நூலாம்படைகள் வெள்ளிச் சரிகை போல மின்ன, ஒற்றை ஜன்னல் வழி வந்த அந்தி வெயில் இவ்விருண்ட அறையை மேலும் மஞ்சள் பூசிய வெங்கல இருட்டாக்கியது .
அழுக்குப் படிந்து பொலிவிழந்த ரெட் ஆக்சைடு தரையில் காற்றிலாடும் சல்லடையாகக் கிழிந்த திரைச்சீலை வழி வந்து அதுதான் வரைந்த ஓவியங்களையே அழித்து அழித்து புதிதாக வரைந்தபடியிருந்தது . அறையின் முடை நாற்றத்துடன் திறந்த அலமாரியிலிருந்து அத்துருண்டை, மைசூர் சந்தன சோப்பு , கஸ்தூரி மஞ்சள் எல்லாம் சேர்ந்து கலவையான ஒரு வாசம் வீசியது. சர்க்கஸ் கலைஞன் போல ஒரு இழையில் சுழன்று சுழன்று வட்டமிட்டபடி மேலிருந்து கீழே, எட்டுகால் பூச்சியொன்று இறங்கியது . அந்தரத்தில் அரைவட்டத்தில் சட்டென்று நின்றது . அப்போது அதன் நிழல் அண்ணியின் வெள்ளைக் குர்த்தியில், பெரிய மிருகம் ஒன்று , முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வது போல பூதாகரமாகத் தெரிந்தது.
நானும் அண்ணணும் ஒரு கணம் அதை ஆச்சரியத்துடன் பார்த்தோம் .அவன் பதற்றத்துடன் அந்த வெள்ளி இழையைப் பிய்த்துப் பூச்சியைக் காலால் நசுக்கினான். க்ரச் என்று அது நசுங்கும் சப்தம் ஏதோ ஒரு நினைவை கிளறியது . என் அனுமதியில்லாமல் ஒரு கேவல் உள்ளிலிருந்து வந்தது. எனக்கே நாராசமாக ஒலித்தது. அண்ணன் ‘குட்டி’ என்பது போல அனிச்சையாக என் கையைப் பிடித்தான். நடுவில் பிறந்தவளை யாராவது குட்டி என்று அழைப்பார்களா?
அண்ணியும் அபியும் சட்டென்று எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அண்ணி அண்ணனின் கை என் கையைப் பற்றியிருப்பதை, முகத்தில் எந்த உணர்ச்சியுமற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள். எட்டு ஒன்பது வயதில், ஏதோ கோபத்தில் சில மணி நேரங்கள் செம்மரப் பெட்டியில் பதுங்கியிருந்து பின் பயந்து நானே வெளியே வந்த போது இருந்த அதே கவலை தோய்ந்த முக பாவனையுடன் மறுபடி திரும்பி எங்கோ வெறிக்கத் தொடங்கினான் அவன். இப்போதும் அதே செம்மரப் பெட்டியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறான். ஆனால் சிறுவயதில் ஒரு நொடியில் அந்த கவலை மறந்து சிரித்த சிரிப்பெல்லாம் எப்போதோ தொலைந்து போயிருந்தது. தொடர்ந்து விக்கலெடுப்பது போல அந்த கேவலை மாற்ற முயன்று தண்ணீர் குடித்தேன். நான் வந்திருக்கவே கூடாது என்று நூறாவது முறையாக என்னையே நொந்து கொண்டேன்.
அண்ணியும் அபிராமியும் இடித்துக்கொண்டு நின்றபடி, திறந்த அலமாரியிலுள்ள அம்மாவின் சேலைகளை ஒன்றொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அபிராமி தான் இதில் மிக மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். அண்ணி திரும்பி நின்றிருந்தாலும் அவளது முகத்தில் எப்போதும் போல எங்களைப் பார்த்தால் மட்டும் தோன்றும் ஒரு சிறு இளக்காரம் ஓடும் புன்னகையைக் கொண்டிருப்பாள் எனத் தோன்றியது . அவள் எங்களைப் போலக் கிடையாது . கான்வென்டில் படித்தவள். நுனிநாக்கு ஆங்கிலம். பணக்கார வீட்டின் ஒரே பெண். அமைதியையே கூரான ஆயுதமாக பிரயோகிப்பவள். ஒரு சிரிப்பால் , ஒரு உதட்டுச்சுழிப்பால் எதிரில் இருப்பவரை அவமானப்படுத்த, காலில் போட்டு மிதித்துத் தள்ள முடியும் என்று அவளைப் பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டேன். சமவயதான எனக்கு அதே அளவு வக்கிரங்களெல்லாம் இல்லாமல் இல்லை என்ன ஒன்று, அதை அவளைப் போல நாசூக்காக காண்பிக்கத் தெரியாது. அவ்வளவுதான். அண்ணன் அவள் முன்பு தன் இயல்பை இழந்து நிற்பதைப் பார்ப்பதுதான் கொடுமையாக இருக்கும் . அவள்தான் அண்ணனை அப்படி மாற்றி விட்டாளா இல்லை இவனே தாழ்வுணர்ச்சியில் அவள்முன் அப்படி ஆகிவிடுகிறானா என்று புரியவில்லை.
அவள் சேலை அணிவதே அபூர்வம். ஒரு மரியாதையின் பொருட்டு எங்களுடன் நிற்கிறாள். இதெல்லாவற்றையும் பற்றித் தன் அம்மாவிடம் சொல்லி ‘பிச்சக்காரக் குடும்பம்’ எனச் சிரிப்பாளாயிருக்கும். இங்கிருந்து தப்பி எங்காவது ஓடிவிடலாம் என்ற நினைப்பை மீறி அமைதியாக உட்கார்ந்திருப்பதற்குக் கடும் உறுதி தேவைப்பட்டது .
எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல் அபி கர்மமே கண்ணாக, ஒவ்வொரு சேலையாகப் பார்ப்பதும் தனக்கு வேண்டும் என்றால், ஒன்றன்மேல் ஒன்றாகப் பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியின்மேல் வைப்பதும் , இல்லையென்றால் கீழே தரையில் போடுவதுமாக இருந்தாள். தனக்கு வேண்டாதவற்றைப் பற்றி அவள் என்றுமே அக்கறை கொண்டதில்லை. ஆனால் எனக்கு வேண்டும் என்பதை என்னிடமிருந்து பறிக்காமல் இருந்ததில்லை என்று நினைக்கும் போதே இது என்ன இந்தக் கழுதை வயதிலும் இவ்வளவு சிறுபிள்ளைத் தனமான எண்ணம் என்று என்னையே கடிந்து கொண்டேன். சிறுபிள்ளைத்தனம் என்று நாம் வரையறுக்கும் எல்லாவற்றையும் சிறு பிள்ளைகள் வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், வளர்ந்தவர்கள் உள்ளே பூட்டிவைத்துப் பெருந்தன்மை வேஷம் போடுகிறார்கள்.
அபிக்குத் தன்னைப் பாதுகாப்பது ஒன்றே தன் வாழ்வின் தலையாய கடமையாக இருந்தது. இப்போது அவளுடைய மகள் நித்திலாவையும் தான் என்ற உணர்வுடன் சேர்த்துக் கொண்டுவிட்டாள். அப்பா இறந்த போது அபிக்கு 19 வயது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். எனக்குக் கல்யாணம் முடிந்து 2 மாதம்கூட ஆகவில்லை. நான் செய்வதறியாமல் அவளைக் கட்டிக்கொண்டு உடைந்து அழுத அந்த நேரத்தில் கூட ‘உனக்கென்ன ! சரியான நேரத்தில கல்யாணம் முடிஞ்சிடுச்சு . நான் என்ன பண்றது. எனக்கு யாரு செலவு பண்ணி எல்லா காரியமும் பண்ணுவாங்க என்று அழுகையின் ஊடாகக் காதில் முணுமுணுத்தாள்”
இந்தப் பத்துக்குப் பத்து சிறிய அறையில் எல்லாச் சாமான்களையும் அடைத்து வைத்திருந்தார் அம்மா. பக்கத்தில் ஒரு பெரிய அறை . இடது புறத்தில் சின்னதாக பாத்ரூம். அவ்வளவுதான் வீடு. நாங்கள் எல்லோரும் வீட்டை விட்டுச் சென்றதும் இது போதும் என்று இங்கே குடிவந்தார். அந்தப் பெரிய அறையைச் சுத்தமாகப் பராமரித்து அழகாக வைத்திருந்தார். வாசற்கதவின் எதிரில் அழகான மர ஊஞ்சல். அதன் பக்கத்தில் ஒரு பெட்டியில் தன் தினப்படி பயன்படுத்தும் உடுப்புகளை வைத்திருந்தார், தென் கிழக்கு மூலையில் சிறு மேடையில் காஸ் அடுப்பு மற்றும் மிக்ஸி, அதற்கு அடியில் சொற்பமான பாத்திரங்கள் , சிறிய குக்கர். குறைவான மளிகை சாமான் டப்பாக்கள். வடமேற்கில் மணையில் ஒரு சிறிய வாழைப்பூ விளக்கு. அதன் உச்சியில் ஒரு இனுக்குப்பூ. சாயங்காலங்களில் துலக்கமாக எரிந்து கொண்டிருக்கும். எந்த அலங்காரப் பொருளும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு அழகு நிறைந்திருக்கும். எந்த இசையும் ஒலிக்காவிட்டாலும், பிடித்த பாட்டொன்றை நினைவிற்கு கொண்டுவந்து இருத்திவிடும் படியான அறை இது . எப்போதும் ஊஞ்சலில் தான் அமர்ந்திருப்பார் அம்மா. ஊஞ்சலில்தான் சாப்பாடு , தூக்கம் எல்லாமும். அம்மா இறந்த இந்த ஒரு மாதத்தில் வீட்டில் எதுவுமே மாறவில்லை ஆனால் எல்லாமுமே வேறாகத் தெரிந்தது.
அடைசலான சிறிய அறையில் அம்மா புழங்கியதாகவே தெரியவில்லை . இங்கு இரண்டு அலமாரியிலும் புடவைகள் , சில புகைப்படங்கள். இதெல்லாம் தனக்குத் தேவையில்லை என்று 20 வருடங்கள் முன்னரே முடிவெடுத்துவிட்டார் போலும்.
அபி ஒரு சேலையைக் கையுயர்த்திப் பிடித்தாள். இருட்டிக் கொண்டு வரும் பகலின் மீது எரிச்சல்பட்டதுபோல புளிச்சென்றுவிட்டு சுவிட்சைப் போட்டாள். சிறிய அறையில், ஆபாசமாகக் பல்லைக் காட்டுவது போன்று வெள்ளை டியூப் லைட் எரிந்து சாயும் வெயிலின் மங்கலான கோலங்களை அழித்தது . அப்போதுதான் எவ்வளவு இருண்டிருக்கிறது என்று புரிந்தது. பொன்வண்டு கலரில் இரட்டைக் கம்பிச் சரிகையுடன் , தலைப்பில் எளிமையாக இடைவெளிவிட்டு நான்கு கோடுகள். இப்போது பார்ப்பதற்கு எவ்வளவு எளிமையாக அழகாக இருக்கிறது . எந்த நேரத்திற்கும் எந்த இடத்திற்கும் பொருந்திப் போகும் புடவையாகத் தெரிகிறது.
“எதுக்கு நீங்க வந்தீங்க? அப்பா ஏன் வரல? எதுக்கு இந்த அடிக்கிற பச்சையில சேலை ? ஐயோ…” தலையில் அடித்துக்கொண்டேன்.
அபி பொன்வண்டு நிறப் புடவையை அவள் தேர்தெடுத்திருந்த மற்ற சேலைகளோடு பெட்டியின் மேல் வைத்தாள். சமன் குலைத்துவிட்டது போல மனதில் ஒரு ஆட்டம் தொடங்கி வயிறு வரை பரவி சுழன்று சுழன்று கடுமையானது. அபி மேலும் இரண்டு கட்டி சரிகைப் புடவைகளைத் தேர்ந்தெடுத்தாள். சில நூல்சேலைகளை வேண்டாமென்று கீழே போட்டாள். பிறகு என்ன நினைத்தாளோ பொன்வண்டுப் புடவையையும் அடுக்கியிருந்த வரிசைக்கு நடுவிலிருந்து எடுத்து கீழே போட்டாள். ஒரு வரம்போல கீழே விழுந்ததை எடுத்தேன். கண் மூடி முகர்ந்து பார்த்தேன். மடியில் பொக்கிஷமாக வைத்துக்கொண்டேன்.
அம்மாவின் அறியாமையைக் கண்டு அவ்வளவு எரிச்சல் வந்தது. கோபமும் அவமானமும் நிறைந்த குரலில் பல்லைக் கடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கேட்கக் கூடாதென்ற ஜாக்கிரதை உணர்வோடு
“இது ஸ்போர்ட்ஸ் டே மா இப்படி யாராவது வருவாங்களா? இப்படிப் பச்சை கலர் ல”
‘பச்சயில்லடி இது பொன்வண்டு கலர்’ என்றார் சிரிப்பு மாறாமல். அப்படியொரு சிரிப்பு.
பள்ளியில் விளையாட்டு தினத்திற்கு இந்தப் பட்டுப் புடவையும் காதில் கெம்புக்கல் பதித்த கம்மல் ஜிமிக்கியும் அதற்கு மேட்சாக்க் கழுத்தில் கெம்பு அட்டிகையும் கைநிறைய தங்க வளையல்களும் , தலையில் பூவுமாக அம்மா வந்திருந்தார். இப்படியான அதீத அலங்காரத்தில் அவரை நான் அதுவரை பார்த்ததில்லை.அம்மாவின் எல்லாப் புடவைகளும் நகைகளும் எனக்கு அப்போது அதீதமாகத் தோன்றும். ஆபாசமாகத் தோன்றும். ஆனால் இப்போது வசீகரிக்கின்றன. அப்போது ஏன் அப்படியிருந்தது ,எந்தப் புள்ளியில் மனம் இப்படித் தலைகீழாக மாறியது என்று புரியவில்லை .
அவரது நெளி மோதிரம் ஒன்று -கற்களோ, டிசைனோ எதுவுமற்று மெல்லிய கம்பியாக முன்னும்பின்னும் வளைந்திருக்கும்.அது ஒன்று மட்டும்தான் எனக்குப் பிடித்தமானது என்றும் மற்றவையெல்லாம் மிகையாக அழகற்று இருக்கிறதென்றும், அம்மாவை விகாரமாகக் காட்டுகிறது என்றும் பல முறை அம்மாவின் முகத்திற்கு நேரே சொல்லியிருக்கிறேன்.
“எல்லாத்தையும் அபிக்கே கொடுத்திடு, எனக்கு எதுவுமே வேண்டாம்” . அம்மா வழக்கத்திற்கு மாறாக எதாவது ஒரு நகை கூடுதலாக அணிந்தால் இல்லை ஒரு நல்ல புடவை கட்டினால் தவறாமல் இப்படி விஷமாகக் கக்கியிருக்கிறேன்.
“அந்த மோதிரம் மட்டும் எனக்கு” என்பேன்
“கேக்கறா பாரு…. இதென்ன ஒரு ஐநூறு பெறுமா? இது மட்டும் போதுமாடி” என்பார் அம்மா சிரித்துக்கொண்டே. அம்மாவிற்கு நான் என்ன சொன்னாலும் கோபம் வந்ததேயில்லை. அதுவும் ஏனென்று இன்றுவரை புரியவில்லை.
இடத்திற்கும், நிகழ்விற்கும் பொருந்தாத உடையில் ஒப்பனையில் வந்தது எனக்கு பெருத்த அவமானத்தைத் தந்தது. மற்ற அம்மாக்கள் எல்லோரும் நாசுக்கான வெளிர் நிற பருத்தி வாயில் சேலைகளில் நாகரிகமாக இருந்தது போலிருந்தது. அம்மா அங்கு தனித்து தேவையில்லாமல் எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதுப் போலிருந்தது. அந்த இடத்தில் நிற்க முடியாத அளவு வெட்கம் பொங்கிப் பொங்கி வந்தது .
அதற்குள் கூடைப்பந்து இறுதிச் சுற்று விளையாட்டுத் தொடங்குவதற்கான அறிவிப்பு வந்தது. அப்படியே அம்மாவை விட்டுவிட்டு ஓடினேன். எனக்கு அப்போதுதான் பள்ளியில் முதல்முறையாக ஏதோ ஒன்றிற்கான அங்கீகாரம் கிடைத்திருந்த நேரம். படிப்பிலும் சராசரிதான் என்பதால் எதிலும் முதலும் இல்லாது கடைசியும் இல்லாது கவனிக்கப்படாமலேயே கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தேன். கூடைப்பந்து விளையாட்டு எனக்கு, என்னை நிருபிக்கும் வாய்ப்பாக அமைந்தது, ஒரு புது மரியாதை தந்தது. பெரிய மனிதத் தோரணையில் அலைந்த நாட்கள் அவை. அதுவும் பெரிய பிரயத்தனங்கள் இல்லாமல் சரியாகக் குறிப்பார்த்துப் பந்தைக் கூடையில் சேர்ப்பது எப்படியோ எனக்கு இலகுவாக கைவந்தது. என் உயரமும் ஒரு காரணமாக இருக்கலாம் . அணியிலேயே நான்தான் உயரமானவளாக இருந்தேன் .பி.டி. டீச்சர் பாராட்டும் போதும் பிற தோழிகளின் முகத்தில் காணும் பொறாமையும் உலக சாதனை படைத்து விட்டதைப் போலிருந்தது.
பல முறை நான் உலக சாதனை படைத்துவிட்டதாகவே கனவு கண்டேன். அப்படிபட்ட பெரிய விளையாட்டு வீராங்கனையாவதற்கான திறமையெல்லாம் என்னிடம் இல்லை என்று அறிவிற்குப் புரிந்தாலும் என் கற்பனையில் தடையில்லாமல் பறந்தேன்.
உலகின் பல்வேறு நாடுகளில் நான் விளையாடிப் பரிசு பெறுவது போலவும், என் அணி மிக மோசமாக விளையாடிய போதும் நான் ஒற்றையாளாகப் பல பாய்ண்ட்டுகள் எடுத்து அணியை காப்பாற்றியது போலவும் பெரும் கற்பனைகளில் மிதந்த நாட்கள். பல பல கதைகளை மனதில் ஜோடித்துப் பூரித்துப் போவதே என் அன்றாட வேலையாக இருந்தது. இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது ,அதில் ஒன்றில் கூட அணியில் எல்லோருடனும் சேர்ந்து வெற்றிபெற்றதாக யோசித்ததேயில்லை. எல்லோரும் படு மோசமாக விளையாடி நான் மட்டுமே அதி உன்னதமாக விளையாடுவேன் என்கிற மாதிரிதான் அந்தக் கற்பனைகள் ஓடும்.
தான் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும் , தான் மட்டுமே தனித்து உயர்ந்தவளாக தெரிய வேண்டும் என்ற மனதின் விழைவாக இருக்கக்கூடும். இதில் வீட்டில் உள்ளவர்களைவிட பக்கத்துத் தெரு ஜஸ்டின் நான் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்பதே என் தீராத ஆசையாக இருந்தது. அவன் தங்கை என்னுடன் அணியில் இருந்தாள்.அவளை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்றாலும் வலிந்து அவளுடன் நட்பாக இருந்தேன்.அவன் அன்று வருவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன என்பதை அவள் பேச்சிலிருந்து ஊகித்தேன் . அவனும் கால்பந்து ஆடுபவன் .
ஒருநாள் அவளுடன் அவளது வீட்டிற்குள் நுழைந்த போது ஜஸ்டின் தன்னுடைய சட்டைய கழற்றி கொடியில் போட்டுவிட்டு, விளையாட்டு ஜர்ஸியை அணிந்து கொண்டிருந்தான் . அந்த இடைப்பட்ட நொடியில் மெலிதாகத் தசைகள் திரண்ட அவனது தோள்களையும் , முதுகையும் பார்த்த போது என்னுள் ஏற்பட்ட பரவசமும் ,விம்மி விம்மி வெளியில் வர துடிக்கும் ஏதோ ஒரு களிப்பும் எளிதில் அடங்க மறுத்தது . இந்த உணர்ச்சிக் குவியலை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வீட்டிற்கு வருவதே பெரும் பாடாக இருந்தது அன்று. தெருவில் எல்லாரும் என்னையே முறைத்துப் பார்ப்பது போலிருந்தது. தனியறையில் கதவடைத்துக்கொண்டு அவனையே , குறிப்பாக அவனது சட்டையில்லாத உடம்பையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அதெல்லாம் வீட்டில் சாத்தியமில்லை என்பதால் கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன்.
இதுவரை தூங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று முதன் முறையாக விழித்தெழிந்தது. இனி அது லேசில் அடங்காது என்பதும் புரிந்தது. பின்னால் திரும்பிப் போகும் வழியை அடைத்துக் கொண்டே இருந்த மாயப் பாதை ஒன்றில் பயணிப்பதுபோல உணர்ந்தேன். முன்னே செல்வது ஒன்றே வழி என்று, மற்ற எல்லா நினைப்புகளையும் புறம் தள்ளிவிட்டு உடம்பைத் தன்னிச்சையாகச் செலுத்தும் ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் வந்தேன்.
ஒரு வழியாக உடம்பு அடங்கி என் பிடிக்குள் வந்துவிட்டது என்று நினைத்த போது மறுபடி அவன் கைகளைத் தூக்கி சட்டையை மேலே பிடித்திருந்த காட்சியை நினைப்பேன். அப்போது பரந்த விரிந்த அவனது முதுகும் , திரண்டு நிற்கும் தோள்களும் கண்முன் வரும். அவனது கூரான கண்களையும் உதட்டையும் நினைத்துக் கொள்வேன். மறுபடி அந்தப் பரவசம் உடம்பு முழுவதும் வியாபிக்கும். வீட்டிற்கு வந்து தனிமையில் அதை உணர்வது வெறொரு உலகத்திற்கு என்னைப் பிடித்து இழுத்துச் சென்றது . உடம்பும் மனதும் சேர்ந்து செய்த ரசவாதத்தில் என்னை முழுமையாக ஒப்படைத்தேன். இயல்பில் இந்த உணர்வு என்ன செய்யச் சொன்னதோ அதைக் கேள்வி கேட்காமல் செய்தேன். காலிலிருந்து தொடங்கி அலையலையாக முழு உடம்பும் துடித்துத் துடித்து அடங்கியது . வீட்டிலிருந்த ஒரே கழிவறையிலும் வெகு நேரம் இருக்க முடியாது . எங்காவது யாருமே இல்லாத இடத்திற்குச் சென்றுவிடவேண்டும்போல இருந்தது. ஜஸ்டின் மட்டும் உடனிருந்தால் போதும் . மறுபுறம் தீராத குற்றணவுர்ச்சியும் ஏற்பட்டது. நான் செய்வது மன்னிக்க முடியாத பெரும் தவறென்று நினைத்தேன். ‘சீ’ என்று என் மீது ஏதோ ஒரு அசிங்கம் ஒட்டிக்கொண்டது போன்ற அசூயை ஏற்பட்டது . அதெல்லாம் சில நொடிகளுக்குத்தான். சூதாடியின் அடக்க முடியாத அவசரத்துடன் அதே பரவசத்தை உடலும் மனமும் திரும்பக் கேட்டது . இந்த கிறக்கத்திலேயே பல நாட்கள் கழிந்தன.
அம்மாவை அந்த ஒப்பனையில் பார்த்தது என் எல்லாக் கிளர்ச்சியையும் வடிய வைத்துவிட்டது. விளையாட்டில் மனம் நிலைகொள்ள மறுத்தது. சுற்றி நின்றிருப்பவர்களில் அம்மா மட்டும் தனியாக ,பளிச்சென்று தெரிந்தார். அந்தப் பக்கம் பார்ப்பதையே தவிர்த்தேன். பி் டி டீச்சர் எவ்வளவு உற்சாகப் படுத்தியும் என்னால் ஒரு முறைகூட பந்தைக் கூடையில் செலுத்த முடியவில்லை . அணியில் மற்றவர்கள் நன்றாக விளையாடியதால் எங்கள் அணி வென்று விட்டது என்றாலும் நான் தோல்வியடைந்த மனநிலையிலேயே இருந்தேன்.
அபி திரும்பி என்னைப் பார்த்தாள்.
‘இதை மட்டும் நான் எடுத்துக்குறேன்’ என்றேன். இந்த வார்த்தைகள் வாயிலிருந்து வந்த அடுத்த நொடியே நாக்கைக் கடித்துக்கொண்டேன். இந்த வாய்தான்- வேண்டாத இடத்தில் வேண்டாததை எல்லாம் எப்படிச் சரியாகப் பேசிவிடுகிறது. அண்ணனும் என்னைப் பார்த்தான் .பால்யத்தில் தொலைத்த ஒன்று அவனது கண்களில் தெரிவது போலிருந்தது. ‘குட்டி எல்லாம் சரியா வரும்’ என்று சொல்வது போல இருந்தது . யாராவது நடுக்குழந்தையைக் குட்டி என்று கூப்பிடுவார்களா? அவன் கூப்பிடுவான் . அம்மா அப்பா கூட அப்படி கூப்பிட்டதில்லை .அவன் மட்டுமே அப்படிக் கூப்பிடுவான்.
அபி எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அடுத்த அறைக்குச் சென்றுவிட்டாள். எனக்கு என்ன நடக்கப் போகிறதென்று புரிந்தது. ஆனால் அது எப்படி நடக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.
“ நீங்க ஜெயிச்சட்டீங்க டீ” . அந்தச் சிரிப்பு என் தோல்வியை இன்னும் ஆழமாக உணரவைத்தது.
“நான் ஒரு பாயிண்ட்டுகூட எடுக்கல” என்று முணுமுணுத்தபடி அம்மாவின் பிடியிலிருந்து விலகித் தள்ளிப் போகும் முனைப்பில் இருந்தேன். அப்படிச் செய்ய முடியாமல் ஒரு கையை இறுகப் பிடித்திருந்தார் . அவரது முகத்தில் தெரிந்த வெளிச்சம் எனக்குக் குரூரமானதொரு எண்ணத்தைத் தூண்டியது . எப்படியாவது இந்த சிரிப்பை துடைத்து அம்மாவை அழ வைத்துவிட வேண்டும் என்று இருந்தது.
அபி தனது கைப்பேசியில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அவளில்லாமல் நாங்கள் மூவரும் மேம்போக்காக எதையெதையோ பேசிக்கொண்டிருந்தோம்.
“நித்து வரேனு சொல்லுது” என்றாள் அபி. தன்னிச்சையாக எல்லார் முகத்திலும் ஒரு சிரிப்பு ஒரு இயல்பு வந்துவிட்டது .
“ நாளைக்கு டெஸ்ட், படிக்கணும்னு சொன்னியே”
“வரணும்னு அடம் பிடிக்கிறா”
“வரட்டும் விடு”
அரை மணி நேரத்தில் நித்துவின் அப்பா அவளை கொண்டுவிட்டார். அண்ணன் மட்டும் அவரது கார் வரை சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.
“பெரிமா இந்தக் கலர் சூப்பரா இருக்கு. பாட்டி புடவைதானே நான் எடுத்துக்கட்டா?” என்று நித்து என் மடியிலிருந்த புடவையை எடுத்தாள்
அவளது கையில் எடுத்தவுடன் அந்தப் பொன்வண்டு நிறம் அவளது கண்களில் பிரதிபலித்தது.
“எடுத்துக்கோடி செல்லம்”
அப்படியே அவள் கையில் புடவையைக் கொடுத்துவிட்டு அவளைக் கட்டிக்கொண்டேன்.
பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் பெண்கள் பிரிவில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொண்டனர். நிறைய அம்மாக்கள் ஓடுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு பார்வையாளர்களாக நின்றனர். போட்டியில் பங்கேற்று ஓடத் தயாராக இருந்த அம்மாவைப் பார்த்ததும் இதற்கு மேல் அவமானப்பட என்னால் முடியாது என்ற கசப்பு என்னுள் பரவியது. ஜஸ்டினின் அம்மாவும் போட்டியில் இருந்தார். ஜஸ்டின் என் பக்கத்தில் தான் நின்றிருந்தான். என்னை கவனிக்கவேயில்லை. அந்த நேரத்தில் அவன் கவனிக்காதது சிறு ஆறுதலைத் தந்தது .
அம்மா தன் நெற்றியின் வேர்வையை புடவை தலைப்பால் தொடைத்து அதை அப்படியே இழுத்துச் சொருகிக்கொண்டார். ஐவரில் அம்மா மட்டுமே தனித்துத் தெரிந்தார்.
கல்யாண விசேஷத்திற்குச் செல்வது போன்ற தோற்றத்தில் ஓட்டப் பந்தயத்தில் ஓட உற்சாகமாக, புன்னகையுடன் நின்றிருந்தார். விட்டதைப் பிடித்துவிட வேண்டும் என்பதுபோல ஒரு தீவிரம் தெரிந்தது. செருப்பில்லாத வெறும் கால்களில் – முன்னே வலது காலை வைத்து விசிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மதிய வெயிலில் வேர்வை வழிந்துக் கொண்டிருந்தது. தன் கைகளைப் புடவையின் இரு புறமும் தேய்த்துத் துடைத்துக் கொண்டார். இத்தனை தீவிரத்தை அவரது கண்களில் நான் பார்த்தேயில்லை. இதுவரை தனக்கு மறுக்கப்பட்ட அனைத்தையும் ஓரே மூச்சில் எட்டிப் பிடித்துவிடலாம் என்ற முனைப்புத் தெரிந்தது. அம்மாவின் ஜாடையே இல்லாத வேறொரு பெண் போலிருந்தது. விஸில் அடித்த சத்தம் என் காதில் விழுந்து, மனது உணர்வதற்கு முன்னர் அம்மா ஓட ஆரம்பித்திருந்தார். ஒரு படகைச் செலுத்தும் துடுப்புகள்போல மடக்கிய கைகளை முன்னும் பின்னும் வினோதமாக ஆட்டிக்கொண்டு ஓடினார். அதற்கு ஒத்திசைவாகக் காதின் ஜிமிக்கி அவளது கழுத்திலும் முகத்திலும் மாறி மாறி மோதியது – அப்போது கண்டிப்பாக வலித்திருக்கும். ஆனால் அதையெல்லாம் உணரும் மனநிலையில் அம்மா இல்லை- அந்த வெயிலில் புடவையின் நிறம் பச்சையும் மஞ்சளுமாக மாறி மாறி பளபளக்க நெற்றியில் குங்குமப் பொட்டு வேர்வையில் கசிந்து மூக்கில் வழிய ஒரு ஓரத்தில் நின்றிருந்த என்னைக் கடந்து அம்மா ஓடினார் . பின்னால் தலையில் வைத்திருந்த பூச்சரம் இடமும் வலமும் வெறி பிடித்ததுபோல ஆடிக் கொண்டிருந்தது.
ஜஸ்டினின் அம்மாவையெல்லாம் முந்திக்கொண்டு ஓடினார். முதலாவதாக வந்த அம்மாவின் வெற்றி என்னுள் ஏதோவொன்றைக் கிளர்த்தியது. காரணமேயில்லாமல் பழி வாங்க வேண்டும் என்று தோன்றியது .கூட்டத்தின் ஆரவாரத்தில் அதே பைதியக்காரச் சிரிப்புடன் அம்மா பரிசைப் பெற்றுக்கொண்டார். நான் தலை குனிந்திருந்தேன்.
மூச்சுவிட முடியாமல் தொண்டையடைக்க வெளியில் வந்தேன். ஊஞ்சலில் உட்கார்ந்து பார்த்தேன் அதுவும் தலைச்சுற்றலைத்தான் ஏற்படுத்தியது . எழுந்து வாசலிற்கு வந்தேன். வேப்பம் பூக்கள் இறைந்து கிடந்தன. அம்மா வெள்ளை வேட்டியை விரித்து தூசியில்லாமல் சேகரித்து வெயிலில் சுக்காக உலர்த்தி மூவருக்கும் கொடுப்பார். சிறிய தோட்டத்தைத் தாண்டி ரோட்டில் வண்டிகளின் இரைச்சல் சத்தம் சற்று ஆசுவாசமாக இருந்தது. அங்கிருந்த குழாயைத் திறந்து குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்ததும் அழுகையுடன் அப்பாவிடம் புகார் கூறினேன். இனிமேல் அம்மா என் ஸ்கூல் பக்கமே வரக்கூடாது, அப்பாவால் வரமுடியவில்லை என்றால் யாருமே வரவேண்டாம். எனக்கு யாருமே தேவையில்லை என்று ஆங்காரத்தில் கத்திக் கொண்டிருந்தேன். அப்பா என்னைச் சமாதானப்படுத்தினார். விம்மி விம்மி அழுதழுது அமைதியானேன்.
அதன் பிறகு அம்மா பொன்வண்டுப் புடவையை உடுத்தியதாக ஞாபகமேயில்லை. அவர் அந்த நகைகளை அணிந்ததாகவும் தெரியவில்லை. அந்தச் சிரிப்பையும் அதன் பிறகு நான் பார்க்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் முதல் பேத்தி ஒரே பேத்தி , நித்திலா பிறந்த போதுகூட அம்மாவின் சிரிப்பிற்குப் பின் மெல்லிய வேப்பம்பூக் கசப்பு ஒன்று ஒளிந்திருந்தது.
அம்மாவின் புடவைக்கு அருகதையற்றவள் நான். அவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன். பல முறை அதைப் பேசவேண்டும் என்று முயன்றபோதெல்லாம் வார்த்தைகள் எண்ணங்கள் வயிற்றில் ஒரு சுழலில் சிக்கிக் கொண்டது போல வெளியில் வர மறுக்கும். அது ஒரு வகையில் நல்லது என்று இப்போது தோன்றுகிறது. அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும் அம்மா எளிதில் அதை ஒன்றுமில்லை என்று புறம் தள்ளியிருப்பார். மனதில் என்ன காயப்பட்டிருந்தாலும் அம்மாவிற்கு எங்களை மன்னிப்பது மிக எளிதாக்க் கைவந்தது .அப்படி மன்னித்திருந்தால் ,இப்படி ஒரு வலி இருந்திருக்காது. ஆனால் தலையில் இடியிடியாக மோதும் இந்த வலி எனக்கு இப்போது தேவையாயிருந்தது.. மனதின் ஒரு ஓரத்தில் அதை விரும்பினேன். அதில் திளைத்திருந்தேன். பதின்வயதின் குரூரம் இன்றும் என்னுள் எங்கோ ஒளிந்திருந்தது. அது என் மேலேயே திரும்பியிருந்தது.
பொன்வண்டு புடவை உடுத்தி அதே கெம்பு ஜிமிக்கி , அட்டிகை அணிந்து கை நிறையத் தங்க வளையல்கள், கழுத்தில் மாலையுடன் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தேன்.ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு தூணின் பின்னாலிருந்து ஜஸ்டின் மாலையுடன் தோன்றினான். அம்மாவைப்போல பிரகாசமாக சிரித்துக்கொண்டே வந்தான். இல்லாத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டு காத்திருந்தேன். அம்மா கோவிலிற்கு வெளியில் எங்கோ ஒரு தெருவில் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தாள், வேர்வையும் சிரிப்புமாக. அம்மா வந்தவுடன் மாலை மாற்றலாம் என்று அவனைக் காத்திருக்கச் சொன்னேன். அவனோ என்னைக் கட்டிப்பிடித்து நிதானமாக நீண்டதொரு முத்தமிட்டான். கண்கள் தானாக மூடின. பின் ஐயோ இத்தனை பேர் பார்க்கிறார்களே என்ற பிரக்ஞையுடன் அவனைப் பிடித்துத் தள்ளினேன். அடுத்த நொடி அவன் தேவாலயத்தில் கருப்பு ஸூட்டில் கையில் மோதிரத்துடன் அழகனாக நின்றிருந்தான். இந்தப் புடவையில் நான் அவனுக்குப் பொருத்தமாக இல்லை என்று அங்கேயே அதைக் களைந்து , நகைகளையும் களைந்து அரைநிர்வாணமாக நின்றேன். அவன் தனது கோட்டைக் கழற்றி என்னிடம் தந்து அணிந்துக்கொள்ளச் சொன்னான். நித்து பின்னாலிருந்து ஒரு பூங்கொத்தை என்னிடம் நீட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்காமல், மேலே பறந்து வந்த அசுரப் பொன்வண்டு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ‘க்ரச்’ என்ற சத்தத்துடன் என்னை கடித்து சாப்பிட பூதாகரமாக நெருங்கி கீழே பறந்து வந்துக் கொண்டிருந்தது…’பெரிம்மா பெரிம்மா இதை வாங்கிக்கோ’ என்று திரும்பத் திரும்ப கத்திய நித்தி, என் கைகளில் பூங்கொத்தைத் தினித்துக் கொண்டிருந்தாள்
‘பெரிம்மா… பெரிமா…. என்ன இங்க உக்காந்து தூங்குறீங்க’ . வேப்பமரத்தடியிலிருந்து
அவள் நீட்டிய கையைப் பிடித்து எழுந்தேன். அண்ணன் வாசற்கதவருகில் நின்றிருந்தான் .‘என்னாச்சு குட்டி’ என்றான் . யாராவது நடுவில் பிறந்த பிள்ளையைக் குட்டியென்று அழைப்பார்களா? அவன் மட்டும் அப்படி கூப்பிடுவான். ஒவ்வொரு முறை அவன் இப்படி அழைக்கும் போதும் என்னால் இதை நினைக்காமல் இருக்க முடியாது.
நாங்கள் மூவரும் வருவதை அபி எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும் பார்த்துக் கொண்டு நின்றாள். அண்ணியும் உள்ளிருந்து வந்தாள்.
‘எனக்கு உடம்பு சரியில்ல அபி .ஆட்டோ புக் பண்ணிருக்கேன். கிளம்புறேன்’
‘நான் ட்ராப் பண்றேன்’ என்றான் குட்டியை முழுங்கிவிட்டான். வழக்கமாக அண்ணி பக்கத்தில் இருந்தால் அப்படித்தான் செய்வான் . அவன் கண்களில் அந்தக் ‘குட்டி’ தெரிந்தது.
மழையில் நனைந்து சுத்தமான முற்றத்தின் நடுவில் ஓவியமாகச் சிறிய கோலமிட்டு அதில் பகட்டில்லாத ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தது போல மனம் சுத்தமாகத் துடைத்து மெலிதாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. என் பையை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினேன். அண்ணியும், அபியும், நித்துவும் வாசலில் நின்று கையசைத்தார்கள். வெகு நாட்களுக்குப்பிறகு அவர்களைப் பார்த்து உண்மையாக மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. அண்ணனைக் காணவில்லை. அவனிடம் ஃபோனில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினேன். அந்தக் குறுகிய தெருவின் திருப்பத்தில் அவன் தன் பைக்கில் வந்து என்னைப் பிடித்து விட்டான். அவன் பைக்கையும் அவன் முகத்தையும் பார்ப்பதற்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. ஆட்டோவை நிறுத்தி என்ன என்பதுபோல பார்த்தேன். அவனது முகத்திலும் அதே நிம்மதி பிரதிபலித்தது.
நீல நிறத்தில் லேசான காகிதத்தில் சிறு பொட்டலமாக மடித்து என் கைகளுக்குள் திணித்தான். படபடப்புடன் பிரித்துப் பார்த்தேன் . அம்மாவின் நெளி மோதிரம்.
‘அம்மாதான் உன்கிட்ட குடுக்கச் சொன்னாங்க.. அவங்க குடுத்தா நீ வாங்க மாட்டேனு என் கிட்ட ‘ஒரு நல்ல நாளா பாரத்து நீயே அவட்ட கொடுத்திடு’ னு சொன்னாங்க’
அந்தக் கணம் எப்படி இருவரும் கொஞ்சம் கூட அழாமல் சிரித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தோம் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. செம்மரப் பெட்டியிலிருந்து நான் வெளியே வந்ததும் அவன் முகத்தில் பார்த்த அதே சிரிப்பு அம்மாவின் சிரிப்பின் பைத்தியக்காரச் சாயலில். பரிபக்குவமான சிரிப்பாகவும் இருந்தது.
‘நீதான் கால் பண்ணிப் பேச மாட்ட , நான் பண்ணாலாவது எடுக்கலாம்ல’ என்றான்
‘பேசு .. வாரத்தல ஒரு தடவையாவது பேசு .. நான் முடிஞ்சப்போ வந்து பார்க்குறேன்’ என்றான். இறுகிய பல முடிச்சுகள் அவிழ்ந்து சீராக மூச்சுவிட முடிந்தது. உருவமில்லாத ஏதோ ஒன்று வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுவதற்கு முன்னர் இதே நிம்மதியோடு அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட வேண்டும் என்ற பதற்றமும் தொற்றிக் கொண்டது. அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் என்னால் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தர முடிந்தது.
‘பத்தரமா போய்ட்டு வா’ என்றான்
நான் தலையசைத்து விடை பெற்றேன்.
இந்த மோதிரம் அபியிடம் அல்லவா இருந்தது? அம்மாவிடம் திரும்ப எப்படி வந்தது? அபி கொடுத்திருக்க மாட்டாளே… இவன் உண்மையைச் சொல்கிறானா? அம்மா நிஜமாகவே அப்படிச் சொன்னார்களா? இல்லை என்னை சமாதானப்படுத்த இவனாக ஒன்று சொல்கிறானா? அவர்களுக்குள் என்ன நடந்தது? என்றெல்லாம் யோசித்துச் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது என்று தீர்மானமாக முடிவெடுத்தேன்.
உள்ளங்கையில் வளைந்து அழகாக மின்னிக்கொண்டிருந்ததை விரலில் மாட்டிக் கொள்ள தைரியம் வரவில்லை. நடுக்கமாக இருந்தது. நெடுநாள் கைவரப்பெறாத வரம் போல அப்படியே நீலக் காகிதத்துடன் கையை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.
இன்னும் உலராத, திட்டுத் திட்டாக ஈரம் மிஞ்சிய, வேப்பம் பூக்கள் உதிர்ந்த, தரையில் கோலத்தின் நடுவில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது என் அகல்.