அத்தியாயம் – 4
வேறு நிலம் தேடித் தொன்மையும் ஆதனும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்த காலத்தில் அவர்களுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். வெவ்வேறு இடங்களில் அவர்கள் பரவி வாழ்ந்து வந்தனர்.
நெடுந்தூரம் நடந்து கங்காசரத்தின் மேற்குப் பகுதிக்கு வந்து நின்ற கிழத்தம்பதிகள் நிமிர்ந்து பார்த்தனர். தென்திக்கில் ஒரு தொடர் எழுந்து நின்றது.
“அடி என்னாடியிது பேரெழவு?”
சலித்துக் கொண்டாள் தொன்மை. அவள் சலிப்பைக் கண்ணுற்ற ஆதன் விசனமுடையவனாகித் தன் பலங்கொண்டமட்டும் இரு கைகளையும் மார்புக்கு நேராக நீட்டி மலைத் தொடர்களைத் தள்ளினான். அவை நகர்ந்ததும் அகண்ட கணவாய் உருவானது.
இப்போது மலைத்தொடரைப் பார்ப்பதற்கு, மண்கட்டிகளை உட்டை சேர்த்தது போலிருந்தது. ஆதனுக்குப் பயந்து மலைத்தொடர் நகர்ந்தபோது குலுங்கியதில் குமுங்கியும் குமைந்தும் நொறுங்கியும் அகடும் முகடுமாய்த் தம்மைத்தாமே அவை ஒருங்கமைத்துக்கொண்டன. அந்தச் சமவெளியில் வெள்ளெருக்குச் செடிகள் மண்டியிருந்ததனால் தொன்மை அவ்விடத்துக்கு எருகூர் எனப் பேரிட்டாள்.
கோச்சேரியிலும், பட்டறைப் பகுதிகளிலும் ஆதன் தினை, சாமை, வரகரிசி ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தான். பின்னர், தேறலுக்கு மாற்றாய்க் கிடைக்கப் பெற்ற நெல்லை விதைக்கத் தொடங்கினான். எருகூருக்கு இடம்பெயர்ந்த பின்னர் மலைத் தொடரை ஒட்டி, பரந்து கிடக்கும் ஏரிச் சமநிலத்தில், தாமாகவே செழித்துக் கிடக்கும் நெற்பயிர்களைப் பார்த்துக் குதூகலித்தான் ஆதன். அந்தச் சமநிலத்தில் விரும்பிய மட்டும் அவன் வயலை உருவாக்கினான். நெல்லறுவடை வரைக்கும் தொன்மைப் பயிர் காத்தாள். இடையிடையே அவர்கள் தமது காதல் கதைகளைப் பேசிக்கொண்டனர்.
எருகூர்க் கணவாயில் நிறைய யானைத்தடங்கள் உருவாகி இருந்தன. வானபரியந்தம் இருபுறமும் எழும்பி நிற்கும் மலைத்தொடரின் அடிவாரத்திலும், காட்டாற்றின் கரையொட்டிய சமவெளியிலும் நெருக்கமாகச் சிறுதுத்திச் செடிகள் மண்டிக் கிடந்தன. புதர்ச்செடிகளை ஊடறுத்தபடி யானைக் கூட்டங்கள் குறுக்கும் மறுக்கும் நடப்பதால் மண்ணில் தழைந்து அரியரியாய்ப் பணிந்திருக்கும் தாவரங்களைத் தனக்கு வழி விடுபவையாகக் கருதிய ஆதன் தினமும் அத்தடங்களில் நடந்தான். இறுகிய மண்ணைக் கொம்பால் கிளறும் பெருந்திமில் காளைகளைப் பார்த்திருந்த ஆதன், அதைப் போலவே பெருங்கழி கொண்டு மண்ணைக் கிளறலாமே என எண்ணம் கொண்டவனான். அதற்கென அவன் மரங்களைத் தேடியலைந்தும் வந்தான்.
ஏர்க் கலப்பைக்கு மரம்தேடி, ஆற்றோரக் குடைவேலைத் தேர்ந்தொருநாள் வெட்டிக்கொண்டிருக்கையில் அவ்வழியே தேனடையுடன் செல்லும் தொன்மையைப் பார்த்தான் ஆதன். சிறுதுத்தியின் மஞ்சள் பூக்களையும், சிவந்த பூக்களையும் பறித்துக் கூந்தலில் சூடியிருந்த தொன்மை, மரம் வெட்டும் ஓசை தன்னை அழைப்பதாய் நினைந்து, ஓரிமை நேரம் அவனைக் கூர்ந்து நோக்கி மீண்டாள். அவளுக்கு முன்னால் காதும், வாலும் நறுக்கப்பட்டிருந்த வேட்டை நாய் ஓடியது.
தொன்மையின் கரிய விழிகளில் சிக்குண்ட ஆதன் உளையத் தொடங்கினான். அவள் எண்ணத்தோடவன் வேலமரப் பட்டைகளைச் சீவச்சீவச் செந்நீர் வடிந்தது. தன் இதயத்தை மேலும் சீவினான் ஆதன். வெட்டிய மரங்களை நிழலில் உலர்த்திவிட்டுப் பாறைகள் நடுவில் விரையும் நுரைநீரிடையே அசைவின்றிக் கிடந்தான். மேகங்கள் எதுமில்லாத வானம் தொன்மையின் கண்களாய் அவனை வெறித்தது. அதில் தெறிக்கும் சிறு ஆணவம்! மெல்லிய அலட்சியம்! எம்மைக் கைப்பற்ற ஒண்ணாதென்ற கர்வம்! பொழுது கறுக்கும் வரை நீரிலேயே கிடந்தான் ஆதன். மிக நெருக்கத்தில் பிளிறலும், உறுமலும் கேட்ட பின்னரே நீரிலிருந்து விடுபட்டவனாகி வேலங்கட்டைகளைச் சுமந்துகொண்டு நடக்கலானான்.
உடல் கிளர்ந்ததும், பிறிதோர் உடலை நாடிப்புணரும் வேட்கையன்று இது. வேறோர் உணர்வு; அல்லது வதை. நொடிக்கொருதரம் நினைவிலாடி நெஞ்சைப் பிசையும் முகநிழல். உறங்க விடாமலும், உண்ண விடாமலும் அலைக்கழித்திடும் பித்தம். எந்நேரமும் அவளுடனிருப்பதே இதற்கொரு தீர்வென்று தெளிந்தவனாய், ஆதன் பெண்கேட்டு வந்தபோது தொன்மை தன் குடிசையின் வாசலில் நின்று அவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள். இருவரின் முகத்திலும் மெலிதாய்ச் செம்மை படர்ந்தது.
ஆதனின் தாய் கையில் பூச்சரத்தை ஏந்தியபடி தொன்மையைக் கண்டு சிரித்தாள். வெண்மையும் உறுதியுமான இதழ்களையுடைய அந்தப் பூக்களின் நறுமணம் தொன்மையைக் காந்தம் போல் ஈர்த்துக்கொண்டது. நறுமண விசையை எதிர்த்து நிற்கத் திராணியற்றவளாகி ஆதனின் அன்னையிடம் வந்து ஒட்டிக் கொண்டாள் அவள். ஆதனின் தகப்பன் வாழைப் பழக்குலையைச் சுமந்து வந்திருந்தான். பழங்களை உடனுக்குடன் பறித்துத் தொன்மையின் வீட்டாரும், உறவும் தின்று தீர்த்தனர். தொன்மையின் தாய் உடைந்த பானை வறுவோட்டில் உப்புக் கண்டத்தை இட்டுச் சிவக்க வறுத்து, பசியதும் அகன்றதுமான பம்படி இலைகளில் வைத்து விருந்தினருக்குக் கொடுத்தாள். எல்லாரும் கறியை மென்றபடி ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டனர்.
தொடர்ந்த நாளொன்றில், ஆதனை மணப்பதில் தொன்மைக்கு விருப்பமில்லை என்ற சேதியைப் பெண் வீட்டார் சொல்லியனுப்பி இருந்தனர். சேதியைக் கேட்ட மாத்திரத்தில் தொன்மையை இடித்துரைக்கத் தொடங்கிய தாயைக் கையமர்த்திவிட்டு, வீட்டிலிருந்த வெல்லக் கட்டிகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டுப் போய்த் தொன்மையின் வீட்டில் வைத்து விட்டு வந்தான் ஆதன். தொடர்ந்த நாளொன்றில் ஏர்க்கலப்பைகளைச் செய்வதற்குத் தோதான மரங்களைக் காட்டாற்றுக் கரையோரம் வெட்டிக்கொண்டிருக்கையில் ஆதனைத் தேடிவந்த தொன்மை, வாய்மொழியேதும் சொல்லாமல் கடிது வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். பாறைகளுக்கிடையிலும், புல்வெளியிலும் மாலைவரை கிடந்து அவர்கள் கலவிகொண்டனர்.
“இமைப் பொழுதும் இனியுனை விலகேன்!”
நெற்புலம் காத்திருக்கையிலும், பயிரிடையே சேர்ந்திருக்கையிலும் இணையர் இருவரும் இவற்றை எண்ணிச் சிரித்துக் கொள்வதுண்டு. அச்சிரிப்பொலி சுழற்காற்றாய் எழும்பி ஏரியின் நீரைக் கலக்கும். நீரினின்று அச்சமயம் மேலெழும் மீன்கள் பலவகையான பறவைகளாகிப் பறந்து செல்லும்.
ஆதன் வழங்கும் வெல்லக் கட்டிகளுக்குப் பித்தேற்றும் ஆற்றல் இருக்கிறதென்று ஊரெல்லாம் பேசிக்கொண்ட போதும், தொன்மை ஆதனைக் காதலிப்பதாகச் சொன்ன போதும், அவளின் அண்ணன்மார் அதை ஏற்காமல் திரிந்தனர். நிலத்தைப் பிளப்பதற்கு உதவிடும் கருவிகளைச் செய்கின்ற ஒருவனுக்குத் தம் தங்கையை மணமுடிக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. களவுச் சந்திப்பில் தமையரின் எண்ணத்தை ஆதனிடம் தெரிவித்த தொன்மை, காட்டிடை பொழியும் மழையென அழத் தொடங்கினாள். கண்ணீர் பெருகி ஆறாகி வெள்ளம் புரளும் நிலையுணர்ந்த ஆதன், மரகதப் புறாவின் இறகில் இருக்கும் நுண்ணிய வரிப் பிளவுகளை உடைய அவளின் இதழ்களில் விசையொடு முத்தமிட்டு ஆற்றுப் படுத்தியபின், சிந்தனை செய்தான்.
ஏரடித்துக் கொடுப்பவருக்கு நிலத்தைக் கொடையாக அளிப்பதும், அறுவடை தோறும் அவர்க்குத் தானியம் அளப்பதும், ஊர்ப்பொதுவில் நிறுத்தி மரியாதை செய்வதும் வழக்கங்களாக நிலவிவந்த எருகூரில் தானும், தன் தகப்பன்மாரும் எவ்விதம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பதை அவன் நினைவுகள் காலத்திடம் விசாரிக்கத் தொடங்கின.
யார் யாருக்கோ நிலங்கள் கொடையளிக்கப்பட்டிருக்கின்றன. எவரெவரோ நிலங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஏர்க்கலப்பை செய்திடும் தமக்கு நிலமில்லை. வீடு முழுவதும் மரக்கட்டைகள் சிதறிக்கிடக்கின்றன. உடன் அவற்றைச் செதுக்கி வடிக்கும் உலோகக் கருவிகளும் கிடக்கின்றன. அவற்றினொடு தாமும் மரக்கட்டைகளைப் போலவே கிடக்கின்றோம். எம்மைச் செதுக்கி வடிக்கும் உலோகங்களாகக் கண்ணுக்குப் புலப்படாத சாசனங்கள் பரவுகின்றன.
தன்னுடைய தாத்தாவின் காலத்திலேயே ஏர்க்கலப்பையைச் செய்ததற்கு நெல்லைக் கூலியாய்க் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அதற்கு ஈடாய் வெல்லக் கட்டிகளைக் கொடுத்து வருவதாகவும் ஆதன் அறிந்து வைத்திருந்தான். ஊரிலுள்ள நிலபுலத்தார் உழவாரக் கருவிகள் செய்த கூலிக்கு ஈடாய் ஈந்த வெல்ல உருண்டைகள் ஆதன் வீட்டு அடத்தையில் குவியலாய்க் கிடந்தன.
பத்துப் பதினைந்து ஏர்க்கலப்பைகளைச் செய்வதற்கான உத்தரவுச்சொல் வந்திருந்தபடியால், அப்பா அதிகாலமே எழுந்து போனார். அவர் திருநகரில் இருக்கும் மரப்பட்டறைகளுக்கோ, அல்லது யாராவது ஒருவரின் காட்டு நிலத்துக்கோ மரங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் போகிறார் என்பது ஆதனுக்குத் தெரியும். அப்பா மரங்களைத் தெரிவு செய்வதைப் பார்க்க அவனுக்கு வியப்பாக இருக்கும். கணுக்களையுடைய மரங்களையும், புண்ணுடைய மேனிகளையும் பிடிவாதமாக விலக்கிவிடுவார். மரத்தைத் தட்டிப்பார்த்து அதன் மறுமொழி கேட்பார். மரப்பட்டைகளைக் கொண்டே மரத்தின் உள்ளிருக்கும் துவாரங்களையும், வெற்றிடங்களையும், வளையங்களையும் கணக்கிடுவார்.
“எருகூர் இருசனாசாரி ஏருன்னா மறுபேச்சில்லாம வாங்கலாம். அப்பிடியிருக்கும் பொருளு!”
அப்பாவுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு வாழ்த்துச் சொல்தான். சோறு வயிற்றை நிரப்புகிறது, சொல் மனத்தை நிரப்புகிறது!
மேழியின் அழுத்தத்தை ஏரின் உடம்பும், மண்ணில் இழுபடும் குத்தியும் தாங்க வேண்டும். உலோகக் கொழுவைப் பொருத்தினால், அது நகம்போல் ஏருடன் ஒட்டிக் கிடக்க வேண்டும். ஏர்க்காலுக்கும் நுகத்துக்கும் அதிகப்படியான வலுதேவை. எப்பேர்ப்பட்ட காளைகள் இழுத்தாலும் நெக்குவிடவோ, முறிந்துவிடவோ கூடாது. அப்பா இதையெல்லாம் எண்ணியும், மனத்தில் வைத்தும்தான் மரத்தை ஆய்ந்தெடுப்பார்.
அப்பா புறப்படும்போது மரக்கட்டைகளை வாசலில் பரப்பிக்கொண்டிருந்த ஆதன், அவர் ஏதும் சொல்கிறாரா என்று ஏறிட்டுப் பார்த்தான்.
“தொளக்கூரு மட்டும் போட்டு வெய்யி. நா வந்துட்றேன்!”
”ம்…செரி!”
அவன் தலையாட்டியதைக்கூட நின்று பார்க்காமல் தெருவிலிறங்கி நடந்தார். அவர்கள் இருக்கும் குறுக்குத் தெருவிலிருந்து, பாட்டைக்கு ஏறிச் சென்றார். ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் காலையிலும் மாலையிலும் ஓயாது நடந்து சாணம் பொடிந்த தெள்ளுப்புழுதி வீசும் பாதை அது. எதிரில் வியாபித்திருக்கும் மலைத்தொடரில் அப்பா ஏறுவது போன்றதொரு சித்திரம் அவன் முன்னால் உருவானது.
அம்மாவும் தாத்தனும் கூலிக்குக் கிளம்பிப் போனதும், வீட்டில் யாருமில்லாத நேரமாய்ப் பார்த்து அடத்தையின் மேல் ஏறினான் ஆதன். சூரியனின் கதிர்கள் அடத்தைக்கு நேராகத் தகிலும்படி ஓலைக்கூரையில் வழிபண்ணிவிட்டுக் கீழிறங்கிக்கொண்டான். பொழுது ஏறஏறச் சூரியக்கதிர்கள் அடத்தையில் இருக்கும் வெல்லக் குவியலில் விழுந்தன. மார்பளவுக்குப் பொழுது ஏறிய நொடியில் வெல்லக் குவியலில் இருந்து பழுப்பு நிறத்தில் உருகத் தொடங்கியது பாகு.
தலைமேல் சூரியன் தகிக்கும் நடுப்பொழுதில் பேர்பாதி எருகூரைச் சூழ்ந்திருந்தது பாகு. ஊரையொட்டி எழுந்து நிற்கும் மலைத்தொடரின் கண்கள்தான் திறந்து கொண்டு, எரிமலைக் குழம்பு வழிந்து வருகிறதோ என்று மக்கள் அச்சம் கொண்டனர். ஏது செய்யலாம் என்று அவர்கள் முடிவெடுப்பதற்குள் ஒவ்வொருவராகப் பாகின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அடர்த்தி மிகுந்தும், இறுகப் பற்றிடும் பசையைப் போன்றும், மெழுகுத் தன்மையுடனும் இருந்த, பழுப்பு வண்ணம் கொண்ட வெல்லப் பாகு, இரையை விழுங்கிய மலைப்பாம்பின் பின்னுடலைப்போல, எருகூரின் மேல் மெல்ல மெல்ல ஊர்ந்தது.
நிலவொளியில் மாணிக்கக் கல்லாய்ப் பொலியும் எருகூரை மலைத்தொடரின் பாறை மேல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆதன். வெண்ணொளி ஊடுருவியதில் தேனில் சிக்கிய எறும்புகளாய் அதனுள்ளே மக்கள் தெரிந்தனர். தொன்மை எங்கிருக்கிறாளெனத் தேடினான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல் படுத்திருந்தாள். பாகில் உறைந்திருந்த நிலையிலும் அவளின் அண்ணன்மார் அவனை முறைத்தனர். எருகூர் மக்கள் எல்லாரும் அவனை நோக்கி முறையிடுவதைப் போலிருந்தது. பாகின் மணம் கலந்து வீசிய காற்றில் மக்கள் முறையிடும் ஓலமும் கலந்தே ஒலித்தது. ஆதன் அந்த நேரத்தில் மக்களை விடுவிக்க வெல்லத்தைக் காய்ச்சலாம் என்று தீர்மானித்துக் கொண்டான்.
”வெல்லத்தைக் காய்ச்சினால்தான் மக்கள் விடுபடுவர். பசையில் ஒட்டி, பிசுபிசுப்பில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு ஏற்றவழி பாகை இளக்குவது மட்டும்தான். பாகை இளக்குகையில் ஆவியாகும். ஆவி குளிர உற்சாகம் தரும்! வெல்லத்தை வடித்துக் கொடுத்தால், உருகிப் பருகத் தொடங்குவர். பருக உருகுவர். இறுகிய எண்ணங்கள் இளகும். தெளிந்த நிலையில் இருக்கும்போது புரியாத சொற்கள், போதையில் இருக்கும்போது தெளிந்து புரியும். போதை ஓர் ஆதி மொழி. போதை உயிரின் தாய்மொழி. விளக்கங்கள் தேவைப்படாத நேர்மொழி போதை. வரையறை செய்ய முடியா உளறலே எப்போதும் சிறந்தது. அதில் சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றன. சூட்சுமங்கள் நிறைந்திருக்கும் மொழியில்தான் மக்கள் உறைந்திருக்கிறார்கள். புரிந்துவிட்டால், பின் தெளிந்துவிடும். தெளிந்துவிட்டால் பின்னர் புரியாது. சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. பொருளில்லாச் சொல்லுக்குப் பொருளில்லை. போதை…போதை”
பாறையில் நின்று குத்தித்தாடிக் கூவினான் ஆதன். அவன் காய்ச்சித்தந்த வெல்லப்பாகு நீரைக்குடித்த மாத்திரத்தில் தொன்மையை அவனுக்கே தருவதென அவளின் அண்ணன்மார் சம்மதம் சொல்லி விட்டனர்!
நாளெல்லாம் நின்றபடியே நீள்பிடி உடைய கோடரியால் ஏர்க்கலப்பைகளைச் செய்வதற்கேற்ற மரங்களைச் செதுக்குவது ஆதனின் வழக்கம். வேம்பும், முருங்கையும் தழைத்திருக்கும் வீட்டு வாசல் நிழலில் நட்டு வைத்திருக்கும் இழைப்புக் கட்டையின் மேல் மரத்துண்டுகளை வைத்து அப்பனும் மகனும் இழைப்புளியால் அவற்றை இழைப்பர். மரக்கட்டைகளைப் பலகையறுக்க வாளிறங்கும் அளவுக்கு மண்மேடமைத்து அடிமரம் போட்டிருந்தார்கள். அதன்மேல் நின்று ஒற்றையாளாக மரப்பலகைகளை அறுத்து எறிந்தான் ஆதன்.
இருந்த மாதிரியே இருந்து திடீர் திடீரெனக் காணாமல் போய்விடும் ஆதனை இருசன் திட்டித் தீர்த்துக்கொண்டு இருந்தான்.
”இங்க மூஞ்சக் காட்னா, அங்கச் சூத்தக் காட்றான். அங்கச் சூத்தக் காட்னா, இங்க மூஞ்சக் காட்றான். எங்கூத்தியாரு ஒரு எடத்துல நெலயா நிக்கிறானா பாரு!”
தனக்குத் தெரியாமல் நடுக்காட்டுக்குச் சென்று மகன் சாராயம் இறக்குகிறான் என்பதைச் சாகும் வரைக்கும் இருசன் அறியவில்லை. ஆனால், ஆதன் இறக்கிவரும் சாராயத்தை மாலை வேலைகளில் வாங்கிக் குடித்துவிட்டுக் கமுக்கமாய் நடைவழியில் படுத்துக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது. தனக்கென மகன் எங்கிருந்தோ அந்த உடல்வலி மருந்தை வாங்கி வருகிறான் எனத் தகப்பன் நினைத்துக்கொண்டான்.
இருசனின் மரணத்துக்குப் பிறகு ஆதன் யார் பேச்சையும் கேட்கவில்லை. பருவ காலங்களைப் போன்று அவன் மனமும் எண்ணங்களும் மாறின. சிலவேளை ஏர் செய்தான். சிலவேளை சாராயம் காய்ச்சினான். எப்போதும் அலைந்து கொண்டும், நின்று கொண்டும் இருப்பதால் அவன் கெண்டைக் கால்களுக்கு ரத்த நாளங்கள் இறங்கி வந்தன. மரத்தைச் சுற்றிய கொடியென அவை காட்சியளித்தன. அவன் வயது கூடியது தெரியாமல் ரத்தம் அந்நாளங்களில் ஓடிக் கால்களைக் குடைந்தது.
உளைச்சல் அதிகமாகிடும்போதெல்லாம் தொன்மையின் பழம்புடவையில் நார் கிழித்துத் திரித்து வைத்திருக்கும் கயிற்றால் கெண்டைக் கால்களை இறுகக்கட்டி மெள்ள மெள்ளக் கயிற்றை மேலேற்றி உருவி விட்டுக்கொண்டான் ஆதன். பொறுக்க முடியாத வேதனையில் தொன்மைக்குத் தெரியாமல் ரத்த நாளங்களைக் கத்தியால் கிழித்துக் கருங் குருதியை நிலத்தில் வடியச் செய்தான்.
தொன்மையை மணந்த நாளிலிருந்து அவளை இமைப்பொழுதும் பிரியாதிருந்தான் ஆதன். தொன்மையின் பற்களும், ஆதனின் பற்களும் பாதிக்குப்பாதி உதிர்ந்துவிட்டன. ஆயினும் அவர்கள் ஒருவரையொருவர் புன்னகைத்துக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் தலையும் வெண்ணிறம் கூடிப் பஞ்சிழையாகின. ஆயினும் அவர்கள் வீட்டுத் திண்ணையிலும், கயிற்றுக் கட்டிலிலும் அமர்ந்து தம் நினைவுகளைக் கிளறிப்பூக்கச் செய்து ஓயாமல் கனவுகளுக்கு வண்ண மேற்றினர்.
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஆதன் குடிக்கத் தண்ணீர் கேட்பான். அவன் பேரப்பிள்ளைகளோ, மருமகள்களோ பஞ்சபத்தரையில் அவனுக்குத் தண்ணீர் தருவார்கள். அதை அவன் திருப்பி அனுப்புவான்.
“அவள எடுத்துணு வரச்சொல்லு எம்மாடி”
“காடு வா வான்னுது, வீடு போ போன்னுது! உன்னும் பொண்டாட்டி கையாலயே வாங்கிக் குடிக்கணுமா கெழத்துக்கு?”
அவர்கள் முணு முணுத்தபடியே தண்ணீரைத் திரும்ப எடுத்துப் போவார்கள். அந்தச் சமயங்களில் கிழடுகளின் குறிப்பறிந்து நடக்கச் சொல்வர் ஆதனின் மக்கள்.
அவர்கள் வீட்டில் நிறைய மாடுகள் வளர்ந்தன. தொன்மையே அவற்றைப் பராமரித்துக்கொண்டாள். ஆதன் வெற்றிலையைக் குதப்பியபடி, சம்சாரிகளுக்குச் சொற்களையும், கதைகளையும் வழங்கி வந்தான். புல்லறுக்கப் போகையிலும், அறுப்புக்குச் செல்கையிலும் வெற்றிலைத் தோட்டங்களைப் பார்த்தால், தொன்மை அவற்றிலிறங்கிக் கொழுந்து வெற்றிலைகளாய் ஆதனுக்குப் பறிப்பாள்.
நீண்ட காலமாக எருகூரின் அதிகாலை ஆதனின் வெற்றிலை இடிப்பால் விடிந்து வந்தது. அவனுக்கு அஞ்சி சேவல்கள்கூடக் கூவுவதில்லை. திருநகர் கடைத் தெருவிலிருந்து மகன் வாங்கி வந்த சிற்றுரலில் தொன்மை கையளிக்கும் வெற்றிலையை இடித்து அதக்குவது ஆதனின் வழக்கம். தொன்மை அருகில் இருந்தால் அவளுக்கும் கிழவன் இடித்துத் தருவான்.
எருகூரின் அதிகாலை ஒருநாள் ஆதனின் வெற்றிலை இடிக்கும் ஓசையின்றியே விடிந்தது. அவன் படுத்திருக்கும் நடைவழி அமைதியாய் இருக்கவே, சற்றுத் தள்ளி அடுப்படியில் படுத்திருந்த தொன்மை எழுந்து போய்ப் பார்த்தாள். வெற்றிலை உரலை நெருக்கமாய்த் தழுவியபடி செத்துக்கிடந்தான் ஆதன்.
********************************
அத்தியாயம் – 5
காட்டோர நிலத்து வேலியில் கஞ்சாச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்தான் ஜீவகன். ஆமணக்கு இலைகளின் குறு வடிவம். நீண்ட காம்புகள். ஏழு அலகுகளையுடைய கூட்டிலைகள். விட்டால் அவன் உயரத்துக்கு வளரும் போலிருந்தன செடிகள். அந்தச் செம்புலத்தின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சியும் போதாதென்ற காஜையில் மெலிந்திருக்கும் பூக்களும், நெருக்கமான இலைகளும் இணைந்து ஒவ்வொரு செடியும் ஒரு மாலையாகத் தோன்றியது.
நிலத்தின் நடுவே அங்கங்கு இருக்கும் குடிசைகளில் கஞ்சா இலைகளும் பூக்களும் உலர்ந்தன. அவற்றை வாங்கிச் செல்வதற்குத் திருநகரிலிருந்து வந்திருந்த ஆள்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் கேட்பதற்கு ஏற்ப ஜீவகன் பொட்டலம் கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான். ஆள்கள் சென்றதும். தன் அருகில் இருந்த எலும்புக் குழாயில் கஞ்சாத் துகளை நிரப்பி ஆழ்ந்து இழுத்துக் கிறங்கினான்.
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பொம்மக்கண்ணி அங்கலாய்ப்புடன் எழுந்து உட்கார்ந்தாள். அதலையை உலுக்கிக்கொண்டாள். பிரிந்திருந்த கேசத்தை ஒருங்கு சேர்ந்து அடித்து கொண்டை முடிந்தபடி வாசலில் வந்து நின்றாள். அப்போது வீசிய காற்றில் மகனின் உடல் வாடை அவள் நாசியில் அடித்தது. எதையோ முடிவு செய்தவளாக மீண்டும் தலையைக் குலுக்கிக்கொண்டு தெருவிலிறங்கி ஆவேசமாய் நடந்தாள்.
மயங்கியிருந்த ஜீவகனைத் தவடையில் அடித்து எழுப்பினாள் பொம்மக்கண்ணி. மாட்டைத் தேடிக்கொண்டு போனவன் இரண்டு மூன்று நாள்களாகியும் வீட்டுக்குத் திரும்பாததால் பொம்மக்கண்ணி மகனைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வயதுதான் கூடிவிட்டதே தவிர, உடலில் இன்னும் வலு குறையவில்லை. திருநகரைச் சுற்றியுள்ள மலைகளையும், மடுவுகளையும், வயல்களையும், வாய்க்கால்களையும் அறிந்தவள் அவள். வெடிப்புற்ற அவள் பாதங்கள் அந்நிலத்தில் படாத இடமில்லை. வீட்டுக்காரன் உருத்திரபாணி குடிகாரனாகிவிட்ட பிறகு, அவனை நம்பி பாய்தா இல்லை என்று முடிவு செய்துகொண்டவளாகத்தான் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் வளர்த்தாள் பொம்மக்கண்ணி.
வீட்டில் வளரும் மாடு, கன்றுகளைப் போலவே உருத்திரபாணியையும் அவள் கருதிக்கொண்டாள். குடித்துத் திரிந்து, மாலையில் வீடுதிரும்பினால் சோறு போடுவாள். இல்லையென்றாள் அவனைத் தேடமாட்டாள். உருத்திரபாணி வரவில்லையென்றால் ஜீவகன்தான் தேடிக்கொண்டு போவான்.
ஜீவகனுடைய பெரிய அக்காவோ, இரண்டு தங்கைகளோ வீட்டை விட்டு அவ்வளவாக வெளியில் எங்கும் போக மாட்டார்கள். பீடி இலைகளை வெட்டுவது, பீடி வாய்களை மூடுவது, பீடிக்குப் பெயர்ப் பட்டை ஒட்டுவது என்று அவர்களுக்கே வேலை இடுப்பெலும்பை முறிக்கும். பொம்மக்கண்ணிக்கோ அடுத்த நாள் பற்றிய கவலையும், மகள்களைக் கரைசேர்ப்பது குறித்த கவலைகளுமே பெரிது. எங்கு அறுப்பு அறுக்கிறார்கள். எங்குக் கரும்பு வெட்டுக்கு விடுகிறார்கள். எங்கு நாற்று நடவும், களைப் பறிப்பும் நடக்கின்றன என்றே வருடம் முழுதும் அல்லாடுவாள்.
மகன் அப்படிப் படுத்திருப்பதைப் பார்க்க பொம்மக்கண்ணிக்கு அடிவயிறு பிசைந்தது. ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. சுற்றி இருக்கிறவர்களையெல்லாம் திட்டினாள் பொம்மக்கண்ணி.
“நீங்கெல்லாம் மனுசங்களா? இல்ல மிருகங்களா? மாட்டத் தேடிணு போன புள்ள, ஊடு திரும்பலையேன்னு, மூனு நாள கெடந்து தவிக்கிறேன். சுத்துப் பக்கமெல்லாம் ஜல்லட போட்டுட்டேன். பாத்தா, இங்க வந்து உழுந்து கெடக்குறான் எம்புள்ள! வந்தவன எந்த ஊரு, என்னா ஆளுன்னு விசாரிச்சி ஊட்டுக்கு அனுப்பத்தாலியா? உங்களுக்கெல்லாம் பொண்டாட்டி புள்ளைங்க, தாய்த் தகப்பன்மாருங்க இல்லியா?”
“ஏம்மா ஏம்மா…இரும்மா இரும்மா! பேசினே போனா எப்பிடி? பொருளு தேடிணு வந்ததா சொன்னாப்டி! நாங்களும் என்னா, ஏதுன்னு விசாரிச்சிட்டு, சாப்பாடு தண்ணியெல்லாம் தந்தோம். ஆளு என்னாடான்னா பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி உழுந்துணே கீறாபிடி! அவரு முளிச்சிக்கினாதான நாங்களும் விசாரிச்சி அனுப்பறதுக்கு? சொல்லு பாக்கலாம்”
“ம்…இது அப்பிடித்தான் மயங்கும். அப்பனப் போல இருக்காதா பின்ன? வெற ஒன்னு போட்ட, சொர ஒன்னா மொளைக்கும்? செரி சாமிங்களே…உங்களுக்குப் புண்ணியமா போகும். ஒரு வண்டி மாட்ட புடிச்சி எம்புள்ளையையும், சைக்கிளயும் ஏத்திடுங்க. நானும் அதலயே ஒக்காந்துணு ஊட்டுக்குப் போயிட்றேன்”
“ஏம்பா….பாவம் வயிசான பொம்னேட்டிப்பா! மகன தேடிணு வந்துட்டுக்கீது! ஒத்த வண்டி ஒன்ன புடிச்சி, ஏத்தி உடுங்கப்பா!”
இசுக்கன் சத்தம் போட்டான். அங்கிருக்கிறவர்கள் ஜீவகனையும், அவன் வந்த சைக்கிளையும் மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு, பொம்மக்கண்ணியையும் கூடவே ஏற்றி உட்காரவைத்து அனுப்பினார்கள். வண்டி நகர்ந்ததும், பொம்மக்கண்ணி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, முந்தானையால் மகனின் முகத்தை அழுந்தத் துடைத்து விசிறினாள். வழி நெடுக விசாரிக்கிறவர்களிடம் இறைப்பதற்குத் தோதாய் கொஞ்சம் சொற்களை மடியில் நிரப்பிக்கொண்டாள். வண்டியின் குலுங்கலில் ஜீவகன் நகர்ந்துவிடாதிருக்க அவன் கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டாள். தாயின் உள்ளங்கை வழியே புலம்பல்களும், கண்டிப்புகளும், கொஞ்சு மொழிகளும், பழம் நினைவுகளும் ஜீவகனுக்குள் பாய்ந்துகொண்டிருந்தன.
உருத்திரபாணியும், பட்டாளத்தானும் ஒன்றாகவே படித்து வளர்ந்தார்கள். பட்டாளத்தான் அப்பா கொஞ்சம் பசையுள்ள கையென்பதால், மட்டவிலைக்கு ஒரு சைக்கிளை மகனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார். தினமும் அதை நன்றாகத் துடைத்து, செயினுக்கும் பெடலுக்கும் ஹேண்டில் பாருக்கும் எண்ணெய் போட்டு, உருத்திர பாணியை ஏற்றிகொண்டு பள்ளிக்கூடம் போகவேண்டியது அவனுடைய கடமை. மகனுக்கு ஒத்தாசை உருத்திரபாணி என்று நினைத்த பட்டாளத்தானின் தந்தை அவர்கள் இருவரும் ஒன்றாகச் சுற்றுவதைப் பற்றி ஏதும் கேட்டதில்லை.
முகம் தெரியும்படிக்குப் புளிபோட்டு நன்றாக விளக்கிய ஓரடுக்குப் பித்தளைக் கேட்டிலிகளில் சாப்பாடு போட்டு சைக்கிள் பாரில் வைத்துச் சணல் கயிற்றால் கட்டிக்கொண்டு புத்தகப் பொதிகளோடு ஒருவரை ஒருவர் மாற்றி மிதித்தபடி தினந்தோறும் பத்து மைல் தொலைவுக்குப் படிக்கச் சென்று வந்த நண்பர்கள் அதற்கு மேலும் அரக்கி மிதித்தால் புட்டங்கள் நான்கும் கருங்கற்களைப் போலாகி உட்காருவதற்கும்கூடச் சிரமமாகப் போய்விடும் என்று எண்ணிப் பத்தாம் வகுப்புடன் நின்றுபோயினர். ஆனால், பத்தாம் வகுப்புக்கு முழுக்குப் போட்ட கையோடு இரண்டு பேரும் வேலை தேடத் தொடங்கினர். ஒருவன் ராணுவத்தில் சேர்ந்தான். உருத்திரபாணிக்கு ரயில்வே கேட்டைத் திறந்து மூடும் வேலை கிடைத்தது.
பட்டாளத்தான் விடுமுறையில் ஊருக்கு வந்தால் உருத்திரபாணி வீட்டை மறந்துவிடுவான். இருவரும் சேர்ந்து வயிறு முட்டக் குடித்து விட்டு ஆற்றில் விழுந்து கிடப்பார்கள். காலையிலேயே தொடங்கிடும் உற்சாகத்தில் மணல் வண்டிக்காரர்களும் சிலநேரம் அவர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. ஒருநாள், மணல் ஏற்றிய நிலையில் வண்டி மாடுகள் காத்துக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் மறந்த வண்டிக்காரன் அவர்களுடன் குடிக்க ஆரம்பித்தான். ஏறுவெய்யிலில் பாரத்தோடு நின்ற காளைகள் இரண்டும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு எஜமானன் இல்லாமலேயே நடக்கத் தொடங்கித் தாறுமாறாய்ச் சென்று குடைசாய்ந்தன. இரண்டு காளைகளையும் மீட்ட மணல் அள்ளும் கூட்டாளிகள், மயங்கிக் கிடக்கும் வண்டிக்காரனையும், இரண்டு நண்பர்களையும் கோபம் தீரும்வரை புரட்டி எடுத்தனர்.
ரயில் வருவதற்காக மூடி வைத்திருந்த கேட்டை, பட்டாளத்தான் வந்து கூப்பிட்டான் என்பதற்காகத் திறக்காமலேயே சென்றுவிட்டான் உருத்திரபாணி. ரயில்வே நிர்வாகம் உருத்திரபாணியை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்தது. மீண்டும் வேலையில் சேருவதற்கு அதிகாரிகள் அலுவலகங்களுக்கு உருத்திரபாணி நடையாய் நடந்தான்.
போதையில் மயங்கியிருந்த சமயத்தில் உருத்திரபாணியின் டி.வி.எஸ் 50-ஐ கள் வாங்க எடுத்துச் சென்றான் பட்டாளத்தான். ஆந்திர போலீசிடம் சிக்கிவிடக் கூடாதென்று டி.வி.எஸ்-50 ஐ அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பியவன், ராணுவத்துக்குச் சென்றுவிட்டான். போதை தெளிந்து வீட்டுக்குத் திரும்பிய உருத்திரபாணியை, சாராயம் கடத்திய வழக்கில் ஆந்திர போலீஸ் கைது செய்து அழைத்துப் போனது. வீட்டுக்காரன் சிறைக்குப் போனால், அவன் செய்துகொண்டிருக்கும் பிசாத்து வேலையும் போய்விடும் என்று அஞ்சிய பொம்மக்கண்ணி, ஜீவகனை அழைத்துக்கொண்டு தனியாளாய் அலைந்து, ஆந்திர போலீஸ் கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுத்து மீட்டு வந்தாள்.
பட்டாளத்தான் நிரந்தரமாக இராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு உருத்திரபாணியை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. அவர்கள் இருவரும் வேல்மயில் சாராயக் கடையிலேயே எந்நேரமும் இருந்தார்கள். புளித்த சாராய நாற்றமும், சாக்கணாக் கறிக்குழம்பு வாடையும், செமித்த வாந்தி நாற்றமும், வியர்வை நெடியும், மூத்திரக் கவிச்சையும் கலந்ததொரு வினோத வாடை அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. அகண்ட வாசலும், மரத்தூண் நடையும் உடைய ஓடுபில்லை வீட்டுக்காரியான வேல்மயில், தன்வீட்டுக்கு இடப்புற மைதானத்தில்தான் சாராயம் விற்றாள். அவள் வியாபாரம் முடிந்ததும் வாசலுக்குத் தாண்டிக் கொண்டு, மைதானத்துக்குச் செல்லும் வழியைப் பெரிய முள்மண்டையால் அடைத்து விடுவாள்.
சாராயம் விற்ற பணத்தை வேல்மயில் கோணி மூட்டைகளில் கட்டி வைப்பதாகவும், அடுக்களைப் பானை நிறையத் தங்க நகைகளை வைத்திருப்பதாகவும் ஊரில் பேசிக்கொண்டார்கள். இத்தனைக்கும் வேல்மயில் சாராயத்தை வாங்கித்தான் விற்றாள். அப்படி வாங்கி விற்கும் சரக்கில் அவள் தண்ணீர் கலப்பதில்லை என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவள் எப்படி இவ்வளவு இலாபம் பார்க்கிறாள் என்பதும், அதில் எதைக் கலந்து விற்கிறாள் என்பதும் பூடகமாகவே இருந்து வந்தது.
அவளிடம் வாங்கிக் குடிக்கப் பல ஊர்களிலிருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வந்தார்கள். பிளாஸ்டிக் உறைகளில் சாராயம் விற்றிடும் முறையை வேல்மயிலே முதலில் அறிமுகப்படுத்தினாள். லாரி டியூபில் சாராயத்தை வாங்கு கட்டிவரச் செய்தாள். அவள் விற்கும் சரக்கு எளிதாகப் பல ஊர்களுக்குச் சென்றது. அவள் கடையருகிலேயே சிலர் வாரக்கணக்கில் விழுந்து கிடந்தனர்.
குடித்த பிறகு வேறு ஆளாக மாறத்தொடங்கி இருந்தான் உருத்திரபாணி. சில காலமாகத்தான் அது நடந்து வந்தது. பூரண போதையில் முச்சந்திகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் நின்று கடவுளர்களைத் திட்டினான் அவன். பட்டாளத்தான்கூட அதை வேண்டாமென்று சொன்னான். அவன் கேட்கவில்லை. உருத்திரபாணியின் கோபத்துக்கு எந்தக் கடவுளும் தப்பவில்லை. மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பரிசுத்தமான மனத்தில் எந்தக் கடவுளின் பெயர் தெளிந்து வருகிறதோ அதற்கு அன்று உபாசனை நடக்கும். பெண்சாமிகளை மக்கள் காது பொத்தும் அளவுக்குத் திட்டினான் என்று சில சமயங்களில் பொம்மக்கண்ணிக்குச் சேதி வரும். அவனை யாராவது அடித்துவிடுவார்களோ என்று அஞ்சுவதற்குப் பதிலாக, என்ன துர்பலன்கள் வந்து சேருமோ என்றே அவள் அஞ்சினாள். ஒருவேளை அவன் வீட்டுத் திண்ணையில் கிடந்தபடி திட்டுகிறானெனில் ஓடிச்சென்று வாய்மீது குத்தினாள்.
”எதுக்கு இந்தப் பாவத்த ஒந்தலமொறைக்குச் சேத்து வெக்கிற?”
“அடித்தெறி…நீயும் எங்கூட சேந்துணு திட்டுணுன்டின்னா….நீயே என்ன ஓடியாந்து அடிக்கிற? இப்ப ஏந்திர்ச்சி வந்தன்னு வெச்சிக்க நாறாகோரமாயிடுவ பாத்துக்க!”
அன்று வெய்யில் நல்ல பொன்னிறத்தில் இருந்தது. நடுப்பகலுக்கு முன்னதாகவே வேல்மயிலின் கடைக்குப் போய்விட்டான் உருத்திரபாணி. பட்டாளத்தான் வருகிறானாவெனச் சிறிது நேரம் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பசி வயிற்றைச் சீண்டியது. போதாததற்கு பக்கத்தில் அச்சோதி கடையிலிருந்து வரும் சாக்கணா வாசம் வேறு வதைத்தது. இந்நேரத்துக்குக் கழுத்துக்கறி பிரட்டலும், மூளையும்கூடக் கிடைக்கும். போட்டிக் குழம்பு, கால் குழம்பு, கறிக் குழம்பு, ஈரல் என்று வகை வகையாகச் செய்து வைத்திருப்பாள். தலைக்கறிக் குழம்பில் கீழ்த்தாடை ஒன்று அசாத வேகும். அவற்றுக்கு வாட்டமாய் தோசையோ, களியோ சூடாகக் கிடைக்கும்.
உருத்திரபாணி தொடர்ந்து ஐந்து கிளாஸ் சாராயத்தை வாங்கி இழுத்தான். முகராமலும் மூச்சு விடாமலும் ஒரே இழுப்பில் குடித்துவிட்டுக் காறினான். உடனே தொட்டுக் கொள்வதற்கு அவனிடத்தில் ஊறுகாய்ப் பொட்டலம் இருந்தது. ஒரு மூலையில் அதைக் கடித்துத் துப்பியபிறகு அப்படியே வாயில் வைத்துப் பிதுக்கிக் கொண்டான். அச்சோதி கடையில் சாப்பிட்டு முடித்ததும் அவனுக்கு அங்கேயே படுத்துக்கொள்ளத் தோன்றியது.
யாரோ தன்னை உதைக்கிறார்கள் என்று உணர்ந்த உருத்திரபாணி கண்விழித்துப் பார்த்தபோது கடுங்கோபத்துடன் நிற்கும் பட்டாளத்தான் மங்கலாகத் தெரிந்தான். அவனால் மெதுவாகத்தான் எழமுடிந்தது. சிறுபாறை ஒன்றினுக்கு முதுகை அணைத்தபடி உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தான் உருத்திரபாணி.
“…..புத்தி அரபுத்தின்றத காட்டிட்டயில்ல?”
“எவ்ளோ நேரன்டா மொட்டு மொட்டுன்னு ஒக்காந்துணு இருக்கிறது. நீ வரல. அதான் குடிச்சேன்”
“எனுக்கு மொதுல்ல வாங்கிக் குடுத்துட்டுதான் நீ குடிக்கணும்னு எத்தினி தடவ உங்கிட்ட சொல்லிக்கிறன்? செரி…வா…எனுக்கும் வாங்கிக்குடு”
“எங்கிட்ட துட்டு இல்லடா…..நீ வெச்சிணிருப்பல்ல? அதலியே வாங்கிக்குடி”
“இப்ப ஒழுங்கா வந்து வாங்கித்தர்ற”
“எங்கிட்ட ஒரே ஒரு பைசா இல்லடா பட்டாளம். உட்டன்னுடா!”
“ங்கொம்மாள….ஒஞ்ஜாதி புத்தியக் காட்டிட்டல்ல”
வெறிகொண்டவனாகி உருத்திரபாணியை அடிக்கத் தொடங்கினான் பட்டாளத்தான். அவர்களை விலக்க வந்தவர்களை மிரட்டினான்.
“மாணாடா…..மாணா பட்டாளம்…என்ன உட்டுர்றா நண்பா”
தட்டுத் தடுமாறி எழுந்த உருத்திரபாணி வேட்டி அவிழ்ந்து விழுவதுகூடத் தெரியாமல் வீட்டை நோக்கி ஓடினான். துரத்திக் கொண்டு ஓடிய பட்டாளத்தான், உருத்திரபாணியை அவன் வீட்டு வாசலில் வைத்தே உதைக்கத் தொடங்கினான்.
“ங்கொம்மாள….ஒஞ்ஜாதி புத்தியக் காட்டிட்டல்ல”
அப்பன் அடிபடுவதை ஜீவகனும் அக்காள் தங்கைகளும் ஓடிவந்து பார்த்துக் கத்தினார்கள். தகப்பனைக் காப்பாற்றுவதற்கெனக் குறுக்கே பாய்ந்த ஜீவகன் பட்டாளத்தானை விலக்கித் தள்ளினான். பட்டாளத்தான் அப்பனையும் பிள்ளையையும் சேர்த்து உதைத்தான். தெருவில் சேர்ந்த ஆள்கள் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.
“எவன்டா அது, அவஞ் ஜாதிய எங்கூ….யிலத் தேய்க்க”
வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த பொம்மக்கண்ணியைப் பட்டாளத்தான் மார்மேல் கை வைத்து வெறியுடன் தள்ளினான்.
“போடி அந்தாண்ட…உன்ன இங்கியே……த்துடுவேன்”
வெகு தொலைவுக்குச் சென்று விழுந்த பொம்மக்கண்ணியை, அம்மா என்று கத்திக்கொண்டே ஓடிப் பெரியவள் தூக்கினாள். தங்கைகள் இருவரும் செய்வதறியாது இப்படியும் அப்படியுமாகப் பார்த்தனர்.
பட்டாளத்தான் இப்போது உருத்திரபாணியையும், ஜீவகனையும் இன்னும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கியிருந்தான். சண்டைச்சேதி வேறுமாதிரியாகப் பரவி, பட்டாளத்தானின் ஆள்கள் கைகளில் ஆயுதங்களையும், தடிகளையும் தூக்கிக்கொண்டு தெருமுனையில் ஓடி வருவதைப் பார்த்த பெண் பிள்ளைகள் பீதியில் கத்தினார்கள்.
“அக்கா, அந்த மாமாவோட ஆளுங்க கத்தியோட வர்றாங்க”
பொம்மக்கண்ணியைத் தூக்கி உட்காரவைத்துக்கொண்டிருந்த பெரியவள், அவளை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே ஓடினாள். கத்தியுடன் வெளியே ஓடிவந்து, அடிபட்டு விழுந்துகொண்டிருக்கும் ஜீவகனிடம் கொடுத்துவிட்டுக் கத்தினாள்.
“இந்தாடா…தம்பி…அவனக் குத்து”
அக்காவினிடத்திலிருந்து கத்தியை வாங்கிய ஜீவகன் தன்னை நெருங்கி வரும் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டே, பட்டாளத்தானின் வயிற்றில் குத்தினான். கூட்டம் சிதறி ஓடியது.
*