‘அக்பர், சீதா என்ற பெயர் கொண்ட சிங்கங்கள் அருகருகே இருக்கக்கூடாது’ என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தொடுத்த வழக்கே கேலிக்கூத்தானது. அதனால்தான் அது சமூகவலைத்தளங்களில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கைவிடக் கேலிக்கூத்தானது, கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் எதிர்ப்பை ஏற்று அங்கீகரித்த நீதிபதி, ‘சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் “உங்களது செல்லப் பிராணிக்கு இந்துக் கடவுள் அல்லது நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?” என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் வினோதமான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தொடுத்த வழக்கின் முக்கியமான அம்சம் ‘விலங்குகளுக்குக் கடவுள் பெயர் சூட்டக்கூடாது’ என்பதல்ல. ‘இந்துப்பெயர் கொண்ட சிங்கம் இஸ்லாமியப் பெயர் கொண்ட இன்னொரு சிங்கத்துடன் இணைந்து இருக்கக்கூடாது’ என்பதுதான். இது எவ்வளவு அபத்தமான வாதம் என்பது குறைந்தபட்ச பொது அறிவுள்ளவருக்குக்கூட்த் தெரியும். மேலும் இது மதவெறி நோக்கம் கொண்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நியாயமாகப் பார்த்தால் இப்படிப்பட்ட அற்ப வழக்கைத் தொடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ‘நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக’ அபராதம்தான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிபதியோ விசித்திரமான தீர்ப்பை வழங்கி வினோதமான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
‘இந்துக்கள் நம்பிக்கையின்படி அக்பரும் சீதாவும் இணைந்திருக்கக்கூடாது’ என்ற இந்த அபத்தமான வாதத்தை நீட்டித்தால் சிங்கங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்குக்கூடப் பெயரிட முடியாது.
பரமசிவம் என்பவரின் மனைவி வள்ளி என்று வைத்துக்கொள்வோம். ‘புராணக்கதைகளின்படி பரமசிவத்தின் மருமகள்தான் வள்ளி. எனவே இந்தத் திருமணத்தையே ரத்து செய்ய வேண்டும்’ என்று வழக்குத் தொடுக்கப்பட்டால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? ‘ராமர், ராமு, ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்டவருக்கு சீதா, ஜானகி என்ற பெயர் கொண்டவர்தான் மனைவியாக அமைய முடியும்’ என்று உத்தரவு பிறப்பிக்குமா?
அடுத்து ‘செல்லப்பிராணிகளுக்குக் கடவுள் பெயரை வைப்பீர்களா?’ என்ற அபத்தக்கேள்விக்கு வருவோம்.
பசுமாடு என்பதே லெட்சுமியின் அம்சம் என்பதுதான் இந்துமத வைதீக நம்பிக்கை. காமதேனு என்னும் பசுமாட்டின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள் என்பதும் வைதீக நம்பிக்கைதான். வெவ்வேறு விலங்குகளின் முகம் கொண்ட கடவுள்கள் இந்து மதத்தில்தான் உண்டு. பெயர் வைப்பதே கடவுளை அவமதிப்பது என்றால் விலங்குகளின் உருவம் கொண்டிருப்பது எந்தக் கணக்கில் வரும்?
கோயில்களில் உள்ள யானைகளுக்கு எல்லாம் கடவுள் பெயர்தானே வைக்கப்பட்டிருக்கிறது. அது இழிவுபடுத்துவது ஆகாதா?
செல்லப்பிராணிகளுக்குத் தங்களுக்குப் பிடித்த கடவுள்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகச்சாதாரணமான நடைமுறை என்பது இந்த நீதிபதிக்குத் தெரியவே தெரியாதா?
‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தில் நாய்க்குட்டியின் பெயர் சுப்பிரமணி. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் கழுதைப்புலிக்கு ‘சுப்பிரமணி’
என்று பெயர் சூட்டியிருக்கிறார். யாராவது ‘முருகப்பெருமான் பெயரை எப்படி வைக்கலாம்?’ என்று வழக்குத் தொடுத்தால் அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?
ஒரு விலங்குக்குச் சூட்டப்படும் பெயர் கடவுளை இழிவுபடுத்துகிறது என்றால் குஜராத்தில் ஒரு வனவிலங்குப் பூங்காவுக்கே சர்தார் வல்லபாய் படேல் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே, 2020இல் அதைத் திறந்து வைத்ததே பிரதமர் மோடிதானே, அப்படியானால் அது படேலை அவமானப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
ஏன் இப்படியான அற்ப விஷயங்களை இந்துத்துவவாதிகள் கையில் எடுக்கிறார்கள் என்றால் அசலான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பத்தான். உலகம் முழுக்க பாசிசத்தின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்திருக்கின்றன. இன்னொரு சமீபத்திய உதாரணம், உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டம். இந்தச் சட்டத்தின்படி ‘ஒருவர் தன் அக்கா பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாது’. இது இந்துக்களின் பல்வேறு சாதி நடைமுறைகளுக்கே எதிரானது.
முற்போக்காளர்கள் சாதிமறுப்புத் திருமணங்களை வலியுறுத்துகிறார்கள்; சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது அறிவியல்பூர்வமாக மோசமான செயல்பாடு என்பதை விளக்குகிறார்கள். ஆனால் பா.ஜ.க அரசின் பொதுசிவில் சட்டம் அக்காள் பெண்ணைத் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பது ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்யக்கூடாது என்ற சனாதனத்தைக் காப்பாற்றவே.
முதலில் இந்தப் ‘பொது சிவில் சட்ட’த்தில் இருக்கும் ‘பொது’ என்பது எந்த மதிப்பீடுகளில் இருந்து உருவாக்கப்பட்டது? சாதி, மதம் ஆகியவற்றில் இருந்து விலகி நிற்கும் முற்போக்கு விழுமியங்களில் இருந்துதானே ‘பொது’ மதிப்பீடுகள் உருவாக முடியும்! தன்பால் காதலையும் அங்கீகரித்து அந்தத் திருமணத்துக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று முற்போக்காளர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்துத்துவவாதிகளின் ‘பொது சிவில் சட்டம்’ அதை அங்கீகரிக்குமா? அங்கீகரிக்காது என்றால் இந்தப் ‘பொது’ என்பதே பார்ப்பன – சனதான நடைமுறைகளை மற்றவர்கள் மீது திணிப்பதுதானே? அப்புறம் என்ன அது ‘பொது’?
மேலோட்டமாகப் பார்த்தால் ‘பொது சிவில் சட்டம்’ என்பது முற்போக்கானதாகத் தெரியும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே என்ற நியாயமும்கூடக் கற்பிக்கப்படும்.
பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதில் இந்துத்துவவாதிகள் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியா போன்ற பன்மைத்துவ நிலப்பரப்பில் எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டங்கள் சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்தம்.
இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் பொதுவாக சிவில் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதல்ல நோக்கம்; எல்லோருக்குமான பொது எதிரியாக இஸ்லாமியர்களை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கம். அதனால் இதை ‘பொது எதிரி சிவில் சட்டம்’ என்றுகூட அழைக்கலாம். தங்கள் நோக்கங்கள் நிறைவேறுவதற்காக எத்தகைய பொய்யையும் சொல்லத் தயாரானவர்கள் இந்துத்துவவாதிகள். அப்படித்தான் காஷ்மீரின் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யும்போது ‘காஷ்மீரும் இந்தியாவின் அங்கம்தானே, அதற்கு மட்டும் ஏன் சிறப்புச் சட்டப்பிரிவு? 370 ரத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர்கள்’ என்ற கதையாடலை விரித்தார்கள்.
ஆனால் உண்மையில் காஷ்மீருக்கு மட்டுமே சிறப்புச் சட்டப்பிரிவு நடைமுறை இல்லை. மிசோராம், நாகலாந்து மாநிலங்களுக்கு 371 சட்டப்பிரிவு இருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவின்படி, நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை, அந்த மாநிலங்களின் சட்டமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும். ஒருவேளை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் தங்கள் மக்களின் பண்பாடு, உரிமைகளுக்கு எதிரானது என்று சட்டமன்றம் கருதினால் அந்தச் சட்டங்களை நிராகரிக்கலாம். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது ‘தங்களுக்கே உரிய 371வது சட்டப்பிரிவும் ரத்து செய்யப்படுமோ’ என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் ‘371வது பிரிவு ரத்து செய்யப்படாது’ என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது. அப்படியானால் ‘இந்திய இறையாண்மை’ என்ற நாடகமெல்லாம் காஷ்மீர் முஸ்லீம்கள் அதிகமுள்ள மாநிலம் என்பதால் மட்டும்தான்.
இப்போதும் அதே தந்திரத்தைத்தான் பா.ஜ.க பொது சிவில் சட்டத்திலும் கடைப்பிடிக்கிறது. எப்படி காஷ்மீருக்கு மட்டுமே சிறப்புப்பிரிவு இல்லையோ அதேபோல் முஸ்லீம்களுக்கு மட்டுமே தனித்த சிவில் சட்டங்கள் என்பது இல்லை. முஸ்லீம்களைப் போலவே இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கும் தனித்த சிவில் சட்டங்கள் உள்ளன.
புதுச்சேரியில் உள்ள ஓர் இந்து விரும்பினால், பிரெஞ்சுக்கால சிவில் சட்டங்களைப் பின்பற்றலாம். கோவாவில் உள்ள ஓர் ஆண் தன் மனைவிக்குக் குழந்தையில்லை என்ற காரணம் காட்டி இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம். மதங்களுக்கு மட்டுமல்ல, மாநிலங்களுக்கும்கூட சிவில் சட்டங்களில் சிறப்புச்சலுகைகளும் வேறுபாடுகளும் உண்டு. 1989இல் கலைஞர் அரசு பெண்களுக்கான சொத்துரிமையைக் கொண்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமேயான தனித்த சிவில் நடைமுறை. இப்படி ஏராளமான உதாரணங்களை அடுக்கலாம்.
ஆனால், முஸ்லீம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ‘அவர்கள் ஷரியத் சட்டங்களையே பின்பற்ற விரும்புகிறார்கள். பொது சிவில் சட்டத்தை ஏற்பதில்லை’ என்று பொய்ப்பிரசாரத்தைக் கட்டவிழ்க்கிறது இந்துத்துவம். கிரிமினல் சட்டங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே நடைமுறைதான். அரபு நாடுகளில் உள்ள கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று இஸ்லாமியர்கள் அடம் பிடிப்பதில்லை. சிவில் சட்டங்களில்கூட்த் திருமணம், மணவிலக்கு, தத்து போன்ற சில நடைமுறைகளில் மட்டும்தான் வேறுபாடு. ஓர் இந்துவுக்கும் இஸ்லாமியருக்கும் சொத்துப்பிரச்னை, நிலத்தகராறு என்றால் அது பொதுவான சட்ட நடைமுறைகளின்படிதான் தீர்க்கப்படுகிறது. வீட்டுக்கடன் வாங்கும் இஸ்லாமியர் ‘வட்டி வாங்குவது எங்களுக்கு ஹராம். எனவே நான் அசலை மட்டும்தான் கட்டுவேன்’ என்று சொல்லமுடியாது.
திருமணம், மணவிலக்கு, தத்து போன்றவற்றில் வெவ்வேறு மதங்களுக்கு மட்டுமல்ல, இந்து மதத்துக்குள்ளேயே வெவ்வேறு சாதிகளில் நடைமுறைகள் வேறுபடுகின்றன. எனவே இந்தப் பண்பாட்டு வித்தியாசங்களை ஒழித்து ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியாது. அப்படி ஒரு ‘பொதுவான’ நடைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் இப்போதே சட்ட நடைமுறைகள் உள்ளன.
உதாரணத்துக்குத் தமிழ்நாடு அரசின் ‘சிறப்புத் திருமணச்சட்டம்’.. இந்தச் சட்டத்தின் கீழ்தான் சுயமரியாதைத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஓர் இஸ்லாமிய ஆணோ பெண்ணோ இஸ்லாமியர் அல்லாத இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், திருமணத்தில் இஸ்லாமியத் திருமண நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று நினைத்தால் ‘சிறப்புத் திருமணச் சட்டத்தின்’படி திருமணம் செய்துகொள்ளலாம்.
மேலும் ஒவ்வோர் இனக்குழுவிலும் உள்ள நடைமுறை ஆணாதிக்கத்தனமானது, பிற்போக்குத்தனமானது என்றால் அதைச் சீர்திருத்துவதற்கான ஏராளமான சட்டங்கள் அவ்வப்போது கொண்டுவரப்படத்தான் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ‘பொது சிவில் சட்டம்’ என்பது இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்த விரும்பும் இந்துத்துவத்தின் அரசியல் அஜெண்டாவைத் தவிர வேறில்லை.
இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே ‘பொது சிவில் சட்டம்’ என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கத்தான் பா.ஜ.க. விரும்பியது. ஆனால் வடகிழக்கு மாநிலப் பழங்குடிகளிடம் எழுந்த எதிர்ப்புதான் அந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்தது. எனவே பொது சிவில் சட்டம் என்பது பூச்சாண்டியே தவிர, அவ்வளவு எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடியதல்ல.
இத்தகைய பிளவுவாத அற்பச்செயல்களில் ஈடுபடுவதன் மூலம் அசலான தன் கோர முகத்தை மக்கள் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்றே இந்துத்துவம் முயல்கிறது. பத்தாண்டுக்கால பா.ஜ.க அரசில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. விவசாயிகள் போராடுகின்றனர்; சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நசிந்திருக்கின்றன; பிழைக்க வழியின்றி வட இந்திய, வடகிழக்கு உழைக்கும் மக்கள் உள்நாட்டு அகதிகளாகத் தென்னிந்தியா நோக்கிப் படையெடுக்கின்றனர்; கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை அதிகரித்திருக்கிறது; டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் மேலும் வீழ்கிறது. இவை எதையுமே மோடி அரசால் தடுக்க முடியவில்லை. பணமதிப்பிழப்பு, வண்ணமயமான ரூபாய் நோட்டுகள் அறிமுகம், பிறகு அத்தனையும் திரும்பப்பெறுவது என்னும் அதன் முட்டாள்தனமான நடவடிக்கைகள் வீழ்ச்சியையே விரைவுபடுத்தியிருக்கிறது. சொல்வதற்கு பா.ஜ.க.விடம் எந்தச் சாதனைகளும் இல்லாததால்தான் மீண்டும் மீண்டும் அற்பத்தனமான பிளவுவாத உத்திகளிலேயே ஈடுபடுகிறது.
மறுபுறம் மிகக்கொடூரமான ஊழல்களில் ஈடுபட்டுக்கொண்டே, எதிர்க்கட்சிகளை வசைபாடித் தன்னைத் தூய்மையான அரசியல் கட்சியாக முன்னிறுத்திக்கொள்கிறது. இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளை உடைக்கவும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவும் பயன்படுத்தப்படும் பணம் கறுப்புப் பணமல்லாமல் என்ன? அதைவிட என்ன பெரிய ஊழல் இருக்க முடியும்?
ஊழலைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கவே ‘தேர்தல் பத்திரம்’ என்னும் நடைமுறையை மோடி அரசு கொண்டுவந்தது. ‘தேர்தல் பத்திரம் ரத்து’ என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஊழல் முகத்தைத் தோலுரித்திருக்கிறது. இதேவேளையில்தான் Newsminute, Newslaundry என்னும் இரு ஊடகங்கள் இணைந்து பா.ஜ.கவின் மெகா ஊழலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்களைக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை புலப்பட்டிருக்கிறது. இந்த ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்கள் எல்லாமே உடனடியாக பா..ஜ.கவுக்கு நன்கொடைகளை அள்ளி வழங்கியிருக்கின்றன, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 335 கோடி நன்கொடைகளைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதில் 16 நிறுவனங்கள் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற 2014 முதல் ரெய்டு நடந்த தினம் வரை பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிக்காதவர்கள். ரெய்டுக்குப் பிறகே நன்கொடை அளித்திருக்கின்றன. 6 நிறுவனங்கள் தொடர்ச்சியாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கும் நிறுவனங்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு நிதியாண்டில் அவை பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கவில்லை. உடனடியாக ரெய்டு பாய்ந்திருக்கிறது. சாலையோர வியாபாரிகளை மிரட்டி மாமூல் வாங்கும் ரவுடியைப் போலத்தான் நடந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதற்காக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருபுறம் எதிர்கட்சிகளை அச்சுறுத்த, இன்னொருபுறம் நிறுவனங்களை மிரட்டி நன்கொடைகளைப் பெற இப்படி நடந்துகொள்ளும் கேவலமான அரசு இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லை.
பா.ஜ.கவின் மதவாதத்தை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவுக்கு அதன் தூய்மைவாத முகமூடியைக் கிழிப்பதும் முக்கியம்.
இந்துத்துவத்தின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலம்தான் அதன் திசை திருப்பும் உத்திகளையும் தடுக்கமுடியும்.
—