ஜனநாயகத்தை பொறுத்தவரையில் அதன் பிரதான தன்மை, தனிமனித உரிமைகளை பாதுகாப்பதே!. ஏனென்றால் ஜனநாயகத்தில்,  அரசை விட தனித மனிதனே முதன்மையானவன். தனி மனிதனை பாதுகாப்பதும், அவனது வாழ்வாதாரங்களை உறுதி செய்வதும், அதற்கான திட்டங்களை வகுப்புதமே அரசு என்ற நிறுவனத்தின் நோக்கம். ஓர் அரசிற்காக தனிமனிதனின் இந்த உரிமைகளை தியாகம் செய்ய சொல்வது ஜனநாயகத்தன்மை ஆகாது.

தனிமனிதனுக்கு இருக்கக்கூடிய உரிமைகளில் மிகவும் அடிப்படையானது அவனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்குரிய உரிமையே!. வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்ல, அனைத்து விதமான கருத்துகளையும், தகவல்களையும் பெறுவதற்கும் அவனுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த உரிமையை பாதுகாப்பது அரசின் கடமைகளில் முதன்மையானது. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அட்டவணை 19 இல் இந்த உரிமையை உறுதி செய்வதற்கான சரத்துகளை கொடுத்திருக்கிறது. அதை பின்பற்றி ஒவ்வொரு நாடும், தனிமனிதன் எந்த வித அச்சுறுத்தலும் இன்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்திடும் சட்டங்களை இயற்றியிருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரையிலும், குற்றவியல் சட்ட அட்டவணை பகுதி 19 ம் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை குறிப்பிடுகின்றன.

கருத்து சுதந்திரத்தின் எல்லை எது? என்ற கேள்வி நிறைய நேரங்களில் நமக்குமே கூட எழாமல் இல்லை. நம்மால் உடன்படும் கருத்துகளை பிறர் விமர்சிக்கும் போது, கருத்து சுதந்திரத்தை ஒப்புக்கொள்ளும் நாம், நமக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்ட ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அவரின் கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறோம். நமது நிலைப்பாடுகளுடைய ஒருவர் அவரின் தனிப்பட்ட கருத்துக்காக நடவடிக்கைகளுக்கு ஆளாகும் போது அதை கண்டிக்கும் நாம், நம் எதிர் தரப்பில் ஒருவர் அதே காரணத்திற்காக தண்டிக்கப்பட்டால் அமைதியாகிவிடுகிறோம். நமக்குமே கூட, அந்த நேரத்தில் நமது நிலைப்பாட்டின் மீது விமர்சனம் வந்துவிடுகிறது.

சமூகத்தின் நலன் மீது எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கரிசனத்தோடு இருக்கும் ஒருவர், தனது மாறுபட்ட நிலைப்பாட்டால் சில நேரங்களில் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறார். இந்த சூழ்நிலையில் தான் “கருத்து சுதந்திரத்தின் எல்லை எது?” என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஏனென்றால், தனி நபருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த எல்லையற்ற உரிமையின் நோக்கங்கள் தவறாக கையாளப்படும்போது அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது, அது மட்டுமில்லாமல் அதையொட்டிய பெரும் விவாதங்களுக்கும் அது காரணமாகிறது.

தனி நபரின் இந்த அடிப்படை உரிமையை ஒட்டி, பல்வேறு காலங்களில், பல்வேறு வழக்குகள் இங்கு நடந்திருக்கின்றன. கருத்து சுதந்திரத்தின் எல்லை எதுவரை என்பது பற்றியான விவாதங்களும் இங்கு தொடர்ந்து நடந்திருக்கின்றன. பெரும் ஊடகங்களுக்கும், அரசுக்குமானதாகவே இதுவரை இந்த வழக்குகள் நடந்திருக்கின்றன. ஊடகங்கள், அரசின் செயல்பாட்டை விமர்சித்த போதெல்லாம் அதையொட்டிய வழக்குகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றனம் பல வழக்குகளில் “தனி நபர், தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அடிப்படை உரிமை முழுமையானதல்ல, அதற்கு சில நிபந்தனைகள் உண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் இந்த கருத்தை ஆமோதித்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் “எந்த ஒரு நிபந்தனைகளுமற்ற முழு உரிமையை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கும், ஊடகங்களுக்கும் மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்த இந்த மோதல், சமூக வலைதளங்களின் வருகைக்கு பிறகு அரசிற்கும், தனி நபருக்குமானதாக மாறிப்போய் இருக்கிறது. எல்லையற்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த காலத்தில், இந்த அடிப்படை மனித உரிமை மீதான கேள்விகளும், விவாதங்களும் இன்னும் வலுவாக எழுந்திருக்கின்றன, அதுவும் வேறொரு பரிணாமத்தில் எழுந்திருக்கின்றன.

இன்றைய காலத்தில், மரபான ஊடகங்கள் தனது முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றன, இன்றைய நாளின் போக்கினை, செய்தியினை பெரும்பாலும் சமூக வலைதளங்களே நிர்ணயிக்கின்றன, சமூக வலைதளங்களின் இந்த அழுத்தத்தை மரபான ஊடகங்கள் புறம் தள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. முன்ணணி ஊடகங்கள் கூட, மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல செய்திக்காக அத்தனை பொறுமையாக சமூக வலைதளங்களின் வாசலில் காத்திருக்கின்றன. எந்த செய்தி பரபரப்பானதாக மாறும், எந்த செய்தி கவனமின்றி ஒன்றுமில்லாமல் போகும் என்பதை மரபான ஊடகங்களால் கணிக்க முடியவில்லை, அன்றைய நாளின் வைரலை, செய்தியை சமூக வலைதளங்கள் உருவாக்குகின்றன, அந்த செய்தியை நம்பியே இன்றைய ஊடகங்கள் தாக்குபிடித்துக்கொண்டிருக்கின்றன.

மரபான ஊடகங்களின் விழுமிய வீழ்ச்சியை நாம் தினம் தினம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் முன்பை விட முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால் இங்கு ஒவ்வொரு தனி நபரும் ஊடகமாக மாறிப்போயிருக்கிறார்கள், அவர்களது தனிப்பட்ட கருத்துக்களும், பார்வைகளும் பொதுவானதாக மாறக்கூடிய அபாயங்களை சமூக வலைதளங்கள் எழுப்பியிருக்கின்றன, இந்த நிலையில், ஒரு தனிநபரின் கருத்தை அவரது எல்லையற்ற உரிமை என்ற வகையில் மட்டும் நம்மால் சுருக்கி பார்க்க முடியாது, அது நிகழ்த்தபோகும் விளைவுகளையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது, அப்படியில்லாமல் அதை வெறும் கருத்து சுதந்திர எல்லையில் மட்டுமே பார்ப்பது ஒரு வகையில் வறட்டுத்தனமானது.

தனி நபர்கள் தங்களின் சமூக வலைதள கணக்குகளை ஊடகங்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போது அதற்கு பின்னால் பல நோக்கங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதிலுமே இப்படிப்பட்ட பல தனி நபர்கள் அரசின் போதாமைகளை, நிர்வாக தோல்விகளை, அலட்சியங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே வருகிறார்கள். அப்போதெல்லாம் அதற்கான வழக்குகளையும் கூட தொடர்ச்சியாக சந்தித்துதான் வருகிறார்கள்.

தனி நபரின் இந்த கருத்து சுதந்திரத்தை எந்த வகையில் அரசு எதிர்கொள்கிறது? இந்தியாவிலுமே கூட, எந்தெந்த சூழலில் இந்த கருத்து சுதந்திரத்திற்கு செக் வைக்கப்படுகிறது?

உச்ச நீதி மன்றம் பல்வேறு வழக்குகளில் கருத்து சுதந்திரத்தின் எல்லைகளை சுட்டி காட்டியிருக்கிறது:

தனி நபருக்கான இந்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி ஒருவர் சொல்லக்கூடிய கருத்து,

  • இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாக இருக்கக்கூடாது
  • இந்தியா தனது அண்டை நாடுகளுடன் பேணக்கூடிய நட்புறவை சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது
  • தேச நலனுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது
  • சமூகத்தில் வன்முறைகளை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது
  • சமூகத்தில் பல்வேறு சாதி, மத, இன குழுக்களிடையே இருக்கக்கூடிய பரஸ்பர இணக்கத்தையும், நட்பையும் சிதைப்பதாகவோ அல்லது அவர்களிடையே வெறுப்பையும், வன்முறையையும் தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது
  • தனிப்பட்ட பலன்களுக்காக மற்றவர்களின் மீது அவதூறையும், வெறுப்பையும் பரப்புவதாக இருக்கக்கூடாது
  • தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ அல்லது மொழியையோ தாக்குவதாக இருக்கக்கூடாது
  • தனி நபரின் அல்லது அரசின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலோ அல்லது அவர்களின் மீதான மதிப்பை கெடுப்பதாகவோ அல்லது அவர்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கும் வகையிலோ ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்பக்கூடாது

என கருத்து சுதந்திரத்திற்கான எல்லைகளை உச்ச நீதி மன்றம் பல வழக்குகளில் வகுத்திருக்கிறது, இதன் அடிப்படையிலே ஊடகங்களோ அல்லது தனி நபர்களோ தங்களது கருத்துக்களுக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகின்றன.

சமூக வலைதளங்கள் காலத்தில், இந்த எல்லைகள் சர்வ சாதாரணமாக மீறப்படுகின்றன. யாரை வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. உண்மையில் இதன் விளைவுகளை பற்றி பெரும்பாலானவர்கள் கவலைப்படுவதில்லை அல்லது அதன் ஆபத்தை உணர்வதில்லை. சமூக வலைதளங்கள் கொடுக்கக்கூடிய இந்த சுதந்திரத்திலும், புற அழுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் தன்னிச்சையாக இப்படிப்பட்ட அவதூறுகளையும், வெறுப்பையும் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட அவதூறுகளும், வன்மங்களும் பரவலாக போய் சேரும்போது அது பொது சமூகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் பெரும்பாலான நேரங்களில் அமைந்துவிடுகின்றன. அப்படி ஆகும் போது, அது நிமித்தம் யாரும் குறைந்தபட்ச குற்றவுணர்ச்சியை கூட அடைவதில்லை.

உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் ஒரு குழந்தை கைதவறி வீட்டின் மேலிருந்து கூரையில் விழுந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறது, அது சமூக வலைதளங்களில் பரவலான போது, செய்தி ஊடகங்களும் கூட அதை ப்ரேக்கிங் செய்தியாக போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தையின் பெற்றோர்கள் முதற்கொண்டு இதனையொட்டி விமர்சிக்கப்பட்டார்கள். குறிப்பாக அந்த குழந்தையின் தாயை பற்றி கடுமையான விமர்சனங்களும் பரப்பப்பட்டன, பிரபலமான சமூக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்கள் கூட, அந்த தாயை பற்றி எதுவும் தெரியாமல் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த அழுத்தமும், தொடர் வன்மமும் அந்த தாயை மனம் குலைய வைத்தது, அவர் இந்த அழுத்தம் தாங்காமல், இங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். அப்போது இந்த தாக்குதல் குறையாத நிலையில், இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளங்களில், போகிற போக்கில் செய்யப்பட்ட இந்த விமர்சனங்களும், அவதூறுகளும் ஓர் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது பற்றி யாருக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஏனென்றால் இதற்காக யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க தேவையில்லை. பொறுப்புகளில் இருந்து சமூக வலைதளங்கள் தனி நபர்களை விடுவிப்பதால் இப்படிப்பட்ட சம்பவங்கள் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எந்த வித உள் நோக்கங்களும் இல்லாமல், சமூக வலைதளங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் தன்னிச்சையாக நடக்கும் இது போன்ற சம்பவங்கள் ஒரு புறம் இருந்தாலும், தெளிவான உள்நோக்கங்களோடு, தனிப்பட்ட பலன்களுக்காக இப்படி பரப்பப்படும் அவதூறுகளும், வெறுப்புகளும் இதைவிட இன்னும் ஆபத்தானது.

“கார்டுல இருக்குற நாலு நம்பர சொல்லுனு” என கேட்பது, இந்த டிஜிட்டல் காலத்தில் எந்தளவிற்கு ஏமாற்று வேலையோ அதே போல தங்களுக்கு இருக்கும் சமூக வலைதள செல்வாக்கை பயன்படுத்தி, அரசிடமோ, கட்சிகளிடமோ அல்லது தனி நபர்களிடமோ தங்களுக்கு தேவையான பலன்களை சாதித்துக்கொள்ள நினைப்பதும் ஏமாற்று வேலையே. ஏமாற்று வேலை மட்டுமல்ல, அது அயோக்கியத்தனமும் கூட!. இப்படிப்பட்ட உள் நோக்கங்களோடு சமூக வலைதள ஊடக கணக்கை தொடங்குபவர்கள், முதலில் நன்மதிப்பை பெறுவதற்கான வேலைகளில் இறங்குகிறார்கள், சமூக அவலங்களை பற்றியும், அநீதிகளை பற்றியும், அரசின் நிர்வாக தோல்விகளை பற்றியும் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்புவதன் மூலம் சாதாரண மனிதர்களிடம் ஒரு நன்மதிப்பையும், நம்பிக்கையையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். பின்னால், இந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு தங்களின் நிஜ முகங்களை காட்டத்தொடங்குகிறார்கள், தங்களது தனிப்பட்ட பலன்களுக்காக இப்படி எளிய மக்களின் நம்பிக்கையை பாழாக்குவது ஏமாற்று வேலையே. ஒரு கட்டத்தில் இவர்கள், சமூக வலைதள போக்கை முடிவு செய்பவர்களாக மாறும்போது பெரும் கட்சிகளாலும், முதலாளிகளாலும், அதிகாரிகளாலும் கூட இவர்களின் அழுத்தத்தை தாங்க முடிவதில்லை. இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் எப்படி இந்த அழுத்தத்தை தாங்குவார்கள்? சமூக வலைதளங்கள் உருவாக்கும் கருத்து சுதந்திரத்தின் இன்னொரு முகம் இது.

இன்றைய காலத்தில், நாம் இவை எதையுமே தடுக்க முடியாத இடத்தில் இருக்கிறோம். இவற்றில் நமது பங்கு என்று எதுவுமில்லை என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் அலட்சியம் செய்கிறோம். ஆனால், உங்களுக்கு சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு கணக்கு இருந்தால் நீங்கள் அப்படியெல்லாம் தப்பி விட முடியாது. இந்த குற்றங்களில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. ஏனென்றால் நம்மையும் அறியாமல், சில நேரங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு துணை போய்விடுகிறோம். நம்மளவில் இதை முழுமையாக உணர்ந்து கொண்டு, நமது சமூக வலைதள பயன்பாட்டை முறைபடுத்தினால் மட்டுமே இதன் பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

உள்நோக்கங்கள் கொண்ட இப்படிப்பட்ட தனிநபர் சமூக வலைதளங்களை எப்படி கண்டு கொள்வது?

இன்று நமது தனிப்பட்ட நேரங்களை பெரும்பாலும் நாம் சமூக வலைதளங்களில் தான் செலவிடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் நாம் ஒரு பார்வையாளராக பல்வேறு கணக்குகளை பின் தொடர்கிறோம். பொழுதுபோக்கிறாக அல்லது தனிப்பட்ட ரசனை சார்ந்து சில கணக்குகளை பின் தொடர்வதும், அதை ரசிப்பதும் தவறல்ல. ஆனால், அரசியல் ரீதியாக அல்லது அன்றாட செய்திகளுக்காக சில தனி நபர் ஊடகங்களை நாம் பின் தொடர நினைக்கிறோம் என்றால் அதில் சில விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மைகளை விட, பொய் செய்திகள் பரவும் வேகம் மிக அதிகம், பரவும் வேகம் மட்டுமல்ல, அது ஏற்படுத்தும் தாக்கங்களும் மிக அதிகம். ஒரு செய்தியை உண்மையா அல்லது பொய்யா என நாம் பிரித்தறிந்து தெரிந்து கொள்வதற்குள்ளாகவே அந்த செய்தி பெருமளவு பரவிவிடும். அதனால் முடிந்த வரை நம்பகத்தன்மை மிக்க தனி நபர் ஊடகங்களை தேர்வு செய்து கொள்வது அவசியமானது. முடிந்த வரை ஒரு தனி நபர் ஊடகத்தை உங்கள் அளவில், சில கருதுகோள்களை கொண்டு மதிப்பிடுங்கள்.

இந்த தனி நபரின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது

ஒருவரின் அரசியல் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வது அவசியம். அவரின் அந்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டு அவரின் கருத்துகளை மதிப்பிட முடியும். ஒருவரின் அரசியல் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டால், அதை சார்ந்த அவரின் எந்த கருத்துகளுக்கும் ஆச்சர்யபடத் தேவையில்லை. அதற்கு உணர்ச்சிவசப்படவும் தேவையில்லை. தனி நபரின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்த வரையில் யாருக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் இல்லையோ அவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். “நடுநிலை” என்பதே இங்கு இல்லை, அது அவரவரின் தேவைகளை பொறுத்தது. அரசியல் நிலைப்பாடு எதுவுமற்றவர்களாக இருப்பவர்களை விட, தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருப்பவர்களிடம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தங்களது தனிப்பட்ட நிலைப்பாடுகளை, தனிப்பட்ட  பலன்களுக்காக மாற்றிக்கொண்டேயிருப்பவர்கள் இன்னும் ஆபத்தானவர்கள். அவர்களின் கருத்துகள் தான் நிறைய நேரங்கள் சமூகத்தில் கொந்தளிப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

சமூக வலைதள கணக்குகளுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் என்ன?

ஒரு தனிப்பட்ட நபர் தன்னை ஊடகமாக கருதிக்கொள்ளும் போது, அவரின் நோக்கம் என்ன? என்பதை நாம் தான் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். தங்களது சித்தாந்தங்களை பரப்புவதாக இருக்கலாம், எளிய மனிதர்களின் குரலாக இருக்கலாம், அதிகாரத்தை கேள்வி கேட்கக்கூடியதாக இருக்கலாம், சமூக இணக்கத்தை பாதுகாப்பதாக இருக்கலாம் அல்லது பொய் செய்திகளையும், வெறுப்பையும் கண்டறிந்து உண்மையை மக்களிடம் சொல்வதற்காக இருக்கலாம். இப்படி அதன் நோக்கமென்ன என்பது முக்கியமானது. எந்த நோக்கமும் இல்லாமல் தனி நபரின் மீது அவதூறுகளையும், அவர்களின் மாண்பை  குலைக்கும் வகையில் ஆதாரமற்ற தகவல்களை தொடர்ச்சியாக பரப்புவதுமாக இருக்கும் சமூக வலைதள கணக்குகள் தான் ஆபத்தானவை. ஏனென்றால் அவர்களது நோக்கங்கள் வெளிப்படையானதாக இருக்காது, அது அந்த குறிப்பிட்ட செய்தியால் அடையப்போகும் தனிப்பட்ட பலன்களுக்கானதாக இருக்கலாம்.

சமூக அவலங்களின் போதும், பேரிடரின் போது, எளிய மக்களின் துன்பங்களின் போது அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

எளிய மக்களுக்கான வாழ்வாதார போராட்டங்களில் அல்லது அரசு எந்திரங்களால் எளிய மனிதர்கள் பாதிக்கப்படும் போது அல்லது சமூக நல்லிணக்கங்களுக்கு ஆபத்து வரும் சூழல்களிலெல்லாம் அவர்களின் நடவடிக்கை என்னவாக இருந்தது என்பதை கவனிப்பது அவசியமாது. அந்த நேரத்தில் பிரச்சினைகளை திசை திருப்பும் வகையிலான அவர்களின் நடவடிக்கைகளை அடையாளம் கொண்டு அவர்களின் நம்பகத்தன்மையை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தொழில் முறை ஊடகங்கள், இப்படிப்பட்ட தனி நபரின் சமூக வலைதள ஊடக செய்திகளை அங்கீகாரம் செய்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

தனி நபர் சமூக வலைதள ஊடகங்களுக்கு இந்த சமூகத்தின் மீதும், அதன் சீரான இயக்கத்தின் மீதும் உண்மையில் கரிசனம் இருக்கிறதா? என்பதையும் நாம் அந்த ஊடகத்தின் செயல்பாடுகளில் இருந்து மதிப்பிட்டு பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒட்டு மொத்த சமூக நலனை ஊடகத்தின் பிரதான பணி மேலும் குரலற்றவர்களின் குரலாக இருப்பதும் ஊடக பணி. இந்த மாண்புகளெல்லாம் அந்த தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளுக்கு இருக்கிறதா என்பதையும் நாம் தான் கவனிக்க வேண்டும்.

இறுதியாக, ஒரு சமூக வலைதள ஊடகத்தில் பிரதானமாக செயல்படும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி நேர்மையானதாக, வெளிப்படையானதாக இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் வைத்துதான் நாம் எந்த தனி நபருக்கான சமூக வலைதள ஊடகங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். இந்த மதிப்பீடுகளை கொண்டே நாம் அதன் நம்பகத்தன்மையையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தனி நபர் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை ஒரு சிவில் சமூகமாக நாம் அங்கீகாரம் செய்யும் அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் இந்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. அதுவும் சமூக ஒழுங்கை குலைக்கும் வகையிலும், தனி நபரின் மாண்பை, கண்ணியத்தை சிதைக்கும் வகையிலும் இருக்கும் போது கருத்து சுதந்திரத்தின் எல்லைகளை காத்திரமாக வகுத்துக்கொள்ள வேண்டியதன் தேவைகளும் எழுகிறது. இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தனி நபராக நாம் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களை மிகவும் பொறுப்பாகவும், கண்ணியமாகவும், இது போன்ற விஷமிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை நிறுத்துவதும் காலத்தின் தேவையாக இருக்கிறது. ஓர் அறிவு சமூகமாக நாம் பொறுப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டால் இது போன்ற தீய சக்திகளை பற்றி நாம் இவ்வளவு கவலை கொள்ளவும் தேவை இருக்காது.