முப்போகம் விளைகிற நன்செய் நிலங்களுடைய பிறவூர்களைப் போல நாங்கள் மைதானங்களுக்குக் கையேந்தி அலையவே தேவையில்லை. ஏனெனில் எங்களது ஊரைப் பொறுத்தவரை பார்க்குமிடமெல்லாம் பொட்டல் காடுகள்தான். ஊரே பெரியதொரு வட்டச் சட்டியில் காய்ச்சுகிற கருப்பட்டிக் குவியலாக மாறிக் கொதிக்கும். வெயிலைத் தலையில் வாங்கி நிற்கிற பனைமரங்கள் மட்டுமே ஆங்காங்கே நிற்கிற செம்மண் நிலத்தில், ஒருமழை மட்டும் பெய்துவிட்டால் போதும், தரை இறுகி விளையாடுவதற்குத் தோதான மைதானமாக மாறி விடும்.
புல் பூண்டுகூட முளைக்காத கட்டாந்தரை சூழ்ந்த அந்தப் பெருநிலத்தின் வயிற்றைக் கீறிச் செவ்வகக் கட்டமாய்ச் சுண்ணாம்புப் பொடியால் கோடு போட்டு வெகுவிரைவிலேயே மைதானத்தைத் தயார்செய்து விடுவோம். அந்த மைதானத்தின் வேகத்திற்கு வேறு நாடுகளில் இருக்கிற செயற்கைப் புல்வெளி மைதானங்களெல்லாம் தோற்றுப் போகும். வெள்ளை நிறப் பந்து அந்தச் செம்மண் மைதானத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஓடும் முறிக்கொம்பன் காளை மாட்டைப் போலவே வேகம் காட்டும்.
எங்களுடைய ஈர்ப்பு, பெருங்காதல், பெருமிதம் எல்லாமே அந்தச் செம்மண் மைதானம்தான். பிறவிடங்கள் எங்கேயும் காணத் தட்டுப்படாத சொடக்குத் தக்காளியைப் போல எங்களுக்கு அது அரிதானதும். வெயிலும் புழுதியும் சாரைகளைப் போல முயங்கித் தத்தளிக்கிற நிலத்திலேயே காய்ந்து புழுங்கியதால், பச்சை என்றாலே எங்களுக்கெல்லாம், பண்டிகை நேரங்களில் மட்டுமே கிடைக்கிற முந்திரிக் கொத்தைப் போலவும். மழைக்காலங்களில் மட்டும் வயல் வரப்புகளில் விளைந்து கிடக்கும் அதலைக்காயைப் போல இளம்கசப்பு எந்நேரமும் நுனிநாக்கில் ஒட்டியிருக்கும் வாழ்வும்.
நீலகிரி மலைக்கு ஹாக்கி விளையாடப் போன போது, வானை நிறைத்து விரிந்து கிடந்த, பனிப்புகையில் குளித்த பெரும் பச்சை நிறத்தைக் கண்டதும், “அட்ரா சக்கை. என்னா ஒரு குளிர்ச்சி” எனச் சொல்லி, மாத்தையா சிறுவனைப் போல உடனடியாகத் துள்ளிக் குதித்தான். நாங்கள் போன அரசுப் பேருந்து நொண்டியடித்து மெல்ல ஒரு யானையைப் போல நடைபோட்டு மலையுச்சிக்கு மேலேறிய போது, அதில் இருந்து குதித்துக் கீழே இறங்கி உடன் ஓடி வந்து, மறுபடித் தாவியேறி என கோடை மழையைக் கண்டவனைப் போலத் துள்ளிக் கொண்டிருந்தான் மாத்தையா.
வழக்கமாகப் பேருந்து நடத்துநர்கள் இந்த மாதிரிச் செய்கைகளைக் கண்டிக்கிறவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அந்தப் பேருந்தின் நடத்துநர் மாத்தையாவின் செய்கைகளைச் சிரித்தபடி பார்த்துக்கொண்டே, “காணாத கண்டவனுக்கு எல்லாமும் அதிசயமாத்தான் தெரியும். ஆனா வாழ்ந்து பார்த்துட்டா இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது புரிஞ்சுடும்” என்றார்.
நாங்கள் இருவரும் நீலகிரி மாவட்ட ஹாக்கி அணிக்கு விருந்தினர் விளையாட்டு வீரர்களாகப் போய்க்கொண்டு இருந்தோம். விளையாட்டில் இப்படிக் கொண்டான் கொடுத்தான் வேலைகள் நடப்பதுண்டு. முக்கியமான போட்டிகளின் போது இப்படி வெளியூர் அணியில் இருந்தெல்லாம் ஆட்களை இறக்குமதி செய்து கொள்வார்கள். விளையாடுவது என்பதைத் தாண்டிக் கையில் இந்த ஏற்பாட்டின் காரணமாகப் பணமும் கிடைக்கும். அதன் காரணமாக மட்டும் அந்த வாய்ப்பை நாங்கள் இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை.
எங்களுக்கு விரிந்த அந்தப் பச்சைப் பட்டை, அந்தப் பட்டின் சரிகையில் அலங்காரங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கிற மலைகளை, காடுகளைப் பார்க்க வேண்டும். குளிர்ச்சி என்பதன் முழு அர்த்தத்தை உணர்ந்து பார்க்க வேண்டுமென நினைத்தோம். எங்களது ஊரில் குளிர்காலங்களில் தாங்கவே முடியாமல் அரிசிச் சாக்கைப் போர்த்திப் படுத்துக் கிடந்திருக்கிறோம்தான். ஆனால் பகலில்கூடக் குளிர்கிற இடம் இந்தப் பூமியில் உண்டென்பதே முதலில் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அடிக்கடி மாத்தையா என்னிடம், “அதிகப்பட்சமா இந்தப் பொட்டல் காட்டில நாயைப் பார்த்து இருக்கோம். இல்லாட்டி நரியைப் பார்த்து இருக்கோம். என்னைக்காச்சும் மலையுச்சியில போயி உக்காந்து புலியைப் பார்க்கணும்டா” என்பான். அதற்கான வேளை கனிந்து வந்துவிட்டதாகக் கருதியே உடனடியாக நீலகிரி மாவட்ட ஹாக்கி அமைப்பின் அழைப்பை ஒத்துக்கொண்டோம்.
மதியம் போலப் போய் இறங்கிய எங்களை கோபிநாத் வந்து வரவேற்று அழைத்துப் போனான். மரங்கள் அடர்த்தியாய் சூழ்ந்த, மேடுபள்ளங்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதை வழியாக அவனுடைய வீட்டிற்கு அழைத்துப் போனான். மாத்தையாவும் நானும் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு வெறும் மேலோடு நடந்தபோது கோபிநாத், “விருந்தாளிங்கற அடிப்படையில ஒருநாளைக்கு இந்தச் சேட்டையை எல்லாம் மலை பொறுத்துக்கிடும்டா. நாளைக்குச் சாயந்திரம்போல போட்டு உலுக்கிடும். அப்ப கழட்டுங்க பார்ப்போம் சட்டையை. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுடா. ரெண்டு பேருமே கடோத்கஜன் மாதிரி உருண்டு திரண்டு இருக்கீங்க. எதிர்ல வர்றவனை முட்டப் போற காட்டு மாடு மாதிரியும் தெரியுறீங்க. புல் பேக் பொஷிஷன்ல ஆடுறவங்களை பார்த்து எதிராளி பயப்படணும். அதாண்டா உங்க ரெண்டு பேரோட பலமும்” என்றான். அதைக் கேட்கையில் இருவருக்குமே காதல் வயப்பட்டவர்கள் மாதிரி கோணிக்கொண்டு சிரிப்பு வந்தது.
கையில் ஹாக்கி மட்டையுடன் நடந்து கொண்டிருந்த நான், நான்கு கைகள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் படியான விட்டத்தில் இருந்த, வானை முட்டிக் கொண்டு போகப் பிரயத்தனப்பட்ட ஒரு மரத்தை நின்று பார்த்தேன். எதிர்வெயிலில் அதன் இலைகளின் அடிப்புறத்தில் இருந்த வெள்ளைக் கோடுகள் வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல மினுக்குவதையும் கண்டேன். இலைகள் ஆடுகையில் அதிலிருந்து பட்டுத் தெறித்த வெள்ளியொளி என் முகத்தில் சின்னச் சின்னப் புள்ளிகளாக விழுந்ததை உணர்ந்ததும் எனக்குள் பரவசம்கூடியது.
என் பரவசத்தைக் கண்ட கோபிநாத், “அதனாலதாண்டா இந்த மரத்துக்கு வெள்ளி ஓக்குன்னு பேரு. இதை மலைச் சவுக்குன்னுகூட சொல்வோம். இன்னொன்னு தெரியுமா? நம்ம வாழ்க்கைக்கும் இந்த மரத்துக்கும் தொடர்பும் உண்டு. நாம விளையாடற ஹாக்கி ஸ்டிக் இந்த மரத்தில இருந்துதான் செய்றாங்க” என்றான். அவன் சொல்லி முடித்ததும் ஓடிப் போய் அந்த மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். எங்கள் வாழ்வின் ஆதாரமே என முணுமுணுத்தேன்.
அப்போது திரும்பிப் பார்த்த போது மாத்தையா ஒரு யூகலிப்டஸ் மரத்தினடியில் நின்று கண்கலங்கிக்கொண்டிருந்தான். இருவரும் அவனை நோக்கிப் போன போது, மென்சத்தம் கொண்ட அழுகையாக மாறி இருந்தது. என்ன காரணத்திற்காக அழுகிறான் என்கிற யோசனையில் நின்ற போது, “எங்கப்பா ஞாபகம் வந்திருச்சுடா. அவருக்குத் தைல மணம்னாலே உசுரு. எந்நேரமும் நெத்தியில வலியில்லாட்டின்னாலும் அமிர்தாஞ்சனை சும்மா தேய்ச்சுக்குவாரு. இடுப்பில அந்த டொப்பியை முடிஞ்சு வச்சுக்கிட்டே சுத்துவாரு. அவரு செத்த அன்னைக்கு என் கையாலயே அவரோட நெத்தியில அந்தத் தைலத்தை தடவி, சுடுகாட்டுக்கு எடுத்திட்டு போன ஞாபகம் வந்திருச்சு. இந்தக் காடே தைலமா மணக்குது” என்றான் தேம்பியழுதபடி. கோபிநாத் அந்த உணர்வைப் புரிந்துகொண்டவன் மாதிரி மாத்தையாவை அணைத்துக்கொண்டான்.
யூகலிப்டஸ் இலையைக் கசக்கி நுகர்ந்துகொண்டே எங்களோடு நடந்து வந்தான் மாத்தையா. சித்திரைத் திருவிழாவில்கூட இப்படித்தான் சீனிச்சேவைக் கையில் வைத்துத் தின்றபடி நடந்து வருவான் என்பது எனக்கு நினைவில் வந்தது. சின்ன வயதில் இருந்தே அவன் எதற்கெடுத்தாலும் முணுக்கென அழுதுவிடும் இயல்புடையவன்.
மாத்தையாவும் நானும் ஒரே லைன்வீட்டில் அருகருகே வசிப்பவர்கள். அவனுடைய அப்பா செத்தபிறகு, திருவேங்கடத்தில் இருந்து குடும்பத்தோடு எங்களுக்குப் பக்கத்தில் குடிவந்தார்கள். அவனுடைய அம்மாவை நான் எப்போதும் பெரியம்மா என்றே அழைப்பேன். மாத்தையாவிற்கு இரண்டு தங்கைகள். என் தங்கைகளுக்கும் அவனுமே அண்ணன். அந்த லைன் வீட்டில் எல்லோரும் இரவு வரை அமர்ந்து தீப்பெட்டிக் கட்டைகளை அடுக்குவோம்.
குச்சிகளைக் கையில் சீட்டுக் கட்டுகளைக் குவித்து அடுக்குகிற மாதிரி தோதுபண்ணி, நடுவிரலாலும் பெருவிரலாலும் குச்சிகளைக் கோர்த்து எடுத்து, நீளவாக்கில் இருக்கிற சின்னச் சின்ன வரிசைப் பொந்துகளில், நிரப்ப வேண்டும். ஒரு கட்டைக்கு இந்த மாதிரி நூறு குச்சிகள் இருக்கும். ஒரு கட்டையை முழுவதுமாகக் குச்சிகளை நிரப்பி முடிக்க குறைந்தது பெரியவர்களுக்கு நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் அதை இருபத்தைந்து நிமிடத்தில் முடிக்க எனக்கும் மாத்தையாவிற்கும் அந்தச் சிறுவயதிலேயே போட்டி நடக்கும். பெரும்பாலும் எல்லாப் போட்டிகளிலும் அவன்தான் வென்றும் இருக்கிறான்.
எனக்காவது வெளியே போய் வேலை பார்த்துவிட்டு வருகிற அப்பா இருந்தார். ஆனால் மாத்தையாவிற்கு ஒருநாளைக்கு இருபது கட்டை அடுக்கினால்தான், தந்தை ஸ்தானம் குறித்த பதற்றவுணர்வு அவனிடம் அடங்கும். எப்போதும் அவன் தனது குடும்பம் சம்பந்தமான நடுக்கத்திலேயே இருப்பான். “அவங்க மூணு பேருக்கு முன்னாடி மட்டும் செத்துறக்கூடாதுங்கற பயம் இருந்துக்கிட்டே இருக்குடா. எங்கயாச்சும் யாராச்சும் பிச்சை எடுக்கிறதை பார்த்தா எனக்கு இவங்க ஞாபகம்தான் வருது” என்றான் சமீபத்தில்கூட.
மூன்றாம் வகுப்பில் துவங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துக் கொண்டு இருக்கிறோம். மறுவருடம் கல்லூரிக்குக்கூட ஒன்றாகவே போகத் திட்டமும் போட்டிருக்கிறோம். மாத்தையா குடும்பத்தை ஒப்பிடுகையில் என்னுடையது கொஞ்சம் மேலானதுதான். ஆனால் அதற்காக மாட மாளிகைகள் சூழ்ந்தது என அர்த்தப்படுத்திவிட முடியாது. மாத்தையா தொட்டுக்க ஏதாவது தொடுகறி மட்டும் எங்களுடைய வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான் இருவருக்குமான வித்தியாசம். கால்கிலோ கறியெடுத்து நாலுபேர் சாப்பிடுகிற வகையறாதான் நாங்களும்.
அவன் இருபத்தைந்து தீப்பெட்டிக் கட்டைகளை அடுக்கினால், நான் குறைந்தது பதினைந்தாவது முடிக்க வேண்டும் என்கிற கட்டாயச் சூழலே என்னுடைய குடும்பத்திற்கும். என்னுடைய அம்மா, “உன்னை விட குடும்பம்ணு வர்றப்ப மாத்தையாதான் ரெம்ப்ப் பொறுப்பா இருக்கான். அவன் மூத்திரத்தை வாங்கிக் குடிடா” என்பாள். ஆனாலும் மாத்தையா மீது எனக்குக் கோபமே வந்ததில்லை. என்னைவிட ஒருவயது பெரியவனான அவன் என்னை மனதாரப் பாதுகாப்பாக அணைத்தபடிதான் எல்லா இடங்களிலும் இருப்பான்.
ஆனால் உணர்வெழுச்சி என வருகையில் மாத்தையா என்கிற யானை அங்குசம் இல்லாமல், ஒருஅடிகூட முன்னே நகராது. அந்த விஷயத்தில் என்னுடைய வார்த்தைகளுக்கு மட்டுமே கட்டுப்படுவான். எதற்காகவோ ஓவென அழுது கொண்டிருக்கிற போது உடனடியாக என்னால் அவனை அடக்கவும் முடியும். சும்மா இருப்பவனை ஓவென என்னால் அழவைக்கவும் முடியும். ஒருவகையில் அவனுடைய உணர்வெழுச்சி சாவி போட்டால் ஓடுகிற பொம்மையைப் போலவே என்னிடமிருந்தது. ஆனால் பிறரிடம் அச்சாவியை அவன் ஒப்படைக்கவே இல்லை.
மைதானத்தில் மற்றவர்களை அச்சுறுத்துகிற கருப்புக் காரிக் காளைகளைப் போலத்தான் இருவருமே இருந்தோம். ஹாக்கி மைதானத்தில் எங்களுடைய இடத்தைத் தடுப்பாட்ட நிலை என்று சொல்வார்கள். கோல்கம்பத்தைச் சிவனின் மூலஸ்தானம் என்று கொண்டால், அதன் வாயிலில் இடதுபுறமும் வலதுபுறமும் நின்று காவல்காக்கிற சண்டனையும் பிரசண்டனையும் போல நாங்கள். எங்களிருவரைத் தாண்டித்தான் எவனும் கோல் கம்பத்தை நெருங்கவே முடியும்.
எங்களுக்குப் பின்னால் கோல்கீப்பர் இருந்தாலும், நாங்கள்தான் இறுதிப் பாதுகாப்பரண், அந்த அரை மைதானத்திற்கு. அரை வட்டத்தின் வயிறு வடிவிலான அந்தச் சுண்ணாம்புக் கோட்டிற்குள் எதிராளி நுழைந்ததும் இருவருமே கன்னி நாய்களைப் போலப் பந்தைக் கவ்விப் பிடிக்கத் தயாராகி விடுவோம். எதிராளி பந்தோடு அந்த வளையத்தை நோக்கி ஓடி வருகையில், பரஸ்பரம் இருவரும் கண்ணோடு கண் நோக்கிக் கொள்வோம். கணநேரம்தான் என்றாலும் அதன் வழியாக விலங்குகளுக்கே உரித்த எச்சரிக்கை உணர்வை விடுத்துக்கொள்வோம். சிலநேரங்களில் பனங்காட்டில் அலையும் நரியைப் போல, அந்தச் சமயத்தில் மாத்தையா, வ்வூவூவெனச் சிறுவூளையைக்கூட விடுவான், எதிராளியை மிரட்டுகிற தோதில்.
எங்களைத்தாண்டிப் பெரும்பாலும் எவனும் கோல் கம்பத்தை நோக்கிப் போனதே இல்லை என்பதால், எங்களது ஊரில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தோம். “இவனுங்க ரெண்டு பேரும் மனுசன்களா? இல்லை உண்மையிலயே துவார பாலகர்களான்னு தெரியலையே. ஏதோ கோல் போஸ்ட்டை அவனுக குடும்பச் சொத்துக் கணக்கா இப்படிப் பாதுகாக்கிறானுகளே?” என மூத்த வீரர்களே கிண்டலடிப்பார்கள். கூடவே அச்சமும்படுவார்கள், ஏனெனில் நாலைந்து தடவை நாலைந்து பேரை அப்படி முட்டித் தூக்கி மண்ணில் புரட்டவும் செய்து இருக்கிறோம்.
எங்களுடைய கோல் கீப்பர் துரை, “நீங்க ரெண்டு பேரும் முன்னாடி நிக்கறதால நாம்பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேண்டா. சிலநேரம் அப்படியே குட்டித் தூக்கம் போடலாமான்னுகூட தோணும். உங்களைத் தாண்டி என்னைக்காச்சும் பந்தை என் பக்கமும் அனுப்புங்கடா. இல்லாட்டி எனக்கு கீப்பிங்கே மறந்திட போகுது” என்பான் விளையாட்டாக. “ஒழுங்கா இப்படியே பார்ம் போகாம விளையாண்டீங்கன்னா ஏதாச்சும் கவர்மெண்ட் வேலைக்குப் போயிடலாம். உங்க கஷ்டமும் விலகிடும்” என எங்களது அணியைச் சேர்ந்த மூத்தவரான முருகேசன் அண்ணன் சொல்லி, அதற்கான பயிற்சிகளையும் எங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். முட்டையும் மாட்டுக்கறியும் வாங்கித் தின்ன சிலசமயங்களில் அவருடைய பைக்காசை எடுத்துத் தருவார் இருவருக்கும். ஒருவகையில் ஊராரும் நம்பிக்கையாக வளர்த்தார்கள் எங்களை.
கோபிநாத்திடம் இந்தக் கதையை எல்லாம் சொல்லியபடி நடந்தபோது, மாத்தையா குறுக்கே எதுவுமே பேசாமல் கேட்டுக்கொண்டு நடந்தான். அன்றைக்கு இரவு எங்களை எம்.ஆர்.சி வெலிங்டன் ராணுவ மையத்தின் உணவு விடுதிக்கு அழைத்துப் போனான் கோபிநாத். இந்திய ராணுவத்தின் பெருமைமிகு காலாட் படைப் பிரிவான அதிலும் ஹாக்கி அணி இருந்தது என்பதால், எங்களைப் போன்ற வீரர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டாலே அனுமதித்து விடுவார்கள். இந்தியளவில் மிகப் புகழ்பெற்ற அணியாக எம்.ஆர்.சி வெலிங்டன் இருந்தது.
அந்த அணியில் இடம்பெறுவது என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரனின், அதுவும் குறிப்பாக வறுமையில் உழல்கிற குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கனவும்கூட. பொருட்காட்சிகளில் விற்கப்படுகிற டில்லி அப்பளத்தின் அளவில் பாதி இருக்கிற மாதிரி ஜொலித்த, பூரிகளைக் கண்டு மாத்தையா பூரித்துப் போனான். நான் மூன்று தின்ற நிலையில், அவன் ஐந்து பூரிகளை மாட்டுக்கறிக் குழம்பில் முக்கித் தோய்த்து உண்டான்.
உணவு பரிமாறிய ராணுவவீரர், “முதல் நாள் ஆர்வத்தில திம்ப. அடுத்த நாள் உன்னால ரெண்டுக்கு மேல தாண்ட முடியாது” என்றார். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி அவரை ஏறிட்டுப் பார்த்த மாத்தையா, பின்னர் நிதானமான குரலில், “அதெல்லாம் எத்தனை நாள் வேணும்னாலும் இப்படித் திம்பேண்ணே. பல வருஷப் பசி உள்ளுக்குள்ள கொதிச்சுக்கிட்டு இருக்கு” என்றான். “தயங்காம சாப்பிடுறா தம்பி. நாக்குக்குத் திங்கவங்களுக்குத்தான் அந்தக் கணக்கெல்லாம். வயித்துப்பாட்டுக்கு அது எதுவுமே இல்லை. நாம அள்ளித் தின்னத்தான் இந்த பூமியே இருக்கு” என்று சொல்லிவிட்டு அந்த அண்ணன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, குவளையில் ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த ரம்மை வாயில் கவிழ்த்துக்கொண்டார். பிறகு இன்னொரு அகப்பை மாட்டுக்கறியை அள்ளி அவன் தட்டில் போட்டார்.
இரவு படுக்கையில் இருந்தபோது, “நாம ரெண்டு பேரும் எப்படியாச்சும் இங்க வந்து வேலைக்குச் சேர்ந்திடலாம்டா. சோத்துக்கு சோறும் ஆச்சு. சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம். மத்த வேலைகள்ல சம்பளத்தில இருந்து சாப்பாட்டுச் செலவுக்குத் தனியா ஒதுக்கணும்” என்றான். அப்புறம் என்ன நினைத்தானோ, “நம்ம தங்கச்சிகளுக்கு நல்ல சட்டை துணிமணிக எடுத்துத் தரணும்டா மொதல்ல. சோறுல்லாம் ரெண்டாம் பட்சம்” என்றான்.
எதற்காக அதைச் சொல்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. ஒருதடவை அவனுடைய தங்கச்சி தீப்பெட்டிக்கட்டைத் தூக்கிப் போகும்போது மேல் பட்டன்கள் இல்லாததால், அவளுடய இளம் மார்பு குலுங்குவது வெளியே தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டுப் பையன்கள் கிண்டலடித்தபோது ஓங்கி மிதிக்கப் போனான் மாத்தையா. அவர்களைக் கொன்றே போட்டிருப்பான் என்பதால், நான்தான் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். அந்தச் சம்பவம் நடந்ததில் இருந்தே அவனுடைய முகத்தில் நிரந்தரமான துயரச் சாயலொன்று படிந்துவிட்டதையும் கவனித்தேன்.
என்ன சமாதானங்கள் செய்தாலும் அந்தச் சாயல் அவனிடமிருந்து அகலவேயில்லை. “ஒழுங்கா தூங்கு. நாளைக்கு விளையாடி முடிச்சதும் ஊருக்குக் கிளம்பணும். ஒண்ணை விடாம திரும்பத் திரும்ப யோசிச்சு தொயரமாவே இருந்தா எப்படி ஒழுங்கா விளையாட முடியும்?” எனக் கண்டிப்பு கலந்த குரலில் சொன்னதும், தலையாட்டிவிட்டுத் தலையைப் போர்வையால் மூடிக்கொண்டான்.
மறுநாள் விளையாடி முடித்ததும் எங்கள் இருவரையும் வந்து சூழ்ந்த, எம்.ஆர்.சி அணியின் மூத்த வீரர்கள், “அருமையா விளையாடறீங்கடா? ஒழுங்கா விடாம போயி பிராக்டீஸ் பண்ணுங்க. எப்ப வேணும்னாலும் இங்க செலக்ஷன் நடக்கும். அப்ப சொல்லி அனுப்புறோம். வந்திருங்க. உங்களுக்கு ரெகமண்டேஷனே தேவையில்லை. இன்னைக்கு விளையாடினாப்பில அன்னைக்கும் சிறப்பா விளையாடிக் காட்டினா வேலை நிச்சயம்” என்றார்கள். அதைக் கேட்டதுமே மாத்தையா அந்த வெள்ளி மலைச்சவுக்கு மரத்தைப் போலவே வானத்தை நோக்கி முகத்தைக் காட்டி மின்னினான்.
கிளம்புகையில் எங்கள் இருவருக்கும் பை நிறைய வர்க்கியையும் மலைப் பூண்டுகளையும் நிரப்பிப் பரிசாகக் கொடுத்து வழியனுப்பினான் கோபிநாத். பேருந்தில் ஏறியதுமே, “போனவுடனே இதுல கால்கிலோவை உரிச்சுப் போட்டுப் பூண்டு குழம்பு வைக்கச் சொல்லணும்டா. சோத்துக்கு குழைச்சிக்கிட்டு அடிக்கலாம்” என்றான் மாத்தையா. “மத்தியானம் சாப்பிட்டதே எதுக்களிச்சுக்கிட்டு கெடக்கு. இவம் ஒருத்தன் நாளைக்குத் தின்றதை பத்தி இன்னைக்கே திட்டம் போடறான். டேய் அப்பப்ப திட்டம் போடுறா. அடுத்த வருஷத்துக்கெல்லாம் போடாத” என்றேன். சிரித்துக்கொண்டு சன்னல் வழியாக யூகலிப்டஸ் மணத்தை நெஞ்சில் ஏந்தியபடி வந்தான். இடையில் கண்கலங்கிய போது, சனியனுக்கு இதே வேலையாகப் போயிற்று என நான் தூங்க முயற்சித்தேன்.
திருச்சி பேருந்து நிலையத்திற்கு இரவு வந்து சேர்ந்தோம். ஒண்ணுக்கடிக்க நான் இருளிற்குள் ஓரமாக ஒதுங்கிய போது, மூன்று பேர் என்னைக் குடிபோதையில் வழிமறித்தார்கள். அவர்களிடம் இருந்து விலகி நடந்த என்னை விடாமல் வம்பிற்கு இழுத்தார்கள். அவர்களில் ஒருத்தனை நான் கோபத்தில் பிடித்துத் தள்ளியபோது, மற்ற இருவரும் என்னைப் பின்னால் இருந்து கைகளால் கவட்டை போட்டுப் பிடித்துக் கொண்டதும் சத்தம் போட்டேன்.
என்னுடைய சத்தத்தைக் கேட்ட மாத்தையா தின்று கொண்டிருந்த வர்க்கியைக் கீழே போட்டுவிட்டு ஓடிவந்தது தெரிந்தது. வந்த வேகத்தில் கீழேகிடந்து எழுந்து நின்றவனை நெஞ்சில் ஓங்கி மிதித்தான். இருளிற்குள் நின்று கொண்டிருந்தாலும் அந்தச் சண்டையைச் சிலர் வேடிக்கை பார்த்தார்கள். மற்ற இருவரையும் நான் உதறி அடித்துக்கொண்டிருந்த போது, கீழே விழுந்தவன் பெருங்கல்லைத் தூக்கிக் கொண்டு அடிக்க முன்னேறுகையில், இடுப்பில் எப்போதும் பாதுகாப்பிற்கென நாங்கள் வைத்திருக்கும் பட்டன் கத்தியை வைத்து வந்தவனின் கழுத்துக்குப் பக்கத்தில் மாத்தையா குத்தியதைக் கவனித்தேன்.
அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு குத்த வைத்து அமர்ந்த போது எதிரே மாத்தையா சண்டனைப்போல வெறிபிடித்து நின்றிருந்தான். எனக்குள் எச்சரிக்கையுணர்வு குத்துப்பட்டவனின் கழுத்தில் வழிந்த ரத்தத்தைப் போலப் பீய்ச்சியடித்தவுடன், மாத்தையாவின் கரங்களை இழுத்துப்பிடித்து ஓடத் துவங்கினேன். எங்களால் மூச்சிரைக்காமல் பல கிலோமீட்டர்கூட ஓட முடியும் என்பதால், அந்த இருளிற்குள் தட்டுப்பட்ட திசையைக் கிழித்துக்கொண்டு, வெறிபிடித்த மாதிரி முன்னோக்கி ஓடினோம். வாழ்வு முழுக்க இப்படி ஓடியிருக்கிறோம்தான் என்றாலும், அன்றைக்கு வேறுமாதிரியான ஓட்டம்.
பல கிலோமீட்டர் தூரம் ஓடியதாய் உணர்ந்த பிறகு, கால்கள் தள்ளாட மூச்சிரைத்து நின்று பார்த்தால், இன்னொரு ஊருக்கு வந்து சேர்ந்திருந்தோம். உடனடியாக அங்கே வந்து நின்ற பேருந்தில் ஏறி எங்களது ஊரை நோக்கிப் போனோம். அப்போதுதான் மாத்தையா அதைத் திக்கித் திணறிச் சொன்னான். ”அவசரத்துல என்னோட மஞ்சப்பையை அங்கயே போட்டுட்டு வந்திட்டேன். அதுல என் சர்டிபிகேட் இருக்கு. அதில பேர் அட்ரெஸ் எல்லாம் தெளிவா போட்டிருக்கு” என்றதும் உடனடியாகவே அனிச்சையாக என்னுடைய பையைத் தடவிப் பார்த்துக் கொண்டேன்.
என்ன சொல்வதென்றே தெரியாமல், சமாளிக்கும் விதத்தில், “இருட்டுக்குள்ள குப்பையோட குப்பையாத்தான் கிடக்கும். ஒண்ணுக்கடிக்கிற எடத்தில யாரும் குனிஞ்சு எதையும் தொடமாட்டாங்க” என்றேன். மாத்தையாவிற்கு வியர்த்துக் கொட்டி உடலெல்லாம் நடுக்கம் பரவியது. எனக்காகத்தான் அச்சண்டையில் ஈடுபட்டான் என்பதை உள்ளூர உணர்ந்தபோது, அவனது கரத்தை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டேன். என் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். ஆனாலும் வெளியில் எவரும் அறியாத பூனையினுடையதைப் போல அவனது உடலில் மெல்நடுக்கம் அப்பயணம் முழுக்க இருந்தது.
இடையில் கண்விழித்து, “நம்ம போலீஸை ஸ்கார்ட்லாந்த் யார்டு போலீஸ் மாதிரின்னு சொல்வாங்க. எப்படீன்னாலும் கண்டுபிடிச்சுடுவாங்கள்ல? கண்டுபிடிச்சு கேஸ் போட்டுட்டா இனிமே அரசாங்க வேலைக்கு போகவே முடியாதுல்ல?” என்றான். “அப்படீல்லாம் நடக்கவே நடக்காதுடா. அப்படி நடந்தா நான்தான் பண்ணேன்னு சொல்லிடறேன். நீ கவலைப்படாதே” என்றதும் மனம் சமாதானம் அடைந்தவனைப்போல மறுபடி படுத்துக்கொண்டான். அவனைச் சரிகட்டிப் படுக்க வைத்துவிட்டாலும், என் மனம் விடாமல் அரற்றியபடியே உடன் வந்தது. பேருந்தின் சன்னல் வழியாக உள்நுழைந்த காற்றுகூட அச்சத்தை மட்டுமே கடத்தியது.
விடிகாலையில் ஊரில் கால்வைத்ததுமே, “உனக்கும் எனக்கும் தவிர இது யாருக்கும் தெரியாது. நீயா எதையாச்சும் உளறி மாட்டிக்காத. நான் சொல்றதை மட்டும் கேளு” என்றதும் தலையாட்டிக்கொண்டான். அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் அடங்கியொடுங்கி நடந்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட வித்தியாசத்தை மற்றவர்களும் உணர்ந்தே இருந்தார்கள். “என்னங்கடா விளையாடறப்ப ஒரு போர்ஸூ இருக்குமே? அதைக் காணோம் இப்ப” என்றார் ஒருத்தர்.
அடுத்த பலநாட்கள் ஈகா சலூனில் போய் அமர்ந்து நாளிதழை எடுத்து வரிவிடாமல் படித்து அந்தச் சம்பவம் வந்திருக்கிறதா எனப் பார்த்தோம். அப்படி ஒரு செய்தியே எங்கும் தட்டுப்படவில்லை. முதலில் நான்தான் அந்த அதிர்ச்சியில் இருந்து வெகு விரைவாக வெளியேறினேன். மாத்தையாவைப் பின்னர் படிப்படியாக அதிலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆனாலும் அடிக்கடி அவன் அந்த நடுக்கத்திற்கு அவனையறியாமலேயே சென்றும் கொண்டிருந்தான்.
விளையாட்டு மைதானத்தில் இருக்கையில், யாராவது சும்மாகவேணும் திருச்சி என்று சொன்னால்கூட அவனுக்கு நடுக்கம் வந்து, ஆட்டத் திறன் பாதிக்கப்பட்டு மனதால் சுருண்டு அமர்ந்தான். சில போட்டிகளில் அதன் காரணமாக நாங்கள் தோற்றுக்கூடப் போனோம். “என்னடா காரி மாடுக வாயில நுரை தள்ள ஆரம்பிச்சிருச்சா” எனக் கேலிக்குக்கூட ஆளானோம்.
ஆனாலும் மாத்தையாவின் நடுக்கம் குறையவே இல்லை. ஒருநாள் அவனை வண்டிப் பெரியசாமி கோவிலின் பீடத்தின் முன்னே நிறுத்தி, “இதான் நான் சொல்ற கடைசி வார்த்தை. இப்படி இருந்தோம்னா நாம முன்னேறவே மாட்டோம். இனிமே இந்த சம்பவத்தைப் பத்தி என் வாயால ஏதாச்சும் சொன்னா மட்டும்தான் உனக்கு இந்த நடுக்கம் வரணும். வேற யார் வார்த்தையும் உன் காதில விழவே கூடாது. எனக்குச் சத்தியம் பண்ணு. ஒடன் பெறக்காட்டியும் நீயும் என் அண்ணன்தான். என்னை நம்பணும். என் வார்த்தையை நம்பணும்” என்றேன்.
சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்த மாத்தையா என்னைக் கட்டியணைத்துக்கொண்டான். அதற்குப் பிறகு அவனும் நானும் மைதானத்தில் சண்டனையும் பிரசண்டனையும் போலவே பிறரை முட்டி மோதத் துவங்கினோம். மாத்தையா அந்தச் சத்தியத்திற்குப் பிறகு அச்சம்பவத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டான்.
இடையில் என்னுடைய அப்பாவிற்கு மேலுக்கு முடியாமல் வேலைக்குப் போகவியலாத சூழல். இருவருடைய குடும்பத்திலுமே பொருள்வயிற் பிரிதலுக்கான சூழல் அழுத்தியது. கல்லூரிக்குப் போயெல்லாம் இனி படிக்க முடியாது என்கிற நிதர்சனம் எங்களிருவரையுமே அழுத்தியது. கலங்கி நிற்கையில், “கவலப்படாதலே ஒண்ணுமே நடக்காட்டியும் மூட்டை தூக்கியாவது உங்க எல்லோரையும் நான் காப்பத்திடுவேன்” என்றான் மாத்தையா. எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து விடவேண்டும் என உறுதிபூண்டு நாங்கள் இருவரும் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான் நீலகிரியில் இருந்து எங்களை மகிழ்ச்சியூட்டுகிற அந்த அழைப்பு வந்தது.
எம்.ஆர்.சி வெலிங்டன் ராணுவ ஹாக்கி அணிக்குப் புதிய வீரர்களைத் தேர்வு செய்வதற்கான முகாம். உற்சாகமாக்க் கிளம்புகையில், ”டேய் திருச்சி வழியா போகாம வேற வழியா அங்க போகறதுக்கு வாய்ப்பு இருக்கா?” என்றான் மாத்தையா. நான் அதுகுறித்து மேலும் பேச வாய்ப்பே தராமல் கிளம்பு என்கிற மாதிரி சைகை மட்டும் காட்டினேன். அச்சிறு சைகைக்குக் கட்டுப்பட்டது அம்மூர்க்கமான மாடு.
கோபிநாத் அப்போது அங்கில்லை என்பதால், ஏற்கனவே தெரிந்த பாதை வழியாக மாத்தையாவை அழைத்துக்கொண்டு போனேன். அமைதியாக என்னுடைய இழுப்பை மூக்கணாங் கயிறாகக் கொண்டு பின்னாலேயே நடந்து வந்தான். இரவு உணவு விடுதியில் பழையமாதிரி பீமராசனைப் போலத் தின்றான். ஏனோ அன்றைக்குச் சீக்கிரமாகவே உறங்கியும் போனான்.
மைதானத்தில் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி விளையாடவிட்டுப் பரிசோதித்துத் தேர்வு செய்துகொண்டிருந்தபோது, எங்களுடைய முறைக்காகக் காத்திருந்தோம். முதலில் மாத்தையாவை விளையாட உள்ளே அழைத்தார்கள். அவன் பிசிறில்லாமல் நன்றாக ஆடிக்கொண்டு இருந்தான். ஆனாலும் அவனுடைய மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிற வாய்ப்பு நிகழவில்லை இன்னும். இடையிடையே அவனுடைய கண்கள் என்னையும் நோட்டமிட்டன.
அப்போது என்னருகில் வந்து நின்ற எம்.ஆர்.சி அணியின் மூத்த வீரர், “டேய் தம்பி. இப்ப ஒரு புல் பேக்கு மட்டும்தான் செலக்ட் பண்ணப் போறாங்க. ரெண்டு பேர் எடுக்கலை. அதனால ரெண்டு பேருல ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு. அவனைவிட உனக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்கு. அதைக் கெடுத்துக்காத. ஒழுங்கா கவனமா விளையாடு. தடுப்பாட்ட நிலையோட அடிப்படையே எச்சரிக்கை உணர்வுதான்” என்றார்.
அந்த நேரத்தில் விசிலூதி இடைவேளை விட்டார்கள். அவர் சொன்னதைக் கேட்டதும் அந்தக் குளிரிலும் எனக்குக் குப்பென வியர்த்தது. உடலில் நடுக்கத்திற்கு நிகரான ஒருவுணர்வு வந்து குடிகொண்டது. மைதானத்தில் இருந்து ஓடிவந்த மாத்தையா, “என்னலே ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றான்.
மறுபடி உள்ளே நுழைய வேண்டிய அழைப்பும் வந்த நிலையில் அதைக் கேட்டான். அவன் மைதானத்திற்குக் கால் வைப்பதற்கு முன்பு, “மாத்தையா திருச்சீல இருந்து வந்து யாரோ ஒருத்தர் உன்னைப் பத்தி விசாரிச்சார்னு சொன்னாங்க” என்றேன்.
நான் சொன்னதைக் காதில் வாங்கிய அவனை மற்றவர்கள் மைதானத்திற்குள் இழுத்துப் போனார்கள். அவன் முறை தவறி மோசமாக விளையாடி கோல்களை வாங்கிக் கொண்டிருந்ததை எல்லைக் கோட்டிற்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்முறை வந்து என்னை உள்ளே அழைத்த போது, மைதானத்தின் வெள்ளைச் சுண்ணாம்புக் கோட்டைத் தொட்டு வணங்கி உள்ளே காலடியெடுத்து வைத்தேன்.
அப்போது என்னைத் தைலமணம் சூழ்ந்தது.