சமீபத்தில், புராணக் கதைகளில் வந்த வாசுகி பாம்பின் படிமங்களை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதையொட்டி ஏராளமான மக்கள் அந்த பாம்பின் மீதான புராணக் கதைகளுக்கு அறிவியல் விளக்கம் கிடைத்துவிட்டதாக பெருமகிழ்வுடன் அந்தசெய்திகளைப் பரப்பினார்கள். தங்கள் புராணக் கதைகளெல்லாம் கற்பனைகள் அல்ல, அவை உண்மை சம்பவங்களே என்று எண்ணியவர்களெல்லாம் படிக்காத பாமர மக்கள் இல்லை, நன்கு படித்த, சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள்.

புராணக் கதைகளில் வரும் இந்த வாசுகி பாம்பைப் பற்றிய தன்மைகளைத் தங்கள் அறிவை வைத்துக் கொஞ்சம் யோசித்தாலே அவையெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானவை என்று தெரிந்துவிடும், ஆனாலும் அந்த தர்க்கங்களையெல்லாம் மறுத்து இதை உண்மையென்னும் மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது?

வாசுகி பாம்பு மட்டுமல்ல, இது போன்ற ஏராளமான அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசமில்லை. கல்வி எப்போதும் அறியாமைகளை அகற்றும் என்பார்கள், ஆனாலும் அந்த கல்வியனால் இந்த மூட நம்பிக்கைகளை நிராகரிக்க முடியவில்லை. அதையெல்லாம் மீறி மக்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதற்கு என்ன காரணம்?

அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி என பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும்கூட, அறிவியலுக்கு புறம்பான கருத்துகளையும், மூட நம்பிக்கைகளையும் மக்கள் உடனே நம்பிவிடுகிறார்கள். அறிவியலின் அத்தனை அனுகூலங்களையும் அனுபவித்துக்கொண்டே இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளையும் மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கலாம். புறவுலகில் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் மனிதன் தனது அகத்தைப் பொறுத்தவரையில் இன்னமும் பெரிதும் மாற்றமடையாமல்தான் இருக்கிறான் என்பதைத்தான் இது காட்டுகிறது.

மூட நம்பிக்கைகள் என்பது பொதுவாகவே நமது கல்விக்கும், பொருளாதார நிலைக்கும் அப்பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகளும், சம்பவங்களும் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும், இனங்களிலும், மதங்களிலும் இருக்கின்றன. அறிவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலுமே கூட இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் பெருவாரியாக இருக்கின்றன. அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்குப் பேய்கள், முன் ஜென்மம் போன்றவைகளின் மீது நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது தெரிய
வந்திருக்கிறது.

சமீபத்தில் கடவுளின் பெயரால், குழந்தைகளை நரபலியிடும் சம்பவங்களும் இங்கு நடந்தன. முன் ஜென்மம், பின் ஜென்மம், இறப்பிற்கு பிறகான வாழ்க்கை போன்ற பிறழ்வான நம்பிக்கைகளின் விளைவாக இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொலை செய்யும் அளவிற்கு இல்லயென்றாலும்கூட கிட்டத்தட்ட பெரும்பாலான மக்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.

அமானுஷ்ய சக்தி, பேய், பிசாசு போன்றவற்றின் மீதான நம்பிக்கைகள் “உடலும், மனமும் வேறு வேறு” என்ற கோட்பாட்டில் இருந்துதான் உருவாகிறது. அதாவது மருத்துவ அறிவியல் வளராத காலகட்டத்தில் ‘மனம்’ என்பதன் மீது ஏராளமான புதிர்கள் இருந்தன. உடலில் உள்ள மற்ற பகுதிகளை காணமுடிகிறது ஆனால் மனம் ஒன்றைக் காணமுடிவதில்லை ஆனால் உருவமற்ற மனம் தான் உடலை இயக்குகிறது ,அப்படியென்றால் மனம் என்பது என்ன? அது எங்கிருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தபோது, ஆன்மீகவாதிகள் மனதைக் ‘கடவுளின் பொருள்’ என விவரித்தார்கள். ‘உடலுக்கு அழிவுண்டு, மனம் அழிவதில்லை’ என்று மனதிற்கு ஒரு அமானுஷ்ய சக்தியை அவர்கள் கொடுத்தார்கள். அழிவற்ற மனம்தான் ஆன்மா, ஆவி, ஸ்பிரிட் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இறந்த ஒருவரின் உடலை விட்டு பிரியும் மனம் அமானுஷ்யமாக மாறிவிடுகிறது என்று அப்போது நம்பப்பட்டு வந்தது. மனம் பற்றியான இப்படிப்பட்ட ஆன்மீக விளக்கங்கள்தான் அத்தனை மூட நம்பிக்கைகளும் அடிப்படையான ஒன்று.

மனிதன் சிறு சிறு குழுவாகக் காட்டில் வேட்டையாடும் சமூகமாக இருந்த காலகட்டத்தில், அவனை ஒருங்கிணைக்கப் பல்வேறு கதைகள் தேவைப்பட்டன. கற்பனையான கதைகளின் வழியாக அவனுக்குள் பயத்தை உருவாக்கி, அந்த பயத்தின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்டான். ஒரு சமூகக் குழுவாக மனிதனை
ஒருங்கிணைப்பதற்கு இப்படிப்பட்ட கதைகள், ஒரு கட்டத்திற்கு மேல் பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டு அவர்களது பண்பாட்டு நம்பிக்கையாகவும் (Cultural belief) மாறிப்போய்விட்டன. நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் பெருவாரியான மக்களிடம் காணப்பட்ட இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியாக வலிமை அடைந்தன. மதங்களின் தோற்றம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பொய்யான கருத்துகளின் படி உருவான மதம், பல புராணங்களையும், இதிகாசங்களையும் உருவாக்கி அதன் வழியாக தன்னை தக்கவைத்துக்கொண்டது. மதங்கள் இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொள்ளும் போது அந்த நம்பிக்கைகள் கேள்விகேட்க முடியாததாகவும், தர்க்க ரீதியாக விளக்க தேவையில்லாததாகவும் மாறிப்போய்விடுகின்றன.

இந்தப் புனையப்பட்ட கதைகள் காலம் காலமாக மனிதனுக்குச் சொல்லப்பட்டன. தொடர்ச்சியாக மனிதனிடம் சொல்லப்பட்ட இந்தப் போலி கருத்துருவாக்கங்கள் உண்மையை ஆராயும் அவனது தர்க்க அறிவை மட்டுப்படுத்தியது.

இந்த நம்பிக்கைகள் குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பல கதைகளின் வழியாக ஊட்டப்படுகின்றன. அதாவது சுயமாகச் சிந்திக்கும் வயதை, தர்க்க ரீதியான பகுத்தறியும் அறிவை குழந்தை பெறுவதற்கு முன்னதாகவே இந்த நம்பிக்கைகள் அவர்களின் மனதில் பதிந்துவிடுகின்றன. இருளின்மீது பரிணாம ரீதியாக குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய அச்ச உணர்வும், இந்த நம்பிக்கைகளும் சேரும்போது இதன் மீதான நம்பகத்தன்மை கூடுகிறது. கல்வியின் வழியாக பகுத்தறியும் அறிவைப் பின்னாளில் அந்த குழந்தை பெற்றாலும் கூட, சிறு வயதிலேயே மனதில் படிந்துவிட்ட இந்த நம்பிக்கைகள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டதாக நிலைத்து நின்றுவிடுகின்றன.

அன்றாட வாழ்க்கையில் நிலைத்திருக்கும் மூட நம்பிக்கைகள்:

பொதுவாகவே நாம் கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளும் தர்க்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கும் நிறைய நம்பிக்கைகள் தர்க்கத்திற்கு சற்றும் பொருந்தாதவை. உதாரணத்திற்கு நாம் செய்யக்கூடிய சடங்குகள் அனைத்திற்கும் தர்க்க ரீதியான எந்த விளக்கங்கள் இல்லை, ஆனாலும் அதை நாம் தொடர்ச்சியாக விடாப்பிடியாகச் செய்து வருகிறோம். இந்த நேரத்தில்தான் வெளியே போக வேண்டும், இந்த நேரத்தில் போகக்கூடாது, இதை இந்த நாளில் தான் செய்ய வேண்டும், இந்த நாளில் செய்யக்கூடாது, நல்ல நாள், கெட்ட நாள், அமாவாசை, பவுர்ணமி என
பெரும்பாலானவர்களின் அன்றாட வாழ்க்கை முழுக்கவே இப்படிப்பட்ட சடங்குகள் நிறைந்தவையாக இருக்கிறது. இவை எதற்கும் எந்த அறிவியல் விளக்கங்களும் இல்லையென்று தெரிந்தாலும் கூட, முன்னோர்கள் காரணமில்லாமல் இதைச் செய்திருக்கமாட்டார்கள், அதற்கு ஏதாவது ஒரு அறிவியல் காரணமிருக்கும் என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு இந்தச் சடங்குகளை செய்து வருகிறோம் ஏனென்றால் மனித மனதை பொறுத்த வரை, தர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை எப்போதும் அது எதிர்பார்க்கிறது, அதிசயங்கள் ஏதாவது நடந்து விடாதா? அற்புதங்கள் தங்கள் வாழ்வில் நடக்காதா? என்ற ஏக்கம் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் இருக்கிறது. இந்த ஆழ்மன உணர்விற்கு ஆட்படாமல் சுதந்திரமான சிந்தனைகளை கொண்டிருப்பது ஒருவரின் ஆளுமையைப் பொறுத்தது. தர்க்கத்துடன் சமரசமில்லாத தொடர்பைக் கொண்டிருக்கும் ஆளுமைகளே ஆழ்மனதின் இந்த அதிசயங்களின் மீதான ஏக்கத்தை, எதிர்பார்ப்பை நிராகரிக்கிறார்கள். மற்றவர்கள் அதற்கு அப்படியே தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். அவர்கள் பெற்ற கல்வியோ அல்லது அறிவோ இதற்கு எதிராக ஒருபோதும் சிந்திப்பதில்லை.

எந்த ஒரு முன்னேறிய சமூகமாக இருந்தாலும் கூட, இது போன்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் பெரும்பாலான மக்களின் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றன. அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஏராளமான நெருக்கடிகளில் இருந்து அல்லது தீர்க்கவே முடியாத பிரச்சினைகளில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மக்களுக்கு இந்த நம்பிக்கைகள் ஏதோ ஒரு வகையில் தேவையானதாக இருக்கிறது. நிறைய நேரங்களில் வாழ்வதற்கான முனைப்பையும் கூட அவர்களுக்கு இந்த நம்பிக்கைகள் கொடுக்கின்றன.. சகமனிதர்களும், சார்ந்திருக்கும் சமுதாயமும் எந்த ஒரு நம்பிக்கையும் கொடுக்காத ஒரு சந்தர்ப்பத்தில் “கடவுள் மீது பாரத்தைப் போட்டு வேலையப் பார், நடக்குறது நடக்கட்டும்” என்ற வேலையைத் தொடர்கிற வெகுஜன மக்கள் நிரம்பிய சமூகம் இது. இங்கு அப்படிப்பட்ட தனிப்பட்ட மக்களின் நம்பிக்கைகளின் மீது நடத்தப்பட்டும் தர்க்க ரீதியான விவாதங்கள் பெரும்பாலும் பலனளிக்காது. ஆனாலும் அப்படிப்பட்ட நம்பிக்கைகளை அரசியல் காரணங்களுக்காகவும், வணிக நோக்கங்களுக்காகவும் சிலர் பயன்படுத்திக்கொள்வதையும் நாம் பார்க்கிறோம், அதேபோப்ல  பின்னாளில் இந்த நம்பிக்கைகள் ஒரு பிறழ்வான அதிதீவிரமான நம்பிக்கைகளாகச் சிலருக்கு மாறிவிடுகின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.

ஏன் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதை மனம் எதிர்பார்க்கிறது?

மனிதனைப் பொறுத்தவரை, அவன் ஒரு சமூக விலங்கு. அதாவது சமூகத்தின் நலனுக்காக வாழும் ஒரு விலங்கு. ஒரு விலங்கைப் பொறுத்தவரை, அது அதன் உள்ளுணர்வின் அடிப்படையிலே செயல்படுகிறது, பசி என்றால் உடனடியாக அதற்கு இரை வேண்டும், பாலுணர்வு வந்துவிட்டால் உடனடியாக அதற்கு இணை
வேண்டும். இந்த உயிரியல் வேட்கைகளை விலங்கினால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், மனிதன் அப்படியல்ல, சமூகத்தின் நலனுக்காக, அதன் விழுமியங்களுக்காக தனது ஆழ்மன வேட்கைகளை அவன் கட்டுப்படுத்தப் பழகியிருக்கிறான். பசி வந்தாலும்கூட, எந்த நேரத்தில் சாப்பிடலாம், எப்போது சாப்பிடக்கூடாது, யாருடன் சாப்பிடலாம், யாருடன் சாப்பிடக்கூடாது போன்ற விழுமியங்களுக்காக இந்த உள்ளுணர்வை கட்டுப்படுத்திக்கொள்கிறான். எளிமையாக சொல்வதானால், மனிதன் இந்த சமூகத்திற்க்காகத் தனக்கு பிடித்த ஒன்றை செய்யாமலிருக்க வேண்டும், பிடிக்காத ஒன்றை செய்யவும் தயாராக இருக்க வேண்டும். இதன் காரணமாக, மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அவன் செய்யும் பெரும்பாலான செயல்களை அவனுக்கு விருப்பமில்லாமலும், ஆர்வமில்லாமலுமே செய்து கொண்டிருக்கிறான். இந்த முரண் அவனுக்கு மனவுளைச்சலை கொடுக்கிறது அதனால் அவனது அன்றாட வாழ்க்கை பாரம் மிகுந்ததாக இருக்கிறது, இதிலிருந்து தற்காலிகமாக வெளியேறும் வழியாக அதிசயங்களையும், அற்புதங்களையும் நம்பும் மனநிலை இருக்கிறது. தர்க்க ரீதியாக அவனது துயரங்களுக்கு தீர்வே இல்லாத நிலையில், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அது தன்னை இந்த துயரங்களிலிருந்து விடுவிக்கும், அப்படித்தான் தன்னால் இதிலிருந்து வெளியேற முடியும் என நம்ப தொடங்குகிறான், தர்க்கங்களை நிராகரிக்கும் மனநிலையை இப்படி பெரும் ஒருவன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதை மற்ற விஷயங்களுக்கும் விரிவுபடுத்திக் கொள்கிறான்.

இந்த பலவீனமான மனம் தர்க்கங்களை வெறுக்கிறது, உண்மையை ஏற்க மறுக்கிறது. இந்த பலவீனமான மனநிலையில் உள்ள ஒருவரின் மனதை மிக சுலபமாக சலவை
செய்ய முடியும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருக்கும் பலவீனமான மக்களை குறிவைத்தே பெரும்பாலான மூட நம்பிக்கைகள் சொல்லப்படுகின்றன, இதில் இருந்து மீட்பதாக மந்திர, மாயக்காரர்கள் விரிக்கும் வலைகளில் இவர்கள் மிக சுலபமாக மாட்டியும் கொள்கிறார்கள்.

யார் பாதிக்கப்படுகிறார்கள்?

நிறைய நேரங்களில், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு பெரும்பாலும் ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களே பலியாகின்றனர். ஏனென்றால் சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான எந்த தர்க்க ரீதியான வழிகளும் இல்லாதவர்களாக அவர்களே இருக்கின்றனர். சமூகப் பாதுகாப்பு என்பது இவர்களுக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. ஒரு பெரிய நெருக்கடியிலிருந்து விடுபட முடியாத நிலையில், இவர்கள் சக மனிதர்களின் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கையிழக்கும் நிலைக்கு செல்கின்றனர். அப்போது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அவர்களுக்கு ஆசுவாசம் அளிப்பதாக இருக்கின்றன. இவர்களே பெரும்பாலும் மதகுருமார்களையும், மந்திரவாதிகளையும், பேயோட்டும் ஆசாமிகளையும் நாடிச் செல்கின்றனர், ஏனென்றால் தங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இவர்களை நம்புவதை தவிர வேறு எந்த வழியும் தென்படுவதில்லை.

இப்படிப்பட்ட பலவீனமான மனிதர்களின், உடைந்த மன நிலையை பயன்படுத்திக்கொள்ளும் மூன்றாம் நபர்கள் தங்களது சக்தியை, வீரியத்தை, மகிமையை பரிசோதிக்கும் எலிகளாக இவர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

சமூக வலைத்தளங்களும், மூட நம்பிக்கைகளும்

சமூக வலைதளங்களின் வரவிற்குப் பிறகு அறிவியலை விட, தர்க்கங்களை விட, போலிச் செய்திகளும், மூட நம்பிக்கைகளும், பிரிவினைவாத கருத்துகளுமே வேகமாகப் பரவுகின்றன. சமூக வலைத்தள உபயோகிப்பவர்களும்கூட, இந்தச் செய்திகளுக்கு இலக்காக மாறி
விடுகின்றனர். இது போன்ற செய்திகள் மிக வேகமாக பரவுவதற்கு இவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் சுவாரசியம் மிகுந்ததாக, மிக எளிதில் பிறரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றன.

ஏனென்றால் சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை, பெருவாரியான கவனத்தைப் பெறுவது மட்டுமே அதன் இலக்காக இருக்கிறது. இதன் பயனாளர்கள், இந்த பெருவாரியான கவனத்தை மட்டுமே முக்கியமானதாகக் கருதுவதால் இதன் நம்பகத்தன்மை மற்றும் அது ஏற்படுத்த போகும் பாதிப்புகள் பற்றி எந்த கவலையுமில்லாமல் இதை பரப்புகிறார்கள்.

டிஜிட்டல் காலங்களில், இது போன்ற மூட நம்பிக்கைகளும், அறிவியலுக்கு புறம்பான தகவல்களும் புத்துயிர் பெற்றுள்ளன. அதிசயங்களின் மீது மக்களுக்கு இயல்பாக இருக்கும் ஆர்வத்தை இந்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

அரசியல்படுத்தப்படும் பொய் செய்திகள்:

சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில், பொய்ச் செய்திகளை மக்கள் உடனடியாக நம்புவதற்கு அந்த செய்திகளுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் நம்பகத்தன்மையே முக்கியமான காரணம் என்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பொன்றில் அரசியலையும், மதத்தையும் சேர்ப்பது மிகவும் ஆபத்தானது, அரசியல் கட்சிகள் மதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் உச்ச நீதி மன்றத்தின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அரசியல் கட்சிகளுக்கு உள் நோக்கங்கள் இருக்கின்றன, அதுவும் மக்களை பிளவுபடுத்தி அதன் வழியாக அரசியல் ஆதாயம் அடையலாம் என்று நினைக்கும் கட்சிகள் மதத்தைக் கையில் எடுக்கும் போது அது மிகவும் ஆபத்தான ஒன்றாக போய்விடுகிறது. “புராண காலதில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது”, “கடவுள் குழந்தையாக இருக்கும்போது இங்கு வசித்ததற்கு தரவுகள் இருக்கின்றன”, “அந்த காலத்திலேயே கடல்
வழியாக பாலம் போடப்பட்டது” போன்ற கருத்துகளுக்கு பின்னால் இருக்கும் அவர்களின் அரசியல் உள் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல், நம்பகத்தனமான இடத்தில் இருக்கும் ஒரு மனிதர் பொய் சொல்ல மாட்டார் என்ற பழமையான மன நிலையின் காரணமாக மக்கள் இவற்றை உண்மையென நம்பிவிடுகிறார்கள். அது அவர்களின் ஒருமைப்பட்டிற்கும், வாழ்வாதாரங்களுக்குமே பின்னாளில் பிரச்சினையாக போய்விடுகின்றன.

அரசியல் கட்சிகள் இதை உணர்ந்து பொய் செய்திகளை, குறிப்பாக மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

என்ன தீர்வு?

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், ஏராளமான தகவல்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். உண்மைகளைவிட பொய்யும், புனைவுகளும், வெறுப்பையும், வன்மத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் தகவல்களும்தான் நம்மை மிக வேகமாக வந்து சேர்கின்றன. அதையெல்லாம் அப்படியே நம்புவது, ஏற்றுக்கொள்வது என்பது இந்த சமூகத்தின் சம நிலையையும், பரஸ்பர சுமூக உறவையும் பாதிக்கக்கூடியது.எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பண்பை நாம் நமது வாழ்க்கை முறையாக்க வேண்டும். பேய்க்கதைகளையும், தேவதைக் கதைகளையும் சொல்லி குழந்தைகளை வளர்க்கும் போக்கை நிறுத்திக்கொண்டு எந்த தகவலையும் அறிவியல் பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு சக்திமான் தொடர் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த காலகட்டத்தில் கூட அதை பார்த்த குழந்தைகள் அதன் பாதிப்பில் உயரமான கட்டடத்தில் இருந்து குதித்த சம்பவங்கள் நடந்தன. இன்று சக்திமான்போன்று ஓராயிரம் பராக்கிரம கதைகளை குழந்தைகள் பார்க்கிறார்கள். எந்த நேரமும் மெய் நிகர் உலகத்தின் ஏதாவது ஒரு கதாபாத்திரங்களை தங்களுக்குள் வரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் முந்தைய காலகட்டத்தை விட குழந்தைகளை இப்போது பாதுக்காப்பாக வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களிடம் அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்த்தால்தான் எதிர்காலத்தை நாம் இது போன்ற பிறழ்வான நம்பிக்கைகளிடம் இருந்து நாம் காப்பாற்ற முடியும்.

ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்களும், கருத்தாக்கங்களும், நோக்கங்களும் எதை நோக்கி இருக்கின்றனவோ அதன் அடிப்படையிலேயே பெரும்பாலான மக்களின் மனநிலையும் இருக்கின்றன. பழமைகளைக் கடந்து அறிவியல் பூர்வமான வளர்ச்சியை மட்டுமே ஏற்றுக்கொண்டதாக, அதன் தொன்மங்களில் உள்ள பிற்போக்கான எண்ணங்களுக்கு எதிராகச் செயல்படுகிற ஒரு சமூகத்தில் மக்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளின் தீவிரம் குறைவாகவே இருக்கும், அப்படியே இருந்தாலும் அதன் விளைவாக ஏற்படும் விபரீதமான குற்றச்செயல்களும் குறைவாகவே இருக்கும். அதே போல தனிப்பட்ட நபரின் மனநிலை சீரற்று இருக்கும்போது அங்கும் அதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளே பிரதானமாக இருக்க வேண்டும். மனம் மீதும் அதன் ஆரோக்கியத்தின் மீதும் வெளிப்படைத்தன்மையும், அறிவியல் பார்வைகளும் இருக்கும் சமூகத்தில் அத்தனை விதமான மன நெருக்கடிகளுக்குமான தீர்வுகளும் ஆரோக்கியமான வழிகளிலேயே பெறப்படும். அந்த வழிமுறைகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கியமான கடமை. இதுவே இப்போதைக்கு இதன் தீர்வாக இருக்க முடியும்.

sivabalanela@gmail.com