அடிக்கடி போய் நிற்கிற எனதுவூர் ஏரிக்கு அருகில் அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த போது, மேற்கே சூரியன், குறும்புக்காரச் சிறுமி ஒருத்தி விளையாடி முடித்துத் தூர எறிந்த நெருப்புப் பந்தைப் போல இறங்கிக்கொண்டிருந்தது. அந்தக் குறும்புக்காரச் சிறுமி நானா? அப்படியான ஒரு பால்யம் எனக்கும் இருந்திருக்கிறதுதானே? மெல்லச் சூரியன் அடங்கின பிறகும் ஏரியில் அலையடிக்கும் நீரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கொக்கு ஒன்று மீனைத் தேடி நீரை ஒட்டிக்கொண்டு பறந்தது. என்னை மாதிரியே அது ஆழத்திற்குள் ஒன்றைத் தேடுகிறது போல.
ஏரிக்கு நடுவே பரிசலொன்று ஆடியாடிப் போய்க்கொண்டிருந்தது. அன்றைக்கு என்ன மீன் அவருக்குக் கிடைத்திருக்கும் என யோசித்தேன். மகிழ்ச்சியாய் அவருடைய குழந்தைகளுடன் அமர்ந்து அதை உண்ணுவதைக் கற்பனையில் கொண்டுவந்து பார்த்தேன். சிறுவயதில் கூடைகூடையாய் மீன் வாங்கிக் குடும்பத்திற்கே கொடுக்கும் என்னுடைய மாமா அப்போது ஞாபகத்திற்கு வந்தார். ஓடிப் போய் ஏரியில் குதித்து நீந்தி அந்தப் படகில் ஏறிவிட வேண்டும் என அந்த நேரத்தில் எனக்குத் தோன்றியது. அங்கே எனக்கொரு மகிழ்ச்சியான குடிசையிருக்கும்.
ஆழத்தை நோக்கி ஆடியாடிச் செல்லும் அந்தப் படகைப் போல என் கடந்த காலத்தைப் பின்னோக்கி யோசித்துப் பார்த்தேன். நகரத்துத் தூண்களில் மஞ்சள் நிற நியான் விளக்குகள் எரியத் துவங்கின. அவற்றின் ஒளி ஒரு கத்தியைப் போல ஏரியின் நீரைக் கிழித்துக்கொண்டு படிந்தது.
என்னைப் பற்றி நானே திரும்ப யோசிக்கத் துவங்கினேன். என் தோழி ஒருத்தி ஒருதடவை இப்படிச் சொன்னாள். “காந்தி உலகம் போற்றுகிறவராக, மறுக்கவே முடியாத கடவுளாக இருக்கட்டும். ஆனால் அவருடைய மகன் ஹரிலாலிற்கு அவர் எப்போதும் வில்லன்தான்” என்றாள். அவள் சொல்லி முடித்த மறுகணமே என்னை நான் ஹரிலாலுடைய மனநிலையில் வைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ள முயன்றேன். வாழ்நாள் முழுக்க உபதேசம் செய்த தந்தைக்கு எதிராகப் பொறுப்பற்ற முறையில் குடித்து, தலைதூக்க முடியாத போதையில் ஒரு பிச்சைக்காரனைப் போல உலவியவன் ஹரிலால். உலகிற்கே சத்தியத்தையும் உண்மையையும் போதித்த காந்தியால் ஹரிலாலின் உள்ளத்தை ஊடுருவி ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
நீர் நடுவே தத்தித்தத்தி நகரும் அந்தப் படகைப் போலத்தானே நானும் கரையேறி வரத் துடிக்கிறேன். எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என ஆழமாக யோசித்தேன். ஒருவகையான பொறுப்புணர்வைத் தோளில் மூட்டையாய்ச் சுமந்து மலையேறுகிற குதிரை ஒன்றைப் போல உணர்கிறேன். வீட்டை விட்டு வெளியேறும் பிள்ளைகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் என்று பதறுகிற தாயின் பொறுப்புணர்வைப் போலவும்.
குடும்பம் என்கிற இந்த அமைப்பு எவ்வாறு பெண்களின் வாழ்வை ஒரு கிழிந்த துணியைப் போல மாற்றுகிறது? என்பதையெல்லாம் திரும்பத் திரும்ப யோசித்தேன். வலுவான துணைக் கரங்கள் இல்லாவிட்டால் அது சீக்கிரமே அந்தப் பெண்களின் வாழ்வைக் குப்பைக் கூடைக்கும் அனுப்பிவிடுகிறது.
பெண்ணொருத்தி தவறு புரிகையில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தவற்றுக்கு இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் அது நிறைந்திருந்திருக்கிற இந்தச் சமூகத்திற்கும் பொறுப்பிருக்கிறது. அது அந்தத் தனிப்பட்ட மனுஷியின் தவறல்ல. இந்த ஒட்டுமொத்த அமைப்பின் தவறும்.
ஆனால் பழி என்று வருகையில் அந்தத் தனிப்பட்ட மனுஷியே கனக்கும் பாவமூட்டையைப் போலக் குற்றவுணர்வைத் தலையில் சுமக்கிறாள். அவளது வாழ்க்கை முடிந்த பின்னரும்கூட அந்தப் பாவ மூட்டையைத் தரையில் இறக்கி வைக்க இயலவில்லை. தாங்கமுடியாத பாரத்தைச் சுமந்தபடியேதான் அவள் இந்த ஓட்டத்தை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது.
என் சிறுவயதில் நினைவு தெரிந்த நாளில் இருந்து என்னுடைய வாழ்வை ஒரு கதையைப் போல, உங்களிடம் ஒளிவு மறைவில்லாமல் சொல்லத் துவங்குகிறேன். படிப்பினைகளைச் சொல்கிறேன், பாடங்கள் சொல்லித் தர முயலவில்லை. பட்டவர்கள் எல்லாம் பாடம் எடுத்துவிட முடியுமா என்ன?
காலமே ஒரு நல்ல ஆசான்தான். அவன் சொல்லித் தரும் பாடங்கள் அத்தனையும் விலை மதிப்பில்லாதவை. மஞ்சள் விளக்கொளி நிறைந்த, நான் நின்று கொண்டிருந்த ஏரி பாதி இருளிலும் இருந்தது. அந்த இருளிற்குள் இருந்து விளக்கொளியை நோக்கி ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து நீந்திப் பறந்து வந்தது. அதன் சிறகசைப்பில் நான் மேலும் என் நினைவுகளைச் சுமந்து பின்னோக்கிப் போனேன்.
நான் பிறந்த சென்னை வீட்டில் கிணறொன்று இருந்தது. அதற்கு அருகே மாடுகள் கட்டப்பட்டிருந்த காட்சி இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போதுள்ள சென்னையின் அடியாழத்தில் ஒரு பனிப்புகையைப் போல அந்தப் பழைய சென்னை என் கண்ணிற்குத் தெரிந்தது.
என்னுடைய தாத்தாவிற்குச் சொந்த ஊர் விழுப்புரத்திற்கு அருகில் இருக்கிற ஒரு கிராமம். தாத்தா அந்தக் காலத்திலேயே கல்லூரியில் பி.யூ.சி படித்தவர். மனத்தளவில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். பெண்பிள்ளைகள் தனியாகக் காலூன்றி நிற்கவேண்டும் என அப்போதே அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஆங்கிலம் படிக்க வேண்டும் என எல்லோரிடமும் வலியுறுத்துவார். தனிப்பட்ட வகையில் தாத்தா கற்றறிந்தவர். ஆனால் தொழில் என்று வருகையில் அவருக்கு எதுவுமே சுகப்பட்டு வரவில்லை.
தாத்தா ஆரம்பித்த அத்தனை தொழில்களுமே அவரைக் கைவிட்டுவிட்டன. சீட்டு விளையாடும் பழக்கம் கொண்ட அவரை அவை கைவிட்டு விட்டனவா? என இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் அரசாங்கத்தால் லைசன்ஸ் கொடுத்து அனுமதிக்கப்படும் சாராயக் கடை ஆரம்பித்தார் தாத்தா. போதைக்காரன் ஒருவனைப் போல அந்தத் தொழிலும் தலைகுப்புற விழுந்துவிட்டது.
கிராமத்தில் இருந்த தாத்தா, இப்படித்தான் வாழ வழியில்லாமல் சென்னைக்குக் கிளம்பி வந்தார். அவர் பல விஷயங்களில் தோற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய பிள்ளைகளை, அதிலும் குறிப்பாகப் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கிற விஷயத்தில் தோற்கவே இல்லை. என்னுடைய அம்மாவோடு சேர்த்து தாத்தாவிற்கு ஐந்து பிள்ளைகள். அதில் இரண்டு மாமன்களின் வாழ்வுமே சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லாமல் பட்டுப் போன மரங்களாகி விட்டன.
அந்த ஐந்து பிள்ளைகளின் சிறுவயது வாழ்வு முழுவதுமே கொடிய வறுமை நிரம்பியது என நான் நிறையக் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த ஐந்து குழந்தைகளுக்குள் இன்றைய தேதிவரை ஒற்றுமையே இல்லை. ஒருவரை ஒருத்தர் அடித்துக்கொள்ளும் மனப்பாங்கைச் சிறுவயதில் இருந்தே பெற்றுவிட்டார்கள் போல. வறுமையில் சோற்றுக்கு அடித்துக் கொள்கிறவர்கள் வளர்ந்த பிறகும் எதற்கெதற்காகவோ அடித்துக்கொள்கிறார்கள் என்பதை நான் கண்ணாரக் கண்டேன். என்னுடைய தாத்தாவே கோபம் வந்தால் அந்த ஐந்து பேரையும் கட்டையைக் கொண்டு அடிப்பாராம். குடியும் அடியும் குடித்தனமும் அக்குடும்பத்தின் சொத்தாகவே மாறிப்போய்விட்டது. அன்பு, அரவணைப்பு என்கிற வார்த்தைகளுக்குண்டான அர்த்தத்தை அறியாதவர்களாகவே பலர் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
என்னுடைய பாட்டி அந்த ஐந்து குழந்தைகளையும் ஐந்து மாதிரிதான் பார்த்தார் எனக் கதை கேட்டிருக்கிறேன். எல்லாக் குழந்தைகளையும் ஒரேமாதிரிதானே பார்க்க வேண்டும்? இந்த வறுமையினூடாகத்தான் என்னுடைய பெரியம்மா படித்து நல்ல வேலைக்குப் போனார். என்னுடைய சித்தி ஒருதடவை அவருடைய ஆசையைச் சொன்னார். அதைப் பற்றி இப்போதுகூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.
“பொமேரியன் நாய்க் குட்டியைப் பிடித்துக்கொண்டு பீச்சில் வாக்கிங் போக வேண்டும்”. ஆஹா! என்னவோர் அழகான ஆசை? யோசித்துப் பார்த்தால் அந்த வறுமையில் வாழ்ந்த பெண் குழந்தையொன்றின் நியாயமான ஆசைதானே அது? ஆனால் கடைசிவரை அந்த ஆசை அவர் விஷயத்தில், நிறைவேறவே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.
அம்மாவுடன் பிறந்த மாமா ஒரு விளையாட்டு வீரர். மாமா எப்போதும் மீன்கள் வாங்கினால், ஒன்றிரண்டு வாங்குகிற பழக்கமே இருக்காது. கூடை கூடையாய்த்தான் வாங்குவார். குடும்பமாக அந்தக் கிணற்றடியில் அமர்ந்து மீன்களைச் சுத்தம் செய்யும் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. விளையாட்டு வீரரான மாமா இப்போது பெராலிசஸ் வந்து கையும் காலும் இழுத்துக்கொண்டு படுத்த படுக்கையாய்க் கிடப்பது வாழ்வின் முரண் இல்லையா?
அந்த வீட்டில் என்னுடைய அம்மாவான பாட்டி ஒருத்தி கைகால் விளங்காமல் படுத்த படுக்கையாக இருந்தாள். அவள் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்லிச் சாபம் விட்டுக்கொண்டே இருப்பாளாம். அவளுடைய சாபம் பலித்துவிட்டதாக இப்போதுகூடக் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வார்கள். “ஓடியாடின இல்லு. தூறீயாடி போடுசு” எனத் தெலுங்கில் விட்ட சாபம். ஆட்டம் போட்ட வீடு அடங்கவே அடங்காது என இதை ஒருமாதிரியாக மொழி பெயர்த்துச் சொல்லலாம்.
ஓடியாடின இல்லு, அதாவது அந்த இல்லத்தை தன்னுடைய அதிகாரத்தால் கட்டி வைத்திருக்கிற என்னுடைய அம்மாவைப் பற்றி இந்தயிடத்தில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்னுடைய அம்மா கல்லூரியில் படித்துவிட்டு மறுபடி கூடுதலாகப் பட்டயப்படிப்பு படித்தவர். என்னுடைய அப்பா அந்தக் காலத்திலேயே கல்லூரியில் பொறியியல் படித்தவர்.
அப்பாவுடன் படித்த நண்பர்கள் எல்லாம் அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்கள். இவருக்கு மட்டும் ஏன் வேலை கிடைக்கவில்லை என ஆராய்ச்சி செய்த போதுதான் அவர் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் வாங்கவில்லை என்கிற செய்தியே எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. என்னுடைய அப்பா ஒரு தீவிரமான குடிகாரர். வீட்டில் கடுகுப் பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிற பணத்தைக்கூட எடுத்துக் குடித்துவிடுவார். பலநேரங்களில் குடித்துவிட்டு அவர் ஒரு பன்றியைப் போலச் சாக்கடையில் படுத்துக் கிடப்பதை என் கண்ணாலேயே பலமுறை கண்டிருக்கிறேன்.
என்னுடைய சிறுவயதிலேயே அப்பா வேலை என ஒன்றுக்குப் போவதை நிறுத்தி விட்டார். ஐந்நூறு ரூபாய் கிடைத்தால் அதை முழுவதுமாகக் குடித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். குடிபோதையில் அடிக்கடித் தனக்குத்தானே விபத்துகளை ஏற்படுத்திக்கொள்வார். அவருக்கு நன்றாக வந்த வேலை என்றால், குடிப்பது, பிறகு எங்களைப் போட்டு அடிப்பது, அவ்வளவுதான். அம்மாவின் சம்பாத்தியத்தில் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் வாழப் பழகிக்கொண்டார் அப்பா.
வேலையில்லாமல் இன்னொருத்தர் சம்பாத்தியத்தில் வாழ்கிற ஆண் மகனுக்குக்குரிய குணங்கள் அப்பாவை வந்து ஒட்டிக்கொண்டன. ஒருசார்பு விலங்கிற்குரிய, அதாவது ஒட்டுண்ணிகளுக்கு இருக்கக்கூடிய உடல்மொழி அவருக்கு எளிதாகவே கைவந்து விட்டது. அப்பாவைப் பற்றிய என் சிறுவயது ஞாபகம் என யோசித்தால் ஒரே சம்பவம்தான் இப்போதும் எனக்கு நினைவில் வருகிறது.
எனக்கு அப்போது எட்டு வயது இருக்கும். பள்ளியில் இருந்து ஆட்டோவில் வரும் போது என்னுடைய ஒரு கால் ஷூ தொலைந்துவிட்டது. சாலையில் எங்கேயோ விழுந்துவிட்டது. வீட்டிற்கு வந்தபிறகு என்னுடைய அப்பா அடித்த அடியை இப்போதுகூட மறக்க முடியாது. ஒரு மாட்டைப் போட்டு அடிப்பதைப் போல, மிருகமாய் மாறி என்னை அடித்தார். அந்த இரவு வேளையில் போய்த் தேடி அதை எடுத்துவரச் சொல்லி வெளியில் அனுப்பினார். நான் அழுதுகொண்டே தொலைந்த ஷூவைச் சாலையில் தேடிப் போனேன். எவ்வளவு தேடியும் கிடைக்காத அந்த ஒரு கால் ஷூதான் என் மகிழ்ச்சியான வாழ்வோ?
என்னுடைய அப்பாவின் குடும்ப ஸ்தானம் குறித்து விளக்குவதற்கு ஒரு காட்சியை மட்டும் சொல்கிறேன். என்னுடைய மாமா ஒருத்தர் இறந்து போய்விட்டார். அவருடைய உடல் வீட்டின் நடுவே கிடத்தப்பட்டிருந்தது. அந்த உடலுக்குச் சந்தனம் பன்னீர் தெளித்தபடி என்னுடைய அப்பா ஏதோ சொல்ல வந்தார். உறவினர்கள் எல்லாம் கூடி இருந்த அந்தச் சாவு வீட்டின் அமைதியைக் கிழித்தபடி என்னுடைய அம்மா “நான் செப்பிந்த்துதா” என ஓங்கிக் குரல் எழுப்பிச் சொன்ன போது, சுவரோடு போய் அமைதியாய்ப் பதுங்கிக்கொண்டார் அப்பா. சுவரை ஒட்டியபடி அச்சத்தில் நிற்கிற அப்பா எப்படி என்னுடைய ரோல் மாடலாக ஆவார்?
தாத்தா தொழிலில் உருப்படவில்லை எனினும் ஐந்து குழந்தைகள் பத்துப் பேரப் பிள்ளைகள் என நிறைவாழ்வு வாழ்ந்தார். ஒருதடவை இது குறித்து அவரிடம் நான் கேட்ட போது, “இப்படியே கூட்டமாக ஆகிவிட்டால் ஒரு கிராமமே நம்முடைய பெயரில் வந்துவிடும்” என்றார் சிரித்துக்கொண்டே. கூட்டம் என்பது மகிழ்ச்சிதான். ஆனால் ஒருகுடும்பத்தில் அதிகப்படியான தேவையில்லாத கூட்டம்கூட மகிழ்ச்சியைக் கொன்றுவிடும் என்பதை நான் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்தேன்.
தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு, சொந்தக்காரர் கூட்டத்தை எந்நேரமும் வீட்டில் வைத்துப் பொங்கிப் போட்டுக்கொண்டிருந்தனர் என்னுடைய பெற்றோர். முழுக்கவுமே வெற்றுப் பெருமைக்காக அதைச் செய்தார்கள். உண்மையில் பெருமைக்காக மாவிடிக்கிறவர்கள் என இவர்களைத்தான் சொல்ல வேண்டும்.
ஒரு கல்யாண வீடு, சாவு வீடு விடாமல் போவார்கள். கேட்டால், “என்னுடைய சாவிற்கு ஊரே கிளம்பி வர வேண்டும்” என்பார்கள். அதைக் கேட்கையில், அந்த வயதிலேயே எனக்குச் சிரிப்பாக இருக்கும். செத்தபிறகு யார் வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா என்ன? அம்மாவும் அப்பாவும் ஊர் வாயில் பெயரெடுக்க வேண்டும் என நினைத்தார்களே தவிர, தன் வீட்டில் இருக்கும் இளம் பிஞ்சு மனமொன்று என்ன நினைக்கிறது? என அறிய அவர்கள் முயற்சிக்கவே இல்லை. எட்டாம் வகுப்பிலேயே மகள் ஒருத்தி ஏன் தோல்வியுறுகிறாள் என்கிற கேள்விக்கு அவர்களுக்கு விடையே தெரிந்திருக்காது.
இன்னும் கொஞ்சம் ஊதினால் வெடித்துவிடும் நிலையில் இருக்கிற ஒரு பலூனைப் போலவே இருந்த வீட்டில் எனக்குச் சின்ன வயது அனுபவங்களே கிட்டவில்லை. அனுபவங்கள் என நான் சொல்வது இனிமையான அனுபவங்களை. ஒருகோணத்தில் யோசித்தால் அம்மாவே இதுவரை ஒரு நல்ல புடவைகூட உடுத்தியதில்லை என்பதை நினைவில் கொண்டு வருகிறேன். அவள் ஒரு நெருப்பு வளையத்தை எடுத்துச் சேலையாக அணிந்துகொண்டு ஓடத் துவங்கியிருந்தாள். அந்த வளையத்திற்கு வெளியே சூடு தாங்கமாட்டாத அவளுடைய பெண் குழந்தையொன்று ஓர் எளிய அணைப்பிற்காக ஏங்கித் தவித்ததை அவள் உணரவே இல்லை.
நாங்கள் தூங்கிய பிறகுதான் வீட்டிற்கு வருவாள். அதிகாலை எழுவதற்குள் கிளம்பி வேலைக்குச் சென்று விடுவாள். பெரிய பெரிய தொழிலதிபர்களுடன் கிடைத்த தொழில் முறையிலான உறவு அவளுக்குப் போதையாகவும் இருந்தது. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஒருநாள் நள்ளிரவு எழுப்பிப் பேன் பார்த்தாள். பேன் பார்க்கிற நேரமா அது?
அம்மா என்று நினைக்கையில் மோசமான அனுபவங்களே எனக்கு இப்போதும் முந்திக்கொண்டு வந்து நிற்கின்றன. அந்தச் சின்ன வயதில் நானே உணர்ந்து ”எனக்கு பிரா வாங்கித் தரமாட்டாயா?” எனக் கேட்டேன். என் அம்மாவை நோக்கி ஓங்கிக் குரலெழுப்பி நான் கேட்ட முதல் கேள்வியும் அதுதான். உடனடியாகப் பதில் எதுவும் சொல்லாமல் கொஞ்சநேரம் என்னைக் கூர்மையாக முறைத்துப் பார்த்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள்.
மறுநாள் என் படுக்கையறையில் அது சிறியதொரு கொடிக்காயைப் போல, அதேமாதிரியான செக்கச் சிவந்த நிறத்தில் கிடந்ததைப் பார்த்தேன். எல்லோரும் அந்த பிரா எனக்கு டைட்டாக இருப்பதாகச் சொன்ன போது கூசிப் போனேன். அதை அம்மாவிடம் போய்ச் சொல்லத் தைரியமும் வரவில்லை. அதைப் போட்டுக் கொண்டே அலைந்தேன். அந்த வயதில் அது எப்படியான மன உளைச்சலை எனக்குத் தந்திருக்கும்? ஆனால் அதைக்கூட கவனிக்காமல், சொந்தக்காரர்கள் மத்தியில் தியாகி மாதிரி சுற்றிக்கொண்டிருந்தாள் என்னுடைய அம்மா.
இதைத் தவிர்த்து, சின்ன வயதில் அம்மாவுடன் இருந்த நினைவுகளே இல்லை எனக்கு. அந்தக் கூட்டத்தில் நானுமே தனியளாக ஒதுங்கிப் போனேன். ஒரே ஒருதடவை பிஸ்கெட்டில் உள்ள க்ரீமை என் தங்கையிடம் இருந்து பிடுங்கித் தின்றது மட்டும் ஞாபகம் இருக்கிறது. அதைத் தவிர்த்து என் சின்னவயதில் நடந்த இனிப்பான ஞாபகங்கள் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை.
குடும்பத்தில் மழை வேண்டி நிற்கும் ஒரு பயிரைப் போல நின்ற எனக்கு, நான் வேண்டி விரும்பிய மழை கிடைக்கவே இல்லை. ஒரு பெரிய விருந்தில் விரிக்கப்படும் இலையின் ஓரத்தில், முகம் சுளிக்கிற மாதிரி மலத்துணுக்கு என் வாழ்வில் வைக்கப்பட்டே இருந்திருக்கிறது.
அம்மா அந்தக் காலத்தில் என்னை எதிரியாகப் பார்க்கத் துவங்கினாள். அவள் சொல் கேட்டு வளரவில்லை என எளிதாகப் பதில் சொல்லலாம். ஆனால் என் மனத்திற்குள் அப்போது என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா? நானென்ன குடும்ப கௌரவத்தைக் கெடுக்கிற மாதிரியா நடந்துகொண்டேன்? அந்தச் சின்ன வயதில் ஆசைகளும் கனவுகளும் இருக்காதா?
என் அம்மா, எனக்கு மட்டும் நேரத்தை அள்ளி வழங்க வேண்டும் என்று நினைப்பது தவறா? ஒரு முழுநாள் வேண்டாம். எனக்கென ஒரு ஐந்து நிமிடம்? அதைப் பற்றி எல்லாம் அவளிடம் தொடர்ச்சியாய்க் கேள்விகளைக் கேட்கத் துவங்கினேன். அதைச் சட்டைகூடச் செய்யாத அம்மா தன் தவற்றை வேறுமாதிரியாக மறைத்து என் மீது பழிபோடும் பணியை மேற்கொண்டாள். என் மார்பு பெரிதாக இருந்தால், அதற்கு நான் என்ன செய்வது? நான் மார்பைக் காட்டி ஆள்களை வசியம் செய்ய அலைவதாகச் சொல்லத் துவங்கினாள்.
ஆனால் அந்தக் காலத்தில் அந்தச் சின்ன வயதில் என்னுடைய நிலையில், ஒட்டுமொத்தமாகவே நொறுங்கிப் போய்விட்டேன். அடிக்கடி என் மார்புகளை வெறுப்போடு பார்ப்பேன். யாராவது அதை உற்றுப் பார்த்தால் அவமானத்தில் கூசிப் போவேன். ஏதாவது புற்றுநோய் வந்தால், அதை அறுத்து எரிந்துவிடலாம் என்றுகூட உச்சகட்டமாக யோசித்துப் பார்த்திருக்கிறேன்.
பெண் எனும் ஜீவராசியின் வழக்கமா படைப்புதானே அது? அதன்மேல் எதற்காக அத்தனை கீழ்மைகளையும் ஏற்றி வைக்கிறார்கள்? இதுவே ஓர் ஆண் சொல்லி இருந்தால்கூட ‘போடா’ என்று கடந்து போய்விடலாம். ஆனால் பெண்ணான அம்மாவே எப்படி இதைச் சொல்லத் துணிந்தாள்? ஏனெனில் அவளுக்கு அந்தளவிற்கு என்மீது வெறுப்பு இருந்தது.
அப்போதெல்லாம் அவள் இருப்பே என்னை எதிர்ப்பதில்தான் மையம் கொண்டு சுழன்றது. அவளுக்குத் துணையாய் என் அப்பாவும் சேர்ந்துகொண்டார். துணையாய்ச் சேர்ந்தது மட்டும் அல்லாமல் அவர் தனியாகவே இதுமாதிரி நிறைய அசிங்கமாகப் பேசி இருக்கிறார். அதற்கப்புறம் அவர்கள் எனது மார்புக் காம்புகளைப் பிடித்தே தொங்கியலையத் துவங்கினர்.
எனக்கு அப்போது எப்படியாவது அந்த வீட்டில் இருந்து தப்பித்துவிட்டால் போதும் என்றே இருந்தது. கல்லூரி முடித்ததில் இருந்தே அப்படியான அழைப்பொன்றிற்குக் காத்திருந்தேன். யாராவது ஒரு ராஜகுமாரன் குதிரையின் மீது ஏறி வந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டுபோய்விட மாட்டானா? என்று ஒருசமயத்தில் வேடிக்கையாகக்கூடத் தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது திருமணம் குறித்த கற்பனைகள் எல்லாம் எதுவும் இல்லை.
என் குறியெல்லாம் இந்த வீட்டில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது மட்டுமே. அந்தக் காலத்தில் அரண்மனைகளில் இருப்பதைப் போலப் பெரிய கோட்டை, அதனைச் சுற்றிலும் முதலைகள். இந்த முதலைகளிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்பதே என் முழுநேரச் சிந்தனையாக இருந்தது. அப்போதுதான் அந்த ராஜகுமாரன் வந்தார்.
இப்படிச் சொல்வதால் ஒரு சுவாரசியம் தட்டுப்பட்டு இருக்கலாம். ஆனால் என் வாழ்வில் அதற்கு நேர்மாறாகத்தான் எல்லாமும் நடந்தது. நான்கே வரிகளில் என் திருமண வாழ்க்கையைச் சொல்லி விடுகிறேன். அதன் அர்த்தம் மிகச் சரியாகப் புரிந்து விடும்.
திருமணம் ஆன புதிதில் நானும் என் கணவரும் ஹோட்டல் ஒன்றிற்குப் போனோம். அவர் ஒன்று ’ஆர்டர்’ செய்திருந்தார். நான் ஒன்று ’ஆர்டர்’ செய்திருந்தேன். நன்றாகக் கவனிக்கவும். தனித்தனியாகத்தான் ’ஆர்டர்’ செய்தார். எனக்கு முன்பாகவே அவருடைய ’ஆர்டர்’ வந்து விட்டது. அப்போது நான் கொலைப் பசியில் இருந்தேன்.
பசிமேலிட ஆர்வத்தை அடக்க மாட்டாமல் அவருடைய தட்டில் கையை வைத்தேன். “டோண்ட் டச். உன்னோடது வந்தபெறகு சாப்பிடு” என்றார். நான் சுக்காக நொறுங்கிப் போய்விட்டேன். எனக்கு அவமானமாக இருந்தது அப்போது. கணவரின் தட்டில் உரிமையாகக் கைவைத்து உணவை எடுத்தது தவறா?
நடுவீட்டில் விருந்திற்கு வந்து அமர்ந்த ஒருத்தியை, எழுந்து போ என அவமானப்படுத்துவதற்கு நிகரான செயல் அல்லவா இது? ஆனால் அந்த வார்த்தைகளைச் சொன்னதற்காக அவர் துளிகூடக் குற்றவுணர்வு கொள்ளவில்லை. என்னை நிமிர்ந்து பார்க்காமல் அவரது உணவைச் சாப்பிட்டு முடித்தார்.
வீட்டின் ஒரே பையனான அவர் அப்படித்தான் தன்னைத் தனித்தே வைத்துக்கொண்டார். ஆனால் எதற்காகத் திருமணம் செய்துகொண்டார்? ஊரார் சொல்வதைக் கேட்க வேண்டும். ஊரார் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். அதனால் அளவாய் இரண்டு குழந்தைகளை என் வழியே பெற்றுக்கொண்டார்.
சாப்பாட்டுத் தட்டில் இருந்து கையை எடுக்கச் சொன்ன மாதிரி, வாழ்க்கையில் பல சம்பவங்களில் வெவ்வேறு வகையான வார்த்தைகளைச் சொல்லிவிட்டார். தண்ணீரில் ஒட்டாத எண்ணெய் மாதிரி திருமண வாழ்வும் அமைந்துவிட்டது. குழந்தைகளுக்காக என என் மனத்தை அந்தச் சமயத்தில் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
கடவுள் அருளால் குழந்தைகள் இதைப் பார்த்தபடி வளர்ந்தாலும், நன்றாக வளர்ந்துவிட்டார்கள். பலநேரங்களில் என் பிள்ளைகள் எனக்குப் புத்திமதி சொல்கிற மாதிரிகூட நடந்துகொண்டார்கள். அதனால் குழந்தைகள் வழியே எனக்கு மனப்பாரங்கள் எல்லாம் வரவில்லை. ஆனால் கணவர் என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தேன்.
திருமணம் ஆன பிறகு என் அம்மா என் கணவரை அவளது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து விட்டாள். என் அப்பாவை எப்படி அதட்டி மிரட்டி வைத்திருக்கிறாளோ, அந்த மாதிரி இல்லாவிட்டாலும், ஒருவகையில் என் கணவர் என் அம்மா சொல்பேச்சுக் கேட்கிறவராகவே முற்றிலும் மாறிப் போய்விட்டார். எனக்கு எதிரே இருந்த அணியில் அவரும் போய்ச் சேர்ந்துகொண்டார். எதிரணி சொல்வதை எல்லாம் இவரும் உண்மை என நம்பத் துவங்கிவிட்டார். எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.
கையில் இரண்டு குழந்தைகள் எதிரே ஒரு பெரிய சுவர். அந்தச் சுவரில் கத்தியோடு குத்துவதற்கு ஆள்கள் அமர்ந்திருக்கிறார்கள். நான் குழந்தையோடு பதுங்கிப் பதுங்கிப் போகிறேன் என்பது மாதிரிக் காட்சி என் கனவில்கூட வந்திருக்கிறது. அந்தச் சுவரில் என் கணவரும் அமர்ந்திருந்தார் என்பதை நினைக்க நினைக்க எனக்கு அந்தக் காலத்தில் அழுகை முட்டிக்கொண்டு வரும்.
பொதுவாகவே இளம் வயதில் நம்முடைய பிரச்சினையை ஒருத்தரிடம் சொல்ல மட்டுமே விரும்புகிறோம். அந்தப் பிரச்சினைக்குத் தீர்வையெல்லாம் தேடவில்லை. யாரிடமாவது கஷ்டத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்கிற உணர்வு அது. ஆனால் ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் பிரச்சினையைச் சொல்வதே தீர்வை நோக்கித்தான் என்று நினைத்துக்கொண்டு அதைக் காதுகொடுத்துக் கேட்காமல் ஓடி விடுகிறார்கள். பிரச்சினைகளை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்புவதே இல்லை.
காசு தருகிறேன், சோறு போடுகிறேன், உனக்கு வாய் அதற்குத்தானே தவிர பேசுவதற்கு அல்ல என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். மனைவியின் எந்த விதக் கஷ்டங்களையும் கேட்பதற்குத் தயாராக இல்லாமல் காதுகளைக் கப்பென மூடிக்கொள்கிறார்கள். அதை ஒரு தந்திர நடவடிக்கையாகவும் வேண்டுமென்றே உணர்ந்து செய்கிறார்கள். அதைத்தான் என் விஷயத்தில் என் கணவரும் செய்தார்.
ஒட்டுமொத்தமாகவே என்னுடைய திருமண வாழ்வு இப்படித்தான் இருந்தது. குட்டி ஆடுகளைத் தன்னோடு அழைத்துச் செல்லும் தாய் ஆடு மாதிரி போகிற திசை தெரியாமல் தனித்துத் தவித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் என்னோடு இருந்தமாதிரியான தோற்றம் கிடைக்கலாம். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் மிகத் தனிமையாய் இந்தக் கூட்டத்தோடு காலத்தைக் கழித்தேன் அந்தக் காலத்தில்.
விருப்பு வெறுப்புகளே அப்போது இல்லை எனக்கு. ஒரு சூன்யமான வெளியில் எந்த விதப் பிடிமானங்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தேன். எதிரே இருப்பவளுக்கும் உயிர் இருக்கிறது என்கிற கருணையே இல்லாமல் எனக்கு முன்னே நின்றுகொண்டிருந்தது என் குடும்பம். எதிரே நிராயுதபாணியாய் நான் நிற்கிறேன்.
அந்த வானத்திற்கும் கேட்கிற மாதிரி கத்திச் சொல்லும்படியான வலி என் வயிற்றில் உருண்டது. ஆனால் எதையும் சொல்லாமல் எனக்கு நானே பூட்டிக்கொண்டேன். ஒருநாள் இரவில் இருந்து என் கணவர் தனியாக இன்னோர் அறையில் போய்ப் படுத்துக்கொள்ளத் துவங்கினார். அந்த இளம் வயதில் இருந்து இன்றுவரை இருவருக்கும் தனித்தனிப் படுக்கையறைகள்தாம்.
என்னிடமிருந்து மனத்தளவில் விலகிப் போன என்னுடைய கணவர் அவருடைய தொழிலிற்குள் தன்னை நுழைத்துக்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த இடத்தில்தான் அந்தப் பழைய உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
உலக உத்தமரான காந்தியின் பையன் ஹரிலால் ஏன் இப்படி ஆனார்? காந்தி தன்னுடைய புற வாழ்வில் வென்று இருக்கலாம். ஆனால் குடும்பம் என்று வருகையில் ஒரு வகையில் தோற்றுத்தானே போனார்? வெளிப்புற வாழ்வில் ஆண்கள் மிகப் பெரிய வெற்றியைக்கூடப் பெற்று இருக்கலாம். ஆனால் குடும்பம் என்று வருகையில் என்ன பெயர் எடுத்திருக்கிறார்கள்?
வெளி வாழ்வில் மட்டும் வெற்றிகரமானவராக இருந்துவிட்டால் போதுமா? குடும்பத்தில் மனைவி என்ன நினைக்கிறாள்? ஊர்ப்பக்கம் எல்லாம் பழமொழி சொல்வார்கள். உள்ளூரிலேயே விலை போகாத மாடு, வெளிநாட்டில் விலை போனால் என்ன? போகாவிட்டால் என்ன?
இளம் வயதில் தனித்த அறையில் ஒருத்தி என்கிற சித்திரம் எவ்வளவு துயரமானது தெரியுமா? அறைக்குள் தனித்துக் கிடக்கிறவளை நோக்கிக் கனவில் பூதங்கள் வந்தன. அவை அவளைத் தன் கோரப் பற்களைக் காட்டி மிரட்டின. அவற்றிடம் இருந்து அவள் தப்பி ஓர் இருள் சூழ்ந்த பகுதியை நோக்கி ஓடினாள். ஆனாலும் விடாமல் பூதங்கள் அவளை விரட்டிக்கொண்டு ஓடின.
அப்போதெல்லாம் கனவுகளின் போதுகூட இல்லாமல் சும்மா படுத்திருக்கும்போதுகூடப் பூதங்கள் என்னை விரட்டுகிற மாதிரித் தோன்றும். பல இரவுகளில் என்னையறியாமல் அலறித் துடித்து எழுந்திருக்கிறேன். பூதங்களிடம் இருந்து தப்பி ஓடுவதற்குப் பயந்ததைப் போல, என்னுடைய எண்ணங்களும் என்னைச் சூழ்ந்துகொண்டன.
எந்நேரமும் குடும்பம் ஒரு சுத்தியலை வைத்து மண்டைக்குள் நங்கு நங்கென்று அடித்துக்கொண்டு இருந்தது. வாழ்வில் மறுபடியும் சுற்றிலும் கோட்டைச் சுவர், அதற்குக் கீழே முதலைகள். இந்த முறை பூதங்களும் ஒன்றிணைந்துகொண்டன. அப்போதுதான் நான் இவற்றில் இருந்து என்னைக் காத்துக் கொள்ளக் குடிப்பழக்கத்தில் விழுந்தேன்.
அந்த நேரம் என்னுடைய கணவருக்கு மலேசியாவில் தொழில். அவரோடு குழந்தைகளும் நானும் கிளம்பிப் போயிருந்தோம். குழந்தைகள் மேல்நிலைப் படிப்பிற்காகச் சென்றுவிடுவார்கள். இவரும் தனியாகத் தன்னுடைய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். தனி அறையில் நான் மட்டும் கிடந்து போராடிக்கொண்டிருப்பேன்.
அல்லது தனியாகச் சந்தைக்குச் சென்று உலவிக்கொண்டிருப்பேன். பொதுவாக எனக்கு ஆல்கஹாலில் என்னென்ன வகை இருக்கிறது என்றெல்லாம் தெரியாது. ஏதோ ஒன்று, பாட்டிலில் இருப்பதைக் குடித்தால் போதையாகி எல்லாவற்றையும் மறந்து தூங்கிவிடுவேன். அவ்வளவுதான் அதைப் பற்றி எனக்குத் தெரியும். சூப்பர் மார்கெட்டில் இருக்கும் பாட்டில் ஒன்றை முதல்நாள் தூக்கி ஒளித்து வைத்துக்கொண்டு பயத்தோடு என் அறைக்கு வந்தது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இதை எப்படிக் குடிப்பது? தண்ணீர் ஊற்ற வேண்டுமா? அப்படியெனில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்? என்றெல்லாம் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தது இப்போதும் நினைவிற்கு வருகிறது. அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு அப்போது. அந்த முதல் பாட்டிலை அந்த வலியை மறக்க அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.
அன்றைக்கு இரவு என்னைப் பூதகணங்கள் எதுவும் விரட்டவில்லை. மண்டைக்குள் யாரும் சுத்தியலை வைத்து நங்கென்று அடிக்கவில்லை. தன்னை மறந்து தூங்குவது என்றால் என்ன? என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அப்படியானால் தூங்குவதற்கு அது தேவை என என் மூளை குறித்துக்கொண்டது. யாருக்கும் தெரியாமல் தூக்க மாத்திரைபோல ஆல்கஹாலைப் பயன்படுத்தத் துவங்கினேன். அதைக் கண்டுபிடிக்கக்கூட வழியில்லாமல் தனித்து இயங்கிக்கொண்டிருந்தது என் குடும்பம்.
வளர்ந்த வயதில் என்னுடைய பிள்ளை, “அம்மா ஏதாச்சும் டேட்டிங் சைட்டைப் பாரு” என்றது. குடித்துவிட்டு அப்படியான சைட்டுகளை மேய்ந்துகொண்டிருப்பேன். எனக்குத் தேவை நான்ஆறுதலாகப் பேசுவதைக் கேட்க ஒரு காது. ஆண்கள் எப்போதும் சொல்வார்கள். வீட்டில் உணவு சரியில்லை என்றால் ஹோட்டலிற்குப் போவது சாதாரணம் என்பார்கள். அதைப் போலப் பெண்ணிற்கு வீட்டில் ஒன்று கிடைக்கவில்லை என்றால் அவள் எங்கே போவாள்?
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்பது எல்லாம் வெறும் பேச்சளவில்தான் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். ஆனால் நான் அப்போது அப்படிச் சொல்கிறவர்கள் எல்லோரையும் மீறத் துணிந்தேன். அப்படி ஒரு வெறி எனக்குள் புகுந்துகொண்டது. நானே வேறோர் ஆளாக மாறிப் போனேன். ஒன்று தெரியுமா? நான் நன்றாக வரைவேன். ஆனால் இதுவரைக்கும் அந்த விஷயம் என்னைச் சுற்றி இருப்பவர்கள் யாருக்குமே தெரியாது.
அமர்ந்து ஆறுதலாகப் பேசி வரைவதன் பக்கம் என் கவனத்தைத் திசை திருப்பி இருந்தால், இந்நேரம் வரைந்துகொண்டு இருந்திருப்பேன். ஆனால் ’டிராயிங் பிரஷ்’ பிடிக்க வேண்டிய கையில் ’ஆல்கஹால் பாட்டிலைத்’ திணித்தது குடும்பம். ஆமாம் உண்மையிலேயே வலுக்கட்டாயமாக என் மீது திணிக்கப்பட்ட பழக்கம்தான் இந்தக் குடிப் பழக்கம் என இப்போதும் உறுதியாகச் சொல்வேன். ஏனெனில் இப்போது வரை என்னால் ரசித்து ஒரு தம்ளர் ஆல்கஹாலைக்கூடக் குடிக்க முடிந்தது இல்லை. துயரை மறக்க கப்பென வாயில் ஊற்றிக்கொள்வேன்.
அப்போதுதான் கவனத்தைத் திசை திருப்ப இன்னொரு படிப்புப் படிக்கலாம் என நினைத்து சுவீடன் நாட்டிற்குத் தனியாகக் கிளம்பிப் போனேன். அதற்காகப் பாடுபட்டுப் போராடவேண்டி இருந்தது. ஆனால் நான் போயே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அங்கேதான் எனக்கு ஆல்பர்ட் பழக்கமானான். என்னுடைய மிகச் சிறந்த நண்பனாக இருந்தான். என்னுடைய வகுப்பு முடிந்த பிறகு எதிரே தெரிகிற சூப்பர் மார்கெட்டிற்குள் போய் என்ன பிராண்ட் என்றுகூடத் தெரியாத பாட்டிலை எடுத்துக்கொண்டு அவனைப் பார்க்கப் போவேன். அந்தக் குடி போதையிலும் அவன் கண்ணியமாக நடந்துகொண்டான். எனக்குச் சிறந்த துணை அவன்தான் என்றுகூட அந்தச் சமயத்தில் தோன்றி இருக்கிறது. ஏனெனில் அவன் பொறுமையாக நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பான்.
இதைத்தான் சொல்கிறேன். வீட்டில் கிடைக்காததால்தான் ஒரு பெண் அதை வெளியில் தேடுகிறாள். நிறையப் பேர் உடனடியாகவே இதை உடல் சுகத்தோடு கொண்டு போய் முடிச்சுப்போட்டு விடுவார்கள். அதுவல்ல விஷயம். அவள் தேடிப் போவது ஓர் அன்பையும் அரவணைப்பையும்தான். அப்புறம் அது முடிகிற இடம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் எதைத் தேடி அவள் முதன்முதலாக வீட்டில் இருந்து காலை வெளியே வைக்கிறாள்?
இன்றைக்கு இலட்சக்கணக்கான குடும்பங்களில் இதுதான் நடக்கிறது. அவள் இருக்கிறபோது நாய்க்குக் கொடுக்கிற மரியாதையைக் கூடத் தரமாட்டார்கள். ஆனால் வெளியே போய்விட்டால் குடும்ப மானம் போய்விட்டது என்று கூப்பாடு போடுவார்கள். என்னைப் போன்றவர்கள் பெண்களின் பிரதிநிதியாய் நின்று இதைச் சொல்கிறோம். அதற்காக எல்லோரையும் குடும்பத்தை விட்டு வெளியே போய் விடுங்கள் என்று சொல்லவில்லை. அப்படிப் போனவர்கள் சொல்வதற்கென்று நியாயங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வருகிறேன்.
அதேமாதிரி போகிறவர்கள் எல்லோருமே ஒற்றைச் சுகத்துக்காகத்தான் போகிறார்கள் என்கிற முத்திரையைக் குத்துபவர்களுக்காக இதைச் சொல்கிறேன். ஆல்பர்ட் என்னிடம் நல்ல மாதிரியாகவே நடந்து கொண்டான். என் மனத்தளவில் அவன் தோழன் என்பதற்கும் ஒருபடி மேல்.
அந்தக் காலத்தில் அவன் எனக்கொரு நல்ல துடுப்பாகவும் இருந்தான். நானுமே எப்போதும் படிப்பு விஷயத்தில் சோடை போவதில்லை. அந்த வகுப்பில் நன்றாகவே படித்தேன். வகுப்பு முடிந்ததும் அந்த வெறுமை என்னை வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த வெறுமையான கோப்பையை ஆல்கஹாலால் நிரப்புவேன்.
நாள்பட நாள்பட என்னையறியாமல் அதிகமாகக் குடிக்கத் துவங்கினேன். ஒருநாளைக்கு ஒரு முழுப் பாட்டிலைக்கூடக் குடித்து விடுவேன். ஒருநாள் ஆல்பர்ட்டின் அறையில் இப்படி நிலைதடுமாறிக் குடிக்கத் துவங்கினேன். ஏற்கனவே நிறையத் தொடர்ச்சியாகக் குடித்து இருந்ததால், அன்றைக்கு நான் ஒரு அழுகிய காய்கறி மூட்டையைப் போல மயங்கிச் சுருண்டு விழுந்தேன்.
என்னை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்துப் போவதற்கான வேலைகளைத் துவங்கினார்கள் போல. அதுகூட அப்போது எனக்கு நினைவில் இல்லை. அவன் என்னுடைய அறையில் துணிமணிகளை எடுத்து வைக்கிற காட்சியைக் கடைசியாகப் பார்த்தேன். போவதற்கான விமான டிக்கெட்டைக் கூட அவன் கையில் வைத்து ஆட்டிக் காட்டியது மங்கலாக எனக்கு நினைவில் இருக்கிறது. அதற்கப்புறம் நான் மயங்கிப் போனேன். மயக்க நிலையில் நாற்காலியில் என்னை வைத்துத் தள்ளி விமானத்தில் ஏற்றினார்கள். ஓடு பாதையில் இருந்து பட்டாம்பூச்சி மேல் நோக்கிப் பறந்தது.
வான் நோக்கிப் பறந்த விமானம் கடைசியில் என்னை வந்து போட்ட இடம் சிறைச்சாலை. என்னுடைய அம்மாவின் வீட்டின் அறையில் கொண்டு வந்து போட்டார்கள். வந்த சில நாள்கள் என்னுடைய கையையும் காலையும் கட்டிப் போட்டிருந்தனர். நானென்ன பைத்தியமா? ஆனால் என்னுடய அம்மா அந்தக் காலத்தில் என்னை அப்படித்தான் பார்த்தாள்.
அந்த அறையை வெளியில் இருந்து பூட்டி வைத்தாள் என்னுடைய அம்மா. வீட்டிற்கு வேலைக்கு வருகிறவர்கள் பைத்தியத்திடம் நடந்துகொள்வதைப் போல என்னிடம் நடந்து கொண்டார்கள். என்னுடைய கணவருக்கு இது குறித்து எந்த அக்கறையுமே இல்லை அப்போது. என் அம்மா சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
அப்போதுகூட அவர் என் அருகில் அமர்ந்து அன்பாய் கனிவாய் கருணையாய் என்னிடம் பேசி இருந்தால் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு இருப்பேன். அப்போதுகூட அவருக்கு அந்த மனம் வரவில்லை. அவர் என்னுடைய அம்மாவின் கோணத்தில் இருந்தே அதைப் பார்த்தார்.
என்னுடைய அம்மா வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பையன்களை என் உதவிக்கு அழைத்தேன். அவர்கள் யாருக்கும் தெரியாமல் எனக்கு பாட்டில்களை வாங்கிக் கொண்டுவந்து தருவார்கள். கையில் தட்டுப்படுகிற பணத்தை எடுத்து அவர்களது கையில் கொடுப்பேன். அதைத் தாண்டி அவர்கள் வேண்டியதையும் கொடுப்பேன். பாட்டிலைத் தலைமாட்டில் ஒளித்து வைத்துக்கொள்வேன்.
மூடியைக் கழற்றி அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டு விட்டு மீண்டும் அடியில் வைத்துவிடுவேன். போதை தலைக்கேறி அப்படியே தூங்குவேன். இடையில் விழிப்பு வருகையில் மீண்டும் வாயில் கவிழ்த்துக்கொள்வேன். எத்தனை நாள் இப்படித் தொடர்ந்து குடித்தேன் என்பதே எனக்கு நினைவில் இல்லை. தொடர்ந்து குடித்தபடி இருந்ததே எனக்கு இப்போது நினைவிலும் இருக்கிறது.
என்னுடைய அம்மா அந்தக் காலத்தில் என் மீது உடல்ரீதியிலான சித்திரவதைகளையும் துவக்கி இருந்தாள். அதில் இருந்து தப்பி ஓடி எதிர்க்கிற ஒருத்தியை முழுப் பைத்தியம் என முடிவு செய்தார்கள். எனக்கு எல்லோரையும் நோக்கிச் சத்தம் போட்டுப் பேச வேண்டும் என்கிற வெறி வரும். அவ்வாறே கத்திச் சத்தம் போட்டுப் பேசுவேன். அதற்காகப் பைத்தியம் என்பதா? ஆனால் அப்படித்தான் என்னுடைய குடும்பம் முடிவு செய்தது.
என்னுடைய பிள்ளைகளைக் கேட்காமல் என்னுடைய அம்மா அந்த முடிவினை எடுத்தாள். என்னை ஹைதராபாத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்தாள். என்னுடய கணவரும் இந்த முடிவிற்கு உடந்தையாக இருந்தார்.
ஒருநாள் துள்ளத் துடிக்க என்னை வண்டியில் வைத்து அங்கே கொண்டு போனார்கள். நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு. அன்றைக்கு நான் சிவப்புச் சுடிதார் அணிந்து இருந்தேன். என்னுடைய அம்மாவும் என்னுடைய கணவரும் சேர்ந்து என்னை அந்தப் போதை மறுவாழ்வு மையத்தில் கொண்டு போய்த் தள்ளினார்கள். பட்டாம்பூச்சி ஒன்றை வீட்டுச் சிறையில் இருந்து திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றினுள் உலவவிட்டார்கள்.
அந்தப் போதை மறுவாழ்வு மையமே அப்புறம் என்னுடைய உலகமாகவும் மாறிப் போனது. ஒப்பீட்டளவில் வீட்டுச் சிறையை விட அந்தச் சிறை நன்றாக இருந்தது என்றே சொல்லவேண்டும். வசதியான வீட்டுப் போதை அடிமைகள் தங்குவதற்கான மையம் அது. மாத வாடகையே ஐம்பதாயிரம் ரூபாய் பக்கமாக வரும். ஆனால் அதைக் கொடுத்துத் தொலைக்கக்கூடத் தயாராக இருந்தார்கள். மாறாக என்னோடு அமர்ந்து காது கொடுத்துக் கேட்க மட்டும் தயாராக இல்லை என்கிற சிந்தனை என் நெஞ்சினைக் கனக்க வைத்தது.
அந்தப் போதை மறுவாழ்வு மையத்தில் மாதத்தில் ஒருநாள் வெளியே அழைத்துப் போவார்கள். அப்போது ஒரு குறிப்பிட்ட தொகையை எங்கள் கையில் கொடுத்து எதையாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளச் சொல்வார்கள். அங்கே எனக்கு சின்ன பையன் ஒருத்தன் பழக்கமானான். “வெளியே வந்ததும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.
அந்தப் பரந்த வெளியில் இப்படி ஒரு சின்ன பையனோடு வெள்ளந்தியாகச் சுற்றிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவும் செய்தது. நானும் அவனும் அந்த மாதக் கோட்டாவில் இரண்டு பொருள்களை ஆர்டர் செய்து பங்கிட்டுச் சாப்பிடுவோம். வெளியில் அழைத்துப் போகிற அந்த ஒருநாள்தான் எங்களுக்கு விடுதலை. மற்ற நாள்கள் எங்கேயும் சொல்ல முடியாது. விருந்தினர்கள் வந்தால் முன் அறைக்குப் போய்ப் பார்க்கலாம். நம்மைப் பார்க்க யாராவது வர மாட்டார்களா? என்றுகூடப் பல நேரம் காத்து இருந்திருக்கிறேன்.
இந்த இடத்தில் ஒன்று சொல்கிறேன். போதை அடிமை என்றால் ஏதோ அடித்தட்டு மக்கள் மட்டுமே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நானிருந்த மையத்தில் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். புகழ்பெற்ற சினிமா;க குடும்பத்தில் இருந்துகூட அங்கே வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்கள். எதற்காக இங்கே வருகிறார்கள்? வேண்டி விரும்பியா எல்லோரும் இங்கே வருகிறார்கள்? அவர்கள் அனைவருக்குமே என்னைப் போலச் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. அத்தனையும் காதுகளால் கரிசனையாய்க் கேட்கப்படாத கதைகள்.
என் வாழ்க்கை குறித்து நான் ஆற அமர அப்போதுதான் சிந்தித்தேன். சிறைச்சாலைதான் என்றபோதும் அங்கே கிடைத்திருக்கிற சுதந்திரம் என்னுடைய சிந்தனையைக் கூர்மைப்படுத்தியது. வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளில் கிடைத்த ஒவ்வோர் அனுபவத்தையும் ஒரு மாட்டைப் போல அசைபோட்டுப் பார்த்தேன்.
எனக்கு எதிரே எனக்கான வானம் திறந்து கிடந்தது. எப்போதோ படித்த புத்தகம் ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு பெண்மணி எழுதிய புத்தகம். அவருடைய பெயரும் அதன் தலைப்பு எனக்கு மறந்துவிட்டது. ஆனால் அந்தக் கதை எனக்குத் துல்லியமாக நினைவில் இருக்கிறது. அதுவரை பெண்கள் ஆஸ்திரேலியப் பாலைவனத்தைக் கடந்ததே இல்லையாம். முதன்முறையாகச் சில ஒட்டகங்களின் துணையோடு அந்தப் பாலைவனத்தை அவர்தான் தனியொருத்தியாகக் கடந்தாராம். அதுவோர் உலகச் சாதனை அப்போது.
ஒட்டகங்கள் வளர்க்கும் பண்ணையில் வேலையாளாகச் சேர்ந்து, அதனிடம் கடிபட்டு, மிதிபட்டு, அதனோடு பழக்கம் வளர்த்து அந்தப் பாலைவனத்தைத் தனியாகக் கடந்த வெற்றிக் கதை. எதற்காக இதைச் சொல்கிறேன் எனில், ஒட்டகத்தோடு முட்டி மோதுகிற மாதிரி நான் என் எண்ணங்களோடு அப்போது போராடிக்கொண்டிருந்தேன்.
இந்தப் பாலைவனத்தை எப்படியாவது கடந்துவிட வேண்டுமென என் மனத்தில் ஊக்கம் பிறந்தது. யார் தயவு இல்லாமலும் என் பாலைவனத்தை என்னால் கடந்து போய் விட முடியும் என்கிற நம்பிக்கையும் அப்போது முளைவிட்டது. பாலைவனத்தைக் கடக்க, பறப்பதற்குத் தயாராகப் பட்டாம்பூச்சி இருந்த போதுதான் மறுபடி என்னை அழைப்பதற்காகக் குடும்பம் அங்கே வந்தது.
என்னுடைய பிள்ளையின் திருமணத்திற்கு அம்மாவாகச் சபையில் நிற்க வேண்டும் என்பதற்காக அழைத்துப் போக வந்தார்கள். உண்மையில் என்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஆசையில் வரவில்லை. இப்போதுகூட ஊரார் வாயில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அழைத்துப் போக வந்தனர். ஆனால் எனக்கென்னவோ அந்தச் சிறைச்சாலையை விட என்னுடைய மையமே பிடித்திருந்தது. வரமாட்டேன் என அடம்பிடித்துச் சொல்லிப் பார்த்தேன். ஆனாலும் அங்கிருந்து என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் போனார்கள்.
வந்த பிறகு எங்கேயும் எனக்குச் சின்னவித மரியாதைகூடக் கிடைக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள். நான் எங்கேயெல்லாம் போய்க் காதுகளைத் தேடுவேனோ, அங்கே எனக்கு முன்னே போய் அமர்ந்து என்னைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பத் துவங்கினர். என்னுடைய மார்பகங்களின் மீது அவர்களது கற்பனைகளைச் சுமத்திப் பூதாகரமாக்கிப் பரவவிட்டனர், நான் புழங்குகிற வெளியில். மாங்காய்கூடப் பலாப்பழம் போலத் தெரியத் துவங்கியது.
இப்போது இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்கூட என்னைச் சித்திரவதை செய்யக் கத்தியோடு குடும்பம் அந்தச் சுவற்றில் அமர்ந்து இருக்கிறது. அனுதினமும் நான் எதற்காவது நொந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே அதனுடைய வாழ்நாள் நோக்கமாகவும் இருக்கிறது. அப்படியென்ன செய்துவிட்டேன் அதற்கு? இங்கேதான் அந்த உண்மையை அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. நான் அதை நோக்கிக் கேள்விகளைக் கேட்டேன். அதுதான் அடிப்படையான காரணம்.
அப்படி என்ன கேட்டுவிட்டேன்? பிரா வாங்கித் தரச் சொல்லிக் கேட்டது குற்றமா? அங்கிருந்தே என் எல்லாத் துயரங்களும் துவங்கின. என்னுடைய பருத்துத் தளர்ந்து தொங்கும் மார்பகங்களில் பிராந்தியை ஊற்றி வழியவிட்டுப் பழிதீர்த்துக் கொள்கிறேன் இப்போது. ஆமாம், நானொரு பருத்த மார்புகொண்ட பட்டாம்பூச்சி