மூளை மனம் மனிதன் -21
நாடோடிக் கதை ஒன்று உண்டு. ஒருவன் நடந்து போகும்போது சாலையில் உள்ள மாமரத்தில் ஒரு சிறுவன் கஷ்டப்பட்டு ஏறி மாம்பழம் பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அடுத்தடுத்த நாள்களும் தினமும் ஒரு மாம்பழத்தை அந்தச் சிறுவன் பறிப்பதைப் பார்த்த அவன் அந்தச் சிறுவனுக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என அறிந்து அடுத்த நாள் அந்தச் சிறுவன் வரும் முன்பே அந்த மரத்தில் இருந்த மாம்பழங்களை எல்லாம் பறித்து வைத்து மரத்தின் அடியில் வைத்துவிட்டான். சிறுவன் மரம் ஏறிச் சிரமப் படாமல் இருப்பானே என நினைத்தான். அந்தச் சிறுவன் மகிழ்ச்சியடைவான் என எதிர்பார்த்தால் அந்தச் சிறுவன் அன்று ஏமாற்றமடைந்து பழத்தைத் தொடாமலேயே சென்றுவிட்டான். பிறகுதான் அந்த மனிதனுக்குப் புரிந்தது அந்தச் சிறுவன் விரும்பியது மாம்பழத்தை அல்ல. மரத்தில் ஏறிப் பறிக்கும் செயலை என.
மனித மனமும் அப்படித்தான். எளிதாகக் கிடைக்கும் ஒரு விஷயத்தைவிடச் சற்றுக் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் விஷயங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சி அளிக்கின்றன. இதற்குக் காரணம் நாம் முன்பே பார்த்த மூளையின் பரிசுப் பகுதி என்னும் Reward center தான். நாம் முயற்சி செய்து ஒன்றை அடைந்தாலோ கண்டுபிடித்தாலோ மூளையில் அந்தப் பகுதி பரபரப்படைந்து சில ரசானயங்களை வெளியிடுகிறது. இதனை ஆஹா விளைவு என்கிறார்கள் (aha effect), புரியாத ஒன்று புரியும்போது அது சட்டென்று ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.
புதிர்களைக் கண்டுபிடிக்கும் போது நமக்குச் சட்டென்று ஒரு மகிழ்ச்சி வருகிறது. ஏன் அப்படி? பரிணாம ரீதியாக இதற்கு விளக்கம் அளிக்கிறார்கள் மூளை இயல் வல்லுநர்கள். நாம் காடுகளில் திரிந்து கொண்டிருந்தபோது மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சிங்கம், புலி போன்றவற்றைக் கண்டுபிடிப்பது அவசியம். அதே போல் ஒளிந்திருக்கும் மான் போன்ற இரைகளையும் கண்டுபிடிப்பது அவசியம். மரத்தின் பின்னால் தெரியும் ஒரு வால் அல்லது புதரின் மேல் தெரியும் ஒரு கொம்பை மட்டும் வைத்துக் கொண்டு இது புலி, இது மான் என யூகிப்பது நமது உயிர்வாழ்தலுக்கு அவசியமாக இருந்தது அதனால்.அப்படிக் கண்டறிவது நமது மூளையின் பரிசுப்பகுதியைத் தூண்டி விடுகிறது. அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஜிக்ஸா புதிர் (Jigsaw puzzle) எனச் சொல்லப்படும் புதிர்களைத் தீர்ப்பதும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இதனால்தான். இதன் நீட்சியாகவே நமக்குக் குறுக்கெழுத்துப் புதிர்களைத் தீர்ப்பதில் இருக்கும் ஆவலையும் கருத வேண்டும்.
கண்ணாமூச்சி விளையாடுவதிலும் நமக்கு ஆர்வம் இருப்பது இதனால்தான். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். இங்குப் புள்ளி புள்ளியாகத்தான் தெரிகிறது. ஆனால் இதற்குள் டால்மேஷன் எனப்படும் வகை நாய் ஒன்று ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்ததும் நம் மனதுக்குள் ஆஹா என ஓர் உணர்வும் மகிழ்ச்சியும் எழுகிறதல்லவா?
கலை என்பதும் இது போலத்தான். ஒரு விஷயத்தினைச் சொல்லாமல் சொல்வது, புதிர்போலச் சொல்வது எனப் பல்வேறு உத்திகளுடன் நமக்கு நிஜத்தினைக் காட்டுகிறது. குறிப்பாக நவீனஓவியங்களில் இது போன்று சொல்லாமல் சொல்வது , வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்பது ஆகிய உத்திகள் பயன்படுகின்றன. காட்டில் மரத்தின் மேலிருந்து ஒரு சிங்கத்தையோ மானையோ பார்ப்பது நேருக்கு நேராகப் பார்ப்பது போல் முழுமையாக இருக்காது. அப்போதும் நமக்கு அது என்ன மிருகம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு விஷயத்தை வழக்கமாகப் பார்க்கும் கோணத்திலிருந்து வேறொரு கோணத்தில் பார்த்துக் கண்டறியும் புதிர்த்தன்மை மனிதனுக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த உத்திதான் நவீன ஓவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பிகாஸோவின் க்யூபிச ஓவியங்கள் ஒரே உருவத்தை வெவ்வேறு கோணங்களில் பார்த்து அதன் முப்பரிமாணத்தைத் தட்டையான கேன்வாஸில் கொண்டு வருபவை. அவை நமக்குப் பிடிப்பதற்கு அடிப்படை இந்த உளவியல் தன்மையாகத்தான் இருக்கும்.
முழுமையாகச் சொல்லாமல் அரைகுறையாக ஓர் அவுட்லைனை மட்டும் கோட்டோவியமாக வரைந்தால் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கண்ணாடி மட்டும் ஒரு காது வரைந்தால் அதில் நாம் காந்தியைக் கண்டுபிடித்து மகிழ்ச்சி அடைவது இதனால்தான். மினிமல் ஆர்ட் என்பார்கள்.
அதே போலவே மேகங்களைக் கண்டால் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவம் தெரியும். ஒருவருக்குக் கரடி , இன்னொருவருக்கு நாய் , வேறொருவருக்கு அவரது பாட்டியாகத் தெரியும். இது போல் அரைகுறையான உருவங்களைப் பார்த்து அதன் மீதியை நம் மனமே யூகித்துக் கொள்வதை பூடகமான கலை (Abstract art.) என்கிறார்கள். இந்தக் கலைப் படைப்புகளைப் பார்க்கும் போது நமக்கு மனத்தில் தோன்றுவது சரியான யூகம் அல்லது தவறான யூகம் என்று எதுவும் கிடையாது. அதை உருவாக்கியவர்கள் நினைத்ததையே நாம் நினைக்க வேண்டும் எனக் கிடையாது. ஓவியத்தில் இருக்கும் சிகப்பு நிறத்தில் ஒரு வட்டம் ரத்தமாக இருக்கலாம் ஆப்பிள் பழமாக இருக்கலாம். பார்ப்பவரின் மனநிலையைப் பொறுத்து அது அமைகிறது. ரசிகனின் பங்கு அதிகமாக இருக்கிறது. அவனது பார்வையே கலையைத் தீர்மானிக்கிறது. ‘படைப்பாளி இறந்து விட்டான்’ (Author is dead) என இலக்கிய வட்டத்தில் குறிப்பிடுவது இதைத்தான். படைப்பை உருவாக்கியதோடு படைப்பாளியின் பங்கு முடிந்து விடுகிறது. அதனை விளங்கிக்கொள்வது பார்வையாளனின் பார்வையைப் பொறுத்தது.
எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதை இறுக்கமான (Concrete) அல்லது வெளிப்படையான கலை (explicit art) என்கிறோம். வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லாமல் பார்ப்பவர்களின் ,படிப்பவர்களின் யூகத்துக்கே சிலவற்றை விட்டுவிடுவதே சிறந்த கலை எனப் பொதுவாகக் கலை விமர்சகர்கள் கூறுவதன் பின்னால் இருக்கும் உளவியல் காரணம் இதுதான். பரிமாண இயல்படி நம் மூளையின் சிந்திக்கும் முறைகள் இவ்வாறு அமைந்திருக்கிறது. இதற்கு ஏற்றவாறு இருக்கும் கலைகளைச் சிறந்த கலை என்கிறோம்.
உளவியலில் இதுபோல் அரைகுறையான உருவங்களைக் காட்டிப் பரிசோதிக்கும் முறை ஒன்று இருக்கிறது. ஹெர்மன் ரோர்ஷா (Herman Rorschach) என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டு உளவியல் மருத்துவர் உருவாக்கிய பரிசோதனை முறை இது. இதனை ரோர்ஷாவின் இங்க் ப்ளாட் பரிசோதனை (Ink blot test ) என்கிறார்கள். ரோர்ஷா என்ற பெயரில் ஒரு மலையாளப் படம் வந்தது நினைவிருக்கிறதா? அரைகுறையான உருவங்களைக் காட்டி அதைக் காணும் போது மனத்தில் என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்ல வேண்டும். இதில் சரியான பதில் தவறான பதில் என்று எதுவும் கிடையாது. நம் ஆழ்மனத்தில் இருக்கும் சிக்கல்களுக்கு ஏற்றவாறு அரைகுறை உருவங்களை நாம் யூகிப்போம் . உதாரணத்துக்குப் பாலியல் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு அவை பிறப்புறுப்புகள் போலத் தோன்றும்.
ஓவியத்தைப் போன்றே கவிதையிலும் சொல்லாமல் சொல்வது போன்ற உத்திகள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பது இதனால்தான். நல்ல கவிதை என்பது ஒரு காட்சியை வார்த்தையில் வரைவதுதானே?
சுருங்கச் சொல்வது, பூடகமாகச் சொல்வது, சொல்லாமல் சொல்வது போன்ற யுத்திகளுக்கு நேர் எதிராக மிகைப்படுத்தலும் கலையில் இருக்கிறதே? அதுவும் நமக்குப் பிடிக்கிறதே? அதற்கும் மூளை விடை சொல்கிறது.. தொடர்ந்து பார்க்கலாம்.