சந்திப்பு : சோ.விஜயகுமார், அனாமிகா
1 கலை இலக்கிய குடும்பப் பின்னணி கொண்டவர் நீங்கள். உங்களின் இளமைக்கால இலக்கிய வாதிகளில் மறக்க முடியாதவர் யார்?
புதுச்சேரியில் வெள்ளை நகரம் என்று பகுதியில் என் பாட்டி வீடு இருந்தது. கடலோரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வாழ்ந்த பகுதி அது. அரவிந்தர் ஆசிரமத்துக்கு இரண்டு வீதி தள்ளி கதவு எண் 12, பெல்கோம் வீதி வீட்டில்தான் நான் வளர்ந்தேன். அந்த வீட்டில் எங்கள் குடும்பத்தோடு இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ஒரு மாபெரும் ஆளுமை தங்கியிருந்தார். அவர்தான் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட பாரதி சீடர் “ரா.கனகலிங்கம்”. 1947இல் ”என் குருநாதர் பாரதியார்” என்று புத்தகம் எழுதி பி.ஸ்ரீயின் நவபாரதி பிரசுராலயம் மூலம் வெளியிட்டவர். அவர் நலிவடைந்த நிலையில், என் பாட்டி ஆதிலட்சுமி அம்மாளின் ஆதரவில் தன் துணைவியாருடன் எங்கள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார். இவரை என்னால் மறக்க முடிந்ததில்லை.
நான் சிறுவனாக இருந்தபோது மகாகவி பாரதியாரின் சீடர் கனகலிங்கம் தாத்தாவோடு விளையாடி இருக்கிறேன். கதைகள் சொல்லி கேட்டிருக்கிறேன். நான் வளரவளர சென்னையில் எங்களது வீட்டில் அவருக்குக் கடிதம் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமானேன்.
எலும்பும் தோலுமாய் இருந்த அவர் அழுக்காக இருந்து நான் பார்த்ததே இல்லை. காலையில் தூங்கி எழுந்து பார்த்தால் கனகலிங்கம் தாத்தா சுத்தமாக பளிச்சென்று உட்கார்ந்து இருப்பார். குளித்து முடித்து தூய வெள்ளைக் கதர் ஜிப்பாவும், வெள்ளை வெளேரென வேட்டியும், கண்ணாடியும் அணிந்து காணப்படுவார். அவரைத் தேடி யாராவது வந்துகொண்டே இருந்தார்கள். அதனால் கனகலிங்கம் தாத்தா சட்டை இல்லாமல் இருந்து பெரும்பாலும் நான் பார்த்ததே இல்லை. அவரது மனைவி அரசம்பாள் ஒரு கால் ஊனம் என்பதால் விந்தி விந்தி நடப்பார். கனகலிங்கம் தாத்தா எப்போதும் பாரதியார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபடி இருப்பார். சென்னை கலை கைவினைப் பள்ளியில் மாபெரும் சிற்பி தேவி பிரசாத் ராய் சௌதுரியிடம் ஓவியம் பயின்ற எனது தந்தை ஏ.பி. கஜேந்திரன், கனகலிங்கம் தாத்தாவின் எதிரில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார் ..
அண்மையில் பாரதி ஆய்வாளர் பேரா.ய.மணிகண்டன் என்னை ஒருநாள் கைபேசியில் அழைத்தார். ஆவணக் காப்பகத்தில் தனது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு ஒன்றை எனக்குக் காட்டினார். பாரதிதாசனார் தனது “குயில்” பத்திரிகையில் நலிவடைந்த பாரதி சீடருக்கு நிதியுதவி அளிக்குமாறு ஒரு அறிவிப்பைக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். காரணம் பாரதிதாசனாரின் அந்த அறிவிப்பில் எங்கள் வீட்டின் முகவரி இருந்தது. எங்கள் புதுச்சேரி வீட்டின் 12, பெல்கோம் வீதி முகவரியைப் பாரதிதாசனார் அதில் கொடுத்திருந்தார், அந்த முகவரிக்கு நிதியுதவி செய்யுமாறு பாரதியாரின் அன்பர்களுக்கு ”குயில்” இதழ் சார்பாக வேண்டுகோள் கொடுக்கப்பட்டிருந்தது. பழமையான அந்தக் குயில் பத்திரிகையின் அறிவிப்பு இன்றைக்கும் என் வசம் இருக்கிறது. ஆனால் நூறாண்டு பழமையான எங்களின் வீட்டை அண்மையில் இடித்து விட்டார்கள். நல்லவேளையாக ”இந்திரன் காலம்“ எனும் ஆவணப்படத்தில் அந்த வீடு படமாக்கப்பட்டு இருக்கிறது. நினைவுகளை யாரால் இடிக்கமுடியும்?
2 நீங்கள் ஏன் ஒரு முழுநேர எழுத்தாளர் ஆகாமல் வங்கியில் வேலைக்குப் போனீர்கள்?
அது ஒரு பெரிய கதை. சரி, சுருக்கமாகச் சொல்கிறேன். சின்ன வயதில் என்னைக் கவர்ந்த அழகான ஒரு இலக்கிய ஆளுமை கவிஞர் கம்பதாசன். கவர்ச்சிகரமான மனிதர். புகழ் பெற்ற கவிஞர். கண்ணதாசனுக்கு முன்னால் பிரபலமான திரைப்படப் பாடலாசிரியராக கொடிகட்டிப் பறந்தவர். சென்னைக்காரரான என் தந்தையின் நெருங்கிய நண்பர். இவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். சந்தனக் கலர் ஜிப்பா, பாகவதர் கிராப்பு, கூர்மையான மூக்கு. அவர் வீட்டுக்கு வந்து இருந்துவிட்டுப் போனாலே அந்த இடம் மணக்கும். அப்படி ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்தவர். தான் ஒரு சோஷலிஸ்ட் என்பதால் பணத்தை மதிக்கக் கூடாது என்பது அவரது வாதம். மது, மங்கையில் தீராத வேட்கை கொண்டவர். அத்தகைய வாழ்க்கையை கவிஞர் கண்ணதாசனே இவரிடம்தான் கற்றுக் கொண்டார் என்பார்கள்.
நான் எட்டாவது படிக்கும் சிறுவனாக இருந்தபோது ( பல ஆண்டுகள் கழித்து என் குடும்பம் போயஸ் கார்டன் பகுதியில் இருந்து கோடம்பாக்கம் வந்துவிட்ட பிறகு ) ஒருநாள் எங்கள் தெருவில் அழுக்கு வேட்டியும், முதுமையின் தள்ளாட்ட நடையுமாக கையில் கம்பு ஊன்றியபடி ஒருவர் போய்க் கொண்டிருந்தார். என் அப்பா பார்த்துப் பதறிவிட்டார். “டேய்… கம்பதாசன் போறான் …ஓடிப்போய் அழைத்து வா” என்று என்னிடம் சத்தம் போட்டார்.. நான் ஓடிப்போய் கம்பதாசனை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் அப்பாவும் அவரும் கட்டிப்பிடித்து அழுத காட்சியை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. நான் முழுநேர எழுத்தாளனாகப் போகாமல் வங்கியில் வேலைக்குப் போனதற்கு கம்பதாசனை நான் கடைசியாகப் பார்த்த காட்சியும்கூட ஒரு காரணம். அடிக்கடி அது என் கண் முன்னால் வந்துகொண்டே இருக்கிறது..
3 தொடக்கத்தில் “ஞானம்பாடி” எனும் பெயரில் மரபுக் கவிதை எழுதி வந்த நீங்கள் மொழிபெயர்ப்புக்கு எப்படி வந்தீர்கள்?
காலநதியில் விழுந்த துரும்பு கடலுக்கு எப்படி வருமோ அப்படித்தான் நான் மொழிபெயர்ப்புக்கு வந்தேன். எதையும் நான் திட்டமிட்டுச் செய்யவில்லை. வாசிப்பின் ஒரு துணைச் செயல்பாடாக மொழிபெயர்ப்பைச் செய்தேன்.
1969இல் எனக்கு 20 வயதிருக்கும்போது எங்கள் சென்னை வீட்டுக்கு அருகில், ஜெமினி ஸ்டுடியோவுக்கு எதிரில் அமெரிக்கன் சென்ட்டர் கட்டடம் கட்டத் தொடங்கினார்கள். நாங்கள் எல்லோரும் அதை வெறுத்தோம். அமெரிக்கன் சென்ட்டர் கட்டப்பட்டால் அழகிய கட்டடக்கலை கொண்ட புனித ஜியார்ஜ் தேவாலயம் மறைக்கப்பட்டுவிடும் என்று எங்களிடம் எங்கள் அப்பா சொல்லி வருந்தினார். ஒரு தேவாலயம் மறைந்து விடுமே என்று கவலைப்பட்ட என் தந்தை ஒரு மாபெரும் முருக பக்தர் என்பதுதான் வேடிக்கை. மத வெறுப்பு ஒரு அரசியலாக இன்றைக்கு வளர்க்கப்படுவதுபோல் அன்று இல்லை. என் அப்பா மவுண்ட்ரோடு தர்காவுக்கும் போவார். செயிண்ட் தெரேசா சர்ச்சுக்கும் போவார்.
ஒருவழியாக அமெரிக்கன் நூல்நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. எப்போடா என்று காத்திருந்த நான் உள்ளே சென்று பார்த்தேன். என் வாழ்க்கையில் ஏ.சி. என்பதை அங்குதான் முதல் முறையாகப் பார்த்தேன். கடல்போல ஆங்கில புத்தகங்கள் .. ரப்பர் மரத்தில் செய்த சில்லென்ற அருமையான மேசை நாற்காலிகள். கண்ணாடிச் சுவர்களுக்கு உள்ளே போகன் வில்லாச் செடிகள் பூத்திருந்தன. சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்து விட்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அமெரிக்கன் நூல்நிலையத்தில்தான் கிடப்பேன். எல்லாவற்றையும் படித்தேன். எழுபதுகளிலேயே Anthropology, ,, Ecology, Technological impact over culture போன்ற புதிய விஷயங்களை 20 வயது இளைஞனாக இருந்த எனக்கு அறிமுகப்படுத்தியது சென்னை அமெரிக்கன் நூலகம்தான். நூலக அங்கத்தினராவது இலவசம். ஒரே நேரத்தில் மூன்று நூல்கள் இலவசமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் இன்றைய இந்திரனை தொடக்கத்திலிருந்து செதுக்கி எடுத்தது அமெரிக்கன் நூலகம்தான்.
4 மொழிபெயர்ப்பு என்பது வாசிப்பின் துணைச் செயல்பாடு என்று சொன்னீர்களே. அப்படியென்றால் என்ன??
நான் தமிழ் வழியில் படித்தவன். இங்கிலீஷ் கொஞ்சம்தான் தெரியும். ஆனால் ஆங்கிலப் புத்தகங்கள் என்னைப் படிபடி என்று தூண்டின. என்ன செய்வது? பள்ளிப் பாடங்கள் படிப்பதைத் தள்ளி வைத்துவிட்டு அந்த புரியாத ஆங்கில நூல்களைப் படித்தேன். புரியாத கவிதைகளையும், கதைகளையும் பக்கத்தில் அகராதி வைத்துக் கொண்டு படித்தேன்.
புரியாதபோது தமிழில் மொழிபெயர்த்து எழுதிவைத்துப் படித்துப் புரிந்து கொள்வது என் வழக்கம்.. ஆங்கிலம் சரியாகத்தெரியாத ஒருவன் நூல்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்காகத்தான் நான் மொழிபெயர்ப்பின் பக்கம் வந்தேன். மற்றவர்களுக்காகவோ, பிரசுரம் செய்து பெயர் வாங்குவதற்காகவோ நான் மொழிபெயர்க்கவில்லை. மனம் கவர்ந்த எழுத்துகளை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டால் அவை எனக்கே எனக்குச் சொந்தமாகிவிட்டதுபோல ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால்தான் மொழிபெயர்த்தேன். இதைத்தான் மொழிபெயர்ப்பு வாசிப்பின் துணைச் செயல்பாடு என்று சொன்னேன்.
5 மொழிபெயர்ப்பாளர்கள் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டு நூல்களை மொழிபெயர்த்தால் நல்ல பணமும் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பின் மூலம் நீங்களும் பணம் சம்பாதித்தீர்களா?
காலணாகூட சம்பாதிக்கவில்லை. மொழிபெயர்ப்பு என்பது எனது முதல் காதல். நான் என் மனம் கவர்ந்த எழுத்தை மட்டும்தான் மொழிபெயர்ப்பேன். தமிழில் ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டுவருகிறோம் என்றால் தமிழ்ச் சமூகத்தை அது முன்னேற்ற வேண்டும் என்பது என் குறிக்கோள். பிறமொழி எழுத்து என்பதாலேயே குப்பைகளை மொழிபெயர்த்துக் கொண்டுவரக்கூடாது என்பது எனது தீர்மானமான கருத்து.
எண்பதுகளில் நான் ஆங்கிலத்தில் கலைவிமர்சனம் எழுதிக் கொண்டிருந்தபோது எனக்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த இயக்கத்தின் நிறுவனர் பக்தி வேதாந்த பிரபுபாதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டார்கள். போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் இஸ்கான் நிறுவனத்துக்கு தனது வீட்டை இலவசமாக கொடுத்திருந்தார். அந்த வீட்டில்தான் நான் அவர்களைச் சென்று சந்தித்தேன். நான் கேட்ட பணத்தைக் கொடுப்பதாகவும் , அமெரிக்காவில் இருக்கும் அவர்களது தலைமையகத்துக்குச் சென்று பக்தி வேதாந்த பிரபுபாதாவைச் சந்திக்க விமானச் செலவும் கொடுக்கிறோம் என்றார்கள். நான் அப்போதெல்லாம் வாழ்க்கை வரலாறுகளைத் தேடித்தேடி படித்து வந்தேன். எனவே அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்றேன். படித்துப் பார்த்தால் அவரது வாழ்க்கை நமப முடியாத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான புத்தகமாக் இருந்தது.
ஆனால் பக்தி வேதாந்த பிரபுபாதா அமெரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பர்களை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். உடனே நான் அந்த புத்தகத்தை மொழிபெயர்க்க முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் என்னை முட்டாள் என்று திட்டினார். எங்கேயோ யாரையோ அடிமைப்படுத்தினால் உனக்கென்ன? இவ்வளவு பணமும் அமெரிக்கப்பயணமும் யார் கொடுப்பார்கள் என்று கேட்டார்.. அப்படியும் நான் மறுத்து விட்டேன். இன்றுவரையிலும் நான் என் மனதைக் கவர்ந்த எழுத்துகளை மட்டுமே மொழிபெயர்த்து வருகிறேன். இதனால்தான் இந்த வயதிலும் நான் மகிச்சியோடு இருக்கிறேன்.
6 இளமையில் கலை இலக்கியம் குறித்த விமர்சனங்களின்மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு தோன்றியது?
இன்றும்கூட நான் ஒரு கவிஞனாக உணர்வதில் மகிழ்பவன்.. இளைஞனாக இருந்த காலத்தில் ஞானம்பாடி என்ற பெயரில் 17 ஆண்டுகளாக மரபுக் கவிதைகள் எழுதி வந்தேன். . காவடிச் சிந்துவிலிருந்து, எல்லாவகைப் பாவினங்களிலும் எழுதுவேன். புலவர் குழந்தையின் “யாப்பதிகாரம்” நூலைக் கரைத்துக் குடித்து இருந்தேன். அகில இந்திய வானொலியில் மெல்லிசைப் பகுதியில் பாடல்கள் எழுதியிருக்கிறேன். 20 வயது இளைஞனாக எனது மரபுக் கவிதைகள் பொன்னடியான் நடத்திய “முல்லைச்சரம்”, வா.மு.சேதுராமன் நடத்திய “தமிழ்ப் பணி”, மு. பரமசிவம் நடத்திய “கற்சிலை” முரசொலி அடியார் நடத்திய “நீட்டோலை”போன்ற இதழ்களில் வெளிவந்தன. “திருவடி மலர்கள்” எனும் மரபுக் கவிதைத்தொகுதி ஒன்றையும் வெளியீட்டிருக்கிறேன். ஆனால் எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். என்னை எழுத்தில் வழிகாட்டிய ப.இராஜேஸ்வரன் நான் எழுத முயற்சித்தால் கோபப்படுவார்.”முதலில் நிறைய படி….பிறகுதான் எழுத வேண்டும்” என்பார்.
அவர் எனக்கு ஒரு பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். ஒரு புத்தகம் படித்தவுடன் அதை எதிர்த்து எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று தேடி எடுத்து அதையும் படிக்க வேண்டும் என்று சொல்வார் ராஜேஸ்வரன். அண்ணாவின் ”கம்பரசம்” படித்தவுடன் அதை எதிர்த்து கு.பாலசுந்தர முதலியார் எழுதிய ”கம்பரச ஆராய்ச்சி” படிக்கச் சொல்வார். ம.பொ.சி எழுதிய” வீரபாண்டிய கட்டபொம்மன்” படித்தவுடன் அதை எதிர்த்து தமிழ்வாணன் எழுதிய “கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு” நூலைப் படிக்கச் சொல்வார். ஒருமுறை நான் அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய “இலக்கியக் கலை” நூலைப் படித்தவுடன் நான் ஒரு அ.ச.ஞானசம்பந்தன் போல இலக்கிய விமர்சகனாக வேண்டும் என்றுகூட ஆசைப்பட்டிருக்கிறேன். க.நா. சு , வெங்கட்சாமிநாதன் படித்தபோது புதிய செய்திகள் எனக்குக் கிடைத்தன. ஆனால் அவற்றில் தென்பட்ட ஒருதலைப் பட்சமான தீர்ப்புகள் எனக்கு சம்மதமாக இல்லை. தமிழ் சிறுபத்திரிகை விமர்சனப் பிரதேசத்தில் குறைந்தபட்ச அறிவு நேர்மைகூட இல்லை என்பது என்னை வாட்டியது. அப்போதுதான் அறிவுநேர்மையுடன் கூடிய விமர்சனங்களை எழுத வேண்டிய தேவை இருப்பதாக நான் உணர்ந்தேன்.
7 நீங்கள் மும்பையில் வாழ்ந்த காலங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
1976இல் வேலை நிமித்தமாக நான் மும்பைக்கு பணி மாறுதலாகிச் சென்றேன். என் வாழ்க்கையில் மும்பை மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மும்பைக்குச் சென்றபிறகு ”எக்கனாமிக் டைம்ஸ்” நாளிதழில் சோழமண்டல ஓவியர் கிராமத்து சிற்பி கே.எம் கோபால் பற்றி “Tantra his idium” எனும் கட்டுரை எழுதினேன். மும்பை எழுத்தாளர்களை எல்லாம் தேடித்தேடி சந்தித்தேன். நிசிம் எசிகீல் (Nissim Ezekiel) எனும் யூத எழுத்தாளரான இந்தோ-ஆங்கிலக் கவிஞரின் தொடர்பு எனக்குக் கிடைத்தது… வாரத்தில் இரண்டு நாளாவது அவரைச் சந்திக்கும் பழக்கத்தில் இருந்தேன். அவர் பேராசிரியராக இருந்த கல்லூரியில் அவரது உணவு இடைவேளைகளில் சென்று அவரைச் சந்தித்தேன்.
குங்குமம் வார இதழுக்காக நேர்காணல் செய்வதற்காக நண்பர் சலாவுதின் ( ஞானபானு ) மற்றும் நானும் புகழ்பெற்ற மலையாளக்கவி கமலாதாஸ் அவர்களைச் சென்று சந்தித்தோம். இதன் பிறகு கமலாதாஸை அடிக்கடி சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிறகு கீவ் பட்டேல், அருண்கோலாட்கர், திலீப் சித்ரே ஆகிய கவிஞர்களோடு நட்பு ஏற்படுத்திக் கொண்டேன். பெல்லார்ட் எஸ்டேட்டில் ஓரியண்ட்ஸ் லாங்மென் வெளியீட்டகத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த ப்ரியா அதர்க்கர் எனக்குப் பழக்கமானார். அவர் என்னுடைய ஆங்கிலக் கவிதைகள் அருண் கோலாட்கரின் கவிதைகள்போல இருப்பதாகச் சொல்லி பாராட்டினார். இதனால் உற்சாகமடைந்த நான் ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவனாக மாறினேன். தமிழில் எழுதுவதும் நின்றுபோய்விட்டது.. எனது ஆங்கிலக்கவிதைகளைத் தொகுத்து SYLLABLES OF SILENCE எனும் தொகுப்பைக் கொண்டு வந்தேன்.
மும்பை வாழ்க்கையில் திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன், நாவலாசிரியர் நாஞ்சில்நாடன் ஆகியோரின் நெருங்கிய நட்பு தற்காலத் தமிழ் இலக்கியத்தில் அப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்தது. நாஞ்சில்நாடன் தூண்டுதலில் நான் எழுதிய “ஒன்றும் ஒன்றும் பூஜ்ஜியம்” எனும் சிறுகதை திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் விருது பெற்றது.
மும்பை செல்வதற்கு முன்னால் நான் வாழ்ந்த அவுரங்காபாத் மூலமாக நான் அஜந்தா எல்லோராவுக்கு மாதத்தில் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் போய்வந்து அஜந்தா குகை ஓவியங்கள், எல்லோரா சிற்பங்கள் குறித்து எனது கலைவிமர்சன அறிவை வளர்த்துக் கொண்டேன். அங்கு வாழ்ந்தபோதுதான் தமிழகத்தில் யாருக்கும் அதிகம் தெரிந்திராத மராத்தி தலித் சிறுத்தைகள் இலக்கியவாதிகளின் நேரிடை பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் “தலித்” என்ற வார்த்தையைத் தமிழ்நாட்டில் யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது.
7 மும்பையிலிருந்து நீங்கள் சிவகங்கைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டபிறகு உங்களின் இலக்கிய வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்.?
சிவகங்கையில் கவிஞர் மீரா இருந்தார். அங்கு அவர் அகரம் எனும் ஒரு
பிரசுரத்தை நடத்தி வந்தார். அங்கு எனக்கு வேறுவேலையே கிடையாது.
காலை 6 மணிக்கு எல்லாம் அவரை ச்சந்திக்க சென்றுவிடுவேன். பிறகு வேலைக்குச் செல்வேன். நாங்கள் பேசிப்பேசி ”அன்னம் பிரைவேட் லிமிடெட்” என்னும் பெயரில் மீரா ஒரு பதிப்பகத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார்.. அப்போது மீரா மற்றும் அவரது நண்பர்களிடம் நான் பல ஆப்பிரிக்க கவிஞர்களைப் பற்றி அடிக்கடி பேசுவேன்.
இப்படி பேசிக்கொண்டேயிருந்தபோது அவர்கள், “ஏன் சார் இப்படியே சொல்லிக்கொண்டிருக்காமல் ஆப்பிரிக்கக் கவிதைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிதரலாம்தானே”! என்று கூறினார்கள். நான் “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” நூலை எழுதினேன்.
அப்போது ஞானம்பாடி என்னும் பெயர் எனக்கு பிடிக்கவில்லை. என்ன பெரிதாக ஞானத்தைப் பாடிவிட்டோம்? என எனக்குள் ஒரு கேள்வி. எனவே ஆங்கிலத்தில் எழுதியபோது பயன்படுத்திய இந்திரன் எனும் பெயரிலேயே அந்த நூலை வெளியிட்டேன். ”அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” எனும் தொகுப்பு இந்திரன் எனும் பெயரில் வெளிவந்தது.
9 “அன்னம் விடு தூது” இதழில் நீங்கள் என்ன பங்களித்தீர்கள்? அந்த அனுபவம் எத்தகையதாக இருந்தது?
கவிஞர் மீராவின் வீட்டில் மொட்டைமாடியில் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது ”என்ன சார் இது! இவ்வளவு காகிதக் கழிவுகள் குப்பையாகச் சேர்ந்திருக்கிறது, இந்த காகிதங்களைக்கொண்டு நாம் ஒரு விமர்சனப் பத்திரிகையைத் துவங்கலாமே” என விளையாட்டாகச் சொன்னேன். மறுநாள் அவர் உண்மையாகவே இதழுக்கான தலைப்போடு வந்தார். ”அன்னம் விடு தூது”. எனும் பெயரைத் தேர்ந்தெடுத்து இருந்தார்.
அன்னம் விடுதூதில் இதழில் விமர்சிக்கப்பட வேண்டிய புத்தகங்களை மீராவின் முகவரிக்கு இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒன்று அவருக்கு. மற்றொன்று எனக்கு. அவரும் இந்திரன் என்னும் பெயரில்தான் எழுதினார்.
அவர் முதலாம் இந்திரன். நான் இரண்டாம் இந்திரன் எனும் பெயரிலும் எழுதினோம். அட்டைப் படத்துக்கு உள்பக்கம் ’அக்கம்’ எனும் தலைப்பில் அவரும், கடைசி பக்கத்திற்கு முன்னால் ’பக்கம் எனும் பெயரில் நானும் ”அக்கம் -பக்கம்” எனும் தலைப்பில் எழுதினோம். எதிர்பார்த்ததைவிட அதிகமாக அன்னம் விடு தூது பரவலான வாசகர் வட்டத்தை பெற்றது.
10 இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள கவிதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
அப்பாவி மனிதர்களை வரலாறு எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது. “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” அப்போது பரவலான வாசகர் பரப்பைச் சென்றடைந்தது. அப்போதுதான் தோன்றியது. எங்கோ இருக்கும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களைப் பற்றி நாம் எழுதுகிறோமே, நமது பக்கத்தில் இருக்கும் மராத்திய, ஒரிய கவிஞர்களைப் பற்றி நாம் எழுதவில்லையே என்று. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தினால் போதாது. நாம் மொழிபெயர்த்து வைத்திருக்கும் இந்திய இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று “காற்றுக்குத் திசை இல்லை” எனும் நூலை எழுதினேன். மீரா தனது அன்னம் பதிப்பகம் மூலமாக அதனை வெளியிட்டார். பிறமொழி பிராந்திய கவிஞர்களின் கவிதைகளைத் தேடினால் இங்கு கிடைக்கப் பெறுவது நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகாடமி நூல்கள் மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களது அமைப்புக்கும் அரசுக்கும் சிக்கல் இல்லாத கவிதைகளையும் படைப்புகளையும்தான் பிரசுரிப்பார்கள். அது எப்படி சரியாக இருக்கும் என அவற்றை ஒதுக்கிவிட்டு எனது சுவையுணர்வுக்கு பொருந்தும் எழுத்தாளர்களை நான் தேர்வு செய்யத் தொடங்கினேன். விருது வாங்கியவன் மட்டும்தான் எழுத்தாளர் என்றால், போராட்ட இலக்கியத்தை கையில் எடுத்து அந்த இலக்கியத்திற்காக தன் உயிரை மாய்க்கிறானே அவன் எழுத்தாளன் இல்லையா? அவன்தான் என் எழுத்தாளன் என முடிவு செய்தேன். செரபண்ட ராஜு போன்ற எழுத்தாளர்களை எல்லாம் அவர்கள் எழுதியதற்காகவே சுட்டுக் கொன்றார்கள். என்னுடைய ”காற்றுக்குத் திசை இல்லை” மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பில் பார்த்தீர்கள் என்றால் செரபண்ட ராஜுவின் கவிதைதான் முதல் கவிதையாக வைத்திருப்பேன்..
11 பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு படைப்புகள் வருவதைப்போல தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு படைப்புகள் செல்வது
ஏன் சிக்கலாக இருக்கிறது ?
இருபது வருடத்திற்கு முன்பு எனது குஜராத்தி நண்பரிடம் இதே கேள்வியைத்தான் நான் கேட்டேன். அப்போது அவர் சொன்னார்: “தமிழில் இருந்து ஆங்கிலத்தில் யாரேனும் மொழிபெயர்த்துத் தந்தால் அதைப் பிற மொழிகளில் எடுத்துச் செல்ல சிக்கலாக இருக்காது. ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றார். 20 வருடம் ஆயிற்று. இன்று நான் அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன் உங்களில் யாராவது நல்ல தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள். பிறகு அது தானாக பிற மொழிகளைச் சென்றடையும் .
12 இளமையில் சிறுபத்திரிகைகளுடான அறிமுகம் உங்களுக்கு எப்போது , எப்படி ஏற்பட்டது?
என் அத்தை மகன் ப. ராஜேஸ்வரன் சென்னை பிராவிடண்டு ஃபண்டு அலுவலகத்தில் உதவி கமிஷ்னராக இருந்தார். அவரது அலுவலகத்து செக்ஷனில் கிளார்க் ஒருவர் பெயர் நா.கிருஷ்ணமூர்த்தி என்ற நாகி. அவர் ஒரு நாள் தான் ஆசிரியராக இருந்து ஒரு பத்திரிகை நடத்துவதாகச் சொல்லி முதல் இதழை ராஜேஸ்வரனிடம் கொடுத்தார். அந்த இதழுக்குப் பெயர்– ”கசடதபற” –ஒரு வல்லின மாத ஏடு. இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது.ஒருநாள் நான் மாலையில் கட்டிலில் படுத்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஆபீசிலிருந்து வீட்டூக்கு வந்த ப. ராஜேஸ்வரன் என்னிடம், ”டேய் பாருடா இதெல்லாம் ஒரு பத்திரிகையாடா?” என்று ”கசடதபற” இதழை படுத்திருந்த என்மீது தூக்கி எறிந்தார்.
”கசடதபற” இதழை நான் எடுத்துப் படித்துப் பார்த்தேன் அது மிகவும் அருமையாக இருந்தது. ஏனென்றால் நான் அமெரிக்கன் சென்டரில் பார்த்த கவிஞர்களின் புத்தகங்களில் இடம்பெற்ற கவிதைகள் அந்த இதழில் மொழிபெயர்ப்பாகி வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ராஜேஸ்வரனுக்கு அது அவ்வளவு விருப்பமானதாக இல்லை. அன்று முதல் நான் “கசடதபற” இதழின் தீவிர வாசகன் ஆனேன்.
13 ஒரு மரபுக் கவிஞராக ”ஞானம்பாடி ” என்ற பெயரில் எழுதி வந்த உங்களுக்கு “கசடதபற“ கொடுத்த வாசிப்பு அனுபவத்தைச் சொல்லுங்கள்?
‘வாசன் மகனுக்கென்றால் மட்டும்
அச்சுப் பொறிகள் அடிக்குமோ ?
முத்துச்சாமி போன்றவர்கள் சொன்னால்
மாட்டேனென்று மறுக்குமோ ‘
என்கிற ஞானக்கூத்தனின் வரிகள் மறக்க முடியாதவை.. பெரிய ஜனரஞ்சக இதழான ஆனந்த விகடனுக்கு எதிரான ஒரு இயக்கம்போல மீசை முறுக்கி நின்றது.
கையில் கத்தியோடும், கேடயத்தோடும் நிற்கும் கசடதபற முத்திரையில் இருந்த போர்வீரன் சித்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நானே படம் வரைபவனாக இருந்த எனக்கு கே.எம்.ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன் , தட்சிணாமூர்த்தி போன்ற நவீன ஓவியர்களின் படைப்புகளுடன் கசடபதற இதழின் வடிவமைப்பு புதுமையோ புதுமை என கத்த வேண்டும்போல் இருந்தது.
நான் அதில் ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன்.. அது இந்திராபார்த்தசாரதி எழுதிய ”ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்” எனும் கட்டுரை. அந்தக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. முப்பது நூற்றாண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தனவோ அவை போன்ற மாற்றங்கள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட ஒரே நூற்றாண்டில் நடந்து இருக்கின்றன. இதனால் இப்போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் மனிதன் திணறுகிறான் என்று இந்திரா பார்த்தசாரதி அழகாக எழுதியிருந்தார். அது எனது பார்வையை விசாலப்படுத்தியது. நான் “கசடதபற” சிற்றிதழின் தீவிர வாசகன் ஆனேன். 3 ஆண்டுகளாக வெளிவந்த அத்தனை இதழ்களையும் ஒன்று விடாமல் படித்தேன்.
வெங்கட் சுவாமிநாதன் “கசடதபற”வில் “பத்மினியின் கலாவியக்தி” என்று ஓவியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “கலாவியக்தி” என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்தக் கட்டுரை புரிந்தது. நான் ஆங்கிலத்தில் படித்து மிகவும் மதிப்பு வைத்திருந்த இந்தியாவின் நவீன ஓவிய இயக்கத்தின் முன்னோடி ஓவியரான அம்ருதா ஷேர் கில், மேலை ஓவியர் பால் காகின் என்பவரைக் காப்பி அடித்து ஓவியம் செய்தவர் என்ற அளவுக்கு குற்றம் குறை சொல்லி வெங்கட்சாமிநாதன் எழுதி இருந்தார். பெரிய ஓவியர் அம்ரிதா ஷேர் கில் மீதே குறை சொல்லும் வெங்கட்சாமிநாதன் பெரிய ஆளாகத்தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். அம்ருதா ஷேர்கில் மீது குறை சொன்ன அதே கையோடு வெங்கட்சாமிநாதன் இளம் வயதிலேயே அகால மரணமடைந்த பத்மினி எனும் சராசரி ஓவியர் பற்றி ”ஆகா.. ஓகோ” என்று உயர்வாக எழுதியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சின்னப் பையனான எனக்கு எங்கோ இடித்தது. நான் பத்மினியின் ஓவியங்களைப் பார்த்து இருக்கிறேன். நல்ல ஓவியங்கள்தான். ஆனால் வெ.சா தூக்கி வைக்கும் அளவுக்குக் கிடையாது. அப்போதுதான் வெங்கட்சாமிநாதன் என்பவர் தனக்கு வேண்டியவர்களைத் தகுதி இல்லையென்றாலும் தூக்கி வைத்துப் பேசி , வேண்டாதவர்களை மட்டம் தட்டுபவர் என்று புரிந்து கொண்டேன்.
14 அப்படியானால் உங்களுக்கு “கசடதபற” பற்றி எதிர்ப்புணர்ச்சி இருந்ததா?
நான் எதைப் படித்தாலும் அதனோடு விவாதம் புரிந்துகொண்டே படிக்கும் பழக்கம் உள்ளவன். அதே நேரத்தில் மிகவும் திறந்த மனம் கொண்டவனாக இருந்ததால் ”கசடதபற” விரும்பி வாசித்தேன். விமர்சனங்களும் இருந்தன. .
இருபது வயது இளைஞனுக்கு ”கசடதபற” இலக்கிய ரசனை வெளியில் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. கலை இலக்கிய முயற்சிகள் வெளிநாடுகளில் நடப்பது போல் இங்கு எதுவும் நடக்காதா என்று காத்திருந்த எனக்கு அது மகிழ்ச்சி அளித்தது. நான் இளைஞனாக இருந்தாலும் சின்னவயதிலேயே மரபார்ந்த எல்லா புத்தகங்களையும் வாசித்த ஒருவனாக இருந்தேன். அதே நேரத்தில் அமெரிக்க நூலகத்தில் பல ஆங்கில புத்தகங்களைத் தேடிப் படித்தவனாகவும் இருந்தேன். ”கசடதபற”காரர்களைவிட அமெரிக்க நூலகம், பிரிட்டீஷ் கவுன்சில், மாக்ஸ்முல்லர் பவன், அல்லையன்ஸ் பிரான்சே ஆகியவற்றில் அலைந்திருக்கிறேன். எனவே எந்தத் துவேஷமும் இல்லாமல் எனது கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தேன்.
எனக்கு முதன் முதலில் அறிமுகமான சிறுபத்திரிக்கை என்றால் அது ”கசடதபற” தான். அதற்கு முன்பாக சிறு பத்திரிக்கைகளில் ”எழுத்து” உட்பட எதுவுமே நான் படித்தது கிடையாது. அதன் பிறகுதான் எழுத்து, ழ, நடை, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகைகளைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன்..
”கசடதபற” இதழில் பாலகுமாரன், வெங்கட் சுவாமிநாதன் ஆகியவர்களை வாசித்துவிட்டு திரும்பவும் அமெரிக்கன் லைப்ரரிக்குச்செல்கிறேன் . அங்கே எர்னஸ்ட் ஹெமிங்வே, ,எஸ்ரா பவுண்டு,, ஈ.ஈ. கம்மிங்க்ஸ் ஆகிய வெள்ளைக்கார எழுத்தாளர்களின் எழுத்துகள் எந்த ஷெல்ஃபில் வைக்கப்படிருந்தனவோ , அதே ஷெல்ஃபில்தான் லாங்ஸ்டன் ஹியூக்ஸ் , அர்ணா பான்டெம்ப்ஸ் , கவுண்டி கல்லன், ரேல்ஃப் எல்லீசன் ஆகிய கருப்பின எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்… அவர்களையும் நான் எடுத்துப் படிக்கிறேன். வெள்ளைக்கார எழுத்தாளர்களுக்குச் சமதையாகவும், அவர்களைவிட சிறப்பாகவும்கூட கருப்பின எழுத்தாளர்களும் எழுதுவதாக எனக்குத் தோன்றியது.. ஆனால் இந்த கருப்பின இலக்கியவாதிகள் யாரும் “கசடதபற”வில் மொழிபெயர்ப்பாகி வருவதில்லை. அது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. ஒரு வல்லின மாத ஏடு என்று தன்னை சொல்லிக்கொண்டு, வாளும், கேடயமும்கொண்ட மீசை முறுக்கிய ஒரு வீரனின் படத்தை முத்திரையாகக் கொண்டிருந்த ஒரு பத்திரிகை, ஏன் ஆப்ரோ-அமெரிக்க கருப்பு எழுத்துகளைப் பிரசுரிப்பதில்லை? ஜெனே எனும் பிரெஞ்சு சிறைவாசியை புனித ஜெனே என்று கொண்டாடும் இதழ் ஏன் கருப்பு எழுத்துக்களை வெளியிடுவதில்லை?
எனது இளம் மனதின் குரலுக்கு பதில் தேடி நான் அலைந்தேன். இதில் ஏதோ சூது இருக்குமோ ? என்கிற கேள்வியும் எழுந்தது. மேலும் ”கசடதபற” சிறுபத்திரிகைக்காரர்களை நான் தேடி அலையும்போது “பதி” என்ற ஒருவர் அமெரிக்கன் சென்டரிலேயே வேலை செய்வதாக தெரிய வந்தது. அவரும் சிலவற்றைக் ”கசடதபற” வில் எழுதியிருக்கிறார். . அவர் மொழிபெயர்த்துக் கொடுக்கும் கவிதைகளைவிட கருப்பினக் கவிஞர்களான அலைஸ் வாக்கர், மாயா ஏஞ்சலோ , லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், போன்ற கருப்புக் கவிஞர்கள் எழுதுவது சிறப்பாக இருந்தாலும் அவர்களை ஏன் இந்த பதி மொழிபெயர்ப்பதில்லை என்கிற கேள்வி எனக்கு எழுந்தது..
15 அப்படியானால் தமிழில் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தை உயர்சாதியினரின் ஒரு இயக்கம்தான் என்று சொல்லும் ஒரு விமர்சனத்தை நீங்கள் முன்வைக்கிறீர்களா?
ஒருவகியில் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.(சிரிக்கிறார்). சிறுபத்திரிகையில் ஒரு சநாதன ”எலைட் ” மனப்பான்மை இருப்பதை நான் கவனிக்கிறேன். தமிழ்நாட்டில் சநாதனத்தை எதிர்த்துப் புறப்பட்ட திராவிட இயக்கத்தை அரசியல் தளத்தில் சந்திக்க முடியாதவர்கள் நவீனத்துவத்தின் பெயரால் சிறுபத்திரிகை எழுத்துக்களின் மூலமாக திராவிட சிந்தனையை மறைமுகமாக எதிர்த்தார்கள் என்று எனக்குப் புரிந்தது.சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்திலிருந்து சிறுபத்திரிகை என்பது சநாதனத்தை அரசியல் கலவாத தூய இலக்கியம் என்ற பெயரில் வினியோகம் செய்து வருகிறது.. அதற்கு நான் “வட்டார நவீனத்துவம்“ (Regional modernisam) என்று ஒரு செல்லப் பெயர் கொடுத்திருக்கிறேன் .
பெரியார் இயக்கத்தினால் மெல்லினங்களாக ஆக்கப்பட்டதாக தங்களை உணரத் தொடங்கிய உயர்வகுப்பினர், சுயபச்சாதாபத்தை மாற்ற, தங்களை வல்லினம் என்று சொல்லிக் கொண்டனர். உண்மையில் அவர்கள் வாசன் மகனை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு திராவிட இயக்கத்தைத்தான் எதிர்த்தார்கள்.
16 என்னது? வட்டார நவீனத்துவமா? அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்?
மேலை நாட்டிலிருந்து நவீனத்துவம் இந்தியாவுக்குள் பிரிட்டீஷ்காரர்கள் , பிரெஞ்சுக்காரர்கள் மூலம் நுழைந்தது. அப்போது நவீனத்துவம் என்பது இந்தியா முழுவதுக்கும் பொதுவான ஒரு நவீனத்துவமாக (Pan- Indian Modernism) இங்கு நுழையவில்லை. பல்வேறு, மொழியும் பண்பாடும் கொண்ட இந்திய மண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு நவீனத்துவத்தில் தங்களுக்குத் தேவைப்படும் பண்பாட்டுக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்து அதனை ஏற்றுக்கொண்டது.
அப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனை பெரியார், அண்ணா, கலைஞர் மூலமாக முன்னெடுக்கப்பட்டபோது சநாதன சக்திகளால் அதை வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. எனவே சநாதன சக்திகள் நவீன இலக்கியம், நவீன கலை எனும் பெயரால் திராவிட சிந்தனையையும், மார்க்சிய சிந்தனையையும் எதிர்கொண்டன. இலக்கியத்தரமான தமிழ் எழுத்து என்பது அரசியல் கலக்காததாக தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பது இன்றைய முக்கிய இலக்கியக் கோட்பாடாக வைக்கப்பட்டது. இந்து மதம் எந்தத் தூய்மை வாதத்தை முன்வைத்து மனிதர்களிடம் மேல், கீழ் என்பதைக் கற்பித்ததோ அதே தூய்மைவாதத்தை இலக்கியத்திலும் கொண்டு வந்தார்கள் சநாதனவாதிகள்.. கடைசி மனிதனைத்தொட வேண்டும் என்று நினைக்கும் இலக்கியம் ஜனரஞ்சகத்தன்மை கொண்டது என்றும் அது கலை நேர்த்தி அற்றது என்றும் இலக்கியத்திற்கு ஒரு மேட்டுக்குடி மனப்பான்மையை கட்டமைத்தார்கள் சிறுபத்திரிகைக்காரர்கள்.
17 சிறுபத்திரிகை இயக்கம் முன் வைத்த முக்கிய கோட்பாடுகள் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்.?
ஜனரஞ்சகம் என்பது கேவலமானது என்பதைத்தான் சிறுபத்திரிகை இயக்கம் முன்வைத்தது என்பது எனது அபிப்ராயம். முதல் தலைமுறையாகப் படித்து படைப்பிலக்கியம் செய்தவர்களை “ஜனரஞ்சகம்” என்று முத்திரை குத்தித் தள்ளி வைத்தது மேட்டுக்குடி. ”ஜனரஞ்சகம்” என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக முன் வைத்ததில் சுந்தர ராமசாமிக்கு நிறைய பங்குண்டு. இன்றைக்கும் இணையத்தில் போய்ப் பாருங்கள். ”கசடதபற” இதழ்களை வேலை மெனக்கெட்டு தேடித்தொகுத்து டிஜிட்டல் ஆவணமாக்கிய விமலாதித்த மாமல்லன் என்ன சொல்கிறார் என்று: விமலாதித்த மாமல்லன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர்.
”வெகுஜன கலாச்சாரத்திற்கு எதிரான கலைக் குரல் கலகக் குரல் இது என்பதற்கு இதன் பக்கங்களே சாட்சி” என்று எழுதுகிறார்..
”கசடதபற” வெளிப்படையாகவே இலக்கியத்தை வெகுஜனத்துக்கு எதிராக நிறுத்தியது எனக்கு உவப்பாக இல்லை. எழுத்தின் இறுதி லட்சியம் கடைசி மனிதனைத் தொடுவதுதான் என்று நம்புகிறவன் நான். பெண்களும், சூத்திரர்களும் எழுத்தின் பக்கமே வரக்கூடாது என்று பேசிய சநாதனத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒரு கட்டத்தில் பெண்கள் எழுதுவது நவீன எழுத்தாக இருந்தாலும் அதை விரும்பவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கும் பெண்ணிய எழுத்தை கேலி பேசும் பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இதனால் சிறுபத்திரிகைக் கலாசாரம் என்பது வெகுஜனக் கலாசாரத்துக்கு எதிராகக் கட்டமைக்கப்படுவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை வேறுவிதமாகச் சொல்வதெனில் சாமான்யர்களான பொதுமக்களுக்கு எதிராகக் கட்டப்பட்ட ஒரு உயர்ஜாதி மனோபாவம்தான் சிறுபத்திரிகை.
”ஜனரஞ்சகம்” என்ற முத்திரை குத்தி திராவிட இலக்கியம், மார்க்சிய இலக்கியம் ஆகியவை உயர்ந்த இலக்கியம் அல்ல என்று எளிதாகப் புறம் தள்ள சிறுபத்திகைகளால் முடிந்தது. எழுத்து, நடை, கசடதபற, ழ போன்ற சிறுபத்திரிகைகள் வேதாந்த விசாரங்களையே நவீன கவிதைகளாக எழுதினார்கள். அன்றைய பிச்சமூர்த்தியிலிருந்து இன்றைய தேவதேவன்வரை இதுதான் நடக்கிறது. எனவே சநாதனத்தின் இலக்கிய மாறுவேடம்தான் சிறுபத்திரிகை. ஆனால் அது இனியும் தொடராது. டிஜிட்டல் யுகத்தில் சிறுபத்திரிகை என்கிற சநாதனம் இனியும் எடுபடாது. டிஜிட்டல் யுகம் போலிகளை எளிதில் இனம் காட்டி விடும்.
18 டிஜிட்டல் யுகம் போலிகளை எளிதில் இனம் காட்டிவிடும் என்று எப்படி சொல்கிறீர்கள்….விளக்க முடியுமா?
எல்லோருக்கும் தெரிந்ததுதான். உங்களுக்காக ஒரு உதாரணம் சொல்கிறேன். எழுத்தின் மாமேதையாக சிறுபத்திரிகை காலத்தில் கட்டமைக்கப்பட்ட மௌனி என்று சொன்னவுடன் எல்லோரும் அவர் எழுதியதாக ஒரு மகா வாக்கியத்தைச் சொல்வார்கள். அது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? என்னும் அற்புதமான வரிதான்..சரிதானா? (சிரிக்கிறார் ). உண்மையில் சொல்லப்போனால் மௌனியின் மகாவாக்கியம் என்று தமிழர்களால் சிலாகிக்கப்படும் இந்த வாசகம் அவரது சொந்த வாக்கியம் அல்ல. “Life’s but a walking shadow” எனும் சேக்ஷ்பியரிடமிருந்து கடன் வாங்கி எழுதப்பட்ட வாக்கியம்தான் இது. ”மேக்பத்” எனும் சேக்ஷ்பியரின் நாடகக் கதாபாத்திரம் மனம் வருந்தி பேசும்போது “வாழ்க்கை என்பது நடமாடும் நிழலன்றி வேறில்லை” என்று பேசுகிறது. ஷேக்ஷ்பியருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பெயரை நாம் மௌனிக்குக் கொடுத்து வைந்திருக்கிறோம்.
இணையம் என்ற ஒன்று இல்லாத காலத்தில் ஷேக்ஷ்பியர் எழுதிய வாசகத்தைத் தன்னுடைய வாசகம்போல் மௌனி எழுதியிருக்கலாம். ஆனால் டிஜிட்டல் யுகத்தில் எல்லோருடைய நிஜமான கைசரக்கு எது என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதைத்தான் சொன்னேன்..
20 திராவிட இலக்கியம், மார்க்சிய இலக்கியம் , சிறுபத்திரிகை இலக்கியம் ஆகியவற்றை ஒரு கலை இலக்கிய விமர்சகர் என்ற வகையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீங்கள் சொன்ன திராவிட இலக்கியம், மார்க்சிய இல்லகியம், சிறுபத்திரிகை இலக்கியம் ஆகியவை கட்டி எழுப்பிய நவீனத்துவம் என்கிற பார்வையில் நான் யோசித்துப் பார்க்கிறேன்.
சிறுபத்திரிகைகள் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு மேட்டுக்குடி அரசியல் இருந்தது. அது சாதியக் கட்டுமானத்தை வாழ வைக்கும் உள்நோக்கம் கொண்டிருந்தது. ஆனால் அதுதான் தமிழின் நவீன சிந்தனை வெளிப்பாடு என்று எல்லோரையும் நம்ப வைத்தது. நவீனத்துவம் என்ற பெயரில் சநாதனத்தையே மறுகட்டுமானம் செய்தது.
முதல் தலைமுறையில் படித்து மேலே வந்த பிராமணரல்லாதவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. மரபில் மிகச் சிறப்பாக எழுதி வந்த பேராசிரியர்கள் க.நா.சு என்கிற மாபெரும் வாசிப்பாளரைப் பார்த்து பயந்தார்கள். க.நா.சு டெல்லியிலிருந்து வந்தார். க.நா.சு போட்ட இலக்கியவாதிகள் பட்டியலில் இடம்பிடிக்க எழுத்தாளர்கள் ரகசியமாக ஆசைப்பட்டார்கள்.. மிகப்பெரிய மரபுக் கவிஞர்களாக இருந்த அப்துல் ரகுமான், மேத்தா, தமிழன்பன், சிற்பி போன்றவர்கள் தாங்களும் சிறுபத்திரிகைக்காரர்கள்போல நவீன மயப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எனவே திராவிட சிந்தனையும், மார்க்சிய சிந்தனையும் கொண்ட படைப்பாளிகள் ஓசை நயத்துடன் எழுதி வந்ததை விட்டுத் துறந்து புதுக்கவிதை வாகனத்தில் ஏறினார்கள்.
முகம்மது மேத்தா மு.மேத்தா ஆனார். பாலசுப்பிரமணியம் சிற்பி ஆனார். அபிபுல்லா அபி ஆனார். ”எழுத்து” சிறுபத்திரிகை மரபினர் இதன்மூலமாகத் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பினார்கள். ஆனால் பிராமண இலக்கியவதிகள் கவனமாக இவர்களை அரசியல் பேசும் பேராசிரியர்கள் என்று சொல்லி, தூய இலக்கியத்தின் பெயரால் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க மறுத்தனர். சாதி அமைப்பில் தூய்மை வாதம் என்பதை முன் வைத்து எப்படி சாதி வேறுபாடுகளை வாழ வைத்தார்களோ அதே தூய்மை வாதத்தை இலக்கியத்திலும் முன் வைத்து அரசியலற்ற எழுத்தே நவீன எழுத்து என்று நம்ப வைத்தார்கள்.
21 தமிழ் நவீன இலக்கிய இயக்கம் மேலை நாட்டுச் சூரியனிடமிருந்து ஒளி வாங்கும் தேய்பிறை நிலவு ” என்று நீங்கள் சொல்வதைப் பற்றி விளக்குங்கள் ?
நவீன சிந்தனை என வரும்போது டி.எஸ்.எலியட், வால்ட் விட்மேன் போன்ற எழுத்தாளர்களுக்கு இந்திய மரபின்மீது சாய்வு இருந்தது . அவர்களுடைய நவீன சிந்தனையை எடுத்துக்கொண்டு இங்கு இந்திய வைதீக தத்துவ மரபினை பிராமணர்கள் இங்கே கட்டமைக்கிறார்கள். அந்த தத்துவ மரபைத்தான் சி.சு.செல்லப்பா எழுத்து என்னும் இலக்கிய மரபாக இங்கே அமைக்கிறார். நான் அவர்மீது இதற்காக குற்றச்சாட்டு வைக்கிறேன். இங்கே நவீன கவிதையின் முதல் கவிஞர் என சொல்லப்படக்கூடிய ந.பிச்சமூர்த்தி யார்? அவர் ஒரு கோயிலின் தர்மகர்த்தா. அப்போது அவருடைய சிந்தனைகள் சனாதனமாகத்தானே இருக்கும். அவர் கற்றறிந்த வேதாந்த தத்துவங்களை இங்கே மொழியாக்கம் செய்ததுபோல், ”நான் யார்? எனது இருப்பு யாது?” என கேள்விகளை கவிதையாக எழுதும்போது அது நவீன கவிதை என இங்கே அடையாளப்படுத்தப்படுகிறது. இவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால், வால்ட் விட்மேனின் விதிகளைப் பின்பற்றிதான் நவீன கவிதைகளை அமைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் வாழ்வின் ஜனநாயகத்தைத்தானே விட்மேன் முதலில் குறிப்பிடுகிறான். இவர்கள் ஏன் அந்த ஜனநாயகத்தை மட்டும் விட்டு விடுகிறார்கள்.? அப்போது தமிழுக்கு அழைத்துவரப்பட்ட விட்மன் ஒரு காயடிக்கப்பட்ட எழுத்தாளனாக, சனாதனம் என்னும் கருதுகோளை மட்டும் நிலைநிறுத்தும் எழுத்தாளனாக தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறான். இதை மனதில்கொண்டு தான் 25 வருடங்களுக்கு முன்னால் ”கவிதையின் அரசியல்” எனும் ஒரு நூலை எழுதினேன்.
22 அப்படிப் பார்த்தால் திராவிட சிந்தனையும், மார்க்சிய சிந்தனையும் நன்கு வேறூன்றிய தமிழ்நாட்டில் சநாதன சிறுபத்திரிகைகள் எப்படி இங்கு வளர்ந்தன?
திராவிட இயக்கங்களின் சந்தர்ப்பவாதம்தான் சிறு பத்திரிகைகளை வளர விட்டது. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் சந்தர்ப்பவாதப் போக்குகளாலும் எழுத்தாளர்களின் நேர்மையின்மையினாலும்தான் திராவிட இயக்கமும் கம்யூனிஸ இயக்கமும் இங்கு தோற்றது. பெட்ரன்ட் ரஸ்ஸல் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் பலமுறை வாசித்துள்ளேன். அவருடைய 18 வயதில் அவருடைய தாத்தாவுடைய சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு தரப்பட்டபோது அவர் அதை நேர்மையாக மறுத்து விடுகிறார். என் தாத்தா தனது உயிலில் என் பேரன் ஒரு நல்ல கிறிஸ்தவனாக வளர்ந்த பிறகு எனது சொத்துகள் அவனைச் சேரும் எனக் குறிப்பிட்டுள்ளார். நான் கிறிஸ்தவன் அல்ல, நாத்திகவாதி. எனவே எனக்கு இந்த சொத்துக்கள் முறைப்படி சேராது என்று ஒரு பதினெட்டு வயது சிறுவனாக ரஸ்ஸல் மறுக்கிறார். ஒரு அறிவு ஜீவித நேர்மை (intelectual integrity) என்பது இதுதான். இங்கிருந்தவர்கள் வலுவான ஓசை நயம் கொண்ட கவிதை மொழியைக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் அதை விட்டுவிட்டு நாங்கள் நவீன இலக்கியத்திற்கு வந்துவிட்டோம் என்று அறிவித்தார்கள். மௌனி, ந.பிச்சமூர்த்தி போன்றவர்கள் இங்கே இலக்கியத்தின் தரச் சான்றிதழ் தருபவர்கள் போன்ற ஒரு மாயைகட்டமைக்கப்பட்டது. தூய கலை இலக்கியவாதிகள் என்று தங்களை ஸ்தாபித்துக் கொண்டவர்களிடம் சான்றிதழ் வாங்கும் ஆசை இவர்களுக்கு இருந்திருக்குமோ என்னவோ. சநாதன சக்திகள் ஏற்றுக் கொண்ட ஒரே எழுத்தாளர் சா.கந்தசாமிதான். ஏனென்றால் சா.கந்தசாமி க.நா.சு, க.நா.சு என தன் வாழ்நாள் முழுதும் ஜெபித்துக் கொண்டே இருந்தார். ஆனால் சா.கந்தசாமி இறந்தபோது இந்த சிறுபத்திரிக்கையைச் சார்ந்த யாரும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுத முன் வரவில்லையே. ஏன்? இது ஒரு மாபெரும் அரசியல்.. இந்த மேட்டிமைத்தனவாதிகள் வெகுஜன இலக்கியம் என திராவிட இலக்கியத்தையும், மார்க்சிய இலக்கியத்தையும் குற்றம் சாட்டுகிறார்கள்.
அப்படிப் பார்க்கிறபோது தமிழ் இலக்கியத்தில் வெகுஜன இலக்கியத்தின் பங்கு என்ன ? வெகுஜன இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் எல்லாம் யார் வரையறுத்த வார்த்தைகள். கடைசி மனிதனின் மனதையும் சென்று தொடுவதுதானே இலக்கியம். அப்படிக் கடைசி மனிதனையும் சென்று தொடும் இலக்கியம் உயர்வானது இல்லையா?
23 ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியப் பிரதியை தமிழில் உருவாக்கியதில் மிக முக்கியமான பங்கு உங்களுடையது. அந்தப் படைப்புகளின் தாக்கம் இப்போது எழுதுகிறவர்களிடம் இருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?
நிச்சயமாக. இதில் நான் பெரிதும் மகிழும் விஷயம் என்னவென்றால், நான் வானம்பாடியில் எழுதிய கவிஞன் அல்ல.. பிராமணர் அல்லாத முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எழுத வந்தபோது அவர்கள் என் எழுத்தை வாசித்து இருந்தார்கள். அது எனக்கு இன்றளவும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. இன்றும் அவர்களைத் தொடர்ந்து வரும் எழுத்தாளர்களும் வாசிக்கிறார்கள் என்பது இன்னமும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்பொழுது இருக்கும் பரவலான பிரபலமான எழுத்தாளர்களில், ஏன் கவிஞர் மனுஷ்ய புத்திரன்கூட: ”சார் உங்களுடைய மொழிபெயர்ப்புப் கவிதைகளைப் படித்துதான் என் மொழி உருவானது” என சொல்லியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவரது உயிர்மை பதிப்பகத்தில் எனது காற்றுக்கு திசைகள் இல்லை எனும் புத்தகத்தையும் அறைக்குள் அந்த ஆப்பிரிக்க வானத்தையும் அவர் கொண்டு வந்தார்.
நான் சொல்வதெல்லாம் எனக்கு அந்த எழுத்தைக் கொடுத்ததெல்லாம் மேற்குலகமேதைகள்தான். நான் செய்ததெல்லாம் அதை மொழிபெயர்த்து தமிழில் தந்தது மட்டுமே .
- இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்கு பிறகு லத்தின் அமெரிக்க இலக்கியம், சீன இலக்கியம், அரேபிய இலக்கியம், ஆப்ரிக்க இலக்கியம் போன்ற பல்வேறு இலக்கியங்கள் உருவாகுகின்றன. அவை மொழிபெயர்ப்பாகி இங்கு தமிழிலும் வந்துள்ளன. மொழிபெயர்ப்புப் படைப்புகள் நவீன தமிழ் இலக்கியத்தை உருவாக்குவதில் பங்கு வகித்துள்ளனவா ?
நிச்சயமாக. நவீன தமிழ் இலக்கியத்தை உருவாக்கியது மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்தான். நவீன இலக்கிய இயக்கம் என்பதே மொழிபெயர்ப்பாளர்களின் இயக்கம்தான். உதாரணமாக 1948இல் அதாவது நான் பிறந்த வருடத்தில் தமிழில் ஒரு புத்தகம் வருகிறது. எமர்சன் எழுதிய புத்தகமான ”விதியும் தன்னம்பிக்கையும்” புத்தகத்தின் மொழிபெயர்ப்பு அது. அதை மொழிபெயர்த்தவர் வி.ஆர்.எம்.செட்டியார். அதே வருடத்தில் ”உலக இலக்கியங்கள்” எனும் மாபெரும் தொகை நூலினைத் தமிழில் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் என்பவர் மொழிபெயர்க்கிறார். அவர் திராவிட அரசியல் பார்வை உள்ளவர். நவீன இயக்கத்தின் சிந்தனைகளை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கர்சாலைப் பற்றி பெரியார் பேசிக்கொண்டே இருந்தார். ரஸ்ஸலைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார். ”நான் ஏன்கிருத்துவன் அல்ல” எனும் புத்தகம் பெரியார் பதிப்பகத்தில்தான் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது . திராவிட இயக்கத்தில் இருந்த வி.பி. ஆசைத்தம்பி போன்றவர்கள் சாக்ரடீசைப் பற்றியும் பிளாட்டோவைப் பற்றியும் தமிழில் நூல்களை எழுதினார்கள்.
25 தற்போதைய தமிழ்க் கவிதைகள் உரையாடல் தன்மையை நோக்கியும் எளிமையை நோக்கியும் நகர்ந்து இருப்பது கவிதையின் தன்மையை நீர்த்துப்போகச் செய்கின்றதா?
நீர்த்துப்போதல் என்பதுகூட சனாதனிகள் உருவாக்கிய வார்த்தைதான்.
உதாரணமாக பாரதி ”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” என்னும் கவிதையில் இறுதிவரி என்ன எழுதுவது என தெரியாமல் ”தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என முடிக்கிறான். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? இறுகக்கட்டுதல், தளர்ச்சியாகக் கட்டுதல் எனும் எந்த வார்த்தையும் அவனிடம் கிடையாது. மொழியின் கொதிநிலையில் அப்படியே எழுதினேன் என பாரதியே பின்னர் பதிவு செய்கிறான். அதைப்போய் இறுக கட்டவில்லை தளர்வாக கட்டினான் என பாரதியை விமர்சிக்கக் கூடாது. மொழியை எந்தவிதமாகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் மொழி என்பது கருத்தைப் பகிரும் கருவி மட்டுமல்ல. மொழி எனபது பண்பாடு உணர்வுகள், அரசியல் என அனைத்தையும் பகிரக்கூடிய ஒன்று. சமகாலத்தின் மொழி உரையாடலின் மொழியாக இருப்பின் கவிதையும் அதை நோக்கி நகர்வதும் ஆரோக்கியமானதுதானே.
26 இத்தகைய எளிய, நேரடியான கவிதைகளில் உருவகமோ படிமமோ இல்லாத பட்சத்தில் அவற்றில் கவிதையின் சாரத்தை உருவாக்குவது எது?
என்னைப் பொறுத்தவரை ஒரு கவிதையின் சாரத்தை உருவாக்குவது அதன் உணர்வின் கொதிநிலைதான். ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் அந்த பெண்ணிற்கு ஒரு கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதை மிகமோசமாக இருக்கலாம். அதற்காக அந்த காதல் உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? அவனுக்கு தேவை மொழிப்பயர்ச்சிதான். ஆக மொழிப் பயிற்சி கை வரப்பெற்ற ஒரு கவிஞன், அவன் எழுதும் கவிதைகளில் வரிகள் அல்லது கவித்துவ சாரத்தை தன்னியல்பாக உருவாக்குகிறான். அவற்றை உருவாக்குவது அவனது இலக்கிய அறிவா என்றால் இல்லை. அவற்றை உருவாக்குவது சர்வநிச்சயமாக அவன் உணர்ச்சியின் கொதிநிலைதான். முன்பே சொன்னதுபோல பாரதியின் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்பது எந்த இலக்கண அறிவில் இருந்து வந்திருக்க முடியும்?
27 பின்னவீனத்துவ கவிதைகளில் சமீபமாக ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக நீங்கள் நம்புகிறீர்களா?
நான் நவீன தமிழ் ஓவியங்களையும் நவீன தமிழ் கவிதைகளையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஏனெனில் இரண்டும் ஒரேகாலத்தில் உருவாகிவந்தவை. ஆனால் நவீன ஓவியங்களை அடைய சில வாசல்களும் பல திறப்புகளும் இருந்தன. தமிழ்க் கவிதையில் படிமம், உருவகம், இறைச்சி ஆகிய அதனுடைய பாடுபொருள்களை அதாவது அதன் வரம்பினை அதுவே கொண்டிருந்ததால் தமிழ்க் கவிதை இன்னும் மறுவரையறை செய்யப்படவில்லை.. தற்கால கவிதைகளின் போக்கு, தற்கால கவிதைகள் என்னவாக இருக்க வேண்டும் மற்றும் நாளைய கவிதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை கவிதைகளைப் பற்றி இன்றைய இளைய கவிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
28 தமிழில் கவிதைகள் பற்றி அதிகம் எழுதப்படுகிறது ஆனால் கவித்துவம் பற்றி ஏன் எழுதப்படுவதில்லை?
இன்று கவிதைகளில் உள்ள பிரச்சனையே கவித்துவமான உணர்வுகள் என்று நாம் கருதுபவற்றை எழுதிக்கொண்டே போகிறோம். இப்படி எழுதப்படுபவை எல்லாம் கவிதையியல்பூர்வமான புரிதல் இல்லாத கவிதைகள். முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் நாம் படிக்கும் கவிதை எல்லாம் வடிவம் சார்ந்தது. அவற்றில் கவிதையியல் கிடையாது. அதைப்பற்றி எழுத அதன் அடிப்படைகள் தெரிதிருக்கவேண்டும்தானே… நாம் அதை தெரிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை என்பதே உண்மை.
- 2000திற்கு பிறகு தமிழ்க்கவிதையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததாக நீங்கள் நம்புகிறீர்கள் ?
மாற்றம் என்றால் அது விடுதலைதான். எதையும் எழுதலாம், எப்படியும்
எழுதலாம். அதுவும் கவிதையாக மாறும். அதைத்தான் எதிர்க் கவிதை சொல்கிறது. கவிதையினுடைய கல்யாண குணங்கள் என்று சொல்வது எல்லாம் இல்லாமல்போவதுதான் எதிர்க் கவிதை. அதனாலே நானும்கூட இப்போது எதிர்க் கவிதைகள் எழுதுகிறேன். எதிர்க் கவிதை என்று வந்தாலும் சில நேரங்களில் என்னுள் காவியத்தன்மை வெளிப்படுகிறது. ஏனெனில் அது மொழியியலில் கட்டப்பட்டுள்ளது உதாரணமாக ஒரு பெயிண்ட் பிரஷிலிருந்து எப்படி பெயிண்ட் வாசனை மாறாதோ அதேபோன்று இந்த மொழிக்குள் இன்னொரு மொழி உருவாக்கினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும்.
- கடந்த 20 வருடங்களாக சென்னையில் நடந்த பேரிடர்கள் குறித்து கவிதைகளாகவோ கதைகளாகவோ எந்த ஒரு நவீன படைப்பாகவும் பெரும்பாலும் ஏன் எழுதப்படவில்லை?
கவிதை என்பது அதையெல்லாம் பதிவு செய்யக்கூடிய கருவி இல்லை என்பதை காலங்காலமாக நாம் நம்புகிறோம். புறநானூற்றில்தான் நம் வரலாறு இருக்கிறது. கவிதை என்பது கருத்து சொல்வதாகவோ எச்சரிக்கை சொல்வதாகவோ வரலாற்றை சொல்வதாகவோ இருக்கக்கூடாது. இருந்தால் அது இலக்கிய தகுதியை இழந்து விடுகிறது என சொல்லி இருக்கிறார்கள். தூய இலக்கியம் என்ற கோட்பாடு வைத்தவர்கள் தமிழுக்கு செய்த மிகப்பெரிய நாசம் என்னவென்றால் நம்முடைய அன்றாட விஷயங்களை பதிவு செய்வதற்கு இடம் கொடுக்காமல் போனதே.
31.இப்போது இருக்கிற நவீன படைப்பாளிகளின் சமூக அரசியல் பிரக்ஞை பற்றி உங்களுடைய மதிப்பீடு என்னவாக இருக்கிறது ?
போஸ்ட்மார்டன் ப்ரோஸ் உள்ளது. போஸ்ட்மார்டன் ஷார்ட் ஸ்டோரிஸ் உள்ளது. எங்காவது போஸ்ட்மார்டன் போயட்ரி என்பதைப் பார்ப்பதுண்டா? இன்றைய கவிஞர்களுடைய மிகப்பெரிய சவாலாக இருப்பது இந்த டிஜிட்டல் யுகத்திற்கான ஒரு கவிதையை உருவாக்குவதுதான். மனுஷ்ய புத்திரன் போன்ற கவிஞர்கள் செய்வது அப்படியான கவிதைகளைத்தான். பேஸ்புக்கில் பதிவிடப்படும் கவிதைகள் கண நேரத்தில் பல மக்களை சென்றடைகிறது. அப்படியாக டிஜிட்டலில் பல கவிதைகள் வரவேண்டும். சமகால சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் யூடியூபில் இடம்பெறுமாறு உருவாக வேண்டும்.