மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’

நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்குச் சொன்னார். ‘‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தகத்தையே  எழுதியிருக்கமாட்டார்’’ என நான் சொன்னேன்.

கோத்தாவின் ‘சதி’ அவர் பதிவிட்டிருந்தபடியே மார்ச் 7 காலையிலிருந்து இலங்கையின் புத்தக விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆங்கிலப் பதிவு 180 பக்கங்களில் 1800 ரூபாய்க்கு (இலங்கை விலை) விற்பனை செய்யப்பட்டது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வௌியேற்றுவதற்கான ’சதி’ எனத் தலைப்பிடப்பட்டிருந்ததுடன் ‘சதி’  என்பது  (The Conspiracy) பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. கோத்தாவின் முகத்தரிசனத்துடன் ‘சர்வதேச ஆதரவுடன் ஆட்சி மாற்றம் எவ்விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது’ எனும் நீண்ட வாசகமும் அட்டையில் இடம்பெற்றிருந்தன.

கோத்தாவின் சதியானது 15 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.

  1. அறிமுகம், 2. வௌித்தரப்புகளின் தப்பெண்ணங்கள், 3. 2019 இல் பொருளாதாரம் 4. உலகளாவிய கொவிட் – 19 தொற்றுநோய் 5. பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்தல் 6. முதலில் வாழ்வது – தடுப்பூசி இயக்கம் 7. அரசியல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 8. கைவிடப்பட்ட அந்நிய நேரடி முதலீடு மற்றும் இயற்கை விவசாய முயற்சிகள் 9. பற்றாக்குறை வரிசை மற்றும் கும்பல் வன்முறை 10. ஐந்தாவது கட்டுரையாளர்களால் ஸ்திரமின்மை 11. கடினமான பொருளாதாரக் கொள்கை 12. தவறான கட்டுமானங்கள் 13. அரசியல் ஆட்சி மாற்றம் 14. சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றம் சீர்குலைவு, 15. பின்குறிப்பு

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக 69 24 255 வாக்குகள் (52.25) பெற்று 16 நவம்பர் 2019 அன்று கோத்தாபய ராஜபக்ச தெரிவானார். முன்னாள் இராணுவ அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்சே தனக்கு முன்னர்  பதவி வகித்திருந்த ஜனாதிபதிகளைப் போலன்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தின் ருவான்வெலிசாய விகாரையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். சிங்கள மன்னனாகக் குறிப்பிடப்படும் துட்டகைமுனுவினால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மன்னனாகக் குறிப்பிடப்படும் எல்லாளனின் சமாதியும் இங்கே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு நிகழ்ந்து இரண்டரை வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்திருந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பித்து விமானப்படை விமானத்தில் ஏறி 13 ஜூலை 2022 அன்று மாலைதீவில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூரில் இறங்கி 14 ஜூலை 2022 அன்று அங்கிருந்து தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக  இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதுதான் கோத்தா ‘சதி’ யெனக் குறிப்பிடுவதன் முன்கதைச் சுருக்கமாகும்.

இந்தச் ‘சதி’ வௌியீடு குறித்த மிகக் குறிய கால அறிவிப்பு மற்றும் வௌியீட்டுக்கெனப் பிரத்தியேகமான விளம்பரப்படுத்தல் இல்லாதிருந்த நிலையிலும் அமோகமாக விற்பனையாகியுள்ளது. மிகப் பெரும்பாலான புத்தகக் கடைகளில் ‘சதி’ விற்றுத்தீர்ந்துவிட்டது. அடுத்த சதியின் பிரதிகள் வாரஇறுதிக்குள் விற்பனைக்கு வந்து புத்தக அலுமாரிகளை நிரப்பும் என்றெதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தச் சதியை ‘நெட்பிளிக்ஸ்’ ஒரு திரைப்படமாக எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மெய்யாகவே சிறுபிள்ளைத்தனமாகப் புனையப்பட்டிருக்கும் இந்த மிகச் சாதாரணமான புத்தகத்திலிருந்து ஒரு திரைப்படத்தை எடுத்து அதை ஒரு பிளாக்பூஸ்டர் ஆக்க வேண்டுமென்றால் லோகேஷ் கனகராஜாலும் முடியுமோ தெரியவில்லை. கோத்தாவாக அவரே நடிக்கலாம். அவர் நடிப்பதற்கு வெட்கப்பட்டு மறுத்தால் தமிழகக் கவர்னர் ஆர்.என்.ரவியைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் வாய்மொழியாலும் உடல் மொழியாலும் கோத்தாவுக்கு எல்லாவிதத்திலும் மிகப் பொருத்தமாகவேயிருப்பார்.

கோத்தாவின் சதியைப் பற்றிய சுருக்கம் என்னவென்றால் சதி மற்றும் கும்பல் வன்முறை மூலமாக ஆர்வங்கொண்டிருந்த வளித்தரப்புகளின் ஆதரவு, அனுசரணை மற்றும் இலங்கைச் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபயை வௌியேற்றிய கதையாகும்.

கோத்தாவின் முன்னாள்  தீவிரவிசுவாசியும் சகபாடியுமான விமல்வீரவன்ஸ‘ மறைக்கப்பட்ட ஒன்பதுகதைகள்’  எனும் தலைப்பில் இதற்கு முன்னோடியாக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். 2022 காலப்பகுதியில் கோத்தாவின் ஆட்சியைக் கவிழ்த்த ‘அரகலயப் போராட்டம் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த ஆட்சிமாற்றத்துக்குத் திட்டமிட்டவர் எனவும் விமல் வீரவன்ஸ மேற்படி தனது நூலில் குற்றஞ்சாட்டியிருந்தார். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தார். இந்தநிலையில் விமல் வீரவன்ஸவின் புத்தகத்தில் சுமத்தப்பட்டிருந்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தி முன்வைக்குமொன்றாகக் கோத்தாவின் சதி இருக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக கோத்தாவின் சதியானது ஒரு சாதாரண மறுபரிசீலனையாகவிருந்தது. சதியை வலுப்படுத்துவதற்கான வெளிப்படையானதும் உறுதியானதுமான ஆதாரமொன்றையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவைவோ அல்லது வேறு எந்தவொரு நாட்டையுமோ நேரடியாகச் சுட்டிக்காட்டவில்லை. அமெரிக்கா முன்னெடுத்திருந்ததாகக் கருதப்படும் சர்வதேசச் சதித்திட்டம் பற்றிய பரபரப்பு புத்தகத்தின் எந்தவொரு பக்கத்திலும் துலங்கவில்லை. உண்மையில் இந்த விடயத்தில் கோத்தாவைக் காட்டிலும் விமல் வீரவனஸ சிறப்பாகவும் வௌிப்படையாகவும் சதியை வலுப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிடலாம். எனினும் கோத்தாவின் சதி சுவாரசியமான சங்கதிகள் நிறைந்திருக்கும் ஒரு புத்தகம்தான். இலங்கை அரசியலின் முக்கியமான ஆய்வாளரெனக் கருதப்படும் டி.பி.டி.எஸ்.ஜெயராஜ் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பாம்புக்கு வலி ஏற்படாமலும் குச்சிமுறியாமலும் பாம்பை அடிப்பது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. கோத்தாவின் புத்தகம் அத்தகையதொரு நடவடிக்கை’ எனக் கூறுகிறார்.

அநியாயமான ஆட்சி மாற்றத்தில் விளைந்ததாகக் கூறப்படும் சர்வதேச்ச் சதியைப் பற்றி ஒரு புத்தகத்தில் வழமையாக எதிர்பார்க்கப்படும் கனதியைக் கோத்தாவின் சதி கொண்டிருக்கவில்லை. பொதுவாகவே இத்தகையதொரு  சதியால் பாதிப்புக்குள்ளான ஒரு நிரபராதி அநீதியைக் கண்டு கொதிப்படைவார். கோத்தா அத்தகைய ஒருவரல்லர் அதனால் அவர் எழுதிய சதி வடிகட்டிய முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகவேயுள்ளது.

கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட 2019 நவம்பர் தொடங்கி பதவியிலிருந்து விலகிய 2022 ஜூலை வரைக்குமான அவரது ஆளுகைக் காலத்தில் மோசமானதும் ஊழல் நிறைந்ததுமான நிர்வகிப்பினையே செய்திருந்தார். அவர் பெருந்திமிர்பிடித்தவராகவும் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் திறனற்றவராகவுமே இருந்திருக்கிறார். எனினும் தனது குறைபாடுகளையோ வடிகட்டிய முட்டாள்தனத்தையோ உணர்ந்து ஒப்புக்கொள்ளாமல் இந்தச் சதி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன்பின்னால் மறைந்து நின்று சுயபச்சாதாபத்தில் மூழ்கிவிட எத்தனிக்கிறார்.

கோத்தா தனது பதவி விலகலுக்கு மற்றவர்களைக் குற்றஞ்சாட்டினாலும் ஒரு கத்தியை வெளிப்படையாகவே கத்தி என எடுத்துக் காட்ட விரும்பாதவராகவோ அல்லது இயலாதவராகவோ இருக்கிறார். அவர்  தன்னை வீழ்த்தியதாகத் தனக்கெதிராகப் பெரும் சதித்திட்டம் தீட்டியதாக எந்தவொரு மேற்கத்திய அல்லது கிழக்கத்திய நாட்டையோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களையோ கட்சி சகாக்களையோ குறைகூறவில்லை. பாதுகாப்புத் துறை அல்லது ஆயுதப்படைகளின் முக்கியமான அதிகாரிகளை விமர்சிக்கவுமில்லை. ஆனால் அவர்கள் அனைவரைப் பற்றியும் டி.பி.எஸ்.ஜெயராஜ் சொன்னதைப்போல பாம்புக்கு வலிக்காமலும் குச்சி முறியாமலும் பாம்பை அடிக்க எத்தனிப்பதுபோல் குறிப்பிடவே செய்கிறார்.

புலம்பெயர்ந்த புலிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போதுதான் கோத்தா கடுஞ்சினமுற்றுக் கடுமையாகத் தாக்குதல் நிகழ்த்துகிறார். ஆனால் அதுவும்கூட ஓர் அர்த்தமற்ற தாக்குதல்தான். புலம்பெயர்ந்த தமிழர் என வரும்போது அவர்களிலும் ஒரு தீவிரமான தீவிரவாதப் பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் நிச்சயமாக இலங்கை சீரழிந்து சிதறிச் சின்னாபின்னமாக வேண்டுமென்பதில் பெருவிருப்புடையவர்கள். அவர்கள் என்றைக்குமே கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகத் தொடர்ந்திருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். ஏனெனில் அவர் ஜனாதிபதியாக இருந்தால்தான் அவரது மோசமான திறனற்ற நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாகப் பொருளாதார வீழ்ச்சி அடையும், ஊழல் பெருகும். சிறுபான்மையினங்கள் மேலும் பிரிக்கப்படும். மெய்யாகவே அப்புலம்பெயர் தீவிரவாத வகுப்பினர் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையவிடாமல் இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டு நாட்டை மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்வதற்காக ரணில் விக்கிரமசிங்கே மீதுதான் கோபம் கொண்டிருக்கின்றனர்.

மனைவி அனோமாவுடன் அமெரிக்காவுக்குச் சென்று தனது மகன், மருமகள், பேரக்குழந்தை ஏனைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருக்க வேண்டுமெனக் கோத்தா விரும்புகிறார். எனவே அவர் சதி என்ற இந்தப் புத்தகத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வாஷிங்டனைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்போது தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் கோத்தா இதற்காகத் தனது ராஜபக்சே வம்சத்தையும் கட்சியையும் பௌத்த மதகுருமார்களையும் ஆயுதப் படைகளையும் குற்றஞ்சுமத்தி அந்நியப்படுத்திவிட முடியாத சங்கடத்துடனேயே இந்தச் சதியை எழுதியிருக்கிறார்.

2022 ஆரம்பித்தபோது இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. உணவு, எரிபொருள் இரண்டுக்குமே கடும் பற்றாக்குறை நிலவியது. எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் எரிவாயுக் கொள்கலன்கள் விற்பனை நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கும் நிலை தன்னியல்பாகவே உருவானது. இந்த வரிசை பல கிலோ மீட்டருக்கு நீண்டிருந்ததென்பது மட்டுமல்லாமல் இரவு பகலாகத் தொடர்ந்தது. இதன் விளைவாக அரகலய என்ற பெயரில் ஜனாதிபதி கோத்தாவுக்கெதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம் ‘வீட்டுக்குச் செல் கோத்தா’ என்ற கோஷத்துடன் (Go home koththa) உருவெடுத்தது.

இந்த அரகலய இயக்கம் ‘மிரிஹான’விலுள்ள கோத்தாவின் வீட்டைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் முப்படைத் தளபதி சவேந்திரசில்வாவும் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது அவர்களிருவருமே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் இதுவொரு திட்டமிட்ட செயல் எனவும் கோத்தா இந்தப் புத்தகத்தில் குறிப்பிட முனைகிறார். மேலும் இந்தத் தகவல் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாகக் கோத்தாவின் ‘மிரிஹான’ வீட்டுக்கு வந்து பார்த்தபோது அரகலய இயக்கத்தினர் சில நூறுபேர் வரை மட்டுமேயிருந்தனர். அதை உளவுப் பிரிவுத் தலைவர் திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த அவ்விரு அதிகாரிகளுக்கும் வீடியோ கால் மூலம் காட்டியிருந்த நிலையிலும் அவர்கள் அதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்தப் புத்தகத்தில் குற்றஞ்சுமத்த வந்த கோத்தா முடிவில் அவ்விரு அதிகாரிகளுக்குமிடையில் நல்லுறவில்லாமலிருந்ததும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததற்கு ஒரு காரணம் எனப் பூசிமெழுகி அவர்களையும் தனது குற்றச்சாட்டுகளிலிருந்து மென்மைப்படுத்திப் பாதுகாக்கவும் முயன்றிருக்கிறார். இப்புத்தகத்தில் தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்குவதற்குச் சதி செய்தவர்களைப் பற்றிச் சொல்ல வந்த கோத்தா அந்த விடயத்தையே (கருவையே) பேசாமல் தவிர்த்து மாறாக அதற்கெல்லாம் நியாயங் கற்பிக்கவே முனைந்திருக்கிறார். கோத்தா இதுவரையில் தனக்கெதிராக முன்வைக்கப்பட்டு வரும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் (ஈஸ்டர் தாக்குதல்), சீனி மற்றும் எண்ணெய் மோசடி, அசேதன உரத்தின் இறக்குமதியைத் தடை செய்து விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை இப்புத்தகத்தில் குறிப்பிடவேயில்லை.

கொரோனா இலங்கையில் உச்சமடைந்திருந்த காலத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமுற்ற முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்த விடயம் நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் கடுங்கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. அவ்விடயத்தைப் பற்றிக் கோத்தா இப்புத்தகத்தில் குறிப்பிடும்போது கொரோனா இறப்புகளின்போது முஸ்லிம் உடல்களை எரித்த விடயத்தில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது. அதற்கு மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைதான் காரணமாக இருந்தது. தனிப்பட்ட ரீதியில் நான் கொரோனாத் தொற்றால் மரணமான முஸ்லிம் உடல்களை எரிப்பதை விரும்பவில்லை. இந்த விடயத்தில் குறிப்பாகப் பேராசிரியர் மித்திகா விதானகே வழங்கியிருந்த ஆலோசனைப்படிதான் அவ்வுடல்கள் எரிக்கப்பட்டன’ எனக் கூறியிருக்கிறார். இவ்விடயத்திலும் கோத்தா தன்னை விடுவித்துக்கொள்ள முனைகிறார். (பேராசிரியர் மித்திகா இப்போது அவுஸ்திரேலியாவில் போய் குடியேறிவிட்டார்)கோத்தா தனது ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக நடந்ததொரு நிகழ்வாக கொவிட் தொற்று உச்சமடைந்திருந்தபோது அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயலாற்றியிருந்ததைப் பற்றி இப்புத்தகத்தில் முக்கியத்துவமளித்து தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை கொவிட் தடுப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயற்பாட்டு மையத்தின் தலைவராக இருந்து அதற்காகக் கடுமையாக உழைத்துச் சிறப்பாகச் செயலாற்றியிருந்த படைத்தளபதி சவேந்திர சில்வாவைப் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை. கொவிட் தொற்று உச்சமடைந்திருந்த காலத்தில் சவேந்திர சில்வாவின் சிறப்பான செயலாற்றுகை குறித்து ஊடகங்கள் அப்போது முக்கியத்துவப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தைக் கோத்தா எழுதி வௌியிட்டிருப்பதன் பிரதான நோக்கமே தனது ஆட்சிக்காலத்தில் நேர்ந்த அனைத்துத் தவறுகளுக்கும் தன்னால் பொறுப்புக் கூறமுடியாது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவனும் நானல்ல என்பதையும் அதற்குப் பல்வேறு நியாயங்களையும் முன்வைத்துத் தவறுகளை மற்றவர்கள் தலையில் சுமத்தித் தன்னையொரு புனிதராக முன்னிலைப்படுத்திக் கொள்வதேயாகும். ஒரு வகையில் தனக்குக்கீழ் பணியாற்றிய அதிகாரிகளை செயற்றிறனற்றவர்கள், அந்தந்தப் பணிகளுக்குப் பொருத்தமற்றவர்கள் எனச் சொல்ல வருகிறார். அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் அவர்தானே. செயற்றிறனற்ற பொருத்தமற்ற அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் என்ற அடிப்படையில் கோத்தாதானே அவ்விதம் நேர்ந்த தவறுகளுக்கு தார்மீக ரீதியாகப் பொறுப்புக்கூறியாக வேண்டும். இந்தத்  தப்பித்தலானது கோத்தாவின் ஆளுமை மற்றும் முகாமைத்துவ வழிநடத்தல் தவறானது என்பதையே மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறது. இதிலிருந்தே கோத்தா தன்னை நாட்டை வழிநடத்தப் பொருத்தமற்றவரென இப்புத்தகத்தில் அடையாளங்காட்டுகிறார்.

இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் ‘தனக்கெதிரான சர்வதேசச் சதி’ என்று புத்தகம் எழுதிய உங்கள் சகோதரன் கோத்தா அந்தச் சதிகாரர்கள் பற்றி ஏன் புத்தகத்தில் நேரடியாகச் சொல்லாது மறைத்திருக்கிறார். அது ஏன்?’ என கோத்தாவின் செய்தித் தொடர்பாளர் உதயங்க வீரதுங்கவிடம் கேட்டிருக்கிறார். ரஷ்யத் தூதுவரின் இந்தக் கேள்வியை உதயங்க வீரதுங்க கோத்தாவிடம் கேட்டபோது அவர் ‘நான் ஒரு முன்னாள் ஜனாதிபதி. இந்த நிலையில் நான் எப்படி அவர்களின் பெயர்களை புத்தகத்தில் குறிப்பிடமுடியும்’’ என உதயங்கவிடம் கேட்டிருக்கிறார். இதிலிருந்து கோத்தா அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இன்னும் அச்சத்துடன்தானிருக்கிறார் என்பது புலனாகிறது. இந்த நிலையில் ‘கோத்தா இந்தச் சதியை எழுதி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதைத் தவிர்த்திருந்தால்  அவருக்கு அது ஆரோக்கியமாக இருந்திருக்கும்’ எனச் சொல்கின்ற அவரது உறவினர்களே இதற்காக அவரை இப்போது மறைமுகமாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் டெய்லி மிரர் நாளிதழ் கோத்தாவின் சகோதரர் பஸில் ராஜபக்சவை நேர்காணல் செய்தபோது ‘உங்கள் மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய’ ராஜபக்சே எழுதிய புத்தகத்தை நீங்கள் படிக்கவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் அதிகம் படிக்கும் அரசியல்வாதி என்பது எமக்குத் தெரியும்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்கவில்லை?’’ என்ற கேள்விக்கு பஸில் ராஜபக்சே, ‘‘புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை. அதைப் படிக்கவில்லையென நான் கவலைப்படவுமில்லை. அவரது புத்தகத்தை இப்போது நான் படிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் உள்ளடக்கம் , பத்திரிகையாளர்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ எனப் பதிலளித்திருந்தார்.