எப்போதும் இந்தி ஆங்கில வெப் சீரிஸ்களைப் பற்றியே எழுதுகிறீர்களே, தமிழ் வெப் சீரிஸ் பற்றி எழுதக்கூடாதா? என நண்பர்கள் சிலர் அடிக்கடிக் கேட்பதுண்டு. அதன்படி, ஒரு நண்பரின் பரிந்துரையின்பேரில் சமீபத்தில் பார்த்த தமிழ் வெப் சீரிஸ்தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. கடந்த மார்ச் மாதம் 2024-இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியான மலைகளையும் காடுகளையும் களமாகக் கொண்ட ஒரு வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ் பற்றியோ இதன் இயக்குநர் பற்றியோ எதுவும் தெரியாது. எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ஒரு வெப் சீரிஸைப் பார்க்கத் தொடங்கினேன்.
கோவைக்கு அருகில் உள்ள செழிப்பான மலை தேன்காடு. அங்கு வாழும் கானகர் என்ற பழங்குடி மக்கள் அனைவரும் நெருப்புக் கிணற்றில் விழுந்து கூட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. கதை நடைபெறும் காலத்தைத் தற்காலம் (2022 –- 24) என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்தக் காட்டில் இப்போது ஒரு கொலை நடந்திருக்கிறது. இறந்தவன் பெயர் ராபர்ட். ஓர் ஒளிப்படக் கலைஞன். இந்தக் கொலையைத் துப்பறிவதற்காக இன்ஸ்பெக்டர் ரிஷி வருகிறார். ராபர்ட் இருதய அடைப்பு (Cardiac arrest) ஏற்பட்டு இறந்திருக்கிறான். அவனுடைய உடல் மரத்தின்மேல் இருக்கிறது. உடலை முழுவதுமாகப் பூச்சிகள் வலைப்பின்னலால் (Cocoon) மூடியிருக்கின்றன. இறந்தவனைச் சுற்றி மஞ்சள் அரளிப்பூக்கள் கிடக்கின்றன. முற்றிலும் வித்தியாசமான ஒரு கொலையைப் பற்றி இன்ஸ்பெக்டர் ரிஷி துப்பறியத் தொடங்குகிறார்.
அந்தக் காட்டில் வனரட்சி என்ற தெய்வம் இருக்கிறது.
தனக்குப் பிடிக்காதவர்களை அந்தத் தெய்வம்தான் பழி தீர்க்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். “மர்மமா தெரியிற எல்லா விசயத்துக்கும் பின்னால ஒரு logical, rational and scientific explanation இருக்கும். இதைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான் போலிஸோட கடமை” என்ற கொள்கையை உடையவர் இன்ஸ்பெக்டர் ரிஷி. அதனால் வனரட்சி என்ற அமானுஷ்ய விசயத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்று இந்தக் கொலை வழக்கை அணுகுகிறார்.
இறந்துபோன ராபர்டை உடற்கூராய்வு செய்கிறார்கள். அவனுடைய உடல் விறைத்து இருக்கிறது. ஏதோ ஒரு விஷம் உடலில் ஏற்றப்பட்டிருக்கிறது. நச்சுயியல் (Toxicology) நிபுணர்களிடம் இது தொடர்பாக விசாரித்த பின், டாக்டர் ராபர்ட் உடலில் ஏற்றப்பட்டிருக்கும் நச்சுப்பொருள் பற்றிச் சொல்கிறார். “ஒருசில பவளப் பாம்புகள், தேள், நத்தைகள் மட்டும்தான் தன் உடம்புல இருக்குற விஷத்தைப் பயன்படுத்தி எதிரியோட நரம்பு மண்டலத்தை முழுவதுமாகச் செயலிழக்கச் செய்ய முடியும். The chemical makeup of their venom has calliotoxin. இந்த shock-னாலகூட அவங்களுக்கு Cardiac arrest வரலாம். ஆனால் calliotoxin-னோ இல்லைன்னா இதுமாதிரியான வேற எந்த கெமிக்கல்ஸோ எதோட traces-உம் victim-ஓட blood-ல்ல இல்ல…(ஆனால் கண்டுபிடிக்க முடியாத விஷம் ஏற்றப்பட்டுத்தான் ராபர்ட் இறந்திருக்கிறான்)” என்று கூறுகிறார். “அதேபோன்று, இறந்த உடல்மீது ஒருவகையான பூச்சிகள்தான் வலைப்பின்னலைச் செய்திருக்கின்றன. அது செயற்கையாகச் செய்யப்பட்டதில்லை” என்பதையும் டாக்டர் தெரிவிக்கிறார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி, அய்யனார், சித்ரா ஆகியோர் குழுவாகச் சேர்ந்து இந்த மர்ம மரணம் குறித்து ஆராய்கிறார்கள். முதல் கட்ட அனுமானத்தில், ”இந்த மர்மமான கொலை ஏற்கனவே நடந்த கொலையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அல்லது இனிமேல் நடக்கப்போகும் கொலைக்கு இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும்” என்பதை இன்ஸ்பெக்டர் ரிஷி தன்
துப்பறிவுக் குழுவினரிடம் சொல்கிறார். ஆனால், உபதேவதைகள் பற்றிய நம்பிக்கைகள் இந்த உலகமெங்கும் இருக்கின்றன. இப்போது நடக்கும் கொலைக்கும் வனரட்சி என்ற உபதேவதையின் கோபம்தான் காரணம் எனக்காவல்துறையில் சிலரும், பொதுமக்களும் நம்புகிறார்கள். ஏற்கனவே இதுபோன்ற வனதேவதை ஒன்று கனவில் வந்து தொந்தரவு செய்ததால் பாலா என்ற லாரி ட்ரைவரும் இறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் யூகித்ததுபோலவே அடுத்ததாக ஒரு மரணம் நிகழ்கிறது. ராபர்ட் என்ற ஒளிப்படக் கலைஞன் இறந்ததுபோலவே காண்ட்ராக்டர் ஏகாம்பரம் என்பவனும் இறந்திருக்கிறான். இவனுடைய உடலைப் பரிசோதித்த டாக்டர், ”Body-யோட stiffness, limbsஸோட position-ன பார்த்தா previous victim ராபர்ட்க்கு இருந்த symptom மாதிரியே இருக்கு” என்கிறார். பூச்சிகளின் வலைப்பின்னலும் முந்தைய மரணத்தில் நிகழ்ந்ததுபோலவே நிகழ்ந்திருக்கிறது. ஒரே வித்தியாசம், ராபர்ட் இரவில் காட்டிற்குள் நுழைந்து, ஒளிப்படம் எடுக்கச் சென்ற போது இறந்திருக்கிறான். ஏகாம்பரம் வீட்டில் படுத்திருந்தபோது, வீட்டின் கூரையை உடைத்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
”சிலந்திகள் வயிற்றுப் பகுதியில் வலை தயாரிக்கும். பட்டுப்பூச்சிகள் அதோட எச்சிலால் வலை (பட்டு) தயாரிக்கும். Webspinners என்ற பூச்சி இனங்கள் முன்னங்கால்களில் தனித்துவமான கழிவுகளை (Special ejects) வெளியேற்றி வலைப்பின்னும். இந்தப் பூச்சிகள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்தோறும் வலை உருவாவதால் மிக வேகமாக வலைப்பின்னும் திறன் கொண்டவை. இறந்த உடலில் இந்தப் பூச்சிகளை விடுவதன்மூலம் சில மணிநேரங்களில் உடலைச் சுற்றி வலைபின்னிவிடக்கூடியவை” என்கிறார் உயிரியல் ஆராய்ச்சியாளர்.
ஸ்டீஃபன் குட்சர் என்ற பூச்சியியல் வல்லுநர் (Entomologist) திரைப்படங்களுக்காக சிலந்திப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு தான் நினைத்தவாறு கூடுகட்ட வைத்துள்ளார். Jurassic Park, Spiderman, Arachnophobia போன்ற படங்களில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து படத்திற்குத் தேவையானதுபோல வலைப்பின்ன வைத்துள்ளார். அதுபோல இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யாரும் செயல்பட்டிருக்கிறார்களா? எனக் கேட்கிறார்கள். “விலங்குகள், பறவைகள் போல பூச்சிகளைப் பயிற்சி கொடுத்து எதையும்செய்ய வைக்கமுடியாது. ஒரு மூடிய அறையில் ஒளிகளைச் செலுத்துவதன்மூலம் சிலந்திகளை வலைப்பின்ன வைக்கமுடியும் என்றாலும், வெட்டவெளியான காடுகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி வேலைவாங்குவது கடினம்” என அந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
இன்ஸ்பெக்டர் ரிஷிக்குச் சில விசயங்கள் பிடிபடுகின்றன. “இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஒருத்தர் மட்டும் இல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நிச்சயமாக இருக்கணும். அவர்கள் மிகச் சிறந்த புத்திசாலிகளாகவும், திட்டமிடக்கூடியவர்களாக இருக்கணும். வலைப்பின்னல்கள் (Cocoon), மஞ்சள் அரளிப் பூக்கள், எல்லோரும் பார்க்குற இடத்துல பிணத்தை விட்டுட்டுப் போறது இதுமாதிரியான செயல்கள்மூலம் கொலைகாரர்கள் இந்த உலகத்துக்கு ஏதோ செய்தியைச் சொல்ல முயற்சி செய்கிறாங்க. நடந்த கொலைகளுக்கும் இந்தக் காட்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்றத அவங்க convey பண்றாங்க” என்று இன்ஸ்பெக்டர் ரிஷி குழுவினரிடம் பகிர்ந்துகொள்கிறார்.
ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் ஏதோ ஓர் உணர்ச்சி இருக்கும். பழிவாங்கல், பொறாமை, பேராசை, காமம், வெறுப்பு, கோபம், காதல் இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். இந்தக் காட்டில் நடக்கும் கொலைகளுக்குப் பின்னால் கோபம் என்ற உணர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது. அதுதான் காரணம் என்றால் அந்தக் கோபம் யார் மீது? ஏன்? எதற்காக? இந்தக் கேள்விகளைத் தேடி இன்ஸ்பெக்டர் ரிஷியும் குழுவினரும் அடுத்து அடுத்து செல்கிறார்கள்.
காட்டுயிர் பொருட்களைக் கடத்துவோர் (Poaching) அந்தக் காட்டில்நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் யானைத் தந்தங்களையும், புலித்தோல் களையும் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு அவர்களுக்குத் துணையாக இருக்கிறது. இறந்தவர்களில் பாலா என்பவர் கடத்தல் பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றவர் என்பது தெரிகிறது. சேகர் என்பவன் மிகப் பெரிய காட்டுயிர் பொருட்களைத் திருடுபவன் (Poacher). தொழில்போட்டியால் அவன்தான் தொடர்கொலைகள் செய்கிறானா என யோசிக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பில்லை. கொன்றாலும் இப்படி வெளிப்படையாக அவர்களைப் போட்டுவைக்க வேண்டிய தேவையும் அவனுக்கு இல்லை. இன்ஸ்பெக்டர் ரிஷி அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பின்னர், அவன் அங்கிருந்து தப்பித்து ஓடி, ஒரு குகையில் ஒளிந்துகொள்கிறான். அந்தக் குகையிலேயே அவனும் கொல்லப்படுகிறான். ராப்ர்ட், ஏகாம்பரம் ஆகியோரைப் போலவே சேகரின் மரணமும் இருக்கிறது. காட்டுயிர்களை வேட்டையாடியதால் கோபமான வனரட்சி சேகரையும் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடைசியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கானகர் என்ற பழங்குடி மக்களின் கூட்டுத் தற்கொலை பற்றி இன்ஸ்பெக்டர் ரிஷிக்குத் தெரியவருகிறது. அந்த ஊரில் சுற்றுச்சூழலுக்காகவும், பழங்குடி மக்களின் நன்மைக்காகவும் போராடிய பெரியவரிடம் இதுபற்றி விசாரிக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘Tribal Relaxation Scheme’ என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். கானகர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றுவது இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம். அவர்கள் வாழ்ந்த நிலத்தின்கீழ் கனிம வளம் இருப்பதால், அங்கு மிகப் பெரிய சுரங்கம் தோண்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அதனால், கானகர்களை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து துரத்தியிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து கானகர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராடியிருக்கிறார்கள். குறிப்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘கானகர்களின் வாழ்விடத்தை Ecological Sensitive Area-வாக மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. மாறாக Poaching, Smuggling, Illegal activities போன்ற குற்றப்பிரிவுகளில் வழக்குப்போட்டு கானகர்களைத் தண்டித்திருக்கிறார்கள்.
கானகர்களால் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடியவில்லை. அதனால் கூட்டுத் தற்கொலை செய்து தங்கள் காட்டைக் காப்பாற்றியிருக்கிறார்கள். உலகத்தில் இதுவரை கூட்டுத் தற்கொலைகள் பல நடந்துள்ளன. 1980-களில் அமெரிக்காவின் புதிய மத இயக்கம் மேற்கொண்ட Heaven’s Gate என்ற கூட்டுத் தற்கொலையில் ஒரே நேரத்தில் 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரைப் பின்பற்றி வந்தவர்கள், ஒரே நேரத்தில் 900 பேர் கூட்டுத் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஜெனிவாவில் நடந்த சில்வர் டெம்பில் என்ற கூட்டுத் தற்கொலையில் 74 பேர் இறந்திருக்கிறார்கள். டெல்லி புஜாரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டுத் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
உலகில் இதுபோல் நடந்த தற்கொலைகளுக்குப் பின்னால் மதமும் ஆன்மிகமும் அடிப்படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் கானகர்களின் கூட்டுத் தற்கொலைக்குப் பின்னால் இயற்கையைக் காப்பாற்றும் நோக்கம் இருக்கிறது. இந்தக் கூட்டுத் தற்கொலை மிகப் பெரிய பேசு பொருளாக மாறியதால் அரசாங்கம் கனிம வளத்தை எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறது.
இருபதாண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனிமத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தவர் வனத்துறை இயக்குநர் மல்லிகா. இப்போது அவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் காட்டின் வளங்கள் அழிவதற்குக் காரணமானவர்கள். வனரட்சி என்ற பெயரில் அவர்களைக் யாரோ சிலர் கொன்றிருக்கிறார்கள். கொலைசெய்தவர்கள் யாராக இருக்க முடியும்? நிச்சயம் காட்டிற்கு வெளியிலிருந்து வந்து யாரும் இப்படிக் கொலைகளைச் செய்ய முடியாது. காட்டோடு தொடர்புடைய, காட்டிற்குள் எளிதாக வந்துபோகக்கூடியவர்கள்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியும்.
மனிதர்கள் உள்பட எல்லோரிடமும் Pheromones என்ற Natural chemical substances சுரக்கும். பூச்சிகளிடம் இந்த வேதிப்பொருள் அதிகமாகவே சுரக்கும். இந்த வாசனை வேதிப்பொருள் மூலம்தான் பூச்சிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும். உணவு, பால் நுகர்வு, வலைப் பின்னல் போன்ற பல்வகையான வேலைகளை இந்த Pheromones மூலம்தான் நிகழ்த்தும். எல்லா உயிரினங்களையும் போல மரங்களிலும் Pheromones சுரக்கும். ஏதோ ஒரு மரத்தின் வேர்களில் சுரக்கும் Pheromones வலைப்பூச்சிகளைப் பயங்கரமாக ஈர்த்துள்ளது.
காட்டில் உள்ள சில மூலிகைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இருதய அடைப்பை ஏற்படுத்தி, அவர்களின் மேல் அந்தக் காட்டில் கானகர்கள் வணங்கிய ஒரு மரத்தின் வாசனை வேதிப்பொருளைத் தெளித்து, வலைப்பூச்சிகளைப் பரவவிட்டிருக்கிறார்கள். அந்தப் பூச்சிகள் சில மணி நேரத்திற்குள் இறந்தவரின் உடலைச் சுற்றி மிகப் பெரிய வலையை உருவாக்கியிருக்கின்றன என்பதை இன்ஸ்பெக்டர் ரிஷி கண்டுபிடிக்கிறார்.
அப்படி என்றால் இந்தக் கொலைகளை எல்லாம் கானகர் என்ற பழங்குடி மக்கள்தான் செய்திருக்க வேண்டும். கூட்டாகத் தற்கொலை செய்துகொண்ட கானகர்கள்
எப்படி இந்தக் கொலைகளைச் செய்ய முடியும் என்ற கேள்விக்குத் தொடரின் இறுதியில் விடைச் சொல்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது கதை நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது இல்லையா? ஆனால் வெப் சீரிஸ் பார்க்கும்போது உங்களைப் படுத்தி எடுப்பார்கள். உலகம் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்து எங்கேயோ போனப் பின்பும் தமிழ்த் திரைக்
கதைகள் பல, இன்னும் ஆதி காலத்தில் இருப்பது எவ்வளவு பெரிய சோகம். கண்ணுக்குக் குளிர்ச்சியான களம் இருக்கிறது. நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், புராணக்கூறும் பகுத்தறிவும் முரண்படும் கதைக்களம் இருக்கிறது. திரைக்கதையை ஒழுங்காக எழுத வேண்டாமா? கள ஆய்வு என்பது கொஞ்சம்கூட இல்லாமல் இணையத்தில் கிடைக்கும் செய்திகளை மட்டும் வைத்துத் திரைக்கதை எழுதிவிடலாம் என்ற மனநோய் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
காந்தாரா படத்தினால் இந்தத் தொடரின் இயக்குநர் ஈர்ப்புக்குள்ளாகியிருக்க வேண்டும். ஆனால், அந்தப் படத்தை ஆழமாக உள்வாங்காமல் பிரதி எடுத்துள்ளார். பழங்குடி மக்கள், நாட்டுப்புற தெய்வம், மர்மமான கொலைகள், பழங்குடி வழிபாடுகள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில்போட்டு நன்றாகக் குலுக்கி எடுத்துக்கொண்டு கதைக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத LBGTQ+ உறவுச் சிக்கல்கள், மரபார்ந்த மனித சிந்தனைகள், அற்பாயுளில் இறந்துபோன காதலி நினைவுகள் போன்ற துணைக்கதைகளை உள்ளே கலந்து பத்து எபிசோட்களில் கதையை இழு இழு என்று இழுத்து ஒரு வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்.
சினிமா ஒரு காலத்தில் உயர்சாதி பணக்காரர்களின் கலைக்கூடமாக இருந்தது. அது மெல்ல மெல்ல கட்டுடைந்து, நூற்றாண்டு கடந்த பின்னர் எல்லோரும் பங்கெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. திறமையுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். நல்ல கதையோடு வந்தால் படம் எடுக்கலாம் என்ற உயர்வை அடைந்துள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக வெப் சீரிஸ் கார்ப்பரேட்களின் களமாக மாறியுள்ளது. நன்றாக லாபி செய்ய தெரிந்த ஒருவரால் மட்டும்தான் வெப் சீரிஸ் எடுக்க முடியும். அதிலும் தமிழ் வெப் சீரிஸ் உலகம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. நான் வெப் சீரிஸ் குறித்து எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் விலங்கு, அயலி என்ற இரண்டு தமிழ் வெப் சீரிஸைத் தவிர மற்ற தொடர்களைப் பற்றி மக்கள் அதிகம் பேசவேயில்லை.
ஆனால் இந்தி வெப் சீரிஸ்கள் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. கலைநேர்த்தியும் நடிப்பும் அவர்களிடம் சிறப்பாக இருக்கிறது. சென்ற மாதம்கூட நான் உயிர்மையில் காலா பானி என்ற வெப் சீரிஸ் பற்றி எழுதியிருந்தேன். அந்த வெப் சீரிஸும் பழங்குடிகளை மையப்படுத்திய கதைதான். அந்தமானைக் களமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். அந்த வெப் சீரிஸில் மனிதர்கள் உணர்ந்துகொள்வதற்கான கதை இருந்தது. பல்வேறு கதைகள் ஒரு புள்ளியில் மிகச் சரியாக இணைந்தன. வசனம் மிகச் சிறப்பாக இருந்தது. கதையின் முக்கியமான இடத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் மனவெழுச்சி ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருந்தது. கேரக்டர் ஆர்ச் மிகச் சிறப் பாக இருந்தது.
மிகவும் பலகீனமான கதை, மந்தமான திரைக்கதை, தொழில்நுட்பக் குறைபாடுகள், லாஜிக் இல்லாத காட்சிகள் என நிறைய குறைகளோடு இன்ஸ்பெக்டர் ரிஷி வெளியில் வந்திருக்கிறார். இந்தக் கதையை உருவாக்கி இயக்கிய நந்தினி என்பவர் இதற்குமுன் என்ன படத்தில் பணிபுரிந்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு வெப் சீரிஸ் எடுப்பதற்கு முன் திரைக்கதை குறித்து அடிப்படைப் படிப்பாவது படிக்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்ற சுஜாதாவின் புத்தகத்தையாவது படிக்க வேண்டும்.
ஒரு திரைக்கதையில் கதை துணைக்கதை (Plot மற்றும் Sub plot) இருக்கின்றன என்றால் துணைக்கதைகள் மையக் கதையை நகர்த்திக்கொண்டு செல்ல வேண்டும்
என்பது திரைக்கதையின் அடிப்படை விதி. ஒருவரை ஒற்றைக் கண்ணோடு திரைக்கதையில் காட்டுகிறோம் என்றால், அதனால் திரைக்கதையில் ஏதாவது நிகழவேண்டும். ‘திரைக்கதையில் ஒரு கத்தி காட்டப்படுகிறது என்றால், படம் முடிவதற்குள் அந்தக் கத்தியால்
யாரையாவது குத்த வேண்டும்’ என்பார் சுஜாதா. ”இதெல்லாம் உங்களமாதிரி ரூல் பேசுறவங்களுக்குத்தான்… நாங்க எல்லாம் வேற மாதிரி” என்ற மனநிலையோடு படம் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மூன்று மணிநேரம் தேர்வெழுதிய ஒருவன் கடைசி நிமிடத்தில் மூன்று பக்கத்திற்கான விடையை அவசர அவசரமாக எழுதுவதுபோல பத்து எபிசோட்களில் பல இடங்கில் துணைக்கதை என்ற பெயரில் வீணடித்துவிட்டு, கதையின் கடைசியில் டிரைவர் பாலா செத்தது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் சத்யா தேன் காட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருக்கார்.
பாலாவ அவங்க கொல்லல வனரட்சிதான் பாலா கொலைக்குக் காரணம்’னு சொன்னதால சத்யா அதுலேர்ந்து inspire ஆகியிருக்கலாம்.
தன்னை காட்டு ரட்சி துரத்துது’ன்னு அவ சொன்னாளே அது மக்கள நம்ப வைக்கத்தான் எனச் சொல்லும்போது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அதுவும் கதையின்
முக்கிய பாத்திரமாக வரும் வனத்துறை இயக்குநர் மல்லிகாவின் மரணத்தைப் போகிற போக்கில் கொல்வது எல்லாம்…? என்ன சொல்ல..! சினிமா வாய்ப்புக்காக எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டிருக்க, கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடிக்கிறார்களே என்ற கவலையும் தோன்றியது. இந்தி ஆங்கிலத் தொடர்களை ஒப்பிடும்போது தமிழ் வெப் சீரிஸ்கள் பலமில்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
இங்கே உள்ள இயக்குநர்கள் திரைக்கதையாசிரியர்களைப் பயன்படுத்துவதே இல்லை. தடுக்கி விழுந்தால் ஆயிரம் எழுத்தாளர்கள் நிறைந்த தமிழ் உலகில் இயக்குநர்களுக்கு ஏன் எழுத்தாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரமறுக்கிறது…? சமீபத்தில் நான் விமர்சித்து எழுதிய Kaala Paani, Korra, The Railway Man போன்ற எல்லா வெற்றித் தொடர்களுக்குப் பின்னாலும் மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன. நல்ல திரைக்கதையாசிரியர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வராதவரை தமிழ் வெப் சீரிஸ்கள் உருப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
சரி இவ்வளவு குறைகள் சொல்கிறேனே நிறைவான விசயம் எதுவும் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷியாக நடித்திருக்கும் நவீன் சந்திரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலேயே அவர் நடிப்பைப்
பார்த்து வியந்தேன். மிகக் குறைவான நேரம் அந்தப்படத்தில் வந்தாலும் அவருடைய நடிப்பு மிகவும் ஈர்த்தது. இந்த வெப் சீரிஸில் பத்து எபிசோட்டில் வருகிறார். பலகீனமான திரைக்கதையை இவர்தான் காப்பாற்றுகிறார். சுனைனா, விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ஹரினி எனப் பலர் நல்ல நடிப்பை வழங்கியிருந்தனர்.
காதல் காட்சிகளில் இவர்களுடைய அண்மை சுவையாக இருந்தது. சுனைனாவோடு நவீன் காட்டும் நெருக்கமும், முதல் காதலி விஜியோடு நவீன் நடத்தும் ரோலர் கோஸ்டர் அன்பு வாழ்க்கையும், ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு கதையைத் தொடர்ந்து வரும் முடிவு எந்த லாஜிக்கும் இல்லாமல் இருந்தால் எப்படித்தான் ரசிக்கமுடியும்…! தமிழ் வெப் சீரிஸைப் பொறுத்தவரை இப்போதுதான் நடைவண்டி ஓட்டிப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். தனித்து நடப்பதற்கு நீண்ட காலம் ஆகும். அதைப் பார்ப்பதற்கு நாம் உயிரோடு இருப்போமா என்பதுதான் தெரியவில்லை…!
sankarthirukkural@gmail.com