1

இதே பூமிக்கோளத்தின்

மறுபாதியில்

வாழ்கிறார்கள் எஸ்கிமோக்கள்

 

எஸ்கிமோக்கள்

பனியை எதிர்ப்பதில்லை

பனியும் எஸ்கிமோக்களை எதிர்ப்பதில்லை

 

எஸ்கிமோக்கள்

பனிக்கட்டிகளாலான

சிற்றில்களைக் கட்டி விளையாடுகிறார்கள்

வளர்ந்த பிறகும்

அவர்கள் அந்த விளையாட்டைக்

கைவிடுவதில்லை

 

எஸ்கிமோக்கள்

நீராலானவர்கள்

பனிக்கரடியை வேட்டையாடும் முன்பு

அதை வணங்கித் தொழுபவர்கள்

 

எஸ்கிமோக்களுக்கு

எங்கெங்கோ நகரும் வாழ்வுதான்

அவர்கள் நீரோடிகள்

என்றாலும் எஸ்கிமோக்கள்

வாழ்கிறார்கள்

 

என்றாலும்

கோடைக்காலங்களில்

மிருகத்தோல்களின் கூடாரங்களிலும்

பனிக்காலத்தில் இக்ளூவிலும்

அதே எஸ்கிமோக்கள்தான்

மூவாயிரம் ஆண்டுகளாய் வாழ்கிறார்கள்

அதே உடைகளில்

வெவ்வேறு உடல்களில்

 

2

எஸ்கிமோக்கள் என்றால்

பச்சை இறைச்சியை உண்பவர்கள்

புரியாத மொழியைப் பேசுபவர்கள்

குளிரைக் கலவிக்கு ஒரு சாக்காய்

பயன்படுத்தாதவர்கள்

எப்போதாவது தங்கள் மனைவிகளைப் பகிர்ந்துகொள்பவர்கள்

 

எஸ்கிமோக்கள் என்றால்

முதுமையடைந்தவுடன்

தலைக்கூத்தல் நிகழ்வை

புன்னகையுடன் ஏற்பவர்கள்

 

எஸ்கிமோக்கள் என்றால்

நிலத்தில் உள்ள ஒவ்வொருவரின்

அப்பட்டமாய் வாழ்பவர்கள்

கனவையும் உறைய வைத்து

அப்படியே வாழ்பவர்கள்

 

எஸ்கிமோக்களுக்கு

இயற்கைதான் கடவுள்

வாழ்வதே கடமை

மரணம்தான் விடுதலை

 

3

எஸ்கிமோக்களிலும்

நவீன எஸ்கிமோக்கள் உண்டு

அவர்கள் வீடுகளிலும் மின்சாரம் உண்டு

தொலைக்காட்சிப் பெட்டி உண்டு

 

எஸ்கிமோக்களுக்கு

வேட்டை பிரதான கடமை

நவீன எஸ்கிமோக்களுக்கு

அது பிரதான தொழில்

 

அவர்களது இக்ளூக்களில்

பனிக்கட்டிகளின் இடத்தை

மரத்துண்டுகள் ஆக்கிரமித்துள்ளன

 

அவர்களது பொறித் திருகி வில்

இன்னமும் வழக்கத்திலிருந்து

முழுதாய் மறைந்துவிடவில்லை

அவர்கள் பெரும்பாலும்

லைட்டர்களுக்குப் பழகிவிட்டார்கள்

 

வெளி மனிதர்கள்

அவர்கள் வாழ்க்கையில் நுழைந்தபோது

அவர்கள் வீட்டிற்குள்

மதுவும் சிகரெட்டும் குடியேறின

 

எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்

சீலின் எண்ணெய் இப்போது

அதன் தோலை வாட்ட மட்டுமே பயன்படுகிறது

 

பெட்ரோல் படகுகளால்

இப்போது அவர்களது நிலத்திலும்

கறுப்புத் தடங்கள் பதிகின்றன

 

நவீன எஸ்கிமோ

தனது மொபைலில்

தன் மூதாதையர் பயன்படுத்தியதென

பதிவிடும் எலும்புக் கத்தியின் புகைப்படத்திற்கு

ஆயிரம் லைக்குகள்

எழுநூறு பகிர்வுகள்

 

ஆகச்சரியாக

பதிமூன்று வருடங்களுக்கு முன்புவரை

அந்தக் கத்தி

அவர்கள் கைகளில்

புழக்கத்தில்தான் இருந்தது

 

4

 

பனிப்பாலைவனத்தில்

நடக்கும்போது

ஒவ்வொரு எஸ்கிமோவும்

ஒவ்வொரு பனி ஒட்டகம்

 

பனி படிந்த கண்களை

அவர்களால் எவ்வளவு திறக்க முடியும்?

 

எஸ்கிமோக்கள் குறுகிய கீரலுடைய கண்ணாடியை அணிகிறார்கள்

குறுகிய கண்களால்தான்

இந்த பரந்த உலகைப் பார்க்கிறார்கள்

 

நிலத்திலிருப்பவர்களைப்போல

பனிக் கத்தியைக் கொலைக்குப் பயன்படுத்தலாமென

எஸ்கிமோக்களுக்குத் தெரியாது

 

அவர்கள்

பனிக்குடத்தை உடைத்துப்

பிறக்கிறார்கள்

பின் வாழ்நாளெல்லாம்

பனிப்பாறைகளை உடைக்கிறார்கள்

 

பனியை அறுக்கும் கத்தியால்

எஸ்கிமோக்கள் மாமிசத்தைக் கிழிப்பதில்லை

 

தன் நண்பனையும் எதிரியையும்

ஒரு பனிப்பாறை உடையும்போதுதான்

அறிகிறான் எஸ்கிமோ

 

5

எஸ்கிமோக்களின் பழமொழிகளில்

இலையில்லை மரமில்லை

நிலமில்லை பகலில்லை

 

பனி இருக்கிறது

இருள் இருக்கிறது

ஓநாய் மதகுரு சூரிய ஒளி

விளக்கு எண்ணெய் மாமிசம்

பெண் கருணை காதல் வாழ்க்கை மரணம்

எல்லாம் இருக்கின்றன

மேலும் இருக்கின்றன

சில நட்சத்திரங்கள் மற்றும்

எந்த நன்மையையும் கொண்டுவராத

குளிர் காற்று

 

6

நீண்ட நாள் வாழ்ந்த எஸ்கிமோ

நள்ளிரவில் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி

நட்சத்திரங்களைக் காணச் செய்ததற்காய்

இருளுக்கு நன்றி சொல்கிறான்

தன் வீட்டின் விளக்கை

அணைக்கிறான்

 

எரியும் விறகுக்குக் குளிருமென

தன் ரோமத்தோல் போர்வையை

அதன்மேல் போர்த்திவிட்டுப்

பின்னர் ஒரு பனிக்கட்டியை

வாயில் அதக்கியபடி

ஒரு பனிப்பலகையின் மீது ஏறி

நடுகடலுக்குச் செல்கிறான்

 

மரணத்தை மெல்ல மெல்ல

நெருங்கும் எஸ்கிமோவிற்காக

வானில் சொர்க்கத்திலிருந்து

சில உதடுகள் புலம்புகின்றன

நீண்ட தூரம் பயணித்துக்

களைப்போடு வரும் நீராத்மாவை

கடலின் ஆழத்திலிருக்கும் நகரம்

மீனிறைச்சியோடு வரவேற்கிறது