வடிவேலு தெருக்கூத்து நாடக சபா விழுப்புரம் அருகே புதுச்சேரியின் எல்லையில் சுந்திரத்திற்கு முன்பிருந்தே ஆறாவது தலைமுறையாக  இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நாடக சபாவிற்கு வடிவேலு நாடக சபா என்ற பெயர் இப்போது வாத்தியாராக இருக்கும் நடராஜனின் தாத்தா வைத்தது. அவரின் அப்பா பெயர்தான் வடிவேலு. அதற்கு முன்பு என்ன பெயர் இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. நடராஜன்தான் முன்பு இந்த சபாவின் ராஜபார்ட். ஒரு விபத்தில் கால் உடைந்ததிலிருந்து வெறும் வாத்தியாராக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறார். தனது முன்னோர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் பயின்றதாகப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார். ஆனால், அவரிடம் அதற்கான ஆதாரங்கள் என எதுவும் இல்லை. கேட்டால், “நான்தான் ஆதாரம். இன்னும் கூத்து நாடகம்தானே வாழறோம்” என்று கோபமாகச் சொல்வார். நடராஜனின் பரம்பரையில் மற்றுமொரு விசித்திரமான விஷயம் உண்டு. அவன், அவன் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என அனைவருமே கூத்து நடத்தச் சென்ற இடத்தில் அந்த ஊர்ப் பெண்ணைக் காதலித்துப் பிரச்சனையாகி அடிவாங்கிக் கல்யாணம் பண்ணவர்கள். இந்த வரலாறு நடராஜனுடன் முடியப்போகிறது என்ற வருத்தம் அவனுக்கு உண்டு. அதற்கு முக்கியக் காரணம் அவனுக்கு ஆண் வாரிசு இல்லை. இப்போது அவன் சபாவில் புண்ணியகோடி என்பவனே ராஜபார்ட்டாக இருக்கிறான். நோஞ்சான் போல் இருப்பான். வேறு ஆள் கிடைக்காததால் வைத்திருக்கிறான். இப்போது அவனைத் துரத்திவிடலாமென்ற எண்ணத்தில் நடராஜன் இருக்கிறான். இப்போது திருவிழாக் காலம். முடியட்டுமென்று காத்திருக்கிறான்.

வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது ஒப்பனை அறை. அறையென்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான்.  மேடைக்குப் பின்னால் கோவிலை ஒட்டி இருந்த சிறிய இடம். எப்போதுமே அப்படித்தான். சிலநேரம் கொஞ்சம் வசதியாக இருக்கும். சில நேரம் சிறியதாக நெருக்கமாக இருக்கும். ஆனால், எந்த இடமாக இருந்தாலும் யாராவது சிலர் மறைந்திருந்து எட்டிப்பார்த்தவாறு இருப்பர். பெண் வேடம் கட்டுவதும் ஓர் ஆண்தான் என்று தெரிந்தாலும் அவன் புடவை கட்டுவதைப் பார்க்க ஒரு நப்பாசை.

சிவகுமார் மிக நளினமாக ஒரு பெண்ணாக மாறிக்கொண்டிருந்தான். அவன் எப்போதும் ஒப்பனை போடும்போது மேல் ஜாக்கெட் மற்றும் உள்பாவாடை மட்டுமே அணிந்திருப்பான். முழு ஒப்பனை முடிந்த பின்தான் சேலை கட்டிக்கொள்வான். அவன் சேலைகட்டுவதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்குமென்று ஒரு பேச்சு உண்டு. சில பெண்கள் அவனிடம் தனக்குக் கட்டிவிடச் சொன்னதாக அவ்வப்போது சொல்லுவான். ஆனால், யார் என்பதை மட்டும் மறைத்துவிடுவான். ஒப்பனை முடிந்து சேலை கட்டும்வரை அறை கலகலப்பாகவே இருக்கும். கேலிப் பேச்சுகள், கிண்டல்கள் எனச் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பெரும்பாலும் இரட்டை அர்த்தங்கள்தான். அதே சமயம் வேலையும் நடந்துகொண்டேயிருக்கும் இல்லையென்றால் வாத்தியார் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மலத்தைவிட மோசமானது என்று அனைவருக்கும் தெரியும். இப்போது வழக்கம் போல் இல்லை. அனைவரும் இயந்திரம்போல் இயங்கிக்கொண்டிருந்தனர். எந்தவிதக் கேலியும் கிண்டலும் இல்லாததால் சிவகுமாருக்கே ஒருமாதிரியாக இருந்தது. அவன் ஓர் ஆணாக வந்து ஒப்பனை முடியும் வரை இவனை ஒரு பெண் போலவே நினைத்துப் பேசி மேடையேறும் சமயத்தில் அவன் மனத்தளவில் ஒரு பெண்ணாகவே மாறியிருப்பான். கடந்த சில கூத்துக்களாக அது நிகழவேயில்லை. அவன் நடையிலும் செய்கையிலும் நளினமே இல்லையென்று வாத்தியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால், வேறு எதுவும் அதற்கு மேல் அவர் பேசிக்கொள்ளவில்லை. அவர் அப்படித்தான். யாருடைய தனிப்பட்ட விவகாரங்களிலும் பெரிதாகத் தலையிட்டுக்கொள்ளமாட்டார். அவர் கொஞ்சம் இறங்கி வந்து புண்ணியகோடியிடமும் முத்து அண்ணனையும் கூப்பிட்டு வைத்துப் பேசியிருந்தால் சபா இந்த நிலைக்கு வந்திருக்கத் தேவையில்லை என்று சிவக்குமார் நினைத்தான். எப்போது வேண்டுமானாலும் இந்த சபா கலைந்துவிடலாமென்ற நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இருக்கிறது. சின்னசாமி கூட வாத்தியாரிடம், “கூப்ட்டு இன்னான்னுதான் கேளேன் வாத்தியாரே” என்றான். “இன்னாடா கேக்கறது, சின்ன பசங்களா அவனுங்க. வளந்த அளவுக்கு புத்தி வேணாம். எப்பவுமே அடுத்தவன் பொருளு மேல ஆச வெக்கக் கூடாது. அதே மாதிரி தன்ன வேணாம்னு சொல்றங்க கிட்ட புடிச்சிகினு தொங்கப்புடாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

சிவக்குமார் நிமிர்ந்து ஒருமுறை பார்த்தான். புண்ணியகோடியும் முத்துவும் ஆளுக்கு ஒருபக்கமாக எதிரெதிரே உட்கார்ந்து ஒப்பனை செய்துகொண்டிருந்தார்கள். இருவருக்கும் குறைந்தது பதினைந்து வயது வித்தியாசம் இருக்கும். முத்து வாட்டசாட்டமானவர். கம்பீரமாக இருப்பார். புண்ணியகோடி ஒல்லியாக இருப்பான். இருவருக்கும் நடுவே சின்னசாமி இருந்தான். வழக்கமாக இந்நேரத்திற்கெல்லாம் தயாராக இருப்பான். இப்போதுதான் அனுமார் வேடத்திற்காகப் பின்னால் வாலை ஒட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு வலதுபுறம்  முத்து இராவணன் வேடம் பூண்டிருந்தார். அவர் இராவணனாக வந்து நின்றால் மேடைக்கு அருகே வரவே பலர் அஞ்சுவர். கண்களாலேயே அச்சமூட்டுவார். வாயிலிருந்து வார்த்தைகள் தெறிக்கும். ஆனால், இப்போது அவருடைய கம்பீரம் எங்கே சென்றது, யார் காலடியில் மண்டியிட்டு விழுந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

களரிக்கட்டு  ஆரம்பித்துவிட்டது. அதுமுடிந்து கட்டியக்காரனின் கடவுள் வாழ்த்தும் வரவேற்பும் நடந்துவிட்டல் ஒவ்வொருவராக மேடையேற வேண்டியதுதான். கிட்டதட்ட அனைவருமே தயாராக இருந்தனர். வழக்கமான உற்சாகம் எவரிடத்திலும் இல்லை.

கட்டியக்காரன் முதலில் அனுமனை அழைத்தான். சின்னச்சாமி மேடையேறிவிட்டான். தவிலும் ஆர்மோனியமும் இசைக்க, கொஞ்சமும் சுரத்தே இல்லாமல்,

“நான் யாருனு தெரியுமா?” என்றான் அனுமன்.

“நீங்களே சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்” என்று கட்டியக்காரன் சொன்னதும் அனுமன் பாட ஆரம்பித்தான். அவ்வப்போது தென்படும் வாத்தியாரின் கண்களைச் சின்னசாமியால் பார்க்க முடியவில்லை. 

முழுச் சீதையாக மாறியிருந்தான் சிவக்குமார். தன் அலங்காரத்தை ஒருமுறை முழுமையாகப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கொண்டு கட்டியக்காரன் அழைத்ததும் மேடையில் தோன்றினான். 

சீதையின் கண்கள் அழத்தயாராயின. முகத்தில் சோகம் குடிகொண்டது. அனுமன் சீதையைப் பார்த்து ‘தாயே’ என்றான். உடனே சீதை அனுமனைக் கொஞ்சம் வசைபாடிவிட்டுத் தன் குறைகளைப் பாடத் தொடங்கினாள்.

*

சின்னசாமி வெளியேயிருந்து “அண்ணி… அண்ணி…” என்று அழைத்தான். அது புண்ணியகோடியின் இன்னொரு வீடு. வீடு என்றால் சிறிய குடிசை அவ்வளவுதான். இவளுக்காக அவசர அவசரமாகக் கட்டிக்கொடுத்திருக்கிறான். குரல் கேட்டு யாரென்று எட்டிப்பார்த்தாள் காமாட்சி. சின்னசாமியைப் பார்த்ததும் அவள் முகம் மாறியது. அவள் பதில் சொல்வதற்கு முன்பே அவன் குடிசையின் உள்ளே நுழைந்து அவர் அருகில் உட்கார்ந்துகொண்டான். இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

“அந்தாள கட்டிகினு இன்னாத்த கண்டேன் சொல்லு” என்றாள் காமாட்சி. சின்னசாமி அமைதியாக அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“கல்யாணம் ஆயி இத்தினி வருஷம் ஆவுது. வவுத்துல ஒரு புழுபூச்சி இல்ல. ராத்திரியானா வூடு தங்கறதே இல்ல. கூத்து நாடகம்னு சுத்திகினே இருக்கற. செரி… எதுனா சம்பாரிச்சினு வந்து நல்லாப் பாத்துகிறியானு பாத்தா அதுவும் இல்ல. இன்னும் எத்தினி நாளுக்கு நான் இப்புடியே காலத்த தள்றது.”

“அதுக்கு இப்படி பண்ணா, எப்புடி அண்ணி. முத்தண்ணனுக்குனு ஒரு மரியாத இருக்குதுல”

“காசு பணம் இல்லாம மரியாதைய வெச்சி இன்னா செய்யறது. அதிகபட்சம் ஓரு டீ வாங்கலாம். அதுவும் எத்தினி நாளுக்கு? இந்தாள நம்பிலாம் இனிமே இருக்க முடியாது. அந்தாளு உண்மையாவே ஆம்பளனா, என்ன வுட்ற சொல்லு” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“அண்ணி கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்குங்க” என்று கோபமாகச் சொன்னான் சின்னசாமி. காமாட்சி அவனை முறைத்தாள். ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவன் தொடர்ந்து பேசினான்.

“அண்ணி, முத்தண்ணன எனுக்கு எப்புடி சின்ன வயசுலருந்து தெரியுமோ, அப்படித்தான் உங்களையும் தெரியும். அவரு இல்லனா இன்னிக்கி உங்க நெலம இன்னான்னு கொஞ்சம் நெனச்சிப்பாருங்க. பாழாப்போவ இருந்த உங்கள கூட்டியாந்து கட்டி கவுரவமா வெச்சிருந்ததுக்கு நீங்க இப்ப இன்னா பண்ணினு இருக்கீங்க. எந்தச் சேத்துலருந்து உங்கள காப்பாத்தி இட்டுனு வந்தாரோ, அதே சேத்த அள்ளி அவுரு மேல பூசினு இருக்கீங்க. உங்க வயசு இன்னா, அவன் வயசு இன்னா. உங்களுக்கு இதுதான் வேணும்னா அன்னிக்கே அவருக்கிட்ட கல்யாணம்லாம் வேணாம்னு சொல்லிட்டுப் போயிருக்க வேண்டியதுதான” என்று தனக்கு தோன்றியதெல்லாம் இலக்கில்லாமல் சொல்லி முடித்தான் சின்னசாமி.

“இன்னா சின்னசாமி, அந்தாளு செஞ்சதெல்லாம் சொல்லிக்காமிச்சிக் கூட்டியாறச் சொல்லி உனுக்கு ட்ரெயினிங் குடுத்து அனுப்பிகிறானா. அந்தாளு செஞ்சதுக்கு மேலயே நான் அந்தாளுக்குச் செஞ்சிகிறேன். போயி கேளு. நான் எல்லாத்தையும் வெளிய சொல்லவான்னு”

“அண்ணி அது இல்ல அண்ணி” என்று சின்னசாமி மீண்டும் பேச வாயெடுத்தபோது அவள் எழுந்துத் திரும்பிப் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டாள்.

*

மற்ற கதாபாத்திரங்களுக்காக வேடமிட்டிருந்தவர்கள் மேடையில் நடப்பதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஒப்பனை செய்யும் இடத்தில் முத்துவும் புண்ணியகோடியும் மட்டும் தனியாக எதிரெதிரே உட்கார்ந்திருந்தனர். இருவரும் வேறு வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். புண்ணியகோடி அமைதியாகவே இருந்தான். ஆனால், முத்துவின் மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது.

முத்துவிற்கு மேடையேறவே துளியும் விருப்பமில்லாமல் இருந்தது. இரண்டு நாள்கள் முன்பு வாத்தியாரைத் தனியாகச் சந்தித்துத் தான் இனி மேடையேறப் போவதில்லை. இந்தத் தொழிலைவிட்டே போகப் போவதாகத் தெரிவித்தான்.

“இன்னாப்பா இப்புடி சொல்ற. நீ போயிட்டினா எப்புடிபா” என்றார் வாத்தியார்.

“இல்லணா, உனுக்குத்தான் எல்லாம் தெரியுமே. என்னால் அவன் மூஞ்சியப் பாத்து ஆட முடியில.”

“புரியுதுபா, நான் வேணும்னா அவன நிறுத்திடறேன். ஆனா, நீ இல்லாட்டி எப்படிபா?”

“இல்லனா, இத்தினி நாளா கூத்து கூத்துனே வாழ்க்கை போயிடுச்சி. எல்லாத்துக்கும் இதுவும் ஒரு காரணமா இருக்குது. வேற எதுனா செஞ்சு சம்பாரிக்கத்தான் பாக்கனும். அவனப் பாருங்க. கூத்துக் கட்டறது அவனுக்கு ரெண்டாவதுதான். தனியா தொழில் செய்யறான். சம்பாரிக்கறான். கூத்த ஒன்னும் நம்பி அவன் இல்ல.”

“செரிப்பா, நீயும் ஒருபக்கம் எதுனா வேலை செய்யி,  ஒருபக்கம் இங்க வா”

“இனிமே அது வேலைக்காவாதுனே, காலம் தாண்டிருச்சி.

வாத்தியார் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். தானும் இதற்கு ஒருவகையில் காரணமென்று அவருக்குக் குத்தலாக இருந்தது. மெதுவாக முத்துவிடம், “செரிப்பா உன்னிஷ்டம். ஆனா, இப்ப அச்சாரம் வாங்கிறதுக்கு மட்டும் வந்துடுபா. இல்லனா என்று இழுத்தார். முத்துவும் சரியென்பது போல் தலையசைத்துவிட்டு மெதுவாக எழுந்து சென்றான்.

இதுதான் கடைசி என்று முத்துவின் மனத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

*

சீதை தன் குறைகளைக் கூறி முடித்திருந்தாள். சீதையைச் சமாதானப்படுத்தும் விதமான அனுமன், “தாயே, கவலப்படவேணாம்” என்று சொல்லிவிட்டு ஒரு நீண்ட பாட்டைப் பாடினான். அந்தச் சமயத்தில் கம்பீரமாக மேடையில் தோன்றினான் இராவணன். இராவணனாக கம்பீரமாக நடந்தவந்து தன்னை மேலும் கீழும் பார்த்த முத்து அண்ணனைக் கண்டதும் சின்னச்சாமியின் கண்கள் கலங்கி. அவனைக் கண்களாலேயே அமைதிப்படுத்திக் கதாப்பாத்திரமாக மாற்றினார் முத்து.

இராவணன் அகங்காரமாக அரங்கம் அதிரும்படி சிரித்துவிட்டு, “யாரு நீ, இங்க எதுக்கு வந்த” என்றான். “நான் ராமனுக்காகத் தூது வந்துகிறேன்.” மரியாதையா அவன் பொண்டாட்டிய அனுப்பிடு. இப்படி அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கினு வந்து வெச்சிகிறியே இது நியாயமா” என்று அனுமன் ஆக்ரோஷமாகக் கேட்டதும் இராவணன் அசைவற்று நின்றுவிட்டான். வழக்கமாக இந்த இடத்தில் மீண்டும் அகங்காரமாகச் சிரிக்க வேண்டும். முத்து தன்னையும் மீறி “இத ஏன் எங்கிட்ட கேக்கற” என்றார். சின்னச்சாமி ரகசியமாக “அண்ணே” என்றான். 

*

சாராயக்கடை வாசலில் சின்னசாமியும் சிவக்குமாரும் நின்றுகொண்டிருந்தார்கள். உள்ளே போகலாமா வேண்டாமா என்று தயக்கம். இருந்தாலும் முத்தண்ணனுக்காக எதாவது செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்றியது. சின்னசாமி சிவக்குமாரின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தான். இவர்கள் இருவரையும் பார்த்துக் குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கிண்டல் செய்ய அருகிலிருந்தவர்கள் சிரித்தார்கள். அது இவர்கள் காதுகளில் விழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளவில்லை. சின்னசாமி சிவக்குமாரிடம் மெதுவாக, “இங்க நான் சின்னசாமி, நீ சிவக்குமார்” அவ்ளோதான் என்றான்.

இருவரின் கண்களும் புண்ணியகோடியைத் தேடியது. அவன் ஒரு ஓரமாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தான். இவர்கள் மெல்ல அவன் அருகில் சென்று நின்றார்கள். அவன் நிமிர்ந்து இவர்களைப் பார்த்தான். எதுவும் சொல்லவில்லை. இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும். அவர்கள் அவன் எதிரே உட்கார்ந்தார்கள். சின்னசாமி மெதுவாக, “அண்ணே” என்றான்.

புண்ணியகோடி நிமிர்ந்து பார்க்க, “அது இல்லணே” என்று இழுக்க, சிவக்குமார் நேராக விஷயத்திற்கு வந்தான். “நீ செய்யறது கொஞ்சங்கூட செரியில்லணே”.

“இன்னா செஞ்சாங்க”

“ஏதுவுமே செய்யலபாரு” என்றான் சிவக்குமார். சின்னசாமி அவன் கையைப் பிடித்து அழுத்த சிவக்குமார் அதைத் தட்டிவிட்டுத் தொடர்ந்தான், “இதப்பாருணே, இப்படி அடுத்தவன் குடும்பத்துல வெளாடறதுலாம் நல்லதில்ல ஆமா. உனுக்குத்தான் கல்யாணம் யி புள்ளகுட்டினு இருக்கல்ல அப்பறம் இன்னாத்துக்கு இதெல்லாம்” என்று கோபமாகக் கேட்டான். புண்ணியகோடி ஆத்திரப்படாமல் பொருமையாகப் பதிலளித்தான்.

“நான் ஒன்னும் அவன் வூட்டுக்குப் போயி அவன் பொண்டாட்டிகூடப் படுக்கல. நான் ஒன்னும் அவள என் கூட வா வா சொல்லல. அவனப் புடிக்கல. அவன் துப்பில்லாதவன்னு என் கிட்ட வந்தா, நான் இன்னாடா பன்றது.”

“ம்… வந்தா நீதான் புத்திமதி சொல்லி அனுப்பனும்”

புண்ணியகோடி சிரித்தவாறே, “ஏன்டா தானா வறத வேணாம்னு சொல்றதுக்கு நான் இன்னா உங்க முத்தண்ண மாதிரி முட்டி செத்தவனா” என்று சொன்னதும் அதுவரை அமைதியாக இருந்த சின்னசாமி ஆவேசமாக எழுந்து, “டேய் பொறம்போக்கு நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா” என்று புண்ணியகோடி மீது பாயந்தான். சட்டென சிவக்குமார் அவனைப் பிடித்து இழுத்துவிட்டான். 

“வேணாம் சின்னசாமி, அப்பறம் கதை தப்பாயிடும்” என்று புண்ணியகோடி சிரித்தவாறே சொன்னான். சிறிது நேரம் முறைத்துவிட்டு இருவரும் எழுந்தனர். போகும்போது சிவக்குமார், “வேஷத்தப் பார்த்து நம்பி ஏமாறக்கூடாது சின்னசாமி. போடற வேஷம் ஒன்னு, நடந்துக்குறது ஒன்னு” என்றான்.

*

“இராவணா… மரியாதயா என் பொண்டாட்டிய என் கூட அனுப்பிடு. அதான் உனுக்கு நல்லது” என்று முத்துவைப் பார்த்துப் புண்ணியகோடி சொன்னதும் அங்கே நின்றுகொண்டிருந்த அனைவரும் வாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருந்தவர்கள் உட்படச் சட்டென அமைதியாகிவிட்டனர்.  கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எதுவும் புரியவில்லை. என்ன ஆனது என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். சிலர் “இன்னாபா” என்று குரல் கொடுத்தனர். மேடையிலிருந்த அனைவரின் கண்களும் முத்துவையே பார்த்துக்கொண்டிருந்தன. சுதாரித்துகொண்ட வாத்தியார் வாத்தியக்காரர்களைச் சீண்டி வாசிக்கச் சொன்னார். அவர்கள் மீண்டு வந்து பழைய மாதிரி வாசிக்கத் தொடங்கினர். ஆனால், சூழ்நிலை பழையமாதிரி திரும்பவில்லை. ஒவ்வொருவராகத் தங்கள் நிலைக்குத் திரும்பினர். ஆனால், முத்துவும் சின்னசாமியும் அசைவற்று நின்றுகொண்டிருந்தனர். வாத்தியார் புண்ணியகோடிக்கு சைகைக்காட்ட, புண்ணியகோடி மீண்டும், “இராவணா… மரியாதயா என் பொண்டாட்டிய என் கூட அனுப்பிடு. அதான் உனுக்கு நல்லது” என்று சொன்னான். ஆனால், இந்த முறை முத்துவின் கண்களை அவனால் பார்க்க முடியவில்லை. அவன் பேசிய வசனத்தைக் கேட்டதும் சின்னசாமிக்கு ஆத்திரமாக வந்தது. அவன் திரும்பி புண்ணியகோடியைப் பார்த்து முறைத்தான். முத்து வேறு ஓர் உலகத்தில் இருந்தான். அவன் கண்ணிலிருந்து மெல்ல மெல்ல நீர் வழியத் தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத ஒரு நொடியில் அவன் உடைந்து உட்கார்ந்து அழத் தொடங்கினான். மக்களுக்கு எதுவும் புரியவில்லை. “இது இன்னா புதுசா இருக்குது” என்றாள் ஒரு கிழவி. வாத்தியக்காரர்கள் முத்துவையே பார்த்தபடி இயந்திரத்தனமாக வாசித்துகொண்டிருந்தனர். அழுத்துகொண்டிருந்த முத்து எதிரிலிருந்த புண்ணியகோடியின் கால்களைப் பிடித்துக்கொண்டு, “என் பொண்டாட்டிய வுட்டுறுடா, என் பொண்டாடிய வுட்டுறுடா” என்று கதறினான். புண்ணியகோடி பின்வாங்க முயல, சின்னசாமி பதறியடித்துகொண்டு வந்து முத்துவை விலக்க முயன்றான். ஆனால், முத்து கால்களைப் பிடித்துகொண்டு விட்டாப்பிடியாகக் கதறிக்கொண்டிருந்தான்.

ஊர்மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்துவந்து வாத்தியாரிடம், “இன்னாபா, புதுசா பண்றேன்னு சாமி விஷயத்துல வெளாடறீங்களா” என்று எகிற, வாத்தியார் அவரைத் தனியாக அழைத்துகொண்டுபோய் உண்மையை விளக்கிக்கொண்டிருந்தார். அதற்குள் மக்களிடையே சலசலப்பு அதிகரித்து. மேடையிலிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முத்து இன்னும் அழுதுகொண்டிருந்தான். சின்னசாமி தன் பலத்தை முழுவதுமாகச் செலுத்தி முத்துவை இழுக்க முயற்சிக்க இப்போது சிவக்குமாரும் உதவிக்கு வந்தான். புண்ணியகோடிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் கண்கள் கூட்டத்தில் காமாட்சி தென்படுகிறாளா என்று தேடியது. திடீரென்று முத்து ஆவேசமாக எழுந்து நின்றார். அவர் எழுந்த வேகத்தில் சின்னசாமியும் சிவக்குமாரும் தடுமாறி விழுந்தார்கள். அவர் முகத்தில் தெரிந்த ஆவேசத்தையும் கண்களில் தெரிந்த வெறியையும் பார்த்து புண்ணியகோடி அஞ்சினான். முத்து தன் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து புண்ணியகோடியைச் சராமாரியாகக் குத்திக் கிழித்தான். ரத்தம் பீறிட்டு அடித்து முத்துவின் முகத்தை நனைத்தது. இராமனைக் குத்தி கிழித்துக் கொல்லும் இராவணனை ஊர் மக்கள் முதன்முறையாகத் திகைத்துவாறு பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரும் அசைவற்று நின்றுகொண்டிருந்தனர். சின்னசாமி மட்டும் முத்துவிடம், “அண்ணே, ஓடுணே… ஓடு” என்று  இழுத்தான். சுயநினைவுக்கு வந்த முத்து கத்தியைக் கீழே போட்டுவிட்டு சுற்றி ஒருமுறை பார்த்தான். அனைத்துக் கண்களும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மேடையைவிட்டுக் கீழே குதித்து இருட்டுக்குள் ஓடத் தொடங்கினான். யாரும் அவனைத் தடுக்கவோ பிடிக்கவோ முயற்சிக்கவில்லை.

***