வீட்டின்முன் கிடந்த கட்டிலில் படுத்திருந்தாள் சம்பூரணம். ஆட்டோ நிறுத்தும் சத்தம் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள். ஆட்டோவில் இருந்து இறங்கி கறுத்த மங்கலான உருவம் வாசற்படியில் நுழைவதை உணர்ந்தாள்.
“தண்ணீ கொண்டா” என்று சொன்னவன், வந்த வேகத்தில் வெளியே ஓடினான். அந்தச் சத்தத்தில் எழுந்து உட்கார்ந்தாள் சம்பூரணம். தண்ணீரைக் கொண்டு வந்த வசந்தி அவனைக் காணாது தேடினாள்.
“எங்கத்த போனாரு” என்று சலிப்பாய்க் கேட்டாள்.
“அங்கபாரு வீட்டுக்குப் பின்னால ஓடுனான். வாந்தி எடுக்கற மாதிரி சத்தம் கேட்குது பாரு. வயித்துல ஒன்னுமே இல்ல. எப்படிதான் வாந்தி வருதோ! எந்த மல்லக் குடிச்சுட்டு இன்னக்கி சேராம போச்சோ. ஊட்ல ஒருவேள சோறு தின்னு பத்து நாளாச்சு. இன்னக்கி என்னத்தத் தின்னு சேராம போச்சோ, என்ன கருமாந்தரமோ? போய்ப்பாரு” என்று கைகளை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு பேசினவள் இரு கைகளையும் இணைத்துப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
வசந்தி அவன் அருகில் செல்லச் செல்ல வாந்தி எடுக்கும் சத்தமும் அதிகமானது. அடிவயிற்றிலிருந்து குடலைப் பிடுங்கி வெளியே தள்ளும் வலியின் கதறலோடு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
“ஐயோ அத்த. இரத்த இரத்தமா வாந்தி எடுக்கறாப்ல வாங்கத்த” என்று கத்தினாள். உட்கார்ந்திருந்தவள் சிரமப்பட்டு எழுந்தாள். கால் நிலைகொள்ளாமல் கீழே விழப்போனவள், சுதாரித்து உட்கார்ந்தாள். தலையில் ஓங்கி அடித்ததைப் போன்று இருந்தது. வேகமாக அடியெடுத்து வைக்க முயன்றாள். இடத்தைவிட்டு நகர முடியவில்லை. வசந்தியின் சத்தமும் கூப்பாடும் அதிகமாயின. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுகள் இருந்தனவே ஒழிய காதுக்கு எட்டிய தொலைவில் யாருமில்லை. வசந்தியின் அழுகையும் கதறலும் பரந்த வெற்றிடத்தை நிரப்பின.
“அத்த கையும் காலும் இழுக்குது அத்த. வாங்கத்த. பயமாயிருக்குது அத்த. வாங்கத்த.” என்று அழுதுகொண்டே அவன் தலையை எடுத்து மார்போடு இருத்திக் கொண்டு கத்தினாள்.
சம்பூரணத்திற்கு எல்லாம் தெளிவாய்க் கேட்டன. ஆனால் ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. காலிரண்டும் வரவில்லை. மரத்துப்போனது. உயிரைப் பிடித்துக்கொண்டு ஒரே மூச்சில் எட்டி உதைத்தாள் (எதை). குத்துக்காலில் கால்பட்டுத் தூக்கம் கலைந்தது. கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயத்திலேயே மீண்டும் பட்டு இரத்தம் வந்தது. எழுந்து உட்கார்ந்தாள். மூச்சு வாங்கியது. நெற்றி வியர்த்திருந்தது.
“கருப்பனாரே எல்லா நீ வுட்டதுதான். எப்படியாவது கரை சேத்துரு அப்பா கருப்பனாரே. நீ வாக்குக் கொடுத்தும் கேக்காதது என் தப்புத்தான். என் முன்னாலயே இருந்து அவன் சாவறதவிட எங்கேயோ போய் நல்லாக் கொணமாயி வந்தானா அதுவே போதும் சாமி. நீதான் பாக்கோணும் சாமி” என்று கிழக்குப் பார்த்துக் கும்பிட்டாள். நாளைக்கு மாணிக்கத்தை வரச்சொல்லிப் பேசிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் படுத்தாள். இமைகள் திறப்பதும் மூடுவதுமாக இருந்தன.
எப்படி இருந்தாலும் அவளுக்கு எல்லாம் இருள்தானே. சிறுவயதில் பண்ணையத்தில் இருக்கும்போது ஏதோ பூளை அண்டியது போலக் கொஞ்சம் தெரியும். காலத்தின் போக்கில் அதுவும் தெரியாமல் போனது. வயதுக்கு வந்தபோதெல்லாம் கண்கள் இரண்டும் பொட்டையாகத்தான் இருந்தது. இவன் பிறப்பதற்கு முன் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்தாள். கைக்குழந்தையாக இருக்கும்போது கணவனும் போய்ச்சேர்ந்தான். இப்போது இவனும் இல்லை என்றால் என்ன செய்வது? தூக்கம் வரவில்லை. மகனை நினைக்கும் போதெல்லாம் திகில் பாய்ந்தது போல் இருந்தது. அதே இடத்தில் மீண்டும் படுத்திருக்க முடியவில்லை. காரிக்குருவிகளின் சத்தம்கூட அவளுக்கு அப்போது எரிச்சலாக இருந்தது. கட்டிலைத் தூக்கி வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வாதனாராயண மரத்தடியில் போட்டாள். பகலில் அவளின் இருப்பிடம் அதுதான். படுத்தவுடன் எழுந்துவிடலாம் என்று படுத்தவள் தூங்கிப்போனாள்.
வெயில் சுர்ரென்று உடம்பில் பட்டபோதுதான் எழுந்தாள். எப்பொழுதும் விடிகாலையில் எழுந்து வாசலைக் கூட்டிப் பாத்திரங்களைக் கழுவிக் காய்கறிகளை அரிந்துவிட்டு எழுப்பும் அத்தை இவ்வளவு நேரம் தூங்குவதைப் பார்த்த வசந்தி, “என்னத்த உடம்பு எதும் சரியில்லயா?” என்று கவலையோடு கேட்டாள்.
“உடம்புக்கு என்ன நல்லாத்தான் இருக்குது” என்று சொன்னவள் “அவன் இருக்கறானா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“இல்ல அத்த இப்பத்தான் ஆட்டோவுல புள்ளைங்களக் கூட்டிட்டுப் போறாப்ல” என்று சத்தமாகச் சொல்லி அவன் இல்லாததை உறுதிப்படுத்தினாள்.
“தெள்ளுமணி போய்த் தொலைஞ்சுட்டானா?” என்று ஆத்திரம் தாங்காமல் பல்லை இறுகக் கடித்துக்கொண்டாள்.
“ஆட்டோவுல போய்த் தொலைஞ்சுட்டானா! ஆட்டோவுல! முண்டையன். வர்ற வேலைய ஒழுங்காச் செய்யாத ஒண்ணுமித்த ஆட்டோவ வாங்கிக்கிட்டு அதுக்குச் செலவு பண்றதும் அத எடுத்துக்கிட்டுக் குடுச்சிட்டு வர்றதும் அழிச்சாட்டியம் பண்றான் நாசமாப் போனவன்” என்று கட்டில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கோபமாகப் பேசினாள். பாத்ரூம் போக வேண்டும்போல் இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. சிறுநீர் கழிப்பதென்றால் வீட்டுக்குப் பின்னால் போய்விடுவாள். சமீப காலமாகச் சிறுநீரோடு மலமும் வந்துவிடுகிறது. எது வருகிறது என்பதே தெரிவதில்லை. எதுவாக இருந்தாலும் பாத்ரூம்க்கே போய்விடுகிறாள். விளையாட்டில் ஆளைத் தொடுபவன் கையை நீட்டிக் கொண்டு போவதுபோல் கையை நீட்டி மெல்ல நடந்து போய்விட்டு வந்தாள். போர்வைகளை மடித்து வீட்டிற்குள் இருந்த ரேசன் அரிசி மூட்டையின்மீது வைத்தாள். கால் மூட்டை இருந்தது. மின்விசிறியைப் போட்டதுபோல் சன்னல் வழியாகக் காற்று வேகமாக வந்தது. வசந்தி கட்டிலை எடுத்து வீட்டுக்குப் பின்புறம் போட்டாள். கட்டிலில் போய் உட்கார்ந்தவளுக்கு விடிகாலையில் கண்ட கனவு மனத்தை அறுத்துக்கொண்டே இருந்தது. மகன் செத்துப்போய்விடுவானோ என்கிற பயம் அதிகமானது. கருப்பனாரை நினைத்துக்கொண்டாள். வசந்தி தலையணையைக் கொண்டுவந்து தலைமாட்டில் வைத்தாள்.
“அவன அனுப்பிறலாமா” என்று பேச்சு முழுவதும் வராமல் உடைபட்டு வந்தது.
“அன்னைக்கே அதத்தான சொன்னன். நீங்கதான் பாக்கலாமுன்னு சொன்னிங்க. இங்க இருந்தா இப்படியேதான் இருப்பாப்ல” என்று விரக்தியோடு சொன்னாள் வசந்தி. வசந்தியிடம் தன் தங்கை மகன் மாணிக்கத்துக்குப் போன் போட்டுத் தரச்சொல்லிப் பேச வேண்டும் என்று வரச் சொன்னாள். மாணிக்கம் வருவதற்கு மத்தியானத்திற்கு மேல் ஆகிவிடும். வசந்தி இரண்டு வாரமாகத்தான் வீட்டுவேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். உடனே லீவு சொல்ல முடியாது. சம்பூரணத்திற்குச் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். தான் நேரத்தோடு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பினாள்.
சம்பூரணத்திற்கு என்னமோ ஒருமாதிரி சோம்பலாகவே இருந்தது. சாப்பிட விருப்பம் இல்லாமல் பழைய சோற்றைக் கரைத்து இரண்டு டம்ளர் குடித்துவிட்டு எப்போதும் போலப் படுத்தும் உட்கார்ந்தும் இருந்தாள்.
மாணிக்கம் இவளின் தங்கை மகனாக இருந்தாலும் விவரம் தெரியும்வரை சம்பூரணத்தைத்தான் அம்மாவாகக் கருதிக்கொண்டிருந்தான். இவளோடு பிறந்த நான்கு தங்கைகளும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருந்தார்கள். ஆள்கள் எண்ணிக்கை பெருகிய அளவிற்கு வருமானம் வரவில்லை. வேலைதேடி அங்கும் இங்கும் சென்றவர்கள் மீண்டும் சேரவே இல்லை.
மாணிக்கமும் இவனும் இணை பிரியாமல் எப்போதும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள். செவ்வாய்ச் சந்தைக்குப் போய் ஏதாவது தீனி வாங்கி வந்தால் மாணிக்கத்துக்குத் தராமால் வாய் வைக்கமாட்டான். வாங்கிய தீனி கெட்டே போனாலும் மாணிக்கத்தை விட்டுவிட்டுத் திங்க மாட்டான். மாணிக்கம் எட்டாம் வகுப்பில் பெயிலாகித் தறி ஓட்டப் போனான். இவன் ஆறாவதில் பெயிலாகி மெக்கானிக் கடைக்குப் போனான். மாணிக்கத்தின் பாடு திண்டாட்டம்தான் என்றாலும் ஏதோ குடும்பம் நடக்குது.
காற்று என்றும் இல்லாமல் இன்று பலமாக அடித்து ஊளையிட்டது. மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்துவிடும் போல இருந்தன. கிளைகள் போலவே அவள் மனமும் ஆட்டம் போட்டது. குடியை மறக்கடிக்க என்னெல்லாமோ செய்து பார்த்துவிட்டாள். நாட்டு மருந்து முதல் ‘ஒரே வாரத்தில் குடியை மறக்க’ என்று வரும் விளம்பர மருந்துகள் வரை அவனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கொடுத்துப் பார்த்துவிட்டாள். எதுவும் பயன்தரவில்லை. பெங்களூக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டால் கொஞ்ச காலத்தில் மறந்துவிடுவான் என்று மாணிக்கம் ஏற்கனவே சொல்லியிருந்தான். இவள்தான் அவனைத் தனியாக அனுப்புவதற்குப் பயந்து காலத்தைக் கடத்திக் கொண்டு இருந்தாள். ஆனால் இன்று என்ன நடக்கும் என்று கருப்பனாரே சொல்லிவிட்டதால் அனுப்பத் துணிந்துவிட்டாள்.
கருப்பனாரின்மீது பாரத்தைப் போட்டாலும் போகும் இடத்தில் என்ன ஆகுமோ? அங்குப் போனால் இவன் திருந்துவானா, அது எப்படிப்பட்ட இடம், அங்குப்போய் எதாவது உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்வான் எனப் பல கேள்விகள் கிளை கிளையாய்ப் படர்ந்து விரிந்து அவளைக் குழப்பின.
“பெரியம்மா…….. பெரியம்மா…….” என்ற மாணிக்கத்தின் குரல் குழப்பத்தின் பிடியில் சிக்கியிருந்தவளை மீட்கச் செய்தது.
“கண்ணு, பின்னாடி இருக்கேன் வா” என்று குரல் கொடுத்தாள். அவள் இருந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றின் குளிர்ச்சியும் உடலைச் சிலிர்க்கச் செய்தது. மைனாக்கள் போட்டி போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. காற்றின் வேகத்தில் பறக்க முடியாத காகங்கள் குரலெழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் பறந்தன. அவன் அருகில் வருகிற சத்தம் கேட்டதும்
“வா கண்ணு. இங்க உட்காரு” என்று கட்டிலைக் காட்டினாள்.
“எங்க போயிட்டான்?” என்றான்.
“யாருகிட்ட சொல்றான். வரவேண்டியதுதான், போவேண்டியதுதான். கேக்கறதுக்கு யாரு இருக்கறா? எல்லாம் அவன் பண்ணாட்டுத்தான். அந்தப் பரதேசி கெடக்கிறான் நாசமாப் போறவன்” என்று ஆவேசமாகத் திட்டியவள், வந்தவனுக்குத் தண்ணிகூடத் தரவில்லை.
“இரு கண்ணு டீ வச்சு எடுத்தாரன்” என்று கட்டிலிலிருந்து எழுந்தாள்.
“அதெல்லாம் வேண்டாம் பெரியம்மா, இப்பத்தான் வரவழியில குடிச்சன். நீ உக்காரு” என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் உட்கார்ந்துகொண்டாள்.
“முன்னமாதிரியேதான் இன்னமும் குடிக்கறானா?” என்று பெரியம்மாவைப் பார்த்துக்கொண்டே கேட்டான். அவள் முகம் வாடிப்போய்க் கருத்திருந்தது. அழுது அழுது முகம் வீங்கியதைப் போல் இருந்தது.
“ஆமா கண்ணு ஒண்ணும் சொல்லக் கூடாதுங்கறான். எதச் சொன்னாலும் மனசு கஷ்டமாயிடுதாம் தெள்ளுமணிக்கு. அவன நெனச்சா ஆத்திரமா வருது. போய்த்தொலையறான் விடு கண்ணு. சரி கண்ணு பெங்களூருக்குப் போனா சரியாயிடும்னு சொன்னல்ல அதப்பத்தி விசாரிச்சயா?” என்று கேட்டாள்.
“எத்தன தடவத்தான் உங்கிட்ட சொல்றது” என்று சலித்துக்கொண்டான். ஆனாலும் எப்படியாவது அவனை அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மாணிக்கத்திற்கும் இருந்தது. முன்பு சொன்னதைவிட இப்போது பொறுமையாகவே சொன்னான்.
“மாசம் ஒன்பதாயிரமாம். கொறஞ்சது மூணு மாசமாவது இருக்கணுமாம். அதுக்கு மேல இருக்க வைக்கறதும் கூட்டிட்டுப் போறதும் நம்ம விருப்பம்தானாம். அவங்களே வந்து கூட்டிட்டுப் போனா அதுக்குக் கார் சார்ஜ் ஐயாயிரமாம். காசு குறைக்க மாட்டாங்களாம். ஆனா சரியாய்ப் போயிடும்” என்று மனப்பாடம் செய்தவன்போலச் சொல்லி முடித்தான்.
“துளி நெனப்புக்கூட வராது. ஏனா நானே பார்த்திருக்கிறன். எங்கூடப் படுச்ச ப்ரண்டோட அண்ணன் அப்படித்தான் எந்நேரமும் இதே வேலயாத்தான் இருப்பான். காசில்லனா வீட்டை ரெண்டாக்கிடுவான். பெத்தவங்களயும் போட்டு அடிப்பான். இப்ப அங்க போய்ட்டு வந்தபிறகு ஆளு பூனை மாதிரி இருக்கிறான். இருக்கிற இடமே தெரியல. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கிறான். மத்த எடத்துல மாதிரி இங்க கிடையாது. அடிக்கவெல்லாம் மாட்டாங்களாம். எதுவுமே கேட்கலனாத்தான் ரெண்டு ஈடு போடுவாங்களாம். நாள் முழுக்க யோகாதான் சொல்லித் தருவாங்களாம். மூணு வேளையும் சூடா விதவிதமாப் போடுவாங்களாம். போன மொத ஒருவாரம் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்குமாம். அப்புறம் அங்கிருந்து வர்றத்துக்கே மனசு வராதாம்” என்று தானே அனுபவித்து வந்தது போலப் பேசினான். மாணிக்கத்தின் பேச்சு கருப்பனாரே நேரில் வந்து பேசுவதாகப் பட்டது சம்பூரணத்திற்கு. அவள் முகம் ஒருவிதத் துலக்கம் பெற்றது. எண்ணங்கள் தெளிவாகியது போல் இருந்தன. ஏனோ அடிவாங்கி இறந்தவர்களையும் பைத்தியமாய்ப் போனவர்களையும் பற்றியும் ஒரு வார்த்தைகூடச் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
“இவன் அந்த மாதிரிலாம் இல்ல கண்ணு. சும்மா சொல்லக் கூடாது. வண்டி ஏதாவது ரிப்பேர்னு வந்தா அதச் சரிபண்ற வரைக்கும் மத்தியானம் சோறு திங்கக்கூட வரமாட்டான். நாயா பேயா ஓடி வேலை செய்வான். வீட்டுக்கு ஒன்னானது ஒன்னு அவன்தான் கண்ணு வாங்கிப் போடறான். தினமும்தான் மல்லக் குடிச்சுட்டு வருவான். ஆனா வந்தா தின்னதும் படுத்துக்குவான். இப்பதான் கண்ணு ஒரு பத்துநாளாச் சோறுதண்ணி இல்லாத இராப்பகலா மல்ல மட்டும்தான்” என்று பேச முடியாமல் தொண்டையினைச் செருமிக்கொண்டு இருமினாள்.
“எல்லாம் சரியாப் போயிடும் பெரிம்மா. அழுது மட்டும் என்ன பண்ண முடியும். அழுவாத. இப்படி அழுதுகிட்டே இருந்தா உன்னை யாரு பாக்கறது. தைரியமா இரு பெரியம்மா. எதுன்னாலும் பாத்துக்கலாம்” என்றவன் கண்களும் கலங்கத்தான் செய்தன. இருவருமே சிறிது நேரம் பேசவில்லை. என்ன நினைத்தாளோ கண் கலங்கி நின்றது. துடைத்துக் கொண்டாள். மீண்டும் என்ன நினைத்தாளோ கண்ணீர் இம்முறை பெருக்கெடுத்தது.
“இந்தப் பாவி முண்ட அப்பவே செத்துத் தொலஞ்சிருக்கணும். வாச்சவன் போன காலந்தெரியல. பொறந்ததும் இப்ப” என்று சொல்லவந்ததைச் சொல்லாமல் அழுகையை நிறுத்தினாள். குரல் ஒடிந்து சன்னமாக வெளிப்பட்டது. சற்றுமுன் ஆவேசமாகப் பேசியவள் இப்பொழுது அப்படியே மாறியிருந்தாள்.
“அப்படியெல்லாம் சொல்லாத பெரியம்மா. யாரு இருந்து என்ன புரயோசனம்? நீயே இப்படிச் சொன்னா வசந்தி நிலைமைய யோசுச்சுப் பாரு. வசந்தியா இருக்கவும் இவன் பண்றத எல்லாம் தாங்கிகிட்டு இருக்குது. வேற யாராவதா இருந்தா எப்பவே புள்ளைங்களக் கூட்டிக்கிட்டுப் போயிருப்பாளுங்க” என்று விவரம் தெரியாத புள்ளையாக இருப்பதால்தான் குடும்பம் இதுவரை குடும்பமாக இருக்கிறது என்று வசந்திக்குப் பரிந்து பேசினான்.
“என்ன கண்ணு பண்றது. வெவரம் பத்தலதான். சின்னவயசு அவளுக்கும் ஒன்னும் புரியல. அவன ரெண்டு ஈடுகூடப் போட முடியாது. சுக்கடாப் புள்ளையாப் போயிட்டா. நானும் கல்யாணம் ஆன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் சொல்லிக்கிட்டுதான் இருக்கன். அப்புறம் நான் மட்டும் என்ன கண்ணு பண்றது? கடைசியா உங்க அம்மா வீட்டுக்காவது போன்னு சொல்லிப்பார்த்துட்டன்?” என்றாள்.
“அவங்க அம்மா வீட்டுக்குப் போயி ஒருவாரம் இருந்தா இவங் கொட்டம்லா அடங்கிப்போய்டும். எவ்வளவு நாளுக்குப் புள்ளைங்களப் பாக்காம பொண்டாட்டியைப் பார்க்காம இருந்திருவான். அதையும்தான் பார்க்கலாமே” என்று வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு ஒரு வழி புலப்பட்டதைப் போல ஆர்வத்தோடு சொன்னான்.
‘அதைச் சொன்னதுக்குத்தான் அவள் இல்ல அத்த அம்மா பண்றது எதுவுமே எனக்குப் புடிக்கல. நா செத்தாலும் இங்கயேதான் இருப்பன் அத்த. அங்கமட்டும் போவச் சொல்லாதீங்கனு சொல்லிட்டா’ என்றாள். வசந்தியின் அம்மாவைப் பற்றி எண்ணியதும் சம்பூரணத்தால் அந்த அசிங்கத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
“அவளெல்லாம் ஒரு அம்மா. இண்டம்புடுச்சவ. பீத்தரக் கழுதை, ஈத்தர சாதி. அவள் பொழப்பெல்லாம் ஒரு பொழப்பு. த்தூ” என்று அவள் அருகில் இருப்பதாக எண்ணித் தன் பலம் கொண்டமட்டிலும் இழுத்து வாய் நிறைந்த எச்சிலை வேகமாகத் துப்பினாள். அது அவளின் உடல் முழுக்கப் பட்டு ஒழுகியிருக்கும்.
சம்பூரணத்தின் கோபத்தைத் தணிப்பதுபோல் ஓரிரண்டு பெருந்துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன. மண் வாசனை எழுந்தது. திடீரென ஒரு பெரிய இடி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாராங்கல்லை உருட்டிவிட்டது போல் உருண்டது.
“பெரியம்மா மழை வருமாட்டம் இருக்குது” என்றவன் வேகமாகக் கட்டிலைக் கொண்டுபோய்த் தாவாரத்தில் போட்டுவிட்டுப் பெரியம்மாவைக் கூட்டிவரப் போனான்.
“இல்ல கண்ணு இங்கதான. நானே வந்துருவன். நீ மழைல நனையாம போ” என்று அவனைப் பின்தொடராமல் தான் எப்போதும் போவதுபோல நடந்துபோய் சன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.
மாணிக்கம் ஒன்றுக்குப் போவதாகப் போய்விட்டுப் பெரியம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“என்ன பெரியம்மா இவ்வளவு பாட்டலா கெடக்குது? இவன் குடுச்சதா இத்தனையும்? புள்ளைங்க இருக்குதுன்னு கொஞ்சம்கூட அறிவு வேண்டாம். பாட்டலே ரெண்டு மூணு மூட்டை வருமாட்டம் இருக்குது. இவன என்னதான் பண்றது” என்று கடுகடுப்பாகப் பேசினான்.
“அந்த இண்டம்புடுச்சவன்தான் குடுச்சுப்புட்டு இப்படிப் போட்டிருக்கான். வாடகைக்கு விட்டவன் இந்தப்பக்கம் வராதனால இங்க இருக்க முடியுது. இல்லைன்னா தெருவுலதான் நிக்கோணும். காலைல குடிச்சுப்புட்டு மீதிப் பாதிப் பாட்டில வச்சான்னு கடைக்குட்டி சொன்னாள். எங்க வெச்சானுதான் தெரியல. அவளும் வீடு முழுக்கத் தேடிப் பார்த்துட்டாள். எங்க வெச்சானோ தெள்ளவேரி முண்டையன்.”
“கடைக்குட்டியா சொன்னா?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டான்.
“ஆமா கடைக்குட்டிதான். மத்த இரண்டையும் வித்துட்டு வந்துரும். நல்ல வேய்க்கானம். நல்ல சுட்டி. அவள் மட்டும் வளர்ந்துட்டானா எனக்குக் கவலையே இல்லை” என்று சந்தோசம் பொங்கச் சொன்னாள்.
“இப்ப இருக்கற காலத்துல ஒரு பிள்ளைய வளர்த்தவே அவனவன் படாத பாடு படுறான். இதுல மூணு பிள்ளைகள வளர்க்கறதுனா லேசுப்பட்ட காரியமா? இவனுக்கு ஏதாவது ஒன்னுனா வசந்தி எப்படிதான் எல்லாத்தையும் வளர்த்துவாளோ” என்று தன்னால் ஒரு பிள்ளையையே வளர்த்த முடியாத நிலையினை நினைத்து மாணிக்கம் வசந்தியின்மேல் ஆதங்கப்பட்டான்.
“அந்தத் துக்கடாவும் லேசுப்பட்ட ஆளு கிடையாது. அவன் சொல்றதுதான் கேட்பாள். நான் ஒவ்வொரு மாசமும் கேக்கறன். தள்ளிப் போச்சா தள்ளிப் போச்சானு. நீர்க்கட்டிதான் நீர்க்கட்டிதானு சொன்னாள். அப்புறம் வந்து ‘நாலு மாசமா அத்த என்ன செய்யறது’ன்னு நீலிக் கண்ணீர் வடிக்கறாள். வயிறுதான் தெரியல, அவளுக்குக்கூடவா தெரியாது? ஒருத்துனுக்கு மூனு சாதகக்காரனும் பையன்தான் சொன்னானுதான் நானும் இருக்கட்டுமேனு விட்டன். ஆனால் அதுவும் பிள்ளையாப் பொறக்குமுன்னு நான் என்னத்தக் கண்டன். பொறப்புதான் புள்ள. ஆனா எல்லாத்தலயும் பையன் மாதிரிதான். என்னை இப்பவே எங்கனாலும் அவளே தனியாக் கூட்டிட்டுப் போயிடுவா. பெரிய வாத்தியாரு சும்மா இருக்கறதுக்குப் பெரியவளோடு அனுப்பச் சொன்னாரு. இப்ப இரண்டு பேருமே ஒன்னாவது. அவ்வளவு அறிவு” என்று சொல்லிக் கடைக் குட்டியைக் காற்றிலே கையால் அளந்தெடுத்துத் தலையில் அழுத்தித் திருஷ்டி கழித்தாள்.
“சரி பெரியம்மா. அவனை எப்ப அனுப்பறது. எதாவது முடிவு பண்ணுனீங்களா?”
“ நீ சொன்ன அடுத்தநாளே கருப்பனாருகிட்ட வாக்குக் கேட்டுட்டன். அவரு வாக்குக் கொடுத்தும் நான்தான் மனசு கேட்காம இருந்துட்டன். ஆனால் இப்படியே விட்டுட்டா என்ன நடக்கும்னு எனக்குக் கருப்பனாரு காட்டிட்டாரு. இனிமேலும் இத இப்படியே விடக்கூடாது. உடனே அனுப்பிடலாம்” என்று கருப்பனாரைக் கும்பிட்டுக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்துக் “கண்ணு, காசப் பத்திக் கவலைப்படாத. பலகாரச்சீட்டுப் போட்டுக் கொஞ்சம் பணம் வெச்சிருக்கறன். மாசம் மாசம் எனக்கு வரும் பணத்தைக் கொஞ்சம் வெச்சிருக்கறன். வட்டிக்கு அஞ்சோ பத்தோ வாங்கிடலாம். பாவம் உன்பாடே திண்டாட்டமா இருக்கு?” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள். மாணிக்கத்திற்கும் இவனை அனுப்புவதற்கான பணத்தை எப்படிப் புரட்டுவது என்ற கவலை இருக்கத்தான் செய்தது. பெரியம்மாவின் பேச்சு மனத்தைரியத்தைக் கொடுத்தது.
இருந்தாலும், “முடிஞ்சவரை பொரட்டு. இல்லைனா நாங்கூட எங்கையாவது பொரட்டப் பாக்கறன்” என்று பெரியம்மாவின் மனத்தைத் தேற்றினான்.
சிறிது நேரம் யோசனைக்குப் பிறகு “ஏ பெரியம்மா நாமலே கூட்டிட்டு போயிட்டா காசு குறையுமில்ல?” என்றான்.
“நாமெல்லாம் கூட்டிட்டுப் போவ முடியாது. எந்தரங் கட்ட நான் எவ்வளவோ தடவக் கேட்டுப் பார்த்துட்டன். வரமாட்டனுட்டான். அட கோயிலுக்காவது வாடான்னு கால்ல உழாதகொறையாக் கெஞ்சிப்பார்த்துட்டன். வர மாட்டன்னுட்டான். ஆவுன்னா சாவரஞ் சாவரங்கரான். செத்துந் தொலையமாட்டங்கரான். அவங்களையே வந்து கூட்டிட்டுப் போவச் சொல்லிரு” என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.
பெரியம்மாவின் சம்மதம் கிடைத்ததும் பெங்களூருக்குப் போன் செய்து எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு இன்றே வந்து கூட்டிப் போகச் சொன்னான். முகவரியையும் வருதற்கான வழியையும் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான். தான் அங்கிருப்பது சரியாக இருக்காது என்று கூறி அண்ணனை மட்டும் காட்டும்படி சொன்னான். அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகும்போது எந்தச் சத்தமும் போடக்கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான்.
நேரம்போனதே தெரியவில்லை. சம்பூரணம் அரை மயக்கத்தில் படுத்துக்கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் இரவுச் சாப்பாட்டையும் வீட்டுப் பாடத்தையும் முடித்துவிட்டுப் படுத்துக்கொண்டன. கடைக்குட்டி மட்டும் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். கடைக்குட்டியின் அருகில் வசந்தி பித்துப்பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அனுப்பிவிடலாம் என்று தைரியமாகச் சொன்னவள்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதுவும் இன்றே நடக்கும் என்று எதிர்பார்க்காததால் திகிலடைந்து போனாள்.
அவன் எப்போதும் போலக் குடித்துவிட்டு வந்து படுத்திருந்தான். வாயில் எச்சில் ஒழுகியது. தெருவில் சுற்றும் பைத்தியக்காரனைப்போல் கறுத்துப் போயிருந்தான். உடல் மெலிந்து நெஞ்செலும்புகள் கோடுகளாய்த் தெரிந்தன. நாக்கும் உதடுகளும் வறண்டு காய்ந்துபோய் இருந்தன. படுத்திருந்தவன் தண்ணீர் என்று சொல்ல முடியாமல் சொன்னான். எங்கோ பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கு இது கேட்கவில்லை.
கடைக்குட்டிதான் “அம்மா, அப்பா தண்ணி கேட்குது” என்றாள். வசந்தியோ அவள் சொன்ன சொல்லின் பொருள் தெரியாத குழந்தைபோல் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மீண்டும் கேட்டான். கடைக்குட்டியும் திரும்பத் திரும்ப “அம்மா, அப்பா தண்ணி கேட்குது” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.
வசந்தியோ “அம்மா நாளைக்கு வாங்கித்தரன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் நினைவு இழந்து போனாள்.
பிணம் போல் கிடந்தான். வாய் திறக்க முடியாமல் தண்ணீர் வேண்டும் என்று கையால் சைகை செய்தான். கடைக்குட்டி வேகமாக ஓடி டம்ளரை எடுத்துக் குடத்திலிருந்த தண்ணீரை மோந்து வந்தாள்.
“இந்தா அப்பா, அப்பா இந்தா” என்று கொடுக்க முயன்ற குழந்தையின் முகம் பயந்துபோய் இருந்தது. குழந்தையின் குரலினாலோ அல்லது முன்நிகழ் காட்சிகளின் உள்ளுணர்வினாலோ தூண்டச் சுயநினைவு பெற்றாள் வசந்தி. அப்போது அவன் கடைக்குட்டியிடம் தண்ணீரை வாங்கித் தலையைத் தூக்கிக் குடிக்க முடியாமல் குடித்துக்கொண்டிருந்தான். என்ன நடக்கின்றதென்றே தெரியாத பரிதாபத்தோடு நின்றுகொண்டிருந்த கடைக்குட்டியைப் பார்த்தான். என்ன நினைத்தானோ. கண்ணில் நீர் வந்தது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். கடைக்குட்டி வசந்தியிடம் போய் உட்கார்ந்து கொண்டாள்.
ஆம்னி கார் ஒன்று வந்து நின்ற சத்தம் கேட்டது. அவனுக்குக் கேட்டதோ என்னவோ. ஆனால் அவன் எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே படுத்திருந்தான்.
சம்பூரணம் “வசந்தி…….வசந்தி……..” என்று பலமுறை கூப்பாடு போட்டாள். ஏதோ ஓர் உச்சகட்ட ஒலி வசந்தியின் காதில் புகுந்து எறும்பு ஊர்வதைப் போலத் தொந்தரவு செய்ய
“என்னங்கத்த” என்றாள் பேச முடியாத குரலில்.
“வந்துட்டாங்களாட்டம் இருக்குது பாரு” என்று படபடப்போடு சொன்னாள்.
வெளியே வந்தாள் வசந்தி. வசந்தியோடு கடைக்குட்டியும் வந்தாள்.
காரிலிருந்து நான்குபேர் இறங்கி நின்றனர். அவர்களில் செம்பட்டைத் தலைகொண்ட ஒருவன் மட்டும் வசந்தியிடம் வந்து இவன் பெயரைச் சொல்லிக் கேட்டான்.
“உள்ளதான் இருக்காப்ல” என்று கடைக்குட்டியைக் காலுக்கிடையில் அழுத்தி சத்தம் வெளியே கேட்காத வண்ணம் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
“கவலைப்படாத நாங்களும் இவர மாதிரி இருந்தவங்கதான். எல்லாம் சரியாய்ப் போயிடும்” என்று சாதாரணமாய்ச் சொன்னான். ஆனாலும் வசந்திக்கு அதுவே தெய்வ வாக்காய்த் தோன்றியது. நகர்ந்து நின்றாள்.
பேசியவன் குரல் கேட்டு அவள் “சாமி எம்பையன எப்படியாவதும்………” என்று குரல் எடுத்தாள் சம்பூரணம்.
“அம்மா, சத்தம் போடாதீங்க. நீங்க தூரப் போயிருங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அவனைக் கூப்பிடச் சொன்னார்கள்.
“ஏங்க உங்களப் பார்க்க யாரோ கார்ல வந்துருக்காங்க. கொஞ்சம் வாங்க. ஏதோ பேசணுமாம்” என்று அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னாள். அவன் எழுந்திருக்க முடியாமல் எழுந்து வேண்டா வெறுப்பாக வெளியே வந்தான். நான்கு பேரும் காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காரின் அருகிலேயே நின்றனர். அவன் காரின் அருகில் வந்ததும் ஆளுக்கொரு பக்கமாக ஒருவன் தள்ள ஒருவன் இழுத்தான். அவனின் கூப்பாட்டு சத்தத்தோடு காரின் கதவுகள் சாத்தும் சத்தம்தான் கேட்டது. வண்டி போனதே தெரியவில்லை.