இன்றிருக்கும் அரசியல் உணர்வற்ற அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வகைமாதிரிகளை உருவாக்கியது “சிஐஏ நடத்திய பண்பாட்டுப் பிரச்சாரங்களாகும். இவர்கள் எவ்வளவு தூரம் உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் தங்களை விலக்கிக் கொண்டு, எந்த அளவுக்கு பெருமைமிகு டிரஸ்டுகளுக்கும், பவுண்டேஷன்களுக்கும் நெருக்கமாகவிருக்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களின் இலக்கிய மதிப்பு உயர்கிறது. சி ஐ ஏ உருவாக்கிய இந்த புரொபஷனல் கலை இலக்கியவாதிகள், வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்திய சுரண்டல், உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் அநீதி ஆகியவற்றைப் பற்றி எழுதும் அறிவுஜீவிகளை இலக்கிய உலகுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் காவலாளிகளாக செயல்பட்டனர்.
ஜேம்ஸ் பெட்ராஸ்
இன்றைய கலைஞர்கள் ஏதாவது ஒரு நிகழ்வில் முற்போக்கான நிலை எடுக்கிறார்களா இல்லையா என்பது பிரச்சினையில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக அரசியல் ஆகியவை தங்கள் இசை, ஓவியம், எழுத்து ஆகியவற்றில் தலைகாட்டிவிடக்கூடாது, அப்படி நடந்தால் தங்கள் கலைப்படைப்புகள் தரம் குறைந்தவையாகிவிடும் என்று எண்ணம் கலைஞர்களிடையே பரவலாக இருக்கிறது இல்லையா அதுதான் பிரச்சினை.
பீட்டர் கல்லினி
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்த காலகட்டத்தில் ஐரோப்பா பேரழிவுக்கு உள்ளாகியிருந்தது. முதலாளித்துவ பேராசை, போட்டியால் அடுத்தடுத்து நடந்த இரண்டு உலகப் போர்களால் நேரிட்ட அழிவு, முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பணவீக்கம், போருக்குப் பின்னான ஆகிரமிப்பு ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய அறிவுஜீவிகளும், தொழிற்சங்கவாதிகளும் முதலாளித்துவ எதிர்ப்பு மனநிலை கொண்டிருந்தனர். குறிப்பாக உலகத்துக்கே காவலாளி என்று காட்டிக் கொண்டு அமெரிக்கா செய்து வந்த பாசாங்குகளை கடுமையாக வெறுத்தனர்.
1948 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அமைதியை பாதுகாப்பதற்கான அறிவுஜீவிகளின் அகில உலக மாநாடு என்ற மாநாட்டை போலந்து நாட்டிலுள்ள வோர்க்லா என்ற நகரில் கூட்டியது. பின்பு இதே போன்ற மாநாடு பாரீஸ் நகரிலும் நடந்தது. இம்மாநாடுகளின் விளைவாக உலக அமைதி கவுன்சில் என்ற அமைப்பு தோன்றியது. இம்மாநாடுகள் பெரும் வெற்றியடைந்தன. இம்மாநாடுகளில் எண்ணற்ற இடதுசாரி எழுத்தாளர்கள் கலைஞர்கள், உலக அமைதியை விரும்பிய அறிவு ஜீவிகள், ஏகாதிபத்திய சுரண்டல் அநீதியானது என்று கருதியவர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதிலுமிருந்த அறிவுஜீவிகள் நடுவே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் தான் போர்களுக்கும், சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் காரணம், சோவியத் யூனியன் புதிய உலகுக்காக நிற்கிறது என்ற கருத்து இருந்தது.
இதன் தொடர்ச்சியாக நியூயார்க் நகரில் மார்ச் 1949 ஆம் ஆண்டு வால்டார்ஃப் அஸ்டோரியா ( Waldorf-Astoria) ஹோட்டலில் உலக அமைதிக்கான பண்பாடு மற்றும் அறிவியல் என்ற ஒரு மாநாடு நடந்தது. இதில் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற இடதுசாரிகள், முற்போக்காளர்கள், அமைதி விரும்பிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாடானது சோவியத் யூனியனுடன் அமெரிக்கா கடைப்பிடித்து வந்த மோதல் போக்கைக் கைவிட்டு அமைதிக்கான முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அடக்குமுறையையும், அரசு கண்காணிப்பையும் மீறி இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இலக்கியவாதிகளும், அறிவாளிகளும், முற்போக்காளர்களும் ஒன்று திரண்டது அமெரிக்க அரசு வட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது மட்டுமில்லாமல் சோவியத் இலக்கிய வகைமையான சோஷலிச எதார்த்தமும், அடக்குமுறைக்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிரான எழுத்துக்களும், கலை வடிவங்களும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அக்கால சூழலின் தேவையிலிருந்தே இவ்வகையான எழுத்துக்கள் உருவாகிவந்தன. சமூக எதார்த்தத்தைப் பேசுவது என்பது முதலாளித்துவ சமூக அமைப்பு முறையை எதிர்ப்பது என்ற இடத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாததாக மாறியது.
ஐரோப்பாவின் சூழல் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பதை உண்ர்ந்து கொண்ட சி ஐ ஏ அதிகாரியான டாம் பிரெடன் என்பவர் மேற்கு ஐரோப்பிய அரசுகள் மிகவும் பிற்போக்கானவையாகவும், காலனியாதிக்க மனோபாவம் கொண்டவையாகவும் இருப்பதாகக் கருதினார். இது போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டும், இந்த அரசுகளால் ஆதரிக்கப்படும் பழமையில் ஊறிய கலைஞர்களைக் கொண்டும், புதிதாக உருவாகிவரும் வீரியமிக்க முற்போக்கு கலை இலக்கிய வடிவங்களை எதிர்கொள்ள முடியாது என்று சி ஐ ஏ முடிவு செய்தது. அமெரிக்கா, காலனியதிக்கவாதிகளை விட ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலமே தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடியும். நவீனமான, முற்போக்கான நாடாக தன்னை காட்டிக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு டாம் பிரடனும் அவரைப் போன்ற அதிகாரிகளும் வந்தனர்.
இதனடிப்படையில் தீவிரமான இடதுசாரிகளுக்கு எதிராக மென்மைப் போக்கு கொண்ட இடதுசாரிகள், சோவியத் எதிர்ப்பு இடதுசாரிகள் ஆகியோரை ஆதரித்து ஓரணியில் திரட்டும் செயல்திட்டத்தை சி ஐ ஏ தொடங்கியது.
சி ஐ ஏவின் நிதியுதவியோடு காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் என்ற அமைப்பு, 1950 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, மேற்கு பெர்லினில் கூட்டப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு அறிவுஜீவிகளின் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஆர்தர் கோஸ்ட்லர், பெர்ரண்ட் ரஸ்ஸல், டெனஸி வில்லியம்ஸ், இர்விங் பிரவுன், சிட்னி ஹூக் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டவர்கள். அதே நேரம் சோவியத் எதிர்ப்பாளர்கள். ஆர்தர் கோய்ஸ்லர் போன்றவர்கள் முன்னாள் கம்யூனிஸ்டுகள். இவர்களது முற்போக்கு மற்றும் அறிவுஜீவி பிம்பத்தை சி ஐ ஏ பயன்படுத்திக் கொள்ள முயன்றது. இந்த மாநாட்டில் கம்யூனிச எதிர்ப்பு பழமைவாதிகளும் கலந்து கொண்டாலும் இடதுசாரிகளே பெரும் எண்ணிக்கையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த அமைப்பானது சோவியத் யூனியனுடன் தொடர்பு இல்லாத புதிய இடது சிந்தனையாளர்களை தங்கள் பால் ஈர்க்க தொடர்ந்து முயன்றது. Compatible left என்ற சொல் இந்த அமைப்பால் நடைமுறைக்கு வந்தது. அதாவது இணக்கமான இடதுசாரிகள். புரட்சி நடத்தி முதலாளித்துவ அரசைக் கவிழ்த்து சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கம் இல்லாத சிறு சிறு சீர்திருத்தங்கள் மூலம் மாற்றத்தை விரும்பிய இடதுசாரிகளை நட்பு சக்திகளாக முன்பு சி ஐ ஏவும் பின்பு போர்டு பவுண்டேஷனும் கருதின.
நிகோலஸ் நபக்கோவ் “இந்த மாநாட்டைக் கொண்டு நாம் ஒரு போருக்கான அமைப்பைக் கட்டியெழுப்புவோம்” என்றார். நிகோலஸ் நபக்கோவ் ரஷ்ய பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர். போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு இவரது குடும்பம் ரஷ்யாவை விட்டுத் தப்பியோடியது. பின்பு நபக்கோவ் அமெரிக்கா வந்து அமெரிக்க குடிமகனுமானார். நபக்கோவ் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், எழுத்தாளருமாவார். பண்பாட்டுத் தளத்திலும் முக்கியமான நபராக அறியப்பட்டவராக இருந்தார். இவரே 1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பின் பொதுச் செயலாளரானார். பதினைந்து ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்து சி ஐ ஏ உதவியுடன் பல இசை நிகழ்ச்சிகளும், பண்பாட்டு விழாக்களும் நடத்தினார்.
காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பின் பெர்லின் மாநாட்டு அறிக்கையை எழுத்தாளர் ஆர்தர் கோஸ்லர் எழுதினார். கோய்ஸ்லர் ஹங்கேரியில் பிறந்த யூதர். 1931 ஆம் ஆண்டு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். பின்பு 1938 ஆம் ஆண்டு ஸ்டாலினின் கொடுமைகளால் வெறுப்படைந்ததாகக் கூறி கட்சியை விட்டு வெளியேறினார். இஸ்ரேலின் உறுதிவாய்ந்த ஆதரவாளராக இருந்தவர் ஜெருசலத்திலும் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார்.
1949 ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி ஆர்தர் கோய்ஸ்லர் இப்படி எழுதினார் “(பாலஸ்தீனர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது) வயதானவர்கள் பித்தளைக் காபி கோப்பைகளையும், விரிப்புகளையும் கழுதையின் மீது கட்டுவார்கள். கிழவி கழுதையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடப்பாள். கிழவன் அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு வருவான். அவன் தனது சின்னஞ்சிறிய பேத்தியை பாலியல் வல்லுறவு செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் மூழ்கியிருப்பான்” (Promise and fulfilment by Arthur Koestler quoted by Rober fisk in Pity the Nation. Page 405-406).
அகதிகளாக்கப்பட்டு, அனைத்தும் இழந்து வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்ட பாலஸ்தீன மக்களைப் பற்றி இப்படி எழுதியவரைப் போன்றவர்களைக் கொண்டு தான் சி ஐ ஏ கலை மற்றும் பண்பாட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்பை உருவாக்கியது. அதே நேரம் தனது பங்களிப்பை மிகவும் ரகசியமாக வைத்துக் கொண்டது. இந்த அமைப்பின் மாநாடுகளை நடத்தவும், கலந்து கொண்டவர்களுக்கான செலவுகளைக் கவனிக்கவும், அவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கவும் சி ஐ ஏ பல்வேறு போலி டிரஸ்டுகள், பவுண்டேஷன்களை உருவாக்கியது. சி ஐ ஏ வின் நிதியுதவியால் இந்த அமைப்பு இயங்குகிறது என்பது தெரியவந்தால் முதலாளித்துவவாதிகளால் இயக்கப்படும் அறிவுஜீவிகள் என்ற பெயர் வந்துவிடும் என்பதாலேயே சி ஐ ஏ வின் பங்கு ரகசியமாக வைக்கப்பட்டது.
சோவியத் எதிர்ப்பு, ஸ்டாலினிய எதிர்ப்பு அறிவுஜீவிகளால் தன்னிச்சையாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது போலப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அமெரிக்கா நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடு, கலை இலக்கியங்களுக்குப் பாலைவனம் போன்ற நாடு என்ற இடதுசாரிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள சோவியத் யூனியனில் படைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை, அவர்கள் சென்சாராலும், அரசு அடக்குமுறையாலும் வதைபடுகின்றனர் என்ற குற்றச் சாட்டை முன்வைத்து கலை இலக்கியவாதிகளின் சுதந்திரத்துக்குப் போராடுவதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்று அமைப்பாளர்கள் கூறிக் கொண்டனர்.
ஆனால் இந்த இலக்கியவாதிகள் ஒரு கணம் கூட சுதந்திரமாக இயங்க முடியாமல், பெர்லின் மாநாட்டின் ஒவ்வொரு அம்சமும் சி ஐ ஏ வால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. போர் முடிந்து பணப்புழக்கம் மிகவும் குறைந்து போயிருந்த அந்தக் காலத்தில் பெர்லின் செல்வதற்காக சி ஐ ஏ தனக்கு பிசினெஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கித் தந்ததைப் பார்த்து நபக்கோவ் பெரும் வியப்படைந்தார். சோவியத் யூனியனுடனான பனிப்போரின் ராணுவ மையமாக நேட்டோ இருந்ததைப் போல பண்பாட்டுத் தளத்தில் காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அமைந்தது என்றே சி ஐ ஏ கருதியது. இந்த அமைப்பை பண்பாட்டு பனிப்போரின் முக்கிய ஆயுதம் என்றே குறிப்பிட்டது.
இந்த அமைப்பானது மனிதனை மனிதன் சுரண்டுவது நியாயமா, முதலாளித்துவ கொள்ளை நியாயமா, எழை நாடுகளை வளர்ந்த நாடுகள் கொள்ளை அடிக்கலாமா, பெண்களை வணிகப் பொருட்களாகக் கருதலாமா என்பது போன்ற அடிப்படை விஷ்யங்களுக்குள் செல்வதை கவனமாகத் தவிர்த்தது. அதற்கு பதில் முதலாளித்துவ நாடுகளிலேயே கருத்து சுதந்திரம் உள்ளது. ஒரு இலக்கியவாதி அங்கு மட்டுமே சுதந்திரமாக இயங்க முடியும், சோஷலிச நாடுகளில் மக்கள் தொடர்ந்து அரசால் கண்காணிக்கப்படுகின்றனர். முச்சு விடக்கூட அரசு அனுமதி தேவை என்று பிரச்சாரம் செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
சமூகத்தைப் பேசும் எழுத்துக்களை கலையே இல்லை, வறட்சியானவை என்று பிரச்சாரம் செய்தது இந்த அமைப்பு. தனிமனித உணர்வுகளை பேசும் அரசியலற்ற கலையே உன்னதமானது என்று இந்த அமைப்பு அடித்துப் பேசியது. கலையானது அரசியல், வணிகம், அழகியல் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் ஆழ்மன வெளிப்பாடாக வெளிவர வேண்டும். தனிமனிதனே கலையின் மையம் என்றது இந்த அமைப்பு. ஒரு வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரத்தை பிரச்சாரம் செய்ய உருவாக்கிய அமைப்பின் உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும் என்பதை சி ஐ ஏவும் பணமும் தீர்மானித்தன.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் 1952 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைவடிவங்கள் (Masterpieces of the twentieth century) என்ற பெயரில் நடந்த ஒரு கண்காட்சியில், அமெரிக்க abstract expressionism அல்லது avant garde பாணி ஓவியங்களுக்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பெரும் செலவையும் சி ஐ ஏ ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த பாணி ஓவியங்கள் நம்மிடையே பொதுவாக மாடர்ன் ஆர்ட் என்று அழைக்கப்படுபவை. மாடர்ன் ஆர்ட் வருவதற்கு முன்பு ஓவியம் என்பது ஒரு புகைப்படம் போல இருப்பதை அப்படியே காட்டுவதாக இருந்தது. இதற்கு மாறாக மாடர்ன் ஆர்ட் மனித முகங்கள், நிகழ்வுகள், உணர்வுகளைக் குறியீடுகளாகக் காட்டுகிறது என்று சொல்லப்பட்டது. உதாரணமாக பழைய பாணி ஓவியங்களில் ஒரு ஜன்னல் என்பது ஜன்னல் மட்டுமே. இந்த நவீன ஓவியங்களில் அது விடுதலையைக் குறிக்கலாம். சிறையைக் குறிக்கலாம். வேறு பலவற்றையும் குறிக்கலாம்.
இந்த மாடர்ன் ஆர்ட்டை பிக்காசோ போன்றவர்கள் பாசிச எதிர்ப்புக்கும், பல்வேறு அரசியல் உண்ர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்தினர். ஆனால் இதன் அரசியல் அடிப்படையை நீக்கி தனிமனித உணர்வுகளை மையமாகக் கொண்டதாக மாற்றி பெரிய அளவில் எடுத்துச் செல்ல சி ஐ ஏ முடிவு செய்திருந்தது.
புகழ்பெற்ற மாடர்னிச ஓவியர் ஜேக்சன் போலாக், நடனம் போன்ற அசைவுகளுடன் படுவேகமாக வண்ணங்களை கேன்வாஸில் விசிறியடிப்பார். கோடுகளும், புள்ளிகளுமாக ஒரு சிலந்தி வலைபோல இருக்கும் இவரது ஓவியங்களைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. இவற்றில் புரிந்து கொள்ள எதுவும் இல்லை. இவை பொருளற்றவை இது வெறும் முட்டாள்தனம். பேத்தல் என்ற விமர்சனமும் உண்டு
முதல் பார்வைக்கு வெறும் வண்ணக் கலவை போலத் தெரிவது சிக்கலான மன உணர்வுகளைக் குறிப்பதாக இருக்கலாம். கனவைக் குறியீடாகச் சுட்டுவதாக இருக்கலாம் என்ற பார்வையும் உண்டு. திட்டமிட்டு உருவாக்கப்படும் கலையானது அரசியல் வணிகம் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது. அதெல்லாம் இல்லாமல் குறிப்பான சிந்தனை, திட்டமிடல் இல்லாமல், அந்தக் கணத்தில் தோன்றும் கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டு உருவாக்கப்படும் ஓவியமானது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சி ஐ ஏ வால் நிதியளிக்கப்பட்ட கிளமவுண்ட் கிரீன்பெர்க் போன்ற கலைவிமர்சகர்கள் பிரச்சாரம் செய்தனர்.
ஜேக்சன் போல்லாக் பாணி ஓவியங்களைப் பிரபலப்படுத்திய கிளமவுண்ட் கிரீன் பர்க் 1950 ஆம் ஆண்டு சி ஐ ஏ உருவாக்கிய அமெரிக்கன் கமிட்டி ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பில் உறுப்பினரானார். ஓவியர் ஜாக்சன் போல்லாக்கும் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தார். இந்த இருவரும் முன்னாள் மார்க்சியவாதிகள். இந்த வகையான அப்ஸ்ராக்ட் எக்ஸ்பிரஷனிச ஓவியங்கள் அரசியலுடன் தொடர்பற்றவை என்பதாலேயே அவற்றை கிரீன்பர்க் போன்ற விமர்சகர்கள் ஆதரித்தனர். அதே நேரம் இதை கம்யூனிச எதிர்ப்பு அரசியலுக்கு சி ஐ ஏ பயன்படுத்துவதை அறிந்தும் அதற்கு உதவினர். கலையானது அரசியலுக்கும் வணிகத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று பேசிய அதே நேரத்தில் avant garde ஓவிய பாணிக்கு அமெரிக்க மேல்தட்டு வர்க்கங்களின் ஆதரவைக் கோரிப் பெற்றனர். இந்த வகை ஒவியங்கள் சி ஐ ஏ உதவியுடன் பெரும் தொகைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மியூசியங்களுக்கு வாங்கப் படுவதை ஆதரித்தனர். அரசியலும் வணிகமுமே avant garde ஓவிய சந்தையைத் தீர்மானிப்பதை வரவேற்றனர்.
ஆனால் அத்தனை அரசு ஆதரவு இருந்தும் இந்த avant garde ஓவிய பாணி விரைவில் செல்வாக்கிழந்தது. பனிப்போர் வியட்நாம் யுத்தமாக 1960களில் வெடித்தது. போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டங்கள் பாப் ஆர்ட், ஆப் ஆர்ட் மற்றும் பல்வேறு போராட்ட கலை வடிவங்கள் முன்னுக்கு வந்து, avant garde ஐ பின்னுக்குத் தள்ளின. (Art and the CIA- Richard Cummings).
சோவியத் யூனியன் மற்றும் இடதுசாரிகளின் கலை இலக்கியப் பார்வையில் சமூகமே பிரதானமானதாக இருந்தது. தனி மனிதர்களின் வெற்றி, தோல்வி, செல்வம், வறுமை,, அறிவு, அறிவின்மை போன்றவை சமூகத்தின் தாக்கத்தினாலே முடிவு செய்யப்படுகின்றன. எனவே தனிமனித வாழ்க்கையோடு சமூக சூழலையும், வரலாற்றுப் பின்னணியையும் பிரதிபலிப்பதே சிறந்த கலை வடிவம் என்று கருதப்பட்டது. இது நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நம்பிக்கையுடன் அணுகியது. முதலாளித்துவ சுரண்டல் என்பது ஒரு தனிமனிதனின் கெட்ட குணம் அல்ல, அது ஒரு அநீதியான சமூக அமைப்பு என்பது இந்தப் பார்வையின் அடிப்படை.
இதற்கு மாறாக ஒரு வீரம் மிகுந்த, அறிவு மிகுந்த தனிநபர் ஜனாதிபதி, மருத்துவர், போலீஸ்காரர், ராணுவவீரர் போன்றவர் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவார், எல்லோரையும் காப்பாற்றிவிடுவார் என்று நம்ப வைப்பது முதலாளித்துவ கலை.
இதே போல பஞ்சம், போர், அரசு அடக்குமுறை, வறுமை, சாதி, நிறம், மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான அடக்குமுறை போன்றவற்றை விட, தனி மனிதர்களின் தனிமை, வெறுமை, காதல், பிரிவு, துயரம் போன்ற உணர்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பது அமெரிக்க அரசாலும் சிஐ ஏவாலும் விரும்பப்பட்டது. வறுமைக்கு காரணம் அநீதியான சமூக அமைப்பு என்பதை பதிவு செய்வதைவிட வறுமையால் ஏற்படும் துயரம், வெறுமை, தனிமை ஆகியவற்றை மட்டும் தனிநபர் விஷயமாக எழுதுவதும், வரைவதும் வரவேற்கப்பட்டது. இதற்கான வாய்ப்பை மாடர்ன் ஆர்ட் வழங்கியது.
மாடர்ன் ஆர்ட் புத்தம் புதிதாக இருந்தது, படைப்பூக்கம் மிக்கதாக இருந்தது. தனி மனிதத் தன்மை கொண்டதாக இருந்தது. இதன் காரணமாகவே சி ஐ ஏ மாடர்ன் ஆர்ட்டை நோக்கி ஈர்க்கப்பட்டது என்று ஐ ஏ அதிகாரி டாம் பிரடன் கூறுகின்றார்.
சர்வ வல்லமை பெற்ற சி ஐ ஏவின் துணையால் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் பெரும் வளர்ச்சி பெற்று 35 நாடுகளில் கிளைகளை உருவாக்கியது. இருபதுக்கும் மேற்பட்ட முக்கியமான இலக்கிய இதழ்களை இந்த அமைப்பு வெளியிட்டது. செய்தி நிறுவனங்கள் நடத்தியது. பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட 37 பிரம்மாண்டமான பன்னாட்டுக் கருத்தரங்களை நடத்தியது. ரங்கூன், மெக்சிகோ சிடி, டோக்கியோ, இபடன் (நைஜீரியா), தெற்கு வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த கருத்தரங்கள் நடந்தன. இந்தியாவின் பம்பாயிலும் தொடக்க விழா விமரிசையாக நடந்தது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்களுக்குப் பல பரிசுகளை வழங்கியது.
எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்காக நிற்பதாகக் கூறிக் கொண்டே தங்கள் மனச்சாட்சிப்படி நடந்து கொண்ட இடது சாரி எழுத்தாளர்கள் மேல் இந்த அமைப்பு கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
பாப்லோ நெரூடா அவர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற இடதுசாரி அறிவுஜீவியாகவிருந்தார். லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க அரசு ஆதரவுடன் நடந்துவந்த அரச பயங்கரவாதத்துக்கும், கொடுன்கோன்மைக்கும் எதிரான அவரது எழுத்துக்கள் மிகவும் முக்கியமானவை. காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அவரை முதன்மையான எதிரியாகக் கொண்டது. மெக்சிகோவில் நடந்த டிராட்ஸ்கி கொலையில் பாப்லோ நெரூடாவுக்கும் தொடர்பு இருந்தது என்ற வதந்தி மிகத் தீவிரமாக காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடத்தால் பரப்பப்பட்டது. 1964 ஆம் ஆண்டு பாப்லோவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தி வெளியானதும் இந்தத் தாக்குதல் இன்னும் அதிகரித்தது. அவருக்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்ற பெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. பின்பு அந்த ஆண்டுக்கான நோபல் ஜீன் பால் சார்த்தருக்கு வழங்கப்பட்டது. அவர் அதை மறுதலித்தார்.
ஜீன் பால் சார்த்தர், மான், சிமோன் டி புவா போன்ற புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளர்கள் மீதும் காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அவதூறுகளைப் பரப்பியது.
ஜேம்ஸ் பர்ன்ஹாம் என்பவர் அமெரிக்காவில் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பின் உறுப்பினராவார். (கம்யுனிசத்தை ) தடுத்து நிறுத்தும் கோட்பாடு என்ற கோட்பாட்டின் தீவிர ஆதரவாளரான இவர் தன்னை புதிதாக உருவாகியுள்ள இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், இந்தியாவிலும் இந்த அமைப்பின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த உதவத் தயாராக உள்ளதாகக் கூறியதாகவும் அறிவித்தார்.
அந்த இந்தியர் மினோ மஸானி என்பவராவார். இவர் பம்பாயின் மேயராக இருந்தவர். நேரு எதிர்ப்பாளர். பின்பு ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். தடையற்ற முதலாளித்துவம், சுதந்திர வர்த்தகம் ஆகியவற்றின் ஆதரவாளர் இவர். அதிதீவிர கம்யூனிச வெறுப்பாளர்.
அமெரிக்கா, இந்தியாவில் பல்வேறு சட்டபூர்வ, சட்டவிரோத அமைப்புகள் மூலம் இயங்கி சோவியத் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், இந்திய அரசுக்கு கம்யூனிச எதிர்ப்பு நிலை எடுக்கும் படி நெருக்கடிகள் கொடுப்பதாகவும் நேரு அரசு சந்தேகம் கொண்டிருந்தது. அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயல்வதைக் கண்டு நேரு எரிச்சலைடைந்திருந்தார். அமெரிக்க தூதரகம் நடத்திய மது விருந்துகளில் கலந்து கொண்ட இந்தியத் தலைவர்களை நேரு கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மசானி முன்முயற்சியில் காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அமைப்பானது தனது முதல் மாநாட்டை டெல்லியில் கூட்ட முயற்சிகள் எடுத்தது. நேரு அரசு முதலில் அனுமதி அளித்து விட்டது. பின்பு இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தங்களது அமெரிக்க ஆதரவு நிலையை வெளிப்படையாகப் பேசி, இந்தியாவின் அணிசேரா நாடுகள் கொள்கையை கடுமையாக விமர்சித்ததால் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பின்பு இந்த மாநாடு பம்பாயில் நடத்தப்பட்டது. ஜெயபிரகாஷ் நாராயணன், அம்பேத்கார், ரஜனி கோத்தாரி, சச்சிதான்ந்த ஹிரண்ய வத்ஸ்யாயன், நிசாம் எஸ்கியேல் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சோசலிச கொடுங்கோன்மை நிலவும் நாடுகளுக்கு எதிராக இந்திய அறிவு ஜீவிகள் உறுதியான நிலை எடுக்க வேண்டுமென்று இந்த அமைப்பு வலியுறுத்தியது.
பின்பு பல வேடிக்கையான காரணங்களால் இந்த அமைப்பில் பல சிக்கல்கள் உருவாகின. மசானி போன்றவர்கள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் நடத்த சி ஐ ஏ கொடுத்த பணத்தை நேரு எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தப் பயன்படுத்தினர். பெரிய அளவில் சி ஐ ஏ பணம் கையாடல் செய்யப்பட்டது. சச்சிதானந்த ஹிரண்ய வத்ஸ்யாயன் அமைப்புக்கு வந்த பணத்தை தனது சொந்த கணக்குக்கு மாற்றிக் கொண்டதாகவும் அவர் ஒரு திருடன் என்று மசானி குற்றம் சாட்டினார். இப்படி மாறி மாறி ஊழல் குற்றச் சாட்டுகள் பறந்தன.
இது, இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்தி வந்த சி ஐ ஏ அதிகாரியான மைக்கேல் ஜோசெல்சன் என்பவருக்கு அதிருப்தி அளித்தது. வெளிப்படையாக நேருவைப் பகைத்துக் கொள்வது இந்தியாவில் கம்யூனிச எதிர்ப்புப் பணி செய்வதைக் கடினமாக்கும் என்றார் இவர். இதற்காக நேரு மீது மென்மைப் போக்கு கொண்ட குவெஸ்ட் இதழ் தொடங்கப் பட்டது. இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு தனது கம்யுனிச எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்தது என்று நம்ப இடம் இருக்கிறது.
சீனா ரிபோர்ட் என்ற இதழ் இந்தியாவிலிருந்து இந்த அமைப்பின் உதவியுடன் வெளிவந்தது. தி சீனா குவார்ட்டர்லி என்ற இதழ் பிரிட்டனில் இருந்து வெளிவந்தது. இவை சீன எதிர்ப்புக் கருத்துக்களை பரப்பின. இந்த இதழுக்கு Farfield Foundation என்ற என் ஜி ஓ மூலம் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் நிதியுதவி செய்தது என்பது பின்பு அம்பலமானது. இந்த இதழின் ஆசிரியரும் சீனவியல் அறிஞருமான மெக்ஃபர்குஹர் தனக்கு இந்த பண உதவி சி ஐ ஏவிடமிருந்து வருகிறது என்பது தெரியாது, ஆனால் சி ஐ ஏ கொடுத்த சில கட்டுரைகளை நன்றாக இருக்கின்றன என்று தனது இதழில் வெளியிட்டேன் என்று ஒப்புக் கொண்டார். இந்த இதழ்களுக்கும், சீனாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவை வெளிநாட்டவர்களால் அவதூறு பரப்ப நடத்தப்பட்டவை ஆகும். இதே போல சோவியத் சர்வே என்ற இதழை சி ஐ ஏ நடத்தியது. கம்யூனிச நாடுகளில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசுகள் மக்களை கொடுமையாக கண்காணிக்கின்றன, தனிமனித சுதந்திரமே இல்லை என்றெல்லாம் இந்த இதழ்கள் செய்திகள் பரப்பின. இவற்றுக்கு பணம் கொடுத்து வந்த பார்பீல்ட் பவுண்டெஷன் இந்தப் பணிக்காகவே சி ஐ ஏவால் உருவாக்கப்பட்டதாகும்.
பிரபல காந்தியவாதியும் அமெரிக்காவில் படித்தவருமான ஜெயபிரகாஷ் நாராயணன் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பில் இணைந்து முக்கிய பங்காற்றினார். அவர் சி ஐ ஏ இதில் இருப்பதை அறிந்தே செயல்பட்டார் என்று கருத இடம் இருக்கிறது. “இந்த ஏஜென்சி தனக்கு உதவியாக இருக்கும் என்று நினைப்பதையே செய்கிறது” என்று அவர் தனது நண்பர்களுக்கு கடிதம் எழுதியதாக தி வயர் இதழில் வெளியான How CIA sponsored Indian Magazines that engaged the country’s best writers என்ற கட்டுரை கூறுகிறது.
இது தவிர இந்தியாவில் சி ஐ ஏ எந்தெந்த அமைப்புகள், இலக்கிய இதழ்களுக்கு பண உதவி செய்தது என்பதற்கான விவரங்கள் இல்லை. ஆனால் கம்யுனிச எதிர்ப்பு இலக்கியங்களான விலங்கும் பண்ணை, 1984, Neither five nor three போன்ற நூல்கள் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன.
இந்தியாவில் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பின் வரவு செல்வுகள் அனைத்தும் ஆவணங்களாக இருந்த போதிலும், அவை பற்றியும், இந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை.
ஆனால் இந்த அமைப்பின் ஆப்பிரிக்க செயல்பாடுகள் பற்றிய துல்லியமான ஆய்வுகள் பல உள்ளன. நைஜீரியாவில் Black Orpheus என்ற இலக்கிய இதழை உல்லி பியர் என்ற ஜெர்மானிய இலக்கியவாதி நடத்தி வந்தார். இது ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளில் எழுதிய ஆப்பிரிக்க இலக்கியவாதிகளுக்கான களமாக இருந்தது. வோல் சொயிங்கா போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் இந்த இதழில் எழுதி வந்தனர். உல்லி பியரை 1957 ஆம் ஆண்டு சி ஐ ஏ அணுகி தாங்கள் நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது.
உல்லி பியர் வியப்படைந்து, அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. நீங்கள் இதுவரை செய்து வந்ததை தொடர்ந்தால் போதும் என்று பதிலளிக்கப்பட்டது. பிளாக ஆர்பியஸ் இதழானது அரசியலற்ற சுத்த இலகியம் பேசியது. கலை கலைக்காக என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டு இயங்கியது. சி ஐ ஏ விரும்பியதும் இதைத்தானே.
இந்த இதழில் எழுதிவந்த வோல் செயிங்கா உலகம் முழுவதும் விரிவாக எடுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு என்கவுண்டர் இதழ் பரிசு வழங்கியது. பின்பு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்பு நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது வோல் செயிங்கா கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அமைப்பானது அவருக்காக இயக்கம் எடுத்தது. அவரது வழக்குரைஞர்களுக்கு கட்டணம் செலுத்தியது. தொடர்ந்து போராடி அவர் வெளியே வர உதவியது.
வோல் செயிங்கா போலவே சினுவா அசிபே போன்றவர்கள் பல காலகட்டங்களில் இந்த அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தனர். சினுவா அசிபே போன்றவர்களுக்கு சி ஐ ஏ நிதியுதவி பற்றியெல்லாம் எந்த அளவுக்குத் தெரியும் என்பது ஆய்வுக்குரியது. பல எழுத்தாளர்கள் ஏகாதிபத்தியங்களின் எதிரிகளாக இருந்த போதிலும் இந்த அமைப்பில் இயங்கினர், இதன் இதழ்களில் எழுதிவந்தனர். இதை சி ஐ ஏ அனுமதிக்கவும் செய்தது. முதலாவது காரணம் இது அமெரிக்க ஆதரவு அமைப்பு அல்ல என்று நிலை நாட்ட இந்த வகையான எழுத்தாளர்கள் அதற்குத் தேவைப் பட்டனர். இன்னொரு காரணம் ஆப்பிரிக்காவில் இந்த அமைப்பின் நோக்கம் வேறுவிதமாகவிருந்தது.
காலனியாதிக்கத்தின் கொடுமைகளை நேரடியாக ஒவ்வொரு ஆப்பிரிக்கரும் உணர்ந்திருந்த காலம் அது. எனவே இயல்பாகவே அவர்கள் இடதுசாரி தன்மையும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் கொண்டிருந்தனர். அவர்களை அமெரிக்க ஆதரவு நிலை எடுக்கச் செய்வது மிகவும் கடினமானதாகும். எனவே காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பானது ஆப்பிரிக்காவில் இலக்கியவாதிகளை நடுநிலை வகிக்கச் செய்ய முயன்றது.
ஒரு இலக்கிய வாதி எந்த கோட்பாட்டுக்கும் முக்கியமாக மார்க்சியத்துக்கு உடன்பட்டவராக இருக்கக் கூடாது. அது அவரது நேர்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று சி ஐ ஏ இந்த காங்கிரஸ் மூலம் பிரச்சாரம் செய்தது. எழுத்து என்பது அரசியலைவிட அழகியலுக்கே முக்கிய இடம் கொடுக்க வேண்டும், மார்க்சிய சார்பு என்பது இலக்கிய வாதிகளின் தனித்தன்மைக்கு இடையூறு செய்யும் என்று தீவிரமாக முழங்கியது. ஆப்பிரிக்க அடையாளத்தில் இலக்கிய வாதிகள் ஊன்றி நிற்க வேண்டும் என்றால் அமெரிக்கா, சோவியத் யூனியன் இரண்டில் இருந்தும் சம தூரத்தில் இருக்க வேண்டும் என்றது இந்த அமைப்பு. அதே நேரம் கருப்பர் என்ற உணர்வு, அரசியலில் தீவிரத்தன்மை ஆகியவை இலக்கியத்துக்கானவையல்ல என்று ஆப்பிரிக்காவில் காங்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் அமைப்பை நடத்தியவர்கள் கூறினர்.
இதுவே மிகச் சிறந்த இலக்கிய வடிவம் எனப்பட்டது.
இந்தக் அரசியலற்ற அழகியல் இலக்கியம் என்ற கோட்பாடு பல்கலைக் கழகங்களில் போதிக்கப்பட்டது. அரசுகளும் கட்சிகளும் இந்த அரசியலற்ற இலக்கிய வாதிகளைக் கொண்டாடினர். ஆடம்பரமான கலை இலக்கிய கூட்டங்களில் இந்தக் கோட்பாடு உரத்து முன்னெடுக்கப்பட்டது. ( பேராசிரியர் Peter J. Kalliney ). இந்தக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததன் மூலம் சி ஐ ஏவின் கண்ணுக்குத் தெரியாத கரம் பல எழுத்தாளர்களை சமூகப் பொறுப்பிலிருந்து வேறு திசை நோக்கி இழுத்துச் சென்றது.
1966 ஆம் ஆண்டு நியூ யார் டைம்ஸ் சி ஐ ஏவின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஐந்து கட்டுரைகள் வெளியிட்டது. இந்த ரகசியத்தை வெளியே கசியவிட்டது சி ஐ ஏ தான் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சி ஐ ஏ விரும்பிய கலை இலக்கிய கோட்பாடுகள் உலகம் முழுவதும் பரவிவிட்டன. இதற்காகவே கலை இலக்கிய அமைப்புகள் தோன்றிவிட்டன. சி ஐ ஏவின் வேலையை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. எனவே இதற்கு மேல் இதில் சி ஐ ஏவின் நேரடி தலையீடு அவசியமில்லை என்று கருதியே அது விலகிக் கொண்டது என்று கருதப்பட்டது. பின்பு சி ஐ ஏ அதிகாரிகளே தங்களது கலை இலக்கிய செயல்பாடுகளை விளக்கி கட்டுரைகளும் நூல்களும் எழுதத் தொடங்கினர். ஏற்கெனவே கூறியது போல உலக நன்மைக்காகவே தங்கள் இதைச் செய்ததாக கூறினர்.
புகழ் பெற்ற என்கவுண்டர் என்ற இலக்கிய இதழில் சி ஐ ஏ அதிகாரி ஒருவர் முழு நேரப் பணியாளராகவே இருந்தார் என்று இந்த அமைப்பை உருவாக்கியவரும், சி ஐ ஏ கலை இலக்கிய பிரிவின் டைரக்டருமான டாம் பிரடன் கூறுகிறார்.
1967 ஆம் ஆண்டு சி ஐ ஏ தொடர்பு அம்பலமான பிறகு இந்த அமைப்பின் பெயர் இண்டர்நெஷனல் அசோசியேசன் ஃபார் கல்சுரல் பிரீடம் என்று மாற்றம் செய்யப்பட்டு போர்டு பவுண்டேஷன் நிதியுதவியுடன் செயல்படத் தொடங்கியது.
1968 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பின் ஒவ்வொரு ஏடாக மூடப்பட்டு 1977 ஆம் ஆண்டு இறுதியாக இந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
பின்பு இந்தப் பணியை ஜார்ஜ் சோரோஸ் போன்ற பெரும் பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட ஒபன் சொஸைடி பவுண்டேஷன் போன்ற என் ஜி ஓக்கள் தொடர்ந்தனர். இன்றளவும் நமது தமிழ் உட்பட பல மொழிகளில் சி ஐ ஏ பிரபலப்படுத்திய அரசியலற்ற இலக்கியம், நடை, தனி மனித உணர்வுகளை மையப்படுத்திய எழுத்துக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்த, கம்யூனிச எதிர்ப்பு ஆகிய கோட்பாடுகள் கலை இலக்கியத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இத்தகைய நூல்களை எழுதுபவர்கள் எல்லோருமே இந்த ஏகாதிபத்திய கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் அது போன்ற எழுத்துக்களையும், நபர்களையும் தேடிப்பிடித்து அவர்களையே இலக்கிய பிதாமகன்களாக முன்னிறுத்தும் போக்கை பன்னாட்டு நிறுவனங்களின் இலக்கிய அமைப்புகள் வழங்கும் விருதுகள் செய்து வருகின்றன.
இன்றைய அரசுகளும் பெரும்பாலும் தாராளவாத முதலாளித்துவ கொள்கைகளை ஏற்றுக் கொண்டவை என்பதால் அவையும் இந்த அரசியலற்ற கலை இலக்கியங்களையும், பாசிச, மதவாத கருத்தியல்களை முன்வைக்கும் இலக்கியங்களையும் ஆதரித்து வருகின்றன. முன்பு சி ஐ ஏ செய்து வந்த பணியை இப்போது இந்த உள்ளூர் அரசுகளும், அரசு ஆதரவு கலை இலக்கிய அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவேல் பெக்கெட் ஆகியோருக்கும் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்புக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இவர்கள் தங்கள் சொந்த சிந்தனையின், விருப்பத்தின் அடிப்படையில் சொற்கள் தங்கள் நேரடிப் பொருளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். மொழியானது வெளியுலகிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது இதன் பொருள் என்று விமர்சகர்களால் கூறப்பட்டது. பனிப்போர் காலத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றாவர்கள் நவீன விடுவிக்கப்பட்ட கலையின் முன்மாதிரிகளாக முன்வைக்கப்பட்டனர். இவ்வாறு உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அரசியலில் ஆரவம் காட்டாமல் இயங்கிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை இந்த அமைப்பின் விமர்சகர்கள் தேடி எடுத்து அவை மிகச் சிறந்தவை, உன்னதமானவை, கலை நுட்பம் கொண்டவை, மனித மனத்தின் ஆழங்களை மிகச் சிறப்பாக கண்டுணர்ந்து விவரிப்பவை என்று பிரச்சாரம் செய்தனர்.
அருந்ததி ராய் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற தனது முதல் நாவலில் கேரளாவில் சிபிஐ எம் கட்சி சாதியை அப்படியே வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்று கூறியிருப்பார். நாவலின் மையம் பெண் சொத்துரிமை என்றாலும் சி பி ஐ எம் கட்சியின் மீதான் இந்தப் பார்வை காரணமாக அவருக்கு புக்கர் பரிசு, ஆர்வெல் பரிசு, நார்மன் மெய்லர் பரிசு ஆகிய பரிசுகள் கிடைத்தன. கம்யுனிஸ்டுகளுக்கு சாதியைப் பற்றித் தெரியாது என்ற பின்னவீனத்துவவாதிகளின் நிலைபாட்டுக்கு இந்த நாவல் ஏற்றதாகவிருந்தது.
பின்பு அதே அருந்ததி ராய் உலகமயத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக மிகவும் தீவிரமாக எழுதத் தொடங்கியதும் அவர் மீது கெய்ல் ஓம்வெட் போன்றவர்கள் கடும் விமர்சனங்கள் வைத்தனர்.
தமிழ் நாட்டில் க நா சு இந்த காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்போடு தொடர்பு கொண்டிருந்தார் என்று இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பது தெரியாது. ஆனால் க ந சு, ஆர்தர் கோய்ஸ்லருடன் அறிமுகம் கொண்டிருந்தார், ஜார் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை, 1984 ஆகிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்தார். க ந சு தமிழில் அரசியலற்ற எழுத்து என்பதன் அதிதீவிர ஆதரவாளராக இருந்தார். அந்த வகையான எழுத்துக்களை பெரிய அளவில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சமூக கொந்தளிப்புகளிலிருந்து விலகி நின்ற தீவிர தமிழ் இலக்கியத்தின் முதன்மையான ஆதரவாளர் க நா சு.
இந்தக் கலை கலைக்காக, அரசியலும் வணிகமும் இல்லாத கலை என்பது எந்த வெளிநாட்டுத் தொடர்பும் இல்லாத இன்னொரு தமிழ் இலக்கியவாதிகள் குழுவுக்கு மிகவும் பிடித்ததாகவிருந்தது. பெரும்பாலும் பார்ப்பனர்களாவிருந்த இந்த எழுத்தாளர்களுக்கு திராவிட இயக்கம் ஒத்துப் போகவிலை. கம்யூனிச இயக்கம் தலைமறைவாகவும், வெளிப்படையாகவும் மாறி மாறி இயங்கியது. இவர்களின் வாழ்க்கை முறைக்கு இது சரிப்படவில்லை. இவர்கள் மாடர்னிச ஐரோப்பிய இலக்கியத்தை ஆராதிப்பவர்கள். அரசியலுண்ர்வு, சமூக உணர்வு உச்சதிலிருந்த சுதந்திரத்தை அடுத்த ஆண்டுகளில் அதிலிருந்து விலகி நிற்கக் கோரிய இந்த இலக்கிய வகைமை குறிப்பிட்ட எலைட் வட்டங்களுக்குள் முடங்கியது. இன்றளவும் தமிழில் தீவிர இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சிறு வட்டத்துக்குள் இருப்பதன் வேர்கள் இந்த அரசியலற்ற மக்களுக்குத் தொடர்பற்ற இலக்கியம் என்ற கோட்பாட்டிலிருக்கின்றன. எனவே நேரடியாக சி ஐ ஏ தொடர்பு இல்லாவிட்டாலும், அது பரப்பிய இலக்கிய கோட்பாடுகள் இது போன்று சுயமாகத் தோன்றிய எழுத்துக்களுக்கு தனி மரியாதையை அளித்தன.எனவே காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் இன்றும் வாழ்கிறது வேறு அவதாரத்தில். அது பரப்பிய அரசியலற்ற கலை என்ற கோட்பாடு மன்னனுக்கு தெனாலி ராமன் அளித்த கெட்டவர்கள் கண்ணுக்குத் தெரியாத மாய ஆடையைப் போன்றது. அந்த ஆடையைக் கொஞ்சம் கீறிப் பார்த்தால் அரசியலற்ற கலை என்ற முழக்கத்துக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் அப்பட்டமாக வெளிப்படும்.
உதவிய நூல்கள்
How the CIA tricked the world’s best writers – joel whitney.
Who paid the piper – Francis stonor saunders
Finks – Joel whitney
An intellectual History of culture from the global south 1950-1970. The congress for cultural freedom in India and Mexico – Daniel kent carrasco