தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் படைப்பாளிகளில் மிகவும் நுட்பமாக யாராலும் பெரிதாகக் கவனிக்கப்படாத இலக்கியப் பரப்புகளைச் சமூகத்தின் கண் முன் நிறுத்துபவர் எழுத்தாளர் இமையம். அவரது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் போக்கில் ஏற்பட்டிருக்கும் அசைவுகளை மண் மனம் மாறாமல் அந்த மக்களின் மொழியிலேயே எழுதி அவர்களின் துயரங்களை, சந்திக்கும் சவால்களை – கோவேறு கழுதைகள், ஆறுமுகம், மண்பாரம், செடல் போன்ற படைப்புகளில் தொடங்கி சமீபத்தில் வெளியான நெஞ்சறுப்புவரை காணலாம். இவரது நாவல்களில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் வெளிப்பாடுகள் படிக்கும் வாசகர்களின் வலிமையான மனத்தையும் உலுக்கிக் கண்ணீரை வரவழைக்கும். அதன் விளைவாகச் சமூக-பண்பாட்டுத் தளங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்கள் குறித்த பொதுப் பார்வையும் மாறத் தொடங்கும். அதுதான் விளிம்புநிலை மனிதர்களின் பார்வையில் எழுதும் நாவலின் நிலையான வெற்றிக்கு அடையாளம். எழுத்தாளர் ஒரு நாவலை எழுத எத்தனை புத்தகங்களை வாசிக்க வேண்டும், அதை எங்கு மிகச் சரியாகப் பொருத்த வேண்டும் என்பதற்கு நெஞ்சறுப்பு நாவல் ஒரு சாட்சி.
இரண்டு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் கருத்தரங்கில் சந்தித்த நட்பில் சமூக ஊடகங்களான வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி வழியாக இயல்பாகப் பழகுகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் மேற்கத்தியக் கவிஞர்களின் கவிதைகள், கூற்றுகள், மேற்கோள்கள், வாசித்த பழைய நாவல்கள் மற்றும் கவிதைகள் குறித்த விமர்சனங்கள் நட்பின் தன்மையை மாற்றுகின்றன. இலக்கிய விமர்சன அறிவு கொண்ட இருவரும் பெரும் வயது இடைவெளிக்கு அப்பால் பழக-காதலிக்க முற்படும்போது பேராசிரியரின் மனைவிக்குத் தெரியவர நடுத்தர வயது உதவிப் பேராசிரியர் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. அந்த இருவரும் கருத்தரங்கில் சந்தித்து உரையாடியது ஒரு மணி நேரம் கூட இருக்காது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப்ப் புரட்சி காதலின் காலம், தொலைவு ஆகியவற்றைக் குறுக்கிவிட்டது.
இன்றைய தகவல் தொழில்நுட்பம் நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஓர் வலையில் வீழ்த்துகிறது. காதல் எல்லாக் காலங்களிலும் போற்றத்தக்கதாக இருந்தாலும் இன்றைய சமூக-பொருளாதார-பண்பாட்டுக் கட்டமைப்பு அதற்கு சாதகமாக இல்லை. நகர நாகரிகத்தில் சுதந்திரமாகச் சிந்தித்து வாழும் இளம்பெண் உதவிப் பேராசிரியருக்கும்; குடும்ப்ப் பொறுப்பு, சமூக-பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகிய காரணிகளால் அதிகாரப் பின்புலம் இல்லாத, பாடம் சார்ந்த அறிவில் சராசரிக்கும் மேலான சிறந்த ஆய்வுத்திறன் கொண்டு அரசுக் கல்லூரியில் பணியாற்றும் நடுத்தர வயது ஆண் பேராசிரியருக்குமான நட்புதான் நெஞ்சறுப்பு நாவல். காதல் என்பது பொதுவாக அறிவு அடிப்படையில் மலர்வது அரிது. இந்த நாவலில் காதலிப்பதாக்க் கட்டமைக்கப்பட்ட இரண்டு ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களுக்கும் இடையே ஏற்படும் நட்பிற்குக் காரணமாய் இருப்பது இலக்கிய வாசிப்புதான். உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க இலக்கியங்களைப் பட்டியலிட்டு ஒப்பீட்டு இலக்கியங்களை மேற்கோள் காட்டி எழுதி இருக்கும் விதம் ஒரு தரமான அக்கறையுள்ள இலக்கிய வாசகனுக்கு அந்த நாவல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது இயல்பு. இத்தனை நாவல்கள் படித்த பின்னும் காதலில் சறுக்கலா? என்று கேள்விக்கு விடை காண நாவலை கடைசிப் பக்கம் வரை இடைவிடாமல் படிக்கத் தூண்டுகிறார் இமையம். கதாப்பாத்திரங்களை அவரவர் நிலையிலிருந்து வாசகனோடு உரையாட வைக்கிறது அவரது எழுத்தின் வலிமை.
தந்தையை இளம் வயதில் இழந்து, ஏழ்மையிலும் வைராக்கியத்துடன் தனது ஒரே மகனைக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு நாளும் யாரிடமும் கடன் கேட்க – வாங்க அனுப்பாமல் வறுமையிலும் சுயமரியாதையை விட்டுத்தராத கௌரவமாக வளர்த்த தாய். மனோதிடம் இல்லாத ஆண் கதாப்பாத்திரம். இலக்கிய அறிவுத்திறன் மிக்க இளம் பெண்ணிடம் மனத்தை பறிகொடுத்த ‘காதல்’ குழந்தைகளுக்கும் தெரிந்து குடும்பத்துக்குள் சர்ச்சையாகிவிட்டதால் மன அமைதி கெடுகிறது. அதைத் தன் தவறான காதலை வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க வழக்கறிஞர், காவல்துறை உயர் அதிகாரி என்று ஒவ்வொருவரிடமும் சென்று ‘பிரச்சனை’ தெருவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தனது தன்மானத்திற்கு ஏற்படும் இழுக்கிலிருந்து தப்பிக்கத் தானாக முன்வந்து முன்ஜாமீன் வரை செல்லும் ‘அறம்’ சார்ந்த வாழ்க்கைப் போராட்டம்தான் இந்த நாவலின் மையக் கரு. இது போன்ற பல மடங்கு கொடுமையான பிரச்சனைகளைத் தினமும் சந்திக்கும் காவல்துறை அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் இன்றைய சமூகத்தில் தொழில்நுட்பத்தால் நடக்கும் நவீன அவலங்களை எடுத்துச் சொல்லும்போது அதை அவர்கள் மிக எளிமையாக அணுகும் விதம் இயல்பாக ஒரு மனசாட்சியுள்ள மனிதனுக்கு ஏற்படுத்தும் உளவியல் சிக்கலை இமையம் மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த நாவலில் பின்தங்கிய கிராமத்துச் சூழலில் வளர்ந்து கல்லூரி முதல் ஆராய்ச்சிப் பட்டமேற்படிப்பு வரையில் ஆண்கள் நகரங்களில் படித்து இருந்தாலும், நகரத்தில் வாழும் அரசு ஊழியரின் குடும்பத்து நடுத்தர வர்க்கத்துப் படித்த இரண்டாம் தலைமுறைப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டபின் ‘அரசுப் பணி’ அடையாளத்தை இழக்க விரும்பாமல் சமரச வாழ்க்கையை வாழ ஏற்றுக்கொள்வதை விவரிக்கும்போது நாவலின் பக்கங்கள் நகர மறுக்கின்றன. பொருளாதாரத்தில் சமூகத்தில் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டிய அழுத்தத்தில் தனது குடும்ப உறவு-வேர்களுக்கு உதவ இயலாமல் சலிப்பதையும்; வயதான காலத்திலும் மகன் நலனை மட்டுமே பிரதானமாகக் கருதும் தாயையும்; தம்பியின் கௌரவத்திற்காக சகோதரிகளும் தங்களின் இரத்த உறவை மதிக்காத பேராசிரியரின் மனைவியிடம் முரண்படாமல் உறவாடும் ‘நாகரிக மோதல்களை’யும் மிகச் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது நெஞ்சறுப்பு. அதனினும், அறிவியல் படிப்பு படித்தவர்கள் மற்ற கலை மற்றும் மொழியியல் பாடங்களைப் படிக்கும், பணியிலிருக்கும் ஆசிரிய சமுதாயத்தையே உதாசீனமாகப் பார்க்கும் பார்வை நிதர்சனமாக இருக்கிறது. பணிச் சூழலின் காரணமாக கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும்போது சமூக உறவுகள் அறுபடத் துவங்குவதையும், அதே நகரம் அந்த கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை என்றாலும் நகரம் எவ்வாறு கிராமத்து மக்களை அந்நியமாக்கிப் புறக்கணிக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்து வைக்கிறார்.
இந்த நாவலின் எந்தப் பக்கத்திலும் காதலிக்கும் இருவரின் சமூக-பொருளாதாரப் பின்னணி குறித்துக, கடைசி வரையிலும் உரையாடலில் காணமுடியவில்லை. இதுதான் இந்த நாவலின் சிறப்பு. கதையின் களம் ‘காதல்’ என்றாலும் அது யாருக்குச் சாத்தியமாகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். திருமணம் குறித்து இருவரும் எந்த இடத்திலும்ப் பேசிக்கொள்வதில்லை. காதலி காதலனைச் சந்திப்பதற்கு வீட்டிற்கும் கல்லூரிக்கும் வருவதாகக் குறுஞ்செய்தி அனுப்பியதும் கதாநாயகனின் மனைவி – கதாநாயகனைக் காட்டிலும் தீவிரமாக யோசிக்க வைக்கும்போது திருமணமாகிக் குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது என்ற நிலையில் கணவனை பாதுகாக்க மனைவி தனது நட்பு வளையத்தைப் பயன்படுத்திப் பிரச்னையைச் சரிசெய்வது பெண் கல்வியின் பயன்பாட்டை உறுதிபடுத்துகிறது. இதுபோன்ற வயதுக்கு மீறிய ‘காதல்’ தொடர்பைப் பற்றி தினமும் சந்தேகத்துடன் விசாரிக்கும் கேள்விகளால் இயல்பு வாழ்க்கையிலிருந்து மன அழுத்தமான சூழலுக்குத் தனது கணவரை தள்ளியது எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத அவருடைய மனைவி காமாட்சிதான். ஆனாலும் அதை அவர் தவறு என்று உணர்ந்து தன்னை சசிகலாவிடம் இருந்து விடுவித்துக்கொள்ள படும்பாடு மனத்தைப் புரட்டி எடுக்கிறது. கணவனின் குடும்பத்தாரையும் அவரது யதார்த்தத்தையும் குறைத்து மதிப்பிட்டு இணையாகக் கருதிப் பழகாததால் அவரது இலக்கிய அறிவை வீட்டில் தன் மனைவிகூட அங்கீகரிக்கவில்லை என்றதால், குடும்பத்தில் தனக்கு ஓர் அடையாளமற்ற நிலையில் வாழ்ந்து வருவதுதான் இந்தச் சிக்கலின் மூல காரணம் என்று அறிய முடிகிறது. தன்னை ஓர் ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் மற்றொரு பெண்ணிடம் மனத்தைத் திறந்து அறிவு சார்ந்து இருவருடைய சிந்தனைப் போக்கும் ஒரே திசையில் பயணிக்கும் நிலையில் காதலுக்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மனைவிக்கு மறைமுகமாக உணர்த்துகிறது நெஞ்சறுப்பு. வீட்டிற்கும், கல்லூரிக்கும் வருகிறேன் என்று இரு வேறு தருணங்களில் சொல்லிக் கதாநாயகனை சீண்டிப் பரிசோதித்து வராத காதலி; தான் ஒரு நாள் உங்கள் ஊர் ஆற்றங்கரையில் பிணமாகக் கிடப்பேன் என்று வரும் குறுஞ்செய்தி கணவன்-மனைவி இருவரையும் தூக்கமின்றித் தவிக்கவிடும் மனப்போராட்டம் மூச்சடைக்க வைக்கிறது. சசிகலா ஆற்றில் மரணமடைந்தால் தன்னைக் காவல்துறை கைது செய்து நீதிமன்றம் அழைத்துச் செல்லும் காட்சியை, செய்தி ஊடகங்கள் எப்படிச் சித்தரிக்கும்?.
ஊடகம் யாருடைய ரகசியத்தையும் காக்கும் பெட்டகம் அல்ல. சக பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்படும் களங்கங்கள் குறித்து சிந்திக்கும் நேரத்தில் தற்கொலைக்குத் துணியும் விரக்தி மனத்தைக் கலங்க வைக்கிறது. அதேசமயம், ‘பார்த்துக்கொள்ளலாம்’ அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்? என்று போராடத் துணிச்சலும் மனதுக்குள் மாறிமாறி வந்து போவதுதான் ஒரு சராசரி மனிதனின் ‘மனசாட்சி’ உறுத்தல். சட்டப்படி எந்தப் புகாரும் சசிகலா அளிக்காத நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்த காதல்-நட்பு விவகாரத்தை பேராசிரியரின் மனைவி தனது பிடியைக் கணவர் மீது இறுகச் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காக மிரட்ட நினைத்துக் கணவர் செய்த தவறுக்குப் பாதுகாப்புத் தேடித் தாமாகவே சசிகலாவின் கல்லூரி வரை சென்று காவல்துறை, பேராசிரியர்கள் எனப் பலருக்கும் தெரியவைத்துவிடுகிறார். இரு நெஞ்சங்களுக்குள் மட்டுமே இருந்த நட்பு வழியான காதல் வாழ்வில் ஆற்ற முடியாத காயங்களை ஏற்படுத்தி விடுகிறார்.
கவிஞர்களின் கவிதை வரிகளை மட்டுமே பரிமாறிக்கொண்டு காதலாக நிலைப்படும் முன்பே ஊடகம் காட்டிக்கொடுத்துக் கருவறுத்து விடுகிறது. இலக்கியத்தில் புனிதமாகக் கருதப்படும் ‘காதலைப்’ பல கோணங்களில் கற்பனை வளத்துடன் எழுதும் கவிஞர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் யாருக்கும் பெரும்பாலும் காதல் வருவதில்லை. ஆனால் அதைப் படித்துவிட்டு அந்தக் கற்பனைக்கு அப்பாற்பட்டுக் கோட்டையைக் கட்டி உயிரூட்ட நினைக்கும்போது எதிர் கொள்ளும் உளவியல் சிக்கலில் ‘சாவதே மேல்’ என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார். அமைதியான வாழ்க்கையை வாழ நினைத்த அறிவாளி புத்தி பேதலித்து தான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனம் சிதறிய மனநிலையில் கல்லூரியில் கேண்டீனுக்குச் செல்வதற்குப் பதிலாகப் பெண்கள் கழிவறைக்கும், முதல்வரின் அறைக்கும் சென்றுவிட்டுக் கண்ணியக் குறைபாட்டால் மனநோயாளியாக மாறிவிடுவோமோ என்று எண்ணித் தான் கடந்து வந்த பாதைகளை நினைத்து மீண்டு எழத் துடிக்கும் மனம்; சசிகலா அனுப்பும் அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் தன்னை மரணக் குழிக்குள் அனுப்புமோ என்று எழும் சந்தேகங்கள் மூலம் கதாநாயகனை மட்டுமல்லாமல் வாசகனையும் தூங்கவிடாமல் வைத்திருக்கிறார் நாவலாசிரியர். கணவனின் இந்த மனச் சிக்கல்களுக்கு வடிகாலாக சிகரெட்டு புகைக்க, மது அருந்த வீட்டிலேயே அனுமதிக்கும் கறாரான மனைவி காட்டும் பரிதாபம் கதையில் இழையோடும் ‘சுய ஒழுக்க சறுக்கலை’ அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதுவரை கணவரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி, வேறொரு பெண் தனது கணவரைக் கைப்பற்ற நினைப்பதைச் சகித்துக்கொள்ள இயலாமல் கணவரைக் காட்டிலும் முன்முனைப்புடன் அந்த ‘நெஞ்சுறவை’ அறுத்தெறியத் துடிப்பதும்; கணவருடைய ‘காதலைப’ப் பற்றிக் குழந்தைகளுக்கு சொல்வதால் தந்தை-குழந்தைகளுக்குள் ஏற்படும் பாச இடைவெளி இயல்பாக நெருடலை ஏற்படுத்துகிறது.
குக்கிராமத்தில் இரண்டு சகோதரிகள் தங்கள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தங்களது சம்பாத்தியத்தில் கணவருக்குத் தெரியாமல் சேமித்து தனது சகோதரனுக்குப் படிக்க பணம் அனுப்பி உதவியிருந்தும் பெருந்தன்மையுடன் அவரிடம் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவாடினாலும் தன் சகோதரனின் மனைவி தங்களைச் சமமாக நடத்தவில்லை என்ற போதிலும் அவர் மீது வைத்த குறையாத பாசத்தையும் களங்கமில்லாத உள்ளத்தையும் வெளிப்படுத்தி இருக்கும் விதம் வாசகர்களின் இதயத்தைக் கனக்க வைக்கிறது. சமூக-பொருளாதார அடித்தட்டில் இருந்து படித்து இலக்கிய அறிவுக்கு உகந்த-இணையான சிந்திக்கும் ஒருவருடன் வாழ இயலாத நிலை. அதற்கான காலச் சூழல் அவரது வாலிப வயதில் அமையவில்லை. அந்த இடைவெளியைதான் சசிகலா நிரப்புகிறார். ஆனால் இது போன்ற ஒரு காதலை நியாயப்படுத்த முடியுமா? என்று வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கும் விதம் பல வாசகர்களின் அறிவைத் தெளிவடையச் செய்யும்.
காதல் என்பது உண்மையிலேயே ‘பித்து’ தான் என்று உணர வைக்கிறது நெஞ்சறுப்பு. சமூகத்தில் அறம், நேர்மை என்று வரையறைக்குள் வாழத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பொருளாதார பின்புலமில்லாத, தன் அறிவை மட்டுமே நம்பி வாழ நினைக்கும் ஒரு சாமான்ய குடும்பத்துப் பேராசிரியர், நவீன நகர நாகரிகச் சூழலில் வளர்ந்த ஒரு இளம் பேராசிரியையின் மனத்தைப் பகுத்தறிய முடியாமல் பல்வேறு கோணங்களில் சிந்தித்து சந்தேகங்களும், சலிப்புகளும், விரக்தியும் மேலோங்கி சுயத்தை வெறுத்து வாழ்க்கையைத் தொலைக்கும் விதத்தை எந்த ஓர் இடத்திலும் கற்பனை என்று நினைத்திராத அளவுக்கு எழுத்தாளர் இமையம் கதாபாத்திரத்தினுள் வாழ்ந்து எழுதிருக்கிறார். தொழில்நுட்பத்தால் அதிவேகமாக வளர்ந்துவிட்ட காட்சி ஊடகத்தின் செய்திகளில் உள்ள நெறிமுறைப் பிறழ்வுகளையும் சிக்கல்களையும் அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கத்தையும் எதிர்கொள்ள அஞ்சுவதை நினைத்து சட்ட சிக்கல்கள் வந்தால் அதைச் சமாளிக்க இயலாத கையறுநிலையில் கிடந்து தவிக்கும் ஒரு பேராசிரியர்; காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் நண்பர்களின் உதவியை அணுகும் விதம் உயர்க்கல்வி பயின்றாலும் உலக நடப்புகளை உற்று நோக்கவேண்டும் என்று உணர்த்துகிறது. இறுதியாக, அவரது கல்வி, பொருளாதாரம், அரசுப்பணியினால் கிடைத்த அடையாளத்தைப் பாதுகாக்க காதலை வெறுக்கிறார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி – நவீன உலகமயமாக்கப்பட்ட நாகரிகக் கட்டமைப்புகளை மாற்ற அறிவு சார்ந்த கல்விச் சிந்தனையில் தனிமனிதக் கட்டுப்பாடுகளை உடைத்து ஊடுருவத் துணியும்போது எவ்வாறு ‘குடும்ப அமைப்பு’ சிதைந்து விடாமல் இருக்க நடுத்தர வர்க்கப் பெண்கள்-ஆண்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார்.
இந்த நாவலில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களாகக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் இரண்டு தலைமுறை வயது இடைவெளி கொண்ட ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களின் பாடம் சார்ந்து நட்பாகப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் பழகத் தொடங்கும் ‘காதல் இலக்கியம்’ குறித்த உரையாடல்கள் மெல்ல நகர்ந்து நூலிழை வேறுபாட்டுடன் காதல் என்னும் உறவைத் தொழில்நுட்பம் வேகமாக வளர்த்துவிடுகிறது. அதே தொழில்நுட்பம் தன்னைக் காட்டிகொடுக்கும் தடயங்களாக, ஆதாரங்களாக மாறிக் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களை மிகத் துல்லியமாக முன்வைத்திருக்கிறார். காதலை அறிவியல் தொழில்நுட்பம் கண்காணிக்கும்போது ஆண் பேராசிரியருக்கு ஏற்படும் தன்மானம், சுயமரியாதை, சுய ஒழுக்கம், சமூக மதிப்பீடுகள் தனது அடையாளமான பேராசிரியர் பணியின் மாண்பைச் சிதைத்துவிடும் என்ற அறம் சார்ந்த தவிப்பு அவரைக் காதலில் இருந்து விடுபட நிர்பந்திக்கிறது. இலக்கிய வாசகியான கூர்மையான இலக்கியப் புரிதல்கள், உரையாடல்கள், உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களின் தன்மையை அணுகும் முறை நிஜ வாழ்க்கையில் அதன் பயன்பாடுகளைப் பொருத்திப் பார்க்கும் அறிவில் ஒத்த சிந்தனையுள்ள தனது காதலியை இணைத்த ஊடகமே அவரது வாழ்க்கையில் சூறாவளியாகச் சுழன்று நிம்மதியைத் துடைத்தெறியும் போது கைபேசியைக் கையிலெடுக்காமல் இருந்து வாழப் பழகுகிறார். எதை நாம் பெரிதும் விரும்புகிறோமோ அதுவே இடைஞ்சலாக மாறும்போது வெறுத்து ஒதுக்கும் நிலை வரும். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்பதை ஆழமாகப் புரியவைக்கிறார் கதாபாத்திரங்களைக் கட்டமைத்த எழுத்தாளர் இமையம்.
சசிகலாவுக்கும் ஸ்ரீரங்கப் பெருமாளுக்குமான அறுபடாத காதல் என்னவாகிறது என்பதுதான் நெஞ்சறுப்பு. காகிதத்தில் எழுதி வாங்கி காதலைத் தடை செய்தாலும் கைபேசி அலைக்கற்றைகள் அதை அறியவில்லை. இலக்கியத்தால் இணைந்த காதலை இணையத்தளம் என்னும் தொழில்நுட்பம் பின்னிய வலையில் சிக்கித் தவிக்கும் நவீன கலாச்சார மாற்றத்தின் எதிரொலி படிப்பவர்களின் நெஞ்சை நிச்சயம் அறுக்கும் – நெஞ்சறுப்பு. அதேசமயம், தொழில்நுட்பம் தவறுகளை ஒருபோதும் மறைத்துவைக்கும் சாதனம் அல்ல என்றும் சமூகப் பார்வையுடன் ஓர் எச்சரிக்கையை முன்வைத்து தான் ஓர் உன்னதமான எழுத்தாளன் என்பதை இமையம் இந்நாவலிலும் நிரூபித்திருக்கிறார். புதுவகைக் கதை சொல்லல் முறை. இதுவரைக்கும் தமிழ் இலக்கியம் பதிவு செய்யாத கதைக் களம்.
E-mail: akilram11@gmail.com