1.
சேலத்திலிருந்து மதுரை திரும்பிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்த மாதிரிச் சொல்கிறேனே தவிர, அது இருக்கும், பத்துப் பன்னிரண்டு வருடத்துக்கு மேல். வருடம் மாதம் தேதி எல்லாம் மறந்தது இருக்கட்டும், சேலத்தில் எந்தப் பகுதிக்குப் போனேன், எதற்காகப் போனேன் என்பதெல்லாம்கூடக் கொஞ்சமும் ஞாபகமில்லை. தேவராஜின் கடை இருந்த பகுதியின் பெயர்கூட நினைவிலில்லை. பிடிவாதமாக யோசித்துப் பார்த்தால், அவனுடைய அப்பா இறந்த துக்கத்தை விசாரிப்பதற்காகப் போனேனோ என்று தோன்றுகிறது. நல்ல மனிதர் பாவம். முதுமை வைத்த முற்றுப்புள்ளிதான் என்றாலும், செய்தி அறிந்தவுடன் மிகவும் சங்கடமாக இருந்தது. இரண்டு மூன்று வாரங்கள் கழித்து நேரில் விசாரித்துவரப் போன ஞாபகம். மற்றபடி, பெரியவரைக் கடைசியாக எப்போது பார்த்தேன் என்பதுகூட நினைவில்லை.
பொதுவாகவே, செல்பேசியின் வருகைக்குப் பிறகு, முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் நினைவில் பதித்துக்கொள்ளும் அவசியமோ, திறனோ இல்லாமல் போய்விட்டது அல்லவா. தொடர்விளைவாக, ஞாபகக் குறைவும் ஏற்படத்தானே செய்யும். என் விஷயத்தில், வயோதிகம் ஆரம்பித்துவிட்டது என்ற உபரிக் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆக, ஞாபகமேயில்லாத சங்கதிகளைத்தான் சேர்த்துக்கூட்டிச் சொல்ல முயல்கிறேன். தகவல் பிழையோ காலப் பிழையோ இருக்க வாய்ப்புண்டு. ஆழ்மனம் பிதுக்கி வெளித்தள்ளுகிறவற்றை அதே வரிசையில் தொகுத்துக்கொள்கிறேன் – மற்றபடி, எந்த ஒரு அம்சத்தின்மீதும் பிடிமானம் இல்லை. இந்த நேரத்தில் எண்ணவோட்டம் இந்தவிதமாகப் பாய்கிறது; அவ்வளவுதான்…
பேருந்து நிலையத்தில் சென்று இறங்கியது முதல், மறுபடி வண்டியேறும்வரை தேவராஜ் என்னுடன் இருந்தான். மெழுகுபோல வழுக்கி நகர்ந்தது அவனுடைய சொகுசுக் கார். முந்தைய மாதம்தான் வாங்கியிருந்தான்… மிக மிக விலை உயர்ந்த செல்பேசியில் அழைப்பு வரும்போது, இனிமையாகப் பறவைச் சத்தம் ஒலித்தது. மேலே சொன்ன பிரகாரம், செல்பேசியின் வருகை புகைப்படக் கருவி, கைக்கடிகாரம், முகவரிப் புத்தகம், டார்ச், அப்புறம் நினைவுத்திறன் என்று எதையெல்லாம் பறித்துவிட்டிருக்கிறது என்று அவனிடம் அன்று பிரலாபித்தபோது,
நுகர்வு மனநிலையும் முதலாளியமும் இன்னம் எதையெல்லாம் நம்மகிட்டேர்ந்து பறிக்கப்போகுதுன்னு தெரியலப்பா.
என்று சொன்னான். நல்லவேளை, ‘நம்ம’ என்று தன்னையும் சேர்த்துக்கொண்டான்.
ஆச்சரியமாய் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். ‘அது தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு அல்லவா!’ என்று எனக்குள் எழுந்த கேள்வி முற்றுப்பெறுவதற்கு முன்பே,
என்னடா, இவனே மொதலாளியா இருந்துகிட்டு இப்பிடிப் பேசுறானேன்னு பாக்குறியா! கல்யாணம் கட்டீட்டம்; பிள்ளெகுட்டீன்னு ஆயிருச்சு. அப்பா கிளண்டு போனாரு. தொழில யார் பாக்குறது? பூவாவுக்கு வழி வேணுமில்லே! அதுக்காக, நம்பிக்கைகள்லெ சமரசம் வந்துருமாப்பா!
சிரித்தான்.
எதற்கென்றே தெரியவில்லை, ஒரு பிரம்மாண்டத் துணிக்கடைக்கு என்னை அழைத்துப்போய், விலை உயர்ந்த டீ ஷர்ட் வாங்கிக்கொடுத்து பஸ்ஸேற்றிவிட்டான்… திரும்பும் வழி முழுக்க அவனுடைய நினைவாகவே இருந்தது…
ஆனால், மேலே சொன்ன வரிசையில், செல்பேசி தேவராஜையும் என்னிடமிருந்து பிரித்துவிட்டிருந்தது என்றுதான் இப்போது தோன்றுகிறது – அத்தனை அழைப்புகள் வந்தன. இடையிடையில்தான் நாங்கள் பேசிக்கொள்ளவே முடிந்தது.
அந்தச் சந்திப்பில் தென்பட்ட இன்னொரு வித்தியாசமும்தான் – கல்லூரி நாட்களில் சதா சிரித்துக்கொண்டேயிருப்போம்; காரணத்தோடோ, காரணமேயில்லாமலோ. பார்க்கப்போனால், நாங்கள் சேர்ந்திருந்ததே வரம்பில்லாமல் சிரிப்பதற்காகத்தானோ என்றுகூடத் தோன்றுகிறது.
சேலத்தில், அவனுக்கு வந்த வணிக அழைப்புகளுக்கு இடையேதான் பேசக் கிடைத்தது. அதுகூடப் பெரிதில்லை; பேச்சின் இடையிலும், நிறைய மௌனம் கவிந்தது. சிரிப்பு? அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். இப்போது இன்னொன்றும் தோன்றுகிறது – துக்கம் கேட்கப் போன இடத்தில் சிரிப்பு எழும்புமா என்ன…
2.
கல்லூரிக் காலத்தில் தேவராஜனுக்கு இன்னொரு பெயரும் இருந்தது; ஆண்டு மலர்களிலும், பரவலாகத் தெரியவராத ஓரிரு சாணித்தாள் பத்திரிகைகளிலும் ‘இறையரசு’வாக இருந்தான். அவனும் சங்கரசுப்புவும் எனக்கு நெருக்கமான வகுப்புத் தோழர்கள். தேவராஜ் விடுதியில் தங்கிப் படித்தவன். சங்கர் திருநகரிலிருந்து நகர்ப்பேருந்தில் வந்துபோவான். இவனுடையது தொழில்குடும்பம். பழைய இரும்பு வியாபாரம். மற்றவனுடைய தகப்பனார், ஏதோவொரு தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார்.
சங்கரும் தேவராஜுமே மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால், அவர்களுடைய நட்பு விநோதமானது. ஓயாத வாய்த்தகராறுகள் வழி அதைப் பேணினார்கள்! ‘விவாதம்’ என்று சொல்லிக்கொள்வார்கள்.
ஓகே தோழர், வீ அக்ரீ டு டிஸக்ரீ!
என்று சினம் முற்றிச் சிவந்த முகத்தோடு முடிப்பான் தேவராஜ். அவ்வளவு நேரமும் மாறாத புன்னகையோடு இவனைச் சமாளித்துவந்த சங்கரின் முகம் உடனடியாக இறுகும்.
இதெத்தாம்லா மொதவே சொன்னம்!
என்று முனகிக்கொள்வான்.
ஆனால், அடுத்த நிமிடமே, யாரையாவது எதையாவது கேலிசெய்து, அமர்க்களமாகச் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அருகில் இருக்கும் யாருக்கும் உடனடியாய்த் தொற்றிவிடக்கூடிய, அதிரடிச் சிரிப்பு. இருவருக்கும் இன்னொரு வேறுபாடும் இருந்தது. கடைசி செமஸ்டர் ஆரம்பித்த ஒரு வாரத்தில், கல்லூரியைவிட்டு நீங்கினான் தேவராஜ். வகுப்பின் இரண்டாவது மாணவனாகத் தேரிப் பூர்த்திசெய்தான் சங்கர்.
ஒருவிதத்தில் தேவராஜுக்கும் எனக்குமிடையிலான தொடர்பு தேய்ந்ததற்கே, சங்கரசுப்பு காணாமல் போனதுதான் காரணமோ என்று பலதடவை தோன்றியிருக்கிறது. சங்கர் இல்லாத மதுரை வெறிச்சென்று ஆகிவிட்டது. வெயில் அதிகரித்துவிட்ட மாதிரி உணர்ந்தேன். எனக்குள்ளிருந்தே ஊறும் புழுக்கம் அது என்று உணர்கிற சமயங்களில், அலுவலகத் தொலைபேசியிலிருந்து தேவராஜைக் கூப்பிடுவேன். பெரும்பாலான நேரங்களில்,
ஏ, ஒரு முக்கியமான வேலையா இருக்கனப்பா. பொறவு கூப்புடவா?
என்று பிரியமாக வினவுவான். பரபரப்பான தொழிலதிபர் அல்லவா. அவகாசம் கிடைக்காது; அல்லது மறந்துவிடுவான் – அவனே சொன்னதுதான். ஒருமுறை, இன்னொரு காரணம் சொன்னான்:
ஏ ஒங்கிட்டப் பேசுறதுன்னா, கொறஞ்சது ஒரு மணிநேரமாவது வேணுமில்லப்பா! நமக்கு எங்கெ ஒழியிது. ராத்திரிப் பன்னண்டு மணிக்கா கூப்புட்டுப் பேச முடியிம்!!
மறுமுனையில் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்குச் சிரிப்பே வரவில்லை. ஆனால், தேய்மானம் அன்றிலிருந்தேகூடத் தொடங்கியிருக்கலாம். இதைச் சொல்லும்போது, சங்கர் ஞாபகம் வேகமாய் எழுகிறது. அவன் சொன்னதும்தான்:
காலம் மாறும்போது, ஊரோட முகம் மார்றது மாதிரித்தான், தனிமனுசனோடெ வாழ்க்கையிலெயும், சமூகத்திலேயும் உண்டாகக்கூடிய மாத்தங்களும். எந்த ஒரு அரசாங்கமும், அரசியல் சித்தாந்தமும்கூட அந்தப் போக்கெத் தடுத்து நிறுத்திற முடியாது. வம்படியா ஒத்தி வேணும்னாப் போடலாம், அவ்வளவுதான். ஆனானப்பட்ட ஆன்மிகமே தோத்துப்போகுற இடம்லா அது!!
பட்டப்படிப்பை முடித்த பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட, கல்லூரி வளாகத்திலேயே நாங்கள் குழுமிய சந்தர்ப்பத்தில் இதைச் சொன்னான். சோவியத் யூனியனின் அங்கங்கள் தனித்தனியாய்க் கழன்று ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. எங்களில் அநேகருக்குத் திருமணம் ஆகியிருந்தது. பெரும்பாலானவர்கள் மனைவியின் அருகிலேயே அமர்ந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் சிகரெட் பிடிக்க வெளியேறி, வழக்கமான எங்கள் மரத்தடியில் ஒதுங்கியிருந்தோம்.
இதுபோன்ற வசனங்கள் காதில் விழுந்ததும் உடனடியாகத் தாவாவில் இறங்கக்கூடிய தேவராஜ் அமைதி காத்தான். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதைவிடப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது அப்போது தெரியாது. ஆமாம், அதுவரையிலும் திருமணம் செய்துகொள்ளாதிருந்த சங்கரசுப்பு, மேற்படி சந்திப்பு நடந்த சில மாதங்களில் நிரந்தரமாய்க் காணாமல் போனான். மிகச் சரியாக ஓர் ஆண்டு கழித்து, அவன் தாயும் தந்தையும் ஊரைவிட்டுப் போய்விட்டனர். திருநெல்வேலிக்கே போய்விட்டார்கள் என்று கேள்வி..
ரிஷிகேசத்தில், யாசகர்போலத் தென்பட்ட துறவியின் முகத்தில் சங்கரசுப்புவின் சாயல் அழுத்தமாக இருந்தது. விசாரிக்க முற்பட்டேன். வன்மையாய் மறுத்துத் தலையாட்டிவிட்டு, ஹிந்தியில் ஏதோ முனகியபடி வேகமாய் விலகிப் போனார். பிற்பாடு நான் எழுதிய ஓரிரு கதைகளில் வெவ்வேறு புனைபெயர்களில் சங்கரைக் கொண்டு வந்திருக்கிறேன்… சங்கர், எங்கள் சங்கர்…
3.
தேவராஜ் தொடர்பாக நாலைந்து சம்பவங்கள் நினைவில் இருக்கின்றன. பார்க்கப்போனால், எந்த உறவுக்கும் இதே கதிதானே. எனது பால்யத்தில் இறந்துபோன அப்பாவைப் பற்றி நாற்பது ஐம்பது சம்பவங்கள்; கூடவே இருந்து வாழ்க்கை நடத்தும் பத்மினி தொடர்பாக நூறு நூற்றைம்பது இருக்கலாம். உண்மையில், நான் என்பதே சம்பவங்களின் தொகுப்பு மட்டும்தானோ என்றுகூடத் தோன்றியிருக்கிறது. அதாவது, சம்பவங்கள் குறித்த ஞாபகங்களின் தொகுப்பு. ஆனால், யாரிடம் இதைப் பற்றிக் கேட்பது? இந்த மாதிரி விசாரங்களுக்குள் என்னைக் கோத்துவிட்ட சங்கரசுப்புவின் தடயமே தெரியவில்லையே…
போகட்டும், தேவராஜனுக்கு வந்துவிடுகிறேன். வகுப்புத்தோழனாக இருந்தவன், நண்பனாக ஆனது ஒரு சம்பவத்தையொட்டித்தான். நாங்கள் கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் மாணவர் தேர்தல் வந்தது. கடுமையான ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் கல்லூரி. வேட்பாளர்களை ஒரே மேடையில் கூட்டிப் பேசவைப்பார்கள். வேட்பாளர்களும் அரசியல்வாதிகள் மாதிரியே, ஒருபோதும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தருவார்கள்; நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒருவரையொருவர் ஏசிக்கொள்வார்கள்! ஒவ்வொரு வேட்பாளரையும் ஒவ்வொரு பேச்சாளர் ஆதரித்துப் பேசலாம். தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரை ஆதரித்து தேவராஜ் பேசியது எனக்குப் பெரிய ஆச்சரியம். மூன்றாம் வருட மாணவரை புகுமுக வகுப்பு மாணவனுக்கு எப்படித் தெரியும்!
ஆனால், இந்த மர்மம் தீர்வதற்கு, நான் பட்டப்படிப்பின் இரண்டாம் வருடக் கடைசிவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இடைக்காலத்தில், தேவராஜுடன் எனக்கு ஆழமான பிணைப்பு உருவாகியிருந்தது. சங்கரசுப்புவுடனும்தான். திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் எதிரெதிர் முனைகளில் நின்று ஓயாமல் தகராறு வளர்ப்பதைக் கவனிப்பதில் எனக்கு ஏற்பட்ட சுவாரசியம்கூட அந்தப் பிணைப்பு உருவாகக் காரணமாய் இருந்திருக்கக் கூடும் என்று படுகிறது…
அன்று மேடையில் தேவராஜ் பேசிய பேச்சு கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது; ஆனால், அவன் உதிர்த்த ஒரு வாக்கியம் இன்றுவரை மறக்கவில்லை – தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் சற்றுக் குள்ளமானவர்; அதைக் குறித்து எதிர்வேட்பாளர் குத்தலாக ஒரு மறைமுக வாக்கியம் பேசி, ஆதரவாளர்களிடம் அபாரமான கைத்தட்டல் வாங்கியிருந்தார். தேவராஜ் ஆவேசமாகச் சொன்னான்:
ஆனால், தோழர்களே, ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்வேன். சிறு நெருப்பும் சுடும்…
இப்போது மொத்தக் கூட்டமும் கைதட்டியது. நானும்தான். கைத்தட்டிய அத்தனை பேரும் ஓட்டுப்போட்டிருந்தால், எதிர்த்தரப்புக்கு ஒரு ஓட்டுகூட விழுந்திருக்கக் கூடாது; ஆனால், தேவராஜ் தரப்பு படுமோசமாய்த் தோல்வியடைந்தது. அது எனக்கு மர்மமாய் இல்லை; பொது அரசியலிலும் இதேதான் வழக்கம் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தவன்தானே – சுமார் பத்து வயதிலிருந்து தினசரிகளை வாசிக்கும் பழக்கம் உள்ளவன்.
மேலே சொன்ன மர்மத்தின் அடர்த்தி அதிகரிக்கிற விதமாக, வேறொன்றும் நடந்தது. எங்கள் வகுப்பின் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாய் அழைத்த துறைத்தலைவர் திரு. ஸாமுவேல் வேதபாலன், இன்னாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லவில்லை; இன்னாருக்குப் போட்டுவிடாதே என்று கிட்டத்தட்ட உத்தரவிடும் தொனியில் சொன்னார். சங்கரசுப்பு,
இந்தாளு சொல்லிட்டாம்லா, எல்லாவனும் ஒங்காளுக்குத்தாம் ஓட்டுப்போடப் போகுதானுக பாரு!
என்று தேவராஜிடம் சொன்னான். கேண்ட்டீனில் தேநீர் என்ற பெயரில் வழங்கப்படும் வெந்நீரைக் குடித்தவாறு மூன்றுபேரும் அமர்ந்திருந்தோம். தேவராஜ் தரப்பின் வாக்குறுதிகளில் ஒன்று அது, கேண்டீன் நிர்வாகத்தைச் சீரமைத்து, உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவது. கொதிக்கும் பசுமூத்திரத்தைவிட, துறைத்தலைவரின் கட்டளைக்கு வலிமை அதிகம் என்பதை மாணவர்கள் நிரூபித்தார்கள்.
சொல்ல மறந்துவிட்டதே, அந்தக் கூட்டம் முடிந்த மறுநாளே, மரத்தடியில் வைத்து தேவராஜிடம் சொன்னான் சங்கர்:
அதென்னப்பா, பாரதியார் வரியோடெ இன்னொரு வர்ஷன்தானே!
சிரித்தான். நான் திகைத்தபோது,
அட, அக்கினிக்குஞ்சு தெரியுமில்லே? அதைச் சொல்றாம்ப்பா!
என்று விளக்கிவிட்டு, தேவராஜும் சிரித்தான்… எனக்கும் சிரிப்பு வந்தது. ஆக, நாங்கள் மூவரும் நண்பர்களானதே சிரிப்பை முன்னிட்டுத்தான்!
ஜே. கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று அவனும், ஜான் ரீட், ஃப்ரான்ஸ் ஃபனான் என்று இவனும் கொடுத்த புத்தகங்கள் எதையுமே என்னால் சரளமாக வாசிக்க முடியவில்லை என்று நான் புகார் சொன்னபோதும் இருவரும் சேர்ந்து சிரிக்கத்தான் செய்தார்கள். நானும் சிரித்துவைத்தேன்!
4.
தேவராஜுக்குள் இருக்கும் இன்னொருவனை நான் தெரிந்துகொண்ட சந்தர்ப்பம் நூதனமானது.
அரசினர் ராஜாஜி மருத்துவமனை, எர்ஸ்கின் மருத்துவமனை என்ற பூர்விகப் பெயரிலேயே இயங்கிவந்த காலகட்டம். கல் கட்டடம் என்பது மிகப் பெரிய ஆறுதல். உள்ளே வெப்பம் அதிகம் தாக்காது; பரபரப்பான கோரிப்பாளையம் சந்தியின் இரைச்சல் அவ்வளவாகக் கேட்காது என்பதையெல்லாம் விடுங்கள், சுற்றுச் சுவரையொட்டி வாரத்துக்கு இரண்டுநாளாவது அங்கே நடக்கும் போராட்டங்களின் கோஷங்கள் நோயாளிகளைத் தீண்டாது என்பது எத்தனை அனுசரணையான விஷயம்.
வகுப்புக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மினிப்பிரியா தியேட்டரில் மத்தியானக் காட்சி பார்க்க மூன்றுபேரும் போய்க்கொண்டிருந்தோம். என்ன படம் என்பது ஞாபகமில்லை. எர்ஸ்கின் நுழைவாயிலுக்கு இடதுபக்கம், தென்னோலைப் பந்தலுக்குள் பத்திருபது பேர் அமர்ந்திருக்க, கையில் பிடித்த மெகஃபோனில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
திடீரென்று தேவராஜ் விசித்திரமாக நடந்துகொண்டான் – எங்கள் இருவரின் மறைப்பில் அவசரமாக எட்டுவைத்து நடந்தான். எங்களையும் வேகமாய் நடக்க உந்தினான்… ஷெனாய் நகரைத் தாண்டும்போது கேட்டேன்:
ஏண்டா அப்பிடிச் செஞ்சே?!
இல்லடா, தெரிஞ்சவுரு ஒரு ஆளு பந்தல்லெ ஒக்காந்துருந்தாரு. பாத்தா இளுத்து ஒக்கார வச்சிருவாரு. அதான்….
சங்கர் புன்னகைத்தான். நான் வழக்கம்போல விழித்தேன். ஏனோ மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை. அடுத்த ஆண்டில், தானாகவே விளக்கம் கிடைக்கும் என்று அப்போது தெரியாது…
இரண்டாமாண்டுக் கடைசியில், மாணவர் வேலைநிறுத்தம் வன்முறையாக
மாறியது. வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்தது கல்லூரியின் வரலாற்றிலேயே அதுதான் முதல்முறையாம். இரண்டு மாத காலத்துக்கு இழுத்து மூடிவிட்டார்கள். ஒவ்வொரு மாணவனையும் விசாரணைக்கு அழைத்தார்கள். பெற்றோருடன் வரவேண்டுமென்று தபால் வந்தது… நான் மன்னியுடன் போனேன். முதல்வர் என்னைக் கேட்டார்:
ஒங்க க்ளாஸ் தேவராஜோடெ ஒங்களுக்கு எப்பிடிப் பழக்கம் க்ரிஷ்ணன்?
சார், நாங்க க்ளாஸ்மேட்ஸ் இல்லையா சார்!
அதுமட்டும்தானா, வேறெதுவும் உண்டா?
எனக்குக் கேள்வி புரியவில்லை. அவர் மன்னி பக்கம் திரும்பினார்:
அந்தப் பையன் …. அமைப்போட ஆளுங்க. சரியா விசாரிக்காமெ ஸீட் குடுத்துட்டம். இவனெ மாதிரி அப்பாவிப் பசங்களெ ப்ரெய்ன்வாஷ் பண்ணிக் கலைச்சிர்றாங்க. இந்தப் பசங்களுக்கு ஃப்யூச்சரே போயிருது. பாதிப் படிப்புலெ டீஸியெக் குடுத்து அனுப்புனா, அப்பறம் எந்தக் காலேஜுலெ சேத்துப்பாங்க?
மன்னி கெட்டிக்காரி. உடனடியாகப் புரிந்துகொண்டு பணிவாகப் பதில் சொன்னாள்:
சேச்சே. எங்க பிள்ளெ அப்பிடியெல்லாம் போறவன் இல்லே. நல்லாப் படிக்கிறவன். தகப்பன் இல்லாமெ வளர்ற பிள்ளெ சார். பொறுப்பான பையன்.
ஆளுக்கொரு பெருமூச்சுடன் வெளியே வந்தோம். தேவராஜிடம் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டேன். வீணாக அவனைப் புண்படுத்துவானேன்?
ஆனால், இறுதிவருடப் படிப்பின்போது வேறொரு விசாரணைக்குப் போகவேண்டி வந்தது. வேறு இடத்தில்.
5.
மூன்றுபேரும் அமர்ந்திருந்த மரத்தடியில் காற்று பிரமாதமாய் வீசியது. அதை அனுபவிக்கும் மனநிலைதான் இல்லை – குறைந்தபட்சம், எனக்கு. தேவராஜின் அப்பா, தோள்துண்டால் அவ்வப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டார். கண்கள் வெகுவாகச் சிவந்திருந்தன. அவ்வப்போது செருமுவார். தேவராஜை நோக்கித் திரும்புவார். அப்புறம் தலையை ஆட்டிக்கொண்டு, வேறுபுறம் பார்ப்பார். வேதனை நிறைந்த பார்வை.
தகப்பனும் மகனும் முகத்துக்கு முகம் பேசியே நான் பார்த்ததில்லை. தொளதொள சட்டையை உயர்த்தி, வேஷ்டியைப் பிணைத்த பச்சைநிறக் கேன்வாஸ் பெல்ட்டின் பித்தான் மடிப்புக்குள்ளிருந்து பணத்தை எடுத்து எண்ணாமல் கொடுப்பார். அவர் முகத்தையே பார்க்காமல் இடது கையால் வாங்கி, கால்சட்டைப் பையில் செருகிக்கொள்வான் தேவராஜ். அதைப் பற்றி ஒருமுறை கேட்டபோது,
என்னப்பா செய்றது. ஜன சமூகத்துக்குச் சொரணை வந்து, புரட்சிக்கான பணத்தேவையெ அது ஈடுகட்டுற வரைக்கும், மொதலாளிமார்ட்டெத்தான் கைநீட்டியாகணும்…
என்று சிரித்தான்…
அந்தச் சிரிப்பு இப்போது இல்லை. வழக்கம்போலவே விறைப்பாய் நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஆனால், நேரம் செல்ல செல்லச் சிறு தளர்ச்சி அவனிடம் கூடுவதைப் பார்த்தேன். முகமும் கூம்ப ஆரம்பித்தது. இலக்கேயில்லாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அடிக்கடி வாசலைப் பார்த்தேன் – சங்கரசுப்பு வருவதாய்ச் சொல்லியிருந்தானே, ஆளைக் காணோமே என்று.
நடுவயதுத் தோற்றமும், அளப்பரிய தொந்தியும், விரசமான புன்னகையும் கொண்ட காவலர் வெளியே வந்து,
அய்யா கூப்புடுறாரு.
என்றார். எழுந்தார்கள். நானும் எழுந்தேன். என்னைப் பார்த்து, ‘ஒக்காரு’ என்று சைகை காட்டினார். ஆனால், அதன் உண்மையான அர்த்தம், ‘நீ ஒக்கார்றா நாயே’ என்பதாக எனக்குப் பட்டது.
இவர்கள் இருவரும் ‘அய்யா’ முன்னால் நிற்பதும், மேஜையில் இடதுபுறம் இருந்த லத்தியை அவர் வலது பக்கம் மாற்றிக்கொள்வதும் தெரிந்தது. அவர்களுடைய குரல் கேட்க ஆரம்பிக்குமுன்பே, தூதுவந்த காவலர் ஜன்னல் கதவைச் சாத்தினார்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் போனது. ஆனால், ஒரு முழுநாள் கழிந்த மாதிரி ஆயாசத்தை உணர்ந்தேன். அவர்கள் வெளியே வந்தபோது, ரத்தம் முழுக்க வடிந்துவிட்டதுபோல இருவர் முகங்களும் வெளிறியிருந்தன. மரத்தடியை நோக்கி அவர்கள் வந்தபோது பாதி தூரம் உடன்வந்த மேற்படிக் காவலர், என்னை உள்ளே வரும்படி சைகை காட்டினார். எனக்கு மூத்திரம் முட்டியது.
அய்யாவுக்கு முரட்டுக் குரல். அதைவிட முரடான முகம். புஸ்தி மீசைக்கடியில் இருந்த சிரிப்பு நினைவுவரும்போதெல்லாம், ‘இளிப்பு’ என்று என் மனம் தானாகத் திருத்திக்கொள்ளும். ‘விகாரமான இளிப்பு’ என்று பின்னாட்களில் சேர்த்துக்கொண்டது…
ஒம் பேரு என்னாடா?
சொன்னேன்.
நீதானா அது? ஒன்னெய நாளைக்கிக் கூப்புட்டனுப்பணும்ண்டு இருந்தன்.
எதிரில் இருந்த கோப்பிலிருந்து என் முகவரியை அடிபிறழாமல் ஒப்பித்தார். ஆமோதிப்பாய்த் தலையாட்டினேன்.
த பார்றா. அய்யிரு வீட்டுப் பயதானே. ஒளுங்காப் படிச்சு முன்னேர்ற வளியப் பாரு. சமுதாயத்தெ ஒளுங்கு பண்ணுற வேலையெ நாங்க பாத்துக்கிருவம். என்னா?
நான் அவர்களுக்குத் துணைக்கு வந்ததால்தான் என்னை உள்ளே கூப்பிட்டார்கள் என்றல்லவா நினைத்தேன். என்னைப் பற்றிய தகவல்கள் அத்தனையும் வைத்திருக்கிறார்களே. முதுகுத்தண்டில் மின்சாரம் ஓடியது. கல்லூரி நிர்வாகத்தின் கைங்கரியமாய் இருக்குமோ? இன்னும் ஒரு ஸெமஸ்டர் பாக்கியிருக்கிறதே, தினசரி அங்கேதானே போய்த்தொலைய வேண்டும் என்று பீதியும் கிளம்பியது. ஆனால், விஷயம் அதைவிடப் பெரியது என்று ஆய்வாளர் குறிப்புணர்த்திவிட்டார்.
தேவராஜ் எனக்காக சந்தா கட்டி, தபாலில் வந்த சாணித்தாள் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரைச் சொல்லி,
கண்டது கடியதெ மேயாதெ. பாடத்தெ மட்டும் படி போதும். என்னா?
என்று அதட்டினார். அருகில் பவ்வியமாக நின்றிருந்த காவலரிடம்,
பாத்தா வெள்ளெலி மாதிரி இருந்துக்கிட்டு… ஒரு தட்டு தட்டுனாத் தாங்குவானா இவனெல்லாம்? தாளி, நம்ம உசுரெ வாங்குறானுக பாருய்யா…
என்றார். காவலர் சிரித்தார். தொந்தி குலுங்கியது. விரசமும் அதிகரித்துவிட்டிருந்தது. ‘இதில் அவ்வளவு நகைச்சுவை இருக்கிறதா என்ன!’ என்று எனக்குள் எழுந்த கேள்வி முடிவதற்குள்,
போ போ. டென்சன் பண்ணாமெப் போய்ச் சேரு.
என்று ஆசி கூறி அனுப்பினார் ஆய்வாளர்.
6.
திரும்பி வரும் வழியில், மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆளரவம் மிகக் குறைவான பூங்காவைக் கடந்தபோது, திடீரென முடிவெடுத்தவர் மாதிரி உள்ளே நுழைந்தார் அப்பா. மறுபேச்சின்றிப் பின் தொடர்ந்தோம். தேவராஜ் ஆச்சரியப்படுவான், பார்வையால் என்னிடம் அதைப் பகிர்ந்துகொள்வான் என்று எதிர்பார்த்து, அவன் முகத்தையே கவனித்தபடி நடந்தேன். ம்ஹும், என் பக்கமே திரும்பவில்லை அவன்.
சிமெண்ட் பெஞ்ச்சில் உஷ்ணம் மிச்சமிருந்தது. அழுத்தமான ஆரஞ்சுநிறம் சிவந்த ஆகாயம். மேல்வானத்தில் தயங்கி நகர்ந்த மேகத்துணுக்கின் விளிம்புகள் தீப் பிழம்புபோல ஒளிர்ந்தன. காற்றில் சலனமேயில்லை. மரங்களும் செடிகளும் துஷ்டிவீட்டில் காத்திருப்பதுபோலத் தலைகுனிந்து அமைதி காத்தன. சகாக்கள் யாருமின்றித் தனியாய் அமர்ந்திருந்த காக்கை எங்களை வெறித்தது. மற்றபடி அந்த வேளையில், பூங்காவின் அந்தப் பகுதியில், நாங்கள் மூவரும், அலாதியான நிசப்தமும் மட்டுமே இருந்தோம்.
சுற்றுச்சுவரையொட்டி வெளிப்புறம் இருந்த சின்னஞ்சிறு முருகன் கோவிலிலிருந்து அவ்வப்போது எழுந்த கைம்மணிச் சத்தம் ஆலாட்ச மணிபோலப் பெரிதாக ஒலித்தது. அட, இன்று வெள்ளிக்கிழமை – என்று அநாவசியமாக எனக்கு நினைவுவந்தது… அப்பா தொண்டையைச் செருமினார். என் முன்னங்கையில் துமிகள் தெறித்தன. இருவருக்கும் நடுவில் நான் அமர்ந்திருந்தேன்… அவர் பெரும்பாலும் என்னை, தரையை, தலையசைக்காமல் எதிரில் நின்ற பூவரச மரத்தை, ஒற்றைக் காக்கையைப் பார்த்தபடி பேசினார்:
நானும் காலேஜெல்லாம் படிச்சவன்தாம்ப்பா. தருமபுரி கவர்மெண்ட் காலேஜுலெ ஜூவாலஜி படிச்சேன். நான் வாங்குன மார்க்கு அப்பிடி. இங்லீசு சுட்டுப்போட்டாலும் வராது. எங்க அப்பாரோடெ சொந்தத் தங்கச்சி அந்தூர்லெ குடியிருந்துச்சு. அவுக வீட்லெ தங்கித்தான் படிச்சேன். ராஜாராம்ன்னு எங்க அத்தெ மயென். என் வயசுதான். எங்க காலேஜுதான். பொருளாதாரம் படிச்சான். ரெம்ப வேகமான பய. திடீல் திடீல்னு காணாமெப் போவான். திரும்பி வருவான். நாங்கெல்லாம் திருட்டு சீரெட்டுப் பிடிப்பமா. அவம் பீடி பிடிப்பான். தானாச் சிரிச்சுக்கிருவான். ராத்திரி முளுக்கக் கண்ணு முளிச்சி படிச்சுக்கிட்ருப்பான். பாடத்தெ இல்லே. அப்பிடிப் படிக்கிறவன்கிட்டே ஏகப்பட்ட புஸ்தகம் இருந்துருக்கணுமில்லே. அதான் கிடையாது. யாரோ குடுப்பாங்க. படிச்சுப்புட்டு திருப்பிக் குடுப்பான். வேற புஸ்தகம் வாங்கியாருவான். மாமா ஒருக்கா என்னயத் தனியாக் கூப்ட்டு விசாரிச்சாரு – நீலமேகம், இந்தப் பய கஞ்சா கிஞ்சா பளகீருக்கானாப்பா? சேச்சே, அதெல்லாம் கெடையாது மாமா. சுத்தமான பய. பின்னே, அப்பிடித்தானே சொல்ல முடியும்? அவம் பீடி குடிக்கிறான்னு அவுத்துவுட்டா, ஏம் பளக்கமுமில்லே தெரிஞ்சு போகும்?!
இப்பிடித்தான், நாலஞ்சு நாளாப் பயலெக் காணம். வளக்கம்போல எங்கயோ போயிருக்கான்; இந்தா வந்துருவான், இந்தா வந்துருவான்னு காத்திருந்தம். தாயும் தகப்பனும் அலண்டு போனாக. பதினஞ்சு இருவது நாள் பொறுத்துப் பாத்துப்புட்டு, போலீசுக்குப் போனாக. நான் தொணைக்கிப் போனன். டேசன்லெ இருந்தவிங்ய சிரிச்சது கண்ணுக்குள்ளேயே இருக்கு தம்பீ.
ஒரு வாரம் களிச்சு, வீட்டுக்குப் போலீசு வந்துருக்கு. சோதனெ போடணும்ன்னாங்யளாம். ஒரு மண்ணும் கிடைக்கலே போல. அந்த ஆத்தரத்துலே நாலைஞ்சி சாமானெ ஒடெச்சுப் போட்டு, எங்க அத்தையையும் மாமாவையும் நாலு மிதி மிதிச்சுப்புட்டுப் போயிச்சேந்தாங்ய. அனுமாரெப் பாக்க நாங்க நாலஞ்சு சிநேகிதங்க நாமக்கல் போயிருந்தம். அதுனாலே நான் தப்பிச்சன். இல்லாட்டி எனக்கும் ரெண்டு மிதி வுளுந்துருக்கும்.
ஒரு வாரம் களிச்சு, ஒரு ஏட்டய்யா வந்து, போலீசுலெ கூப்புட்டு விட்டுருக்காய்ங்கன்னாரு. உள்ளூர்க்காரரு. மாமாவுக்குத் தெரிஞ்சவருதான். இவுக விளுந்தடிச்சு ஓடுனாக. நானும் கூட ஓடுனென்.
ஒரு பாலித்தீன் கவர்லெ கொஞ்சம் சாம்பலெக் குடுத்து, ‘இந்தாப்பா ஒம் மயென்; பத்திரிகெ கச்சி ஆபீசுன்னு போயிராதீக; நிம்மதி ஒரேயடியாக் கெட்டுப் போயிரும்’ன்னு எச்சரிச்சு அனுப்பினாக. நடக்குறது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு அமைதியா ஒக்காந்துருந்தாரு ஒரு அதிகாரி. தோரணையெப் பாத்தா, பெரிய அதிகாரி போல. கிட்டப் போயிப் பேசுன போலீசெல்லாம் வலதுகையாலெ வாயப் பொத்துனாப்புலெ வச்சுக்கிட்டுத்தான் பேசுனாக. அந்தாளும் அவரு மீசையும்… இப்ப நெனைச்சாலும் கெதக்குங்குது. அதுலயும், பொட்டணத்தெக் குடுக்கும்போது, அந்தாள் மூஞ்சியிலே ஒரு சிரிப்புப் பூத்துச்சு பாரு, படமெடுத்த பாம்பு மாதிரி… அய்யோ.
வாய்விட்டு அளக்கூட முடியாமெ கறுத்துப்போன மூஞ்சியோடெ வீட்டுக்கு வந்தாக. ஒரு சடங்கு இல்லெ. ஒரு சாங்கியம் இல்லெ.
மறு நாக் காலையிலே மாடியிலேர்ந்து எறங்கி வாரென், தாயும் தகப்பனும் வாய்முளுக்க நொரெ தள்ளி, ஆளுக்கொரு பக்கம் மல்லாந்து கெடக்காக. செத்ததுக்கப்பறமும் எங்கத்தெ மொகத்துலே வேதனெ மிச்சமிருந்த மாதிரித்தான் தோணுச்சு. போலீசு வந்துச்சு. ரெண்டுபேத்துக்கும் நடுவுலெ கெடந்த பூச்சி மருந்து சீசாவெ எடுத்துக்கிட்டுப் போச்சு..
போனவுக போய்ட்டாக தம்பி. நெசம்மாக் கெட்டுப்போனது என்னோட நிம்மதிதான். ரேசன் கடையிலெ நின்னுட்டிருப்பேன்; தெரியாம இடிக்கிற மாதிரி ஒரு ஆளு ஒரசிட்டுப் போகும். ஆஸ்பத்திரியிலெ காத்துருப்பேன்; டாக்டர் ரூமுக்குள்ளே நாம் போற வரைக்கி, என்னையே மொறைச்சுப் பாத்துக்கிட்டு ஒக்காந்துருக்குற ஆளு, நான் பாத்துட்டு வந்ததுக்குப் பெறகு தடால்னு உள்ள மொளைஞ்சு டாக்டரைப் பாக்க ஓடும். ஒரு சினிமாவுக்குப் போக முடியாது. ஓட்டல்ல ஒக்காந்து நிம்மதியாச் சாப்புட முடியாது. ஒறவுகாரன் வூட்டு விசேசத்துக்கு சாவகாசமாப் போயிட்டு வர முடியாது. அட சனியன், முடிவெட்டிக்கிறக்கூட நிம்மதியாப் போய்க்கிற முடியாது. இந்தா, இத்தனெ வருசத்துக்கு அப்பறமும், இன்னமும் என் முதுகுக்குப் பின்னாடி யாரோ நின்னு உறுத்துப் பாக்குற மாதிரி இருக்கத்தான் செய்யிது.
அதுலெர்ந்தெல்லாம் தப்பிக்கணும்ன்னுதான், ‘படிப்பென்னடா படிப்பு, தலைய முளுகிட்டு வந்து சேரு. சேலத்துலே கடை போட்டுத்தாரேன்’னு எங்கப்பாரு கண்டுசனாச் சொல்லிப்புட்டாரு. அன்னைக்கெல்லாம் எங்கம்மா அளுத அளுகெ இருக்கே, அய்யோ, இப்ப நெனச்சாலும் உசிர் போயிருது தம்பீ….
பெருமூச்சு விட்டார்… அப்புறம் நடந்ததையெல்லாம்தான் ஏற்கனவே சொன்னேனே.
7.
அன்று சேலத்திலிருந்து பஸ்ஸேறித் திரும்பும்போது, தேவராஜ் என்னை வெகுவாகப் பீடித்திருந்தான். நாள் முழுக்க, அவன் சிரிக்கவேயில்லை என்பதைவிட, முகத்தில் எந்நேரமும் இருக்கும் மலர்ச்சியைக்கூடக் காணவில்லை என்பது விசித்திரமான ஏக்கம் தந்தது. காவல் நிலையத்தில் காத்திருந்த வேளையில் இருந்த அதே தோற்றம் நிரந்தரமாக அவனிடம் பதிந்துவிட்டிருந்த மாதிரிப் பட்டது. இத்தனைக்கும், காவல்நிலையத்தில்கூட, தகப்பனார் உடன் இல்லாமல் இருந்திருந்தால் எதையாவது சொல்லிச் சிரித்திருப்பான் என்றே நம்பிவந்திருந்தேன்…
அவ்வளவு ஏன், ஏற்கனவே சொன்ன மாதிரி, நாங்கள் சேர்ந்திருந்த காலம் முழுக்க ஏதாவது சாக்கு வைத்து, சிரித்துக்கொண்டேதானே இருந்தோம். சேர்ந்திருந்ததே அதற்காகத்தானே. அவரவர் வழியில் சிரிப்பைப் பறிகொடுத்து விட்டோமே என்ற ஏக்கம் பொங்கிப் பொங்கி வந்தது. இரவுப் பயணம்தான் என்பதால், ஓடும் பேருந்தில் துளிர்த்தவாறிருந்த கண்ணீரைப் பற்றிக் கூச்சம் கொள்ளும் அவசியமில்லை. சாவகாசமாக அழுதுகொண்டு வந்தேன்.
அளவற்ற சிரிப்பை எங்களுக்கு வழங்கிய அதே காலகட்டம்தான், போதுமென்று சொல்லிப் பறித்துக்கொண்டதோ? – என்று என் அடிமனம் குமுறியதை மறக்கவே மாட்டேன். அப்புறம், யாருடைய கேளிக்கைக்காக இப்படியெல்லாம் செய்கிறது ஒரு காலகட்டம்?
இன்னொரு காரணத்துக்காகவும் அந்தப் பயணத்தை மறக்க முடியாது. இரவு முழுவதும், என்னையறியாமல் தூக்கத்துக்குள் வழுக்கும்போதெல்லாம் யாரோ அதிர்ந்து சிரிக்கிற மாதிரி பிரமைதட்டி, பதறிப் பதறி விழிப்புக்கொண்டேன். இப்போது தோன்றுகிறது, அப்படிச் சிரித்து மிரட்டியதும்கூட அதே நாசமாய்ப் போன காலகட்டம்தானோ?…
அது கிடக்கட்டும்; எதற்காக ஆரம்பித்தேன், எதற்காக இவ்வளவும் சொன்னேன் என்பது எனக்கே கொஞ்சமும் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
*