பல வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய வானவில் மேன்சன் கொலை என் காவல்துறை வாழ்க்கையில் ஓர்அசைக்க முடியாத ஊமைக்காயமாய்ப் படிந்துவிட்டிருக்கிறது.
அது நடந்த நாளுக்கும் என் பணி ஓய்வு தேதிக்கும் இடையே இருந்த எட்டு வருடங்களில் என் வாழ்க்கையிலிருந்து அத்தனை நிறங்களையும் அந்தக் கொலை வற்றச் செய்தது. சுசீலா மார்பகப் புற்றுநோய்ச் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துபோன நாளையும், இதோ உங்கள் முதல் பேரக் குழந்தை என்று சொல்லி டவலில் சுற்றிய ஒரு சிவப்புநிறச் சதை உருண்டையை நாதன் என் கைகளில் திணித்த நாளையும்கூட நான் எவ்விதமான உணர்ச்சியும் இன்றித்தான் கடந்தேன்..
வானவில் மேன்சன் கொலைக்குப் பிறகு எவ்விதமான குரூரமான கொலையும் என்னை வியப்படையவோ எனக்குள் கேள்விகளை எழுப்பவோ செய்யவில்லை. எதற்கும் உதவாத மிகச் சாதாரணமான பொருள் என்றாலும்கூட அதைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடிய ஆற்றலும், மனத்தில் அதைப் பற்றி நமது மனத்தில் இடையறாமல் கேள்விகளை எழுப்பிகொண்டே இருக்கும் தன்மையும்தான் வெற்றிகரமான போலீஸ் துப்புத் துலக்குதலுக்கும் காமத்துக்கும்கூட அடிப்படைத் தேவைகள் என்று நான் திடமாய் நம்புகிறேன்.
உதாரணத்துக்கு சுசீலா எந்தவொரு காரியத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது மூக்கைச் சுருக்கித் தனது வாயின் ஒருபுறத்தை நீட்டி தளர்த்துவாள். அவள் அப்படிச் செய்யும் போதெல்லாம் எனக்குள் காமம் பேயாய்க் கைகளைத் தலைக்கு மேலே வெறித்தனமாய் அசைத்துப் பெரும் கூல்குரலோடு எழுந்து நிற்கும். சுசீலா அப்படிச் செய்யும்போதெல்லாம் அவள் முகத்தில் ஏற்படும் மாற்றங்களின் கவர்ச்சியைக் கண்ட ஆச்சரியத்திலும் அந்த மாற்றங்கள் துல்லியமாய் அவள் உடலின் எந்தப் பகுதியிலிருந்து பிறக்கின்றன என்ற இடையறாத கேள்வியிலும் அவளை முழுமையாக ஆராயத் துடிப்பேன்.
சுசீலா சாகும்வரை மூக்கைச் சுருக்கி வாயோரத்தை நீட்டித் தளர்த்தும் பழக்கத்தை விடவில்லை. சாகும் தருணத்தில்கூட ஒருமுறை அப்படிச் செய்துவிட்டுத்தான் செத்துப் போனாள். அந்த நேரத்தில் சுசீலா ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவள் மாதிரி தெரிந்தாள். அப்போது சுசீலாவின் தலையை என் மடியில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வைத்திருந்தேன்.
நான் கட்டிலில் மிக நல்ல சாகசக்காரனாய் இருந்தவன் சார். அதைப்போலவே நல்ல போலீஸ்காரனாகவும் இருந்திருக்கிறேன். நான் கட்டிலில் ஆடிய ஆட்டத்துக்கும் போலீஸ்காரனாய்ப் பலவிதமான கொடூரமான கொலைகளைப் புலனாய்வு செய்து வெற்றி கண்ட ரெக்கார்டுகளுக்கும் ஒரே வயதுதான் – இருபத்தைந்து வருடம்.
வேறெதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். என் போலீஸ் பணிக் குறிப்புகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். வாஹாப் காட்டியிருப்பார். இன்னமும் அங்கேதான் இருக்கிறாரா? நல்ல மனிதர், இப்போது வயதாகி இருக்கும்.
வானவில் மேன்சன் கொலையின் விசாரணை முடிந்து கடைசிக் கோப்பைச் சுற்றிப் பருமனுள்ள ரப்பர் பேண்ட் போட்டு அலமாரியில் செருகியதற்குப் பிறகு எனக்குள்ளிருந்த ஆச்சரியமும் கேள்வியும் சுத்தமாய் உறிஞ்சப்பட்டிருந்ததால் எனக்கு அடுத்திருந்த வருடங்களில் வரவேண்டிய பதவி உயர்வுகளும் ஊதியச் சன்மானங்களும் வராமல் போயின. இருபத்தைந்து வருடமாய்ப் போலீஸில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் வேலை செய்துவிட்டு கடைசியில் நற்பணிப் பதக்கம் இல்லாமல் பணி ஓய்வு பெற்ற ஒரு போலீஸ்காரனைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் போலீஸ்காரன் நான்தான், சார்.
வானவில் மேன்சன் கொலை என் மொத்த
வாழ்க்கையின்மீதும் எனது சிந்திக்கும் ஆற்றல், கற்பனைத் திறன், மெய்யறிவு, பக்தி, விசுவாசம், செல்லப் பிராணிகளைக் கொஞ்சுதல், ஈவிரக்கம், காதல் என்ற அனைத்துக் குணாதிசயங்களின்மீதும் கண்ணுக்குத் தெரியாத கறையாக, இழுக்க இழுக்க இறுகும் பட்டுநூலின் பளபளப்பைக் கொண்ட மிக மெல்லிய பின்னல்களை உடைய, ஆனால் நாளாக நாளாகக் கனத்துக்கொண்டே போகும் பலமான இரும்பு வலையாகப் படிந்திருக்கிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வானவில் மேன்சன் கொலையை நான் புலன் விசாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து எனக்கு விறைப்பு ஏற்பட்டதே இல்லை. இப்போதுகூட ஓய்வு பெற்றுக் கடந்துபோன இந்தப் பதினெட்டு வருடங்களையும்கூட எப்போதோ பார்த்துப் பழகிப்போன மிகக் கொடூரமான பெயர் தரமுடியாத ஒன்றை மீண்டும் சந்திக்கும் எதிர்ப்பார்ப்போடு கழித்து வருகிறேன்.
பிற்பகல் நேரத்தில் மிகச் சாதாரணமான விதத்தில்தான் கொலை பற்றிய முதல் தகவல் எனது காவல் வாகனத்தின் வயர்லெஸ்ஸில் வந்தது. பக்கத்திலிருந்த காவல் வாகனங்கள் ஏற்கனவே அங்குப் போயிருந்தன. சாவு நடந்திருக்கிறது என்று உறுதி செய்யபட்டவுடன் என்னையும் வின்செண்டையும் அங்கே போகச் சொன்னார்கள்.
கேத்தரீன் டி’சூஸா அந்தக் காலத்தில் புகழ்பெற்ற விளம்பர அழகி. புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். வழக்கத்துக்கு மாறாக வானவில் மேன்சன் கட்டடத்தின் உச்சியிலிருந்த அவளது சொகுசு வீட்டின் வரவேற்பறையில் செத்துக் கிடந்தபோதும் அவள் புகைப்படங்களில் இருந்ததைவிட அழகாகவே இருந்தாள். நானும் வின்செண்டும் வீட்டிற்குள் நுழைந்தபோது டி’சூஸாவின் பொன்னிறமான தொடைகளிலிருந்து விலகியிருந்த ஆடையை உற்றுப் பார்த்தபடியே ஓர் இளம் காவல் அதிகாரி பக்கத்தில் நின்றிருந்தான்.
நான்தான் அவனை அப்புறப்படுத்தித் தூரத்தில் போய் நிற்கச் சொன்னேன். கேத்தரீன் டி’சூஸா உள்ளாடைகளை அணிவதில்லை என்று அந்தக் காலத்தில் நகரத்திலிருந்த எல்லோருக்கும் ஒரு தகவல் பரவியிருந்தது. அந்தத் தகவலை டி’சூஸாவே விளம்பரத்துக்காக வெளியே கசிய விட்டிருந்ததாய்ச் சொல்வார்கள்.
யாராலும் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டதாய் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் டி’சூஸாவோடு ஒரு பொது நிகழ்ச்சியில் அருகில் அமர்ந்து உணவுண்டபோது அவள் தொடையில் கைவைத்து அதை மேலேறிப் போக அனுமதித்த ஒரு வெளிநாட்டுப் பிரமுகரின் முகம் நெருப்பாய்ச் சிவந்து போன செய்தியை உள்நாட்டுச் செய்தித்தாள்கள் ஓரிரு நாள்களுக்குப் பெருத்த சிரிப்போடும் ஒரு ரகசிய குறுகுறுப்போடும் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டன.
அப்போது இருப்பத்திரண்டு வயதே ஆகியிருந்த கேத்தரீன் டி’சூஸா அந்தச் செய்திகளைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மேலும் பல பொது நிகழ்ச்சிகளில் வலம் வந்தாள். எதற்கும் அசராத அவள் மன உறுதியைக் கண்டு செய்தித்தாள்கள் அவளுக்கு ‘ஐஸ் குவீன்’ என்று பட்டம் தந்தன. பனி ராணி.
இப்போது போலீஸ் காலணிகளின் மெல்லிய புழுதிப் பூச்சு ரேகைகள் ஒன்றன்மீது ஒன்று வளையமிட்ட பளபளப்பான மோசைக் தரையில் ஐஸ் ராணியின் உடல் அசாதாரணமான நிலையில் கிடந்தது. சிவப்பு நிறத்தில் கைவைக்காத குட்டையாடை அணிந்திருந்தாள். அதற்குள் அவளது குறிப்பிடத் தகுந்த வகையில் பெரிதாக இருந்த திடமான மார்புகள் பொங்கி இருந்தன. முழங்கால்கள் ஒன்றோடொன்று நெருங்கியும் பாதங்கள் உடலிலிருந்து இருவேறு திசைகளில் நீண்டும் கிடந்தன.
இலையின் வடிவத்தில் இடது தோளில் படிந்திருக்கும் தூசுப் பந்தைப் அக்கறையோடு பார்க்கும் தோரணையில் அவள் முகம் திரும்பியிருந்தது. கொலை செய்யப்பட்டிருந்தால் கேத்தரீன் டி’சூஸாவின் கொலையாளி கடைசியாய் அவளை அணுகிய திசையாய் அது இருக்கக் கூடும். வரவேற்பறையை நிறைத்த வெயிலில் வெளிர் நிறத்தில் கிடந்த அவள் உடல் முழுவதிலும் ஆடையைப் பல்லாயிரம் கிழிசல்களாய் அரிந்து அவள் உடம்பைச் சலவைக் கல்லாய் நினைத்துக் கொத்திக் குதறியதைப்போல் வெட்சிப் பூக்களின் நிறத்திலும் வடிவத்திலும் கத்திக் குத்துக் காயங்கள். கிழிசல்களின் வழியே சிவப்பு ஆடையில் செவ்வானத்தில் தெரியும் நட்சத்திரங்களாய் அவள் உடம்பு மின்னியது. ஆனால் அவளைச் சுற்றியும் ஒரு சொட்டு ரத்தம் இல்லை.
“வேறெங்காவது கொலை செய்துவிட்டுப் பிணத்தை அவள் வீட்டிலேயே கொண்டுவந்து போட்டிருப்பானா?”
வின்செண்ட் கண்களால் பார்ப்பவற்றைவிடத் தாளில் எழுதிவைத்த தகவல்களை அதிகம் நம்புகிறவன். இது இளமைக்காலத்தின் கோளாறு. இந்தக் காரணத்தால்தான் சின்ன வயதில் ஆண்களும் பெண்களும் திருமணத்தை இத்தனை கோலாகலமாய்ப் பணத்தை அள்ளியிறைத்துச் செய்து கொள்கிறார்கள். ஒருவரின் முகத்தில் தெரியும் காமம் வெறுப்பு கோபம் என்பவற்றைவிடத் திருமணச் சான்றிதழ்தான் அவர்களைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரிந்த பிரமாணம். அல்லது திருமணச் சான்றிதழ்தான் அவர்களின் இடுப்பில் கட்டிய அரணா கயிறு. பெயர் தெரியாத ஏதோ ஒரு பயத்திலிருந்து ஏதேனும் தங்களைக் காப்பாற்றி விடாதா என்ற பரிதவிப்பில் வாங்கிக் கொள்ளப்படுகிறவைதான் அரணா கயிறும் திருமணச் சான்றிதழும்.
மீண்டும் ஏதேதோ பேசுகிறேன். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னருகில் வந்து நின்ற வின்செண்ட் கையில் கையகல நோட்டுப் புத்தகம் இருந்தது. நாங்கள் இருவரும் டி’சூஸாவின் வீட்டிற்குள் முதன்முறையாக நுழைந்த போது அவள் ஆடை விலகிய உடம்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளம் அதிகாரியிடமிருந்து விண்செண்ட் அதைப் பிடுங்கிக் கொண்டு வந்திருந்தான்.
நோட்டுப் புத்தகத்தின் தாள்களை விரல்நுனியால் முன்னும் பின்னும் அலைக்கழித்தபடி வின்செண்ட் மிகத் தாழ்ந்த குரலில் கிறுக்கலாய் எழுதியிருந்த குறிப்புகளைப் படித்தான்.
அப்படிப் படிப்பதற்கு முன்னால் தொண்டையைப் பலமுறை பலமாகச் செறுமிக் கொண்டான்.
“கே. கண்ணன் என்ற கேத்தரீன் டி’சூஸா. ஆண். வயது இருபத்தொன்பது. அப்பா பெயர் கிருஷ்ணன் த/பெ தியாகராசு. பிறந்த இடம்….”
வின்செண்ட்டுக்கு மட்டும் கேட்கும் மாதிரி நான் மிக மெல்லியதாய் விசிலடித்தேன். அப்படியென்றால் இங்கொன்றுமாய் அங்கொன்றுமாய் கேள்விப்பட்டிருந்த வதந்திகள் யாவும் உண்மைதான் போலும்.
“செத்தவனோட தொடை நடுவுல உத்துப் பார்த்துத்தான் இதையெல்லாம் கண்டுபிடிச்சாராமாம் உங்க ஆபீஸர்.”
முன்பு அந்த இளம் அதிகாரி எப்படி டி’சூஸாவின் தொடை நடுவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தானோ அதே விதமாய் வின்செண்ட்டும் இப்போது பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேள்வி கேட்கிறேன் என்று புலனானதும் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
“இல்ல சார். நாம இங்க வந்து சேர்ரதுக்குள்ள இவளோட – இவனோட – அடையாள அட்டைய வீட்டுல எங்கிருந்தோ துருவித் தோண்டி எடுத்திருக்கான் தே – பையன்.”
நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் காட்டினான். புத்தகத்தின் பின் அட்டை காகிதத்தின்மீது இளம்சிவப்பு நிறம் மின்னியது.
“இவன வச்சுச் சோப்பு விளம்பரமும், ஷாம்பு விளம்பரமும், பேபி பால் டின் விளம்பரமும் போட்டு சம்பாதிச்ச வியாபாரிகளுக்கும் பத்திரிகைகாரனுங்களுக்கும் இது தெரிஞ்சா ஆனந்தப்பட்டுப் போவானுங்க…”
டி’சூஸாவின் தொடையில் கைவைத்து முகம் சிவந்த வெளிநாட்டுப் பிரமுகரின் முகம் என் கண்முன்னால் மின்னி மறைந்தது.
வின்செண்ட் மேலும் தாழ்ந்த குரலில் என் காதருகே பேசினான்.
“பத்திரிகைகாரனுங்க வந்திருக்கானுங்க.
சொகுசு வீட்டின் வாசலில் நிழல்கள் ஆடுவது விழியோரமாய்த் தெரிந்தது.
“இவளைச் சுத்தி ஒரு சொட்டு ரத்தம் இல்லையே. கவனிச்சியா வின்செண்ட்?”
“கொலைகாரன் கொன்னுட்டு இங்க தூக்கிவந்து போட்டிருக்கலாம்.”
நான் முன்னால் நினைத்ததையே வின்செண்ட்டும் சொன்னான்.
“கொலை பண்ணவன் செத்த உடம்ப கவனமா மறச்சுட்டு அந்த இடத்த விட்டு ஓடி ஒளியப் பார்ப்பானா, இல்ல போலீசுக்கு உபகாரமா செத்தவங்க வீட்டுக்கே கொண்டு வந்து வரவேற்பறையில போட்டு வப்பானா? ஆனா இவ உடம்பச் சுத்தி கொஞ்சம்கூட ரத்தக்கசிவோ கறையோ இல்லாதது கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்குது.”
“ஒருவேளை தற்கொலையா இருக்குமோ?”
“ஒண்ணு பண்ணு வின்செண்ட். உனக்கு ஒரு கத்தி தரேன். நீ இதே மாதிரி உன் உடம்பு பூரா கொத்தியெடுத்த மாதிரி உன்னையே குத்திகிட்டுத் தற்கொலை பண்ணிக் காட்டு. நீ சொல்ற மாதிரி இது தற்கொலைனு நம்புறேன்.”
ஒரு கொலையின் புலன் விசாரணை என்பது தனக்கே உரிய அசைக்க முடியாத தர்க்க நியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு உடலும் நம் கண்முன்னால் அவிழ்ப்பதற்காகப் போட்டு வைக்கப்பட்டிருக்கும் கணக்குப் புதிர். முட்டாள் ஆசிரியர் மக்குத்தனமாய்ப் புதிரை ஓட்டைகளோடு போட்டு மாணவர்களின் கேலியை வாங்கிக் கட்டிக்கொள்கிறான். புத்திசாலி ஆசிரியன் போட்ட புதிரை மாணவர்கள் கடினமானது என்று வெறுத்தாலும் மனதளவிலாவது கைதட்டிப் பாராட்டுகிறார்கள்.
கேத்தரீன் டி’சூஸா என்ற கே. கண்ணனின் உடலும் அந்தக் குறிப்பிட்ட தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டு முதல் கட்டமாகப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
டி’சூஸாவின் உடம்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஐந்து நாட்களுக்கும் அவள் விளம்பர அழகியாய், பனி ராணியாய்த் தோன்றி ஜொலித்த அத்தனை செய்தித்தாள்களும் அவளை வெவ்வேறு வகைகளில் பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் கொலை செய்து மகிழ்ந்தன.
அதற்கிடையே அவளை விரும்பியதாகச் சொல்லப்பட்ட பல முக்கிய மனிதர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. நகரத்தின் தன்னிகரில்லாத பெருமை வாய்ந்த அழகுப் பொக்கிஷத்தைக் காக்கத் தவறிய போலீசாரின் மெத்தனமும் துப்புத் துலக்கி விசாரணையை வெற்றிகரமாக முடிக்க முடியாத கையாலாகாததனமும் தீவிரமாய் விவாதிக்கப்பட்டன. ஒரு பெண்ணை, தாய்மையின் பிரதிநிதியை பாதுகாக்கத் தெரியாத நகரமெல்லாம் ஒரு நகரமா என்று பத்திரிகைகள் காறி உமிழ்ந்தன.
டி’சூஸாவுக்கு முதன்முதலில் விளம்பர வாய்ப்பை வாங்கித் தந்த தொப்பை விழுந்த ப்ரொமோட்டர் சீனன் முதல் வானவில் மேன்சன் வாசலில் சிறுசிறு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வாளியில் வைத்துத் தயிர் விற்கும் கிழவிவரை டி’சூஸாவின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசச் சொல்லிப் பேட்டிகள் பிரசுரமாயின.
அதன் பிறகு ஊரே ஆராதித்து வந்த அழகு தேவதையான கேத்தரீன் டி’சூஸா ஓர் ஆண் என்பது மருத்துவ அறிக்கையின் மூலமாக ஊரெங்கும் கசிய அதே பத்திரிகைகள் அறச்சீற்றத்தோடு ஒரு மதிப்பு வாய்ந்த சமுதாயமே ஏமாற்றப்பட்டதற்காக ஆத்திரம் கொண்டன.
நான் இதற்கெல்லாம் கவலைப்படாமல் டி’சூஸாவின் சவ அடக்கச் சடங்குக்காகப் பொறுமையாகக் காத்திருந்தேன். தப்பிப் போன கொலைகாரர்கள் கடைசியாக ஒருமுறை கொலை நடந்த இடத்துக்கோ அல்லது தங்களால் கொலை செய்யப்பட்டவர்களின் இறுதிச் சடங்குக்கோ வருவார்கள் என்பது குற்றவியல் நியதி. கேத்தரீன் டி’சூஸாவின் கொலைகாரன் அப்படி அவளது இறுதிக் காரியத்துக்கு வந்தால் அவன் கண்களையோ நடவடிக்கையையோ வைத்து அவனைக் கண்டு பிடித்துவிடலாம் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
வின்செண்ட் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தேர்வுக்குப் படிப்பதுபோல் துருவித் துருவிப் படித்துக்கொண்டிருந்தான்.
டி’சூஸாவின் நல்லடக்கச் சடங்கு தேவாலயத்தைப் போலவும் நகர மண்டபம் போலவும் ‘ஒன்றில் இரண்டாக’த் தோன்றும் ஒரு கலவையான சொகுசு அரங்கில் நடந்தது. சர்ச்சுப் பாதிரியார்களின் அங்கியுமல்லாமல் காவித் துணியுமில்லாமல் நடுவாந்திரமாய் உடுத்தியிருந்த முன்வழுக்கை விழுந்த மனிதர் ஒருவர் உலகத் திருமறைகளிலிருந்து சிறு சிறு பகுதிகளைத் தெருவில் பெண்களின் உள்ளாடைகளைக் குவியலாய்ப் போட்டுக் கூவி விற்கும் ஒரு நடுத்தர ஆணின் தீவிரத்தோடு வாசித்தார்.
அவள் பெண் என்றே தீர்மானமாகி இருந்தால் வந்திருக்க வேண்டிய கூட்டத்தின் எண்ணிக்கையைவிட இப்போது வந்திருந்த கூட்டம் குறைவே என்றாலும், அரங்கைப் பொறுத்தவரை கணிசமாகவே இருந்தது.
டி’சூஸாவின் விளம்பரத் துறைத் தோழிகள், ப்ரோமோட்டர்கள், செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர்கள், பராக்குப் பார்க்க வந்த பொதுமக்கள், எல்லோரையும் மிரண்ட கண்களோடு பார்த்துக்கொண்டு நின்ற மாஜி கண்ணனின் குடும்பத்தார் என்று எல்லோரையும் முன்னால் விட்டுவிட்டு வின்செண்ட்டும் நானும் அரங்கத்தின் பின்னால் நின்று கொண்டோம்.
சடங்கு நடந்துகொண்டிருந்தபோது எனது போலீஸ் புத்திக்குச் சந்தேகமாய் யாரும் தெரியவில்லை.
ஆனால் நல்லடக்கச் சடங்கு முடிந்து கூட்டம் கிளம்பும்போது, டி’சூஸாவின் சவப்பெட்டியைத் தூக்கப்போன வாடகை நபர்களைத் தள்ளிவிட்டுப் பெட்டியைச் சுமந்த இருவர் என் கவனத்தை ஈர்த்தார்கள். இருவரும் ஒரே மாதிரியான கைவைத்த கறுப்புச் சட்டையும் பழுப்பேறிய கறுப்பு ஜீன்ஸும் அணிந்திருந்தார்கள். கால்களில் கான்வாஸ் காலணிகள். ஆனால் அவர்கள் முகங்கள்தாம் என் கவனத்தை ஈர்த்தது.
அரங்கத்தின் வாசலைத் தாண்டும்போதுதான்
என் புத்திக்கு விளங்கியது.
“ஏய், அவங்க கத்தியழகனின் கூட்டாளிகள்
இல்லையா?”
கத்தியழகன் என்ற முருகேசன் ஒரு காலத்தில் நகரத்தின் பிரபல ஆள் கடத்தல் மன்னன். உண்மையிலும் உண்மையான ரவுடிப் பயல். செம்பவாங்கில் இயங்கிய ஜப்பானிய உணவகம் ஒன்றில் துணை சமையல்காரனாக வாழ்க்கையைத் தொடங்கியவன். பணக்காரர்களைக் கடத்தி அவர்கள் குடும்பத்தாரிடமிருந்து பணம் பறிப்பது சமையலைவிட லாபகரமானது என்று ஆள் கடத்தல் தொழிலுக்குத் தாவினான். ஏழெட்டு ஆண்டுகள் அவன் அட்டூழியம் தொடர்ந்தது. பணம் தர மறுத்த குடும்பத்தாருக்கு அவர்களது அன்புக்குரியவர்களின் விரல்கள் அரிந்து அனுப்பப்பட்டன. தொடர்ந்து மறுத்தவர்களுக்கு அன்புக்குரியவர்களின் கொத்திக் குதறிய உடல்களும்.
இப்படி அவன் மாயமாய் மறைந்துபோகும் காலம்வரை முருகேசன் பதின்மூன்று கொலைகளைச் செய்திருந்தான்.
கத்தியழகன் ஜப்பானிய உணவகத்தில் சமையல் வேலை பார்த்தபோது விஷமுள்ள ஒருவகை மீனைச் சுத்தம் செய்து தருவதில் நிபுணனாம். மீனை அரியும்போது விஷம் சதைக்குள் பரவி விடாமல் இருக்க மிக கவனமாக வெட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த மீனைத் தின்பவர்களுக்கு அதோ கதிதான். இதற்கென்று நீளமான மிக மெல்லிய உடலோடு காற்றில் வீசினால் ரீங்காரம் எழுப்பும் ஒரு சிறப்பு கத்தி இருந்தது.
முருகேசன் அந்தக் கத்தியைக் கொண்டு ஆளை முடிப்பதில் கைதேர்ந்தவன். அதனால் அவனுக்குச் செம்பவாங் பகுதி மக்கள் கத்தியழகன் என்று பெயர் தந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கத்தியழகனுக்கும் ஒரு காதல் இருந்தது. டி’சூஸா சாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் முருகேசன் கடைசியாய் ஒரு பணக்கார அன்னாசிப் பழ வியாபாரியை ஒருவனைக் கடத்தினான். அவர் குடும்பத்திடமிருந்து ஒரு பெரும் தொகையைக் கறந்துவிட்டு மாயமாய் மறைந்து போனான்.
கடத்தலில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு முருகேசன் தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் போய்த் தங்கிவிட்டான் என்று நகரத்தில் வதந்தி பரவியிருந்தது.
டி’சூஸாவின் நல்லடக்கத்துக்கு வந்த அவன் கூட்டாளிகள் இருவரைப் பற்றியும் விசாரிக்க நான் அனுப்பிய சார்ஜெண்ட் என்னிடம் வந்து நின்றான்.
“தெளிவாய் விசாரித்துவிட்டோம். இருவரும் நான்கு மாதமாய் பிந்தானில் இருந்துவிட்டு அடக்கத்துக்கு முதல் நாள்தான் நகரத்துக்குத் திரும்பினார்கள்.”
ஒவ்வொரு கொலையின் புலன் விசாரணையும் அதன் தர்க்கத்துக்குக் கட்டுப்பட்டது என்றேன் இல்லையா? ஆனால் சில கொலை விசாரணைகள் கலைப்படைப்பைப்போல் தர்க்கத்தையும் மீறித் தமக்குரிய அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
தர்க்கமே இல்லாமல் வின்செண்ட்டைச் சில காரியங்களைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டு அனுப்பினேன்.
முப்பத்தாறு மணி நேரத்தில் வின்செண்ட் லேசாய் மூச்சிரைக்க வந்தான்.
“அற்புதம் சார். எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கச் சொல்லிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட முருகேசனின் மரபணுவோடு கண்ணன் – அதாவது காத்தரீன் டி’சூஸாவின் – உடலில் கிடைத்த விந்துத் துளிகள் ஒத்துப் போகின்றன. அதே மாதிரி அவள் உடம்பில் விழுந்த வெட்டுக்களைப் பரிசோதித்ததில் ஜப்பானியர்கள் மீன் விஷத்தை அகற்றப் பயன்படுத்தும் ஃபுகுஹிகி கத்தியோடு வெட்டுக்களின் வடிவமும் உடம்பில் இறங்கிய விதமும் ஒத்துப்போகின்றன என்பது உறுதியாகியுள்ளது.”
நான் வின்செண்ட்டின் அசையும் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் வியர்த்திருந்தது.
“அதுமட்டுமில்ல சார். காத்தரீனோட படுக்கையறையில கிடைச்ச இந்தக் கடிதத்தப் பாருங்க. முருகேசன் அவன் கடத்திப் போனவங்களோட குடும்பத்துக்கு எழுதுன கடிதங்கள்ல இருக்குற கையெழுத்தோட நூறு சதவிகிதம் ஒத்துப் போகுது.”
தப்பும் தவறுமாக எழுத்துப் பிழைகளோடு எழுதப்பட்ட சொற்கள். என் சொந்த முகத்தைப்போல் எனக்குப் பரிச்சயமானவை.
“டார்லிங் கண்ணா, நீ எனக்கு எப்பவுமே ஒரு ஆச்சரியம். நீ ஆம்பளையா இருந்தா என்ன? பொம்பளையாளா இருந்தா என்ன? தாய்லாந்துல நடக்கப் போற உன் ஆபரேஷனுக்காக நான் சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் அனுப்பினேன். ஆம்பளை உடம்பை நான் அணைக்கக் கூடாதுனு நீ உத்திரவு போட்டுவிட்டே. உன் ஆபரேஷன் முடிஞ்சு நீ வந்ததும் உன்னை ஆரத் தழுவி உன் உடம்ப அணு அணுவா அனுபவிக்க நினைச்சேன். ஆனா பத்து வருஷமா நீ என்னைப் பார்க்காம இருக்க. என்னையும் போலீஸ் தேடுது. ஆனால் இனிமேல் பொறுக்க முடியாது. நிச்சயம் ரெண்டு நாள்கள்ல உன்னைத் தேடி வரேன். உன்னை கண்டவனும் அனுபவிக்கிறதா கேள்விபடுறப்ப மனசு கோபமா கொதிக்குது. எனக்கு நீ இல்லனா நான் காசு சம்பாதிச்சு கொடுத்த உடம்ப திருப்பித் தா. இல்லைனா ரெண்டு நாள்ல நான் உன்ன பார்க்க வரப்ப என்னை அணைச்சு எனக்கு வாய் வலிக்க முத்தம் கொடு. கோபம் தீந்துடும். உன் உடம்புலயும் மனசுலயும் இருக்குற விஷத்த கவனமா எடுத்து வெளியே வீசிட்டா நீ சுத்தமானவனா மாறிடுவே. மறுபடி ஏமாத்தாதே கண்ணா. என் ப்ரியம் கத்திமுனையாட்டம் கூர்மையானது நீ புரிஞ்சுக்கணும். அன்புள்ள, உன் முருகேஸ்.”
பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், முருகேசனின் கடிதம் என்ற தாள்களில் உள்ள ஆதாரங்களைக் கையில் வைத்திருந்த குதூகலத்தில் வின்செண்ட்டின் முகம் ஜொலித்தது.
“முருகேசனை எப்படியாவது கண்டுபிடிச்சுக் கைது செய்ய வேண்டியதுதான் பாக்கி.”
ஆமாம், இதைத்தான் என்மீது நடந்த போலீஸ் விசாரணையிலும் கேட்டார்கள். வின்செண்ட்டிடமிருந்து கைப்பற்றிய சாட்சியங்களை நான் அழிக்க முயன்றதாய்ச் சொன்னார்கள். முருகேசன் இருக்கும் இடம் எனக்குத் தெரியும் என்றும் அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு அவனைப் போலீஸாரிடமிருந்து காப்பாற்றுகிறேன் என்றும் சந்தேகப்பட்டார்கள்.
என்ன, ஒருவேளை கத்தியழகன் உயிரோடு இருந்திருக்கலாம் என்கிறீர்களா? ஒரு விஷயம் சொல்லட்டுமா? வாஹாப் உங்களிடம் தந்த பணிக் குறிப்புகளில் இந்தத் தகவல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
முருகேசன் என்ற கத்தியழகனை நான்தான் சார் டி’சூஸா சாவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு செம்பவாங் கோப்பிக்கடைக் கழிப்பறையில் சுட்டுக் கொன்றேன். அன்னாசிப்பழ வியாபாரியைக் கடத்த உதவியதற்காக எனக்கு வரவேண்டிய தொகையைத் தராததால் நான் அப்படிச் செய்தேன். அவன் என் கண்முன்னால்தான் கைகால் இழுக்கச் செத்துப் போனான்.