நாவல் தொடர் 

பட்டாளத்தான் குத்துப்பட்டான் என்பதைவிட, இன்னும் உயிர் வாழ்கிறான் என்பதே ஊரின் பேச்சாக இருந்தது. அவன் எப்படிப் பிழைத்துக்கொண்டான் என்று மக்கள் பலவாறாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர்.

“ஜீவகன் குத்திய துருவேறிய கத்தியால், காந்தம் உரசிய இரும்பும் காந்தமாவதைப் போல பட்டாளத்தானின் குடல் முழுவதும் இரும்புக் குழாயாக மாறி எஃகு போன்ற உறுதியைப் பெற்றுவிட்டது!”

”பெரியாஸ்பத்திரியில் அவனைச் சேர்த்துக் குடல் முழுவதையும் வெட்டி எடுத்து விட்டார்கள்!”

”பட்டாளத்தான் குடல் இல்லாமலேயே உயிர் வாழ்வதற்கு ஏற்ற சிறிய எந்திரம் ஒன்றை ஆராய்ச்சி நோக்கில் டாக்டர்கள் ரகசியமாக அவன் வயிற்றில் பொருத்தி இருக்கிறார்கள்!”

காற்றில் உலாவும் சொற்கள் எவையும் பட்டாளத்தானை ஒன்றுமே செய்யவில்லை. அவன் அவற்றைக் காதுகளில் வாங்குவதற்கு மாறாக மூக்கில் வாங்கி சுவாசித்தான். அச்சொற்கள் அவன் நுரையீரலைச் சென்றடைந்து குருதியுடன் கலந்து தலைமுதல் கால்வரை பரவின. காற்றுக்கு மாற்றாய் சொற்களையே சுவாசித்து வந்த அவனும் ஒரு சொல்லாகிக் காற்றில் திரிந்தான். இடுப்பில் ஒரு துண்டைக் கட்டி, உடல் முழுவதும் விபூதியைப் பூசிக்கொண்டு வலம்வரத் தொடங்கினான். ஜீவகனைச் சந்திக்கும் சமயங்களில் அவன் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பரவசத்துடன் வாழ்த்தினான்.

“மகனே, நான் என் நண்பனுக்குத் துரோகம் செஞ்சேன். நீயோ அவனோட மகனா இருந்தாலும், அப்பனுக்கே பாடஞ் சொன்ன சுப்பையா போல எனக்கும் மகனாக மாறி பாடம் கத்துக் குடுத்துட்ட! இந்த வாழ்க்கையின் சுமையாகிய வயிற்றை, மனிதனின் நுகரும் ஆசையாகிய பசியென்னும் காமத்தை குறிக்கின்ற வயிற்றை நீக்கி என்னை விடுதலையடைந்த மனிதனாக்கிட்ட! இந்த உலகத்துல வயிறுதான் பிரதானம்! உழைக்கிறதும் வயிற்றுக்குதான்! பலவகையான காரியங்களைச் செய்யிறதும் வயிற்றுக்குத்தான்! ஆனால், மனிதர்கள் இந்த வயிற்றை இழந்தும் வாழலாம், வாழவேண்டும் என்ற பேருண்மையை என் மூலமாக இந்த உலகத்துக்கே சொல்லிட்ட!”

அப்போதெல்லாம் ஜீவகன் கடுங்கோபத்துடன் அவனைத் திட்டினான். அவனால் சில நாட்கள் ஜெயிலில் இருந்தது நினைவுக்கு வந்து மனம் கசந்தது.

“உன் நடிப்பெல்லாம் எனக்குத் தெரியும்யா! நீ எதுக்கோ திட்டம் போடுற! எதானா பண்ணனும்னு நெனச்ச, ஓத்தா, நீ இப்ப வகுறில்லாம வாழற, அப்பாறம் உயிரில்லாம வாழுவ!”

பட்டாளத்தான் ஊருக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு குன்றில், கருத்ததோர் பாறையைத் தேர்ந்து, மணிக்கணக்கில் அமர்ந்து பிதற்றுவதாகவும், அதன் மீது நின்று பித்தம் கொண்டவனாய் ஆடுவதாகவும் பேசிக்கொண்டார்கள்.

பட்டாளத்தானை ஜீவகன் குத்தியதும் சிதறி ஓடிய ஆட்கள் பிற்பாடு பக்கத்திலேயே வரவில்லை. பட்டாளத்தான் உடலை முழுவதுமாக ரத்தம் நனைத்துவிட்டது. வலியில் அனத்திக் கொண்டு இப்படியும் அப்படியுமாக புரண்டான். அவன் விழுந்து கிடந்த மண் ஆம்புலன்ஸ் வருவதற்குள் கருத்துவிட்டது.

ஜீவகன் கத்தியைக் கீழே போடாமல் பேய் பிடித்தவனைப்போல வீட்டு வாசல் வேப்ப மரத்தடி வேர்த்திம்மையில் உட்கார்ந்திருந்தான். திருநகரில் பக்ரீத் பண்டிகை சமயங்களில் பலவகையான கத்திகளைப் பரப்பிக் கடை போடுவார்கள். ஒரு பண்டிகை சமயத்தில் அப்படிப் போடப்பட்டிருந்த கடையில் பொம்மக்கண்ணி வாங்கி வந்த கத்தி அது. மரப்பிடியுடன் கவர்ச்சியாக இருந்தது. அம்மா கொண்டு வந்த கத்தியை வாங்கிய பெரியவள் ஜலபூரணி, கத்தியின் கைப்பிடியிலும், உலோகத்திலும் தெரிகின்ற நெளியும் கொடியுமான வேலைப்பாடுகளைப் பார்த்துச் சிரித்தாள்.

“அறுக்கிறதுக்கு கூட அலங்காரம் வேண்டியிருக்குது!”

”இப்பிடி உணக்கரம் உணக்கரமா பேசியே ஒன்னுமில்லாம போ!”

பெரியவள் ஜலபூரணியைப் பொம்மக்கண்ணி திட்டினாள்.

“கத்திய கீள போட்டுட்டு எங்கியானா ஓடிடு சாமீ”

பொம்மக்கண்ணி, ஜீவகனின் பின்னால் வந்து அவன் தோளைப்பற்றிக் குலுக்கினாள். வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புலம்பினாள். சொக்குத் தெளிந்து வெலவெலத்து உட்கார்ந்திருக்கும் உருத்திரபாணி பொம்மக்கண்ணியை அலங்க மலங்கப் பார்த்தான்.

“ஐயோ, இந்த எந்தூமையால நானும் எம்புள்ளைங்களும் படுற சிருப்பாணிய பாத்தீங்களா? எஞ்சாண்ட வாங்கிக் குடிக்கிற எடத்திலயே இந்த எம்பட்ட அடிவாங்கிச் சாகவேண்டியதுதானே? சண்டைய ஊட்டு வாசுலு வெரிக்கும் இளுத்துணு வந்து உட்டு, எம்புள்ளைய கொலகாரனா பண்ணிப்புட்டானே பாவி!”

அவள் ஆவேசம் கொண்டவளாகி அவனிடத்தில் ஓடிவந்து தலைமுடியைப் பிடித்து ஜிம்பினாள். சிறிது நேரம் எதுவும் பேசாமலிருந்த உருத்திரபாணி, பொம்மக்கண்ணியை விலக்கித் தள்ளினான்.

“உடுமே, கீறது நாலு மயிறு, அத்தையும் புடிங்கிடப் போற!”

அவன் பேசியதைக் கேட்ட மாத்திரத்தில் உண்டான சிரிப்புக்கு இணங்கிச் சத்தம் வெளிவராமலிருக்க சின்னவள்களான கோட்டமாரியும், சொக்கம்மாளும் வீட்டுக்குள் ஓடினார்கள். ஜலபூரணிக்கோ பொம்மக்கண்ணியின் அரற்றல் எதுவுமே மனதில் தங்காமல், ஜீவகன் குத்திய கத்தியைக் குறித்த எண்ணங்களே வளர்ந்து கொண்டிருந்தன.

அந்தக் கத்தியைப் போன்றதொரு கத்தியின் கதையைத் தாத்தன் மைவண்ணனும், பாட்டி மங்கம்மாளும் சொல்லியதாக அவள் நினைவு துலக்கத்தைக் கொடுத்தது. மைவண்ணன் அவளிடம் சொன்ன கத்தி ஆதனிடம் இருந்ததாம். ஆதனைக் குறித்து பேசுகிற சமயங்களிலெல்லாம், “அவந்தான் நம்ம பெரிய தயிப்பன்” என்பான் மைவண்ணன்.

அந்தக் காலங்களில் யாரிடமும் கத்தியே இருந்ததில்லை. ஆதனிடத்தில் மட்டும்தான் இருந்தது. அவனும் தொன்மையும் இரும்புத்தாதுக் கற்களைக் கரியும், சுண்ணாம்பும் கலந்து உருக்கிய ஒலக்கடம் இன்னும் பாளையத்தில் இருப்பதாகச் சொல்வான் மைவண்ணன்.

ஆதனிடம் இருந்த கத்திதான் மீண்டும் வீட்டுக்கு வந்ததோ? உலகத்தில் இருப்பது எல்லாமே ஒரேயொரு கத்திதானோ? மனிதர்களையும், மற்ற ஜீவஜந்துகளையும் போலவே ஆயுதங்களும் தமது பிள்ளைகளைப் பிறப்பிக்கின்றனவோ? ஜலபூரணி கனவுலகில் இருந்தபோது அவள் விதிர்விதிர்த்து எழுகிற விதமாக, பொம்மக்கண்ணியின் பேரோலத்துக்கு நடுவே, ஜீவகனைக் காவலர்கள் வந்து பிடித்துக் கொண்டு போனார்கள். போலீஸ் ஜீப் பின்னாலேயே சிறிது தூரத்துக்குப் பொம்மக்கண்ணி அழுதபடி ஓடினாள்.

தாலுக்கா சப்-மாஜிஸ்ட்ரேட் முன்னால் ஜீவகனை ஆஜர்படுத்திய காவல்துறை, சப்-ஜெயிலில் அடைத்தது. பெருமர உத்திரங்களுடன் நாட்டோடு வேயப்பட்ட பழமையான ஜெயில் கட்டடங்கள் சப்-ஜெயில் வளாகத்தில் வேப்பமரங்களுக்கு நடுவே அங்கங்கு நின்றன. அவற்றுள் ஒன்றின் வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்த ஜீவகனைக் கைதி ஒருவன் சிரித்துக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து விசாரித்தான். ஜீவகனை அவன் கை பின்னந்தலையிலிருந்து புட்டம் வரை நீவியது.

“என்னா கேசு தம்பி? பிக்பாக்கெட்டா?”

“இல்ல, கொல!”

தடவிக் கொடுத்தவன் எழுந்து போய்விட்டான். ஜீவகன் நாட்கணக்கில் அங்கேயே உட்கார்ந்திருந்தான். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் உணர்வு அவனுள் மேலோங்கி வந்தது. அக்காள் ஜலபூரணியும், சின்னவள்களான கோட்டை மாரியும் சொக்கம்மாளும் சாப்பாடு போட்டு வந்து, திண்ணையில் வைத்துக்கொண்டு, பேசிபடியே சாப்பிட்டார்கள். பொம்மக்கண்ணி புலம்பியவாறு வாசல் தெளித்தாள். தெருவில் கடக்கும் ஊரார் பலரும் அவர்களின் வீட்டை வேடிக்கைப் பார்த்துச் சென்றார்கள். ஜீவகன் எல்லாவற்றையும் பார்த்தான். அவன் குரலோ அவர்களை எட்டவில்லை. அவன் எழுந்து நின்று, கைகளை நீட்டி, அவர்களை அழைத்தான். அவன் பிதற்றுவதாகச் சிறைவாசிகள் சொன்னார்கள். ஆனாலும் அவன் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

ஜீவகனைப் பிடித்துச் சென்ற அடுத்த நாளே, உருத்திரபாணி மாவட்டத் தலைநகரத்தில் இருக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு நேராகச் சென்று தான்தான் கொலைகாரன் என்றான். தான் ஒரு மத்திய சர்க்கார் பணியாளன் என்பதால் தனக்குக் கட்டாயமாகக் காவல்துறை உதவி செய்தாக வேண்டும் என்றும் பேசினான். அரசு மருத்துவமனையில் பிழைத்துக்கொண்ட பட்டாளத்தான், தன்னை யாரும் கத்தியால் குத்தவில்லை என்றும், போதையின் தடுமாற்றத்தில் தானே கத்தியின்மேல் விழுந்துவிட்டதாகவும் சொன்னான். ஊரிலிருந்து சாட்சி சொல்ல ஒருவருமே வரவில்லை. குழப்பத்துக்கு உள்ளாகியிருந்த காவல்துறை சில நாட்களிலேயே ஜீவகனுக்கு ஜாமீன் வழங்கச் சம்மதித்துவிட்டது.

ஜாமீனில் வந்த பிறகும் ஜீவகன் வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தான். வீட்டுக்குள்ளே செல்வதற்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன்மீது பெருமழையும், புயற்காற்றும் அடித்தன. சூரியனும், நடசத்திரங்களும் காய்ந்தன. வேம்பின் கூட்டிலைகளினூடாக நிலவு நழுவி விழுந்தது. அவன் வீட்டுக்குள் செல்லவில்லை. வீட்டுக்குள் செல்லலாம் என்று அவன் திரும்புகிற போதெல்லாம் சின்னஞ்சிறு வயதில் நுகர்ந்த வாடை வீசியது. புளித்த பழச்சாறின் வாடை.

தாத்தா மைவண்ணனும், அப்பன் உருத்திரபாணியும் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் எதையோ காய்ச்சுவதைப் பார்த்த ஞாபகங்கள் அவனுள்ளே பீறிடத் தொடங்கின. புளித்த பழச்சாற்றின் வாடை மேலும் நெடியோடு அடித்தது.

மைவண்ணன் தழையறுக்கப் போகும்போது ஜீவகனும் ஆட்டுக்குட்டிகளைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே போவான். வீட்டுக்குப் பின்புறம் பரந்து விரிந்திருக்கும் செம்மண் நிலத்தின் எல்லையில் பனைமரங்களுடன் சிறுகுன்று தெரியும். வீட்டுக்கு எதிரே மண்பாதையைத் தாண்டினாலும் செம்புலத்தின் இறுதியில் சிறு குன்று தொடர்தான். குன்றின் மேல் ஏறுவதற்கென இருக்கும் பெரும்பாறையில் பழங்காலக் கற்கோவிலும் படிகளும் உண்டு. ஒரேயொரு குன்று சூரியனைப்போல காலையிலும் மாலையிலும் இடம்மாறிக் கொண்டு வந்தது. அக்குன்றுகளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், ஜீவகன் அந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டான்.

மைவண்ணன் வேப்பந்தழையையும் சுண்டைத்தழையையும் கொத்துக் கொத்தாக ஒடிப்பார். வேம்பின் இலைகள் தளிராகவோ, பழுத்தோ இல்லாமல் நடுத்தரத்திலிருக்க வேண்டும். சுண்டைச் செடிகளில் காய்களிருந்தால் அவற்றையும் பறித்துக்கொள்வார். தழை ஒடித்து வந்த பிறகு தாத்தா செய்வதை ஜீவகன் தொலைவில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பான்.

பறித்து வந்த தழைகளை அவர் பெரிய மண்மொடாவில் உருவிப் போடுவார். மாட்டுக் கொட்டாய் மூலையில் சாக்குப்பையில் வேலம்பட்டை இருக்கும். உருத்திரபாணி திருநகருக்குச் சென்று, கனிந்து அழுகிய வாழைப் பழங்களை மண்டிகளிலும், பழக்கடைகளிலும் கேட்டு வாங்கி வந்து வைத்திருப்பான். அந்தப் பழங்களையும் அவற்றின் தோலையும் போட்டு, அளவுடன் வேலம் பட்டைகளைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றுவார் மைவண்ணன். சொந்த ஊர்த்தண்ணீர் இதற்குப் பிரியோஜனப்படாது. ருசி மாறிவிடும். நான்கைந்து ஊர்களுக்கு அப்பால், மலையடிவாரக் கிணற்றிலிருந்து எடுத்து வருகின்ற தண்ணீரே அவருக்குப் பிடிக்கும். அப்படி எடுத்து வரப்படும் தண்ணீர் எப்போதுமே வீட்டில் இருப்பிலிருக்கும்.

மைவண்ணன் ஒருவாரத்துக்கு ஊறல் போடுவார். மண்மொடாவிலிருந்து இரண்டொரு நாட்களிலேயே நொதிவாசனை அடிக்கத் தொடங்கிவிடும். ஊறலில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்டிலைகள் வெருட்டுகின்ற மருந்து வாடையைக் கொடுக்கும். சில சமயங்களில் வாழைப்பழ வாடை அடிக்கும். ஊறலின் வாடையை வைத்தே அதில் எந்தச் சேர்மானம் குறைவு, எந்தப் பொருள் அதிகம் என்று குணநலன்களைச் சொல்வார் மைவண்ணன்.

ஊறல் மொடாவை அடுப்பிலேற்றி அதன் மீது அடிப்புறம் துளையுடைய சட்டியை வைப்பார். அதற்கும் மேலே, கீழ்ப்பக்கம் துளையும் மேற்பக்கம் குழாயும் கொண்ட சட்டியை வைப்பார். சட்டிகள் உட்காரும் இடங்களில் வெளிக்காற்றுப் புகாதவகையில் மண்ணைக் குழைத்துப் பூசுவார். மேல்சட்டியிலிருந்து வெளியேறும் குழாயுடன் நீண்ட மூங்கில் குழாயைப் பொறுத்தித் துணியால் இறுகச் சுற்றுவார். மூங்கில் குழாயின் வாய் ஒரு பாத்திரத்தில் இருக்கும். மூங்கில் குழாய்க்கு மாற்றாய் மைவண்ணனிடம் பித்தளைக் குழாயும் இருந்தது.

மண்மொடாவைச் சூடேற்றும் போது கொதித்துக் கிளம்பும் ஆவி, மூங்கில் குழாய் வழியே கீழிறங்குகையில் தண்ணீரால் குளிர்விக்கப்படும். உருத்திரபாணி அதன் அருகில் உட்கார்ந்து தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருப்பான். ஒருமணி நேரத்துக் கெல்லாம் ஒரு மண்குடம் அளவிற்கு ஆவி பறந்திடும் சாராயம் கிடைத்துவிடும். அந்தச் சாராயத்தைக் கொஞ்சமாய் குவளையிலெடுத்துத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டினால் குப்பென்று எரியும்.

”நல்ல பவரு!”

மைவண்ணன் தனக்குத்தானே ஆமோதித்துச் சொல்லிக்கொள்வார். அந்தச் சமயங்களில் தாத்தா ஏதோ மாயம் செய்வதாய் நினைத்து ஜீவகன் குதிப்பான். சாராயம் காய்ச்சும் வாடையை அறிந்து யாரேனும் விசாரித்தால், பணியாரம் சுடுவதாக வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லச் சொல்லியிருந்தார் மைவண்ணன்! இப்படிக் காய்ச்சுவதைத் தனக்கு மட்டுமே வைத்துக் கொள்வது மைவண்ணனின் பழக்கம். ஆனால் காலப்போக்கில் அப்படி வைத்துக் கொள்வதற்கு முடியாமற் போனது.

”நமுக்குன்னு தனியாதான் காசிச்சி! ஆனா, நாலு பேருல பழக்கமாயிட்டதுக்கு பெறகு அப்பிடி வச்சிக்க முடியல!”

அவர்கள் முதலில் நண்பர்களுக்குப் பகிர்ந்தார்கள். பின்னர் நாடி வருகிறவர்களுக்கு பகிர்ந்தார்கள். சாராயம் வேண்டுமென்று வீடுதேடி வருகிறவர்களுக்கு ஊற்றிக் கொடுக்க அவர்களிடம் பல அளவுகளில் கொட்டாங்குச்சிகள் இருந்தன. நார் நீக்கப்பட்டு, மொழுமொழுவெனப் பாறையில் தேய்க்கப்பட்ட கொட்டாங்குச்சிகள். நிலத்துக்கு நடுவிலிருந்த அவர்கள் வீட்டுப்பட்டியின் பின்புறத்துக்கு வந்து ஆட்கள் கூப்பிடுவார்கள். மைவண்ணனோ, உருத்திரபாணியோ கொட்டாங்கச்சியில் சாராயத்தை ஊற்றித் தருவார்கள். மங்கம்மாள் அந்தப் பக்கமாகவே வரமாட்டாள். சில நேரங்களில் ஜீவகனேகூட சாராயத்தை எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு, அவர்கள் குடிக்கும் வரை காத்திருந்து, காசையும், கொட்டாங்குச்சியையும் வாங்கிக்கொண்டு வருவான்.

”இப்பிடிக் காச்சியும், வித்தும் இங்க என்னா மாறிடுச்சி? ஒன்னும் முன்னுக்கேறல! எம்புள்ளைய வேற கெடுக்குறீங்க! அவன இதுல ஈடுபடுத்துனா, என் வாயில தக்கந் தக்கமா வரும்!”

பொம்மக்கண்னி திட்டுவதற்காக ஜீவகன் அச்சப்பட்டதேயில்லை. அவனுக்குச் சாராயம் குடிக்க வந்து போகின்றவர்களின் முகங்களும், அவர்கள் குடிக்கின்ற விதங்களுமே நினைவிலாடின. சிலர் கண்களை இறுக மூடிக்கொண்டு ஒரே இழுப்பாக இழுத்துவிட்டுக் கொடூரமாகக் காறுவார்கள். சிலர் கண்களை மூடாமல் மெதுவாக உறிஞ்சிக் குடிப்பார்கள். கடைசி எதுக்கலை எச்சிலாய்த் துப்பிவிட்டுப் பச்சை மிளகாயையோ, வெங்காயத்தையோ, ஊறுகாயையோ வாயில் போட்டு மெல்லுவார்கள். சிலர் காரமான தின்பண்டங்களை வைத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து முறுக்குத் துண்டுகளும், காரக்கடலைகளும் ஜீவகனுக்குக் கிடைக்கும்.

குடித்த பிறகு அங்கிருந்து உடனே புறப்படாமல், எதையோ பறிகொடுத்தவர்களைப்போலச் சிலர் உட்கார்ந்திருப்பதையும், அவர்களின் கண்கள் நிர்மலமான வானத்தைக் குத்தி நிற்பதையும், மன்னிக்க முடியாததொரு குற்றத்தைச் செய்வதாக சிலர் நடுங்குவதையும், சிலர் பயந்து பயந்து குடிப்பதையும், சிலர் குடிப்பதை ஒரு இரகசிய நடவடிக்கையைப் போல அணுகுவதையும், சிலரின் இறுக்கமான முகங்கள் குடித்த பிறகு கனிவதையும், சிலரின் கனிந்த முகங்கள் குடித்தபின் இறுகுவதையும் ஜீவகன் பார்த்துக்கொண்டிருப்பான்.

மைவண்ணன் இறந்தபோது அப்பா வினோதமான சப்தத்துடன் கேவிக்கேவி அழுதது இன்னும் ஜீவகனுக்கு நினைவிலிருந்தது. அப்போது ஜீவகன் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மைவண்ணனிடம் சாராயத்தை வாங்கிக் குடித்த எல்லாருமே இறப்புக்கு வந்திருந்தார்கள். சாவு எடுக்கும்வரை அவர்கள் யாரும் அகலவில்லை. நாள் முழுக்கவும் மைவண்ணனின் பெருமைகளுக்குச் சரிபாதியாய், அவர் காய்ச்சிய சாராயத்தின் பெருமைகளையும் பேசிக்கொண்டு கிடந்தார்கள்.

ஜீவகன் தன் பாட்டனாகிய மைவண்ணனைக் குறித்துப் பாட்டி மங்கம்மாவிடமிருந்தும், பெரும்பாட்டன் ஆதனைக் குறித்துப் பாட்டன் மைவண்ணனிடமிருந்தும் நிறைய கதைகளை அறிந்துகொண்டான். ஆதன் காய்ச்சிய சாராயத்தைக் குடித்துவிட்டு போருக்குச் செல்லாமல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மயங்கிக் கிடந்ததால், அதை விசாரிப்பதற்காக வடாற்காடு ஜில்லா கலக்டர் மேஜர் காக்பர்ன் ஆதனுடைய வீட்டுக்கே வந்துவிட்டாராம். கங்காசரத்தின் குன்றுகளில் நடந்த போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள் பலர் அடிபட்டுக் கிடந்தனர். சிலர் குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் இருந்தனர். போரிடும் வீரர்களின் உடல் வலியையும், காயங்களையும் மறப்பதற்கு ஏற்ற மதுவகைகள், குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காய்ச்சிக்கொண்டிருந்ததைப் போன்ற மதுவகைகள், அப்போது பிரிட்டிஷாரிடம் இல்லை.

ஜில்லா கலக்டர் மேஜர் காக்பர்ன் மந்திரக்காரன் பட்டிக்கு வெளியே பரந்து விரிந்திருந்த செம்மண் நிலத்தின் நடுவில் முகாமிட்டு, தனது சேனைகளை நிறுத்திவிட்டு, ஆதனை சகல மரியாதைகளுடனும் அழைத்து வரச்செய்து பேசினார். அவன் காய்ச்சுகின்ற சாராயத்தின் சேர்மான விவரங்களையும், வடிக்கும் முறைகளையும் திருஷ்டாந்தமாக எழுதித் தரும்படிக்குக் கேட்டுக்கொண்டார். அவன் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு, குடுமி வைத்த ஒரு சுருக்கெழுத்தனையும் நியமித்தார்.

“நான் உனக்கு லைசென்ஸ் தர்றேன் மிஸ்டர் ஆதன். ஆல்கஹால் காய்ச்சுவதற்கு லைசென்ஸ்! ஆதன் கெமிக்கல் ஒர்க்ஸ் லிமிட்டெட், ஏ.சி.டபள்யூ.எல், மந்திரக்காரன் பட்டி!”

ஆதன் கையுடன் கொணர்ந்திருந்த சாராய மொந்தையை வாங்கிக் குடித்தபடியே வெடிச்சிரிப்புடன் சொன்னார் மேஜர் காக்பர்ன். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுமதியுடன் கப்பல்கள் மூலமாக இறக்குமதியாகிக் கொண்டிருந்த ஒயின், விஸ்கி, ரம், பிராண்டி, ஜின் போன்றவற்றை விஞ்சிடும் வகையிலிருந்தது ஆதன் வழங்கிய அராக்! இரவெல்லாம் குடித்தபடி முகாம் டெண்டிலேயே சாராயத் தொழிற்சாலைக் கனவுகளுடன் கிடந்த மேஜர் காக்பர்ன் ராஜாங்க அழைப்பின் பேரில் மறுநாளே மதராஸ் சென்றார். பின்னர் அவர் திரும்பவில்லை. அவரை வடாற்காடு கலக்டர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக ஒரு வெள்ளை ராணுவ வீரன் ஆதனிடத்தில் சொன்னான். அத்துடன் நிற்காமல் அவன் வேறொன்றையும் கமுக்கமாக காதருகில் கிசுகிசுத்தான்.

“ஆல்சோ, குவின் எலிசபெத் இம்போசெஸ் ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ் டு தி சோல்ட்ஜர்ஸ் ஃபார் டிரிங்கிங் அண்ட் ஃபக்கிங்! ஹோர்ஸ் அண்ட் பார்ஸ் இல்லாத கண்டோன்மெண்ட்ஸை உன்னால கற்பன செஞ்சி பாக்கமுடியுமா ஆதன்?”

சென்னை இராஜதானியின் வருவாயில் நாற்பது சதவிகிதம் இறக்குமதி மதுவகைகளை விற்பதிலிருந்து கிடைத்து வந்தாலும், பம்பாய் உள்ளிட்ட மற்ற இராஜதானிகளில் மதுவை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்படுகின்ற அப்காரி சட்டத்தைப் போலவே ஒன்றைக் கொண்டுவரப் போவதாக இராஜ்ஜியத்தார் பேசிக்கொண்டார்கள். இராஜதானியின் இண்டு இடுக்குகள், மலைப்பிரதேசங்கள் யாவற்றிலும் மது ஒழிக்கப்படும் என்றும், வீட்டுக்குள்ளேயே சாராயம் காய்ச்சிடும் வழக்கமுடைய பூர்வகுடிகளும் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாதென்றும் செய்திகள் பரவின.

மைவண்ணன் தனது நிலத்தில் சாராயம் காய்ச்சுகிறார் என்று அறிந்த காவல் ஆய்வாளர் ஒருவர், அதை விசாரிக்கும்படிக்கு ஒரு காவலரை மந்திரக்காரன் பட்டிக்கு அனுப்பியிருந்தார். சாராயம் குடிப்பவனைப் போல மாட்டுப் பட்டிக்குப் பின்னால் வந்து நின்று மைவண்ணனை வாய் ஊதச்சொன்ன காவல்காரர், அவரை மது அருந்தியதாகக் கைது செய்து கச்சேரிக்குப் பிடித்துக்கொண்டு போனார்.

தாலுக்கா சப்-மாஜிஸ்ட்ரேட் முன்னால் மைவண்ணனை ஆஜர்படுத்திய காவல்துறை, அவரை மது அருந்திய குற்றத்துக்காக சப்-ஜெயிலில் அடைத்தது. பெருமர உத்திரங்களுடன் நாட்டோடு வேயப்பட்ட பழமையான ஜெயில் கட்டடங்கள் அந்த சப்-ஜெயில் வளாகத்தில் வேப்பமரங்களுக்கு நடுவே அங்கங்கு நின்றன. அவற்றுள் ஒன்றின் வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்தார் மைவண்ணன்.

நீண்ட நாட்களாக மழையில்லாமல் போனதனால் அவர்களின் செம்மண் பொட்டல் காய்ந்து வெடித்துக் கிடந்தது. வைத்திருக்கும் ஒன்றிரண்டு கறவைகளுக்குக்கூடத் தழைத் தாம்பு இல்லை. அவற்றின் பால்மடிகள் வற்றிப்போயிருந்தன. தான் இப்படி வந்துவிட்டதால் மங்கம்மாள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வாள் என்ற துயரம் மைவண்ணனை வதைத்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வீட்டுக்குச் சென்ற அவரை மங்கம்மாவும், பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு அழுதார்கள். மைவண்ணனைக் கைது செய்து அழைத்துப்போன காவல்காரர், அவர் சிறையில் இருந்த நாட்களில் தொடர்ந்து வந்து, வீட்டு வாசலில் நின்றபடி, ஊரார் பார்த்திடும் விதமாக, “இனிமேல்டுக்கு இந்தத் தொழில செஞ்சீங்க, ஊட்டுக்காரன நெரந்தரமா ஜெயில்லயே வெச்சிடுவேன்” என்று சத்தம் போட்டுவிட்டுச் சென்றதாகச் சொன்னாள் மங்கம்மாள்.

வீட்டெதிரில் நாலுபேர் பார்க்கும் விதமாகச் சத்தம் போட்ட ஒருவருக்காகவே நிரந்தரமாகச் சாராயத்தைக் காய்ச்சத் தொடங்கிய மைவண்ணன், அந்தக் காவல்காரர் வரட்டும் வரட்டும் என்று பதிவிருந்தார்.

ஒருநாள் சூரியன் சரியும் வேளையில் வீட்டுக்கு எதிரில் போகின்ற செம்மண் சாலையில் பழைய மிதிவண்டியின் கதறல் கேட்டது. மங்கம்மாள் அரக்கப் பரக்க ஓடிவந்து மைவண்ணனிடம் அந்தக் காவலரின் வருகையைச் சொன்னாள். மாட்டுப் பட்டியின் மரக்கழிகள் வழியே மைவண்ணன் பார்த்தார். சிவப்புநிற மரக்கால் தொப்பியும், அரைக்கால் காக்கி டிரௌசரும் அணிந்திருந்த காவலர், பழைய மிதிவண்டியைச் செம்மண் சாலையிலேயே நிறுத்திவிட்டு,  செம்மண் வரப்பில் இறங்கி, பழுப்புக் காலணிகள் எழுப்புகின்ற நொறுங்கல் சப்தத்தோடு வந்து கொண்டிருந்தார். அவரின் தொடைத்தசை முனைகள் முட்டியின் மேல்பாகத்தில் உருண்ட முகத்துடன் எட்டிப் பார்த்தன. கெண்டைக்கால் சதைகள் இறுகியிருந்தன. வளர்நிலையிலிருந்த தொந்தியோ நடுவயதைக் கடந்திருந்தது.

மாட்டுப் பட்டிக்கு எதிரில் வந்து நின்ற காவலர், உள்ளே நின்றிருக்கும் மைவண்ணனைப் பார்த்து இறுகிய முகத்துடன் இரைந்தார்.

“போனதடவ போனாபோதுன்னு குடிச்சிருக்கிறதா கேசு போட்டேன்! இந்தத் தபா சாராயம் காச்சிறன்னே போடப் போறேன். இனிமேல்ட்டுக்கு நீ அவ்ளோதான். ஜென்மத்துக்கு தலதூக்க முடியாது! ங்கொம்மாளே என்னாடா, நா பேசினேகீறன். நீ உம்முனு கீற? குடிச்சிக்கிறயா? இப்பிடி மின்னால வந்து வாய ஊதுடா!”

மைவண்ணன் அந்தக் காவலரின் முகத்துக்கு நேராக வந்து பணிவுடன் நின்று, சடாரென்று தீக்குச்சியைக் கிழித்துப் பிடித்து, வாயிலிருக்கும் சாராயத்தை ஊதினார். அது குபீரென்று பற்றி, பெருந்தீயாகிக் காவலரின் முகத்தைப் பொசுக்கியது.

அந்தக் காவலர் சிவந்த வானத்துக்கு நேராய் ஓலமிட்டபடி ஓடினார்.

*