நான் ‘சமத்துவம்’ எனும் வார்த்தையை கடுமையாக வெறுப்பதற்கு ஒரு காரணம் அது பாசாங்கான, ஏற்றத்தாழ்வை பாவிக்கும் ஒரு சொல் என்பது. அது சில அடிப்படை அலகுகளைத் – பொருளாதாரம், பாலினம், சாதி, இனம், மதம் – தாண்டி ‘சமத்துவத்தை’ கருத அனுமதிப்பதில்லை. அதாவது சமத்துவம் என்பதே சமத்துவத்துக்கு எதிராக உள்ளது. அது நாம் மிக சமத்துவமாக இருக்கிறோம் எனும் நம்பிக்கை கொள்ளவும் மிக ஏற்றத்தாழ்வுடன் நடந்துகொள்ளவும் அனுமதிக்கிறது. அதற்கு இதற்கு முன்பிருந்த நம்மிடம் கருணையும் கரிசனமுமான பண்பாடு மேலானது எனத் தோன்றுகிறது. (அதையும் நான் சாராம்சப்படுத்தவில்லை, அதிலும் போதாமைகள் இருந்தன தாம்.)
சமத்துவம் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு கதையாடலை, மொழியை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தந்த மொழியில் பேசினால் மட்டுமே மக்கள் இன்று அதைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவார்கள். பாலின பேதம் என்றால் புரியும். சாதி வேறுபாடு என்றால் புரியும். பாலின பேதத்துக்குள்ளே இதுவரை பேசப்படாத பேதங்களைச் சொன்னால் அதை காதில் வாங்கவே மாட்டார்கள். சாதி, மத பேதங்களுக்கு இது குறைவாகப் பொருந்தும் என்றாலும் அங்கும் நாம் பல பிரச்சினைகளின் போது காது இருந்தும் கேளாதவராகவும் கண்ணிருந்தும் பாராதவராகவும் மாறுகிறோம் என நினைக்கிறேன்.
பொத்தாம் பொதுவாக மானுடம் வெல்லும் என்று கோருகிறார்களே, புத்தகங்கள் எழுதுகிறார்களே இவர்கள் சொல்லும் மானுடம் என்பதுதான் என்ன என்று நான் யோசிப்பதுண்டு. அது அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. அதனாலே அவர்கள் தங்களுக்கான கண்ணாடிகளை அணிந்துகொண்டு அதில் தெரியும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி மட்டும் பேசி அதுவே உலகப்பொதுவானது என நம்புகிறார்கள்.
இதைப் புரிந்துகொள்ள மாற்றுத்திறனாளிகள் அனுதினமும் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வு ஒரு சிறந்த உதாரணம். நான் ஒரு வீட்டுக்குள்ளோ கழிப்பறைக்குள்ளோ கடைக்குள்ளோ போக முடியாதபடி அதன் அமைப்பு இருக்கிறதெனில் “என்னால உள்ளே வர முடியல, என்னால வர முடியாதபடி கட்டி வச்சிருக்கீங்க” என்று சொன்னால் பெரும்பாலான மக்களின் காதுக்கே அது விழாது. “ஒரு மாற்றுத்திறனாளியாக என்னால உள்ளே வர முடியல, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக கட்டிட அமைப்பை வச்சிருக்கீங்க” என்று சொன்னால் சட்டென திரும்பிப் பார்ப்பார்கள். பதற்றமாவார்கள். யோசிப்பார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால் முதலாவதில் நான் மனிதனாகவும், இரண்டாவதில் மனிதன் மறைந்து நான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருக்கிறேன். நான் ஒரு அரசியல் உயிரியாகிறேன். அரசியல் உயிரியாக நான் போராளியாகிறேன். அது அவ்வளவு சுகமான ஒன்றல்ல. ஒரு அரசியல் உயிரியாக நான் மொழியைக் கொண்டு மொழியின் கட்டுமானங்களை மோதி உடைக்க வேண்டியிருக்கிறது. நான் எப்போதும் சண்டை போடும் மனநிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. அது என்னைப் பதற்றமானவனாக, கோபமும் விடமும் நிறைந்தவனாக மாற்றுகிறது.
சமகாலத்தில் நான் பார்க்கும் முக்கியமான பிரச்சினை அரசியல் கூருணர்வு நம்மை எதிரெதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டியவர்களாகவும், அதனாலே நிம்மதியற்றவர்களாகவும் மாற்றுகிறது என்பது. நடிகர் நெப்போலியனின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. அவருக்கு கல்வி, சிகிச்சை, நடைமுறை தேவைகள் என எல்லா விசயங்களிலும் பல இடர்பாடுகள். ஒன்று இங்குள்ள கட்டிடங்களில் சறுக்குப்பாதை எனும் ரேம்ப் வசதி இல்லை. அடுத்து, அவருக்கான பிரத்யேகத் தேவைகளை யாரிடமும் சொல்லிப் புரியவைக்க முடியவில்லை. அதனாலே தன் மகனுக்கான அடிப்படை வசதிகளை இயலபகவே கொண்ட அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து போய் வாழ்வதாக நெப்போலியன் ஒரு பேட்டியில் சொன்னார். அப்போது எனக்கு எழுந்த கேள்வி ஒரு முன்னாள் மக்கள் பிரதிநிதியாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக இருந்த நெப்போலியனால் ஏன் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து தன் மகனுக்கும் அவரைப் போன்றோருக்கும் இந்தியாவில் கொண்டு வர முடியவில்லை, அவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தும் தன் மகனின் ஒவ்வொரு சிறுதேவைக்கும் ஓடி ஓடி கெஞ்சக் கூடியவராக இந்நாட்டில் அவர் ஏன் இருந்தார் என்பதே. இதற்கான பதிலை என்னால் ஓரளவுக்கு என் அனுபவத்தில் இருந்து காண முடிகிறது – நம் நாட்டில் என்னதான் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தி மாற்றங்களைக் காண்பது சுலபமல்ல.
ஏனென்றால் நாம் படிப்பறிவும், தொழில்மயமாக்கமும் பெற்று நாகரிகமடையத் துவங்கிய பிறகு ஒரு சமூகமாகவே ‘பரந்துபட்ட பார்வையற்றவர்களாக’ மாறி வருகிறோம். நாம் எந்தளவுக்கு அதிகமாக முன்னேறுகிறோமோ அந்தளவுக்கு எல்லா விசயங்களிலும் குறுகிக் குறுகிப் போகிறோம். அறிவை எடுத்துக்கொண்டால் நிபுணத்துவம் எனும் பெயரில் ஒரு சிறு புள்ளியைத் தாண்டி விரிய மறுக்கிறோம். பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்வோர், போராடுவோர் மதம் சார்ந்த ஒடுக்குமுறையை கண் திறந்து பார்க்கவோ வாய் திறந்து பேசவோ மாட்டேன் என்கிறார்கள்.
பொருளாதார சமத்துவம் பற்றி பேசுகிறவர்களைப் பாருங்கள் – 1910இல பெர் கேபிடா இன்கம் ஒரு தனிநபருக்கு எவ்வளவு இருந்துது தெரியுமா, அதுவே நீங்கள் 1960களில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் சொல்லக் கூடிய பெர் கேபிடா இன்கம்மோட ஒப்பிட்டா நாம எந்த மாதிரி பெரிய வளர்ச்சியை, எல்லா அலகுகளிலும் அடைஞ்சிருக்கோமுன்னு புரியும் என்று கண்ணை உருட்டி உருட்டி மூக்கால் பேசுவார்கள், ஆனால் அந்த காலகட்டத்திலும் இன்றும் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசவோ கருத்தில் கொள்ளவோ மாட்டார்கள். ஒரு குழந்தையின் பிணத்தைத் தூக்கி வந்தால் கூட அதாவதுங்க 1932ல இந்த டெட் பாடியோட பேர் கேபிட்டா இன்கம் என்னண்ணு பார்த்தீங்கன்னா என்று பேசுவார்கள். ஐயோ பாவம் என ஒரு நொடி இரக்கப்பட மாட்டார்கள். இப்படி ஒரு பக்கம் சமத்துவம், மானுடவாதம், புளியம்சாதம் எனப் பேசுபவர்கள் தாம் இருக்கிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் பொதுமக்களும் இப்படி குழல் பார்வை (tunnel vision) கொண்டவர்களாக மாறி வருகிறார்கள். இது தான் நம் யுகத்தின் மிகப்பெரிய துயரம் என நினைக்கிறேன்.
கல்வியாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒன்று கல்வியைக் கொண்டு பணமீட்டுவது எப்படி, அரசாங்கத்துக்குத் தேவையான ஆவணங்களை உற்பத்தி செய்து சமர்ப்பித்து தர மதிப்பீட்டைப் பெற்று அதைக் கொண்டு விளம்பரப்படுத்தி மேலும் மாணவர்களையும் லாபத்தையும் பெறுவது எப்படி என்பதைத் தாண்டி யோசிக்க மாட்டார்கள், அல்லது அவர்கள் இடையே சமத்துவம் உரிமை எனப் பேசுகிறவர்களிடம் போனால் பாலினம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்து பல பகுப்புகளுக்குள் நின்று மட்டுமே சிந்திப்பர்கள். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையின் அடிப்படைத் தேவைகளை இவர்களிடம் கோரினால் அதைக் கேட்கும் மனநிலையோ புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வோ இருக்காது. முக்கியமாக உங்களிடம் பேசும் மொழியே அவர்களிடம் இருக்காது. ஒரு டவுன் சிண்டிரோம் குழந்தை இருந்தால் அவரை ஒரு பள்ளிக்கோ பொதுவிடத்திலோ கொண்டு போகும் போது உங்களுக்கு வரும் பிரதான சவால் உள்கட்டமைப்பு மட்டுமல்ல, அக்குழந்தை யார், அவருக்கான தேவைகள் என்னவென இவர்களுக்கு உணர்த்துவதே.
இன்று நாம் அதற்கு பெரிய பெரிய மருத்துவ விளக்கங்கள், விதிமுறைகள், சட்டத்திருத்தங்கள், நடைமுறைத் தேவைக்கான ஏற்பாடுகளை அளிக்க வேண்டும், அப்போது மட்டுமே அக்குழந்தை நம் உலகினுள் அனுமதிப்போம் என்கிறோம். அதாவது நாம் ஒரு பெரிய ராணுவ சோதனை சாவடியாக மாறி வருகிறோம். சரியான ஆவணங்களும் அடையாள அட்டைகளும் கைரேகையும் இன்றி யாரையும் கடத்தி விட மறுக்கிறோம். அவர் ஒரு குழந்தை என்று சொல்லிப் பாருங்கள், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தலின் காலத்தில் நாம் இப்படி எந்திரங்களாக மாறி வருகிறோம். எந்த ஒரு வித்தியாசமான விசயத்தை, மனிதரை அனுமதிக்கும் முன்பும் நூறு முறை யோசித்துக் கவலைப்படுகிறவர்களாக மாறி வருகிறோம்.
நான் இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன் – நான் ஒரு குழந்தையாக ஒரு உயர்தர கான்வெண்டில் படித்தேன். அங்கே ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை மற்றமையாகக் கண்டு நிறைய யோசித்து தமக்குப் பிரச்சினை வரக் கூடாதே எனக் கவலைப்பட்டு ஓராண்டுக்குள் என்னை டிஸி கொடுத்து அனுப்பிவிட்டார்கள். நான் அடுத்த தரத்தில் குறைவான ஒரு மத்திய வர்க்கப் பள்ளிக்குப் போனேன். அந்த நிர்வாகத்துக்கு மாற்றுத்திறனாளி என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் இக்குழந்தைக்கு கூடுதல் கவனம் வேண்டும் என்று மட்டும் தெரியும், அதனால் அங்கு பாசாங்குகள் இன்றி என் தேவைகளை உணர்ந்து நடத்தினார்கள். அங்கிருந்து மேல்நிலைப்படிப்புக்கு அரசுப்பள்ளிக்கு நான் சென்ற போது அவர்கள் என்னை மாற்றுத்திறனாளியாக ஏற்கவோ அடிப்படை வசதிகளைப் பண்ணித் தரவோ தயாராக இல்லை என்றாலும் அதனாலே என்னை கூடுதல் சமமாக நடத்தினார்கள். உள்கட்டமைப்பு வசதிகள் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் அதிக நாகரிகமும் வசதிகளும் படைத்த இடங்களில் உங்களை உடனடியாக மற்றமையாக்கி ஒதுக்கிவிடுகிறார்கள், உங்கள் பிரச்சினைகளுக்கு காதுகொடுக்கவோ மறுக்கிறார்கள், தனிமைப்படுத்துகிறார்கள் என்கிறேன்.
அதாவது மற்றமையினருக்கான ஒரு கதையாடலை நாம் உருவாக்கியதும் அவர்கள் அதைக் கொண்டே மற்றமையினரை மனதளவில் வெளியேற்றி விடுவதற்கான எல்லா மறைமுக உளவியல் நெருக்கடி நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். பல விதிமுறை தடைகளைக் கண்டுபிடிப்பார்கள். உங்களால் எங்களைப் போன்றோருக்குப் பிரச்சினை வருமென தம்மை பாதிக்கப்பட்டோராக கட்டமைத்து ஒருவித குற்றவுணர்வை மற்றமையினருக்கு ஏற்படுத்துவார்கள். இதை அந்த இடத்தில் இருப்பவர்களே துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்.
சட்ட விதிமுறைகளும் சமத்துவ எதிர்பார்ப்புகளும் அதிகமாகும் போது, மற்றமை சார்ந்த அரசியல் வலுப்படும் நம் ஊரில் மக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து செல்லவோ அவர்களை எதிர்கொள்ளாதபடிக்கு தம்மை கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்துக் கொள்ளவோ முயல்கிறார்கள், “உள்ளே வராதே, இங்கு உனக்கு இடமில்லை, ஏனென்றால் இங்குள்ளவர்களுக்கு அதனால் பல பிரச்சினைகள் வரும், நீ உனக்கான இடத்துக்கு செல்” என்கிறார்கள். அதனால் தான் நெப்போலியன் தன் மகனை அழைத்துக் கொண்டே அமெரிக்காவுக்கு சென்று குடியுரிமை வாங்கி செட்டில் ஆனார். ஏனெனில் அங்கு அவருக்கு இப்பிரச்சினைகள் இல்லை. மொழிக்கட்டுமானங்கள் ஏற்படுத்தும் தடைகள், சமூகப் பகைமை, ஒதுக்கி தனிமைப்படுத்திப் போகும் மனப்பான்மை அங்கு இல்லை.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய தேசங்களில் மற்றமையினரை சட்டவிதிகள் மற்றும் கட்டமைப்புகள் வழியாக உள்ளே இழுப்பது ஒரு முதலீட்டிய கொள்கையாக உள்ளது. மற்றமையினர் என்னதான் சிறுபான்மையினர் என்றாலும் பெரும்பான்மையினரிடம் ஒரு நல்லியல்புகள் குறித்த பிம்பத்தை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகளும் கறுப்பினத்தவர்களும் உள்ளிட்ட மற்றமையினர் அங்கு ஒரு குறியீடாக செயல்படுகிறார்கள். (மெக்ஸிக்கர்கள் கூட வந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர் மட்டுமே இன்னும் அங்கு அவர்களின் குறியீட்டு மற்றமை வகைமைக்குள் வரவில்லை என நினைக்கிறேன்.) இந்தியாவில் மிக மிகச்சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தாம் இந்த கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கொள்கை வந்ததும் மற்றமையினரை அங்கீகரிப்பதற்கான தடைகளைப் பொருட்படுத்தாமல் நிர்வாகம் உடனடி முற்போக்கு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அவர்களுடைய முதலீட்டிய கொள்கை ஒரு முற்போக்கு மனத்தை உற்பத்தி பண்ணுகிறது. அதிகாரம் உள்ளவர்களிடம் இந்த மனம் மட்டும் இருந்தால் ஆயிரம் எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் இது இப்படி ஆயிரம் நிபந்தனைகளுக்கு உட்பட்ட மாற்றமாக வரக் கூடாது. ஏன் இப்படி? ஏனெனில் இந்திய பண்பாட்டுக்குள் மற்றமை வெறுப்பு ஆழமாக வேரோடி இருக்கிறது. இது இந்தியாவுக்கே உரித்த ஒரு தனியான பண்பாட்டுப் பிரச்சினையாக இருக்க வேண்டும்.
உலகின் ‘தலைசிறந்த ஜனநாயக நாடு’ என நாம் சிறப்பிக்கிற இந்தியாவின் பாராளுமன்றத்தை மீள்சீரமைப்பு செய்து உருவாக்கிய போது 2015 உலகளாவிய அணுக்க நெறிமுறைகளின் படியே கட்டினார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான தடையற்ற கட்டமைப்பு வசதி கொண்டதாகக் கோரினார்கள். ஆனால் நடைமுறையில் நிலைமை வேறு – பாராளுமன்றத்தின் ஒரு பகுதி மட்டுமே மாற்றுத்திறனாளிகளை அனுமதிப்பது. அது மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைக் கருதி உருவாக்கிய பகுதிகளில் கூட மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு பல தடைகள் உள்ளன என ஷஷாங்க் பாண்டே ஸ்குரோல் இணையதளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றி குறிப்பிடுகிறார். அண்மையில் இந்திய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்ற போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது சக்கர நாற்காலியில் இருந்து தூக்கி நிறுத்தி வாக்களிக்க வைக்கும் நிலை ஏற்பட்டது.
ஏனெனில் வாக்குப் பதிவு எந்திரம் அமரும் நிலைக்கு மேலே இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்துகே இந்நிலை எனில் சட்டமன்றங்களில் இன்னும் கேவலமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இது ஒரு துவக்க நிலைப் பிரச்சினை போகப் போக சரியாகி விடும் என நான் நம்பவில்லை. நடைமுறைகளைப் பெயரளவில் பின்பற்றி தாம் நியாமமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அக்கறை நடைமுறை பயனுள்ள மாற்றங்களைக் கொண்டு வருவதில் நம் மக்களுக்கு இருப்பதில்லை. ஏனெனில் மாற்றுத்திறனாளிகளை ஒருவித மற்றமையராகவே பார்க்கிறார்கள். உ.தா., இவ்வளவு தீவிரமாக நெறிமுறைகளைப் பின்பற்றி ஆவணப்படுத்தியவர்கள் ஏன் பலவிதமான மாற்றுத்திறனாளிகளை நாடாளுமன்றத்துக்குள் அழைத்து வந்து தணிக்கை செய்யக் கேட்கவில்லை, ஏன் இந்நடைமுறை எல்லா அரசு, தனியா கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு அவசியமான ஒன்றாக இல்லை? ஏனெனில் அந்தளவுக்கு இடமளிக்கத் தேவையில்லை என நினைக்கிறார்கள்.
இதை நாம் வெறுமனே சறுக்குப்பாதைகளையும், தடையில்லாத கட்டிடங்களையும், பலவித மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகளை பண்ணித் தருவதன் வழியாகவும் மட்டும் சரி செய்ய முடியாது. ஏனென்றால் தம்மையறியாமல் இதற்கும் எல்லா விதமான மற்றமையருக்கு தரப்படும் இடங்களை எதிர்த்து செயல்படும், ‘ஒத்துழையாமை’ செய்யும் உப-மன விழைவு பரவலாக இருக்கிறது. நீங்கள் மூன்று கழிப்பறைகளை இன்று கட்ட வேண்டும், ஒன்று ஆண்களுக்கு, இன்னொன்று பெண்களுக்கு, மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கு. அந்த கட்டிடத்தில் பெண்களே வராதிருந்தாலும் அந்த கழிப்பறையை பரமாரிக்காமல் பூட்டாமல் வைத்திருப்பார்கள். ஏனென்றால் சுத்தம் செய்கிற பெண்ணாவது ஒருவேளை பயன்படுத்தக் கூடும், ஏனென்றால் அதில் பாலின கூச்சம், கற்பு சார்ந்த அச்சம் செயல்படுகிறது. (கோயில் என்றால் அங்கு கடவுள் வராவிடினும் மிக மிக சுத்தமாகப் பராமரிப்பார்கள்.) ஆனால் மாற்றுத்திறனாளிக்கான கழிப்பறையில் ஒரே மாதத்தில் தவறாமல் பெருக்கும் துடைப்பம், வாளி உள்ளிட்ட பொருட்களை முதலில் கொண்டு வைப்பார்கள். அடுத்த சில மாதங்கள் அங்கு தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் வராவிடில் அந்த கழிவறையை மூடிவிடுவார்கள் அல்லது பராமரிப்பாகாமல் விட்டுவிடுவார்கள்.
இதை நான் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2017 வரைப் பார்த்திருக்கிறேன் (இப்போதும் நிலைமை மாறியிருக்காது என கணிக்கிறேன்). இதற்கு எந்த நடைமுறை அவசியமும் இருக்காது. எதற்கு இப்படி மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஒரு தனியிடம் எனும் கேள்வி நிர்வாகத்தில் இருந்து வேலை செய்வோர் வரை பரவலாக இருக்கிறது. ஒருவேளை மாற்றுப்பாலினத்தாருக்கு ஒரு கழிப்பறையை தனியாக அமைத்தாலும் அங்கும் இதுதான் நடக்கும். சறுக்குப்பாதைகளை எடுத்துக் கொண்டால் அதைப் பொதுமக்கள் பயன்படுத்துவது சரியானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பெரும்பாலான இடங்களில் பொருட்களை ஏற்றுவதற்கான கட்டமைப்பாக அதை மாற்றி மெல்ல மெல்ல பழுதாக்கி விடுவார்கள், பாதைக்கு முன்னால் ஒரு பெரிய வாகனத்தைக் கொண்டு நிறுத்துவார்கள், பொருட்களை அடுக்கி வைப்பார்கள், செடித்தொட்டிகளை வைப்பார்கள், மக்கள் வந்து போகும் படிக்கட்டில் அமர்ந்து இடையூறு பண்ணக் கூடாது என நினைப்போர்கள் இந்த சறுக்குப்பாதைகளில் தாராளமாக அமர்ந்து அரட்டை அடிப்பார்கள், சில நேரங்களில் சறுக்குப்பாதை முடியும் இடத்தில் உள்ள கதவை மூடி வைப்பார்கள், எவ்வளவு முறைகள் சொன்னாலும் அதைப் பூட்டி வைப்பது அநீதி எனப் புரிய வைக்கவே முடியாது.
இதில் கவனித்தோமானால் சமத்துவத்துக்கான வசதிகளையும் பண்ணி விட்டார்கள், அதை நுட்பமாக மறைமுகமாக காலி பண்ணியும் விட்டார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இவர்களிடம் நீங்கள் போய் மாற்றுத்திறனாளியியல் மொழியில் பேச வேண்டும், அப்போது அதிர்ச்சியாகி தடைகளை அகற்றுவார்கள், அந்த கணமே அதைச் சொன்ன நீங்கள் மற்றமையாகி விடுவீர்கள். மானுடத் தன்னிலையற்ற அரசியல் தன்னிலையாக, ஒரு விழுமியத்திற்கான குறியீடாக மாறி விடுவீர்கள். அது தரும் அவமான உணர்வு இன்னும் கொடுமையானது. அதற்குப் பதிலாக படிகளில் ஊர்ந்தோ யார் கையைப் பற்றிக்கொண்டு சிரமப்பட்டு ஏறியோ போய்விடலாம் என நான் நினைப்பேன். மீண்டும் சொல்கிறேன்: நமக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது, பிரச்சாரத்தின் வழியாக இதை மாற்றலாம் என நான் கூறவில்லை. விழிப்புணர்வு அதிகமாக ஆக அது மக்களை விரோதம் கொள்ளவும், அரசியல் சரித்தன்மை, நியாயம், சமத்துவம் போன்ற மொழிக்கட்டுமானங்களுக்குள் போய் பதுங்கிக் கொள்ளவும், உங்களிடம் இருந்து ஓடித் தப்பிக்கவும் வைக்கிறது. இது ஒரு சமூக உளவியல் பிரச்சினையாக இப்படி இருக்கிறது.
நான் ஒரு மாற்றுத்திறனாளியாக கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியாத சவாலை பெரிதாக நினைக்கிறேன். இந்தியா முழுக்கவே 99% கடைகளிலும் படிகளை வைத்திருக்கிறார்கள், கடைகளை மின்தூக்கியின்றி மாடியில் வைத்திருக்கிறார்கள், கதவுகளைத் தள்ளித் திறந்தபடி நுழைவது சிரமமாக இருக்கிறது, பொருட்களை தூக்கிக் கொண்டு குறுகின வழியில் கூட்டத்தின் நடுவே நடந்து என் வண்டியை அடைவது அச்சமூட்டுகிறது. ஓரளவுக்கு நடக்க முடிகிற எனக்கே இப்படியெனில் சக்கர நாற்காலியில் நிரந்தரமாக இருப்பவர்கள்? பார்வைப்புலன் மாற்றுத்திறனாளிகள்? அவர்களை ஏன் கடைகளில் நாம் காண்பதே இல்லை என சமத்துவம், சமநிலை, சப்பாத்திக் குறுமா என முழக்கமிடுவோர், மண்ணில் மானுடம் வென்றது, அனைவரும் சமம் என கண்ணீர் ததும்பப் பேசிக்கொண்டே இருப்போர் ஒரு நொடியாவது உங்கள் வாழ்க்கையில் யோசித்திருக்கிறீர்க்ளா? ஏனென்றால் நீங்கள் அவர்களை உள்ளே வரவே முடியாதபடி பார்த்துக் கொள்கிறீர்கள். ஏசு வந்து விட்டார் என்பதற்கு ஈடாக சமத்துவம் வந்துவிட்டது, இதோ இதோ நம் பக்கத்தில் வந்துவிட்டது எனக் கூவும் நீங்கள் தான் நாங்கள் உங்கள் பக்கத்தில் கூட வரவில்லை என்பதை யாரும் பார்க்காமல் தடுக்கிறீர்கள்.
எனக்கு நீண்ட காலமாக இதற்குத் தெரிந்த தீர்வு கடைக்காரர்களிடம் நட்பை பேணுவது தான். சமூகநீதியும், நெறிமுறைகளும், அரசியல் விழிப்புணர்வும் தராத அணுக்க உரிமையை அன்பும் நட்பும் மனசாட்சியும் சாதித்து விடுகிறது. அவர்களாக வந்து எனக்குத் தேவையான பொருட்களைத் தந்து பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள், கூட்டம் அதிகமான நேரத்தில் கூட கடைப்பையனை அனுப்பி எனக்கு தேவையானதை அளிக்கிறார்கள். கனிவான விசாரிப்பும், அன்பு பாராட்டலும், புன்னகையும் உங்கள் அரசியல் கதையாடல்களால் சாதிக்க முடியாததை சாதித்துத் தருகிறது. இந்த நாட்டில் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் வேறு வழியே இல்லை எனத் தோன்றுகிறது. அரசியல் பேசினால் எங்களுக்கு எதிராக அதே அரசியலைக் கொண்டு கதவை அடைத்து விடுவார்கள்.
அண்மையில் நான் மதம், சாதி உள்ளிட்ட சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், பாலின அசமத்துவம் பற்றி விவாதங்களில் இதே போக்கை வேறு விதத்தில் காண்கிறேன்: தான்-மற்றிமை எனும் இருமையைக் கொண்டே சமத்துவ கதையாடல்கள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. தகவல் பரவலாக்கம் மிக அதிகமாகி விட்ட காலத்தில் இது சமத்துவத்துக்கு எதிரான மனநிலையை விதைக்கிறது. பாதிக்கப்பட்டோரிடம் விரோதி நீயே என நாம் உரையாடலின் மறுமுனையில் உள்ளோரிடம் திரும்பத் திரும்ப சொல்லும் போது அவர்கள் தாமே உண்மையில் பாதிக்கப்பட்டோர் என ஒரு எதிர்-கதையாடலை தூக்கி எதிர்த்தரப்பை நோக்கி வீசுகிறார்கள். நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், மறுக்கவில்லை, ஆனால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம், நீங்கள் பாதிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல, நாங்கள் பாதிக்கப்பட்டதற்கும் நீங்கள் காரணமல்ல என ஒரு தந்திரமான விவாதப் புள்ளியைப் போய் அடைகிறோம்.
கடும் வெறுப்பு எல்லா தளங்களிலும் பரவுகிறது, பொதுவெளியிலும் ஒருவிதமாகவும் தனி உரையாடல்களிலும் அதற்கு எதிராகப் பேசும் செயல்படும் விதம் உடைபட்டவர்களாக மக்கள் மாறி வருகிறார்கள். தலித்தியம் பேசினால் ‘ஒடுக்கும்’ சாதியினர் காயப்படுகிறார்கள், சிறுபான்மை மதத்தினருக்காகப் பேசினால் பெரும்பான்மை மதத்தோர் காயப்படுகிறார்கள், பெண்களுக்காகப் பேசினால் ஆண்கள் காயப்படுகிறார்கள், உலகமே ஒரு பெரும் போர்க்களம் ஆகிறது. மக்கள் தம்மைப் பாதுகாக்க கண்ணாடிப் பொறிகளுக்குள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தாம் அல்லாத எவரும், எதுவும் தெரியாது, யார் குரலும் கேட்காது. இது சமூக வலைதளங்களில் மட்டுமல்ல நேரடியான உரையாடல்களிலும் தோன்றி யாரும் யாருடனும் பேச இயலாத முட்டுசந்து நிலையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைகளை எதிர்கொள்ள விருப்பமில்லாமல் எதிர்வுகளுக்குள் அவற்றை அடைத்து சுற்றி சுற்றி ஓடித் தப்பிக்கும் போக்காகவே இதைப் பார்க்கிறேன்.
இதிலிருந்து மீள சிலர் அரசியலற்றவர்களாக மாறுகிறார்கள். மீண்டும் அதே அரசியலுக்குள் வருகிறார்கள். இப்படி ஒரு தீவிர அரசியல் நிலையில் இருந்து தீவிர அரசியலற்ற நிலைக்கு சென்று ஊசலாடுகிறோம்.
“தாம் அல்லாத எதுவும், எவரும் நரகம் தான்” என முன்பு சார்த்தர் சொன்னது இன்று மேலும் உண்மையாகி விட்டது. இதற்கான தீர்வும் அவர் சொன்னதில் தான் இருக்கிறது. சார்த்தரின் No Exit நாடகத்தின் முடிவில் மேற்சொன்ன வரி வருகிறது. நாடகம் இறந்து போனவர்களின் ஆவிகள் ஒரு அறையை அடைகின்றன. அங்கு அவர்களுக்கு உறங்க முடியாது, கண்களை இமைக்க முடியாது, அங்கு தம்மைப் பார்க்கவோ தம்மைப் பிறர் எப்படிக் காண்கிறார்கள் எனக் கண்டு அறியவோ வழியில்லை, ஏனெனில் அங்கு கண்ணாடி இல்லை. இப்போது அவர்கள் தம் பாவங்களை நினைவில் கொண்டு குற்றவுணர்வு கொள்வது, பரஸ்பரம் அறிவது, குற்றம் சாட்டுவது, காயப்படுத்துவது என மற்றமையை வெறுப்பதன் வழியாக, மற்றமையால் தாம் வெறுக்கப்படுவதால் கிடைக்கும் தன்மதிப்பீட்டைக் கொண்டு தம்மையே வெறுப்பதன் வழியாக கடும் துயருறுகிறார்கள். அதாவது அவர்கள் தம்மில் இருந்து மற்றமையின் பிரதியாக்கத்துக்குள், மற்றமையின் பிரதிபிம்பத்துக்குள் போய் சிக்கிக் கொள்கிறார்கள். இதை மற்றமைக்காக-இருத்தல் (being-for-others) என சார்த்தரின் இருத்தலியல் தத்துவப்படி புரிந்து கொள்ளலாம். மற்றமைக்காக-இருத்தல் இருபதாம் நூற்றாண்டின் ஒரு பெரிய ஆன்மீக நெருக்கடியாக மேற்கத்திய கிறுத்துவ உலகில் இருந்தது. ஏழைக்காக கண்ணீர் விடுவது, அதனாலே மனதினுள் ஏழையை வெறுப்பது, அதைத் தன்வெறுப்பாக மாற்றுவது, மற்றமை மீதான இரக்கத்தை தன்னிரக்கமாக்கி அதனாலே தன்னுடன் இருக்க முடியாதவராக மாறுவது – இதை நீட்சேயும் “இவ்வாறு சொன்னார் ஜாருதுஷ்டிரா”, “நன்மை தீமைக்கு அப்பால்” ஆகிய நூல்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மற்றமையின் ஒரு பிரச்சினை அது ஒரு சாராம்சமான கருத்தின் எதிர்வின் பகுதியாக உள்ளது என்பதே. ஒருவரின் முகத்தைப் பார்த்து தெய்வாதீதமானவர் அவர் என்று நினைத்தாலும் துஷ்டனைப் போல இருக்கிறார் என்று கருதினாலும் அங்கு நான் தெய்வாதீதமாக இல்லை அல்லது நான் தெய்வாதீதமாக இருக்கிறேன் எனும் பொருள் வருகிறது.
அதை நான் அவரை என்னுடைய இருமையின் ஒரு பகுதியாக வைத்து மட்டுமே கூற முடியும். அதனாலே அவர் எனக்குத் தேவைப்படுகிறார். நீட்சே இப்பிரச்சினை சாக்ரடீஸ், பிளேட்டோ உள்ளிட்ட சாராம்சவாத தத்துவவாதிகளிடம் இருந்து ஆரம்பித்து கிறித்துவத்தில் முழுமை கொண்டது என நினைத்தார், அதனாலே அவர் கிறித்துவ நம்பிக்கைகளான பரிவுணர்ச்சி, மற்றமையிடம் அன்பு பாராட்டுவது, அதன் மூலம் சொர்க்கத்தை அடைவது ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தார். “உண்மையின் மதிப்பின் பிரச்சினையானது நமக்கு முன்பே வந்துவிட்டது – அல்லது நாமே அப்பிரச்சினைக்கு முன்பு வந்தோமா? நம்மில் எவர் இங்கு ஈடிபஸ்? யார் ஸ்பின்ஸ்? (…) எதிர்மறையில் இருந்து எப்படி ஒன்று தோன்ற இயலும்? உதாரணமாக, பிழையில் இருந்து உண்மை எப்படித் தோன்ற முடியும்? அல்லது ஏமாற்றும் மனத்திட்பத்தில் இருந்து உண்மைக்கான மனத்திட்பம்? அல்லது தன்னலத்தில் இருந்து தன்னலமற்ற செய்கைகள்? அல்லது காமத்தில் இருந்து துறவியின் தூய்மையான சூரியனைப் போன்ற பார்வை? இத்தோற்றங்கள் அசாத்தியமானவை; இவற்றை கனவு காண்போர் முட்டாள்கள்.” (பக் 200, “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்”). இந்த எதிர்வு எனும் பொறியில் இருந்து நவீன மனிதனுக்கு விடுதலையே இல்லையா என்பதே சார்த்தரும் நீட்சேயும் (அவர்களுடன் ஹைடெக்கரும்) எழுப்பிய வினா. யுத்தங்களினால் பிளவுண்ட, நவீனத் தொழில்நுட்பத்தால், எந்திரமயமான நகர வாழ்க்கையால் தனிமைப்பட்ட இருபதாம் நூற்றாண்டு மனிதர்களுக்கு தமது சுயம், இருப்பு குறித்து எழுந்த அடிப்படையான வினா அது. அந்த வினாவுக்கு சமகால உலகில் பெரும் முக்கியத்துவம் தோன்றுகிறது – ஏனென்றால் முன்னெப்போதையும் விட மற்றமையினால் உண்டாகும் மதிப்பீட்டை வைத்து ‘அரசியல் விளையாட்டை’ ஆட முயல்கிறோம். இருத்தலின் பிரச்சினை இன்று அரசியல் பிரச்சினையாகி விட்டது.
சார்த்தர், நீட்சே, ஹைடெக்கர் ஆகியோர் வழங்கிய தீர்வான எதிர்வுக்கு அப்பால், சாராம்சத்துக்கு அப்பால் ஒருவர் தனது இருத்தலில் தன்னை அறிவது நமது அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கு இப்போதைக்கு முழுமையாகப் பொருந்தாது என்பதால் ஒருவர் தன்னுடைய தன்னிலையை மற்றமையில் மூழ்கடித்து தானும் மற்றமையும் அல்லாமல் போகிற முயற்சியே மேலானது என நினைக்கிறேன். வெறும் உள்கட்டமைப்பு மாற்றங்களால் நம் நாட்டில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு மறையப் போவதில்லை. தலித்துகள், இஸ்லாமியர், மாற்றுப்பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் என மற்றமையை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய மதிப்பீட்டின் வழி நம்மை நோக்கி சுயமதிப்பீட்டை செய்வது நமக்கு தாங்கவொண்ணாத வேதனையைத் தருகிறது. சாதியத்தின் அடிப்படையான விளங்கும் ஒரு மனநிலை இது. அதனால் நமக்கு எதிரே வருபவர் ஒரு தலித்தோ இஸ்லாமியரோ மாற்றுத்திறனாளியோ மாற்றுப்பாலினத்தவரோ அல்ல, அவரை எதிர்கொள்ளும் நாமும் அத்தகையோர் அல்ல என அவருடன் இதயபூர்வமாக இணைய நாம் முயல வேண்டும், அதை நோக்கிய கல்வி போதனை, பிரச்சார முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். நமது சமூகத்துக்கு இந்த ஆன்மீக சிகிச்சை இன்று தேவைப்படுகிறது. (ஆன்மா இல்லையென்றாலும் ஒரு வசதிக்காக அதையே பயன்படுத்துகிறேன்.)
பிரிட்டீஷ் காலனிய ஆதிக்க காலத்தில் இருந்தே மதத்தின் மீது செலுத்திய ஆர்வத்தை நாம் ஆன்மீகம் மீது செலுத்தவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னரோ ஒரு பக்கம் அறிவியல், இன்னொரு பக்கம் மதப்பிரிவினைவாதம் என நாம் முழுக்க புறவயமாக மாறி விட்டோம், இதனால் ஏற்பட்ட ஆன்மீக சீரழிவின், ஆன்மீகப் புற்றுநோயின் விளைவுகளை இன்று சந்தித்து வருகிறோம். கனிவையும் அன்பையும் அதன் வழியாக சகிப்புணர்வையும் சகமனிதரிடத்து மீட்க வேண்டிய ஒரு காலத்தில் இருக்கிறோம். ஆகையால் நாம் ஒரு சறுக்குப்பாதையை ஒரு கட்டிட அமைப்பில் கோரும் போது அதில் செல்லும் மனிதனின் சுயத்தை நமது சுயத்தையும் பற்றி விவாதிக்கும், அவனை உள்ளார்ந்து அணைத்து அவனுடன் இன்மையாகிற மாயத்தைப் பற்றி பேச வேண்டிய யுகசந்தியில் நிற்கிறோம். மதத்திற்கு வெளியே ஒரு ஆன்மீகத்தை சிந்திக்க வேண்டிய, மற்றமைக்கான இருத்தலை அல்ல, மற்றமையின் பிரதிபலிப்பாக நமது மற்றமையை அல்ல, மற்றமையே இல்லாத ஒரு இருத்தலைப் பற்றி பேச வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.
உங்களுக்கு ஒரு கவலை இருக்கிறதெனில் அதை யாரிடமும் சொல்லக் கூடிய காலம் ஒன்று இருந்தது, நான் அக்காலத்தில் இருந்து வந்தவன் தான், அன்று படிக்காத எளிய மக்களுக்கு இப்போதுள்ள அரசியல் கதையாடல்கள் தெரியாது, ஆனால் ஒருவர் துன்பப்படுகிறார் எனில் அதை இதயத்தால் பார்க்க முடிந்தது, பேசினால் கேட்கவும், முன்னால் போய் நின்றால் பார்க்கவும் தலைப்பட்டார்கள். கவலைப்படாதே என தோளில் தட்டிக்கொடுக்கவோ கூட வந்து நிற்கவோ முடிந்தது, அவர்களிடையே யோசிக்கத் தலைப்படுவோருக்கு இவர் யார், எங்கிருந்து வருகிறார், ஏன் இதைச் சொல்கிறார், இவருக்கு என்ன வேண்டும் என பரந்துபட்டு யோசிக்க நேரமும் மனதுக்குள் இடமும் இருந்தது. அன்றும் படித்த மத்திய வர்க்கத்திடம் இன்றுள்ள குழல் பார்வை இருந்தது, அது இன்று மக்களிடம் வெகுவாக ஒரு புற்றுநோயாகப் பரவி வருகிறது, இதயத்தால் சிந்திக்க முடிகிற ஆற்றலை அது அழித்து விட்டது. நம் ஊரில் சட்ட விதிகளும் அரசியல் சிந்தனைகளும் அல்ல கொஞ்சம் களங்கமின்மையே தேவையாக உள்ளது. அதுவரை இவ்வளவு தந்திரமானவர்கள் மத்தியில் எப்படி வாழ்வது எனத் தெரியவில்லை.
உசாத்துணை:
Pandey, Shashank. “How Accessible is the New Parliament Complex for the Disabled?” Accessibility. Scroll.in. 04-05-2020. இணையவழிக் கட்டுரை.
Nietzsche. “Basic Writings of Nietzsche”. Tr. and Ed. Walter Kaufmann. The Modern Library. New York. அச்சுநூல்.