காப்பியடிப்பது, தழுவல் குறித்த விவாதங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதில்லை. ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற சார்லி சாப்ளினின் ஒரே படத்தை வைத்து நாடோடி மன்னன், உத்தம புத்திரன், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்று பல படங்கள் எடுக்கப்பட்டன. அதே சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படத்தை அடிப்படையாக வைத்து ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பேரழகன்’ என்று ஏராளமான படங்கள் தமிழில் வெளிவந்தன. வேடிக்கை என்னவென்றால் இப்படி ‘சிட்டி லைட்ஸை’த் தழுவி எடுக்கப்பட்ட படமொன்றில் நடிகர் கார்த்திக் தொப்பி, மடித்துவிடப்பட்ட அரைக்கால் சட்டை என்று சாப்ளின் கெட்டப்பிலேயே இருப்பார். தமிழ்த்திரையுலகின் முக்கியமான ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் இந்த ‘காப்பிகேட்’ சர்ச்சையில் அதிகமும் அடிபட்டவர்கள். மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ் என்று இந்தப் பட்டியல் நீளமானது.

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் பாடலோ கதையோ காட்சிகளோ காப்பியடிக்கப்பட்டது என்பதை உலக சினிமாக்களைப் பார்க்கும் பழக்கம் கொண்ட சிலர் மட்டுமே அம்பலப்படுத்துவார்கள். ஆனால் இணையத் தொழில்நுட்பம் வளர்ந்ததற்குப் பிறகு ஒரு படத்தின் கதை, பாடல் மட்டுமல்ல, போஸ்டர் வடிவமைப்புக்கூட எங்கிருந்து ‘உருவப்பட்டது’ என்பது உடனுக்குடன் அம்பலப்படுத்தப்படுகிறது. இப்படி சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானவர் ஏ.ஆர்.ரகுமான்.

இதைக் காப்பி, தழுவல் என்ற வகைக்குள் மட்டும் அடக்கமுடியாது. அதையும் தாண்டிய பெரிய குற்றம்  என்ற வகையில்தான் சொல்ல முடியும். புகழ்பெற்ற இயக்குநர் ராம்கோபால் வர்மா ஒரு பேட்டியில் குறிப்பிட்ட விஷயம்தான் இந்தச் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பாலிவுட் இயக்குநர் சுபாஷ்கய் ‘யுவராஜா’ என்ற தன் படத்துக்கு இசையமைக்க ரகுமான் தாமதப்படுத்தியதாகவும், அதைக் கேட்கும் போதுதான் மணிரத்னத்தின் ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சய்யா சய்யா’ பாடலும் ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் ‘ஜெய்கோ’ பாடலும் பாடகர் சுக்விந்தர் சிங்கரால் இசையமைக்கப்பட்டது என்றும்
தெரியவந்ததாக ராம்கோபால் வர்மா குறிப்பிடுகிறார். ‘ஆஸ்கர் விருது பெற்ற பாடலே இன்னொருவரால் இசையமைக்கப்பட்டு ரகுமான் பெற்றது’ என்பதுதான் சர்ச்சையின் பரப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இந்தச் சர்ச்சை வெளியான சில நாட்களிலேயே சுக்விந்தர் சிங் தான் அந்தப் பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ராம்கோபால் வர்மாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதல் பல்வேறு பிரபலங்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக்கூறி ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். ஒருகாலத்தில் ‘சத்யா’ போன்ற படங்களின் மூலம்கவனம்பெற்ற ராம்கோபால் வர்மா, சமீபகாலங்களில் கிளுகிளுப்பான படங்களின் இயக்குநராக மாறிப்போனதாலோ என்னவோ இப்படியான சர்ச்சைகளைக் கிளப்பித் தன்னை நிலைநிறுத்த வேண்டிய நிலை.

மேற்கண்ட சர்ச்சையைப் பொறுத்தவரை இதற்குப் பதிலளிக்க வேண்டியது சுபாஷ்கய், ரகுமான் மற்றும் சுக்விந்தர்சிங்கின் கடமை. இதில் சுக்விந்தர்சிங் வாய் திறந்துவிட்டார். மற்ற இருவரும்  மௌனம் கலைக்க வேண்டும். ஆனால் பிரச்னை அது மட்டுமல்ல. இசையமைப்பின் நம்பகத்தன்மை, தார்மீக அறம் தொடர்பான பிரச்னைகளில் ரகுமான் மீது வந்த இருமுனை விமர்சனங்களே கவலைக்குரியவை; கண்டிக்கத்தக்கவை.

ரகுமான் மீது வசைகளைப் பொழிந்தவர்களில் முதன்மையானவர்கள் இந்துத்துவவாதிகள். இத்தனைக்கும் தமிழில் பார்ப்பனிய, இந்துத்துவ சினிமாக்களை எடுத்து வலதுசாரிக் கருத்தியலைப் பரப்பிய மணி
ரத்னம், ஷங்கர் திரைப்படங்களின் இசையமையப்பாளர் ரகுமானே. ‘ரோஜா’, ‘பம்பாய்’ போன்ற திரைப்படங்களில் வெளிப்பட்ட இஸ்லாமியர் வெறுப்பு, ‘இருவர்’, ‘ஆயுத எழுத்து’ போன்ற திரைப்படங்களில் வெளிப்பட்ட திராவிட இயக்க வெறுப்பு, ஷங்கர் திரைப்படங்களில் காணப்படும் பார்ப்பனரல்லாதார் வெறுப்பு ஆகியவற்றுக்கு வலுசேர்த்ததுதான் ரகுமானின் இசை. அதுவரை இந்துத்துவவாதிகளின் கரங்கள் ரகுமானை நோக்கி நீளவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது ‘வந்தேமாதரம்’ ஆல்பத்தைக் கொண்டாடித் தீர்த்தவர்களில் இந்து தேசியவாதிகளும் உண்டு. ஆனால் சமீபகாலமாக இந்தித் திணிப்புக்கு எதிராக ரகுமான் முன்வைக்கும் கருத்துகள், ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ‘தமிழணங்கு’ ஓவியத்தை சமூகவலைத்தளத்தில் ரகுமான் பகிர்ந்தது, வெறுப்புக்கு மாற்றாக அன்பின் பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தொடர்ந்து ரகுமான் பேசிவருவது ஆகியவை இந்துத்துவர்களைக் கோபமூட்டியுள்ளது. ஏற்கனவே ரகுமானின் முஸ்லீம் அடையாளத்தின் மீது இருந்த வெறுப்புக்கும் சமீபகாலமாக அவரது அரசியல் கருத்துகளுக்கும் வஞ்சம் தீர்க்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இன்னொருபுறம் இளையராஜாவின் ரசிகர்களும் ரஹ்மான் வெறுப்பு ஜோதியில் தங்களை உற்சாகமாக இணைத்துக்கொண்டனர். ‘ரகுமானுக்கு இசை
யமைக்கவே தெரியாது’, ‘ரகுமானின் எல்லாப் பாடல்களும் காப்பியடிக்கப்பட்டவை’ என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

முதலில் ஒன்றைச்சொல்லிக்கொள்கிறேன். நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். ரகுமானின் இசையைவிட எனக்கு ராஜாவின் இசையே பிடிக்கும். ரகுமான் மட்டுமல்ல, இதுவரை வந்த தமிழ் சினிமா இயக்குநர்களில் இளையராஜாவின் இசையே சிறந்தது என்பதே என் கருத்து. ஆனால் அதற்காக ‘ரகுமானுக்கு இசையமைக்கவே தெரியாது’ என்று சொல்லமாட்டேன். அதைச்
சொல்லுமளவுக்கு எனக்கு இசைநுட்பம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, ரகுமானின் இசையை ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவமானப்
படுத்துவதைத் தவிர அதில் உண்மை ஒன்றுமில்லை.

ஒருவகையில் சொல்லப்போனால் இளையராஜாவின் மீது கடந்தகாலங்களிலும் சமீபகாலங்களிலும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு வஞ்சம் தீர்க்க ராஜா ரசிகர்கள் ரகுமான் குறித்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வது நீதியின்பாற்பட்டதல்ல. பொதுவாக ராஜாவின் மதம் சார்ந்த கருத்துகள், பொது
வெளியில் சில சமயங்களில் அவர் நடந்துகொள்ளும் விதம் மற்றும் சிலபல செவிவழிக் கதைகள் ஆகியவற்றின் வழியே இளையராஜா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை இத்தகைய விமர்சனங்களில் ஆர்வமில்லை. ‘ரமணர் உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்ததுதான் உண்மை. ஏசுநாதர் உயிர்த்தெழுந்தது சந்தேகத்துக்குட்பட்டது’ போன்ற ராஜாவின் உளறல்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எல்லோருக்கும் உளற உரிமை இருப்பதைப் போல இளையராஜாவுக்கும் உளற உரிமையுண்டு. சிலசமயம் அவர் அந்த உரிமையை அதிகப்படியாகவே பயன்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் சமீபகாலமாக இந்துத்துவத்தை ஆதரித்த அவரது கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளை இப்படிப் புறம் தள்ளிவிட முடியாது.  பார்ப்பனியத்துக்கு எதிராக உறுதியாகக் களத்தில் நின்ற பாபாசாகேப் அம்பேத்கரை மோடிக்கு இணைவைத்துப் புகழ்வது, சிறுபான்மையினர் நம்பிக்கைகளையும் பாபர் மசூதியையும் ஜனநாயகத்தையும் இடித்துத் தள்ளி அதன்மீது கட்டப்பட்ட ராமர்கோயிலைப் புகழ்வது, ராமர் கோயில் எழுப்பியதாலேயே வேறெந்தப் பிரதமர்களையும்விட மோடி சிறந்தவர் போன்ற இளையராஜாவின் கருத்துகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

பிரச்னை என்னவென்றால் இளையராஜாவைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் ராஜா மீதான எல்லா விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தி அதை முன்வைக்கும் எல்லோரையும் வசைபாடுகிறார்கள். இளையராஜா ஒரு தலித் என்பதற்காக ஆதரிக்கும் சில தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அறிந்தே இந்தத் தவற்றைச் செய்கிறார்கள். இளையராஜா போன்ற ஒரு தலித், உலகின் மாபெரும் இசைமேதைகளுடன் ஒப்பிடத்தக்கவர் என்பது உண்மையிலேயே பெருமைக்குரியது. ஆதிக்கச்சாதியினரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தலித்துகள் ராஜாவைச் சொந்தம் கொண்டாடுவதும் அவரைத் தங்கள் முன்மாதிரியாக ஏற்பதும் நியாயமானதே. ஆனால் அதேநேரத்தில் அவரது சமீபத்திய இந்துத்துவ ஆதரவு நடவடிக்கைகள் அதே தலித்துகளின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தும் நியாயப்படுத்தும் தவறிழைக்கிறார்கள்.

இளையராஜாவின் மதம், கடவுள் குறித்த அபத்தமான பேச்சுகள் விமர்சிக்கப்படும்போதோ அவர் பார்ப்பனர்கள், பார்ப்பனியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போதோ, ‘அவர் ஒரு மாபெரும் கலைஞர். பிறப்பின் அடையாளத்தைக் கொண்டு மட்டும் அவரை அளக்காதீர்கள்’ என்று சொல்பவர்கள்தான், இளையராஜா தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது எல்லாத் தவறுகளை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். ராஜா மீது விமர்சனங்கள் வைக்கும் அத்தனைபேரையும் சாதி வெறியர்கள், தலித் விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இளையராஜா திரையுலகில் சாதிய ரீதியிலான ஒதுக்குதல்களைச் சந்தித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இளையராஜா தலித் என்பதாலேயே அவர்மீது வெறுப்பு உமிழ்பவர்களும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதியைப் பாதுகாக்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் இளையராஜாவைச் சாதி அடையாளம் கடந்து கொண்டாடுகிறார்கள் என்பதும் நிதர்சனமே. இளையராஜாவின் தனிப்பட்ட பேச்சு,
நடவடிக்கைகள், இந்துத்துவ ஆதரவு ஆகியற்றின் மீதான விமர்சனங்களைச் சாதிவெறியாக முத்திரை குத்துவது உண்மையில் விமர்சன சுதந்திரத்துக்கு எதிரானது.

இளையராஜா, ரகுமான் இருவரின் இசையும் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழர்களை ஆள்கின்றன; உலகளவில் மகத்தான உயரங்களை அடைந்திருக்கின்றன. இருவருமே தமிழகத்தின் பெருமிதங்கள். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இவர்களை விட்டுக் கொடுப்பது நமக்கு நாமே இழைக்கும் துரோகம்.