இப்போது நீங்கள் உயிர்மை இதழைப் படித்துக்கொண்டிருக்கும்போது தேர்தல் பரப்புரைகள் உச்சத்தை எட்டியிருக்கும். அடுத்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போதோ தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்திருக்கும். இப்போதைய இந்தியாவின் பிரமாண்டக் கேள்வி ‘மோடி ஆட்சி மீண்டும் வேண்டுமா, வேண்டாமா?’ என்பதுதான்.
மோடி ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும், ஏன் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகிவிடக்கூடாது என்பதைச் சிந்தித்தால் ஏராளமான விஷயங்கள் அணிவகுக்கின்றன. என்றபோதும் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டுக்கொள்வோம்.
நசுக்கப்படும் மாநில உரிமைகள்
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம், தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் சமமான வாய்ப்புகளோ உரிமைகளோ இல்லை. நமது தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே சில பிரச்னைகள் உள்ளன. உதாரணத்துக்கு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் பா.ஜ.க கூட்டணியைப் புறக்கணித்தனர். ஒரே ஒரு எம்.பி.கூடத்தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. என்றாலும் நமக்குப் பிரதமர் மோடிதான். 39 தொகுதிகளிலும் வென்ற தி.மு.க கூட்டணிக்கு மத்திய அமைச்சரவையில் எந்தப் பிரதிநிதித்துவமும் கிடையாது.
மாநிலப்பட்டியல், தேசியப்பட்டியல், பொதுப்பட்டியல் என்ற வரிசைகள் 1975இல் குலைக்கப்பட்டு கல்வி போன்ற உரிமைகள் நம் கைகளை விட்டுச் சென்றன. என்றபோதும் மிஞ்சியிருக்கும் மாநில உரிமைகளையும் அழிப்பதுதான் பா.ஜ.க.வின் முதன்மை இலக்காக இருக்கிறது. நீட், உதய் மின் திட்டம், புதிய கல்விக்கொள்கை என்று மோடி அரசின் எல்லாச் சட்டங்களும் திட்டங்களும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கவே செய்தன.
இன்னொருபுறம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களைக் கொண்டு குடைச்சல் கொடுப்பதில் அடிப்படை நாகரிகத்தின் எல்லா எல்லைகளும் மீறப்பட்டன. எதிர்க்கட்சிகளையும் அவர்களின் கூட்டணிகளையும் உடைப்பது, மசியாத எதிர்க்கட்சிகளுக்கு ஆளுநர்கள் மூலம் பிரச்னைகளை ஏற்படுத்துவது என்று கூட்டாட்சித் தத்துவத்தைக் காலில் போட்டு மிதித்தது பா.ஜ.க அரசு.
மொழித்திணிப்பு என்னும் வன்முறை
இந்து – இந்தி – இந்தியா என்பதுதான் பா.ஜ.கவின் ஒற்றைத்துவ அஜெண்டா. இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து மொழியுரிமைக்கான அடையாளமாக விளங்குவது தமிழ்நாடு. அப்போது இந்தக் குரலில் இணையாத மாநிலங்கள் இப்போது தமிழ்நாட்டின் போராட்ட முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன.
ஆனால் ஒன்றிய மோடி அரசோ சாத்தியப்பட்டவரை இந்தியைத் திணிக்கப்பார்க்கிறது. அஞ்சலகத் தேர்வுகளில் இருந்து ரயில் நிலைய வாடிக்கையாளர் மையம் வரை இந்தியைத் திணித்தது. ஆனால் தமிழ்நாட்டின் போராட்டத்தால் அந்த முயற்சிகள் பிசுபிசுத்துப்போயின. ஒருபுறம் திருக்குறள், புறநானூறு என்று தமிழ் மீது பற்றுள்ளவர்களைப் போல் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் நாடகமாடினாலும் சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் கூடுதல் நிதி அவர்களை அம்பலப்படுத்திவிடுகிறது.
மதவாதம்
பா.ஜ.க என்றால் மதவாதம் என்பதைத் தனித்துச் சொல்லத் தேவையில்லை. சிறுபான்மையினரைவேட்பாளராக நிறுத்தாமலே மாநிலங்களில் வெற்றிபெற முடியும், ஒரே ஒரு முஸ்லீமுக்குக்கூட இடம் தராமல் அமைச்சரவையை அமைக்க முடியும் என்ற மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. ராமர் கோயில் அமைப்பதையே அஜெண்டாவாக வைத்திருந்த பா.ஜ.க அதன் குடமுழுக்கை அரசு விழாவாக நடத்தி, அரசியல் சட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் முஸ்லீம்களை விலக்கி மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் உலகளவில் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற மூன்றாந்தரக் குப்பைப்படங்களை, முஸ்லீம்களுக்கு எதிரான குப்பைகள் என்பதாலேயே அரசு விடுமுறை அளித்துப் பார்க்கவைப்பது போன்ற மலினமான நடவடிக்கைகளில் பா.ஜ.க மாநில அரசுகள் ஈடுபட்டன.
ஊழல்
பா.ஜ.க மதவாதக் கட்சி என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள், தான் மட்டுமே நேர்மையான கட்சி என்பதைப போல் பா.ஜ.க போடும் வேடங்கள் பத்தாண்டுகளில் கலைந்துள்ளன. கறுப்புப்பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்கம் என்று அறிவித்து ஏராளமான ஏழைகள், சிறுவிவசாயிகளின் மரணங்களுக்கும் வாழ்வாதார முடக்கத்துக்கும் காரணமானது மோடி அரசு.
இன்னொருபுறமோ இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பா.ஜ.க பயன்படுத்துவது கறுப்புப்பணம்தான் என்பது பொதுமக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரம் என்ற பெயரில் தொழில் நிறுவனங்களை மிரட்டியும் அரசு ஒப்பந்தங்களை லஞ்சமாகக் கொடுத்தும் நன்கொடைகளை வசூலித்ததும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
பெண்கள் மீதான ஒடுக்குமுறை
‘மகளிர்தினத்தை முன்னிட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு’ என்று மோடி அறிவித்ததே அவரது நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மனநிலையைக் காட்டியது. இந்தியாவில் பெண்கள் மீது அதிகம் வன்முறை நடைபெறுவது பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தில்தான். ’ஒரு பெண் திருமணம் ஆவதற்கு முன்பு தந்தைக்கு அடிமை, திருமணமானபிறகு கணவனுக்கு அடிமை, கணவனுக்குப் பிறகு மகனுக்கு அடிமை’ என்ற மனுதர்மத்தின் அடிப்படையிலேயே பா.ஜ.க.வின் பத்தாண்டுகால ஆட்சி நடந்தது.
தலித்துகள் – பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான ஆட்சி
எப்படிப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகம் நடைபெறுகின்றனவோ அதேபோல் தலித் மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழும் மாநிலங்களும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள். பெயருக்குச் சில தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகளுக்குப் பதவி கொடுத்துவிட்டு அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தை மறுப்பதே பா.ஜ.க.வின் தந்திரம்.
பிரதமர் அலுவலகம் உள்பட மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் உள்ள 90 செயலர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர். மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் 4% மட்டுமே பிற்படுத்தப்பட்டோர்.
விசாரணை அமைப்புகள் :
அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மோடி அரசைப் போல் மோசமாகப் பயன்படுத்திய அரசு வேறெதுவும் இல்லை. எதிர்க்கட்சிகளை உடைக்க, தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளை அச்சுறுத்த என்று ஒருபுறம், தொழில் நிறுவனங்களை மிரட்டி நன்கொடைகளைப் பெறுவது மறுபுறம்.
கார்ப்பரேட்டுகளின் நண்பன்
மோடியின் அரசே அம்பானி – அதானி அரசு என்று சொல்லத்தக்க வகையிலேயே உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தியபோதும் மோடி அரசு அதற்கு முட்டுக்கொடுத்துக் காப்பாற்றவே முயன்றது. பெருவணிகக்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அள்ளி வழங்கிய மோடி அரசு, மறுபுறத்தில் விவசாயிகளின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாதது மட்டுமல்லாது, அவர்கள்மீது ஒடுக்குமுறையையும் ஏவிவிட்டது.
மூன்றாவதுமுறை மோடி வந்தால் இந்தியாவில் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், சமூகநீதி என அனைத்தும் கேள்விக்குள்ளாகிவிடும்.