது.  அதற்கு அவர் எள்ளலாக, மாநிலங்கள் கேட்டவுடன் தூக்கிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏ.டி.எம் மெஷின் கிடையாது என்றிருந்தார்.  அதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,  “நாங்க ஒண்ணும் உங்க அப்பன் வீட்டுக் காசைக் கேக்கலையே ?  எங்க வரிப்பணத்திலிருந்துதான நிவாரணத் தொகையைக் கேட்கிறோம்” என்று அதே எள்ளல் தெறிக்கக் கேட்டிருந்தார் !

அவ்வளவுதான்.  தமிழிசை தொடங்கி நிர்மலா சீத்தாராமன்வரை கொதித்தெழுந்து விட்டார்கள்.

“அய்யோ அவருடைய தாத்தா எவ்வளவு பெரிய தமிழறிஞர், அவருடைய பேரன், ஓர் இளைஞர் இப்படித் தரம் தாழ்ந்து பேசலாமா ?”

அப்பன் என்கிற சொல் தரம் தாழ்ந்ததா ?  வியக்க வைத்து விட்டனர் தமிழ் சிஸ்டர்ஸ்.  துன்பத்திலும் என்ன இன்பம்ன்னா கனவில்கூடக் கலைஞரை வறுத்தெடுக்கும் கும்பல், இப்போது சமயம் பார்த்து சாமரம் வீசியதுதான் நகைச்சுவை !

உதயநிதி மறுநாள் சொன்னது மரண அடி.  “சார்ரி சார்ரி, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய தந்தையின் பணத்தையா கேட்கிறோம்?” என்றார் !

இது இத்துடன் முடிந்துபோயிருக்க வேண்டிய விஷயம்.  இது ஏன் கிளறப்பட்டது என்பதன் பின்னணியில் பெரிய சங்கிச்சதி இருந்தது !

நாடாளுமன்றத் தாக்குதலின் 22ஆவது ஆண்டு, நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் 13/12/2023 அன்று மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றத்தில் ஒரு துல்லியத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  வண்ணப்புகைகளை உமிழவிட்டு நடந்த தாக்குதல் என்றாலும் பிசகியிருந்தால் அன்று பலர் நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்.  இந்தியாவின் எதிர்காலமான இராகுல் அவையில் அப்போது இருந்தார்.  வழக்கம்போல் மோடி அவையில் இல்லை !

ஆனால், இந்தக் கேவலத்தைத் திசை திருப்பவே சங்கிகள் மெனக்கெட்டனர்.  அப்படியான ஓர் உத்திதான் உதயநிதி மீதான இந்தக் காழ்ப்பு வசைகள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட உடனடியாகச் சென்னை வந்தது கொஞ்சம் ஆறுதல்.  அவரிடம் வெள்ளச் சேத நிவாரணத்திற்கு முன் பணமாக 2000கோடி ரூபாய்க்குக் கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அவர் உடனடியாக மாநிலப் பேரிடர்  நிலுவைத்தொகை ரூ.900 கோடியை விடுவிப்பதாகச் சொன்னார்.  ஒன்றிய அரசின் சார்பாக வெள்ளச் சேதத்தை உரிய அதிகாரிகள் வந்து பார்த்த பின் கோரிய தொகை தரப்படும் என்றும் உறுதியளித்தார் திரு.ராஜ்நாத் சிங்.

அதற்கேற்ப ஒன்றிய அரசின் அதிகாரிகளும் சேதங்களைப் பார்வையிட சென்னை வந்தனர்.  வெள்ளச் சேதம், மீட்புப் பணிகளைப் பார்த்து தமிழ்நாடு அரசை வியந்து பாராட்டிச் சென்றனர். தாங்குமோ திமுகவின் நிரந்தர வெறுப்பாளர்களின் உள்ளம் ?

நிவாரணத் தொகை

இவர்களை நம்பி முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ஆலோசித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடும்ப அட்டை அடிப்படையில் தலா 6000 ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்தார்.  அது டிசம்பர் 17ஆம் தேதி வழங்கப்படும், டிசம்பர் 22ஆம் தேதிக்குள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிடுமென உறுதியளித்தார்.

ஒருபோதும் வாக்குத் தவறாதவர் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.  ஆனால், ஒரு ரூபாயைக் கூட ஒன்றிய அரசு அதுவரை வழங்கவில்லை.  அட, இதுவரை கூட வழங்கவில்லை.  ஆனால், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்களுக்கு டிசம்பர் 17 ஞாயிறு காலை நிவாரணத் தொகை ரூபாய் ஆறாயிரத்தைத் தன் கைப்பட வழங்கினார் முதலமைச்சர் !

சிறிதும் வெட்கமேயில்லாமல் சங்கிக் கூட்டம் நிவாரண உதவியை அளித்துக்கொண்டிருந்த ரேசன் கடைகளுக்குச் சென்று, வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்களிடம், இதில் மோடி பணம் 5400, வெறும் 600 மட்டும்தான் ஸ்டாலின் கொடுத்தது என்கிற பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு அதைக் காணொளியாகவும் ஆக்கி, சமூக வலைத்தளங்களில் பரப்பி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள முயற்சித்தது. அதனால் அதே தளங்களில் கடுமையான கண்டன  விமர்சனங்களையும் பெற்றது !

ஆற அமர வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்ற அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமிகளுக்குக் கடுமையான எதிர்ப்பு மக்களிடமிருந்து கிளம்பியது. நீங்க போட்டோ சூட்டிங் எடுக்க எங்க துயரங்கள்தான் கிடைத்ததா என்று விளாசி அனுப்பினர்.  எடப்பாடி நிவாரணமளித்த ஒரு கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு ஒரு சிறுமி இறந்துபோன கொடூரங்களும் நிகழ்ந்தன !

துவக்கத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வெள்ள மீட்புப்பணிக்காக அண்ணாமலை வாழ்த்திப் பேசினாலும் சுதாரித்துக் கொண்டு, திமுக அரசு மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கி நேரடியாக டெல்லிக்குச் சென்று அமித்ஷா, நிர்மலா சீத்தாராமனைப் பார்த்து ஒப்பித்துவிட்டு வந்தார் !

பேரழிவு

இந்தப் பக்கம் நிவாரணப் பணம் வழங்கிக்கொண்டிருந்த பொழுதில் தென் தமிழகத்தில் மழை தன் லீலையை ஆரம்பித்திருந்தது.

இந்த வாரம் தென் தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு உண்டு என்று அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை மய்யம் எச்சரித்திருந்த போதும், அது சிவப்பு எச்சரிக்கை என்கிற நிலையை அறிவிக்கவில்லை.  அதாவது டிசம்பர் 12 அன்றே மழைக்கான எச்சரிக்கைகளை அவர்களும், தனியார் வானிலைக் கண்காணிப்பாளர்களும் வழங்கிவிட்டனர்தான். ஆனால், வழக்கம்போல மழை, கனமழை, அதி கனமழை, ஒரு சில பகுதிகளில் அதீத கனமழை (20 முதல் 25 செமீ) என்கிற முன் கணிப்புகள்தாம் அவை !

17ஆம் தேதி காலையிலிருந்து கனமழை பதிவான பின்னரே Red Alert விடுத்தது இந்திய வானிலை மய்யம்.  மாஞ்சோலை எஸ்டேட் போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 30 செமீ அளவுக்கு மழை பதிவாகலாம் என்றுதான் தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்திருந்ததால், வரப்போவது பெரிய மழைதான், ஆனால், சென்னை அளவுக்கு இருக்காது, புயல் இல்லையே என்கிற பொதுப்பார்வை உருவாகியிருந்தது.  ஆனால், திடீரென்று விடப்பட்ட சிவப்பு எச்சரிக்கையைத் தமிழக அரசு உள்வாங்கி, சார்ந்த நான்கு மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆட்சியர்களுக்கு, தேவையான நடவடிக்கைளை எடுக்கக் கூறி உத்தரவுகள் பறந்தன. தாமிரபரணி கரையோரமிருந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடப்பட்டு, அவர்கள் அரசு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் !

நன்கு கவனிக்க வேண்டும்.  சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தும் அந்த நாளில் எந்த இரயில் போக்குவரத்தும் அந்த மாவட்டங்களில் தடை செய்யப்படவில்லை.  ஞாயிறு இரவு திருச்செந்தூரிலிருந்து கிளம்பிய சிறப்பு வண்டி ஒன்று, கடும்மழை காரணமாகத் திருவைகுண்டம் ஸ்டேஷனில் நிறுத்தப்படுகிறது.  தொடர் மாமழையால் இரயில்வே பாதைகளைக் காட்டாறு அடித்துக்கொண்டு போய்விட்டதாக அந்தப் பொழுதிலும் துல்லியமாகக் கூறிய லைன்மேனிற்குப் பாராட்டும் 5000 ரூபாயையும் இரயில்வே நிர்வாகம் வழங்கியது.  அந்த இரவில், கடும் மழையில், அந்த இரயில் மட்டும் ஆற்றில் கவிழ்ந்திருந்தால் பல நூறு உயிர்களும், சில நூறு கோடிகளும் இழப்பு ஏற்பட்டிருக்கும்.  அதைத் தடுத்தவருக்கு அவர்கள் பெருமனது கொண்டு ஐயாயிரம் வாரி வழங்குகிறார்கள்.  போகட்டும்.  நான் சொல்ல வருவது அதை அல்ல.

17ஆம் தேதிக்கான சிவப்பு எச்சரிக்கையை 17ஆம் தேதிதான் அறிவிக்கிறார்கள்.  அரசு இயந்திர சுழற்சியில் யாதொரு மாற்றமும் இல்லை.  அந்தளவு சகஜமான நிலையைப் போன்றே கையாளுகிறார்கள்.  ஆனால், அந்தக் கொடூர மழை, 17 இரவு மட்டுமல்லாது 18 திங்களன்று இன்னும் வேகமெடுக்கிறது.  அதற்குள் காயல்பட்டினத்தில் 60 செ.மீ மழை ஒரு நாளுக்குள் பெய்துவிட்டது இன்னும் மழை கொட்டும் என்று தனியார் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள், ஆனால் இந்திய வானிலை மைய ரேடார் படத்தில் நெல்லை, தூத்துகுடி, காயல்பட்டினத்தில் ஒரு மேகம் கூட இல்லை !

இந்த இலட்சணத்திலிருந்த வானிலை மய்யத்தைத்தான் தூக்கிப் பிடித்தார் நம் நிர்மலா சீத்தாராமன்.

எத்தனை முறை கேட்டும் ஒரு ரூபாயை விடுவிக்காத ஒன்றிய அரசை நேரில் போய் பார்த்து, தலைமை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பின்னரே பேரழிவுக்குள்ளான தூத்துகுடிக்குப் போனார் முதலமைச்சர் !

ஆனால், சேதங்களைப் பார்வையிடாமல் கூட்டணிக் கட்சிகளுடன் குலாவ டெல்லி வந்தார் என்று அசிங்கமாகப் பொய் சொன்னார் நிதியமைச்சர்.

அதிலும் அந்த ஆணவ உடல்மொழி, அலட்சியமும், தெனாவட்டும் பொங்கும் முகமொழியுடன் அவர் நடத்திய அந்த ஊடகவியாளர்களுடனான சந்திப்பு அருவருப்பான ஒன்று.

தான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிவிட வேண்டுமென்கிற வெறியில் இடைமறித்துக் கேள்வி கேட்ட நிருபர்களையும் அடக்கி அவமானப்படுத்தினார்.  இப்படி ஆட்டம் போட்ட ஆளுமைகளின் கதியே அதோகதியானது என்று வரலாறு நமக்குப் பாடமெடுக்க, நேற்றுப் பெய்த சிறுமழையில் இன்று பூத்த காளானுக்கு அது தெரியவில்லை !

நாட்டில் இத்துணை மாபெரும் இடர்கள் நிகழ்ந்திருந்த வேளையில் அதைப் பார்வையிட ஒன்றியத்தின் தலைமை அமைச்சரும் வரவில்லை.  உள்துறை அமைச்சரும் வரவில்லை, வாய் கிழியப் பேசும் நிதியமைச்சரும் வரவில்லை.  இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம், தமிழ் மண் என்றென்றும் சங்கிகளுக்கு எதிரிகளாகவும், சிம்ம சொப்பனமாகவும் இருப்பதுதான் !

அதனால்தான் நீ ஒண்ணும் ஓசில கொடுக்கல, எங்களுக்கான பங்கைக் கொடு, எங்களை உறிஞ்செடுத்து ஈட்டிய வரியைக் கொடு என்பதை பெரியார் பாணியில் ஒங்கப்பன் வீட்டுக் காசைக் கேக்கல என்றது சுருக்கென்று தைத்துவிட்டது !

75 ஆண்டுகால இந்திய மக்களாட்சி வரலாற்றில் இத்துணைக் கீழ்த்தரமான Language, body language கொண்டிருந்த எந்த அமைச்சரையும் தமிழர்கள் கண்டிருக்க மாட்டார்கள் !

பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு ஓடும் திருடன், தான் தப்பிக்க ‘திருடன் திருடன் அவனைப் பிடிங்க’ என்று முன்னால் கைகாட்டிக் கொண்டே ஓடுவதைப்போல, தங்களின் கையாலாகாத் தனத்தைக் காட்ட ஒன்றிய அரசு இதுபோன்ற ஆட்களைக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவு செய்கிறது !

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த …

ஆணவமிக்க சொற்களிடையே எத்தனை பொய்கள், எவ்வளவு பொய்கள் ?  அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போகும் முன் எங்களின் பேரிடர் மீட்புப்படை போனது, ஹெலிகாப்டர் படை போனது, 42000 மக்களை மீட்டெடுத்தோம்.  பிறகு, 5000 பேர்களை ஒன்றிய பேரிடர் மீட்புப் படையும், ஹெலிகாப்டரும் மீட்டதாகச் சொன்னார்.  எனில் மீதமிருந்த அந்த 37000 மக்களை யார் மீட்டது ?  தாமதமாகப் போன தமிழக அரசா ?  ஊடகங்களை எதிர் கேள்விகளை கேட்கவிடாது தான் மட்டும் பொய்களைக் கொட்டவேண்டும், அவற்றை அள்ளி அப்படி அப்படியே நீங்கள் ஒளிபரப்ப வேண்டுமென்றது ஹிட்லர் அரசில்கூட இருந்திருக்காது !

12ஆம் தேதியே வானிலை மய்யம் எச்சரித்துவிட்டது; நீங்கள்தான் அலட்சியமாக இருந்தீர்கள் என அடுத்த பொய்.

அம்மா உங்க வானிலை ரேடாரைப் பாருங்கம்மா, அதுல மழையே இல்லைன்னு போட்டிருக்கு, ஆனா அந்தக் குறிப்பிட்ட 18ஆம் தேதி, காயல்பட்டினம், தூத்துகுடியில் மேலும் 30செ.மீ மழை பெஞ்சிருக்கேம்மா ?  உங்க இரயிலயெல்லாம் எப்படிம்மா எச்சரிக்கைக்குப் பின்னும் இயக்குனீங்க ?

அதைவிடுங்க.  6000 ரூபாயை ஏன் கேஷா கொடுக்கறீங்க ?  பேங்க்ல போடவேண்டியதுதானே ?

ம்க்கும், பேங்க்காரன் கொள்ளை அடிக்கறதுக்கா எனப் பொதுமக்கள் கேட்டதுதான் இவருக்கான பதிலடி.

4000 கோடி மழை வடிகால் கால்வாய்களுக்காகச் செலவு செய்தேன் என்றீர்களே, பிறகேன் வெள்ளம் என்று சிறுபிள்ளைத்தனமான அடுத்த கேள்வி.

ஒரு கிமீ சாலை போட 250 கோடிகள் செலவானதாகக் கணக்குக் காட்டியுள்ளனர் என சி.ஏ.ஜி அறிக்கை இவர்களைக் கிழி கிழியெனக் கிழிக்க, அதை மறக்கடிக்க இவர்களுக்கு இப்படிக் கிட்டுகின்றன அல்பக் கேள்விகள்.

இவர்களை யார் தட்டிக் கேட்பது ?  யாருமே கேட்கமாட்டார்கள்.  வழக்குப் போட்டால் கோர்ட்டும் கேட்காது.  இயற்கையும் நம்மை வஞ்சிக்க, மக்களாட்சியின் அத்தனை தூண்களும் செல்லரித்து, நாடு ஓர் அவல நிலையிலிலுள்ளது !

வரலாறு, இவர்களுக்கு மேல் ஆடியவர்களையும், இவர்களுக்கு மேல் ஆணவமிக்கவர்களையும், இவர்களுக்கு மேல் பொய் சொன்னவர்களையும் கண்டிருக்கிறது.  காலம் அவர்களுக்கு என்ன தண்டனைகள் வழங்கியது என்பதையும் அது தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.  ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னையை மிக மிக விரைவாக மீட்டெடுத்ததைப் போல தூத்துகுடி, நெல்லை, காயல்பட்டின மக்களையும் மீட்டெடுக்கும், அவர்களுடைய கண்ணீரைத் துடைக்கும்.

நம் இடுக்கண் கண்டு நகைத்துக்கொண்டிருப்பவர்களுக்குக் காலம் பதில் சொல்லும்.

நன்றி.

rashraja1969@gmail.com