நியாயப்படி பார்த்தால் ராமச்சந்திரனின் மனைவியிடம் இருந்துதான் இந்தக்கதையை ஆரம்பிக்கவேண்டும். ஆனால் அது சரியாக இருக்காது என்பதால் ராமச்சந்திரனிடம் இருந்து ஆரம்பிப்போம்( எனில் நியாயம் வேறு, சரி வேறு என்றாகிறதல்லவா, இப்படித்தான் குழப்பத்தின் மொத்த உருவமாக இருக்கிறது வாழ்க்கையின் சாரம்)

ராமச்சந்திரன் என்றதும் நீங்கள் நினைக்கும் அந்த ராமச்சந்திரன் இல்லை. எந்த ராமச்சந்திரன் என்று சொல்லாமல் விட்டுவிட நாம் ஒன்றும் நகுலன்கள் இல்லையே.

இவர் பெங்களூர் ராமச்சந்திரன். சென்ற வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஒருவாரமாக என்னை பெங்களூர் வரச்சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சொல்லப்போனால் கடந்த பத்தாண்டுகளாக இப்படி அவ்வப்போது அழைப்பார். பத்திற்கு இரண்டு பழுதில்லை என்பதுபோல் அவ்வப்போது போய் வருவேன்.

வந்திருக்கிறேன்.

அது தென்பெங்களூர் காக்ஸ்டவுனில் இருக்கும் மதுக்கூடம்.

மதிய நேரம் என்பதால் சிப்பந்திகள் சற்றுச் சோம்பலான உடல்மொழியில் பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் நான்கு ஐந்து மணி நேரங்கள்தாம் இப்படி மெதுவாக அவர்களால் நடமாட முடியும். மாலை ஐந்து ஆறு மணியில் இருந்து கூடத் துவங்கும் கூட்டம் இரவு முழுக்க நீளும்.

நல்ல விஸ்தாரமான நீண்ட கூடம் அது. மேற்கூரை உச்சியில் இருந்து இரண்டுபக்கமும் சரிந்து இருந்தது. சுவருக்கு அருகே மட்டும் மெத்து மெத்தென்று அமரும் இடம். மற்ற நாற்காலிகள் எல்லாம் மரம்,இரும்பு இத்தியாதிகளால் ஆனவை. உயரமான ஸ்டூல்கள். ஆங்கிலப்படங்களின் சுவரொட்டிகளில் நாயகியின் நீள்கால்கள் மட்டும் பிரதானமாக காட்சியளிக்கும் சுவரொட்டிகளை நினைவுபடுத்தின, அந்த உயரமான ஸ்டூல்கள்.

ராமச்சந்திரன் வருவதற்கு அரைமணி நேரம் ஆகும் என்ற செய்தியைச் சொல்வதற்கு அழைத்தவர், பெங்களூர் சாலை நெரிசல் எப்படியெல்லாம் ஒரு மனிதனின் அன்றாடத்தை மாற்றும், திட்டமிடவைக்கும் என்பது போன்ற உபதகவல்களோடு விவரித்து முடிக்கும்போதே அரைமணி நேரம் ஆகிவிட்டதைப்போல் இருந்தது. ஆனால் வெகுகவனமாக, ’நீ வேண்டுமானால் குடிக்க ஆரம்பி’ என்று சொல்லவதைத் தவிர்த்திருந்தார்.

ஒத்த வயதுடைய நண்பர்களைத் தவிர, இப்படி நம்மை விட பத்து இருபது வயது மூத்தவர்களுடன் பாராட்டப்படும் நட்பில் இருக்கும் சிக்கல்களில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.

நான் அந்தப் பஞ்சு நாற்காலியில் பொதிந்துகொண்டு இன்னொரு முறை நோட்டம் விட்டேன்.

நேர்த்தியான அமைப்பு. எனக்குப் பின்னாலும் பக்கவாட்டிலும் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் புத்தக அலமாரி, பஞ்சுப்பொதிபோல் அமர்ந்து சரியும் இடம் என வாழ்வின் பிற்பாதியை எப்படிக் கொண்டாடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேனோ அப்படி ஒன்றின் ஒத்திகை போல் இருந்தது அந்த மதுக்கூடம்.

இஸ்ரோ எனத் தொலைக்காட்சியில் காட்டும்பொழுதெல்லாம் திரையின் மூலையில் புறப்படத்தயாராக இருக்கும் இயந்திரத்தின் சிறிய வடிவம் போலக் கண்களின் முன்னே ஆங்காங்கே ‘டவர்’கள். அதை மிக நேர்த்தியாக நிரப்பிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ’ஆர் ஓ நீரேற்றம் நிகழ்வது போல் இருந்தது அந்தக் காட்சி.

ராமச்சந்திரனிடம் இருந்து ஆரமிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மதுக்கூடத்தில் இருந்து ஆரம்பித்திருக்கிறேன் பாருங்கள். சொல்லப்போனால் இரண்டும் ஒன்றுதான். இப்படி ஒரு மதுக்கூடத்தில்தான் நிகழ்ந்தது அந்தச் சந்திப்பு. பத்து வருடங்கள் ஆகின்றன. அலுவல் நிமித்தம் அவ்வப்போது பெங்களூர் செல்வதுண்டு என்றாலும் அதிகாலையில் துவங்கி பின்னிரவில் வீடு வந்து சேர்ந்துவிடும் வண்ணம் ஒரே நாளில் அந்த நாளே பறக்கும் பயணங்கள் தான் பெரும்பான்மை.

அன்று, பிந்தைய வருடத்தின் எண்ணிக்கையில் உச்சம் தொட்டதைக் கொண்டாடும் வகையில் சென்ற இடத்தில்தான் ராமச்சந்திரன் அறிமுகம் ஆகி இருந்தார்.

முதல் நரை பயத்தைக் கொடுக்கும் எனில் பக்கவாட்டில் பரபரவெனப் பரவியபின் அந்த நரைமுடி ஒரு திமிரைக் கொடுக்கும். அப்படி ஒரு திமிர் பார்வை தெரிந்தது அவரிடம் அன்று. மிடுக்கான ’மூன்றுதுண்டு சூட்’ அணிந்திருந்தவர், பின்னிரவில் மூன்றில் ஒன்றைக் கழற்றி பக்கவாட்டில் இருந்த நாற்காலியில் வைத்திருந்தார். கோட்டுக்கு உள்ளே அணியும் உடுப்போடு அவர் இருந்ததும் அவருக்கு அருகே மதுவை பரிமாறிக் கொண்டிருக்கும் சிப்பந்தியின் உடையும் ஒரேபோல இருந்தது. நான் இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவன், அதைப் பார்த்து என் அருகில் இருந்த அலுவலக நண்பரிடம் அதைச் சுட்டிக்காட்டி சிரித்தேன்.

சற்று நேரத்தில் பீர் சிறுநீராக அதன் மாற்றத்தை நோக்கி உந்த, மிகச்சரியாக அந்த நீண்ட கழிவறையின் ஓரத்தில் நின்று நிமிர்ந்து மேற்கூரை நோக்கி ஏகாந்தத்தில் இருந்தவர்

“தமிழா?” என்றார். குனியவில்லை, திரும்பவில்லை.

நான் குழப்பமாகப் பார்க்க

அதட்டலான ஆங்கிலத்தில் உன்னைத்தான் கேட்கிறேன், தமிழா என்றார்.

நான் அவரைக் குறித்துச் சொன்னதை அவர் உணர்ந்ததாகவும், இது போன்ற த்ரீ பீஸ் சூட்கள் பற்றிய அருமை தெரிந்தவர்களுக்கு அது எவ்வளவு தரமான ஒன்று என்றும் விளக்கி ‘ராமச்சந்திரன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். எண்கள் பறிமாறிக்கொள்வது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளத்தான் என்பதுபோல் ஏதோ சொன்னார்.

ஏதோ சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, உண்மையிலேயே அவர் எண்ணங்களை, அவர் வாழ்வு குறித்த நிகழ்வுகளை என நிறையப் பேசிப் பேசி, எனக்கு ஏதேனும் அறிவுரையோ, ஆறுதலோ, உதவியோ வேண்டும் எனில் அவரிடம் கேட்கலாம் என்று சொல்லும் அளவிற்கு ஆகி இருந்தார். அவருடைய பழக்கத்திற்குப் பிறகு அடிக்கடி பெங்களூர் கிளைக்குப் பயணப்பட்டேன். என்னுடைய ஒரு நாள் பயணத்திட்டம் என்பது இரண்டு அல்லது மூன்று நாள்கள் என்றாகின.

அலுவல்களை முடித்துக்கொண்டு, பின்மாலையில் அவரை அழைத்தால் வந்து வண்டியில் ஏற்றிக் கொள்வார்.

முதலில், அதாவது எங்கள் நட்பின் தேனிலவு நாள்களில் ஆர்வமிகுதியில் கால்களுக்கிடையே கதிர்விளக்குகள் பாய்ந்து சத்தமிடும் பப்களுக்குச் சென்று அந்தக் கூச்சலில், அங்கு ஆட்டம் ஆடும் பெண்கள், ஜோடிகள் எனப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவரோடு வீட்டிற்குப் போய், அவர் இறங்கிக்கொள்ள அவருடைய ஓட்டுநர் என்னை என் அறையில் இறக்கி விடுவார். சில நாள்கள் அங்கேயே தங்கச் சொல்லிவிடுவார்.

காதுகளுக்கு இரைச்சலும் கண்களுக்கு ஆட்டங்களும் சலித்தபின்தான், இதோ இந்த காக்ஸ்டவுன் மதுக்கூடம் போன்ற அமைதியான இடங்களில் அமர்ந்து குடித்துக்கொண்டேபேசத்துவங்கி இருந்தோம். நாளடைவில் பேசுவதுதான் பிரதானம் என்றானது. குடியின் அளவு பெயரளவில்தான்.

ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைச் சொல்லுவார். அவருடைய அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல், அதை அவர் விடுவித்த விதம் என. போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பார்த்திருந்தால், அவர் மகளை அமெரிக்காவில் கட்டிக்கொடுக்காமல் எனக்கே கொடுத்திருந்திருப்பார் எனும் வாசகம் தவறாமல் இடம்பிடிக்கும்.

“நம்ம ஊர்ல இருந்து பெங்களூர் வந்து இந்த ஊரயே கலக்குறாங்க நம்ம பசங்க. நான்லாம் வரும்போது இந்த ஊர் குளிரத் தாங்கவே முடில, ஊருக்கே போய்றலாம்னு தோணும், ஆனா இப்போ பசங்க,பொண்ணுங்க எல்லாம் வேற லெவல்ல வந்து செட்டில் ஆகிர்றாங்க லுக் அட் தேர்”

சென்ற முறை அப்படி அவர் சொல்லி என்னைப் பார்க்கச் சொன்ன காட்சி, நிகழ்வு இங்குதான் இதே இடத்தில் அமர்ந்திருக்கும்பொழுதுதான் நடந்தது. சென்ற முறை என்றால், அது மூன்று வருடங்களுக்கு முன்பு. ஆம். சமீபமாக வருவதில்லை. இன்று கூட அவர் ஓய்வுபெற்றபிறகு மனது ஒருநிலையில் இல்லை, ஒருவேளை நீ வரவில்லை என்றால் நான் வருகிறேன் அங்கு என்று அவர் கேட்டது ஒருமாதிரி ஆனதால், வந்திருக்கிறேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சுட்டிய காட்சியின் நாயகி கையில் சிகரெட்டை வைத்து, இங்குமங்கும் பற்றவைக்க நெருப்பைத் தேடிக்கொண்டிருந்த காட்சி.

“அந்தப் பொண்ணு நம்ம தமிழ்தான்”

நான் இல்லை என மறுத்தேன். என்னதான் நம் பெண்கள் நவயுகநவநாகரிக உடையில் இருந்தாலும் ஓர் ஓரத்தில், ஏதேனும் ஒன்றில் நான் தமிழ் என்று காட்டிவிடுவார்கள். அந்தப் பெண்ணின் உச்சிமுதல் பாதம்வரை பெங்களூர் படர்ந்திருந்தது.

“எவ்ளோ பெட்?” என்றார் தீர்மானமாக. அந்தப் பெண் பஞ்சாபியாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்றேன். சுத்தமான தமிழ்ப்பெண் என்றார்.

ஓர் அலுவகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவரும், இடைநிலையில் இருக்கும் நானும் இப்படி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவது சரியா, தகுமா எனும் எண்ணம் எழுந்தது. அவரிடமே கேட்டேன்.

சிரித்தார். ஆமோதித்தார், பொதுவெளியில் இடர்படும் பெண்கள் குறித்து அவர்களின்  மொழி நடை உடை கலாச்சாரம் இன்னது இத்தியாதிகள் பற்றியெல்லாம் பேசுவதென்பது கற்காலத்திற்கும் முந்தைய காலம் நோக்கிப் போவது போல்தான் என்றேன். ஆமோதித்தார்.

இந்த உலகம் தோன்றியதே செக்ஸால்தான் என்றார். காமத்தின் பல்வேறு நிலைகள், வயது ஆக ஆக மாறிக்கொண்டே போகும் என்று மிக நீண்ட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அந்தப் பெண் தன் நான்காவது சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தாள். ஆம் நான் கவனித்துக்கொண்டேதான் இருந்தேன். தன் அருகில் இருக்கும் நபரிடம் அவள் பேசுவது வைத்து அவள் தமிழ் அல்ல என்று ராமச்சந்திரனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பே அமையாமல் சிகரெட் புகையும் விரல்களும் அதே விரல்களால் சிகரெட்டை இடுக்கிக்கொண்டே கோப்பையை எடுத்து உதட்டில் பொறுத்தி வைப்பதற்கும் மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தாளே தவிர ஒரு சொல்கூட உதிர்க்கவில்லை. அருகில் இருந்தவன் அவளிடம் ஏதோ பேசிக்கொண்டேதான் இருந்தான்.

என் கவனத்தை அவர்பக்கம் திருப்பும் பொருட்டு மேசையைத் தட்டியபிறகு  அவர் சொன்னதுதான் குழப்பமான ஒன்று. ’காமத்திற்காக அவமானத்தைச் சகிப்பது’  எனும் அந்த வாக்கியம் எனக்குப் புரியவில்லை. அவரிடம் கேட்டதற்குப் போதை தலைக்கேறிவிட்டதாகவும் இன்னொருநாள் விளக்குவதாகவும் சொன்னார். வயதானால் புரியும் என்றார். யாரேனும் ஒருவர்மீது மையல் கொண்டு அவர் பின்னால் போகும் காலம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை பிறகு ஏன் இப்படி சொல்கிறார் எனத் தோன்றியது.

முடித்துக்கொண்டு படி இறங்கும்போது நன்றாக இருட்டி இருந்தது.

அவருடைய வண்டியில் ஏறிக்கொண்டு என்னை இறக்கிவிட்டுவிடுவதாக அழைக்க, எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் அங்கு இருக்க வேண்டும் என ஏதோ ஒன்று உந்த, (ஆம் நீங்கள் நினைப்பதுதான்) அவரை வழி அனுப்பிட்டு அங்கே நின்றேன். பீடாக்கடைக்காரர் என்னை அடையாளம் கண்டு சிரித்தார். விரல்களால் வெற்றிலையின் ஒருபகுதியை நீவிக்காட்ட, இல்லை இப்போது இல்லை இன்னும் நேரம் இருக்கிறது என்பதுபோல் சொல்லிவிட்டு மீண்டும் படி ஏறினேன்.

அவளைக் காணவில்லை. அந்த ஒரு வழிதான் இருக்கிறது என்று ஆணித்தரமாக தெரிந்தாலும், அந்த ஒருவழிதானா என சுற்றிலும் பார்த்தேன். ஒருவழிதான்.  அந்த இளைஞன் இருக்கிறானா என்று பார்க்கலாம் எனில் அவன் முகமே என் மனத்தில் பதிந்திருக்கவில்லை. பார்த்திருந்தால்தானே எனத் தோன்றியது.

ராமச்சந்திரன் சொன்ன, காமத்திற்கு அவமானப்படுதல் எனும் வாக்கியம் வேறு மனத்தை அரித்தது. ஒருவேளை இதுதானோ, இப்படி இந்த செங்குத்தான படியில் ஏறி இப்படி இங்கு நின்று அந்த சிப்பந்தி இரண்டு முறை என்ன வேண்டும் அமருங்கள் என்று சொல்லியும் எதையோ தேடிவந்ததுபோல் அலைபேசியை நோண்டுவது போல் நண்பர் இருந்தாரே எங்கே என நானே வழியனுப்பி வைத்த நண்பரைப் பற்றிக் கேட்பதுபோல் இப்படி எல்லாம் செய்வது அவமானங்களின் வகையில் வருமா? ஒருவேளை அந்தச் சிப்பந்தி நான் அந்தப்பெண்ணிற்காக வந்து இப்படி நிற்கிறேன் எனத் தெரிந்துகொண்டுவிட்டு,என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தால், அது அவமானம்தான். ஆனால் இது காமத்திற்காக அவமானப்படல் வகையில் வருமா எனத் தோன்றியது. வராமல்? என்றும் தோன்றியது.

நல்லவேளையாக வந்தாள். எங்கோ மூலைக்குள் இருந்து வந்தாள். அந்த மூலையில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே. என்னவாக இருந்தால் என்ன, இவள் இருக்கிறாளே எனத் தோன்றியது.

அதுவரை இல்லாத பதற்றம் வந்தது. இவளைப் பார்க்க வந்தோம். இவள் இல்லை, சரி இப்போது வந்துவிட்டாளே, என்ன செய்வதற்கு வந்தோம். தனியாக அவள் முன் அமர்ந்து குடிக்கவா? என நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவள் வெளியே செல்லும் முஸ்தீபுகளில் இருப்பது தெரிய, மெதுவாக வெளியேறி மின் தூக்கியின் எதிரே நின்றுகொண்டேன். அவள் அருகில் வரும்வரை அலைபேசி உதவியது

வந்தவள் “தமிழா நீங்க” என்றாள், சுத்தமான தமிழில்.

என்னவெல்லாமோ பேசி இருக்கலாம்தான்தான். ஒவ்வொரு முறை அந்தக் காட்சி நினைவிற்கு வரும்பொழுதும் மூன்று நான்குபக்க இலக்கியவாதியின் வாதையான கட்டுரைகள் அளவிற்குப் பேசி இருக்கவேண்டிய சொற்கள் எல்லாம் என் முன் நடனமிடும். ஆனால் அன்று நாக்குதான் நடனமிட்டது.

ஆம் என்பதைக் கூட எங்கள் ஆங்கிலேய அதிகாரியின் வாய் இளிப்புபோல் ஒருமுறை இளித்து ஆமோதித்து பட்டெனச் சுருக்கிக்கொண்டேன். அந்த அதிகாரிபோலவே பல் வெளியில் தெரியாமல் அப்படி நான் செய்தது எனக்கே வியப்பாக இருந்தது.

அவள் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதினாள். என் முகத்தில் படர்ந்து கடந்தது அந்தப் புகை. அவள் உள்ளே நுழைந்து நான் தாமதிக்க, கையை வைத்து வருகிறாயா இல்லையா என்பதுபோல் பார்க்க, அலைபேசியில் ஏதோ அதிமுக்கிய அழைப்பு என்பதுபோல் பாவனை செய்து அவளைப் போகச்சொன்னேன். சிகரெட் புகை கதவடைபடும் முன்னர் குப்பென வெளியில் வந்து முகத்தில் அடித்தது. அப்படியே தடதடவெனப் படிகளில் இறங்கி அவள் முன் நிற்கலாமா என ஒரு நொடி யோசிக்கும்பொழுதுதான், அவமானப்படல் எனும் சொற்பதம் மீண்டும் நினைவிற்கு வந்தது.

ராமச்சந்திரன் வந்து என் எதிரே அமர்ந்து, சிரித்தார். மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூர்ந்தார். மூன்றாண்டு முந்தைய நிகழ்வைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன் என்பதைச் சொல்லவில்லை அவரிடம்.

அவர் முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது. அல்லது அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எனக்குத் தெரிந்ததால் அவர் முகம் அப்படி இருப்பது போல் இருந்திருக்கலாம்.

வழக்கமான உற்சாகத்தோடும், தாமதம் ஆனதற்குச் சாலை நெரிசல் காரணம் என்றும் சொல்லிவிட்டு, பெரிதாக வேறு எந்த சம்பிரதாயமும் இல்லாமல் குடிக்கத் துவங்கினோம். மசாலா அப்பளமும் அதன் மீது நறுக்கிப் போடப்பட்ட பச்சைமிளகாயின் முனைகளும் காரமும் உப்புமாய் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது அந்த மதியம்.

அவரைத் தவிர்த்ததன் காரணம் குற்றவுணர்ச்சி என்று அதுநாள்வரை நான் நினைத்திருந்த ஒன்று, ஏனெனில் அவர் மனைவியுடனான என் நட்பு குறித்து அவருக்குத் தெரிந்துவிட்டது என்று சொல்லிருக்கிறாள். அவருக்குத் தெரியும் என்ற நொடியில் இருந்து நான் வருவதை நிறுத்திவிட்டிருந்தேன்.

அதனால்தான் இக்கதையின் தொடக்க வரியில் எங்கிருந்து தொடங்குவது நியாயம் என்று சொல்லியிருந்தேன்.

இதோ அவர் முன் அமர்ந்திருக்கும் இந்த நொடியில்தான் அது அவமானம் போன்ற ஒன்று எனத் தோன்றியது.

போய்ப் பார்த்துவிட்டு வந்தீர்கள் அல்லவா, சரி விடுங்கள்,

’தொடர்ந்து பெங்களூருக்கு வந்து போனாயே, என்னை ஏன் அழைக்கவில்லை’ என

அவர் கேட்கவுமில்லை,

நான் சொல்லவுமில்லை.

*