- வெள்ளி நிலா
வெள்ளி நிலா என்று சொல்லி அம்மா நிலாவைக் காண்பித்துச் சோறூட்டுவாள். இந்நிகழ்வு மட்டும் அவன் நினைவில் பதிந்துள்ளது. மேகத்திற்கிடையே நிலவு மிதந்து செல்லும்போது, “அதோ பாரு வெள்ளி நிலா. அந்த நிலவுலே பாட்டி உட்கார்ந்திருப்பது தெரியுதா” என்பாள். அவன் வாயில் பால்சோற்றை அந்த நேரத்தில் ஊட்டிவிடுவாள். கொல்லைப்புறத்தில்தான் சோறு ஊட்டுவாள். அரை இருளாக அந்த இடம் இருக்கும். சற்றுத்தள்ளிக் கிணறு. பக்கத்தில் துணி துவைக்கும் கல். மரங்கள்.
அவனுக்கு வெள்ளி நிலா எப்படி நகர்ந்து செல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். அவன் வளர்ந்தபின் அடுக்களையில் சாப்பிடுவார்கள். அடுக்களை விஸ்தாரமாக இருக்கும். விறகு அடுப்பில் சமையல். படுக்கும் பாயை மடித்துப் பந்திப்பாய் போல ஆக்கி அதன் மேல் அமர்ந்துதான் சாப்பிடுவார்கள். வெறுந்தரையிலும் உட்கார்ந்து சாப்பிடலாம். சாப்பாட்டுக்கு ஒரு மரியாதை வேண்டும் என்று அம்மா நினைத்தாளோ என்னவோ. இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்.
அவன் நோய்வாய்ப்பட்ட நேரங்களில் எல்லாம் அம்மா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றாள். உடனிருந்து கவனித்துக்கொண்டாள். வயதாக ஆக அம்மா தன்மீது காட்டும் அக்கறை அவனுக்கு அவள்மீது வெறுப்பையும் விலகலையும் ஏற்படுத்தியது. அவனுக்குத் திருமணம் ஆன பின்பு இன்னும் கூடியது.
ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவை அவன் அடித்துவிட்டான். அடுத்த சில நாட்களில் அம்மாவிற்கு மறதி நோய் ஏற்பட்டுவிட்டதை அறிந்தான். பணிப்பெண் அமர்த்திக் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பேச்சு இல்லை. நோயிருந்தாலும் சொல்ல இயலாது. இப்படியே அம்மா இருந்தாள். ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவை அவன் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டன. மனைவியிடம் விசாரிப்பதோடு சரி. நல்ல வேளையாக அம்மாவைக் கவனிக்கும் பொறுப்பை மனைவி எடுத்துக்கொண்டாள். வேலைக்கு அமர்த்திய பெண் சரியாகப் பராமரிக்கிறாளா, உணவு கொடுக்கிறாளா என்று அவள் கண்காணித்தாள்.
பல நாட்கள் கழித்து ஒரு நாள் அம்மா இருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தான். அம்மா அடையாளம் தெரியாத அளவில் மெலிந்து, தலையில் முடியில்லாமல் கிடந்தாள். அவனுக்கு வருத்தமாக இருந்தது. “அம்மா” என்று அழைத்தான். அவள் கண்கள் மூடியிருந்தன. சலனமில்லை. இறந்துவிட்டாளோ என்று நினைக்கையில் அவள் விழிகள் திறந்தன. விழிகள் அவனை நோக்கித் திரும்பவில்லை. அறையை விட்டு வெளியே வந்தான்.
ஒரு நாள் காலையில் அம்மா இறந்துவிட்டதாகப் பணிப்பெண் கூறினாள். காரியங்கள் நடந்து முடிந்தன. ஆண்டுகளும் கடந்தன. வாசல் போர்ட்டிகோவில் நின்றிருந்தபோது வானத்தைப் பார்த்தான். நிலா மேகங்களினூடே நகர்ந்து சென்றது. ‘வெள்ளி நிலா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். இன்று அவனுடைய அம்மாவின் நினைவு நாள்.
***
- பலூன் என்றொரு ஜென்
“எந்நேரமும் உன் எண்ணமே” என்றான் சுப்பிரமணியன்.
“எனக்கும் எந்நேரமும் உன் நினைப்புதான்” என்றாள் பாக்கியவதி.
“என்ன செய்வது” என்றான்.
“என்ன செய்வது” என்றாள்.
இருவரும் பேசாமல் இருந்தார்கள்.
அந்த நேரம் ஒரு பலூன் வெடிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். ஒரு சிறுமி கையில் வைத்திருந்த பலூன் வெடித்தது. அந்தச் சிறுமி திகைத்துச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த பெற்றோர்களிடம் சென்றாள்.
சுப்பிரமணியனும் பாக்கியவதியும் தாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை மாற்றி வேறு இடத்தில் உட்கார்ந்தார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் கிளர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தார்கள். சற்றுத் தள்ளி வேறு ஒரு சிறுமி பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். இருவருமே பலூன் வெடித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் வெடிக்கவில்லை.
வெடிக்கவில்லை என்று இவர்கள் நினைத்த கணம் பலூன் வெடித்தது. இருவரும் மீண்டும் வேறு இடத்திற்குச் சென்று உட்கார்ந்தார்கள். இருவரும் தங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். பலூன் வைத்து விளையாடும் சிறுமி யாரும் தென்படவில்லை. பலூன் வெடிக்காது என்று இருவரும் நிம்மதியடைந்தார்கள்.
***
- சந்தேகம்
அவனும் அவளும் தனித்திருந்தார்கள். அவள் சொன்னாள். “என் புருஷன் என்னைச் சந்தேகப்படறார். அதனாலே சண்டை வருது. தினசரி பெரிய உபத்திரவமா இருக்கு. எனக்கு நிம்மதி இல்லை. உங்களோட இருக்கும்போதுதான் எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.”
“அவர் சந்தேகப்படறதை மாத்த என்ன செய்யணும்.”
“சந்தேகப்படறது அவரோட இயல்பு.”
“அவர் சந்தேகப்படற லிஸ்ட்லே நான் இருக்கேனா.”
“நீங்கள் நிச்சயமா இல்லை. உங்களை அவருக்குத் தெரியாது.”
“பின்னே என்னத்துக்குச் சந்தேகப்படறாரு.”
“அதான் நான் சொன்னேனே சந்தேகப்படறது அவர் இயல்புன்னு.”
“எப்படித்தான் இப்படிச் சந்தேகப்படறவரோட வாழ்றியோ” என்று சொல்லிக்கொண்டே அவள் தோளைப் பிடித்து இழுத்து அணைத்தான்.
“சந்தேகப்படறவரோட வாழ்றதுக்குச் செத்துப் போகலாம்” என்றாள் அவள்.
“நீ செத்துப் போனால் நானும் செத்துப்போவேன்.”
“முட்டாள். ரெண்டு பேரும் சேந்து செத்துப்போனா அவருக்குச் சந்தேகம் வராதா.”
“சந்தேகப்படறதை நிறுத்தறதுக்கு என்ன செய்யறது” என்றான் அவன்.
“அவரை இன்டெலைக்சுவலா மாத்தணும். நடக்கற காரியமா இது.”
“ஏன் இவரைக் கல்யாணம் பண்ணினே.”
“நான் இவர் வேணும்னா நின்னேன். என் தலையிலே கட்டி வைச்சாங்க.”
“நீ வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே.”
“சொன்னேன். கேட்டாத்தானே. அப்பாவி மாதிரி இருக்காரேன்னு வேற வழியில்லாம சரின்னு சொன்னேன்.”
அவர்கள் இருவரும் மீண்டும் அணைத்துக்கொண்டார்கள். கைவிரல்களைக் கோர்த்திருந்தனர். அந்த நேரத்திலும் அவள் சொன்னாள்.
“இப்படிச் சந்தேகப்படற புருஷனோட வாழ்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.”
“ஆமா. ரொம்பக் கஷ்டம்தான்” என்று சொல்லிக்கொண்டே அவளை அவன் இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
***
- கல்யாணப் பெண்
குமரவேல் பணிபுரிந்துகொண்டிருப்பது அரசு அலுவலகத்தில் என்றாலும் அது ஸ்பெசல் அலுவலகம் என்பதால் சிறிய வீட்டில் இருந்தது. அடுத்த வீட்டில் மூன்று திருமணமாகாத பெண்களும் அவர்களின் பெற்றோரும் குடியிருந்தார்கள். பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். தந்தை விரிக்கப்பட்ட பாயில் படுத்துத் தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பார். தெருவில் செல்பவர்கள் அவர் படுத்திருப்பதைப் பார்க்க முடியும். அவரின் கண்கள் கலங்கி நிலைத்திருக்கும். விழிகள் அசையும்போது அவரின் உடலில் உயிர் இருப்பது தெரியும். அவருக்கு வேலை எதுவும் கிடையாது. நிரந்தர நோயாளியாக இருக்கலாம். மூன்று பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள்.
என் அலுவலக வீட்டிற்கு ஒரு திண்ணை இருந்தது. அதில் கையில் விசிறியுடன் கடைநிலை ஊழியர் உசேன் பாய் உட்கார்ந்திருப்பார். அதிகாரி பெல் அடித்தவுடன் விசிறியைத் திண்ணையில் வைத்துவிட்டு அதிகாரியின் அறையை நோக்கி விரைவார்.
ஒருநாள் ஒரு வாலிபன் அவர்கள் வீட்டிற்குச் சிலருடன் வந்தான். ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் போனபின்பு மூன்று பெண்களும் வாசலில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டார்கள். மூத்த பெண் அலங்கரித்திருந்தாள்.
உசேன் பாயிடம் குமரவேல் விசாரித்தான்.
பெண் பார்க்க வந்திருப்பதாகவும் பையன் துபாயில் வேலை பார்ப்பதாகவும் பெண்ணைப் பிடித்துவிட்டதாகவும் டிரைவிங் பழகச் சொல்லியிருப்பதாகவும் திருமணத்திற்குப்பின் துபாய் அழைத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
மூன்று பெண்களில் ஒரு பெண் குறைந்தது என்று குமரவேல் நினைத்தான். நோயாளியான தந்தையை ஹாலில் காணோம். அவரை வேறெங்கோ சில மணிநேரத்திற்கு வைத்திருப்பதாக உசேன் பாய் சொன்னார். அடுத்த நாள் தந்தை படுத்த நிலையில் ஹாலில் இருந்தார். கண்கள் கலங்கிய நிலையில், வழக்கம் போல் நிலைகுத்தியிருந்த நிலையில் இருந்தன.
குமரவேல் இரண்டு நாட்கள் கழித்து சங்கருடன் மெரினா லாட்ஜூக்குச் சென்றான். அவர்கள் வழக்கமாகச் செல்லுமிடம்தான். குமரவேல் அறைக்குள் நுழைந்தான். அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்துவீட்டு மூத்த பெண் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
அவனைப் பார்த்ததும் அவள் எழுந்து நின்றாள். “நீங்க பக்கத்து ஆபீஸில் வேலை பார்ப்பவர்தானே… ஸார் வெளியே சொல்லியிராதிங்க. கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. எல்லாம் கெட்டுப்போயிரும். தெருவுலே இருக்க முடியாது” என்றாள்.
குமரவேல் அவளை உட்காரச் சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பற்ற வைத்தான்.
“நான் வெளியே சொல்லமாட்டேன். கல்யாணம் முடிவாயிருக்கு. இதுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கலாமே.”
“என்ன ஸார் செய்றது. அப்பா உடம்புக்கு முடியாதவர். வயித்துப் பிழைப்புக்கு என்ன செய்யிறது. கல்யாணத்துக்குப் பணத் தேவை இருக்கு…”
“நான் இப்ப ஒரு சங்கடத்துலேயில்ல இருக்கேன்.”
“ஸார்… நீங்க வந்த வேலையை முடிச்சிட்டுப் போங்க.”
“இல்ல. நான் போறேன். கீழே பணம் கொடுத்துடறேன்.”
“கல்யாணத்துக்கு அவசியம் வரணும் ஸார்.”
“அவசியம் வாரேன்” என்றான் குமரவேல்.
***
- கணவனை இழந்தவள்
உறவினர்கள் சென்றுவிட்டார்கள். கணவனின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. தேவிகாவிற்குத் தன்னைப் பயம் கவ்விக்கொண்டிருப்பது போல் இருந்தது. வாழ்வின் முன் இருக்கும் சவால்களை எப்படிச் சந்திப்பது என்று யோசிக்கையில் திகைப்பாக இருந்தது. அவளின் கணவன் அரசு வேலையில் இருந்தான். அவள் வேலைக்குச் செல்லவில்லை. மகன் ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கிறான். மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டான். கறிக்குழம்பு என்பதால் நன்றாகச் சாப்பிட்டான். சற்றுநேரம் படித்திருந்துவிட்டுச் செல்வது வழக்கம். படுத்திருந்தவனின் கை படுக்கையிலிருந்து சரிந்திருப்பதைத் திடீரென்று பார்த்தாள். அது விநோதமாக இருப்பதாக உணர்ந்ததால், அவன் தோளைப் பிடித்துத் தள்ளினாள். மல்லாக்கக் கிடந்தான். சலனமில்லை. உணர்வும் இல்லை. அவள் கத்தினாள்.
பிறகு பக்கத்து வீட்டுப் பெருமாளையும் அவர் மனைவியையும் அவசரமாகக் கூட்டி வந்தாள். அவர் ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர். அவர், அவனின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நெஞ்சில் கை வைத்துப் பார்த்தார். முகத்திலே தண்ணீர் அடித்துப் பார்த்தார். சலனமே இல்லை. ஆம்புலன்சுக்கும் போன் செய்தார். தேவிகா அழுதாள். மகன் வேனில் வருவதற்கு இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும். அந்தத் தெரு இறுதியில் ஒரு கிளினிக் இருக்கிறது. இந்த நேரத்தில் திறந்திருக்காது.
ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஆனது. அண்டை வீட்டார்கள் அவள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஆம்புலன்ஸில் சென்றுவிட்டால் வர எவ்வளவு நேரம் ஆகுமென்று தெரியவில்லை. வேனிலிருந்து மகன் இறங்கும்போது, அவனைக் கவனித்து வீட்டிற்குள் வைத்துக்கொள்ளுமாறு எதிர் வீட்டுக்காரம்மாளிடம் கூறினாள்.
ஆம்புலன்ஸ் வந்தது. அதில் இருந்த பணியாளர்களில் ஒருவர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறினார். தேவிகா அதிர்ச்சியிலிருந்தாள். மருத்துவமனைக்குக் கொண்டுசென்று உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். முருகதாஸ் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். அவளின் கணவனைப் பரிசோதித்த மருத்துவர் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
நெருங்கிய உறவுக்காரர்கள் வந்தார்கள். இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது. பின் காரியங்களும் நடந்து முடிந்தன. அனைவரும் சென்றபின் மகனுடன் தனித்து இந்த இரவில் இருந்தாள். பக்கத்தில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான்.
‘ஆண் துணை இல்லாமல் தனித்து இருக்க வேண்டும். அதிலுள்ள சங்கடங்களைத் எதிர்கொள்ள வேண்டும். மகனை வளர்க்க வேண்டும். அரசு வேலையில் கணவன் இருந்ததால் அவரின் நண்பரை அணுகிக் குடும்பப் பென்சனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலை தேட வேண்டும்’ என்றெல்லாம் தேவிகா யோசித்துக்கொண்டே தூக்கம் வராமல் படுத்திருந்தாள். கண்களை மூடியிருந்தாள்.
தோளில் மகனின் கை படுவதை உணர்ந்தாள். விழித்துப் பார்த்தாள். மகன் அருகே உட்கார்ந்திருந்தான்.
“தூக்கம் வரலையாம்மா… நான் இருக்கேம்மா. நல்லா படிச்சு உன்னைக் காப்பாத்துவேன். கவலைப்படாதேம்மா” என்றான்.
அவள் மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
***