காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் விதமாகவும், வலதுசாரி எண்ணங்களை வளர்த்தெடுக்கும் விதமாகவும் அண்மைக்காலமாக இந்தியில் ஏராளமான படங்களும், வெப் சீரிஸும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இதுபோன்ற படங்களையும் வெப் சீரிஸையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை: Mukhbir, The Family Man, Bard of Blood போன்ற வெப்சீரிஸ். இந்த வெப் சீரிஸ் எல்லாம், ரா அல்லது அதுபோன்ற உளவு அமைப்புகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியாவிற்கு வரவிருக்கும் ஆபத்துகளைத் தடுக்கும் கதைக்களங்களைக் கொண்டவை. கதைகளில் லாஜிக்  எதுவும் இருக்காது. மித மிஞ்சிய தேசப்பற்றும் பாகிஸ்தான் வெறுப்பும் கலந்த கற்பனைக் கதைகள் இவை எல்லாம்.

இரண்டாவது வகை: பெரும்பாலும் பாகிஸ்தானோடு நடந்த போர்களை மையமாகக் கொண்டவை. Hindustan ki kasam (1973), Akraman (1975), Border (1997), Raazi (2018), Bhuj: The Pride of India (2021) போன்ற படங்கள் எல்லாம் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரைச் சார்ந்த கதைகளைக் கொண்டவை. 1999இல் நடந்த கார்கில் போரைப் பற்றி Shershaah (2021) என்ற படமும்,  2016இல் URI என்ற இடத்தில் நடந்த இராணுவப் போர் பற்றி Avrodh: The siege within (2020-22) வெப் சீரிஸும் வந்துள்ளன. எல்லாப் படங்களிலும்  இராணுவ வீரர்களின் தேசப்பற்றும், உயிர்த் தியாகமும்  ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்டிருக்கும்.  1971 போரில் உறுதியான நிலைபாட்டுடன் இருந்த இந்திரா காந்தியை அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் தவறவிட்ட இடங்களை எல்லாம் மறக்காமல் குத்திக்காட்டுவார்கள்!

மூன்றாவது வகை: இந்தியாவையே அதிரவைத்த சம்பவங்களைக் கதைக்களமாகக் கொண்டவை. 2001ஆம் ஆண்டு இந்திய பார்லிமெண்டில் நடந்த தாக்குதலை மையமாகக் கொண்ட Special Ops; 2012இல் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் தாக்குதல் சம்பவத்தை மையமாகக் கொண்ட Delhi Crime;  1999ஆம் ஜெஸ்ஸிகா என்பவர் டெல்லி பார் ஒன்றில் சுட்டுக் கொலை செய்தது பற்றிய No one kill Jessica என்ற படம்; 2008இல் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலை மையமாகக் கொண்ட Mumbai Diaries 26/11 போன்றவை. இந்த வெப் சீரிஸில் இருக்கும் பொதுவான தன்மைகள் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத தனங்களும், அக்கட்சி தீவிரவாதிகளை மிதமாகக் கையாளும் திறன்களும் விமர்சிக்கப்பட்டிருக்கும். வெற்றிகள் எல்லாம் ராணுவத்தின் வெற்றிகள்;  தீவிரவாத தடுப்புகள் எல்லாம் புலனாய்வு அமைப்புகளின் வீரதீரச் செயல்பாடுகள்; தோல்விகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தோல்விகள் என்ற ஃபார்முலாவில் கடந்த இருபது ஆண்டுகளாகப் படமெடுத்து வருகிறார்கள்.

இவை எல்லாம் போதாது என்று அனுபம்கேர் 1971 போரைப் பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுக்கப்போகிறாராம். அது ஏற்கனவே வந்த காஷ்மிர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரியைவிட படுமோசமாக இருக்கப் போகிறது என்று இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள். இந்த வரிசையில் The Railway Men என்ற பெயரில் மேலும் ஒரு வெப் சீரிஸ் வந்துள்ளது.

வெப் சீரிஸின் தொடக்கத்தில்,

“கண்ணுக்குக் கண்ணுன்’னு தண்டனை கொடுக்க ஆரம்பிச்சா மொத்த உலகமுமே குருடாகிடும்’ன்னு மகாத்மா காந்தி சொல்லியிருக்கார். ஆனால் பாருங்க காந்தியை ஒருத்தன் கொன்னப் பிறகு அவனுக்கும் மரணதண்டனைதான் குடுத்தாங்க. பின்ன போனது மகாத்மாவோட உயிராச்சே…!”

இப்படி ஒருவர் பேசுவதாகத்தான் கதையைத் தொடங்குகிறார்கள்.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் நாள் இரவு முதல் 3ஆம் நாள் விடியற்காலை வரை, மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்த, யூனியன் கார்பைட் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டது. விஷவாயு தாக்கியதால் ஏறத்தாழ 3700 பேர் உடனடியாக இறந்தனர்; அடுத்த ஓரிரு நாட்களில், கொத்துக் கொத்தாகப் பலர் இறந்தனர். ஏறத்தாழ 15000 பேர் விஷவாயுவுக்கு இரையாகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த 15000 மரணங்களுக்கும் காரணம் எனக் கூறப்பட்டவர் வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர். அவர்தான் யூனியன் கார்பைட் கம்பெனியின் தலைமை நிர்வாகி. ஆனால் அவர் தலைமறைவுக் கைதியாக இருந்து, அமெரிக்கா செல்வதற்குத் தனி விமானம் ஏற்பாடு செய்துகொடுத்தது இந்திய அரசு!

ஒரு கதைக்களம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக இருந்தால் அதை காந்தியிலிருந்தே ஆரம்பிப்பது வலதுசாரிகளின் வழக்கம். வரலாற்றில் சில விசயங்களை மறுக்கவே முடியாது இல்லையா? காந்தியைக் கொன்றவனுக்கு மரணதண்டனை கொடுத்தார்கள்தானே! போபால் விஷவாயு விபத்து நடந்தபோது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததுதானே! ஆனால், அன்று இருந்த காங்கிரஸ் அரசின் கோரமான மாற்றுருவம்தான் இன்றைய மத்திய அரசு என்பதை எத்தனை இளைஞர்கள் உணர்வார்கள்? குஜ்ராத் படுகொலைகள், மணிப்பூர் கலவரங்கள் போன்ற  எண்ணற்ற கலவரங்களை அரசுதான் முன்னின்று நடத்திப் படுகொலை செய்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்திருப்பார்களா?

இந்த சூழலில் 39 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்தையும், காங்கிரஸின் அலட்சிய செயல்பாடுகளையும் விஷவாயுவை செலுத்துவதுபோல இளைஞர்கள் சிந்தனைக்குள் பதிவேற்றுகிறார்கள். வெப் சீரிஸைப் பார்ப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள். அவர்களின் மனத்தில் ‘காந்தி அஹிம்சையைத்தானே போதித்தார். ஆனால் அவரைக் கொன்றவனை நாம் என்ன சும்மாவா விட்டோம். மரண தண்டனை கொடுத்துக் கொல்லத்தானே செய்தோம்.  காந்தி என்பவர் ஒருவர்தான், ஆனால், 15000 பேர் சாவுக்குக் காரணமானவனை காங்கிரஸ் அரசு என்ன செய்தது. அவனைக் காப்பாற்றி  நாடு கடத்திதானே அனுப்பி வைத்தது!’ என்ற விதையை விதைப்பது எவ்வளவு எளிது!

காந்தியைக் கொன்றவன் பெயரைக்கூட கூறாமல் வெப் சீரிஸிக்குள் அரசியலைப் புகுத்த முடியும் என்பதை எவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.  1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு நவம்பர் 12 வரை நடந்த கலவரத்தில்  சீக்கியர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். ”ஒரு மிகப் பெரிய மரம் விழுந்தால் அதனைச் சுற்றியுள்ள மண்ணில் அதிர்வு ஏற்படத்தான் செய்யும்” என ராஜிவ் காந்தி அப்போது பேசியதை இந்த வெப் சீரிஸில் அப்படியே காட்டுகிறார்கள். அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு ஒரு மாதம் கழித்துதான் போபாலில் விஷவாயு கசிந்துள்ளது. சீக்கியர் படுகொலைக்கும் போபால் விஷவாயு கசிவுக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை. என்றாலும், போபால் நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுக்குள் சீக்கியர்களைக் கொலை செய்யும் எண்ணத்துடன் காங்கிரஸ் குண்டர்கள் புகுந்தார்கள். அவர்களிடமிருந்து சீக்கியர்களைக் காப்பாற்றுவதற்குப் போராடவேண்டியிருந்தது. அதனால் ரயில் தாமதமாக வந்தது.  அந்த ரயில் மட்டும் கொஞ்சம் விரைவாக போபால் வந்திருந்தால் விஷவாயு தாக்கிப் போராடிக்கொண்டிருந்த மக்களில் பலர் இறந்திருக்க மாட்டார்கள் என்பதுபோலப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு கட்சியைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்ட வேண்டுமென்றால் அதற்குப் போதிய ஆதாரம் தரவேண்டும். அதைப்பற்றியெல்லாம் வெப் சீரிஸை எடுப்பவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்படிப் பல எதிர்ப்புகளை வாங்கிக்கட்டிக்கொண்டாலும் The Railway Men என்ற வெப் சீரிஸ் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது எண்ணவோ உண்மைதான். “A hero is an ordinary individual who finds strength to persevere and endure in spite of overwhelming obstacles” என்று Christopher Reeve ஹீரோ கதாப்பாத்திரத்தின் தன்மையைப் பற்றிக் கூறுவார். இந்தக் கதையின் முதன்மைக் கதாப்பாத்திரம் அவர் சொன்னதுபோலவே கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதாப்பாத்திரத்தில் கே கே மேனன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமாக வெப் சீரிஸ் என்றால் எட்டு அல்லது பத்து எபிஸோட்களை எடுப்பார்கள். ஆனால் தி ரயில்வே மென் மொத்தமே நான்கு எபிஸோட்கள்தான். ஒரு நீளமான இந்திப்படத்தின் அளவு. அதனால் நேரம் இருந்தால் கட்டாயம் எல்லோரும் இந்த வெப் சீரிஸைப் பார்க்க வேண்டும் என்பேன்.

தி ரயில்வே மென் வெப் சீரிஸின் கதையைப் பார்க்கும் முன் யூனியன் கார்பைட் நிறுவனத்தைப் பற்றின பின்வரும் தகவல்களைத் தெரிந்துகொள்வது கூடுதலான புரிதலைத் தரும். Union Carbide Corporation என்பது ஓர் அமெரிக்க கெமிக்கல் நிறுவனம். 1917ஆம் ஆண்டு Union Carbide and Carbon Corporation  என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் 1957இல் Union Carbide Corporation என்று பெயரை மாற்றிக்கொண்டது. Eveready, Energizer போன்ற பேட்டரிகள், பாலித்தீன்கள் ஆகியவற்றைத் தயாரித்துப் புகழ்பெற்ற நிறுவனம். இந்தியாவும் யூனியன் கார்பைட் கார்பரேசனும் இணைந்து Union Carbide India Limited (UCIL) என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

1969 ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் என்ற பெயரில் போபாலில் இதன் தொழிற்சாலை நிறுவப்பட்டது.  Carbaryl என்ற மூலப்பொருளிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளையும், களைக்கொல்லி மருந்துகளையும் இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. தொடக்கத்தில் இதற்கான மூலப் பொருள்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். 1979ஆம் ஆண்டுமுதல் மூலப்பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறார்கள்.

பூச்சிமருந்துகளைத் தயாரிப்பதற்காகப் பூமிக்கடியில் நாற்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மூன்று சிமெண்ட் தொட்டிக் கிடங்கைக் கட்டியிருக்கிறார்கள். அதில் Methylisocyanide (MIC) என்ற வாயுவை அடைத்துவைத்திருக்கிறார்கள். MIC என்பது நிலையற்ற வேதிப்பொருள். இதனை நீர்ம வெடிகுண்டு (liquid dynamite) என்று அழைக்கிறார்கள். MIC வாயுவில் ஒரு சொட்டுத் தண்ணீர் கலந்தாலும் அது விஷவாயுவாக மாறிக் காற்றில் பரவிவிடும். மிகவும் ஆபத்தான இந்த வேதிப்பொருளை மக்கள் நெருக்கம் மிகுந்த போபால் நகரத்தின் மையத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

உயிர்போகும் விசயத்தில் எச்சரிக்கையில்லாமல் செயல்பட்ட வரலாற்றைக் கொண்டது Union Carbide Corporation நிறுவனம். போபால் விஷவாயு கசிவு விபத்துக்கு முன்னரே 1927-32 காலகட்டத்தில், மேற்கு விர்ஜினியாவில் செயல்பட்ட இந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் 764 பேர் உயிரிழந்ததாக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். 1984 போபால் விபத்துக்கு முன்னரும் பலமுறை விஷவாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு ஓர் ஊழியர் இறந்திருக்கிறார். 1982 ஜனவரி மாதம் 24 பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். 1982 பிப்ரவரி மாதம் 18 பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். 1982 ஆகஸ்டு மாதம் ஒரு கெமிக்கல் எஞ்ஜினியர் இறந்திருக்கிறார்.  1983, 84 வருடங்களிலும் விஷவாயு கசிந்திருக்கிறது. அதன் பாதிப்புகள் மிகச் சிறியதாகக் கருதப்பட்டதால் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.

ஒரு மிகப் பெரிய விபத்து நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே பலருக்கும் தெரிந்திருக்கிறது. “போபால் மக்களே விழித்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஓர் எரிமலையின் அருகில் இருக்கிறீர்கள்” என அன்றைய பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி எச்சரிக்கை செய்திருக்கிறார். 1982-ஆம் ஆண்டு C.S. Tyson என்பவர், யூனியன் கார்பைட் தொழிற்சாலையை ஆய்வு செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தொழிற்சாலையைப் பற்றிய குறைபாடுகள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். MIC வாயு உள்ள தொட்டியின் வெப்பநிலை அதிகரிக்காமல் பாதுகாக்கக்கூடிய refrigeration இல்லாமலே தொழிற்சாலை சில மாதங்கள் இயங்கியிருக்கிறது. பயிற்சி பெறாத ஊழியர்கள் பலர் வேலை செய்திருக்கிறார்கள். போபால் விஷவாயு விபத்து ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடுகள் எல்லாம் முதன்மைக் காரணங்கள்.  இப்போது தி ரயில்வே மென் வெப் சீரிஸின் கதையைப் பார்க்கலாம்.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் நாள் இரவு, பயிற்சியில்லாத ஊழியர்கள் Metal disc என்னும் பகுதியைத் தண்ணீரைப் பாய்ச்சிச் சுத்தம் செய்கிறார்கள். இப்படிச் சுத்தம் செய்யும்போது குழாயின் இரண்டு பக்கங்களையும் அடைத்திருக்க வேண்டும்.  அப்போதுதான் தண்ணீர் MIC கிடங்கிற்குள் செல்லாமல் இருக்கும். ஆனால் ஊழியர்கள் அதைச் செய்யவில்லை. ஏறத்தாழ மூன்று மணிநேரம் MIC வாயுக் கிடங்கிற்குள் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது என்பது, கம்ருதீன் என்ற அந்த நிறுவனத்தின் மேலாளர் வந்து விசாரிக்கும்போதுதான் தெரிகிறது. நிறுவனத்தின் Flare tower என்னும் கருவி பழுதாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனதால், உடனடியாக வாயு வெளியேறுவதைத் தடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

நாற்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று கிடங்கிலும் வாயு நிரம்பியிருக்கிறது. உடனடியாக 611 என்ற எண்ணுள்ள கிடங்கின் இணைப்பைத் துண்டித்தால்தான், சங்கிலித் தொடர் விளைவுகளைத் தடுக்கமுடியும். அதனால் கம்ருதீன் உயிரைப் பணயம் வைத்து MIC வாயு நிரம்பியுள்ள மூன்று கிடங்குகளின் இணைப்பைத் துண்டிக்க முயற்சி செய்கிறார். 611 என்னும் கிடங்கின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் ஏனைய இரண்டு கிடங்கும் வெப்பம் தாங்காமல் வெடிக்கின்றன. அதில் அவரும் இறந்துபோகிறார். Hydrogen Cyanide என்னும் விஷவாயு காற்றில் பரவத் தொடங்குகிறது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மிக அருகில் லட்சக்கணக்கான குடிசைவாசிகள் குடியிருக்கின்றனர். பெரும்பாலும் இஸ்லாமியர்கள். அந்த நிறுவனத்தின் மிக அருகில்தான் போபால் ரயில்வே ஜங்ஷன் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம். அந்த ஜங்ஷனில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றுபவர் இஃப்திகார் சித்திக். அவர்தான் இந்தக் கதையின் பிரதான கதாப்பாத்திரம். போபால் விஷவாயு விபத்து நடக்கும் சில நாட்களுக்கு முன்பு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதை முழுமையாகச் சரிபடுத்துவதற்கு முன்பே விஷவாயு கசிந்துவிடுகிறது.

போபால் ரயில் நிலையத்திற்கு இம்மத் என்ற இளைஞன் அன்றுதான் லோகோ பைலட் (ரயில் பாதையில் உள்ள தடைகளைக் களைபவர் – ரயில் எஞ்ஜினையும் இயக்குவார்) பணியில் சேர்ந்திருக்கிறான். அவன் ஏற்கனவே யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் வேலை செய்தவன். மக்கள் எல்லோரும் காற்றில் அவித்த முட்டை வாடை வீசுவதை உணர்கிறார்கள். திடீரென ஸ்டேசனில் காத்திருக்கும் பயணிகள் எல்லாம் மயக்கமடைந்து கீழே விழுகிறார்கள். போபால் ஸ்டேசனில் பணியாற்றும் பலர் மயக்கமடைந்து விழுகிறார்கள். சிலர் இறந்தும் போகிறார்கள். எஞ்சிய சிலரும் ஸ்டேசன் மாஸ்டர் இஃப்திகாரும் ஓர் அறையில் புகுந்துகொள்கிறார்கள். அந்த இடத்தில் விஷவாயு தாக்குதல் குறைவாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

”இந்த விஷவாயு யூனியன் கார்பைடிலிருந்து வருகிறது. ஈரத்துணியை மூக்கில் கட்டிக்கொண்டால் கொஞ்சம் நேரம் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் காற்று முழுவதும் விஷவாயு கலந்துவிட்டால் நாம் இருக்கும் அறைக்குள்ளும் புகுந்துவிடும். உயிர்பிழைப்பது கடினம்” என்கிறான் இம்மத். இந்த நேரத்தில் கோரக்பூரிலிருந்து பாம்பே செல்லும் ரயில் போபாலை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.  அந்த ரயிலில் ஆயிரம் பேருக்கு மேல் வருகிறார்கள். ஒருவேளை அந்த ரயில் போபால் ஸ்டேசனுக்குள் வந்து நின்றுவிட்டால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவிடுவார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைக்கிறார் இஃப்திகார்.

இன்னொரு பக்கம் இட்டார்சி ஸ்டேசனில் ஆய்வுக்காக வந்த ரயில்வே பொதுமேலாளர் ரதி பாண்டே (மாதவன்) போபாலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருப்பதையும், அப்படியே கிடைத்தாலும் யாரும் பேசாமல் இருப்பதையும் கவனிக்கிறார். போபால் போலிஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் செய்து போபால் ஜங்ஷனில் யாரும் பேசாதது குறித்துக் கேட்கிறார். போபாலில் விஷவாயு கசிந்ததையும், ஆயிரக்கணக்கானவர் இறந்துகொண்டிருப்பதையும் போலிஸார் அவர்களுக்குச் சொல்கிறார். ரயில்வே தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக மருத்துவ உபகரணங்களோடு கூடிய ரயிலை அனுப்ப வேண்டும் என முடிவு செய்கிறார் ரதி பாண்டே.

போபால் ஸ்டேசனில் ஒரே அறையில் அடைந்திருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருப்பதை ஸ்டேசன் மாஸ்டர் பார்க்கிறார். போபால் விஷவாயு குறித்து அருகில் உள்ள ஸ்டேசனுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். கோரக்பூரிலிருந்து வரும் ரயிலைத் தடுக்க வேண்டும். இடார்சியிலிருந்து நிவாரணத்திற்கு வரும் ரயிலுக்கு ஏற்ற வகையில் ஒன்றாம் எண் இருப்புப் பாதையில் எந்த ரயிலும் வராதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனால் கோரப்பூர் எக்ஸ்பிரஸும், இடார்சியிலிருந்து வரும் நிவாரண ரயிலும் ஒரே இருப்புப் பாதையில் எதிரெதிரே வந்துகொண்டிருக்கின்றன. தகவல் தொடர்பே சுத்தமாக இல்லாமல் இருக்கிறது. அறையிலிருந்து வெளியில் வந்தால் விஷவாயுவினால் மக்கள் இறந்துபோகிறார்கள். இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கிடையில் இஃப்திகார் சித்திக்கும் அவரோடு பணியாற்றிய ரயில்வே மனிதர்களும் மக்களை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதுதான் கதை.

பல இடங்களில் நம்மைப் பதற்றத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். விஷவாயுவுக்குள் நாமே மாட்டிக்கொண்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவதுபோல உணரவைத்துவிடுகிறார்கள். திரைக்கதைக்கு உதவும் என்று ஒரு திருடன் கதையையும், மாதவன், ஜூகி சாவ்லா போன்றோரையும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களால் திரைக்கதைக்குப் பெரிய பலம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இஃப்திகார் சித்திக் வேடத்தை ஏற்ற கே கே மேனன் படம் முழுவதையும் தன் தலையில் சுமந்துகொண்டு சென்றுள்ளார். பொதுவாக இந்தி வெப் சீரிஸ் என்றால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவார்கள். இந்த வெப் சீரிஸில் உயிரைக் கொடுத்து மக்களைக் காப்பாற்றுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று காட்டுகிறார்கள். எந்த இடத்திலும் இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்திரிக்கவில்லை என்பது அதிசயம்தான்.

போபால் விஷவாயு விபத்து பற்றி ஏற்கனவே பல படங்கள் வந்திருக்கின்றன. Bhopal Express (1999), Bhopal Nightmare (டாகுமெண்டரி) (2011), Bhopal: A prayer for rain (2014) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. போபால் விஷவாயு விபத்து பற்றி இதுவரை ஆங்கிலத்தில் நான்கு நாவல்கள் வந்திருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் 2017ஆம் ஆண்டு The Ministry of Utmost Happiness என்ற நாவலை எழுதியுள்ளார். இதுவரை நடந்த தொழிற்சாலை விபத்துகளில் மிக மோசமான விபத்தாக யூனியன் கார்பைட் தொழிற்சாலை விஷவாயு விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பேரழிவு நிகழ்ந்த பிறகு, பிற்காலத்தில் அந்தப் பேரழிவின் நிகழ்வுகள் எல்லாம் பலருடைய பார்வையில் பல்வேறுவிதமாகப் பதிவாகும். அந்த வகையில் த ரயில்வே மென் என்ற இந்த வெப் சீரீஸ் ரயில்வே துறையில் பணியாற்றியவர்கள் பார்வையில் பதிவாகியுள்ளது. இது வரவேற்கக்கூடிய கலைப்படைப்பு என்றாலும், இந்தப் படைப்பு நேர்மையாக நிகழவில்லை என்று பலரும் பதிவு செய்துள்ளார்கள்.

போபால் விஷவாயு விபத்தின்போது ரயில்வே ஜங்ஷனில் குலாம் தஸ்தகிர் என்பவர்தான் துணைக் கண்காணிப்பாளராக இருந்திருக்கிறார். கொடுமையான விஷவாயுக் கசிவுக்கிடையில் போபாலுக்கு வரக்கூடிய ரயில்களை எல்லாம் வரவிடாமல் செய்திருக்கிறார். ஸ்டேசனில் இருந்த மக்களை முடிந்தவரை பாதுகாத்திருக்கிறார். அன்றைய தினம் அவர் இறக்கவில்லையே தவிர, அந்த விஷவாயுவின் தாக்கத்தினால் பிற்காலத்தில் அவருக்குத் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. 1996ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு இறக்கும்வரை தொண்டைப் புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டிருக்கிறார்.  விஷவாயு தாக்கத்தினால்தான் அவருக்குப் புற்றுநோய் வந்தது என்றும் அதனால்தான் அவர் இறந்தார் என்றும் இறப்புச்சான்றிதழில் பதிவு செய்திருக்கிறார்கள். இன்று மாபெரும் ஹீரோவாகக் கொண்டாடப்படும் அவருக்கு,  அரசாங்கம் எந்தவொரு கௌரவமும் கொடுத்துச் சிறப்பு செய்யவில்லை. ரோட்டரி கிளம்பில் ஒர் விருதும், ரயில்வே கோட்டத்தில் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான்!

குலாம் தன் பிள்ளைகளுக்கு இந்த விஷவாயு விபத்துக் குறித்து நிறைய கதைகளைச் சொல்லியிருக்கிறார். குலாமின் கதையைப் படமாக்க Small box என்ற நிறுவனம் குலாமின் இளைய மகனிடம் ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் படமாக்கும் முன்பாக Yash Raj Films (YSF) Entertainment படமாக்கிவிட்டது. இப்போது ஸ்மால் பாக்ஸ் நிறுவனமும், குலாமின் மகனும் YSF Entertainment மேல் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். “நாங்கள் குலாமின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கவில்லை. போபால் விஷவாயு விபத்து நிகழ்ந்த அன்று நடந்த நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் என்ன தகவல்கள் கிடைத்ததோ அதைத்தான் படமாக்கியிருக்கிறோம்” என்று Yash Raj Films நிறுவனமும் இயக்குநரும் கூறுகிறார்கள்.

ஒரு மிகப் பெரிய நிறுவனம் முட்டாள்தனமாகச் செயல்படும்போது அதனோடு போராடுவது மிகக் கடினம். குலாமினுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை யாரும் படமாக்கமாட்டார்கள். ஒரு சாதாரண மனிதன் விபத்து நடந்த அன்று செய்த நாயகச் செயல்பாடுகள்தான் கதை. அந்தக் கதை பொதுவெளியில் கிடைத்தாலும் குலாமின் குடும்பத்தார்தான் அந்தக் கதைக்கு உரியவர்கள். அவர்களிடம் முறைப்படி உரிமை வாங்கியிருக்க வேண்டும். படத்தில் குலாம் தஸ்தகிர் என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்.

ஆனால் என்ன செய்வது! மனிதாபிமானத்தைப் பற்றிப் படம் எடுக்கும் இயக்குநர்களும் நிறுவனங்களும், மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதில்லை என்பதுதான் சினிமாவின் வரலாறாக இருக்கிறது!

sankarthirukkural@gmail.com