பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் நிலையைப் பற்றி டாக்டர் இப்படிச் சொல்கிறார்:
“Cosmetic injuries-ன்னு பார்த்தா அவ முகத்துல பதினைஞ்சு இடத்துல பயங்கரமா கடிச்சு வச்சிருக்காங்க… அவ vagina-வ சுத்தி இருக்குற wounds-ஸ கூட repair பண்ணிறலாம்… but அவளோட small intestine-க்கு நடுவுல பயங்கரமான fatal damages இருக்கு. This means ஒரு முழு நீள iron rod-அ completely Vaginal and Anal openings-ல insert பண்ணிருக்காங்க… அது அவளோட intestine-அ நிறைய இடத்துல vertical-ஆ கிழிச்சிருக்கு. The worst part about this is the damages to the organs indicates அவனுங்க அந்த rod-அ ரெண்டு openings-லயும் repeated-ஆ insert பண்ணி எடுத்துருக்காங்க… அந்த rod-டோட end-ல்ல hook and serrations இருந்ததுனால… அது பயங்கரமா குத்திக் கிழிச்சிருக்கு! அது rod-ஆல மட்டும் கிடையாது…! in fact என்னன்னா அவளோட vagina வழியா intestine pieces-ஸ வெளில்ல இழுத்திருக்காங்க. நாங்க second surgery பண்ணிருக்கோம்… but it may be irreparable…!”
இந்தக் கொடூர பாலியல் தாக்குதலை நிர்பயா வழக்கு என அழைப்பர். இந்தியா மட்டுமல்லாது உலகமே ஸ்தம்பித்துப்போன இந்தக் குரூரமான பாலியல் வன்கொடுமை 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள், இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்தது. நிர்பயா பாலியல் வன்கொடுமை நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்தான் Delhi Crime.
‘டெல்லியில் வருடத்திற்குப் பதினோராயிரம் குற்றச்செயல்கள் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்குப் போதிய காவலர்கள் இல்லாத நிலையில், இருப்பவர்களிலும் பாதிப்பேருக்கு மேல் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணிகளும்; விஜபி-க்களைக் காவல் காக்கும் பணிகளும் வழங்கப்படுகின்றன. தலைநகரின் அவலட்சணத்தை டெல்லியில் நடந்த ஒரு குற்றச் சம்பவம்தான் உலகத்திற்குக் காட்டியது’ என்ற முகவுரையுடன் கதையைத் தொடங்குகிறார்கள்.
தீபிகாவும் அவளுடைய காதலன் ஆகாஷும் துவாரகா என்ற இடத்திற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார்கள். அப்போது ஒரு அரசுப் பேருந்து வருகிறது. அதில் ஏறலாம் என தீபிகா சொல்கிறாள். அது வேண்டாமென மறுத்து வேறொரு தனியார் பேருந்தில் ஏறலாம் என ஆகாஷ் சொல்கிறான். இந்தியாவையே அதிரவைத்த அந்த விதி இப்படித்தான் தொடங்கியது.
சிறிது நேரம் கழித்து “மஹிபல்பூரில் பாதையோரம் இரண்டுபேர் ஆடையில்லாமல் விழுந்து கிடக்கிறார்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். என்னவென்று பார்க்கவும்” என்று கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமைக் காவலர் ராம் பிரதாப்பிற்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். அவரும் அந்த இடத்திற்குப் போகிறார். மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர யாரும் ஓர் உதவியும் செய்யவில்லை. போலிஸார் வெள்ளைத் துணியால் சுற்றி, தங்கள் போலிஸ் ஜூப்பில் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இருவரில் தீபிகாவின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவளிடம், “என்ன நடந்தது” என டாக்டர் கேட்கிறார். அந்த சூழலிலும், “ரேப்… அப்புறம் என்னை அடிச்சாங்க… iron rod-ல்ல… then they pushed the rod into my vagina… என்னோட பின்னாடியும்… எனக்குத் தோணுது… they might have pulled out my flesh from inside” என நடந்தவைகளை விவரமாகச் சொல்கிறாள்.
அவளுடைய அப்பா அம்மா வருகிறார்கள். “என்ன நடந்ததும்மா…?” எனக் கேட்கிறார் அப்பா. “வலிக்குதுப்பா என்னால தாங்க முடியலப்பா…!” என அழுகிறாள். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் உறைந்துபோகிறார்கள். டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஓர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகியிருக்கிறாள் என்ற தகவலை டெல்லி DCP (Deputy Commissioner of Police) வர்திகா சதுர்வேதிக்குத் தெரியப்படுத்துகின்றனர்.
இன்னொரு பக்கம் இந்த நிகழ்வு, சமூக வலைத்தளத்திலும், பத்திரிகைகளிலும் தீயாகப் பரவுகிறது. ஒரே நேரத்தில் பத்திரிகைகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணுரிமைப் போராளிகள், பொதுமக்கள் என எல்லோரும் தில்லி போலிஸுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிப் போராடத் தொடங்குகிறார்கள். “குற்றவாளிகளைத் தூக்கிலேற்ற வேண்டும்….! அவர்களைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய வேண்டும்..!” எனப் பதாகைகளைத் தூக்கிக்கொண்டு காவல் நிலையத்தை முற்றுகையிடுகிறார்கள்.
இக்கட்டான இந்தச் சூழலில் வர்த்திகா, பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய வகையில் ஆராய்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். தனக்கு உகந்த ஒரு STF (Special Task Force) குழுவை உருவாக்குகிறார். அந்தக் குழுவில் இன்ஸ்பெக்டர் புபேந்திர சிங்க், நீதி சிங்க் ஐபிஎஸ், தேவிந்தர் ஆகியோர் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் முடுக்கிவிடுகிறார்.
முதலில் கைவசம் இருக்கும் தீபிகாவின் காதலன் ஆகாஷிடம் வன்புணர்வு செய்யப்பட்ட பஸ், குற்றம் புரிந்தவர்கள் பற்றிக் கேட்கிறார்கள். “பஸ்ஸின் முன்பக்கத்தில் ஒரு சிவன் சிலை இருந்தது, பஸ்ஸில் ட்ரைவர் உட்பட ஆறுபேர் இருந்தார்கள். நாங்கள் பஸ்ஸில் ஏறும்போது அவர்கள் அனைவரும் ட்ரைவர் சீட்டுக்கு அருகில்தான் இருந்தார்கள்” என்று சொல்கிறான். அவன் சொன்ன நேரத்தில் டெல்லியில் சென்ற பஸ்கள் அனைத்தையும் சிசிடிவி- பதிவு வழியாக ஆராய்கிறார்கள். சிரிஸ் ட்ராவல்ஸ் என்ற பஸ் மட்டும் மீண்டும் மீண்டும் அதே வழியில் செல்வதைப் பார்க்கிறார்கள்.
முதல் அடி எடுத்து வைப்பதற்குள்ளாக நிருபர்கள் எல்லாம் கட்டுக்கடங்காத வகையில் செயல்படுகிறார்கள். பொய்யான செய்திகளை மின்னல் வேகத்தில் பரப்புகிறார்கள். ஒரு நிருபர் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, “இதுதான் அந்தப் பெண் பயணித்த பஸ்… ஏன் இந்த பஸ்ஸைக் கைப்பற்றி விசாரிக்கப் போலிஸ் பயப்படுகிறது?” என்று கேட்கிறார். இன்னொரு பக்கம் டெல்லி முதல்வரும் தில்லி போலிஸ்மீது குற்றம் சுமத்துகிறார். அமைச்சர் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்.
தில்லி கமிஷ்னர்கூட “வர்த்திகா, நிருபர்கள் எல்லாம் பொய்யான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பஸ்ஸைப் பற்றிய தகவலைப் பொதுவெளியில் கொடுக்கலாமே? அந்த பஸ் எதுவென்று தெரிந்தால் பொதுமக்களில் ஒருவர்கூட இந்த வழக்கில் உதவலாம் இல்லையா?” எனக் கேட்கிறார். “அந்த பஸ்ஸைப் பற்றின தகவலை வெளியில் கொடுப்பது சரியாகாது. இதுபோன்ற தகவல் குற்றவாளிகளுக்குத் தெரிந்தால் அவர்கள் பஸ்ஸை எரித்துவிடுவார்கள். நமக்கு உரிய ஆதாரம் கிடைக்காமல் போய்விடும்” என்று கமிஷ்னரிடம் பதில் சொல்கிறார் வர்த்திகா.
முதலில் ஜெய் சிங் என்பவனைப் பிடிக்கிறார்கள். அவன்தான் பஸ் ட்ரைவர். பஸ்ஸையும் கைப்பற்றி யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார்கள். ஜெய் சிங் மூலமாகக் குற்றம்புரிந்தவர்கள் யார் யார் என்ற விவரத்தை வாங்குகிறார்கள். அதில் ஒருவன் அமர் சிங், அவன் ஜெய் சிங்கின் தம்பி. பிரிஜேஷ், விகாஷ், சோனு, அலோக் ஆகியோர் பிற குற்றவாளிகள். ஆறு குற்றவாளிகளின் பெயர் தெரிந்தாலும் அவர்கள் யார்? அவர்களுடைய ஊர் எது? என்பது ஜெய் சிங் என்பவனுக்கே தெரியாது. பல்வேறு இடங்களிலிருந்து டெல்லி வந்தவர்கள். கிடைத்த கூலிவேலைகளைப் பார்த்து நண்பரானவர்கள். அவர்களில் யாரும் பரம்பரைக் குற்றவாளிகள் கிடையாது. மதுபோதை தலைக்கேறி, பணத்தாசையால் குற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். முதல் குற்றம் எளிதாக நடந்து முடிந்துவிட்டதால் இரண்டாவது குற்றமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, குரூரமாகத் தாக்கி வெறியாட்டம் நிகழ்த்திவிட்டார்கள்.
தொலைபேசியில் அவர்கள் பேசியதை வைத்து, ஒவ்வோர் ஊருக்கும் சென்று அங்குள்ளவர்களை அடித்து விசாரித்து அவர்கள்மூலமாகக் குற்றவாளிகளை வளைத்துப் பிடிக்கிறார்கள். குற்றம் செய்த ஆறுபேர் யார் யார் எனத் தெரியாத நிலையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிதறி ஓடியவர்களைக் குறுகிய நாள்களுக்குள் தேடிப்பிடிக்கும் கதைதான் டெல்லி கிரைம். இது முதல் பாகம்.
டெல்லியின் முன்னாள் ஆணையராக இருந்த நீரஜ் குமார் எழுதிய காக்கி ஃபைல்ஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து டெல்லி கிரைம் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். தீரன் அதிகாரம் ஒன்று படம் பார்த்திருந்தால் உங்களுக்கு எளிதில் புரியும். தொண்ணூறுகளில் கச்சா பனியன் என்ற கும்பல் இருந்திருக்கிறது. தனியே இருக்கும் வீடுகளைக் குறிவைத்து, அங்கிருப்பவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள். கிட்டதட்ட அதேபோன்ற ஒரு கும்பல் 2012 காலகட்டத்தில் வசதியான முதியோர் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களை அடித்துக் கொன்று கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.
இந்தக் கொலைகளையும் கொள்ளைகளையும் செய்பவர்கள் டெல்லிக்கு அருகில் உள்ள சீர்மரபு பழங்குடியினர் (DNT -Denotified Tribes) என்னும் ஜாதியினர் என்று நினைத்து அவர்களைக் கூட்டங்கூட்டமாகக் கைதுசெய்து விசாரிக்கிறார்கள். துணை ஆணையர் வர்த்திகா சதுர்வேதி இப்படியாக ஒரு ஜாதியைப் பொதுமைப்படுத்துவது தவறு என நினைக்கிறார். அவர்கள்மீது குற்றம் சாற்றிப் பிரச்சனையை முடிப்பதற்கு ஏற்ற சூழல் இருந்தபோதும் வர்த்திகா சதுர்வேதி அதைச் செய்ய மறுக்கிறார். உண்மையான குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்.
”ஹர்சத் மேத்தா குற்றவாளி என்பதால் மேத்தா ஜாதியில் பிறந்த அனைவரையும் போலிஸ் ஸ்டேசனில் உக்காரவைத்து விசாரிப்பதில்லை இல்லையா? அப்படியென்றால் யாரோ ஒருவன் திருடியதற்காகச் சீர்மரபுப் பழங்குடி ஜாதி மக்களை எல்லாம் போலிஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிப்பது எந்த வகையில் நியாயம்” எனக் கேட்கும் இடம் இந்த சீரியலில் ரசிக்க வைத்தது. படத்தை எடுத்த இயக்குநர் பெயரே ரிச்சி மேத்தாதான். துணிந்து இந்த வசனத்தை வைத்தது பாராட்டுக்குரியது.
2012-இல் இருந்த இந்திய சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல் காங்கிரஸுக்கு முற்றிலும் எதிராக இருந்தன. மோசமான இந்திய உள்கட்டமைப்புகளும், ரெட் டேபிஸமும், போராட்டங்களும் மக்களைக் கொதிநிலையில் வைத்திருந்தன. இந்தச் சூழலில் நடந்த ரத்தக்களறியான கோரச் சம்பவம் நடுநிலையில் இருந்தவர்களின் இதயங்களைக்கூட சுக்குநூறாக உடைத்தது. மீடியா இந்தச் சம்பவத்தை இந்தியாவின் கடைகோடிவரை எடுத்துச் சென்றது. அதனால் டெல்லியின் இந்தியா கேட் போராட்டக்காரர்களால் நிறைந்து வழிந்தது.
”டெல்லி போலிஸார் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள்; அவர்களால் குற்றவாளிகளை ஒருபோதும் பிடிக்கமுடியாது” என மக்கள் தில்லி போலிஸார் மீது குற்றம் சுமத்தினர். தில்லி போலிஸார் அரசியல்வாதிகள்மீது குறைசொல்லித் தப்பித்தனர். தில்லியை அப்போது ஆட்சி செய்த ஷீலா தீட்ஷித், “தில்லியில் ஒரு கான்ஸ்டபிளை நியமிக்கும் அதிகாரம்கூட எங்களுக்கு இல்லை. தில்லியின் சட்ட ஒழுங்குக்கு மத்திய அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். மத்திய அரசு தில்லி போலிஸ்மீது குற்றம் சுமத்தியது. “This is ‘Everyone looking for someone to hold accountable’ kind of scenario” என்று பத்திரிகைகள் எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்தனர்.
யார் யார்மீதும் குற்றம் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால், அன்று இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்தால் தில்லி போலிஸ்மீதுதான் தவறு இருப்பது தெரிகிறது. அதற்குச் சான்றாக ஒரு சம்பவத்தை எல்லோரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நிர்பயா என அழைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங். அவளுடைய காதலனின் பெயர் அவிந்த் பிரதாப் பாண்டே. இவர்கள் இருவரும் ஒரு தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முன் அதே பேருந்தில் சற்று நேரத்திற்கு முன் ஒரு கார்பெண்டர் ஏறியிருக்கிறார். அதே ஆறுபேர் கொண்ட கும்பல் அந்தக் கார்பெண்டரையும் தாக்கி, அவர் கையில் வைத்திருந்த பணத்தையும், ஃபோனையும் பிடுங்கிக்கொண்டு நடுரோட்டில் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை அப்போது கண்காணிப்பில் இருந்த மூன்று போலிஸாரிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மூன்று போலிஸாரும், “இந்த கேஸ எங்ககிட்ட சொல்லாதீங்க… போய் வஸந்த் விஹார்’ல்ல இருக்குற போலிஸ் ஸ்டேசன்’ல்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
”ஒருவேளை அந்த மூன்று போலிஸாரும் இந்த விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் ஜோதி சிங் அவ்வளவு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்க மாட்டார்” என்று பத்திரிகைகள் கூறுகின்றன. நிலைமை இப்படி இருக்க, இந்தியாவின் சமூக அரசியல் முக்கியத்துவம் கொண்ட ஒரு வழக்கைப் போலிஸின் பார்வையில் படமாக்கினால் எப்படி இருக்கும்? இந்தப் படத்தின் இயக்குநர் ரிச்சி மேத்தா கனடாவாழ் இயக்குநர். பொதுவாக இந்தியாவிலேயே சமூக அறிவோடு இருக்கும் இயக்குநர்கள் மிகக் குறைவு. அதிலும் ஒருவர் கனடாவில் வாழ்ந்துகொண்டு இந்தியப் பிரச்சனையைப் படமாக்கினால் எப்படியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்!
டெல்லி கிரைமின் தொடக்கமே அபத்தமாகத்தான் இருக்கும். அசீம் என்னும் தீவிரவாதியைத் தில்லி மாநகரின் குடியிருப்பில் வைத்து சுற்றிவளைத்துப் பிடிப்பார்கள். அவனிடம் விசாரணை நடக்கும்: “நீ பார்லிமெண்ட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பதினைந்து வருஷம் ஜெயிலில் இருந்திருக்க…. உன்னை ஜெயிலுக்கு அனுப்பியவனைக் கொல்ல weapons-ஸ சேத்திருக்க. ஜெயிலில் இருக்கும்போதே ஒரு பொண்ண உஷார் பண்ணிட்ட, அந்த விஷயம் உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு போச்சு. அதனால் நீ ஒருத்தன கொல்லப் போற பிளானை உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்ல…. அவ(ள்) எங்ககிட்ட போட்டுக்குடுத்துட்டா?” என இன்ஸ்பெக்டர் அசீமிடம் சொல்வதுபோல ஒரு காட்சியோடுதான் வெப் சீரிஸ் தொடங்கும்.
பாராளுமன்றத் தாக்குதல் 2001-இல் நடந்தது. நிர்பயா தாக்குதல் 2012-இல் நடந்தது. பதினைஞ்சு வருடத்திற்கு முந்தைய பாராளுமன்றத் தாக்குதல் என்பதும்; சிறையில் இருப்பவன் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணைத் தொடர்புகொள்வது என்பதும்; வெளியில் வந்தவுடன் அதற்குக் காரணமானவனைக் கொல்வதற்காக ஆயுதங்கள் சேகரித்தல் என்பதும் எவ்வளவு பைத்தியக்காரத்தனமான சிந்தனை பாருங்கள்! இந்திய போலிஸும், நீதிமன்றங்களும் தீவிரவாதிகளை அவ்வளவு லகுவாக நடத்துகின்றனவா என்ன? இந்த லட்சணத்தில்தான் இயக்குநர்கள் இருக்கிறார்கள்!
ஜோதி சிங்கும் அவள் காதலனும் ஏறுவதற்கு முன்னரே அதே பஸ்ஸில் ஏறிய ஒரு கார்பெண்டர் தாக்கப்பட்டார் என்று படித்தோம் இல்லையா? அந்தக் காட்சியை இந்த வெப் சீரிஸில் வைத்திருக்கிறார்கள். ஆனால் வேறு மாதிரி? தீபிகா (வெப் சீரிஸில் ஜோதி சிங்கின் பெயர்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபின், பிரச்சனை பூதாகரமாக வெடித்த பிறகு, கார்பெண்டர் போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். அவரிடம் “நீ ஏன் முதலிலேயே சொல்லவில்லை” என வர்த்திகா கேட்கிறார். “நான் யார்’ட்ட மேடம் கம்ப்ளைண்ட் குடுக்குறது?” என அவர் கேட்கிறார். “ஒருவேள அன்னைக்கி ராத்திரி அவர் கம்ப்ளைண்ட் குடுத்திருந்தா.. may be we prevent this..” என்கிறார் வர்த்திகா. உண்மைக்கு எவ்வளவு புறம்பாக ஒரு காட்சியை மாற்றுகிறார்கள்!
மேலே சொன்னதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், படம் முழுவதும் தில்லி முதல்வரைக் காட்டும் தொனிதான் எரிச்சலைத் தந்தது “எல்லா Chief Minister-க்கும் ஒரு கனவு இருக்கும். மொத்த போலிஸ் டிபார்ட்மெண்டையும் எப்பிடித் தன்னோட கட்டுப்பாட்ல வச்சிக்கலாம்’னு, இந்த சந்தர்ப்பத்த தில்லி முதல்வர் எதிர்பார்த்துட்டு இருக்காரு… எப்போ தன்னோட கண்ட்ரோல்ல எடுத்துக்கலாம்’னு… இந்த சிட்டியில இருக்குற Anti-police மனநிலையை அவர் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்குவாரு..” எனச் சொல்கிறார்கள்.
ஒரு கான்ஸ்டபிளைக்கூட நியமிக்க முடியாத ஷீலா தீக்ஷித்தைத்தான் அன்று போராட்டக்காரர்களும், பத்திரிகையாளர்களும் குறிவைத்துத் தாக்கினார்கள். 2019-இல் நிர்பயா வழக்கு சம்பவத்தைக் குறிப்பிட்டு மிரர் நவ் என்ற இதழுக்குப் பேட்டிக் கொடுக்கும்போது ஷீலா தீக்ஷித், “Blown out of proportion by media” (மீடியா இந்த விசயத்தைப் பெரிதாக்கிவிட்டது) என்று சொன்னதற்காக, தில்லி பெண்கள் ஆணைக்குழு தலைவி “Shameful Interview” என்றார். ஹரிஷ் ஐயர், சீமா ஜோஷி போன்ற சமூகச் செயல்பாட்டாளர்கள் எல்லாம் ஷீலாவைக் கடுமையாகத் திட்டினார்கள். ஆனால் இந்தச் செயல்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் ஹத்ரஸ் கற்பழிப்புச் சம்பவத்தைப் பற்றியோ; மணிப்பூர் சம்பவத்தைப் பற்றியோ இவ்வளவு கடுமையாகப் பேசுவதில்லை.
டெல்லி கிரைம் என்ற இந்த வெப் சீரிஸ் எத்தனையோ குறைகளோடு எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு விசயங்களில் கண் திறப்பைச் செய்தது என்று சொல்லுவேன். நிர்பயா வழக்கில் பாதிக்கப்பட்ட ஜோதி சிங்க் பற்றிதான் பேசுகிறோமே தவிர… அப்போது உடன் இருந்த அவளுடைய காதலன் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இந்த வெப் சீரிஸ் அதைப் பற்றிய தரமான பதிவு ஒன்றைச் செய்துள்ளது:
“நல்லா வாட்டசாட்டமா ஃபிட்டா இருக்குற ஒருத்தன் அவங்க எல்லாரையும்விட ஸ்ட்ராங்கா இருக்குறவன் யாரை வேணா அடிச்சிருக்கலாம்; பஸ் கண்ணாடிய உடைச்சிருக்கலாம்; சத்தம் போட்டிருக்கலாம். அவனோட மெடிக்கல் ரிபோர்ட்ட பாத்தீங்களா? ரொம்ப சின்ன அடிதான் பட்டிருக்கு. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணதும் சரி ஆயிருச்சு. எனக்குத் தெரிஞ்சு அடிவாங்குனதும் மயக்கம் போட்டு ட்ராமா பண்ணிருக்கான். எல்லாக் குற்றவாளிகளும் ஒரே விசயத்த சொல்லுறப்போ அது உண்மையாத்தான் இருக்கும். மூணு சஸ்பெக்ட்டும் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? அன்னைக்கு நைட்டு அவன தீபிகாவ தொடுறதுக்கு முயற்சி பண்ணியிருக்கான்’றாங்க. இவன் பண்ணுன வேலையாலதான் அந்தக் காட்டு மிராண்டிங்க தீபிகாவ அப்பிடிப் பண்ணியிருக்காங்க. பாவம் அந்தப் பொண்ணு இவன காப்பாத்தணும்’னுதான் ட்ரை பண்ணிருக்கா(ள்). பதிலுக்கு…?” என்று சொல்கிறார்கள்.
இந்தப் பதிவு ஜோதி சிங்கின் காதலன் பாண்டே என்பவனின் குணத்தைக் காட்டுகிறது. இதில் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. “நிர்பயா வழக்கு பற்றிப் பேட்டி கொடுக்க பாண்டே பணம் வாங்கினான்” என்று அவனைப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர் அஜித் அஞ்சும் கூறுகிறார். இந்த வெப் சீரிஸில் ஆகாஷின் (பாண்டே) அப்பா ஒரு வழக்கறிஞர் என்கிறார்கள். அதனால்தான் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பிவிட்டான் எனத் தோன்றுகிறது.
ஒன்று சொல்லிவிட்டேன் இல்லையா? இன்னொன்று படத்தில் ஓரிடத்தில் துணை ஆணையர் வர்த்திகா “குதூப் விஹார்ல ஒரு பொண்ண கேங்க் ரேப் பண்ணிக் கொன்னுட்டாங்க. ஆனா அந்த விசயம் இவ்ளோ பெரிசா யாரும் பேசல. ஏன்’னா அந்த ரேப்ப எந்த மீடியாவும் கண்டுக்கல” என்கிறார்.
இது தொடர்பாக ஓர் உண்மைச் சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள். பங்கஜ் என்பவரின் சகோதரிக்கு 13 வயதுதான். நிர்பயாவைக்கூட அடையாளம் தெரியாதவர்கள்தாம் கெடுத்துக் கொன்றார்கள். ஆனால் பங்கஜ் என்பவரின் சகோதரியைக் கூட்டுப் பலாத்காரம் செய்தவர்கள் எல்லாம் நன்கு தெரிந்தவர்கள்தாம். அதில் ஒருவன் அவளுடைய ஆசிரியர். இன்னொருவன் பக்கத்து வீட்டுக்காரன். பலாத்காரம் செய்ததோடு கூர்மையான மூங்கிலால் அவள் கழுத்தில் குத்திக் கொன்றிருக்கிறார்கள்.
பதிமூன்று வயதுச் சிறுமியை இவ்வளவு குரூரமாகக் கொன்றவர்களுக்குக் கீழ் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருக்கிறது. ஆனால் உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிட்டது. இந்த வழக்கைப் பற்றி எந்த மீடியாவும் பேசவில்லை. இப்போது பங்கஜ், நிர்பயாவின் (ஜோதிசிங்கின்) தாயார் உஷாராணியினுடைய உதவியை நாடியுள்ளார்.
வெறுமனே நிர்பயா வழக்கை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் இதுபோன்ற இந்தியச் சூழல்களையும் கருத்தில்கொண்டு பிரபல இயக்குநர் தீபா மேத்தா Anatomy of Violence என்ற படத்தை எடுத்துள்ளார். Leslee Udwin என்ற இங்கிலாந்து இயக்குநர் BBC உதவியுடன் India’s Daughter என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இவற்றில், BBC-யின் India’s Daughter என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் தடைசெய்துள்ளனர். அதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை.
இந்தியாவின் கல்வி பண்பாட்டுச் சூழல்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடப்பதற்குக் காரணம் என லெஸ்லி கூறியுள்ளதாகச் சொல்கின்றனர். இந்திய அரசின் அனுமதியின்றி நிர்பயா வழக்கின் குற்றவாளியான முகேஷ் சிங்கைப் பேட்டியெடுத்துள்ளார் என்பதும் ஆவணப்படம் தடைசெய்யக் காரணம் என்கின்றனர்.
“இந்த ஆவணப்படம் உலக அரங்கில் இந்தியாவைத் தவறாகக் காட்டும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது” என்று இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். “பிபிசி ஆவணப்படம் இந்தியச் சட்டத்தை மீறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது” என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார். இந்த ஆவணப்படத்தை எதிர்த்து வெங்கையா நாயுடுவும் குரல்கொடுத்துள்ளார். இத்தனை பேர் ஒன்றாகக் கூவுகிறார்கள் என்றால் அதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று நினைத்தேன். கடைசியாகத்தான் தெரிய வந்தது.
‘நிர்பயா வழக்கின்போது குரல்கொடுத்த பெண்ணியவாதிகளும், பெண்களுக்கான போராட்டக் குழுக்களும் கணிசமான இலாபம் பார்த்துள்ளார்கள்’ என்பதை ஆதாரப்பூர்வமாகச் சொல்கிறதாம் இந்த ஆவணப்படம். இன்றைய சூழலில் இந்தச் செய்தி நமக்கு எந்த ஆச்சர்யத்தையும் தராது! பத்தாண்டுகால மன்மோகன்சிங் ஆட்சி, பதினைந்தாண்டு கால ஷீலா தீக்ஷித் ஆட்சி ஆகியவற்றின் இறுதிக்காலத்தில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருந்தது. இந்தக் காலத்தில் பத்திரிகை, சமூகத் வலைதளம், ட்ரோல், சமூக ஆர்வலர்கள் ஆகிய எல்லோரையும் பிஜேபி அட்டகாசமாகக் கவனித்தது என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
அதனால் நிர்பயா மீது பரிதாபப்பட்டு எழுந்து நின்ற மக்களுக்குப் பின்னால் மிகப் பெரிய திட்டமிடல் இருந்தது. அதில் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் இருந்தது. ஆனால், அதுபற்றிப் பொதுமக்களுக்குத் எதுவும் தெரியாது. மீடியாவிற்கு இவை எல்லாம் தெரியும். நிர்பயாவைவிடவும் நிர்வாணமாகக் கண்ணீர்விட்டுக் கதறிய எத்தனையோ இந்திய மகள்களை எளிதாகக் கடந்து சென்ற வரலாறு மீடியாவிற்கு உண்டு என்பது நமக்குத் தெரியும்!
நிர்பயா வழக்கினால் இந்தியாவிற்குக் கிடைத்த பாஸிடிவ்வான விசயம் ஜஸ்டிஸ் வர்மா குழு அறிக்கை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எவை என்பதை இந்தக் குழு அடையாளம் காட்டுகிறது. அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகளையும் வழங்குபடி அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
திருமணம் என்பது பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்பப்படுத்துவதற்கான லைசென்ஸ் என்று கருதக்கூடாது.
பெண்களைக் கொச்சையான வார்த்தைகளைப் பேசி அவமானப்படுத்துவதும் பாலியல் வன்கொடுமையே
ஆண் உறுப்பு மட்டுமின்றி எந்த ஒரு பொருளையும் அவள் விருப்பமின்றி உடல் துவாரங்களில் சொருகுவது பாலியல் வன்கொடுமையே!
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விரைவாக விசாரித்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
போன்றவை எல்லாம் வர்மா குழு அறிக்கையில் உள்ளன. என்ன அறிக்கை வந்து என்ன பயன்? “கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரித்திருக்கின்றன” என்று பிபிசி ஆய்வறிக்கை கூறுகிறது.
ஜெய்ஹிந்த்…!