1945. பெர்லின் நகரத்துக்குள் இரஷ்யாவின் சிவப்பு ராணுவம் நுழைந்தது.
இரஷ்ய இராணுவம் நுழைந்த இடங்களிலெல்லாம் பெண்கள் பாலியல் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் என்று ஹிட்லரின் கொள்கைப் பரப்புச் செயலாளரான கோயபெல்ஸ் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். கோயபெல்ஸ் கூறுகிறார் என்பதாலேயே அது பொய்யாகத்தான் இருக்கும் என்று பெர்லின்வாசிகள் நம்பிக்கொண்டிருந்தனர்.
கோயபெல்ஸும் தன்னை அறியாமல் உண்மை பேசக்கூடும் என்பதைப் பிறகுதான் உணர்ந்தனர்.
ரஷ்யா, பெர்லினுக்குள் நுழைந்தபோது வயதான கிழவர்களும், மீசைகூட முளைக்காத பாலகர்களும் மட்டும்தான் அங்கே ஆண்களாக இருந்தார்கள். மற்றவர்கள் போரில் இறந்திருந்தார்கள். அல்லது உயிர் பிழைக்க அஞ்சி எங்கோ ஓடித் தப்பியிருந்தார்கள்.
எங்குக் காணினும் பெண்கள், பெண்கள், பெண்கள் மட்டும்தான்.
இராணுவம் எனும் கூட்டு மனித இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து போரில் வெற்றிகொள்ளும் நாடுகளில்
வெறியாக எதைச் செய்யுமோ அதைத்தான் அங்கும் செய்தது. எந்தவொரு நாடுமே போரில் தோற்றதுமே உடனடியாக இழப்பது, அந்தந்த நாட்டுப் பெண்களின் கற்பைத்தான். ஜெர்மன் கதறியது.
அது தோற்றுப்போன ஹிட்லருடைய ஜெர்மனியின் கதறல் என்பதாலேயே உலகம் சட்டை செய்யவில்லை. இரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய பெர்லின் நகரப் பெண்களின் எண்ணிக்கை தோராயமாக ஒரு இலட்சத்து முப்பதாயிரம்.
தங்கள் பெண்கள் மானமிழந்தார்கள் என்பதை எந்த ஜெர்மானியனும் வெளியே சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டான். வேதனைப்பட்டான். எனவே யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கத்தான் முயற்சித்தான்.
வரலாற்றில் மறக்கப்பட்ட – மறைக்கப்பட்ட அந்தக் கொடூரங்களைத்தான் ‘எ வுமன் இன் பெர்லின்’ என்கிற நூல் பதிவு செய்திருக்கிறது.
தானும், தன்னைச் சுற்றியிருந்த பெண்களும் இரஷ்யஈராணுவத்திடம் சிக்கி, என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை டயரிக்குறிப்புகள் மாதிரி அந்நாளில் பதிவு செய்திருக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண். நோட்டுப் புத்தகங்களிலும், துண்டுச் சீட்டுகளிலும் எழுதப்பட்ட குறிப்புகள்தாம் அவை. ஒரு புத்தகமாகவோ அல்லது கட்டுரை வடிவிலோ இல்லாமல், மனம் போன போக்கில் கண்டதை, கேட்டதை எல்லாம் எழுதி வைத்திருந்தார்.
கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பயந்த பெர்லின் பெண்கள், இராணுவத் தளபதிகளையும் கேப்டன்களையும் அனுசரித்து, தங்கள் சேதாரத்தைக் குறைத்துக் கொண்டதாகத் தகவல்.
அந்நாளில் பெர்லின் பெண்கள் ஒருவரை ஒருவர் தெருவில் சந்திக்க நேர்ந்தால், “உன்னை எத்தனை பேரு, எத்தனை தடவை?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொள்ளக்கூடிய அவலச் சூழல் இருந்ததாகவும் இக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஹிட்லரைப் பழி தீர்க்கும் வண்ணமாக ஜெர்மானியப் பெண்களை இரஷ்யஈராணுவம் இப்படிப் படுமோசமாக நடத்தியிருக்கிறது.
‘அசாதாரணமான இச்சூழலால் என் தலைக்குள் பறக்கும் பூச்சிகளை எப்படி வெளியேற்றுவது என்று தெரியவில்லை. அதனால் எழுதினேன்’ என்று சொன்ன அந்த anonymous எழுத்தாளர், இவற்றை எழுதியதற்கான நியாயத்தையும் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் கொடூரமான மறைக்கப்பட்ட பக்கங்களுக்கு இரத்த சாட்சியாக இந்நூல் இன்றும் விளங்குகிறது.
தான் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலேயேதான் இந்நூலையும் பதிப்பித்தார் அந்த anonymous. அவர் நிச்சயமாகப் பெண்தான். ‘சம்பவம்’ நடைபெறும்போது வயது முப்பதுகளின் தொடக்கத்தில் என்பதை நூலில் இடம் பெற்றிருக்கக் கூடிய சம்பவங்களின் வாயிலாக அனுமானிக்க முடிகிறது.
1954இல் இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்ததாகவும், ‘மானம் போகிறது’ என்று ஜெர்மனியில் தடை செய்யப்பட்டு மொத்தமாகப் பிரதிகள் எரிக்கப்பட்டதாகவும் செவிவழித் தகவல். இதை யாரும் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் 1959இல் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்று கொஞ்சம் தைரியமான முயற்சியில் இறங்கியது. எழுதப்பட்ட குறிப்புகளை அப்படியே எடிட்டிங் இல்லாமல் பச்சையாக ஜெர்மன் மொழியிலேயே அச்சிட்டு ஜெர்மனியிலேயே விற்பனைக்குக் கொண்டுவந்தது.
இம்முறை நூலை வாசித்தவர்கள் பலத்த மவுனத்தை வெளிப்படுத்தினார்கள். நூல் குறித்து நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எந்தக் கருத்துமில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் அடைந்த அவமானம் குறித்து உள்ளுக்குள் கொதித்தார்கள். ஆனால், உலகம் இதற்காகத் தங்களைக் கேவலப்படுத்திப் பார்க்குமோ என்று வெட்கித் தலைகுனிந்தார்கள். எனவே அவசர அவசரமாக இந்நூலை மறக்க விரும்பினார்கள். இப்படியொரு நூல் வெளிவந்திருப்பதையே தாங்கள் அறியாதவர்களாகக் காட்டிக்கொண்டார்கள்.
நூல் முழுக்க விற்றுவிட்டது. அந்நூலை மீண்டும் ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்க ஏராளமான ஜெர்மனி சாராத பதிப்பகங்கள் முன்வந்தன. ஆனால், முகம் காட்ட விரும்பாத, தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத எழுத்தாளர் ஏனோ அந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்தார். அவருக்கு என்ன கட்டாயம் நேர்ந்ததோ தெரியவில்லை. ஜெர்மனியின் மானத்தை வாங்கிவிட்டார் என்று அவரை ஏராளமானோர் தூற்றியிருக்கலாம்.
ஐம்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து 2003ஆம் ஆண்டு மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூல் விற்பனைக்கு வந்தது. நூலை எழுதிய ‘முகமற்ற எழுத்தாளர்’ இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இது சாத்தியமானது என்றார்கள். அடுத்த இருபது வாரங்களுக்கு ஐரோப்பாவில் அதுதான் நெ.1 பெஸ்ட் செல்லராகவும் அமைந்தது.
ஜென்ஸ் பிஸ்கி என்கிற ஜெர்மானிய இலக்கியவாதி இந்த நூலை ஆராய்ந்து, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை வைத்து எழுதியவர் யாரென்று குத்துமதிப்பாகக் கண்டுபிடித்துப் பெயரை வெளியிட்டார்.
மார்த்தா ஹில்லர்ஸ் என்கிற பெண் பத்திரிகையாளர்தாம் அவர் என்று உறுதியாகச் சொன்னார். 2001இல் மார்த்தா, தன் 90ஆவது வயதில் காலமானார். 1945இல் அவருக்குச் சரியாக 34வயதாகி இருந்தது. ஜென்ஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்குச் சொன்ன லாஜிக் எல்லாமே மார்த்தாவுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. திருமணத்துக்குப் பிறகு மார்த்தா சுவிட்சர்லாந்துக்குக் குடியேறினார். அங்கிருந்துதான் ஜெர்மனிப் பதிப்பு வெளிவந்தது என்பதெல்லாம் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கண்டுப்பிடிப்பால் அங்கே பெரிய இலக்கிய சர்ச்சை ஏற்பட்டு, புத்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக்கப்பட்டது. இந்த சர்ச்சையே அந்நூலை மீண்டும் பதிப்பிக்க வேண்டிய அவசியத்துக்கும் கொண்டுசென்றது. 2005இல் அடுத்த பதிப்பு வெளிவந்தது. அடுத்தடுத்து ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் உச்சமாக 2008இல் ஜெர்மன் மொழியிலேயே திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலும் ‘எ வுமன் இன் பெர்லின்’ என்கிற பெயரிலேயே வெளியானது.
எழுதியவர் மார்த்தா என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுவிட்டாலும் இன்னமும் இந்நூல் எழுத்தாளரின் பெயரை anonymous என்றே பதிப்பகங்கள் குறிப்பிடுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றி இருந்தாலும் மார்த்தாவின் ஒரிஜினல் பெயரில் ஒரே ஒரு நூல் கூட வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.