எவ்வளவு வெயில் அடித்தாலும் கூட்டம் வருகிறது. அவ்வளவு மழை பெய்யும்போதும் குடை பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அரங்கின் உள்ளே நிற்க முடியவில்லை, வியர்த்து வழிகிறது. நெரிசலில் சிக்கித் திளைக்கிறார்கள்.
புத்தகத்திருவிழாவின் இந்த மூச்சுமுட்டும் இடிகளுக்கு நடுவில் எனக்குத் தோன்றும், மக்களுக்கு நிஜமாகவே வாசிப்பில் அவ்வளவு ஆர்வமா… அல்லது விடுமுறை நாள்களில் போக வேறு நல்ல இடமில்லாமல் இப்படி வருகிறார்களா. என் குழப்பத்திற்கு அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. உலகிலேயே மிக மோசமான அடிப்படை வசதிகளோடு நடத்தப்படும் ஒரு பிரமாண்ட புத்தகத் திருவிழாவுக்கு விருது கொடுத்தால்… அதில் முதல்பரிசை சென்னைப் புத்தகத் திருவிழாதான் வருடாவருடம் நிரந்தரமாகப் பெறும்!
என்னடா எடுத்த எடுப்பிலேயே 47 ஆண்டுகளாக நடக்கிற மாபெரும் புத்தகத் திருவிழாவைக் குறைசொல்லிக்கொண்டிருக்கிறாயே எனக் குற்றவுணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை நண்பர்களே. சில விஷயங்கள் எத்தனையோ ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது.
டென்ட்டு கொட்டகை. குடிநீர் வசதி, ஓய்விடம். விபரங்கள் சொல்லுமிடம், அவிழ்க்க முடியாத புதிர் போன்ற கடை எண்கள், ஆம்ஸ்ட்ராங்கே தடுக்கிவிழும் சறுக்குமரப்பாதைகள், நாற்றமடிக்கிற கழிப்பறைகள், அதிக விலை உணவுகள்…. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். கண்காட்சிக்குக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் , பதிப்பாளர்களிடம் கடைக்கு வசூல், உணவக டெண்டர்களில் வசூல், அரசு மானியம் பல லட்சம். இத்தனை பணத்தையும் வைத்துக்கொண்டு காற்றோட்டமான வசதியான பாதுகாப்பான ஒரு புத்தகத் திருவிழாவை நடத்தினால் என்ன குறைந்துவிடும்.
மாற்றுத்திறனாளிகள் வந்தால் சக்கர நாற்காலி வசதி உண்டா, பார்வையற்றோர் வந்தால் ப்ரெய்லி நூல்கள் விற்கிற கடை உண்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ உதவியாளர்கள் உண்டா, புத்தகங்கள் கொண்டு செல்ல ட்ராலி வசதிகள் உண்டா, யாருக்காவது எமர்ஜென்ஸி என்றால் ஆம்புலன்ஸ் டாக்டர் வசதி உண்டா… இந்த உண்டா குண்டாக்களை எல்லாம் மொத்தமாகத் தொகுத்து புத்தகத்திருவிழாவின் பிரச்சனைகள் என ஓர் ஆயிரம் பக்க நூலை எழுதலாம்.
வாசகர்களின் ஆதரவு சற்றேனும் குறைந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும். ஆனால், இத்தனை குறைகளையும் தாண்டி மக்கள் திரும்பத் திரும்ப ஏகோபித்த ஆதரவை அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள். டாக்ஸிக் ரிலேஷன்சிப்பிலிருந்து வெளியேற முடியாத காதலர்களைப்போலவோ அல்லது வாசிப்புப் போதைக்கு ஆட்பட்டு இப்படி வருகிறார்கள், மக்கள் ஆதரவு குறையும்வரை இது இப்படித்தான் இருக்கும்! ஆனால் அது குறையாது. ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதானே போகிறது!
என்ன ஆனாலும் நமக்குக் கடைசிவரை டென்ட்டு கொட்டகைதான்… மணல்மேடுதான். கால்வலிதான். கப்படிக்கும் கழிவறைதான். சாபவிமோனமே இல்லை!
எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை. புத்தகத் திருவிழாவில் ஒரு சிசிடிவி கடை வருடந்தவறாமல் இடம்பெறுகிறது. புத்தகத் திருவிழாவுக்கும் சிசிடிவி கேமராவுக்கும் என்ன தொடர்பு என பபாஸியும் கேட்கவில்லை வாசகர்களும் கேட்கவில்லை. யாருமே கேட்கவில்லை.
புத்தகம் போடுகிற எங்களுக்கெல்லாம் கடை தரமறுக்கிறார்கள் என இலக்கியப் பதிப்பகத்தினர் ஒருபக்கம் புலம்புகிறார்கள். ஆனால், இந்த சிசிடிவி கடைக்கு மட்டும் எப்படியோ வருடந்தோறும் கடை கிடைக்கிறது! சென்ற ஆண்டும் இந்தக்கடையைப் பார்த்தேன். அதற்கு முந்தைய முந்தைய முந்தைய முந்தைய ஆண்டும் பார்த்தேன். உலகில் எங்காவது இப்படி நடக்குமா தெரியவில்லை? புத்தகத்திருவிழாவில் இலக்கியப் பதிப்பாளர்களுக்குக் கடை கொடுக்காமல், சிசிடிவி கேமராக்காரர்களுக்குக் கடை கொடுப்பது… சிலை வடிப்பவர்களுக்கு க்கடை கொடுப்பது… போலிச் சாமியார்களுக்கு… ஒரே ஒரு புத்தகம் வெளியிட்ட தொழிலதிபர்களுக்கு… மென்பொருள் விற்பவர்களுக்கு… பொம்மை விற்பவர்களுக்கு என இந்தப்பட்டியல் பெரியது. வருங்காலத்தில் ரியல் எஸ்டேட், எம்எல்எம், சீரடி பாபா- ரிஷிகேஷ் ஆன்மிகச் சுற்றுலா, மூலம் பௌத்ரம் விரைவீக்கம், லேகியம், மந்திரித்த தாயத்து, ஆண்மைகுறைவு மாத்திரை விற்பவர்களுக்கும் கடை கொடுக்கலாம் நிறைய வருமானம் வரும்!
சென்ற ஆண்டு சால்ட் பதிப்பகத்திற்குக் கடை மறுத்தனர். சால்ட் எனப் பேர் வைத்தவர்களுக்கு ரோஷம் வராமல் இருக்குமா… கோபத்தில் புத்தகத் திருவிழாவுக்குச் செல்லும் பாதையில் கடையைப் போட்டு உட்கார்ந்துவிட்டனர். இந்த முறை சால்ட்டுக்குச் சத்தமில்லாமல் கடை கொடுத்துவிட்டார்கள். அவர்களும் சால்ட்டு சாப்பிடுவார்கள்தானே!
ஆனால் யாவரும், ஜீரோ டிகிரி மாதிரி பதிப்பகங்களுக்கு போதிய அளவு கடை தரமால் ஏய்த்து, பிறகு போனால் போகிறதென்று பொதுவாகக் கொடுக்கிற கடைகளைவிட பாதி அளவில் அசோகமித்திரன் கதைகளில் அவரைப்போலவே வருகிற இடுங்கிய ஒண்டுக்குடித்தன வீடுகளில் ஒன்றைப்போல ஏதோ ஒரு பொட்டிக்கடையைத் தலையில் கட்டியிருக்கிறார்கள்! மற்ற கடைகளை விடவும் சிறிய குறுகலான கடைகள், ஆனால் அதே வாடகை! பார்க்கப் பாவமாக இருந்தது.
இரண்டு மழைக்கே கடைக்குள் தண்ணீர் விழுந்து, புத்தகமெல்லாம் நனைந்து போயிருக்கிறது. ஜீவகரிகாலனும், ஜீரோடிகிரி காயத்ரி மற்றும் ராம்ஜியும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகச் சொன்னார்கள். மழையில் நனைந்த சவலைப்பிள்ளைகளென அரங்கிலேயே காயப்போட்டிருந்த ஈரமான புத்தகங்களைப் பார்க்க வருத்தமாக இருந்தது. புத்தகங்கள் மீது நேசமுள்ள யாருமே இப்படி ஒரு நிலைக்குக் காரணமாக இருக்க மாட்டார்கள். இதைப் பார்க்கவும் விரும்ப மாட்டார்கள். கேட்கிறதா திரு.பபாஸி அவர்களே உங்களைத்தான்! கொஞ்சம் மனது வையுங்கள்!
ஆண்டுக்கணக்காக சிஎஸ்கே தோனி போல ஆடிக்கொண்டிருந்த புத்தகத்திற்கு இந்த ஆண்டு ரிடையர்மென்ட் கொடுத்துவிட்டார்கள் வாசகர்கள். திருக்குறள், பாரதியார் கவிதைகள், அக்கினிசிறகுகள், டில்லி அப்பளத்திற்கு அடுத்து அதிகமாக விற்றுக்கொண்டிருந்த ஒரே புனைவு நூல். ஒரு படம் வெளியாகி மொத்தமாக முடித்துவிட்டார்கள். என்ன நூல் என்பதைச் சொல்லத்தேவையில்லை.
சீர் வாசகர்வட்டம் சார்பில் நன்செய் பதிப்பகம் இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் எனும் ஆயிரம் பக்க நூலை மலிவு விலைக்கு கொடுத்தார்கள். விற்றுத்தீர்ந்துகொண்டிருந்தது. அதே கடையில் கந்தர்வன் கதைகளும் நன்றாக விற்றது.
திருவிழா முழுக்க நாயகனாக இருந்தவர் பெரியார்தான்! எங்குப் பார்த்தாலும் பெரியார் நூல்களும் அந்த நூல்கள் விற்கிற கடைகளுமாக இருந்தன. எல்லா நூல்களும் நன்றாக விற்பதாகப் பதிப்பாளர்கள் சொன்னார்கள். பெரியார் நூல்களுக்கு ஒரு க்ரேஸ் உண்டாகி இருப்பதாகவும் இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வங்காட்டுவதாகவும் பலரும் சொன்னார்கள். சங்கிகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இக்காலத்தில் வெறியரசியல் செய்வோரிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள எதிர்கொள்ள பெரியாரியம் எனும் அறிவாயுதம்தான் தேவையாயிருக்கிறது!
விஜயபாரதம் கடையில் எப்போது பார்த்தாலும் பூஜை போட்டு பிரசாதம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். சுண்டல் புளியோதரை கொடுத்திருந்தால் நடையாய் நடக்கிற என் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்தாக அமைந்திருக்கும்! புத்தகம் விற்க வந்தது போலத் தெரியவில்லை.
உயிர்கொண்ட செல்ஃபி பாய்ன்ட்டாக மாறிவிட்டார் மனுஷ். உயிர்மையைக் கடக்கிற எல்லோருமே தவறாமல் அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இளைஞர்கள் அவருடைய ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா’ நூலோடு அவரை அணைத்துக்கொண்டு படமெடுப்பதைப் பார்க்கும்போது சக கவிஞர்களுக்கு மனிதர்களுக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் கூட வயிற்றில் எரிமலை வெடிக்கும்.
‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா’ அவருடைய ஐம்பதாவது நூல் என்பதால் அவர் எழுதிய ஐம்பது நூல்களையும் ஒரு மரத்தின் கிளைகள் போல செட் பண்ணி வைத்திருந்தது அழகாய் இருந்தது. அந்த நூலை வாங்குவோருக்கு அவருடைய படம் அச்சிட்ட ஃப்ளாஸ்க் கொடுத்தார்கள்! ஒன்று வாங்கிக்கொண்டேன். ஐம்பதுக்கு வாழ்த்துகள்.
செல்ஃபி எடுத்தவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு நூல்வாங்கி இருந்தால் கூட உயிர்மை அச்சடித்த அனைத்து புத்தகங்களையும் விற்றுத்தீர்த்து இரண்டு லாரிகளில் பணம் கொண்டு போயிருப்பார் மனுஷ்! ஆனால் பலருக்கும் செல்ஃபி மட்டுமே போதுமானதாக இருக்கிறது. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்று வருந்தியபடி அவரோடு ஒரு செல்பி எடுத்துக்கொண்டேன்!
தொ.பரமசிவன் நூல்களை நாட்டுடமையாக்கிவிட்டதில் எல்லாக் கடைகளிலும் அவர் நூல்கள்தாம் நிறைந்துகிடந்தன. அவருடைய நூல்களையே விதவிதமாகத் தொகுத்து வேறு வேறு பெயரிட்டு விற்கிறார்கள். ஏமாந்தால் ஒரே நூலையே நான்குமுறை வாங்க நேரிடும்! கவனத்தோடு வாங்கவேண்டும். புரட்டிப்பார்த்து வாங்கிவிடக்கூடாது என பிளாஸ்டிக் கவர் போட்டு விற்பவர்களுக்கு கருடபுராணத்தில் தண்டனை உண்டா?
சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்ராமகிருஷ்ணன் எனப் பழைய லெஜென்டுகள் மூவரும் தத்தமது கடைகளில் நின்று அனைவருக்கும் அருளாசிகள் வழங்கிக்கொண்டிருந்தனர். ஜெயமோகனோடு என்னதான் அரசியல் மோதல்கள் இருந்தாலும் நேரில் பார்த்தால் அன்பைக் கொட்டி அவரைக் கட்டிபிட்டித்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மார்க் ஜூகர்பெர்க்கையும் என்னையும் தவிர்த்து எல்லோருமே அவரோடு போட்டோ எடுத்து போட்டிருந்தார்கள். அவரும் தன்னை எவ்வளவு திட்டியவராக இருந்தாலும் மன்னித்து மறந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அன்பாகப் பேசினார். அவருடைய மகன் அஜிதன் பலருக்கும் ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார்!
சாருவின் சட்டைகளைப் பற்றித்தனியாக ஒரு தீஸிஸ் எழுதலாம். வருடந்தோறும் புத்தகத்திருவிழாவுக்கென்றே சட்டைகளை பிரத்யேகமாக சிலே, அர்ஹெந்தினாவில் இருந்தெல்லாம் இறக்குமதி செய்கிறாரோ என்னமோ… புதிதாக நகைகள் பளபளக்கின்றன. தென்னமெரிக்க நாடுகளில் கார்ட்டல்கள் வைத்து மாபியா வளர்க்கும் ஒரு காட்ஃபாதர் போல இருந்தார்! அப்படியே கொண்டு போய் மெக்ஸிகோவில் இறக்கிவிட்டால் பாப்லோ எஸ்கோபாரின் இந்திய மச்சான் என நம்பிவிடுவார்கள்!
எப்போதும் போலவே சம்பிரதாயப் புத்தகவெளியீடுகள் நிறைய அரங்குகளில் நடந்தன. பத்து பேர் கூடுவது, அதில் ஒருவர் புத்தகம் பற்றிப் பேசுவது, அவர் பேசுவது யாருக்கும் கேட்கிறதோ இல்லையோ யாரும் கவனிக்கிறார்களோ இல்லையோ பேசுவார். அவர் பேசிமுடிக்க அருகில் இருக்கிற எழுத்தாளர் கைதட்ட மற்றவர்களும் அதைக் கேட்டுக் கைதட்ட… இப்படியாக விழா முடியும். இந்த விழாக்களில் புத்தகம் இல்லாமல்கூட இருக்கலாம், ஆனால் ஜா.தீபா, சந்திரா, லதா அருணாச்சலம் எனச் சிலர் கட்டாயம் இருந்து புத்தகங்களை வெளியிட்டனர். நானும் நண்பர் பாஸ்கர் சக்தியும்கூட எங்கள் பங்குக்குச் சில நூல்களை வெளியிட்டு விழாவினைச் சிறப்பித்தோம்.
சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கூட்டம் குறைவுதான் என்றார்கள் டிஸ்கவரி வேடியப்பனும், எமரால்ட் பதிப்பக ஒளிவண்ணனும். ஆனாலும் ஒரளவு நல்ல விற்பனைதான் என்றனர். மகிழ்ச்சி. மிக்ஜாம் வெள்ளத்திலிருந்து சென்னை மீண்டெழுந்து இத்தனை வெற்றிபெற்றதே பெரிதுதான்!
ஏனோ பொங்கல் தின விடுமுறையின் போது கூட்டமே இல்லாம் ஈ ஓட்டிக்கொண்டிருந்தனர். மக்களெல்லாம் இப்போதெல்லாம் நீண்ட விடுமுறைக்கு ஊரை காலிபண்ணிவிட்டு வெகேஷன் போகத்தொடங்கிவிட்டார்கள் போல!
இந்தப் புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருந்த அதே காலத்தில் ஜனவரி 16 தொடங்கி 18 வரை தமிழ்நாடு அரசு நடத்துகிற சென்னை- பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் நடந்தது. பபாஸி நடத்துகிற கண்காட்சி வாசகர்களுக்கானது, அரசு நடத்தும் இது பதிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கானது.
சென்ற முறை ஒய்எம்சிஏ மைதானத்திலேயே நடத்தியவர்கள், இம்முறை விழாப்பெயர் குழப்பமாகிறது என்பதாலேயே நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் போய்விட்டார்கள். உலகைத் தமிழுக்குக் கொண்டுவருவோம், தமிழை உலகெலாம் கொண்டு சேர்ப்போம் என்கிற முழக்கத்தோடு இந்தப் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய முகவர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டுப் பதிப்பாளர்களும் சில எழுத்தாளர்களும்கூட கலந்துகொண்டனர். பல்வேறு மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பல்வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்க 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு!
மலேசியா நாட்டை கௌரவித்து அவர்களுக்கென சிறப்பு பெவிலியன் பண்ணி இருந்தார்கள். அந்நாட்டு அமைச்சர்கள் முக்கியப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வந்திருந்தனர். இந்த முறை தமிழ்நாட்டுப் பதிப்பாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பாளர்களக்கும் பாலமாகச் செயல்பட இலக்கிய முகவர்களைப் பயிற்சி தந்து நியமித்திருந்தனர். இலக்கிய ஏஜென்டுகள் கோட் போட்டுக்கொண்டு சீக்ரெட் ஏஜென்டுகள் போல வளைய வந்தனர். கோட்டுகளை மொத்தமாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள் போல! ஆனா நல்ல திட்டம், நம்மூர் ஆள்களுக்கு நிறைய உதவினர்! குறிப்பாக ஆங்கில உரையாடல்களில், நடைமுறைகளில்…
இந்தக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவனம் சார்பில் பத்து உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் நூல் வெளியிட்டனர். பெரிய விஷயம் இது! போலவே ஆசியாவில் முதன்முறையாக மருத்துவக்கல்விக்கான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். சத்தமில்லாமல் சாதனை!
இந்தப் புத்தகக்காட்சிக்குப் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களோடு பேச வாய்ப்புக்கிடைத்தது. தாய்லாந்தைச் சேர்ந்த தீரா என்கிற காமிக்ஸ் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளரிடம் பேசினேன். அவர்களுடைய ஊரில் 18-25 வயதுள்ளோர்தாம் அதிகமும் வாசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மாங்கா எனப்படும் காமிக்ஸ் வகையை விரும்பி வாசிப்பதாக சொன்னார். இங்கே அந்த வயதினர் ஒருத்தரும் படிப்பதில்லை எனச் சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை. மலேசிய எழுத்தாளர் கீதா ரொம்பவும் வருத்தப்பட்டு ஒருவிஷயம் சொன்னார். மலேசியாவில் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரையும் தெரியும், ஆனால் தமிழ்நாட்டில் மலேசிய எழுத்தாளர்களைத் தெரிவதில்லை என்றார். உண்மைதான் எனத் தலையாட்டிக்கொண்டேன். எனக்கும் யாரையும் தெரியாது! ஆனால் ஒரு நிறைவான விழா. ஏனோ பல எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வரவில்லை போல!
நம்மூர் பபாஸி புத்தகத்திருவிழாவுக்கு வண்டியைத் திருப்புவோம். ஆண்டுதோறும் நிறையப் புதிய எழுத்தாளர்களைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு நிறையப் புதுப்புது பதிப்பாளர்களைப் பார்க்க முடிகிறது! பேஸ்புக்கில் முன்பெல்லாம் என்னுடைய நூல் இந்தக்கடையில் கிடைக்கும் என்பது போன்ற பதிவுகளையே பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு எங்கள் பதிப்பக வெளியீடு என நிறையப் பதிவுகள்! அனைவருக்கும் வாழ்த்துகள்.
லோகேஷ் கனகராஜ் வாழ்க்கை வரலாறு வெளியாகி இருப்பதாகக் கேள்விப்பட்டு முதலில் அதிர்ச்சி அடைந்து தேடினேன். கிடைத்தது. உண்மையாகவே போட்டிருக்கிறார்கள். தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி வெளியீடுதான். நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். அதே கடையில் நிறைய புதிய வெற்றிப்பட திரைப்படங்களின் திரைக்கதைகளும் நூல்களாகக் கிடைத்தன. ஆச்சர்யமாகப் பல கடைகளில் இந்த முறை திரைக்கதை நூல்கள் காணக்கிடைத்தன. இது ஒரு புதிய ட்ரெண்ட். நாதன் பதிப்பகத்தில் இயக்குநர் பொன்.சுதா ஐம்பது மலையாளப்படங்களின் கதைகள் எனும் நூலை வெளியிட்டிருக்கிறார். நல்ல முயற்சி. சினிமா சார்ந்த நூல்கள் நிறைய வருவது நல்லதுதான்! பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ரஸ்கின் பான்ட் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் புத்தகக்காட்சியில் நிறைய சிறுவர்களையும் சிறுவர் நூல்களையும் பார்க்க முடிந்தது. நிறையச் சிறார் நூல்கள் வெளியாகின்றன. நண்பர் இனியன் எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக அம்முவுக்கு வயது 11 என்கிற நாவல் எழுதி இருக்கிறார். எழுத்தாளர் விழியனும், எழுத்தாளர் சரண்யாவும் இணைந்து சீட்டுக்கட்டில் சிறார்களுக்கான கணிதம் என்கிற புதுமையான நூலை வெளியிட்டுள்ளனர். விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நாவல்கள் ஆயிரக்கணக்கில் விற்றன. இன்னும் நிறைய விற்கவேண்டும். சிறார் நூல்கள் நிறைய நிறைய வெளியாகவேண்டும்.