நான் Made in Heaven போன்ற வெப் தொடர்களையும், Manmarziyaan போன்ற படங்கள் சிலவற்றையும் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற படங்களின் வழியாகப் பஞ்சாப் பற்றியும், பஞ்சாபியர்கள் பற்றியும் ஓரளவு அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. லண்டன், கனடா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுவிடவேண்டும் எனும் எல்லையற்ற தாகம்; நிலத்திற்காக உறவுகளுக்குள் எழும் சண்டைகள்; போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடக்கும் இளைஞர்கள்; பாப் & ராப் குழுக்கள்; பெண்களின் பாலியல் தேர்வுகள்; அதீத நுகர்வுக் கலாச்சரம் போன்றவை எல்லாம் பஞ்சாபியர்களின் இன்றைய அடையாளங்கள். இவையே அவர்களின் பண்பாடாகவும், அவர்களின் தீராத பிரச்சனைகளுமாக இருக்கின்றன. பஞ்சாப்பைக் கதைக்களமாகக் கொண்ட Kohrra என்ற வெப்சீரிஸில் இவையெல்லாம் நிச்சயம் இடம்பெறும் என்று நினைத்தேன். நான் நினைத்ததைவிட நிறையவே இருந்தன. கூடவே, நான் நினைக்காதவையும் இருந்தன. அவற்றைக் கடைசியாகச் சொல்கிறேன். முதலில் கதை என்னவென்று பார்த்துவிடலாம்.
ஜாக்ரன் என்ற பஞ்சாபின் சிறிய நகரத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் ஒரு NRI இளைஞன் இறந்துகிடக்கிறான். அவனுடைய Post-Mortem report பற்றி டாக்டர் இப்படிச் சொல்கிறார்:
“கழுத்த அறுத்திருக்காங்க. அதனால blood loss ஆயிருக்கு. ஆனா அதுவந்து cause of death இல்ல. தலையில பட்ட காயம்தான் காரணம். ஒரு தடவ இல்ல… திரும்ப திரும்ப அடிச்சிருக்காங்க. தலையில தாக்கப்படல’ன்னாலும் blood loss-னால victim ஒரு பத்து நிமிஷத்துல தானா செத்துருப்பாரு. Hard object-ஆல அடிச்சிருக்காங்க. கல்லுமாதிரி ஒன்னு. Victim-ஓட left arm-ல்ல ஒரு cut விழுந்திருக்கு. காயம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஏற்பட்டிருக்கு. Sharp blade இல்லன்னா knife. Victim மேல fellatio perform நடந்திருக்கு. Murder-க்கு ரெண்டு மணிநேரம் முன்னாடி”
Fellatio என்பது oral sex. இப்படியாகப் பாலியல் விவகாரம் கலந்த கொலையோடு கதைத் தொடங்குகிறது. Sub-Inspector பல்பிர் சிங்கும், Assistant Sub-Inspector அமர்பால் ஜஸ்ஜித் கருண்டி என்பவரும் இந்த வழக்கைக் கையில் எடுத்துப் புலனாய்வு செய்கின்றனர்.
கொலைசெய்யப்பட்டவன் பெயர் தெஜிந்தர் பால் தில்லோன். லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியன். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தியா வந்திருக்கிறான். வீர் சோனி என்பவளோடு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. மறுநாள் அவர்களுக்குத் திருமணம் நடக்க இருந்தது. முதல் நாள் கொலை செய்யப்பட்டிருக்கிறான். இன்னொரு தகவல் என்னவென்றால், லண்டனைச் சேர்ந்த அவனுடைய ஆருயிர் நண்பன் லியம் மர்ஃபி என்பவனைக் காணவில்லை. அவன் பால் தில்லோனுடைய திருமணத்திற்காக லண்டனிலிருந்து பஞ்சாப் வந்தவன்.
லியம் மர்ஃபியின் தாயார் கிளாராவும், பால் தில்லோனுடைய அம்மா ஜாஸ்ஸியும் நெருங்கிய தோழிகள். இரண்டு பேரும் தங்கள் மகன்களை இழந்து தவிக்கிறார்கள். பால் தில்லோனுடைய அப்பா சத்விந்தர் ஸ்டீவ் தில்லோன் செல்வாக்கு மிகுந்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சப்-இன்ஸ்பெக்டர் பல்பிர் சிங் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாரை அவர் நினைப்பதுபோல விசாரிக்கமுடியாத சூழலில், கிடைக்கக்கூடிய வேறு ஆதாரங்களின் வழியாகத் துப்புத் துலக்க முயற்சி செய்கிறார்.
கார் கண்ணாடி உடைந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பஸ் வேண்டுமென்றே பால் தில்லோன் வந்த காரை இடித்துத் தள்ளியிருக்கிறது. அப்படியென்றால் பால் தில்லோனைக் கொலை செய்வதற்கான முயற்சிகள் இரண்டுவாரத்திற்கு முன்னரே நடந்திருக்கிறது. பல்பிர் சிங்கும், கருண்டியும் பஸ் ட்ரைவரைத் தேடும் பணியை ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன்னதாகப் பால் தில்லோன் திருமணம் செய்யவிருந்த வீரா சோனி என்பவளிடம் சில விவரங்கள் கேட்கிறார்கள்.
“பால் தில்லோனுக்கு லண்டனிலிருந்து ஏதாவது மிரட்டல் ஃபோன்கள் வந்ததா?” என விசாரிக்கிறார்கள். அவள், “இது Arranged marriage ரெண்டு வாரத்துக்கு முன்னதான் meet பண்ணோம். அப்புறம் two days-க்கு முன்னால engagement-ல்ல meet பண்ணேன். அவ்வளவுதான்” என்கிறாள்.
ஸ்டீவ் தில்லோனுக்கும் அவருடைய தம்பிக்கும் நில விவகாரம் போய்க்கொண்டிருக்கிறது. பால் தில்லோனுடைய கொலைக்கு அதுதான் காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள். வீரா சோனியின் முன்னாள் காதலன் சாகர் என்ற பஞ்சாபி ராப் பாடகன். அவன் கொலை செய்திருக்கலாமோ என விசாரிக்கிறார்கள். இப்படி பல்வேறு வழிகளில் விசாரணை மேற்கொண்டிருக்கும்போதுதான் போஸ்ட் மார்டம் ரிபோர்ட் வருகிறது.
அதில் இறந்த பால் தில்லோனை, முதலில் சில மணி நேரங்களுக்கு முன்னால், சின்ன பிளேட் போன்ற கருவியால் கையில் காயம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அவன்மீது oral sex நடந்திருக்கிறது. அதன்பின்னர் மீண்டும் பிளேட் போன்ற கருவியால் தாக்கப்பட்டிருக்கிறான். அதன்பின்னால் கல்லால் அடித்துத் தலையைச் சிதைத்திருக்கிறார்கள். அவனுடைய விலையுயர்ந்த கைக் கடிகாரம் திருடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் செய்தது ஒரு நபராக இருக்கலாம் அல்லது ஒரு குழு செய்திருக்கலாம். அந்தக் குழுவில் ஒரு பெண்ணும் இருந்திருக்க வேண்டும். அந்தப் பெண் ஏன் வீரா சோனியாக இருக்கக்கூடாது?
மறுபடியும் வீரா சோனியை ஒரு காஃபி ஷாப்புக்கு அழைத்து அவளுடைய பழைய காதலன் சாகர் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் பால் தில்லோனைத் திருமணம் முடிக்க இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக நான் சாகரைப் பார்க்கவில்லை என்கிறாள். அவளுடைய தலைமுடியை அவளுக்குத் தெரியாமல் எடுக்கிறார்கள். அந்த முடி பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இப்போது வரும் முடிவு பகீரென இருக்கிறது. “வீரா சோனியோட DNA, பால் தில்லோனுடைய penis-ல்ல இருந்த saliva-ஓட 100% match ஆகுது!” என்று டாக்டர் சொல்கிறார்.
அடுத்ததாக, வீரா சோனியைப் போலிஸ் ஸ்டைலில் விசாரிக்கிறார்கள். அவள் பால் தில்லோனைக் கொலை நடந்த இரவு பதினொரு மணி அளவில் சந்தித்து oral sex நிகழ்த்தியதைச் சொல்கிறாள். அதே நாள் நள்ளிரவில் குல்லி என்ற போதைப்பொருள் விற்பவன் பால் தில்லோனுக்கும், லியம் மர்ஃபிக்கும் ஹெராயின் விற்றிருக்கிறான். ஆனால் அவர்கள் cocaine வேண்டுமென்று அவனோடு சண்டைபோட்டு அவனை எட்டி உதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். போலிஸ் விசாரணையில் குல்லி இதைச் சொல்லியதோடு , “என்னை அடிச்சுட்டுப் போன அவங்கள விடக்கூடாது’ன்னு பின்னால துரத்திட்டுப் போனேன். “ரெண்டு பேர்ல ஒருத்தன் செத்துக் கிடந்தான். அவன் கழுத்த அறுத்துப் போட்டிருந்தாங்க… அவனோட வாட்ச் ரொம்ப காஸ்ட்லி’ன்னு எனக்குத் தெரியும். அதைப் புடுங்குறப்போ என்னைப் புடிச்சுக்கிட்டான். அவன் உயிர் போற வரைக்கும் கல்லால அடிச்சு அவனைக் கொன்னேன்” என்பதையும் சொல்கிறான்.
கல்லால் அடிச்சு ஒருத்தன் கொலை பண்ணிருக்கான்’னு தெரிந்தவுடன் மேலிடத்திலிருந்து இந்தக் கொலை வழக்கைக் குல்லிமீது போட்டு முடிக்கச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு போதைப்பொருள் விற்பவன்மீது பழியைப் போட்டு வழக்கை முடிக்க பல்பிருக்கு விருப்பமில்லை. “பஞ்சாப்’ல இருக்குற பரிதாபமான நிலைமை என்ன தெரியுமா? உண்மைய எதிர்கொள்ள முடியாத நிலைமை. எந்தக் கேஸையும் solve பண்ணிறக்கூடாது. Close பண்ணனும் அவளோதான். செல்வாக்குள்ள மனிதர்கள எதுவும் செஞ்சிறாத. அப்பாவி ஏழைங்கள தொவைச்சு எடு. Result-அ கொண்டுட்டு வா…! ஏன்’னா? நீ மீடியாவுல inteview குடுக்கணும்” எனப் புலம்புகிறார் சப் இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங்.
பல்பிர் சிங்குக்கும், கருண்டிக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால் பால் தில்லோன் கழுத்தை அறுத்தது யார்? வீரா சோனி முதலில் சாகரைச் சந்தித்து அவனோடு உறவு கொண்டிருக்கிறாள். பால் என்ற லண்டன் வாழ் இந்தியரைத் திருமணம் முடிக்கப் போவதாகவும், இனிமேல் இந்தக் காதலைத் தொடரக்கூடாது எனவும் சாகரிடம் சொல்லிவிட்டுப் பிரிகிறாள். அன்று இரவு பால் தில்லோனைச் சந்திக்கிறாள். அவனிடம் சாகரைக் காதலித்ததையும், அவனைவிட்டுப் பிரிந்ததையும் சொல்கிறாள். “திருமணத்திற்கு முன்னரே இதைச் சொல்லிவிடவேண்டும் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதால் இப்போதே சொல்லிவிட்டேன்… உனக்கும் எதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்” என்கிறாள்.
அந்த இரவில் பால் தில்லோன் சோனி மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறான். அதன்பின்புதான் அவள் oral sex செய்கிறாள். நள்ளிரவில் குல்லி பால் தில்லோனைக் கல்லால் அடித்துக்கொண்டிருக்கிறான். இடையில் சோனியின் காதலன் சாகரோடு ஒரு பாரில் சண்டைபோட்டிருக்கிறார்கள். சாகரை லியம் ஒரு மதுபாட்டில் கொண்டு தலையில் அடித்திருக்கிறான். பதிலுக்கு சாகர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் பால் தில்லோனைத் தாக்கியிருக்கிறான். அதே பிளேடால்தான் பால் தில்லோனை நள்ளிரவில் கழுத்தை அறுத்துப் போட்டிருக்கிறார்கள்.
அப்படியென்றால் இந்தக் கொலைக்கும் சாகருக்கும் சம்பந்தம் இருக்கிறது என அவனைக் கைது செய்கிறார்கள். இதற்கிடையில் தோதி என்ற சிறுவன் ஒருவன் பைத்தியம் பிடித்த மன நிலையில், “நாங்க ஒரு வெள்ளைக்காரன கொன்னுட்டோம்… நாங்க ஒரு வெள்ளக்காரன கொன்னுட்டோம்” என மருத்துவமனையில் புலம்பிக்கொண்டிருக்கிறான். அவனிடம் லியம் மர்ஃபியின் படத்தைக் காட்டி, ”இவனைத்தான் கொன்னீங்களா?” எனக் கேட்கிறார் பல்பிர். அவன் ஆமாம் என்கிறான். தோதி லாரி கிளினர்தான். அந்த லாரியின் ட்ரைவரைப் பிடித்து அடித்து விசாரிக்கிறார்கள்.
“ராத்திரி முழுக்கப் பனியா இருந்துச்சு. மூடுபனியா இருந்ததால ரோடு சரியா தெரியல. அந்த வெள்ளக்காரன் திடீர்’னு ரோட்டுக்கு வந்துட்டான். வண்டி பிரேக் பிடிக்கல. சத்தியமா இது ஆக்ஸிடெண்ட்தான் சார்.” என்கிறான் டிரைவர். “சரி ஆக்ஸிடெண்ட்டாவே இருக்கட்டும், அந்த ஆளு எங்க?” எனக் கேட்கிறார் பல்பிர்.
லியம் மர்ஃபியின் உடலை ஒரு கிணற்றிலிருந்து எடுக்கிறார்கள். அவனுடைய உடலையும் போஸ்ட் மார்ட்டம் செய்கிறார்கள். அதன் முடிவில் டாக்டர், “பால் தில்லோனுடைய saliva மர்ஃபியோட penis-ல்ல இருந்தது” என்று ரிபோர்ட் தருகிறார். இந்தத் தகவலைப் பால் தில்லோன் மற்றும் லியம் மர்ஃபியுடைய குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்துகிறார். தன்னுடைய வம்சம் வீர பஞ்சாபி வம்சம். அதில் பிறந்து வளர்ந்த ஒருவன் Gay-வாக இருப்பதை ஸ்டீவ் தில்லோன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆனால் லியம் மர்ஃபியும் பால் தில்லோனும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலித்து வந்தார்கள் என்பது அவர்களுடைய அம்மாக்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்டீவ் தில்லோனுக்குப் பயந்து அதை யாரும் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
லியம் மர்ஃபிக்குப் பால் தில்லோன் திருமணம் முடிப்பது பிடிக்கவில்லை. “நாம் இருவரும் காதலர்கள் என்பதை வீரா சோனியிடம் சொல்லிவிடு” என்று லியம் பால் தில்லோனிடம் சொல்கிறான். அதற்காகத்தான் பால் தில்லோன் வீரா சோனியை இரவில் தனியாக அழைக்கிறான். ஆனால் வந்த இடத்தில் வீரா சோனி சாகரைக் காதலித்த விசயத்தை எல்லாம் சொல்கிறாள். ஆனால் பதிலுக்கு பால் தில்லோன் லியம் மர்ஃபியோடு உறவில் (Gay) இருப்பதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறான். அதனால்தான் கோபம் கொண்ட லியம் பால் தில்லோனுடன் சண்டைபோடுகிறான். முடிவில் பிளேடால் (சாகரிடம் சண்டைபோடும்போது கைப்பற்றியது) பால் தில்லோனைக் கழுத்தை அறுத்துவிடுகிறான். இதை லியம் செல்போன் செய்து குரல் பதிவாக அவனுடைய அம்மா கிளாராவுக்கும் சொல்லிவிடுகிறான். அதன்பிறகுதான் லாரி விபத்தில் அடிபட்டுச் சாகிறான்.
Khorra என்றால் மூடுபனி என்று பொருள். “பஞ்சாப்பின் குடும்பங்களையும் பண்பாட்டையும் மூடுபனி ஒன்று மறைத்திருக்கிறது. தங்களுக்கு வெளியே இருப்பதைச் சரியாகப் பார்க்கவிடாமலும், சிந்திக்கவிடாமலும் அந்த மூடுபனி திரைபோட்டு மறைக்கிறது. பஞ்சாபியர்களிடம் இருக்கும் துரோக உணர்வு, அடியாழத்தில் இருக்கும் ரகசியங்கள், அழுகிப்போயிருக்கும் குடும்ப உறவுகளைச் சுற்றி நடக்கும் நாடகங்கள் ஆகியவற்றை எல்லாம் இந்தக் கதை மெல்ல மெல்ல வெளிச்சமிட்டுக் காட்டுகிறது” என்று இந்த சீரியலை விமர்சித்தவர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
தொடக்கத்தில் நான் சொன்னதுபோலவே, எதிர்பார்த்த விசயங்களோடு எதிர்பாராத விசயங்களையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். ஒரு கொலை அதைச் சுற்றிய புலனாய்வு என்று மட்டுமே சொல்லியிருக்க வேண்டிய கதையில் பஞ்சாபில் வாழும் பெண்களின் பார்வையை முடிந்தவரை பதிவு செய்ததைத்தான் இந்த வெப்சீரிஸின் புதுமையாக நான் பார்க்கிறேன். சில உதாரணங்களைச் சொல்கிறேன்.
அஸிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் அமர்பால் கருண்டி என்பவரின் அண்ணியின் பெயர் ராஜ்ஜி. அவள் கருண்டியோடும் உறவில் இருக்கிறாள். கருண்டி திருமணம் முடிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யும்போது கோபப்படுகிறாள், “பத்து வருசமா சமைச்சுப் போட்டுட்டு இருக்கேன். நாம ஒரு குடும்பம்’னு வாழ்ந்திட்டிருக்கேன். குடும்பத்த விட்டுப் பிரிஞ்சு போறேன்’னா என்ன அர்த்தம்?” என்று கருண்டியிடம் கேட்கிறாள். ”எந்தக் குடும்பமும் பிரியல. ஒரு புதுக் குடும்பம் உருவாகப் போகுது. அவ்வளவுதான்” என அவளுக்குச் சமாதானம் சொல்கிறான் கருண்டி. சொன்னதுமட்டுமில்லாமல் விரைவிலேயே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறான்.
திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்வில், ராஜ்ஜி Gas-ஐத் திறந்துவிட்டு மிகப் பெரிய தீவிபத்தை ஏற்படுத்துகிறாள். ராஜ்ஜிதான் இந்த்த் தீ விபத்துக்குக் காரணம் என்பது அவளுடைய கணவனுக்குத் தெரிந்துவிடுகிறது. அவளை வீட்டிற்குள் தள்ளி “ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான வேலையச் செஞ்ச?” என்று கேட்கிறான்.
“தன்னோட இஷ்டத்துக்கு ஒருத்திய கல்யாணம் செஞ்சிக்கப் போறான். அதுக்கப்புறம் அவ(ள்) வச்சதுதான் சட்டமா இருக்கும். எல்லா விசயத்துலையும் மூக்கை நுழைப்பா(ள்). பாதி நிலம் வேணும், பாதி வீடு வேணும்’னு கேப்பா(ள்)” என்கிறாள் ராஜ்ஜி. “கேட்டா கேட்டுட்டுப் போறா(ள்) எல்லாத்தையும் விட்டுத்தள்ளு” என்கிறான் ராஜ்ஜியின் கணவன். “எல்லாத்தையும் எப்படி விட்டுத்தள்ள முடியும்….? நான் அவன காதலிக்கிறேன்…!” என்று கணவனிடம் கோபமாகச் சொல்கிறாள் ராஜ்ஜி!
பல்பிர் சிங்கின் மகள் பெயர் நிம்ரத் கவுர். அவள் கணவன் பெயர் ரமன் சிங்க். ரமன் சிங்கிடம் தனிக்குடித்தனம் போவோம் என்கிறாள். அதேபோலவே தனிக்குடித்தனம் போகிறார்கள். தனிக்குடித்தனம் போனாலும் அவனோடு வாழாமல், பிரிந்து வந்துவிடுகிறாள். ரமன் சிங்கை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறாள். வழக்கறிஞர் அவளிடம், “ரமன்சிங்க் அடித்தானா?, பாலியல் உறவில் பிரச்சனை இருக்கிறதா? மாமியார் மாமனார் கொடுமை செய்தார்களா?” எனப் பல கேள்விகள் கேட்கிறார். கணவனைக் குற்றம் சுமத்துவதற்கான எந்தக் காரணத்தையும் அவளால் கூறமுடியவில்லை. ஆனாலும் அவனை விவாகரத்து செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
நிம்ரத் தன்னோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த கரன் கில் என்பவனை இப்போது காதலிக்கிறாள். பல்பிருக்குத் தன் மகள் கணவனைவிட்டு வேர்றோர் ஆணோடு பழகுவது பிடிக்கவில்லை. அதனால் கரன் கில்லைக் கண்டிக்கிறார். ஆனால் அவன், “எல்லாம் முடிஞ்சுதான் இருந்துச்சு. திடீர்’னு இன்ஸ்டாகிராம்ல்ல ஒரு மெஸேஜ். அவ(ள்) ரொம்ப டிப்ரஸன்ல இருக்குறதா சொன்னா(ள்). என்னை ரொம்ப மிஸ் பண்றதா சொன்னா(ள்). அங்கதான் எல்லாம் தொடங்குச்சு” என்று சொல்கிறான். “இனிமேல் வெளில அவளோட சுத்துறதப் பாத்தேன்’னா நான் போலிஸ்காரனா பேச வேண்டியிருக்கும்!” என அவனை எச்சரித்துவிட்டு வந்துவிடுகிறார் பல்பிர்.
அடுத்த சில நாளில் பல்பிரின் வீட்டிலேயே நிம்ரத்தைச் சந்திக்கிறான் கரன் கில். பல்பிருக்கு வந்த ஆத்திரத்தில் அவனை அடி பிய்த்து எறிந்துவிடுகிறார். அடியைத் தாளமுடியாத போதும், “வெளில சந்திக்கக் கூடாது’ன்னு சொன்னீங்க அதனாலத்தான் வீட்டுக்கு வந்தேன். இதுல என்ன தப்பிருக்கு அங்கிள்?” என்று கரன் கில் கேட்கிறான்.
அப்பாவின் இந்தச் செயலைப் பொறுக்கமுடியாமல் மகள் நிம்ரத் மருந்து குடித்துவிடுகிறாள். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் மகளிடம் பல்பிர், “உன்னை நான் நேசிக்கிறேன். ரமன்சிங்க் விரும்புறான். உன் குழந்தை விரும்புறான். அப்பிடி இருந்தும் ஏன் இப்பிடி செஞ்ச?” எனக் கேட்கிறார். பதிலுக்கு, “அப்ப நான் விரும்புறவர்? என் வாழ்க்கை என்னைத் தவிர எல்லாருக்கும் சொந்தமாயிருக்கா…?” என்று அப்பாவிடம் கேட்கிறாள் நிம்ரத்.
வீரா சோனியும் ராப் பாடகர் சாகரும் காதலித்தார்கள். இடையில் லண்டன் மாப்பிள்ளை பால் தில்லோன் வந்தான். “நம்முடைய காதலை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை மறந்துவிடு” என்று சொல்லிவிட்டுத்தான் போனாள் வீரா சோனி. ஆனால், அங்கு நடந்ததே வேறு. பால் தில்லோன் இறந்துபோனான். அந்தக் கொலைப்பழி வீரா சோனி மீதும், சாகர் மீது விழுந்தது. படாதபாடு பட்டு மீண்டார்கள். உண்மையில் சாகர் அவ்வளவு சிறைக்கொடுமைகளை அனுபவித்தது வீரா சோனிக்காகத்தான். அவ்வளவு கொடுமையை அனுபவித்தாலும், வெளியில் வந்து மீண்டும் வீரா சோனியைக் காதலிப்பதாகச் சொல்கிறான். வேறொரு கதை என்றால், தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்ட காதலனை உயிரைக்கொடுத்து கட்டிப்பிடித்திருப்பாள் காதலி.
ஆனால் இந்தக் கதையில் வீரா சோனி சாகரிடம், “சாகர் நான் உங்கிட்ட பொய் சொன்னேன். நம்மோட break-up family member-ஆல ஏற்படல. அது நானா எடுத்த முடிவு. என் future-க்காக. திரும்பவும் ஆரம்பிக்க வேணாம்’னு நினைக்கிறேன். நம்ம காதல் முடிஞ்சுபோன கதை. It is time to grow up. Next week எனக்கு marriage. மாப்ள கனடாவுல இருக்காரு இந்த தடவ எந்த problem-உம் வந்துறக் கூடாது. உன் உடம்ப நல்லா பாத்துக்க…!” என்று சொல்கிறாள்.
தன்னுடைய மகன் இன்னோர் ஆணோடு உறவில் இருந்திருக்கிறான் என்பதைக் கேட்ட ஸ்டீவ் தில்லோன் பயங்கரமாகக் கோபப்படுகிறார். அப்போது லியம் மர்ஃபியின் அம்மா கிளாரா சொல்கிறாள்: “He had his own identity and he had a right to pursue his own happiness, they both did. All we could do was just bless them, wish for them to be happy. They were both happy when they were together”
உண்மையில் மூடுபனி என்பது உருவாவது இல்லை, உருவாக்கப்படுகிறது. பஞ்சாப் போன்ற தனிநபர் வருமானம் அதிகமான ஒரு நாட்டில்; ஆணாதிக்கம் மிகுந்த ஒரு நாட்டில்; கூட்டுக் குடும்பங்கள் நிறைந்த ஒரு நாட்டில்; போதைப் பழக்கம் மிகுந்த ஒரு நாட்டில் பெண்களின் வாழ்க்கையில் மூடுபனி கவிந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வெளிநாட்டில் வாழும் இந்தியரைத் திருமணம் செய்து வெளியேறுவது. அல்லது காதலிப்பது.
அழகான காதல் எல்லோருக்கும் சாத்தியமாகும் என்று சொல்லமுடியாது. சுயநலமாகக் காதலிக்கும்போது காதல் துரோகம் என்று அழைக்கப்படுகிறது. கண்மூடித்தனமாகக் காதலிக்கும்போது பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி அழைத்துக்கொண்டாலும், மூடுபனியை விலக்கும் வெளிச்சத்தைக் காதலிடம்தான் வாங்கவேண்டியிருக்கிறது. ‘The thing called, love is bitch, big bitch’ என்று திட்டினாலும் காதல் ஒன்றுதான் பெண்களுக்கு விடுதலையைத் தருகிறது.