ஏப்ரல் மாதம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் களம் அனல் பறந்த போது, முன்னாள் ஆம் ஆத்மி கட்சி செயல்பாட்டாளரும், தேர்தல் அரசியல் ஆய்வு நிபுணருமான யோகேந்திர யாதவ், ஒரு செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்தார். அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருந்த கருத்து மிகுந்த கவனத்திற்குரியது. அவரது தேர்தல் கள ஆய்வு முறைமையை விளக்கும் போது, தான் உரையாடுவதற்குப் பெண்கள் உள்ளிட்ட கிராமம் மற்றும் சிறுநகர எளிய பின்புலம் கொண்டவர்களையே தேர்வு செய்கிறேன். அவர்களில் ஏழை வேளாண் கூலிகள், சிறுகுறு விவசாயிகள், உள்ளூர் நில விற்பனைத் தரகர்கள், சிறியது முதல் பெரிய அளவிலான வியாபாரிகளைத் தேர்வு செய்து பேசுகிறேன். இதில் சாதிய, மதம் சார்ந்த பல தரப்பினரையும் தேர்ந்து பேசுகிறேன் எனவும் பதிவு செய்கிறார். இந்த உரையாடல்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் வேளாண் துறை வீழ்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, கடுமையான விலைவாசி உயர்வு, தங்களின் தொழில்களின் நசிவு, தங்களது முதலீடுகள் விருத்தியடையவில்லை எனத் தெரிவிக்கின்றனர். மோடியின் ஆட்சிக்காலத்தில் தங்கள் நிலை எந்தவிதத்திலும் மேம்படவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள் என்கிறார். ஆனால் அதே மனிதர்கள் இந்தியா வளர்ச்சியடைந்து விட்டதா? மோடி அவர்களால் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் கூடி விட்டதா? என்ற கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்கிறார்கள். அடுத்த பிரதமர் தேர்வில் மோடியே முன்னணியில் இருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள் என்கிறார்.

மக்கள் வளர்ச்சியடையவில்லை, தேசம் வளர்ந்திருக்கிறது

இதுதான் அரசியல் கள ஆய்வாளனுக்கான மாபெரும் சவால். இந்தச் சமூகநிலையை எப்படிப் புரிந்துகொள்வது, அல்லது விளங்கிக் கொள்வது என்பதுதான் சிக்கல். ஒரு மனிதர் ‘‘தான்” வளமும், நலமும் பெறவில்லை, சொல்லப் போனால் பின்னடைவைச் சந்திந்திருக்கிறேன் என்கிறார். ஆனால் நாடு முன்னேறுகிறது என்ற கூற்றை ஒப்புக்கொள்கிறார். தனிநபர்கள், ஒட்டு மொத்த சமூகத் தொகுப்பின், அங்கங்கள் நன்மை பெறாமல், நாடு மட்டும் வளர்ந்து விட முடியுமா? அப்படியானால் அந்த ‘வளர்ச்சி’ எப்படி ஏற்பட்டது.அதன் பலன் இவர்களை விடுத்து ‘தனித்து’ வேறு யாருக்கோ ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த புரிதல் இவர்களுக்கு இல்லையா? இந்தியா எனும் நாடு, ஒரு குடிநபரை விடுத்து அல்லது தவிர்த்து விட்டு ‘வளர்வதை’ கொண்டாட முடியுமா? இந்தியாவின் ‘வளர்ச்சி’ என வாய்ப்பந்தல் போடப்படுவதே, 90% மக்களின் வளர்ச்சியை அணை போட்டு நிறுத்தி விட்டு,அந்த வளங்களை மோடியின் நண்பர்கள் சில விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மடை மாற்றியதே. இதை ஏன் இவர்கள் உணரத்தவறுகிறார்கள். எப்படி இது சாத்தியமாகிறது.

நான் முன்னேறவில்லை, ஆனால் ‘தேசம்’ முன்னேறிவிட்டது என்ற ‘ஒப்புதலை’ இவர்களால் எப்படி வழங்க முடிகிறது. இவ்வளவு நுட்பமான ‘மூளைச் சலவை’ சதிவலை எப்படிப் பின்னப்பட்டு, இவர்களைஅதில் சிக்க வைத்திருக்கிறது. இங்குதான் தேசமும்,
மதமும் தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகிறது. தேசமும், மதமும் அடிப்படையில் மனித உணர்ச்சிகளில் பொதிந்துள்ளவை. எளிதில் உணர்ச்சிகரமாக்கப்படும் வாய்ப்புக் கொண்டவை. இரண்டின் இருப்பிற்கும் ‘எதிரிகளே’ ஆதாரம். எதிரிகள் இல்லாத ‘தேசம்’ என ஒன்று இருக்க முடியாது. எதிரி அயலில் பாகிஸ்தானாக இருப்பதே இந்தியாவின் இருப்பிற்கு ஆதாரம். ஒரு அற்புத நிகழ்வாக பாகிஸ்தான் இந்தியாவின் ‘நேச நாடாகி’ விட்டால், இந்தியாவின் இருப்பை மறுநிர்மாணம் செய்ய வேண்டியதாகலாம். ஏனெனில் இந்தியா அல்லது சங்கிகளின் பாரத், பாகிஸ்தானோடு ஒட்டிப் பிறந்த இரட்டை. ஆனால் பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட போது, காந்தி, நேரு போன்றவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ‘இந்தியா’ தன்னை ‘ஹிந்து’ நாடாக அறிவித்துக் கொள்ளவில்லை. இந்தியாவை ஒரு ‘ செக்குலர்’ / மதசார்பற்ற நாடாகவே கட்டமைத்தது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அசலான ‘செக்குலர்’ என்ற சொல் பின்னர்தான் இணைந்தது எனினும், இந்தியா உருவாக்க மூத்த முன்னோடிகளின் நோக்கம் அதுவாகவே இருந்தது என்பதில் ஐயமேதுமில்லை.

தேசமும் எதிரியும்

ஒரு வாதத்திற்கு 1947 ஆம் ஆண்டின் இரண்டு தேசங்கள்+ உருவான போது ஹிந்து மஹாசபா, ஆர் எஸ் எஸ் மற்றும் ஜன சங்கம் ஆகியவற்றின் விருப்பப்படி இந்தியா ஒரு ‘ஹிந்து தேஷம்’ என அறிவிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருந்ததா என யோசிப்போம். இந்தக் கட்டுரையில் தேசம் என்ற சொல்லை கவனமாகவே பயன்படுத்துகிறேன். என்னளவில் ‘நாடு’ என்ற தமிழ்ச் சொல்லில் ‘தேஷ்’ இன் விஷம் இல்லையெனக் கருதுகிறேன். பெரியாரின் எல்லைகளற்ற ‘திராவிட நாடு’ இந்த வகையின் மாதிரி. அண்ணா அதையே நில எல்லைகள் கொண்ட ‘திராவிட நாடாக’ விளக்கி, அவற்றின் பகுதிகள் பிரிந்து செல்லும் உரிமையுடனான தன்னாட்சிகளின் கூட்டாட்சி என்றார். கூட்டாட்சியின் அடிப்படையே ‘ஒற்றையாக்க’ நிர்பந்தத்திற்கு எதிரானது. டாக்டர் டி எம் நாயர் துவங்கி திராவிட நாடு எனும் கட்டமைப்பு கூட்டமைப்பாகவே சிந்திக்கப்பட்டது. இந்த 1917 ஆம் ஆண்டு சிந்தனை, ஹிந்து மஹாசபாவின் ‘ ஹிந்து ஸ்வராஜ்’ மற்றும் காந்தியாரின் ‘ராமராஜ்யம்’ எனும் ஹிந்து ராஜ்ய கற்பிதங்களுக்கு நூறு சதவீதம் எதிரானது. தங்களைத் தனித்துவமானவர்களாக உணர்ந்த திராவிடர் சிந்தனை ஏன் மத அடையாளங்களுக்கு வெகு அப்பால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது என்ற கேள்வி முக்கியமானது. அதன் முன்னணித் தலைவர்கள் பிறப்பால் ‘இந்து’ எனும் தொகுப்பினராகக் கருதப்பட்டவர்கள்தான். ஆனாலும், அந்த ‘ ஹிந்து ’ கட்டமைப்பின் விஷத்தன்மையை/ ஆரிய வேத பார்ப்பனியத்தை, அதன் விளைவான சாதி, வர்ண ஏற்பாடுகளை மறுத்து அழித்தொழிக்கும் உணர்வாளர்களானதே, அதன் தோற்றுவாயிலேயே திராவிடம் கூட்டமைப்பு/ கூட்டாட்சி எனும் சிந்தனை மூலத்தைக் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டை இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாக விளக்க முயல்வேன்.

 பிரிட்டீஷ் இந்தியா தொடர்ந்திருந்தால்

சரி, இந்தியா / பாகிஸ்தான் உருவாக்க காலத்திற்குச் செல்வோம். இரு தேசம் உருவாக்கச் சூழல் குறித்த வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பிற்கான உறுப்பினர்கள் தேர்வின் போது, ‘இந்தியத் துணைக் கண்டம்’ முழுமைக்குமான, அதாவது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அவற்றின் தாவாவிற்குள்ளான ( Disputed territories) பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பகுதிக்கான தேர்தல்தான் நடந்தது. அது போக 92 மன்னராட்சியின் கீழான பகுதிகளிற்கு நியமன உறுப்பினர்கள் இணைந்தனர். மேற்படி இந்தியத் துணைக்கண்டம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் உட்பகுதியாக ஐம்பதிற்கும் மேலான தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களும், மேலே ஒன்றிய அளவில் ‘ஒருங்கிணைக்கும்’ பணியை மட்டும் செய்யும் மைய அரசும் மட்டுமே இருக்கும்படியான ஏற்பாடு.

பல்வேறு சூழல்களில் தீர்க்க முடியாத முரண்கள் உண்டாகி ‘இரு தேசம்’ இறுதியானது. இஸ்லாம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ்க் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தான் அதன் மொழி, கலாச்சாரப் பன்மைத்துவத்தை மறுத்து உருவானது. விளைவு அது ‘இஸ்லாம்’ என்ற ஒற்றை அடையாளத்தில் ஒடுங்க மறுத்து, தீவிர மொழி கலாச்சார முரணால் இரு தேசங்களாக( பாகிஸ்தான்; பங்களாதேஷ்) பிளந்து போனது வரலாறு. எனவே இந்தியாவை உருவாக்கும் பொறுப்பேற்ற தலைவர்கள், அன்றைய இந்தியப் பகுதியில் நிதர்சனமாக இருந்த இந்த மொழி கலாச்சார பன்மைத்துவத்தை கவனமாகக் கையாண்டனர். ஒரு வகையில் முற்றிலுமாக பன்மைத்துவத்தை மறுப்பதுபோல இல்லாமலும், அதேவேளையில் அவற்றிற்கு உரிய முன்னுரிமை வழங்காமலும் ஒரு தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் மையத்தில் அதிகாரம் குவிக்கப்பட்ட ‘ஒற்றை இந்தியா’ உருவாக்கத்தை சாமர்த்தியமாகச் செய்து முடித்தனர். ஒரு வேளை சங்கிகளின் பேராவல்படி ‘ஹிந்து தேசம்’ உருவாக்கப்பட்டிருந்தால் இன்றைய இந்திய நில எல்லைகளின் பல பகுதிகள் இல்லாமல் போயிருக்கும் வாய்ப்பு மிகப் பிரகாசம். அப்போது ‘ஹிந்து தேச’ எதிரியைத் தேடி பாகிஸ்தான் வரை போக வேண்டியதாகி இருக்காது. எனவே மோடி உள்ளிட்ட ஹிந்து தேஷ் வாதிகள் அசலாக காந்தி, நேரு போன்ற வர்களுக்கு பெரிதும் கடன் பட்டவர்கள். ஒரு தேசத்தை உருவாக்கி அதை ஓரளவாவது கடுமையான உள்முரண்கள் அற்றதாக ஆக்கித் தந்ததன் விளைவின் பலனை கொள்ளையடித்துக் கொழுக்கிறது குஜராத் குற்றக் குழுமம். அந்தக் கொள்ளைக்கு உதவ மதவாதப் பிளவை ஆயுதமாக்கி ‘ஜெய்  ராம்’ என ஆரவாரிக்கிறது வெறியாட்டக் கூட்டம்.

 வளர்ந்த நாடும் வறுமையான மக்களும்

இந்தியா எனும் வளரும் தேசம், வளர்ந்த தேசம், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் எனும் புனைவுகள் எந்தவித வெட்கமோ ,தயக்கமோ இன்றி, மோடி அரசு உருவாக்கும் பொய்கள். இந்தியாவின் புள்ளி விபரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஐ நா அமைப்புகள் அறிவித்து ஆண்டுகள் பலவாகி விட்டன. புள்ளி விபரங்களின் அடிப்படையையே மாற்றியமைத்துவிட்டிருக்கிறது இந்த அரசு. சரி, இந்தியா வளர்ந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரம் ஆகிவிட்டது என்ற பரப்புரைதான், யோகேந்திர யாதவ் சந்தித்தவர்களை ‘இந்தியா வளர்ந்து விட்டது‘ என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. இந்தப் புள்ளியில், மோடி அரசின் இரண்டு சித்துவேலைகளைக் கவனிப்போம். உலகத்தின் பெரும் பொருளாதாரங்களைத் தீர்மானிக்கும் இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அதன் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி), மொத்த நுகர்வுச் செலவு, முதலீடுகள் (உள்நாடு/ அயல்நாடு) சர்வதேச ஏற்றுமதி/ இறக்குமதி – அந்நியச் செலாவணி வரவு / இருப்பு ஆகியவை. இரண்டாவது மிக முக்கியமான காரணி தனிநபர் வருமானம். இந்தியாவின் மானக்கேடு இந்த இரண்டாவதுகாரணி தொடர்பான தில்லுமுல்லுதான். இந்தியாவைவிடப் பெரிய பொருளாதாரங்கள் என அறியப்படும் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றின் தனிநபர் வருமானத்திற்கும் இந்தியாவின் தனி நபர் வருமானத்திற்குமான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது. இந்தியாவின் தனிநபர் வருமானம் உலகநாடுகள் வரிசையில் 136 வது இடத்தில்.

இப்போது யோசிப்போம் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் தனிநபர் வருமானத்தில் 136ஆவது இடத்தில் ஏன் இருக்கிறது. இந்தியா வளருகிறதா ஆம், வளருகிறது.
அந்த வளர்ச்சியின் பலன் அனைத்து மக்களுக்குமானதாக இருந்தால், தனிநபர் வருமானம் கூடியிருக்குமல்லவா? ஆனால் அந்த வளர்ச்சியின் பலனை, அதானி, அம்பானி போன்ற ஒரு சதவீத குஜராத்திகளே வாரிச் சுருட்டுகின்றனர். ஆம், யோகேந்திர யாதவ் சந்தித்தவர்கள் உண்மையைத்தான் பேசினார்கள். அவர்களை ஏமாற்றி விட்டு எங்கோ பாயும் வளத்தின் பெருமிதம் மட்டுமே அவர்களுக்கு. இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், அதானி உலகின் நம்பர் ஒன் பணக்காரர். அவ்வளவுதான். மானங்கெட்ட, கேடுகெட்ட, அறமற்ற ஊடகங்கள் இந்தப் பெருமையை இந்தியாவினதாக, இவர்களை ஏற்கச் செய்திருக்கிறது. ஓரளவிற்கு நேர்மையான, அறமான ஊடகங்களை ஒழித்து அவற்றை அதானியே விலைக்கு வாங்கும் அளவிற்கு ‘சினிமாத்தனமான’ வில்லத்தனங்களை செய்து விட்டு ஆணவமாகத் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார் மோடி. 2019 தேர்தலில் மோடியின் வெற்றியை உத்தரவாதம் செய்தது ‘புல்வாமா தாக்குதலும், பாகிஸ்தானின் தீவிரவாதக் குழுக்களின் தளங்களை குறி வைத்துத் தாக்கியதும்’ என்பது அனைவரும் அறிந்த செய்தி. அந்த ‘பாகிஸ்தான் எதிரி’ இப்போது பொருளாதார வீழ்ச்சியில் துவண்டு போய், போர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையிலும் இல்லை. எனவேதான் உள்நாட்டு எதிரி. ஆம் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர் எனும் எதிரிகள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலும் அயோத்தி இராமர் கோவிலும்

மோடி இந்தத் தேர்தல் வெற்றியை அயோத்தி இராமர் கோவிலை வைத்தும், வாடிக்கையான உள்நாட்டு எதிரிகளான இஸ்லாமியர்களைக் காட்டியும் வென்றுவிட முடியும் என்பதை உறுதியாக நம்பினார். அதைச் சாத்தியமாக்கும் ஆயுதமாக/ கருவியாக தனது கைபாணங்களான கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களை பயன்படுத்தினார். கூடுதலாக மோடியால் நிர்மூலமாக்கப்பட்ட ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனங்களான அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவை அவரும் அமீத் ஷாவும் இட்ட கட்டளையைச் செய்யும் ஏவல் படைகளாகச் செயல்பட்டன. இந்த மனிதனின் அடிப்படை நாகரிகமற்ற நடவடிக்கைகளான குடியரசுத் தலைவர் திரௌபதை முர்மு அவர்களுக்கு நிகழ்த்திய அவமரியாதைகளே அதிலும் புதிய நாடாளுமன்றத் திறப்பு நிகழ்ச்சியில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, அதன்படியான ஆட்சியைத்தான் கிஞ்சித்தும் மதிக்க மாட்டேன் என்ற மோடியின் அகங்காரத்தின் உட்சப்பட்ட வெளிப்பாடு. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பட்டயம் வழங்கிய போது, அரசு முறைமைகளின்படி எழுந்து மரியாதை செய்யாமல் ஆணவமாக அமர்ந்து தன் அநாகரிகத்தை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டினார் அந்த நபர் மோடி.

 2024 நாடாளுமன்றத் தேர்தலும் மோடியின் ஊடக அடிவருடிகளும்

சென்ற மாதம் இந்திய நாடாளுமன்றத்திற்கான 2024 ஆம் ஆண்டின் பதினெட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான போது வரை மோடி அவர்கள் பெரும் அகங்காரம் எனும் அளவிலான தன்னம்பிக்கை மிக்கவராகவே இருந்தார். இந்தத் தேர்தலில் ‘நானூற்றுக்கும் மேல’ என்ற முழக்கத்துடனே களம் கண்டார். ‘கோடி மீடியா’ ( Godi Media ) எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்தியத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் பாஜக வெற்றியை முன்னறிவித்துவிட்டே தேர்தல் களம் புகுந்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ‘தேசத்தின் மனப்போக்கு‘ (Mood of the Nation – INDIA TODAY TV PRE POLL SURVEY) என ஆரவாரமாக அறிவித்தனர் அறம் பிறழாத ஊடகவாதிகள். மோடி ஆட்சியின் கடந்த பத்து ஆண்டுகளில், பத்து நிமிடங்கள் கூட பார்க்கச் சகிக்காத ஹிங்லிஷ் ஊடகங்கள் தங்களது ‘ ஊதலை’ உச்சத்திற்கு ஏற்றினர். நானூறு லட்சியம், அதனையும் மீறினால் ஆச்சர்யமில்லை எனவே அறிவிப்புச் செய்தனர்.

நாங்களும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லையெனத் தமிழ்ச் செய்தி ஊடகவியாதிகளும் மோடி சங்கை ஊதித் தீர்த்தனர். தமிழ்நாட்டு ‘மோடி சேனல்களுக்கு’கொடுக்கப்பட்ட வேலை தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வாக்கு சதவீதத்தை இரண்டாம் இடத்திற்கு நகர்த்தி, பழனிச்சாமி அஇஅதிமுக வை மூன்றாவது இடத்திற்கு தள்ளுவது. அதையும் செவ்வனே செய்தனர் நம் தோழர்கள். முற்றாக பாஜக வாக்கு சதவீதத்தை இருபதுக்கு மேல் தள்ளினால் பாஜக ஆதரவாளர்களே நம்ப மாட்டார்கள் என்ற அச்சத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை இருபதுக்கும், அதாவது பழனிச்சாமி கட்சிக்கும், கீழே வைத்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஐந்திற்கும் மேலான இடங்களைப் பெறுவார்கள் என ஆருடம் சொன்னார்கள். பாஜக நானுறுக்கும் மேலான தொகுதிகளை வெல்ல வேண்டுமானால் தமிழ்நாடும் அதன் பங்கை வழங்கித்தானே தீர வேண்டும். அந்த விருப்பம் இனிதே வழிமொழியப்பட்டது.

 தமிழ்நாடு மோடிக்குக் கற்றுத் தந்த பாடம்

ஆக, முன் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தேர்தல் வெற்றியை, அரங்கேற்றும் பணியை மோடி அவர்கள் மிகக் கவனமாகத் தமிழ்நாட்டிலிருந்து துவங்கி னார், தேர்தல் கூட்டணி விவகாரத்திலேயே ஒரு குழப்பமான, தோல்விகரமான முடிவிற்கு வந்த பாஜக, அண்ணாமலை எனும் ‘அரசியல் மேதையின்’ தலைமையேற்று அவர் காட்டிய வழியில் பயணித்தது. ஒன்பது முறை மோடி எடுத்த படையெடுப்பின் முடிவில் அவர் ஒரு கேலிப் பொருளானதே நடந்தது. மோடியின் கூட்டங்களும், சாலை உலாக்களும் ( Road Show ) மறைக்க முடியாமல் ஊடக வெளிச்சத்தில் பல்லி ளித்தன. மோடியின் முதன்மை கவனக் குவிமையமாக இருந்த தமிழ்நாடு அவரை அதிர்ந்து கலவரமடைய வைத்தது. ‘இந்தத் தேர்தலோடு திமுக வை அழித்து விடுவேன்’ என ஆணவமாகப் பேச வைத்தது. ஆம், மோடி வீழ்ச்சிப் பாதைக்கு வித்திட்ட பெருமை தமிழ் நாட்டிற்கே என ஆனது. பாவம், திமுக வை அழிக்க சூலுரைத்தவர்கள் அழிந்த கதையை யாரும் அவருக்குச் சொல்ல
வில்லை போலும். வடக்கன் ஊடகங்கள் “ மோடி – அண்ணாமலை மேஜிக்” எனப் பிரதான நேரங்களில் ‘நேரலை’ செய்த காட்சிகள் மோடி எனும் நபரின் ‘அசைக் கவியலா
நிலை’ (Unassailable position) நிலை தடுமாறிச் சரிவதை இந்தியா கண்டது.

மோடியின் இறுதி வீழ்ச்சிக்கான அத்தியாயம் இங்கிருந்தே துவங்கியது. வடக்கன்கள் தொலைக்காட்சி ஊடகங்கள், பாஜக ஆதரவு தெற்கே அறவே இல்லை என்பதைல் காலந்தாழ்ந்து கவனித்தன. நிதர்சனமான பாஜக எதிர்ப்பை உணர்ந்த போது முதற்கட்டத் தேர்தல் நெருங்கியது. ஒன்பது முறை ஓடிவந்து மோடி பெறவியலாத ஆதரவை ஓரே நாள் பயணத்தில் வென்றார் ராகுல். முதல் கட்ட தேர்தலிற்கு முன்னாள் வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஒரு நூற்றாண்டிற்கும் மேலான அந்த இயக்கத்தின் நிலைப்பாடுகளில் ஒரு மாபெரும் மாற்றம் அல்லது முற்போக்கான நகர்வு வெளிப்பட்டது. அதன் பக்கங்களின் ஒவ்வொரு பத்தியிலும் ‘திராவிட சமூகநீதி கருத்தியலும்’, கூட்டாட்சி அறைகூவலும் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆம், தோழர்களே, ஒரு நூற்றாண்டிற்கும் மேலான திராவிடச் சிந்தனைகளின் சாராம்சம் இந்தியாவின் மிகப் பழைமையான கட்சி ஏற்றது ஒரு பெரும் தாவல்தான். டாக்டர் டி எம் நாயர் துவங்கி பெரியார், அண்ணா, கலைஞர் எனத் தொடர்ந்த கூட்டாட்சிச் சிந்தனையும், சமூகநீதியும் இன்று இந்திய அரசியலின் அடிப்படைக் கோட்பாடு ஆகியிருப்பது, நம் தலைவர்களின் அயராத உழைப்பின் விளைவு. அதனை இந்த நிலை வரை தோளில் சுமந்து கொண்டு சேர்த்த பெருமை நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையும் சேரும்.

 மோடியின் இந்துத்துவ பாஜகவின் வீழ்ச்சி

முதற் கட்டத் தேர்தல் நிலவரம் குறித்த ‘பாஜக படுதோல்வி’ என்ற அவதானிப்புகள் மோடியை அதிர்ந்து நிலைகுலைந்து போகச் செய்தன. தமிழ்நாடு தளம் அமைத்துக் கொடுத்த மௌன மக்கள் புரட்சி திசையெங்கும் பரவத் துவங்கியது. இங்கு ஒன்றைத் தெளிவு செய்து கொள்ள வேண்டும். எந்த மௌன மக்கள் புரட்சியும் நிகழ ஒரு சிறு பொறி போதும். அந்த வகையில்தான் தமிழ்நாட்டின் பங்கு. மற்றபடி மோடியின் மனிதாபிமானமற்ற, ஆணவ – அராஜக ஆட்சியில் நசுக்குண்டு கிடந்த மக்கள், ஜால்ரா ஊடகங்களின் மூடாக்குகளையும் மீறிக் காட்சிப்பட்ட ‘மோடியின் சென்னை பாண்டி பஜார் ரோடு ஷோக்கள்’ வழியாக இந்த மனிதனின் வீழ்ச்சி துவங்கிய விட்டதைக் கண்டனர். ஊடகப் பொய்யர்களின் ‘மோடி எனும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம்’ போலித்தனமானது எனக் கண்டு கொண்டனர். வடக்கே உள்ள எளிய மனிதர்களும் இந்த மனிதன் நாட்டின் பெருமையல்ல, துரத்தப்பட வேண்டியவன் என உணரத் துவங்கினர். மோடியால் அயோத்தி ராமர் கோவிலைக் காட்டி ஏமாற்ற முடியவில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மோடியை மிரளச் செய்துவிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை பாஜகவால் ஒருநாளும் பேசிட முடியாத மக்கள் நலம் சார்ந்த கொள்கை
களைப் பேசி அதிர வைத்தது. சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு கொள்கை உச்சவரம்பு நீக்கம், அரசின் உயர் பதவிகள் ஒருசாரரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மாற்ற வேண்டிய தேவை போன்ற அறிவிப்புகள் மோடியை நடுங்க வைத்துவிட்டது. இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதானிக்கு மட்டும்தாரை வார்த்த நபரால், காங்கிரசின் அறிவிப்பான அரசின் வருவாய்கள் அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரும்படிக்கான சமத்துவத் திட்டங்கள் வகுக்கப்படும் என்பதைத் தாங்க முடியவில்லை. இதோ இந்திய அரசியலில் ஆக மோசமான, கீழ்த்தரமான, நேரடியான மதவாதப் பிளவுப் பேச்சுகளை மேடை தோறும் பேசுகிறார் மோடி.

தேர்தல் நடத்தை விதிமுறைகளும் மோடியின் வரம்பு தாண்டிய மீறல்களும்

மோடி எனும் மாபெரும் பொய்ப் பிம்பம் கலைந்துசிதையத் துவங்கியிருக்கிறது. மதவாதப் பிளவினை, சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியருக்கெதிரான வெறிப் பேச்சுகளை மேடைதோறும் பேசுகிறார் மோடி. அவரது எடுபிடி போலச் செயல்படும் தேர்தல் ஆணையமோ தன்மானமற்றுத் தரையில் தவழ்கிறது. மோடி ஒரு போதும் ஓர் அறிவார்த்த அரசியல் அறிந்தவரோ அல்லது ஒரு ஆட்சியாளருக்கான குறைந்தபட்ச தகுதியோ அற்றவர் என்பதே முற்போக்கு சிந்தனை அரசியல் விமர்சகர்களின் பார்வை. ஏற்கனவே பிளவுவாத வெறிப் பேச்சால் மட்டுமே தேர்தல்களை வென்று வந்தவருக்கு, எந்தவித ‘அலைகளுமற்ற’ இந்தத் தேர்தலை எப்படிக் கையாள்வது எனத் தெரியவில்லை. எனவே அவரது உரைகள் நேரடியாகவே மக்களிடையே அமளியை உருவாக்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே மாறிப் போயின.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சூட்டைத் தாங்க முடியவில்லை மோடியால். தேர்தல் அறிக்கையின் காணப்படும் ‘அரசின் வருவாய் அடித்தட்டு மக்களில் தேவையானவர்கள் பயன்பெறும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும்’ என்பதை ஹிந்துக்களின் சொத்துகளைப் பறித்து இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கப் போகிறது காங்கிரஸ் என வெறிப்பேச்சு பேசுகிறார். பெண்களிடம் உங்கள் தாலியைக் கூடப் பறித்து இஸ்லாமியருக்குக் கொடுக்கப் போகிறது காங்கிரஸ் எனத் தூபம் போடுகிறார். ஒரு பொதுவெளி நாகரிகமற்ற, வெறிப் பேச்சு பேசும் மனிதரான மோடி இன்னும் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்புகளில் இருப்பது நாட்டிற்குப் பேராபத்து. மோடியை அரசியல் களத்திலிருந்து விலகச் செய்வதே நாட்டிற்கும் அவருக்கும் நல்லது.