கவிதைகள்
1.
புகைப்படத்தருணங்களில் எப்போதும்
தானறியாமல் தலைசாய்த்து நிற்கும் கவி
என்ன கவிதை எழுதுவாள்?
அவள் சாய்ந்துவிட்ட
தன் உலகத்தை உற்றுப்பார்க்கிறாள்.
புயலில் சிக்கி வீழ்த்தப்பட்ட மரமெனத்
தலை அசைக்க மறுக்கிறாள்.
மரங்களும் விளக்குக் கம்பங்களும்
சாய்ந்திருக்கும் தன் உலகம்
பழுதாகிச் சாய்ந்து நின்றுவிட்டதைச்
சாயாத பிற உலகங்கள்
வழக்கத்தை விட
வேகமாகச் சுழல்வதைச்
சாய்ந்தபடியே கண்ணுறுகிறாள்.
புகைப்படம் எடுக்கையில்
தானறியாமல் தலைசாய்த்து நிற்கும் கவி
சாய்ந்த தன் உலகத்தைக்
கைகளால் நிமிர்த்தப்பார்க்கிறாள்
கால்களால் எத்துகிறாள்
அதைச் சரிசெய்ய இயலாதபோது
ஏழு பிரபஞ்சங்களுக்கு அப்பால்
கருந்துளையினுள் எப்படிப் புதைப்பாள்?
2.
எப்போதும் ஒருபுறம் மட்டும்
தலைசாய்ந்து நிற்கும் கவியின் வானத்தில்
நிலவு தலைக்குப்புற சாய்ந்திருக்கிறது
நட்சத்திரங்கள் ஒரு முனை இழுபட்டுக்
கோணலாகி மின்னுகின்றன
உதயமும் அஸ்தமனமும்
சாய்ந்த வானத்தில் நீள்வட்ட ஆரஞ்சுப்பழத்தால்
நிகழ்த்தப்படுகின்றது.
பறவைகள் பொம்மலாட்டக் கயிற்றால்
அங்கும் இங்கும் இழுக்கப்படுவதென
அலைக்கழிக்கின்றன.
மிச்சமிருக்கும் பொருள்கள்
சாயத்துவங்குவதைச்
சாய்ந்த மரத்தில் சாய்வாக
அமர்ந்திருக்கும் பறவையுடன்
தன் சாய்ந்த தலை கொண்டு
கண்ணுறுகிறாள் அக்கவி.
பின்
மெல்ல அவள் சாய்ந்து நடக்கும்
சாய்வான பாதைகள்
சரிவுகளில் முடிவதை
அதில் அவள் உருண்டு உருண்டு
கவி புனைவதைச்
சாய்வான மலைகள் பார்த்துக்கொண்டிருந்தன.
3.
தானறியாமல் தலையை 45 டிகிரி கோணத்தில்
சாய்த்து நிற்கும் அவளை
ஊரில் திடீரென
அரசியல்வாதியாக்கத் திட்டமிட்டார்கள்.
இடப்புறம் சாய்ந்த அவள்
கழுத்துக்குக் கட்சிகள்
சிவப்பு ரோஜா மாலைகளைப்
பரிசளித்தன.
மேடைப் பேச்சுகளில்
அவள் தலை நேராகாமல் பார்த்துக்கொள்ள
ஆள்கள் நிறுத்தப்பட்டார்கள்.
எப்போதும் சாய்ந்தபடியே இருக்க
அவளைப் புகைப்படம் எடுப்பதே
காரணமெனக் கண்டுகொண்டபின்
எப்போதும் புகைப்பட வெளிச்சத்தில் மூச்சுமுட்ட
மேடை விட்டு இறங்கி
மகிழுந்து ஏறும் வரை
அவளைப் படமெடுத்தார்கள்.
வீட்டின் பால்கனியில்
எப்போதேனும்
வானத்தைப் பார்க்க அவள் நிமிர்கையில்
சாய்வை நேராக்க
அவள் மிகுந்த பிரயத்தனம் எடுத்தாள்.
அப்படி ஒரு நாள்
முயல்கையில்தான்
வானம் மின்னலை வெட்டி
அவளை இப்பிரபஞ்சத்துக்கு அறிமுகப்படுத்தியது.