இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு , ஏகமனதாக, தேர்தல் நிதிப் பத்திரம் தொடர்பான ஆட்சேப்ப் பொதுநல மனுவில் எழுப்பப்பட்டிருந்த அனைத்து ஆட்சேபங்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு, மோடி அரசின் தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானது ( UN CONSTITUITIONAL ) எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கூடுதலாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இனி எந்த்த் தேர்தல் நிதிப் பத்திரத்தையும் வழங்கக்கூடாது எனவும் ஆணையிட்டுள்ளது. மிக முக்கியமாக மார்ச் 15 தேதிக்குள் இதுவரை எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தேதியில் யார் யார் எவ்வளவு பணம் செலுத்தித் தேர்தல் பத்திரம் பெற்றனர் என்ற விபரத்தை வங்கி அனைவரும் அறியும்படி வெளியிட வேண்டுமென ஆணையிட்டுள்ளது. பெருமளவில் வரவேற்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு குறித்து ஆளும் பாஜக எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதுவரை வங்கியில் வாங்கப்பட்ட பத்திரங்களில் 90 % பாஜக விற்கு மட்டுமே. இந்தப் பிரச்னையின் மையம் யார் என்பதை விளங்கிக்கொள்ள இது ஒன்றே போதும்.. பாஜக தனக்காக, தனது வசதிக்குச் சட்ட விரோதமாக உருவாக்கிய திட்டம். அவ்வளவுதான்.. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இது தொடர்பில் என்னவிதமான மேல் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மர்மமே. உச்சநீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டு ‘ தீர்ப்பை’ மாற்ற முயலுமா? அல்லது அவசரச் சட்டம் பிறப்பித்துத் தங்களுக்குச் சாதகமான புதிய ‘ இன்னும் வெளிப்படையான, தனக்கு மட்டுமே சாதகமான ‘ சட்டத்தை உருவாக்குவாரா மோடி எனத். தெரியவில்லை. வங்கியிடம் இருக்கும் தகவல்கள், மற்ற கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும்தான் ரகசியம், ஆளும் மோடி அரசிற்கு/ பாஜக கட்சிக்கு முற்றிலுமாகத் தெரிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களாக அவர்களுக்குத் தகவல் பெறும் அதிகாரம் உள்ளது. தான் அறிந்த தகவலை, தேர்தல் நேரத்தில் தங்களைப் பாதிக்கக் கூடிய தகவலை பாஜக வெளியிட அனுமதிக்குமா? நூறு சதம் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
இது தொடர்பில் பணம் செலுத்திப் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தில் இருக்கும் ‘ ரகசியம் காக்கப்படும்’ எனும் விதியைக் காட்டித் தடை கோரலாம். பெறலாம். பெருமளவில் உச்சநீதி மன்றம் பாஜக அரசின் அதிரடிகளை, மக்களை மதரீதியாகப் பிரித்தாலும் கொள்கை முடிவுகளை ஆதரித்தே தனது தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு பேசப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பாப்ரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் நில உரிமை விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்டம் 370 தொடர்பிலான தீர்ப்பையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ரஃபேல் உட்பட் இன்னும் பல தீர்ப்புகள் பட்டியலில் இருந்தாலும், மேற்படி இரண்டு தீர்ப்புகளும் இதே விதமான மிக நீண்ட காலத் தாமதத்திற்குப் பிறகே வழங்கப்பட்டன என்பது கவனத்திற்குரியது. ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கு மீதான தீர்ப்பு, உச்சநீதி மன்ற வரலாற்றிலேயே, அதிவேகமாக்க் கண்ணிமைக்கும் நேரத்தில் வழங்கப்பட்டது. ஆக, ஆட்சியாளர்களின் மனப்போக்கிற்கு இணக்கமான தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் அடிப்படை இல்லையெனச் சொல்ல முடியாது என்றே கருதலாம். எனவே இந்த அதிர்ச்சியான தீர்ப்பு அதன் நோக்கத்தில் வெற்றி பெறுமா என்பதே கேள்விக்குறி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தேர்தல் நிதிப் பத்திரம் என்றால் என்ன?
இப்போது பெருமளவில் அறியப்பட்ட செய்தியாகி விட்டாலும், இந்தத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த சில அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்வது மிக அவசியமானது. அப்போதுதான் ’பத்திரங்களின்’ அரசியல் குறித்த விவாதங்களைத் தொடர முடியும். மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் 2014-19 ஐந்தாண்டுக் காலத்தில் இந்தியாவின் பலவிதமான ஆட்சியமைப்பின் அடிக்கட்டுமானங்கள் ( BASIC STRUCTURES OF GOVERNANCE ) வெகுவான மாற்றங்களுக்குள்ளாயின. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின்றியே, ஒன்றிய அரசின் இறையாண்மை கொண்ட தன்னாட்சி அமைப்புகள் தங்கள் அடிப்படைகளை இழந்து ‘ மோடி அரசின் ஏவல் நாய்களாக’ ஆக்கப்பட்டன. அப்படி முதல் தாக்குதலுக்குள்ளான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். என்னதான் அவ்வப்போது அரசியல் தலையீடுகள் உண்டெனினும், தேர்தல் ஆணையர்கள் , குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பார்ப்பனத் தேர்தல் ஆணையர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள். பிகார் மாநிலத் தேர்தலை, தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் நிறுத்தினார் டி என் சேஷன். அதே போல யு பி ஏ – 1-2 ஆட்சிக் காலத்தில், அப்போதைய தலைமைத் தேர்த்ல் ஆணையர் ”நாமதாரி” வி கோபாலசாமி , தேர்தல் ஆணையர் நவின் சவ்லா நீக்கத்திற்குப் பரிந்துரைத்தார். இருவரும் தமிழ் நாட்டைப் ( சேஷன் பாலக்காடு ) பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பனர்கள் என்பது கவனத்திற்குரியது.
ஆனால், இவர்கள் தங்கள் அதிகாரத்தை அகங்காரமாகப் பயன்படுத்தியது ஆர் எஸ் எஸ் / பா ஜ க ஆட்சியில் அமர வேண்டுமென்பது கருதியே. ஆதாரம் ? இதே கோபாலசாமி, இந்தியத் தேர்தல் ஆணையம் ‘ அடிமை சேவகம் ‘ செய்யும் நாளில், ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களை தன்னிச்சையாக தேர்வு செய்யும் அதிகாரத்தை, மோடி , தேர்வுக்குழுவிலிருந்து உச்சநீதி மன்ற நீதிபதியை ‘ நீக்கி ‘க் கைப்பற்றிக்கொண்ட நடவடிக்கையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல மறுத்து, மோடி அரசின் பல்வேறு ஆலோசனை அமைப்புகளில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். இதுதான் பார்ப்பனப் புனிதம். நேர்மை. பார்ப்பனப் புனிதவாதம், பிற்படுத்தப்பட்டவரை/ ஒடுக்கப்பட்டவரை அதிகாரத்திலிருந்து அகற்றப் போடப்படும் தந்திர நாடகம். நிற்க.
தேர்தல்நிதிப் பத்திரம், திரு. அருண் ஜெய்ட்லி, ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த போது 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். மோடி அரசின் ‘ கருப்புப் பண ஒழிப்பு ‘ அதிரடியின் போக்கில் அரங்கேறிய அவல நாடகத்தின் ஒரு பகுதி. நோக்கம் தேர்தலில் புழங்கும் கருப்புப் பணத்தை அடியோடு ஒழிப்பது. வெளிப்படையான ( TRANSPERENT ) பணப்பரிமாற்றத்தை உருவாக்கும் திட்டம். நல்ல திட்டம்தானே. வரவேற்க வேண்டியதுதானே. அது சரிதான். இனி நடந்தைப் பார்ப்போம். அப்போதுதானே எவ்வளவு வெளிப்படையான , உலகே வியக்கும்படியான திட்டம் என்பது தெரிய வரும் .
ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பல லட்சம் கோடிக் கருப்புப் பணத்தை ஒழித்துக் காட்டியவராயிற்றே. அந்த நடவடிக்கையில் அரசிற்கு நிகர நட்டம் பல்லாயிரம் கோடிகள் என்பதுதான் அந்த நடவடிக்கையின் ஒரே விளைவு. மற்றபடி 99.9 % புழக்கத்தில் இருந்த பணம் ரிசர்வ் வாங்கிக்குத் திரும்பியது. எந்தக் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்ற கேள்வி கூட இதுவரை மோடி அவர்களிடம் கேட்கப்படவில்லை. தனிமனிதர்கள் உயிரிழப்பு துவங்கி தவிப்பு/ நிம்மதியின்மை/ பணமிழப்பு இதில் சேராது. சரி இப்போது கருப்புப் பண ஒழிப்பு தேர்தல்நிதிப் பத்திரத்தைப் பார்ப்போம்.
தேர்தல்நிதிப் பத்திரம் , இந்தியாவின் முழுமையான அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ( பாரத வங்கியை என்ற பெயரைத் தவிர்க்க வேண்டி ) சில குறிப்பிட்ட கிளைகளில், வங்கி பணம் செலுத்தும் ஏதாவது ஓர் ஆவணத்தின் மூலம், தனிநபர்கள் (தனியாகவோ அல்லது பிறருடன் கூட்டாகவோ) தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்குச் செலுத்தும் அன்பளிப்பு. அந்த அன்பளிப்பை அந்த அரசியல் கட்சி அதன் விருப்பப்படி தனது, அதே வங்கியிலுள்ள ( ஸ்டேட் பாங்க் ) கிளையில் பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்த வங்கி மூலமான பணப்பரிவர்த்தனை தேர்தலில் ‘கருப்புப்பணம்’ புழங்குவதை நிறுத்திவிடும் என்பதே வாதம்.
ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தனிநபர்களோ, அமைப்புகளோ, நிறுவனங்களோ தேர்தல்நிதி அளிக்கும் முறை இருக்கவே செய்தது. அதில் ரொக்கப் பணமாக ரூ20000/- வரை மட்டுமே பெற வேண்டும். அதற்குக் கூடுதலான தொகைகளை வங்கிக் காசோலைகளாக அல்லது அது போன்ற வங்கி ஆவணங்கள் வழியாக மட்டுமே பெற வேண்டுமென்ற விதி இருந்தது. அதிலும் ஒரு தொழில் அல்லது வியாபார நிறுவனம் தனது நிகர வருவாயில் 7.5 % அளவில் மட்டுமே தேர்தல் நிதியாக வழங்கலாம். ஆம், நஷ்டத்தில் ஓடும் நிறுவனங்களால் நிதி வழங்க முடியாது. அந்த விதிகளின்படியான வரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு வழக்குகளாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள், குறிப்பாக மாநிலக் கட்சிகள், தங்கள் நிதி வரவை இருதாயிரத்திற்கும் கீழான தொகையாகவே வசூலிப்பதாகக் கணக்குக் காட்டின.
இந்த விதமான ரொக்க வரவைக் கட்டுப்படுத்துவதுதான் பாஜக வின் திட்டம். அதற்கு அவர்கள் வகுத்த விதிகள்தாம் அபாரமானவை. உலகின் எந்த நாட்டிலும் இந்த அளவு வெளிப்படையான தேர்தல் நிதித் திட்டம் இல்லவே இல்லை என்றே உறுதியாகச் சொல்லலாம். ஆம், ஏற்கனவே கண்டது போல, தேர்தல் நிதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டுமே செலுத்த முடியும். ஆனால் யார் பணம் செலுத்தியது என்ற விபரத்தை வங்கி வெளியிடக் கூடாது. அதன் குறிப்பிட்ட கிளைகளின் பணப்பரிவர்த்தனைகளை வெகுசில அதிகாரிகளே கையாள்வார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பத்திரமாக வாங்கலாம். யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை யாரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட அறிய முடியாது. எவ்வளவு வெளிப்படையான தேர்தல் நிதி வசூல்.
தேர்தல்நிதிப் பத்திரத் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது தேர்தல் ஆணையம். அடுத்ததாக இந்திய ரிசர்வ் வங்கியும் கடுமையாக எதிர்த்தது. இந்தவிதமான பணபரிவர்த்தனை சட்டவிரோதமானது என்று ஆட்சேபித்தன இரண்டு அமைப்புகளும். ஆம், அதுவரை அவை மிச்ச மீதியான உயிர்ப்புடன் இருந்தன. அதற்குப் பின்னரே அவற்றின் குரல்வளை முற்றாக நெறிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் , சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பல தரப்பும் , இது அயோக்கியத்தனமான திட்டம் என வெளிப்படையாக ஆட்சேபித்தனர். எதிர்ப்புதானே மோடி ஆட்சியின் மூர்க்கத்திற்குத் தீனி போடும் நடவடிக்கை. நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் எந்தவிதமான விவாதத்திற்கும் அனுமதியின்றி இந்தப் புதிய தேர்தல் நிதிமுறைச் சட்டம் நிறைவேறியது. மக்களவையில் பாஜக வை விடக் கீழ்ப்படிதலாக ஆதரவு வாக்களித்தனர் தமிழ்நாட்டின் 37 அ இ அ திமுக கட்சியினர். பாஜக வின் அத்தனை அராஜகச் சட்டங்களையும் எந்தவிதமான தயக்கமுமின்றி ஆதரித்து 2014-19 கால பாஜக ஆட்சிக்குத் துணை போனது இவர்களே. இவர்களது எண்ணிக்கை, குறிப்பாக மேலவையில், பலவித அயோக்கியச் சட்டங்களை நிறைவேற்ற உதவியது என்பது வரலாற்றுச் சோகம். மோடியா? லேடியா? எனக் கேட்டு வென்ற ஜெ அம்மையாருக்கு ஒரே ஆறுதல் பரிசு, அவரைக் குற்றவாளி என அறிவித்த உச்சநிதி மன்றத் தீர்ப்பு அவரது மரணம் வரை நிறுத்தி வைக்கப்பட்டதே. அந்த வகையில் உச்சநீதி மன்றம் தனது மரியாதையைக் கவனமாகச் செய்தது என்றே கருதலாம்.
உச்சநீதி மன்றமும் தீர்ப்புகளும்
உச்சநீதி மன்றம் பல வேளைகளில் மிகத் தெளிவாக, ஆனால் தேவைக்கு அதிகமான காலதாமதம் செய்து தீர்ப்புகளை அறிவிப்பதைக் கடந்த பத்து ஆண்டுகளாகவே தனது செயல்முறையாகக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் நிதி வழக்குக் கூட 2018 ஆம் ஆண்டிலேயே தொடரப்பட்ட வழக்கு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற தீர்ப்பை ஆறு ஆண்டுகள் கழித்து, ஆற அமர வெளியிட்டிருக்கிறது. இடையில் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, அந்த அவையின் காலமும் முடிவடைந்து அடுத்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே இருக்கும், எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கே தலைமையமைச்சர் மோடி அவர்கள் குஜராத் பொதுக் கூட்டமொன்றில் தனது கடுங்கோபத்தை நையாண்டியாக்கி, கிருஷ்ணன், குசேலன், ”அவல் பிச்சையென” உவமானங்கள் சொல்லி இந்தத் தீர்ப்பை நேரடியாகச் சாடியிருக்கிறார். அதாவது பாஜக பெற்றிருக்கும் 6566 கோடி தேர்தல் நிதி ‘ அவல்’ பிச்சையாம். அதற்கெதிராக வழங்கப்பட்டிருக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அதை ஊழல் என்கிறதாம். நியாயம்தானே. இந்திய அரசியல் கட்சிகள் பெற்றிருக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்களில் 90% மாக இருந்தாலும் 6566 கோடிகள் மட்டும்தான் எனும் போது பாரதீய ஜனதா கட்சிக்கு அது ‘ அவல் ‘ தானே. 7.5 லட்சம் கோடிக்கான சிஏஜி அறிக்கையின் ஊழல் குற்றச்சாட்டையே, 2ஜி போல தோராய நஷ்ட மதிப்பீடு அல்ல அஃமார்க் ஊழல், பேச விடாமல் வாயைத் தைத்து வைத்திருக்கிறது மோடி அரசு.
தினசரியாகக் கோடி கோடியாகச் செலவளித்து , இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களால், மகான், ஊழலற்ற புனிதர் எனக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் கொண்டவருக்குக் கோபம் வருவதில் தவறில்லையே. அதைவிட கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியைப் புனிதராக்கத் தினப்படிக்குச் செய்யும் கோடிகளிலான செலவுகள் ” தேர்தல் நிதி’க் கணக்கில் வராதே. அரசியல் விற்பன்னர்கள் பலர் பாஜக எப்போதுமே தன்னை ஒரு தேர்தலுக்கான தயாரிப்பு கொண்ட அமைப்பாகவே இருத்திக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கான உபயதாரர்கள் கார்ப்பரேட் ஊடகங்கள்.
அவற்றையெல்லாம் பாஜகவிற்கான ‘ நிதி நல்கை’ எனக் கொண்டால், பத்தாண்டுகளில் அவற்றின் ’நல்கை’ லட்சம் கோடியையும் தாண்டும்தானே. அதை மனத்தில் கொண்டுதான் மோடி அவர்கள் ‘ இந்தப் பிச்சைக் காசுக்கு’ ஒரு பொதுநல வழக்கு, அதைக் கொண்டு அந்த அருமையான தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம், சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தால் அந்த மகானுக்குக் கோபம் கொப்பளிப்பதில் பிழை என்ன? நியாயமாகச் சொல்வதானால், ஆர் எஸ் எஸ், பாஜக , மற்றும் மோடி உள்ளிட்ட சங் பரிவார் தலைவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி, தேர்தல், நாடாளுமன்றம் என்பவை அறவே பிடிக்காதவை. தேர்தல் அரசியல், அனைவருக்குமான வாக்கு என்பதும் கொள்கையாகவே ஏற்றுக் கொள்ள இயலாதவை. அவர்களது விருப்பம் இந்துத்துவா சர்வாதிகாரம், அதன் வழிகாட்டு நெறிகளாகச் சனாதன தர்மக் கோட்பாடுகளும், வர்ணாஸ்ரம தர்மமுமே அவர்களின் ஆதர்சம். மிகச் சாமனியனையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டிய தேர்தல் நடவடிக்கைகள் அலுப்பூட்டும் செயல்களே. கேமரா முன்னால் நிற்பது மட்டுமே இதில் அவரது ஒரே ஆசுவாசம். எனவேதான் இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு நாடு ஒரே தேர்தல் அதிலும் ஒருமுறை மட்டுமே தேர்தல் என்கிறது பாஜக.
தீர்ப்பு குறித்து கபில் சிபல் அவர்கள் தலைமையில் நடந்த தொலைக்காட்சி விவாதம்
உச்சநீதி மன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு குறித்த ஒரு விவாத அரங்கைக் காண வாய்த்தது. உச்சநீதி மன்றத்தின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் பல்வேறு துறைப் பொறுப்புகளை ஏற்றிருந்த கபில் சிபல் அவர்களின் நெறிப்படுத்தலில், முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மதன் பி .லோகூர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மற்றும் சுப்ரமணிய ஸ்வாமி ஆகியோர் பங்கேற்றனர். நீதியரசர் மதன் லோகூர் எடுத்த எடுப்பிலேயே, உச்சநீதி மன்றத்தின் மிகக் காலதாமதமான தீர்ப்பு குறித்தே பேசினார். அவர் அடிப்படையிலேயே எந்தவிதக் குறைந்தபட்ச ‘ வெளிப்படைத் தன்மையற்ற’ சட்ட வரைவை, 2018 ஆம் ஆண்டிலேயே விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். எந்தவிதமான காரணங்களுமற்ற காலதாமதம் சட்ட விரோதமான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு நெடுநாள் துணை போய் விட்டது என்றார். சட்டம் அதன் அடிப்படைகளிலேயே தவறானது, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்பது வெளிப்படையாகத் தெரிந்த பிறகு, தீர்ப்பைக் காலதாமதம் செய்தது பொறுப்பற்ற செயல் என்றார். இந்தப் பத்து ஆண்டுகளில் இந்தவிதமான தாமதங்கள் கூடிவிட்டன என்றார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, திட்டம் அறிவிக்கப்பட்ட போதே , இப்போது உச்சநீதி மன்றம் முன் வைத்திருக்கும் வாதங்களின் அடிப்படையிலேயே , அது சட்ட விரோதமானது எனத் தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்தது என்றார். கபில் சிபல் அவர்கள் பொதுநல வழக்கில் முன் வைக்கப்பட்ட அதே வாதங்களின் அடிப்படையில்தான் இப்போதைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் ஆறு ஆண்டுகாலக் காத்திருப்பு என்பதுதான் விளங்கவில்லை என்றார்.
சுப்ரமணிய ஸ்வாமி , மோடி அரசின் இந்தப் பொருளாதாரக் கொள்ளைகளிக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, மோடி யாருக்காக அரசை நடத்துகிறார் என்பது ரகசியமில்லை என்றார். கபில் சிபல், இந்தத் தேர்தல் பத்திரத்தின் திட்டங்களின்படி எந்த ‘ ஷெல் கம்பெனி ‘ ( போலி நிறுவனம் எனப் புரிந்து கொள்ளலாம்) எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலுத்தலாம், ஏனெனில் யார் செலுத்தியது என்ற கேள்வியை யாரும் கேட்க முடியாது. கூடுதலாக ஏற்கனவே இருந்த நிகர லாபத்தில் 7.5% மட்டுமே தொழில்/ வியாபார நிறுவனங்கள் தேர்தல் நிதியாக வழங்க முடியும் என்ற தடை நீக்கப்பட்டதால், முழு லாபத்தையும் கூடத் தேர்தல் நிதியாக வழங்கலாம். அவ்வளவு ஏன் நிகர நஷ்டம் (!) ஈட்டும் கம்பெனிகள்கூடத் தேர்தல் நிதி வழங்க முடியும். பெயரளவில் மட்டுமே இயங்கும், வெளிநாட்டு ’ வரி இல்லாத் தீவுகளில்’ ( மொரிஷியஸ், செஷல்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குஜராத் பனியாக்களின் ‘ கட்டுப்பாட்டில் ‘ உள்ளன.) இருப்பவை இந்தத் தேர்தல் நிதியைப் பாஜக விற்கு அனுப்பியிருக்கும் வாய்ப்பு அதிகம் என்பது விவாதிக்கப்பட்டது.
இந்தவிதமான ‘ வரியில்லாத் தீவுகளுக்கு’ இந்தியாவில் ஊழல் வழியாகக் கொள்ளையடிக்கப்படும், மிரட்டிப் பறிக்கப்படும் பாஜக நிதிகள், போலியான, விலை மதிப்பீடுகள் கூட்டப்பட்ட ஏற்றுமதிகள்/ இறக்குமதிகள் மற்றும் ஹவாலா மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று, இங்குத் திரும்பி இந்தியப் பங்குச் சந்தைகளில் ’முட்டுவது’ வாடிக்கையானது. அதுதான் பங்குசந்தைச் சூதாட்டத்தின் அடிப்படையே. அதை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் குஜராத்திகள். அதில் ஒரு சதவீதம் அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் நிதியாக ‘ மறுசுழற்சி ‘ கொள்ள உருவாக்கப்பட்டதாகவே இந்தத் திட்டத்தைக் கருத முடியும் என்பதும் விவாதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வெளியாகும்/ கசிய விடப்படும் செய்திகள், பாஜக விற்கான தேர்தல்நிதிப் பத்திரங்கள் வாங்கியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான நிறுவனங்கள். அமலாக்கத் துறை ரெய்டிற்கு ஆளானவை என்பது. அதாவது அமலாக்கத்துறையைக் கருவியாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கட்டாய வசூல். இந்தவிதமான தகவல்களை விபரங்களை எந்தக் காரணம் கொண்டும் வெளியாக அனுமதிக்காது இந்த ஒன்றிய அரசு. ஏற்கனவே ரஃபேல் ஊழல் விவகாரத்தில் , நடத்தப்படாத சிஏஜி அறிக்கையை நடந்ததாகக் கூறி , அதையும் ஒரு ‘ சீல்டு கவரில்‘ வைத்து நீதியரசர்களிடம் அளித்து, ‘ எல்லாம் முறையாக நடந்திருக்கிறது’ எனத் தீர்ப்பு வாங்கிய அனுபவம் கொண்டவர்கள் இவர்கள்.
தீர்ப்பின் பயன் விளைவு என்ன?
உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி, ஒருவேளை , இந்தப் போலியான தேர்தல்நிதி வரவுகள் அம்பலமானால், அவை முறையற்றவை எனத் தெரிய வந்தால், அந்தத் தேர்தல் பத்திரங்களை அரசு கையகப்படுத்தத் தீர்ப்பில் ஆணை இல்லை. எனவே அந்தத் தகவல், ‘ வெளிப்படுத்தப்பட்டது’ என்ற அளவில் மட்டுமே பயன்படும். அதுவும் மோடி அரசின் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. மார்ச் மாதத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு வெளியாகிவிடும். அதன் பின்னர் தேர்தல் காலக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்து விடும். எனவே உச்சநீதி மன்றமே எந்தவிதமான மேல் நடவடிக்கையையும் செயல்படுத்த முனையாது. கிருஷ்ணன், குசேலன் , அவல் எனக் கோபக் கனல் தெறிக்கப் பேசும் மோடி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையமோ, ரிசர்வ் வங்கியோ , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாக் கூட ஒரு சின்னவோ தகவலைக்கூட வெளியிடப் போவதில்லை. தேர்தல்நிதிப் பத்திரங்களை பாஜக தன் கணக்கில் கொண்டுள்ள போது, அந்தப் பணத்தை வரும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதில், இந்தத் தீர்ப்பின்படி, எந்தத் தடையும் இல்லை. எனவே ஒரு முறையற்ற நிதி வசூலுக்கெதிராகத் தீர்ப்பு வழங்கித் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது உச்சநீதி மன்றம் என்ற அளவில் மட்டுமே இந்தத் தீர்ப்பு அமையும். அது கடந்து எந்தப் பயன் விளைவும் ஏற்படும் என்பதற்கான முகாந்திரங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.