`இப்ப இந்தக் காலத்தில எம்புட்டோ பரவாயில்லையே, இது டிஸ்டம்பர் எமல்ஷன் பெயிண்டோட காலம்லா. நல்லவிதமாகச் சுரண்டி லப்பத்தை வச்சு பட்டி பார்த்து ஒன்றுக்கு இரண்டு தடவை குளூர அடிச்சிட்டா ஆறு ஏழு வருசத்துக்கு அக்கடான்னு உக்காந்திரலாமே. அந்தக் காலத்தில பொங்கல், வீடு வெள்ளையடிப்புன்னு வந்தா பொம்பளைக குறுக்கை ஒடிக்கிற பெரிய வேலைல்லா. வீட்டை மட்டுமா மொழுகிச் சுத்தப்படுத்தணும், உபயோகப்படுத்தறோமோ இல்லையோ அத்தனை பழைய பாத்திரங்களையெல்லாம் பரணிலிருந்து இறக்கிக் கழுவிப் பொறக்கி வெயிலில் காய வச்சு மறுபடி அதே போல அடுக்கணும்.. ஒரு அழுக்குத் துணி கிடக்கக் கூடாது, போர்வை, தலகாணி உரை, சட்டி பிடிக்கிற துணியைக் கூடத் துவைச்சிக் காயப் போட்ரணும்…”
வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வந்தவரும்,“ ஸ்டூல் தாங்கம்மா, பெருக்குமாறு தாங்கம்மா, துடைக்கப் பழந்துணி கொடுங்கன்னு” ஒண்ணு ஒண்ணா கேட்கக் கேட்க, அவருக்கு எடுத்துக் கொடுத்துக் கூடமாட உதவிக் கொண்டு அத்தோடு சமையல் வேலையையும் பார்த்துக் கொண்டிருந்த மனைவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டின் அலமார், பரண் என்று கண்ட கண்ட இடத்திலும் அடைந்திருந்த புத்தகங்கள் பழைய பத்திரிகைகள் எல்லாம் தார்சாலில் சிதறிக் கிடக்க, அவற்றை ஒழுங்குபடுத்துகிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு அவற்றைப் படிக்க உட்கார்ந்து விட்ட அம்பலம் என்கிற அம்பலவாணன், “ஒரு காப்பி இருந்தாக் கொடேன்,’’ என்று சத்தம் கொடுத்தான்.
“அது என்ன இருந்தாக் கொடேன்ன்னு ஒரு மேம்போக்கான சொல்லு, இல்லாம எங்கே போயிரும், போட்டுத் தாரேன், அதையாவது கொஞ்சம் மெனக்கெட்டு இங்க, அடுப்படிக்கு வந்து எடுத்துட்டுப் போங்க.. அந்தப் பொஸ்தகங்களையெல்லாம் துடைச்சி அடுக்கி வச்சா நல்லாருக்கும், இங்க வீடு கிடக்கிற கிடையில அதைப் படிக்க உக்காந்துட்டீங்க,,அதுகளை எத்தனை தடவைதான் படிப்பீங்க, வெள்ளையடிக்கிறவரே உங்க வீட்டய்யா என்ன செங்கல் வச்சு வீட்டைக் கட்டினாகளா பொஸ்தவங்களை வச்சுக் கட்டினாகளான்னு கேக்காக.” சலித்துக்கொண்டே காப்பியை எடுத்து வந்தாள்,” சௌந்தரம்.
`நாமளே போய் எடுத்துக்கலாம்ன்னு நெனைக்கறப்ப கொண்டு வந்தே குடுக்கறா, கூடவே சலிச்சுக்கிடவும் செய்யறா.” என்று நினைத்தவன் காஃபியின் வாசனையான சுவை நாக்கில் பரவத் தொடங்கியதும் “டிகாஷன் புதுசா, காப்பி அம்சமா இருக்கு,” என்றான்.
“நல்லாருக்கா, காலையில் ரெண்டு தரம் இதைத்தானே குடிச்சீங்க.. அப்ப நல்லா இல்லையில்லையா.. சரிசரி, பாக்கெட் பாலு அது கண்டா கொஞ்சம் காஃபி திக்கா இருக்கோ என்னவோ, வெள்ளையடிக்க வந்தவங்களுக்கு டீ போடறதுக்கு அதுதான் நெறக்கும், ஆனாலும் உங்க நாக்கு இருக்கே..” என்று பாராட்டா திட்டா என்று தெரியாதபடி சொன்னாள். “அப்படியா அப்ப டீயே போட்ருக்கலாமே” என்று சொல்லிவிட்டு அதற்கு என்ன எதிர்வினை வருமோ என்று விழித்தான்.
“வீட்ல ஒரு வேலைன்னு ஆரம்பிச்சா அது தானா நடந்திருமாக்கும், நாலையும் யோசிக்கணும்லா, காய்கறி வாங்கப் போனப்ப ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்.. ரெண்டு வாழைக்காயை வாங்கிட்டு வந்து இட்லிச் சட்டியில் வேகப் போட்டேன் அதை உதுத்துப் புட்டு வச்சா துணைக் கறிப்பாடு லேசாப் போயிரும். இல்லை, வேற கறிகாய் சமைக்கணும்ன்னா அதுக்கு ஒரு தரம் குக்கரை ஏத்தி இறக்கணும்..சோத்தையும் குக்கர்ல வச்சா காய்கறியையும் அதிலேயே வெந்திரலாம்.. குக்கர் சோறுன்னா உங்களுக்கு இறங்காதே, உங்களுக்குப் பூப்போல வடிச்ச சோறுல்லா வேணும், ஒண்ணா ரெண்டா ஒங்க நொரநாட்டியம்… “அம்புகள் பாய்ந்த வண்ணம் இருந்தன. புத்தகங்களைப் படிப்பதை நிறுத்திவிட்டுத் துடைக்க ஆரம்பித்தான்.
அப்போதுதான் கவனித்தான் சில புத்தகங்களை விலக்கியதும் அவற்றிற்கு அடியில் பழைய ஆர்மோனியம் வைக்கும் பெட்டி இருப்பதை. அதற்குள் அக்காவின் ஆர்மோனியம் இருந்தது. பளபளவென்று பார்க்கவே அழகாக இருக்கும். அதை வைப்பதற்குத்தான் அந்தக் கச்சிதமான பெட்டியைச் செய்திருந்தார் அவனது அப்பா.
அவனுடைய அக்கா கேட்டு எதையும் மறுத்ததில்லை அவர். சின்ன வயதுதான் என்றாலும் அம்பலத்திற்குப் பல சம்பவங்களும் நினைவிலிருக்கிறது. அவள் நம்ம வீட்டிலும் கொலு வைக்க வேண்டும் என்று சொன்னதுதான் தாமதம், வாடகை வண்டியை வரச் சொல்லி அம்மன் கோயில் வாசலுக்கு எதிர்த்த மண்டபத்தில் வருஷா வருசம் பொம்மைக் கடை போடுகிற பண்ருட்டிக்காரர் கடைக்கு அழைத்துப் போய் வித விதமான பொம்மைகளை ஒன்பது அடுக்கில் வைக்கிற அளவுக்கு ஒரே வருசத்தில் வாங்கி வந்து விட்டார். இதைப் பற்றி சௌந்தரத்திடமும் பீற்றிக் கொண்டே இருப்பான்.
`அவ கையக் காட்டி அந்த பொம்மை நல்லாருக்குல்லான்னு கேக்கறதுக்குள்ளேயே அதை எடுத்து வையிங்கன்னு அப்பா சொல்லிருவாங்க, அப்புறம் அப்பா டேஸ்ட்டுக்கு ஏத்தாப்பில கொஞ்சம் வாங்கினாங்க. அம்மா ஆசைப்பட்டு ஒரே ஒரு பசு மாட்டு பொம்மை வாங்கச் சொன்னாங்க. வெள்ளை வெளேர்ன்னு பசுவும் கன்றும் அவ்வளவு அழகாருந்துது. அப்பா, “ச்சே அது எதுக்கு,” என்றார், ஆனா அக்கா, `இருக்கட்டும் லச்சணமா இருக்குன்னதும். அப்பா, `அப்படின்னா சரி’ன்னு பிளேட்டை மாத்தி விட்டார்..
அதையும் அம்பலம் பத்திரமாக வைத்திருக்கிறான். சௌந்தரம் சொல்லுவாள், “ உங்க அம்மா ஆசைப்பட்டதுல தப்பில்லைங்க உண்மையிலேயே பசுவும் கன்று லட்சணமா இருக்குங்க..” அவள் வைக்கிற குட்டிக் கொலுவிலும் அதுதான் நடுநாயகமாகவும் இருக்கும்.
அவ்வளவு செல்லம் அவனது அக்காவிற்கு. அவள் முழுசா சங்கீதமே கத்துக்கலை. இருந்தாலும், பயிற்சி ஆரம்பித்த அன்று, வாத்தியார் வரும் முன்பே ஆர்மோனியம் வந்து இறங்கி விட்டது. நினைவுகள் மனசின் ஆழத்திலிருந்து வரத் தொடங்கியது. சின்ன வயதில் அவன் நினைவை ஆக்கிரமித்திருந்த பளபளப்பின் எதிர்பார்ப்புடன் அவசர அவசரமாகப் பெட்டியைத் திறந்தான்.
பளபளப்பிற்குப் பதிலாக மேலெல்லாம் பச்சையாய் பாசி படர்ந்திருந்ததைப் பார்த்ததும் ஏதோ ஒரு சிறிய அதிர்ச்சி. அதன் துருத்தியில் இன்னும் அதிகமாய் பஞ்சு போல் பூஞ்சைக் காளான். அது லாஃப்ட்டில்தான் இருந்தது. சமீபத்திய மழையில் சுவரில் சற்று ஈரம் இறங்கியிருந்தது. சௌந்தரம் வீட்டில் பூச்சு மற்றும் பெயிண்டிங் வேலையை ஆரம்பித்ததற்குச் சுவரில் ஈரம் கசிந்து பூஞ்சை படர்ந்திருந்ததும் ஒரு காரணம். மொட்டை மாடியில் தண்ணீர் வடியும் மடையருகே ஒரு வெடிப்பையும் கண்டுபிடித்துச் சரி செய்யச் சொல்லியிருந்தாள். அம்பலத்திற்கு அதற்கெல்லாம் ஒருநாளும் நேரமிருந்ததில்லை.
ஆர்மோனியத்தின் துருத்திப் பகுதியில் காளான் படிந்திருப்பதைப் பார்த்ததும் அது இசைக்குமா என்றே சந்தேகம் வந்து விட்டது. நாலைந்து கட்டைகளை அமுக்கினான். அதே பழைய இசையொலி கேட்டதும்தான் பெரிதாகப் பிரச்னை ஒன்றுமில்லை என்று சமாதனமடைந்தது மனது. ஒரு பழந்துணி கேட்க நினைத்தான். அப்புறம் அவனே போய் எடுத்து வந்தான். அப்போதும், “என்ன சார்வாள் படிக்கிறதை விட்டுட்டு சங்கீதத்தில் இறங்கீட்டிகளோ,” என்று கேட்கத் தவறவில்லை சௌந்தரம்.
`ஆர்மோனியம், பெட்டியிலெல்லாம் ஒரே பூஞ்சைக் காளானாயிருக்கு அதுதான் துடைக்கலாமா என்று….” இழுத்தான் அம்பலம். சௌந்தரம் பின்னாலேயே வந்தாள். “ஆமா, நல்லாப் படர்ந்திருக்கே.. துணியைக் கொடுங்க, என்று பிடுங்காத குறையாய் வாங்கிப் பூஞ்சையைத் துடைக்க ஆரம்பித்தாள். கூடவே “இதுக்குன்னா மட்டும் எங்கே இருந்துதான் பொறுப்பு, உறுதல் எல்லாம் வருமோ தெரியலை,” என்று லேசாகச் சிரித்துக்கொண்டாள். “இப்படியே கொஞ்சம் வெயிலில் வச்சு எடுங்க, கொஞ்சம் இள வெயிலில் வையுங்க, இல்லைன்னா சீக்கிரம் ஒரு கண்ணு வச்சுப் பாத்துக்கிட்டே இருந்து எடுத்திருங்க, அப்புறம் அதில் ஏதாவது வெடிப்பு விழுந்திராமே,” என்று வரிசையாகச் சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
`தனக்கு இது ஒன்றுமே தோன்றவில்லையே, அவளுக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது. முட்டாளாகி விட்டோமா, இல்லை அவள் முன் தன் கொஞ்ச நஞ்ச அறிவும் ஒளிந்து கொள்கிறதா, நம்மையும் கொஞ்சம் வெயிலில் வச்சு எடுத்தால் அவளது சூட்டிகம் வந்து விடுமோ, என்றெல்லாம் நினைத்துக்கொண்டு வெயிலில் அதற்குக் காவலிருக்க ஆரம்பித்தான்.
அவர்கள் வீட்டுக்குத் தெற்குப் பார்த்த வாசலும் கிழக்குப் பார்த்த வாசலும் என இரண்டு உண்டு. கிழக்கு வாசல் வழியாக ஒரு லெஃப்ட், ஒரு ரைட் எடுத்து சிட் அவுட் என்கிற தார்சாலுக்கு வர வேண்டும். சிட் அவுட் முன்பான வெயிலில் ஆர்மோனியமும், சிட் அவுட்டின் நிழலில் பழைய புத்தகங்களும் காய்ந்தன.
ஆர்மோனியம் வெயில் காய்ந்தது போதுமா இல்லை அது காயட்டும், கொஞ்ச நேரம் நாம் புத்தகங்களைத் துடைத்து வைக்கலாமா..என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தவனின் காதுகளில் கீழ வாசல் நடையில் நிழலுக்காக யாரோ பெருமூச்சுடன் அமர்வது கேட்டது.
அது யாரென்று பார்க்க வந்தான். யாரோ ஒரு பெண். அப்படி ஒரு ஒல்லியான உயரமான உடல் வாகு. அந்த ஒல்லி உடலால் உயரமாகத் தெரிகிறாளா, இல்லை நல்ல உயரம்தானா என்று ஒரு நிமிடம் குழம்பினான் அம்பலம். இறக்கிக் கட்டிய கனத்த பாவாடை. தன் தளமான வயிறு, ஏதோ சங்க காலத்து விறலி போல இடை, செழிப்பான மார்பை நன்றாக மறைத்து ஆனால் ஓடை போல ஓடுகிற தாவணி மாராப்பு. கழுத்தில் கனத்த பாசிகள். இடது மூக்கில் வெள்ளி அல்லது வெளுத்துப் போன இரும்பு வளையம்.
அம்பலத்தைப் பார்த்ததும் “போயிர்றேங்க ஐயா,” என்று எழுந்தாள். “இரும்மா வெயிலுக்காகத்தானே ஒதுங்கியிருக்கே, இரு,” என்றான். அவள் குனிந்து எடுக்க முயன்ற உருமிக் கொட்டு ஒன்றை மீண்டும் கீழேயே வைத்தாள். தோளில் தொங்க விடத் தோதுவாய் கயிறு கட்டிய அலுமினியப் பானையை இன்னொரு புறம் வைத்திருந்தாள். இது போன்ற பெண்கள் கயிற்றுச் சாட்டையால் தன்னை அடித்துக் கொள்வது போலச் சுழற்றிச் சொடுக்கும் ஆண்களுடன் உறுமி மேளத்தை வாசிப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இவள் தனியே இருக்கிறாள். ஒரு வேளை அவளுடன் வருபவன் பக்கத்துத் தெருவிற்குப் போயிருப்பானோ. ஆனால் அவளைச் சுற்றி ஏதோ ஒரு தனிமை தெரிந்தது. சௌந்தரத்திடம் சொன்னால்,”இந்த மாதிரி விஷயங்களில் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருமே” என்பாள்.
அம்பலம் என்ன பேசுவது என்று நினைக்கும் முன் அவளே “ஐயா நாக்குத் தவிப்பா இருக்கு, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா,” என்றாள். `இரு’ என்று கையமர்த்திச் சொல்லி விட்டு ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தான். ` “வேறொருத்தர் புழங்கின யேனத்தில தண்ணி குடிக்க மாட்டோம். அந்தா அந்தப் பக்கமா இருக்கிற குழாயில் தண்ணி பிடிச்சிக்கறேன் என்று ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் காட்டினாள். அது டேங்கியில இருந்துதானே நேரா பைப்பில வருது, அதைப் பிடிச்சிக்கிடுதேன்,” என்றாள்
“அது உப்பாக இருக்குமே,” என்று சொல்லி முடிக்கும் முன்பே “பரவாயில்லை ஐயா, எங்க ஆளுகளுக்கு அதெல்லாம் வழக்கம்தான்,” என்றாள். படக்கென்று வாயில் வந்து விட்டது, “ நீங்க என்ன ஆளுக”
`நாங்க வடக்க புதுக்கோட்டைப் பக்கம், குறி சொல்லற ஆளுக,” “ அப்போ குறி கேக்கலாமோ” என்று அவன் நினைக்கிறதைப் படிக்கிற மாதிரி சொன்னாள், “நான் இப்ப குறில்லாம் சொல்லக் கூடாது, எங்க இனத்தில இருந்து எங்க குருசாமி என்னைத் தள்ளி வச்சிருக்காரு.. நான் எனக்குப் புடிச்ச மனுசன் கூட ஓடிப் போய்ட்டேன்… இன்னும் குருசாமி எங்களுக்கு உத்தரவு குடுக்கலை அதனால நான் எங்க இனத்து மத்த ஆளுக கூட பழக முடியாது… ஆனா குருசாமி இந்த வருசம் வடக்கத்தி அம்மைக்குக் கொடை வரும் போது உத்தரவு குடுத்திருவாரு. அது வரைக்கும் நாங்க ஊர் ஊராப் போறோம், அவரு பக்கத்தில ஏதும் தருமத்துக்கு நெல்லு கிடைக்குமான்னு பார்க்க அறுப்புக் களத்துக்குப் போயிருக்காரு.”
“ இப்பல்லாம் மிஷின் அறுவடையில் களமாவது ஒண்ணாவது,” என்று நினைத்துக் கொண்டான் அம்பலம். அவள் தண்ணீர் பிடிக்க அவனருகாகப் போகும் போது அவள் உடலிலிருந்து, அவனுக்குப் பிடித்த சிறுகிழங்கின் மணத்தோடு வியர்வை வாசனை வீசியது. பச்சைச் சிறுகிழங்கைக் கல்லில் உரசித் தொலி நீக்குகிற போது மண்ணும் கிழங்கும் கலந்து வரும் மணம். ஆழமாக நுகர்ந்தான். அவள் மீண்டும் அவனைக் கடந்து போக வரும் போது அதே மணத்தினை நுகரத் தயாராய் கண்களை லேசாக மூடிக் காத்திருந்தான். அவள் கடக்கவில்லை.
மாறாக,“ஐயா இந்த ஆர்மோனியப் பெட்டி அழகாருக்கே, நீங்க வாசிப்பீங்களா, அம்மா வாசிப்பாங்களா.” கண்கள் விரிய ஆர்மோனியத்தைப் பார்த்தாள். ஏன் வெயிலில் வச்சிருக்கீங்க… ஆர்மோனியத்தின் அருகில் போய் நின்று கேட்டாள். அவள் காலடிக்குள் பதுங்கும் அவளது சின்னஞ்சிறிய நிழலில் ஆர்மோனியமும் சற்று ஒதுங்கிக்கொண்டது போலிருந்தது.
“எனக்கு வாசிக்கத் தெரியாது. எங்க வீட்டம்மாவுக்கும் தெரியாது. அது எங்க அக்காவுக்குள்ளது. ஆனா அவளுக்குமே அவ்வளவு வாசிக்கத் தெரியாது…” என்றான் அம்பலம். மீண்டும் மனசைப் படிக்கிற மாதிரி “நான் வாசிச்சுப் பாக்கட்டா…” என்றாள். ஆர்மோனியத்தை நெஞ்சோடு எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு “என்னமா கொதிச்சுப் போயிருக்கு, அப்படி அந்த எனலில் வச்சிக்கிட்டு உக்காந்துக்கறேன்,” என்று புத்தகங்களை ஒதுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள்.
சௌந்தரம் என்ன சொல்லுவாளோ என்று நினைக்கும் முன் அருமையாக வாசித்தாள். ஏதோ ஒரு பழைய சினிமாப் பாட்டின் சாயல். கண்டிப்பாக அது சுசிலாவின் குரல். அவள் கை அங்குமிங்கும் கட்டைகளின் மீது லாவகமாகத் தாவுவதைக் கண் வாங்காமல் ரசித்தபடி பாட்டின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். அவ்வப்போது அம்பலம் அவள் முகத்தைப் பார்த்தான். அழகான பற்கள் தெரியும் ஒரு சிரிப்பு அந்தப் பாடலுக்கு ஏற்ற மாதிரி நெளிந்து மறைந்து நெளிந்து மறைந்து தொடர்ந்து கொண்டிருந்தது. கருப்பும் வெள்ளையுமான ஆர்மோனியக் கட்டைகள் மீது உயந்தும் தாழ்ந்தும் மடங்கும் விரல்கள் மனத்தின் எதையோ காலடியில் போட்டு அமுக்கும் நடராச நடனம் போல ஒரு படிமத்தைத் தோற்றுவித்தது. அவள் ஏதாவது பாடலை முணுமுணுக்கிறாளோ என்றும் தோன்றியது.
கலைந்து கிடக்கும் புத்தகங்கள் மத்தியில் எந்தக் கவலையும் தோன்றாமல் வாசித்துக்கொண்டிருந்தாள். சௌந்தரம் எப்போது வந்தாள் கவனிக்கவில்லை. வீட்டு நிலையில் சாய்ந்து நின்று கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை. அம்பலம் சௌந்தரத்தை ஏறிட்டான், என்ன சொல்லுவாளோ என்ற தயக்கத்தோடு. அவள் வாசிப்பைப் பார்த்துக்கொண்டே மெதுவாகச் சிரித்தாள். அவளுள்ளும் நாளின் இறுக்கம் தளர்ந்து கனிந்தது போலிருந்தாள்.
வாசித்து முடித்ததும் கண்களில் ஆர்மோனியத்தைப் பிரிய மனமில்லாத ஏக்கம் தொக்கி நிற்க எழுந்து கீழிறங்கி நின்றாள். லேசான மன்னிப்பைக் கோரும் தோரணையில் சௌந்தரத்தைப் பார்த்துச் சிரித்தாள். அவளிடம், அவ்வப்போது தோன்றும் செல்லச் சிடுசிடுப்பு கொஞ்சமும் அற்ற குரலில், “ஒம் பேரு என்னம்மா” என்று சௌந்தரம் கேட்டாள்.
அந்த விறலியும் சிரிப்பு மாறாமல், “சீலா’’ என்றாள். “ஷீலாவா நல்ல பேரா இருக்கே என்றதும்,” நீங்க சொல்லற இங்லீஸ் ஷீலா இல்லம்மா, எங்க குல தெய்வம் சீலாத்தம்மன் பேரு,” என்றாள். பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்து விட்டு இன்னும் நிரப்பிக் கொண்டவளிடம் “இரு வாரேன்” என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள் சௌந்தரம். வருகையில் ஒரு சொளகில் அரிசி எடுத்து வந்தாள். “நெல்லு இல்லையா தாயி,” என்றவளிடம், “நெல்லா, இப்போ ஏதும்மா நெல்லு, எல்லாம் பை அரிசி வாங்கற கால்ம்லா” என்றாள்.
“நெல்லு கொடுத்தா சிலாக்கியம் நாங்களே குத்திச் சோறாக்கிக்குவோம்,” என்றாள் சீலா. மீண்டும் உள்ளே போனவள் இம்முறை கொஞ்சம் நெல் எடுத்து வந்தாள்.. கும்பிட்டு வாங்கிக்கொண்டு உருமியைத் தோளில் மாட்டிக்கொண்டு கீழ வாசல் வழியாகத் தெருவுக்கு இறங்கினாள்.
“ஆமா, இப்பல்ல்லாம் நெல்லு ஏதுன்னு கேட்டே அப்புறம் எப்படி அதுவும் நம்ம வீட்டில,” அம்பலம் சௌந்தரத்திடம் கேட்டான். “நெல்லா, பொங்கலுக்கு நிறை நாழியில் வைத்துப் படைக்கப் பக்கத்து வீட்டில் புது நெல்லு இரவல் வாங்கி வச்சிருந்தேன்.” “அப்படியா, அவங்க வயலில் நெல்லா போட்ருக்காங்க, எனக்குத் தெரியாதே,” என்றவனிடம் ஏதோ சொல்ல வந்தவள் சிரித்துக்கொண்டே, “சரி சரி சாப்பிட வாங்க..” என்றாள்.
“உங்களுக்கு என்னதான் தெரியும்ன்னுதானே சொல்ல நினைச்சே,” என்றான் அம்பலம். “இல்லைங்க,” என்று என்று கனிந்த முகத்துடன் ஏறிட்டவள், “அவ என்ன பாட்டு வாசிச்சான்னு கண்டு பிடிச்சிட்டிங்களா?” பதில் கேள்வி கேட்டாள். “என்னவோ ஒரு சுசிலா பாட்டு மாதிரி ஒண்ணு, தொண்டைக்குள்ள இருக்கு வாயில வர மாட்டேங்கு.” என்றதற்குச் சிரித்தாள். “ஒரு வேளை அவளுக்கு என்ன பாட்டுன்னு தெரிஞ்சிருக்குமோ…இருக்கும் தெரிஞ்சிருக்கும், ஆனா, `இது தெரியாதா’ என்பது போல இன்னைக்கி எதுவும் சொல்ல மாட்டாள். அவளது குத்தலான சொற்கள் எல்லாம் இப்போது முனை மழுங்கியிருக்கின்றன என்று அம்பலத்திற்குத் தோன்றியது. இன்னைக்கி நிறையப் பேசிட்டோம்ன்னு ஒரு சில நாள்களில் அவளுக்கே தெரியும் கரெக்ட்டா நிப்பாட்டிக்குவா, கெட்டிக்காரி, ஆனால் இது நிச்சயம் அந்தக் கெட்டிக்கராத்தனமில்லை,” வாய்க்குள் சொல்லிக்கொண்டவனுக்குப் புரையேறியது. அதைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவள் ஒரு புன்னகையோடு தண்ணீரை நீட்டினாள்.