அண்ணன்கள் கதை 

1.

நாங்கள் பாலகர்களாக இருந்தோம்

ஒரு அண்ணனுக்கே உரிய

வழமைபோல் இந்தத் தம்பியை ஏமாற்றி

என் தீனி மொத்தத்தையும் அவனே தின்றான்..

என்னை விட்டுவிட்டு கிரிகெட் விளையாடப் போவான்…

மேலும், என்னை ஒரு நாளும் அவனுடைய சைக்கிளில் ஏற்றியதே இல்லை..

ஒரு நாள் காம்பஸ் அம்பால் என் பாதத்தைக் காயப்படுத்திவிட்டான்

அப்பா அதற்கு அவனுக்கு அடி கொடுத்தார்;

நான் தேம்பத் தேம்பிய அழுகையினூடே ஒரு கையளவு சிரித்தேன்.

அண்ணன்கள் திடீரென வளர்ந்துவிடுகிறார்கள்..

தன் பிராயத்தைச் சுத்தமாகத் துடைத்து

யாரிடமோ தந்துவிட்டதைப் போல

குணமே மொத்தமும் மாறி

சீக்கிரம் பொறுப்பை ஏந்தி அவன் என் கண் முன்னே நின்றான்…

நான் ஒரு வயசாளியைக் காணப் பொறுக்காது

என் புறங்கையால் அவனைத் தள்ளிவிட்டேன்.

பதின்மத்தில் கைவிடப்பட்ட தம்பிகளை

அண்ணன்கள் கரை சேர்க்கிறார்கள்..

தன் பால்யத்தைக் காவுகொடுத்து…

என்னை விட நன்றாகப் படிக்கும் அண்ணன்

ஏன் படிப்பை நிறுத்திவிட்டான்.

என்னை விட நன்றாக விளையாடும் அண்ணன்

ஏன் விளையாட்டை நிறுத்திவிட்டான்.

என்னை விட நிறைய நண்பர்களைக் கொண்ட அண்ணன்

ஏன் எல்லோரையும் துறந்தான்..

அவன் தூங்கும் போதும் அவன் தலைமாட்டில்

வறுமை உட்கார்ந்தபடி

தலையணையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தது

அந்தக் கனவிலும் அது என் மூச்சை அழுத்தாதபடி

அவன் எனக்குக் காவலிருந்தான்…

அப்பாவை நான் கடுமையாக வெறுத்தேன்..

அண்ணனை நான் அவர் ஸ்தானத்தில் இருத்தினேன்…

அண்ணன்கள் அப்பாக்களின் பொறுப்பை ஏற்கும் போது

நைச்சியமாக நாம் அவன்களைச் சுரண்டலாம்..

நான் ஒரு கவளம் அவனைப் பிட்டுத் தின்றேன்*…

அப்பா ஒரு கவளம் அவனைப் பிட்டுத் தின்றார்…

நான் சிறுபிள்ளையின் பாவத்துடன்

மீண்டும் அவனில் ஒரு கவளம் எடுத்துப் பிழைப்பாற்றினேன்;

பால்யத்தில் என் தீனியை அவன் பிடுங்கித் தின்றதற்குப்

பழிவாங்களா இது…

ஆனால் இங்கும் அம்மா வழமைபோல்

பசியுடனேயே எஞ்சினாள்

அந்தவகையில், அவன் அவள் சாயலைக்

கொஞ்ச கொஞ்சமாய்ச் சுமந்து வந்தான்;

என்ன இருந்தாலும் அம்மா பிள்ளை இல்லையா; ம்க்கும்…

5.

இருவரும் வளர்ந்துவிட்டோம்…

தோள் மேல் கை போட்டு நடந்தோம்…

கால் கால் போட்டு நடந்தோம்**…

ஒரே வண்ணச் சட்டையை உடுத்தி பவனி வந்தோம்…

பின்னே, குணத்தில் ரெண்டும் வேறு வேறு

நடத்தையில் ரெண்டும் எதிரெதிர் வண்டிகள்…

அசப்பில் கொஞ்சம் ஒத்துமையுண்டு…

ஆனால், இதுபோதுமன்றோ

இருவரும் ஒரு கலர் சட்டை போட..

6.

இருவருக்கும் வயதாகிவிட்டது..

இருவரும் பெரியவர்கள் ஆகிவிட்டோம்…

இரண்டு வளர்ந்தவர்களை அண்ணன் தம்பிகளாக

இருக்க யாருமே அனுமதிப்பதில்லை…

காலம் எங்களைத் தன் வாயால் கவ்வி,

கொண்டுபோய் போட்டு விட்டது…

தெருவின் அந்தக் கதியிலும்,

இந்த மூளையிலும்…

கைவிடப்பட்ட இரண்டு பப்பி நாய்க் குட்டிகளைப் போல

நாங்கள் இருவரும் எல்லோரும் இருக்கும் வீதியில்

ஒரு சொந்த நாயின் துணையில்லாததை எண்ணி

அவ்வப்போது கேவி அழுதோம்…

7.

அவ்வப்போது தோன்றும்

அழுகை முட்டிக் கொண்டு வரும்

ஆண் மகன் அழுதால் ஆகுமா… என்றான் ஒருவன்…

அந்தத் தடியை எடுத்து அவன் தாடையை உடை என்றேன்…

பொறுப்பெல்லாம் கூடிப் போனபின்னே,

உறவுகள் விரிசல் காண்பதுறுதி…

மறுமுறை ஒட்ட நினைத்தால்…

பணமொரு பாம்புபோல் நெளியும் குறுக்கே….

அதைத் தாண்டி அண்ணனை நினைக்க…

ஆயிரம் காரணங்கள் வேண்டியதில்லை…

இரு பாலகர்கள் போனால் போதும் முன்னே

ஒரு வண்ண சட்டை போட்டு…

(அண்ணன்களுக்கும் என் அண்ணன் கோபிக்கும்…)

 

  1. KitKat –ஐ சுவைத்தல்

 

எனக்கு எல்லா இனிப்புகளும்

பிடிக்கும்…

கிட்கேட்-ஐ ரொம்பவும் –

இனிப்புகள் அவள் மேனியைப் போன்றவை

கிட்கேட்-டோ நமக்கிடையிலான கலவியை ஒத்தது!

ஒரு கிட்கேட்டைத் தின்பதென்பது

அவளைப் புணர்வதைப் போன்றது….

மெல்லமாய் அதன் ஆடைகளை அவிழ்த்து

மெல்ல விலக்குவேன் அதனுடையதேயான

தேன் விரல்களை..

பிறகு உடைப்பேன் –

அந்த முதல் ‘நறுக்’ ஒரு போதை உணர்வு…

பின்பு, தீண்டுவேன் என் நுனி நாவால்

அதனை – ருசிப்பேன் – கடிப்பேன் – தின்பேன் –

கரைப்பேன் என் தேகத்தின் முழுமையில்

அதில் பாதியை உனக்குத் தருவேன்

உன் எச்சில் தொட்டு மீண்டும் தின்பேன்…

எனக்கு எல்லா இனிப்புகளும்

பிடிக்கும்…

கிட்கேட்-ஐ ரொம்பவே….

இனிப்புகள் அவள் மேனியைப் போன்றவை

கிட்கேட்-டோ நமக்கிடையிலான கலவியை ஒத்தது!

எனவே, நான் மறுப்பதே இல்லை ஒருநாளும்

இனிப்பு கிட்கேட்-ஐத் தின்ன!