எழுத்தாளர் ஜெயகாந்தனை நான் சந்தித்ததில்லை; பார்த்திருக்கிறேன். காலச்சுவடு சார்பாகக் கோவையில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் வந்து பேசினார். அங்கே பார்வையாளனாக இருந்தேன். அப்படி அவர் பேசிய வேறு சில நிகழ்ச்சிகளிலும் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். சந்திக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியதில்லை. தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டு ஒன்றில் கேரளத்தில் நடைபெற்ற சாகித்ய அகாதமிக் கூட்டத்தின்போது அவருடன் ஒரே அறையில் தங்க வாய்த்தது என்றும்  ‘ஏறுவெயிலை’ வாசித்திருந்தமைக்கான குறிப்புகள் அவர் பேச்சில் தென்பட்டன என்றும் சுகுமாரன் ஒருமுறை சொன்னார். 1991இல் வெளியான என் முதல் நாவலான அதற்குச் சுகுமாரன் முன்னுரை எழுதியிருந்தார். ஜெயகாந்தனைச் சந்தித்திருந்தால் நாவலைப் பற்றிய அவர் கருத்தை அறிந்திருக்கலாமோ என்னவோ. பெரும் எழுத்தாளுமையின் அபிப்ராயம் என்னவாக இருந்தாலும் அது முக்கியம்தான்.

பெருமீசை வைத்திருப்பவர்கள், மீசையை முறுக்கி விட்டிருப்பவர்கள் ஆகியோர் அருகில் செல்ல எனக்குப் பயமுண்டு. ஜெயகாந்தனின் மீசையை இப்போது பார்க்கும்போது அப்படி ஒன்றும் பெரிய மீசையில்லை என்றுதான் தோன்றுகின்றது. இருந்தாலும் மீசையைத் தொட்டுப் பார்த்து மகிழ ஒரு சிறுவனை அவர் அனுமதித்திருக்கவும் கூடும். அதுமட்டுமல்ல, யாரையும் தேடிப் போய்ச் சந்திப்பதில் எனக்கு ஏனோ ஒரு கூச்சம். எதேச்சையாக நடந்தேறும் சந்திப்புக்களின் மூலம் அறிமுகம் ஆவதே என் இயல்புக்கு உகந்தது. எனினும் ஜெயகாந்தனைத் தேடிப் போய்ச் சந்தித்துப் பேசியிருக்கலாம் என்னும் ஏக்கம் இப்போது உண்டாகிறது. அவரது ‘சபை’ பற்றிப் பலரும் எழுதியதன் மூலம் ஏற்பட்டிருக்கும் மயக்கம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

எழுத்தாளரைச் சந்திப்பது இயலாத காரியமல்ல, அவரது எழுத்து வழியாகத் தொடர்ந்து சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு அமையத்தானே செய்கிறது என்று சமாதானம் கொள்கிறேன்.  வாசகராக மட்டுமல்ல, ஆசிரியராகவும் இருந்ததால் சாத்தியம் எனக்கு அதிகம். அவர் எழுத்துகள் என் வகுப்பறை உரையாடலில் எடுத்துச் சொல்ல அவ்வப்போது பயன்படும் கைச்சரக்கு.  கலையுலக அனுபவங்களில் ‘பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் நடிகர்’ பற்றிய அவரது கேலியை அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு, ஓர் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க நேரும் தமிழாசிரியச் சூழலில் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ என்னும் தலைப்பைப் பற்றியும் அதை ஒட்டி ஜெயகாந்தன் எழுதியிருக்கும் முன்னுரையின் காரத்தையும் சொல்லாமல் இருக்க  முடிந்ததில்லை.

ஒரு நூலின் முன்னுரையில் தன்னை  ‘முரண்பாடுகளின் மூட்டை’ என்று சொல்லிவிட்டு அடைப்புக்குள் ‘A bundle of contradictions’ என்றும் கொடுத்திருப்பார். ஏனோ அந்தச் சொல்லாடல் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இரண்டு கருத்துகளின் மோதலாக அமையும் அவர் கதைகளில் பலவற்றை எடுத்துச் சொல்ல முடிந்திருக்கிறது. பெரும்பாலான கதைகளில் ஒரு விழுமியத்திற்கு ஆதரவு, எதிர் எனப் பாத்திரங்களை உருவாக்கியிருப்பார். பாத்திரங்கள் கருத்துகளின் உருவகமாகவே உலவுவர். ஒரு விழுமியத்திற்கான எதிர்ப்பை, மீறலை நிகழ்த்தும் பாத்திரத்தின் பக்கம் நிலைப்பாடு எடுத்து அவர் நிற்பார். அப்பாத்திரம் எழுப்பும் கூர்மையான கேள்வி கதையின் முடிவில் வரும்.

கணவருக்குத் தெரியாமல் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்துவிடுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்சம் என்பது இன்றைய கோடிக்குச் சமம். விஷயம் அறிந்த கணவர் மகிழ்ச்சி அடையவில்லை. பணம் முக்கியம் என்றால் என் பெயரைச் சொல்லக் கூடாது; பணம் வேண்டாம் என்றால் அதைக் கிழித்தெறி என்பதுதான் அவர் சொல்லும் முடிவு. ‘நானா பணமா? ஏதோ ஒன்றுதான். எது வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்’ என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார். பணத்திற்கும் கணவருக்கும் இடையில் அல்லாடும் பெண்ணின் கேள்வி வாசகரை நோக்கி வருகிறது:

‘ஆனால் இந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா… சிவ சிவா… உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா. அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ஆனால் அவர் அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார். நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?’

லாட்டரியைச் சூதாட்டம் என்று எண்ணும் கருத்துருவத்துக்கும் அதன் பலனை அனுபவிக்க விழையும் நடைமுறை உணர்ந்த கருத்துருவத்துக்கும் மோதல். முதல் உருவம் தெளிவானது. இரண்டாம் உருவம் குழப்பமானது; முதல் உருவத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மீறலை நிகழ்த்த வேண்டிய இடத்தில் இருக்கிறது. வாசகர் பெரும்பாலும் மீறலின் பக்கமே நிற்பார்கள் என்பது ஜெயகாந்தனின் எண்ணமாக இருந்திருக்கும். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. அதனால்தான் கேள்வியோடு கதையை முடித்திருக்கிறார். அவரது கதைகள் இப்படி எதிர்நிலைகளில் நிறுத்தி விவாதிக்கும் தன்மையிலானவை.

அதனால்தான் வகுப்பறைக்கு வசதியான எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது என் தீர்மானம். அவர் கதைகளில் ஏதாவது ஒன்று பாடத்திட்டத்தில் எப்போதும் இருக்கும். வகுப்பறையை விவாதத்திற்குள் இழுத்து உரையாட வாகானதாகவே அக்கதை அமைந்திருக்கும். ஆகத் தொழில் ரீதியாக அவரைச் சந்தித்துக் கொண்டேதான் இருந்திருக்கிறேன் என்னும் உணர்வுநிலையில்தான் இருக்கிறேன். 2015 ஏப்ரல் 8 அன்று அவர் இறந்தார். அவர் இறப்புக்குச் சில நாள்கள் முன்கூட அவருடன் அப்படி ஒரு சந்திப்பும் உரையாடலும் எனக்குச் சாத்தியமாயின.

மாதொருபாகன் சர்ச்சை காரணமாகச் சொந்த ஊரிலிருந்து  மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி 2015 பிப்ரவரியில் சென்னை வந்து சேர்ந்தேன். இளநிலைப் பட்ட வகுப்புப் பொருளியல் மாணவர்களுக்குப் பொதுத்தமிழ் வகுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாகப் பொருளியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களைப் பற்றி எனக்கு நல்லபிப்ராயம் உண்டு. பிற பாடம் எதுவும் கிடைக்காத காரணத்தால் இந்தப் பாடங்களில் சேர்ந்திருப்பார்கள்.  படிப்பு வராதவர்கள் என்று பள்ளியில் முத்திரை குத்தப்பட்டவர்கள் அவர்கள். அதே முத்திரை கல்லூரியிலும் தொடரும்.

ஆனால், பிற பிரிவுகளில் பயிலும் மாணவர்களை விடவும் அவர்கள் அன்பானவர்களாக இருப்பார்கள்.  மதிப்பெண் நோக்கத்தில்தான் பாடம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். நடத்தும் எந்த விஷயத்தையும் எளிமையில் தொடங்கிக் கடினத்தை நோக்கிச் செல்ல முடியும். இந்தக் காரணங்களால் வகுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வகுப்பில் மாணவர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். ஒழுங்குக்குள் அவர்களைக் கொண்டு வருவது கடினம். ஆகவே அப்பாட வகுப்புகளுக்குச் செல்லத் தமிழாசிரியர்கள் விரும்ப மாட்டார்கள். ஆத்தூர் அரசுக் கல்லூரியில் வரலாற்று மாணவர்களுக்கும் நாமக்கல் கல்லூரியில் பொருளியல் மாணவர்களுக்கும் சில பருவங்களில் வகுப்பெடுத்த அனுபவம் எனக்குண்டு.

மாநிலக் கல்லூரியிலும் சக ஆசிரியர்கள் சிலர் ‘அந்த வகுப்பா உங்களுக்குப் போட்டிருக்குது? புதுசா வந்தவருக்கு எதுக்கு அந்த வகுப்பப் போட்டாங்க? சமாளிக்கறது கஷ்டமாச்சே’ என்று என் மேல் இரக்கப்பட்டார்கள். பல துயர்களோடு நானும் இருந்தேன். ஆகவே பொருளியல் வகுப்புக்கு மிகவும் மகிழ்ச்சியோடு சென்றேன் என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இருபது ஆண்டு வகுப்பு எடுத்த பிறகும் ஒரு குழப்பம். இப்போதுதான் முதல்முதலாக வகுப்புக்குச் செல்வது போல மனத்தில் படபடப்பு.

கல்லூரிக்குச் சென்று சேர்ந்த முதல் நாள் முதல் வகுப்பே பொருளியல் மாணவர்களுக்கானது. பாடத்திட்டம் என்னவென்றும் தெரியாது. ‘திட்டம் போட்டே அந்த வகுப்ப உங்களுக்குக் குடுத்திருக்கறாங்க’ என்று கோபப்பட்ட நண்பர்களிடம் ‘பாத்துக்கறன்’ என்று சொல்லிச் சென்றேன். மாணவர்களிடம் பேசுவதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? மாணவர் மீது கொண்ட தீவிரமான நம்பிக்கை என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை.

வகுப்பில் ஐம்பது பேருக்கு மேல் இருந்தனர். ஒரே சலசலப்பு. கடற்கரையிலிருந்து திருவல்லிக்கேணிக்குச் செல்லும் பாரதி சாலையை ஒட்டிய வகுப்பறை என்பதால் வாகனச் சத்தம். ஜன்னல்களைச் சாத்தி விளக்கைப் போட்டிருந்தனர். மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சாக்கில் ஒருவகுப்பை ஓட்டி விடலாமா? ஒரு பருவத்தின் இடைக்காலம். இப்போது என்ன அறிமுகம்? மனசாட்சி இடம் தரவில்லை. பாடம் எடுப்போம். என்ன பாடம் எடுப்பது? இந்த வகுப்பில் யாரும் பாடநூல் வைத்திருக்கப் போவதில்லை. தன்னாட்சிக் கல்லூரி என்பதால் அவர்களே அச்சிட்ட பாடநூலை மாணவர்களுக்கு வழங்கியிருப்பார்கள். ஒரே ஒரு மாணவரிடம் கூடவா பாடநூல் இருக்காது?

நம்பிக்கை வீண் போகவில்லை. ‘நன்றாகப் படிக்கும்’ நான்கைந்து மாணவர்கள் பாடநூலை வைத்திருந்தார்கள். அதைப் புரட்டிப் பார்த்தேன். பாடத்திட்டத்தில்  ‘சிறுகதைகள்’ என்னும் அலகு இருந்தது. இன்னும் அந்தப் பகுதியை நடத்தத் தொடங்கவே இல்லை என்றனர். ஏதாவது ஒரு கதையாவது ஏற்கனவே படித்ததாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை வந்தது. நல்லவேளையாக  ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ கதை இருந்தது. பிரச்சினையில்லை, சமாளித்துவிடலாம். அது பேச்சு மொழியாலான உரையாடல் நிரம்பிய கதை. ஜெயகாந்தன் சிறுகதைகள் பல மௌன வாசிப்புக்கு உகந்தவை அல்ல. வாய் விட்டு வாசிக்க வேண்டும்.  அந்தக் கதை எழுதப்பட்ட காலம் பற்றியும் ஜெயகாந்தன் பற்றியும் அறிமுகம், பின்னணி ஆகியவற்றைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கதைக்குள் போனேன்.

முதல் வரியை வாசித்தேன்.  ‘ஹேய்… ஹேய்ன்னானாம்’ என்னும் தொடக்கத்தைச் சிறுவன் ஒருவன் சந்தோசத்தில் பொருளற்றுக் கூவும் ஒலி உச்சத்துடன் தொடங்கினேன். அது மாணவர்களை மிகவும் ஈர்த்தது. வகுப்பை அமைதிப்படுத்த ‘ஹேய்’ உதவியது. தொனியை மாற்றாமல் வாசிப்பைத் தொடர்ந்ததும் என்னுடன் அவர்களும் கதைக்குள் வந்துவிட்டனர். சென்னையின் பிளாட்பார வாழ்க்கையைச் சொல்கிறது கதை. அசலான சென்னை வட்டார மொழி.

சோமாறி, தேவடியா பெத்த பயல், ஒண்ணுங் கெட்ட மூளி, வாந்தி பேதியில போறவனே, அவிசாரி முண்ட, சக்காளத்தி முதலிய வசைச் சொற்கள் பரவலாக வரும். அச்சிறுவன் பெயர் மண்ணாங்கட்டி. தென்னாற்காடு ஜில்லாவில் அந்தப் பெயர் பெருவழக்கு என்று சொல்கிறார் ஜெயகாந்தன். ராசாத்தியின் தந்தை பெயர் மண்ணாங்கட்டி. அவர் நினைவாகத் தன் மகனுக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்திருக்கிறாள். தென்னாற்காடு பகுதியிலிருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று தெரிகிறது.

இரண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் சண்டையில் ஊர் மேய்தல், விளக்குப் பிடித்தல் எனப் பச்சைச் சொற்கள் இயல்பாகப் புழங்கும். துட்டு, நாஸ்டா, பல்லா, மென்னி உள்ளிட்ட வழக்குச் சொற்கள் விரவப் பேச்சுமொழி அதன் தொனியுடன் வந்து விழுந்திருக்கும். எந்தச் சொல்லையும் கத்தரிக்காமல் அப்படியே அச்சிட்டிருந்தனர். ஆச்சரியம்தான். எப்படி ஒழுக்கக் காவலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தனர் என்று தெரியவில்லை. கதையில் வரும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திற்குச் சாதியில்லை. ஏதேனும் ஒரு சாதியைக் குறிப்பிட்டிருந்தால் பலர் வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கக் கூடும். ‘சாதி நீக்கம்’ கதைக்கு உதவியிருக்கிறது என்று தோன்றியது.

கருவுற்றிருக்கும் ராசாத்தி அதைப் பற்றிச் சொல்லும் போது ‘சடையம்மா கோயிலுத் திருநா அப்பத்தானே தரிச்சது’ என்பாள். திருவிழாவில் சந்தித்த வளையல் வியாபாரி ஒருவனின் முகம் அவள் நினைவில் வந்து போகிறது. அவளுக்குக் கணவன் இல்லை. விபசாரம் அவள் தொழிலும் அல்ல. வேலை கிடைக்காத போது வேறு வழியில்லை. அந்தக் கதையைப் பலமுறை படித்திருந்த போதும் வகுப்பில் பாடமாக நடத்தியிருந்தாலும் ‘கோயில் திருவிழாவில் தரித்த கர்ப்பம்’ என்று போகிறபோக்கில் வரும் உரையாடல் வாசகம் இப்போது எனக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. ‘திருவிழாவுல பொறந்த பய’ என்னும் வசையும் நினைவு வந்தது. மாதொருபாகன் சர்ச்சையில் மனம் சோர்ந்திருந்த என் பக்கம் நின்று ஜெயகாந்தன் சாட்சி சொல்வது போலத் தோன்றியது.

கதையை வாசித்தும் தேவைப்படும் இடத்தில் விளக்கியும் தொடர்ந்தேன். சலசலப்பும் சிரிப்புமாக எல்லாரும் கவனித்தனர். சென்னை வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பதால் தங்கள் மொழியில் எழுதப்பட்ட கதையைப் பெரிதும் ரசித்தனர். வசைச்சொற்கள் வரும் போது வெட்கம் கவிந்த முகங்களைக் கண்டேன். வகுப்பறையில் இருந்த பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் கேட்காத சொற்கள் அல்லவே.

கதை முடியும்போது வகுப்பில் அமைதி. ராசாத்தி இறந்து போகிறாள். அது மட்டுமல்ல, பசிக் கொடுமை தீராமலே இறந்து போகிறாள். அதுதான் கொடுமையிலும் கொடுமை. வட்டார வழக்கு, வசைச்சொற்கள் எல்லாம் தந்த குதூகலம் மாறி வகுப்பே மௌன அஞ்சலி செலுத்தியது. சரி, கதை மாணவர்களுக்குச் சரியாகச் சென்று சேர்ந்திருக்கிறது என்று திருப்தியாக இருந்தது. இலக்கியம் இப்படி நடைமுறை வாழ்வைப் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

மாணவர்களிடம் இருந்து சில அபிப்ராயங்களும் வினாக்களும் வந்தன. ஒழுக்க மதிப்பீடுகள் பற்றியவையாக அவை இருந்தன. மொழி, வாழ்க்கை, உடைக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவையே கதைக்குள் மாணவர்கள் நுழைந்து உலவக் காரணம் என்று நினைத்தேன். வகுப்பு நேரம் முடிந்து வெகுநேரம் ஆகியிருந்தது. எனினும் யாரும் எனக்கு அதை நினைவுபடுத்தவில்லை.

———