டி20 உலகக்கோப்பை சிறப்புக் கட்டுரை

நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது ஒன்பதாவது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கியிருக்கும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம். இருந்தாலும் கிரிக்கெட் என்பது விளையாட்டுத்தானே?

விளையாட்டில் – அதுவும் டி20 கிரிக்கெட்டில் – எவர் வென்றாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒருவேளை கத்துக்குட்டி அமெரிக்காவோ, நேபாளோ, ஓமனோ.. எவர் வென்றாலும் முதல் வாழ்த்துகளை உயிர்மை வாசகர்கள் இப்போதே அட்வான்ஸாகத் தெரிவித்துக்கொள்வோம்.

மேற்கு இந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் இணைந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் நடத்துவதில் ஆச்சரியமில்லை. கிரிக்கெட் என்றாலே வேப்பங்காயாகக் கசக்கும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகிறது என்பதுதான் குறிப்பித்தக்க விஷயம்.

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவ்வளவு காலமாக அவ்வளவாக ஆர்வம் காட்டாத அமெரிக்காவும் கோதாவில் குதிக்கிறது என்றால் ஒரே ஒரு காரணம்தான்.

டி20 கிரிக்கெட்டில் அபரிதமாக கொழிக்கும் பணம்.

அமெரிக்காவுக்கு ரசனையாவது, மண்ணாவது, ஆர்வமாவது. பணம் கொட்டுகிறதென்றால் கில்லி, கோலி குண்டு போட்டிகளை நடத்தக்கூட அந்த நாடு தயார்தான்.

அமெரிக்கா என்றாலே பிரம்மாண்டம்தான் (வசூலும் அமோகம்தான்). முதன்முறையாக 20 நாடுகள் கலந்து கொள்கின்றன. எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்படலாம், அந்தளவுக்கு டி20 கிரிக்கெட்டில் பணம் புழங்கும் என்று ஜோசியம் சொல்கிறார்கள்.

இன்றைய கோலாகலம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

முதன்முதலாக 2007ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்தது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?

இந்தியா கூட அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் –

அந்தக் கோப்பையை யாரும் எதிர்பாராவிதமாக முன்னணி வீரர்கள் பங்கேற்பில்லாமல் வேண்டா வெறுப்பாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தியாதான் வென்றது.

அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோமா?

“கிரிக்கெட்டே செத்துப் போச்சி…”

“நடிகை பின்னாடி சுத்துறானுங்க.. விளம்பரத்துலே நடிக்கிறானுங்க. ஆடுறதைத் தவிர்த்து மத்த எல்லாத்திலேயும் கவனமா இருக்கானுங்க…”

“அவனுங்க லட்சம் லட்சமா சம்பாதிக்கறானுங்க.. நாம லீவு போட்டு மேட்ச் பார்த்தா நமக்கென்ன லாபம்?”

“இனிமே யாரு சார் கிரிக்கெட்டெல்லாம் பார்ப்பா?”

“கவாஸ்கர், கபில்தேவ், அசாரூதினெல்லாம் இருந்தப்போ எப்படி இருந்துச்சி. தெரியுமா?”

  1. மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துவிட்டு வந்த பின்னர் ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டையே துறக்க முடிவெடுத்தது.

ஆனால் –

அது பிரசவ வைராக்கியம் என்பது பரம்பரை கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்கனவே அறிந்த ரகசியம்தான்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் சரி. ரசிகர்களும் சரி. உலகமகா விரக்தியில் உழன்று கொண்டிருந்த நேரம்.

அப்போது உலகக் கிரிக்கெட்டின் வடிவமே மாறிக்கொண்டிருந்ததை நாம் உணரவில்லை.

1970களில் டெஸ்ட் போட்டிகளுக்கு மவுசு குறைந்தபோது, ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு கிரிக்கெட்டுக்கு விறுவிறுப்பு சேர்த்தது அல்லவா?

அதுபோலக் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்தகட்ட பாய்ச்சலாக டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003 வாக்கில் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையே டி20 போட்டிகள் நடந்தன. அவற்றுக்கு ரசிகர்களிடம் அபரிதமான வரவேற்பு கிடைத்திருந்தது.

2005இல் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் அதிகாரப்பூர்வமாக ஒரு டி20 போட்டி நடந்தது.

இருதரப்பு வீரர்களுக்கும் 20 ஓவர் போட்டியை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக ஆடினார்கள்.

இதற்கிடையே கிரிக்கெட் ஆடும் பல்வேறு நாடுகளுக்குள்ளும் டி20 வடிவில் உள்ளூர் அணிகள் மோத, சுவாரஸ்யம் காரணமாக இப்போட்டிகளுக்கு மவுசு கூடியது.

ஒருநாள் முழுக்க கிரிக்கெட்டுக்குச் செலவழிக்காமல் மூன்று, மூன்றரை மணி நேரங்களில் கிடைத்த விறுவிறுப்பு  இந்த வடிவப் போட்டிகளுக்கு ஏகத்துக்கும் மவுசு கூட்டியது.

சர்வதேச வீரர்கள், டி20 போட்டிகளைக் குறித்துப் பெரிய அபிப்ராயம் இல்லாமல்தான் இருந்தார்கள்.

ஆனால் –

டி20 போதையின் ருசியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உணர்ந்தது.

இதில் கொட்டப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அது வருமுன் கண்டது.

50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த ஆறே மாதத்தில் டி 20 உலகக் கோப்பை என்று ஐசிசி அறிவித்தது.

கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்த ஜாம்பவான் நாடுகள் பலவும், ‘இதெல்லாம் வெட்டி வேலை’ என்று சலித்துக்கொண்டன.

குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பிறகு வேண்டாவெறுப்பாகக்  கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கோ, ‘இது வேறயா?’ என்று அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டது புரிந்துக் கொள்ளத்தக்கதுதான்.

இருபது ஓவர் மேட்ச்தானே? கத்துக்குட்டி அணிகள் மோதிக் கொள்ளட்டும். நாம் நைசாகக் கழண்டுக்கலாம் என்று இந்தியா உட்பட, சில முக்கியமான நாடுகள் கருதின.

ஆனால் –

எல்லாப் பெரிய அணிகளும் கட்டாயம் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்று ஐசிசி கண்டிப்புக் காட்டியது.

அதுநாள் வரை இந்திய அணி ஆடியிருந்த டி20 போட்டி ஒன்றே ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகின் கடவுளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஒரே ஒரு டி20 சர்வதேசப் போட்டியும் அதுதான்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட அன்றைய சீனியர் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தான் இங்கிலாந்தில் நிறைய கவுண்டி மேட்ச்கள் விளையாட ஒப்புக் கொண்டதை  காரணம் காட்டித் தப்பித்துக்கொண்டார்.

திராவிட்டுக்கு முன்பு கேப்டனாக இருந்த கங்குலி, அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலோடு நடந்த மோதலின் காரணமாகவே கேப்டன் பதவியை இழந்தார்.

அந்த எரிச்சல் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. எனவே, திராவிட் ஒதுங்கியதுமே ‘மறுபடியும் என்னை கேப்டன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடாதீங்க’ என்கிற லெவலில், ‘நானும் ஆடலைப்பா…’ என்று இரண்டு கைகளையும் தூக்கிவிட்டார்.

‘சிங்கத்தை டெஸ்ட்டு மேட்ச்சுலே உறுமிப் பார்த்திருப்பீங்க.. ஒன்டேவிலே வெரட்டி வெரட்டி வேட்டையாடிப் பார்த்திருப்பீங்க… டி20 மாதிரி சப்பை ஏரியாவுக்கெல்லாம் கூப்பிட்டு அசிங்கப்படுத்திடாதீங்கய்யா’ என்கிற ரேஞ்சில் சச்சினும் நைசாகக் கழன்று கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அஸ்திவாரங்களாக இருந்த மும்மூர்த்திகளும் கழன்றுகொண்ட நிலையில்  டீமை ஒப்பேற்ற வேண்டும்.

தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் தவித்துப் போனார்.

இங்கிலாந்தில் விளையாடிக்கொண்டிருந்த ராகுல் திராவிட்டை தொடர்பு கொண்டார்.

“டி20யெல்லாம் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு. முப்பது வயசுகளைத் தாண்டிட்ட நாங்களெல்லாம் ஒதுங்கி நின்னு அவங்களை ஊக்குவிக்கிறோம்” என்று டீசண்டாகச் சொன்னார்.

அப்போதைய ஐசிசி தலைவர் சரத்பவாரும் திராவிட்டிடம் பேசினார். “சச்சினை மறுபடியும் கேப்டன் ஆக்கி, அவர் தலைமையில் யங் டீம் அனுப்புங்க…” என்று ஆலோசனை கூறினார் திராவிட். நைசாகப் பந்தை சச்சின் பக்கமாகத் தட்டிவிட்டார்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாக இருந்து சச்சின் பட்ட பாடுகள் ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தின் பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி பட்ட பாடுகளைவிட அதிகம்.

அப்போது புனே நகரில் சச்சினின் கோச் ராமகாந்த் ஆச்ரேகரை கவுரவிக்கும் ஒரு விழா சிறப்பாக நடந்தது.

அந்த விழாவில் சச்சினைச் சந்தித்து “டி20 உலகக் கோப்பைக்கு நீங்கதான் தலைமை தாங்கணும்” என்று சரத்பவார் கேட்டுக்கொண்டார்.

நாகரிகமாக மறுத்தார் சச்சின்.

“நம்ம பாய்ஸை நம்புங்க. அவங்க நல்லா ஆடுவாங்க” என்றார்.

“அப்போன்னா யாரு கேப்டன்?”

மும்மூர்த்திகள் தவிர்த்து கிரிக்கெட்டில் அப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தவர்கள் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவக், சிக்ஸர் சுனாமி யுவராஜ் சிங், மேஜிக் ஸ்பின்னர் ஹர்பஜன்சிங் ஆகியோர்.

இந்த மூவரில் ஒருவர் பெயரைத்தான் சச்சின் சொல்லுவார் என்று சரத்பவார் எதிர்ப்பார்த்தார்.

பளிச்சென்று சச்சின் சொன்ன பெயர், ‘மகேந்திரசிங் தோனி’.

ஒரு விபத்து மாதிரிதான் இந்திய கிரிக்கெட் அணியை அடுத்தத் தளத்துக்குக் கொண்டுசென்ற ‘தல’ தோனி, கேப்டன் ஆனார்.

தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார், அப்போதைய கேப்டன் திராவிட், முந்தைய கேப்டன் கங்கூலி ஆகியோரும் சச்சினின் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டனர்.

சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாட ஆரம்பித்து மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அப்போது அவரது வயது 26.

‘குருவித்தலையில் பனங்காய்’ என்கிற எண்ணத்தோடுதான் தோனியின் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு அணி சென்றது. இந்தியாவின் ‘பி டீம்’ கணக்காக அனுபவற்ற மகேந்திரசிங் தோனியைக் கேப்டனாக்கி, ‘சும்மா ஜாலியா போயிட்டு வாங்க’ என்று சோத்துமூட்டை கட்டிக் கொடுத்து வழியனுப்பினார்கள்.

இருபது ஓவர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டே அல்ல என்பது அப்போது மரபான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் போர்டு செயலராக இருந்த நிரஞ்சன் ஷா கூடக் கேலியாக சொன்னார்.

“20 ஓவர் போட்டியா? ஏன் பத்து ஓவர், அஞ்சு ஓவர், ஒரு ஓவர் கிரிக்கெட்டெல்லாம் கூட ஆடலாமே?”

எனவேதான் சும்மா கணக்குக்கு அட்டெண்டன்டன்ஸ் போடுவதற்காக தென்னாப்பிரிக்காவில் நடந்த முதலாம் டி20 உலகக் கோப்பைக்கு டைம்பாஸ் அணியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்தியாவுக்கு அங்கே முதல் போட்டியே கத்துக்குட்டி அணி ஸ்காட்லாந்துடன்.

இந்தியா ஈஸியாகச் சுருட்டி வாயில் போட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால், மழை பெய்து ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன.

அடுத்த போட்டியில் இந்தியா வென்றே ஆகவேண்டும். அப்போதுதான் சுலபமாக சூப்பர் எய்ட் பிரிவுக்குச் செல்ல முடியும்.

இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு சவால் விட்டு எதிரில் நின்றது நம் பரம எதிரி பாகிஸ்தான்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் படுதோல்வியால் விரக்தியடைந்து போயிருந்த ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்தார்கள். என்னதான் 20 ஓவர் போட்டி ஆனாலும், இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆயிற்றே?

அவர்களது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப டர்பன் நகரில் நடந்த அப்போட்டியில் அனல் பறந்தது.

போட்டி தொடங்கியதுமே காம்பிர் டக் அவுட். சேவக் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஆனால் –

அடுத்த பந்திலேயே அவரும் அவுட்.

யுவராஜ் சிங், ஒரே ஒரு ரன்னோடு அவுட்.

தினேஷ் கார்த்திக் தாக்குப்பிடித்து 11 ரன் மட்டுமே எடுத்தார்.

36 ரன்களுக்கு 4 விக்கெட்.

அடபோங்கய்யா.

‘இவங்க எங்கிருந்து ஜெயிச்சு, கிழிச்சு… அடுத்த ரவுண்டுக்கெல்லாம் போவமாட்டாங்க. பாகிஸ்தான் வகுந்தெடுக்கறான்’ என்று முடிவெடுத்து, டிவியை ஆஃப் செய்துவிட்டார்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்.

ராபின் உத்தப்பா மட்டும் போராடிக்கொண்டிருக்க, இந்திய அணியின் புதிய ‘தல’ தோனி, அவரோடு கைகோர்த்தார்.

அணியின் மானங்காக்க மரமாய் நின்றார்.

அரை செஞ்சுரியோடு உத்தப்பா, திருப்திப்பட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வால் வீரர்களை வைத்து ஒப்பேற்றினார் தோனி.

நூறு ரன்களுக்குள் ஈஸியாகச் சுருட்டிவிடலாம் என்று நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் எண்ணத்தில் மண்.

தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் (33 ரன்கள்) 20 ஓவர்களில் 141 ரன்களை எட்டியது இந்திய அணி.

அப்போதிருந்த பாகிஸ்தான் அணி சுலபமாக எட்டிவிடக்கூடிய எண்ணிக்கைதான்.

சல்மான் பட், இம்ரான் நாஸிர், கம்ரான் அக்மல், யூனிஸ்கான், ஷோயிப் மாலிக், மிஸ்பா – உல் – அக், சாஹித் அப்ரிடி என்று அதிரடியான பேட்டிங் வரிசை.

ஹர்பஜன்சிங்கைத் தவிர்த்து இந்திய அணியிடம் பளிச்சென்று சொல்லிக் கொள்ளும்படியான பவுலர்கள் இல்லை.

ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், அகர்கர், இர்பான் பதான் என்று அவ்வளவாக சர்வதேச அனுபவமில்லாத வீரர்கள்.

விதியை மதியால் வெல்ல முடியுமென தோனி நம்பினார்.

அவர் அமைத்த ஃபீல்டிங் வியூகம், விக்கெட்டுக்குப் பின்னாடி நின்று ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் வாசித்து (தன்னுடைய வெற்றி ரகசியமாக ‘மேட்ச் ரீடிங்’ என்கிற நுணுக்கத்தை பின்னர் பகிர்ந்துகொண்டார்) பவுலருக்கு டிப்ஸ் கொடுப்பது என்று ஜரூராக வேலை பார்த்தார்.

பலன் இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிர்பாரா அதிர்ச்சி.

47 ரன்களுக்கு 4 விக்கெட் காலி. முதல் வரிசை வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்களிலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஆவேசத்தோடு களத்துக்கு வந்த மிஸ்பா – உல் – ஹக் தொடர்ந்து பவுண்டரிகளாகச் சாத்தத் தொடங்கினார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழத் தொடங்கினாலும், மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தார் மிஸ்பா. அவருடன் இணைந்த யாசிர் அராஃபத் திடீரென பவுண்டரிகள் விளாச, கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்ட ரன்கள் 12 மட்டுமே.

ஸ்ரீசாந்த் வீசிய முதல் பந்தில் ஒரு ரன் தட்டினார் அராஃபத்.

அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார் மிஸ்பா.

நான்கு பந்துகளில் ஏழு ரன்கள் தேவை.

அடுத்த பந்தில் இரண்டு, அதற்கடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியதின் மூலம் பாகிஸ்தான் அணி, இந்திய அணி எடுத்திருந்த 141 ரன்களை எட்டிவிட்டது.

இரண்டு பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி.

உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியைப் பாகிஸ்தான் வென்றதே இல்லை என்கிற அவப்பெயரை முதல் டி20 உலகக்கோப்பைப் போட்டியிலேயே அழித்துவிடலாம் என்று மகிழ்ச்சித் தாண்டவமாடினார்கள் பாகிஸ்தானியர்கள்.

அவசரப்படாமல் ஐந்தாவது பந்தை ஆடினார் மிஸ்பா. நோ ரன்.

எனவே –

கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்தாக வேண்டும்.

இதே போன்ற சூழல் 1986இல் ஷார்ஜாவின் நடந்த இறுதிப்போட்டி ஒன்றில் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடந்தது. சேத்தன் சர்மா வீசிய ஃபுல்டாஸ் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இந்தியாவின் வெற்றிக்கனவை முறியடித்தார் ஜாவேத் மியாண்டட்.

மியாண்டட் செய்த அதே சாதனையை 21 ஆண்டுகள் கழித்து மிஸ்பா செய்வாரா என்று டர்பன் ஸ்டேடியம் மொத்தமும் நகத்தைக் கடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.

இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளிலுமே கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் தடதடத்துக்கொண்டிருந்தது.

பவுலர் ஸ்ரீசாந்தை அழைத்து தோனி ஆலோசித்துக்கொண்டிருந்தார். ஹர்பஜன், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் தங்கள் அனுபவக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கடைசி பந்து. ஒரே ஒரு ரன் கிடைத்தால் பாகிஸ்தானுக்கு வெற்றி.

ஸ்ரீசாந்த் பந்து வீச ஓடி வந்தார்.

மிஸ்பா – உல் – அக் சட்டென விக்கெட்டை விட்டு விலகி வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

அம்பயர் மறித்து கை காட்ட, பாதி தூரம் ஓடிவந்த ஸ்ரீசாந்த், டென்ஷனோடு நடந்து மீண்டும் முதலிலிருந்து ஓடிவரத் தொடங்கினார்.

பந்து வீச்சாளரை டென்ஷன் செய்ய இதுபோல டெக்னிக்குகளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்துவதுண்டு.

இருப்பினும் –

ஸ்ரீசாந்த், தன் பொறுப்புணர்ந்து அந்தக் கடைசிப் பந்தை வீசினார்.

ஆஃப்சைடில் பவுன்ஸர்.

விக்கெட்டை விட்டு விலகாமல், ஏறி அடிக்கவும் வழியில்லாமல் அப்பந்தை கவர் திசையில் தட்டிவிட்டு ஓடினார் மிஸ்பா.

நேரடியாக ஃபீல்டரின் கைக்குப் போன பந்து, மின்னல் வேகத்தில் எதிர்முனையில் எறியப்பட்டது.

தன் கைக்குப் பந்து வந்தவுடனேயே பேல்ஸைத் தட்டிவிட்டார் ஸ்ரீசாந்த்.

ரன் அவுட்.

டி-20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியே யாருக்கும் வெற்றியில்லாமல் ‘டை’ ஆனது.

எனினும் வெற்றியை நிர்ணயிக்க அப்போது ‘பவுல் அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவர் முறையெல்லாம் பிற்பாடுதான் நடைமுறைக்கு வந்தது.

பவுல் அவுட் என்பதில் பேட்ஸ்மேனுக்கே வேலை இல்லை.

இரு அணியும் தலா ஐந்து பவுலர்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பந்து இந்திய பவுலர் வீசினால், அடுத்த பந்தை பாகிஸ்தான் பவுலர் வீச வேண்டும்.

எந்த அணி அதிக முறை ஸ்டெம்புகளை வீழ்த்துகிறதோ, அந்த அணிக்கே வெற்றிப் புள்ளிகள் கிடைக்கும்.

கால்பந்துப் போட்டிகளில் டிரா ஆகிவிட்டால் பெனால்ட்டி ஷூட்-அவுட் நடத்துவதைப் போல இந்த பவுல் அவுட்.

தோல்வியிலிருந்து மீண்டு விட்ட இந்திய அணிக்கு அடுத்த சத்திய சோதனை.

பாகிஸ்தானிடம் துல்லியமாக ஸ்டம்ப்பை நோக்கி வீசக்கூடிய மிகச்சிறந்த பவுலர்கள் இருந்தார்கள்.

அவர்களை ஒப்பிடுகையில் அப்போது நம்முடைய பவுலர்களில் ஹர்பஜன் சிங்கை தவிர்த்து மற்றவர்கள் துல்லிய சமாச்சாரத்தில் கொஞ்சம் தொங்கல்தான்.

எனவே, பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் எளிதாக வெல்லப் போகிறது என்றே அனைவரும் நினைத்தார்கள்.

இந்த இடத்தில்தான் தோனி, தான் ஒரு சிறந்த ‘தல’ என்பதை நிரூபித்தார்.

கடைசி ஓவரில் அட்டகாசப்படுத்தி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஸ்ரீசாந்திடம்தான் முதலில் பந்தை தருவார் என்று ஒட்டுமொத்த ஸ்டேடியமும் எதிர்ப்பார்த்தது.

ஆனால் –

அவரோ பந்துவீச பார்ட்டைம் பவுலரான வீரேந்திரசேவாக்கை அழைத்தார்.

ம்ஹூம். தோனி தப்பான முடிவை எடுத்துவிட்டார் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.

இந்தியாவில் டிவியில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் ‘முடிஞ்சது ஜோலி’ என்றே நினைத்தார்கள்.

சேவாக் முகத்திலும் மரணப்பீதி.

ஆனால் –

சேவாக் வீசிய பந்து துல்லியமாக ஸ்டம்பைத் தாக்கியது.

தன் மீதே தனக்கே இல்லாத நம்பிக்கை, தோனிக்கு இருந்தது குறிந்து நெகிழ்ந்துபோன சேவாக், ஓடிவந்து கட்டிக்கொண்டார்.

அடுத்து பாகிஸ்தானின் முறை.

அராபத், அசால்டாக ஃபுல்டாஸ் வீசி ஸ்டெம்ப்பை எகிறவைக்கலாம் என்று நினைத்தார்.

அந்தோ பரிதாபம்.

மிஸ்ஸிங்.

முதல் ரவுண்டில் இந்தியாவுக்கு வெற்றி.

அடுத்து இந்தியாவின் சார்பாக ஹர்பஜன் சிங் அழைக்கப்பட்டார்.

‘ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்புடற மாதிரி’ என்று அலட்சியமாக ஸ்டம்புகளை வீழ்த்தி, வெற்றிச் சின்னத்தைக் காட்டினார்.

இந்த ரவுண்டில் பாகிஸ்தான் சார்பாக களமிறங்கிய உமர்குல், ரொம்ப தூரம் ஓடாமல் மெதுவாக ஓடிவந்து ஸ்டம்புகளை நோக்கி வீசினார்.

ம்ஹூம்.

இம்முறையும் மிஸ்ஸிங்.

பவுல் – அவுட்டில் 2 – 0 என்கிற அடிப்படையில் இந்தியா முன்னணி.

மூன்றாவது ரவுண்டிலும் இந்தியா வென்றுவிட்டால், நான்கு மற்றும் ஐந்து ரவுண்டுகளுக்குத் தேவையே இருக்காது.

மூன்றாவது ரவுண்டுக்கும் தன்னுடைய ராஜதந்திரத்தை வெளிப்படுத்தினார் தோனி.

இம்முறை பந்து வீச அழைக்கப்பட்டவர் இன்னொரு பார்ட் டைம் பவுலரான ராபின் உத்தப்பா.

இந்த தோனிக்கு என்னதான் ஆச்சு? ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், அகர்கர், இர்பான் பதானெல்லாம் இருக்க உத்தப்பாவை அழைக்கிறாரே? அமாவாசைச் சோறு எல்லா பாலுக்கும் கிடைக்குமா என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள்.

இந்த முறையும் அதிர்ஷ்டம் தோனியின் பக்கமே இருந்தது.

உத்தப்பா வீசிய பந்து ஸ்டம்புகளை மாங்காய்க் குறிக் கணக்காகத் தாக்கியது.

ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஆர்ப்பரிக்க, உத்தப்பா ஸ்டைலாக தன் தொப்பியைக் கழட்டி முதுகு வளைந்து கூட்டத்துக்கு மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அடுத்து பாகிஸ்தானுக்கு பந்துவீச வந்து அப்ரிடியும் கோட்டைவிட…

இந்தியா பவுல் அவுட் முறையில் 3 – 0 என்கிற கணக்கில் வென்றது.

உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியாவைப் பாகிஸ்தான் வென்றதில்லை என்கிற சாதனையையும் தக்க வைத்துக்கொண்டது.

ஒட்டுமொத்த உலகக் கிரிக்கெட் ரசிகர்களையும் த்ரில்லிங்கில் நகம் கடிக்க வைத்த மகத்தான போட்டி அது.

இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டும், முக்கியப் பங்களிப்பு செய்த வீரர்களைத் தலைக்கு மேல் தூக்கி வலம் வந்தும் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்தப் பிரமாதமான வெற்றிக்கு மூளையாக விளங்கிய தோனியோ, ‘கரகாட்டக்காரன்’ செந்தில் கணக்காக எதுவுமே நடக்காதது மாதிரி வெகு கூலாக பெவிலியனை நோக்கி நடை போட்டார்.

‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்கிற பட்டம் பிற்பாடு ரசிகர்களால் தோனிக்கு வழங்கப்பட, இந்த ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ பண்புதான் காரணம்.

பாகிஸ்தானை வென்ற அந்த இரவு இந்திய வீரர்களுக்கு மறக்க இயலாதது.

வீரங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் சிறப்பு விருந்து கொடுத்தார் மோடி. ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி அல்ல (ஒருவேளை ஜூன் 4 அன்று ‘முன்னாள்’ கூட ஆகியிருக்கலாம்). அவர் அப்போது குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்தார்.

இது லலித் மோடி.

அப்போதைய இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் துணைத்தலைவர்.

பின்னாளில் ஐபிஎல் போட்டிகளின் தலைவராக உயர்ந்தவர்.

“தோனி, நாம கப் ஜெயிப்போமா?” கேட்டுவிட்டுக் கண்ணாடி அணிந்த கண்களிலிருந்து தன் லேசர் பார்வையை தோனியின் முகத்தை நோக்கித் திருப்பினார்.

“நிச்சயமா சார்” முள்கரண்டியால் மாமிசத்தை குத்திக்கொண்டே சொன்னார் தோனி.

“என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?”

“ஸ்பெஷலா எதுவுமில்லை. எதிரணி போடுற ஒவ்வொரு பாலையும் சிக்ஸருக்கு விரட்ட முயற்சிக்கிறது மட்டும்தான் இப்போதைக்கு நம்ம கிட்டே இருக்கிற ஒரே திட்டம்…”

தோனியின் பதில் மோடிக்குப் பிடித்திருந்தது.

ஜாலியாக கேமுக்குள் ஒரு கேம் விளையாட நினைத்தார்.

“பாய்ஸ். எல்லாரும் இங்கே  வாங்க…”

ஆங்காங்கே சாப்பிடுக்கொண்டிருந்த வீரர்கள் வந்து குழுமினர்.

“உங்க கேப்டனோட பேசிக்கிட்டிருந்தேன். ஒவ்வொரு பாலையும் நீங்க சிக்ஸருக்கு விரட்டறதுதான் இந்தக் கப்பை அடிக்கிறதுக்கு அவர் வெச்சிருக்கிற திட்டம்னு சொன்னாரு…”

எல்லோரும் அவரது முகத்தையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நான் ஒரு பரிசுத் திட்டம் அறிவிக்கிறேன். இதுக்கும் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இது என்னோட சொந்தச் செலவு…”

“ஹிப்.. ஹிப்.. ஹுர்ரே….” வீரர்கள் பழைய கெளபாய் அமெரிக்கர்கள் பாணியில் ஊளையிட்டு மோடியை உற்சாகப்படுத்தினார்கள்.

“இந்த டோர்ணமெண்ட்டில் யார் ஒரே ஓவர்லே ஆறு சிக்ஸர் அடிக்கிறாங்களோ, அவங்க என்ன கேட்டாலும் நான் வாங்கிக்கொடுப்பேன்… நிச்சயமா உங்களில் ஒருத்தர் அந்த சாதனையை செய்யப் போறீங்கன்னு தெரியும். யார் அந்த சிக்ஸர் சிங்கம்?”

வீரர்கள் அத்தனை பேரும் உடனே தோனியின் முகத்தைப் பார்த்தார்கள்.

எப்போதும் போல கூலாக இருந்த தோனி, யுவராஜ்சிங்கைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார்.

யுவராஜ், தோனிக்குக் கட்டை விரலை உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்டி அவருடைய கோரிக்கையைப் புரிந்துகொண்டார்.

உடனே வீரர்கள் தங்களுக்குள் குழு குழுவாகப் பிரிந்து குசுகுசுவெனப் பேசிக் கொண்டார்கள்.

ஸ்ரீசாந்த்தான் முதலில் வாயைத் திறந்தார்.

“மோடி சார், கொஞ்சம் காஸ்ட்லியான கிஃப்ட்டா கேட்டுருவோம். பரவாயில்லையா?” குறும்பாகச் சிரித்தார்.

“நான் சீரியஸாவேதான் சொல்லுறேன். ஆறு பாலில் ஆறு சிக்ஸர். அடிச்சிக் காட்டுங்க. நீங்க என்ன கேட்குறீங்களோ, அதை வாங்கித் தர்றேன்…”

“ரோலக்ஸ் வாட்ச்சோட எக்ஸ்பென்ஸிவ் மாடல்…” வீரர்கள் கூட்டமாகக் குரல் கொடுத்தார்கள்.

“அவ்வளவுதானா? நான் அதைவிட பெருசா பிளான் பண்ணியிருக்கேன்…” புன்னகைத்தார் மோடி.

“சார், என்ன சார்.. சொல்லுங்க சார்…”

“புத்தம்புது போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்…”

மோடி குறிப்பிட்ட ஜெர்மனி தயாரிப்பான போர்ஷே 911 காரின் இன்றைய இந்திய விலை இரண்டே கால் கோடியில் தொடங்கி அஞ்சேகால் கோடி எனில், அது எவ்வளவு பெரிய காஸ்ட்லி கிஃப்ட் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

எந்தவொரு கிரிக்கெட் வீரரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசு.

ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் விளாச முடியுமா?

“நம்மில் யாருக்கு இந்தப் பரிசு கிடைக்கப் போகுதுன்னு தெரியலை. ஆனா, எல்லாருமே முயற்சிக்கணும். நானும் என் பேட்டும் கூட உங்களோட போட்டிக்கு ரெடியா இருக்கப் போறோம்…” தோனி சொன்னார்.

சூப்பர் எய்ட் பிரிவில் முதல் போட்டி நியூசிலாந்துடன்.

முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து.

ஆரம்பத்தில் சற்றே தடுமாறிய அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீறுகொண்டு எழ, இந்திய பவுலிங் பணால் ஆகிப் போனது.

இருபது ஓவர்களில் 190 ரன்கள்.

கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள்.

எட்ட முடியாத இலக்கு இந்தியாவுக்கு. இந்தியாவுக்கு மட்டுமல்ல. அன்று எந்த அணியாலும் எட்டமுடியாத இலக்குதான். இப்போதைய ஐபிஎல் டி20 போல கத்துக்குட்டி அணிகள் எல்லாம் 200, 250 என்றெல்லாம் அன்று அடிக்க முடியாது.

ஆனால் –

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான காம்பிரும், சேவாக்கும் புயல் மாதிரி நியூஸி பவுலர்களைத் தண்டித்தார்கள்.

6ஆவது ஓவரிலேயே 75 ரன்களைத் தாண்டிய நிலையில் எதிர்பாராவிதமாக சேவாக் அவுட்.

தொடர்ந்து வரிசையாக நம்முடைய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்ப 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

மீண்டும் வீரர்களுக்குத் தோல்வி ஜூரம்.

அதே நாளில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் தோற்றிருந்தது.

அடுத்த மூன்று நாட்களில் சூப்பர் எய்ட் பிரிவில் தத்தமது முதல் போட்டிகளில் தோல்வி பெற்றிருந்த இந்தியாவும், இங்கிலாந்தும் மோத வேண்டும்.

இதற்கிடையே நியூஸிலாந்துடனான அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் தோற்றுவிட்டது. எனவே, செமிஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பையும் இழந்துவிட்டது.

ஆனால் –

இந்திய அணிக்கோ இங்கிலாந்துடனான போட்டி வாழ்வா, சாவா போட்டி.

அதில் வென்றால் மட்டுமே கோப்பையை நினைத்துப் பார்க்கவாவது முடியும்.

தோனி, வீரர்களிடம் சொன்னார்.

“வெற்றியைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை…”

செப்டம்பர் 19, 2007 அன்று டர்பன் நகரில் நடந்த அந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எவருமே மறக்க முடியாது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான காம்பிரும், சேவாக்கும் உக்கிரமாக இருந்தார்கள்.

12ஆவது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

15ஆவது ஓவரில் சேவாக், 16 ஆவது ஓவரில் காம்பிர், 17 ஆவது ஓவரில் உத்தப்பா என்று அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் அவுட்.

18 ஆவது ஓவரில் களத்தில் நின்றவர்கள் ‘தல’ தோனியும், யுவராஜ்சிங்கும்.

ஃப்ளிண்டாப்பின் பவுலிங்கில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் யுவராஜ்.

19 ஆவது ஓவரை வீசுவதற்கு ஸ்டூவர்ட் பிராட் தயாராக நின்றார்.

“யுவி, மோடி சார் சொன்ன கிஃப்ட்டைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு…” யுவராஜ்சிங்கிடம், தோனி கிசுகிசுத்துவிட்டுச் சென்றார்.

அந்த மேஜிக் ஒர்க்கவுட் ஆனது.

அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு சிக்ஸர்களாக மாற்றிகாட்டினார் யுவராஜ்சிங்.

டர்பன் மைதானம் மட்டுமின்றி, டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களும் ஆர்ப்பரித்தார்கள்.

வெறும் பன்னிரண்டே பந்துகளில் அரை செஞ்சுரியும் விளாசியிருந்தார் யுவராஜ்சிங்.

இருபது ஓவர்கள் முடிவில் இந்தியா, இமாலய ஸ்கோரான 218-ஐ எட்டியிருந்தது.

இங்கிலாந்தும் கடுமையாகப் போட்டியிட்டு 200 ரன்களை எட்டி, வெறும் 18 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றது.

அன்றைய இரவு பார்ட்டி களைகட்டியது.

“சார், நீங்க சொன்னபடி யுவராஜ்சிங்குக்கு போர்ஷே கார் வாங்கிக் கொடுத்துடணும். மறந்துடாதீங்க” சேவாக், மோடியிடம் ஜாலியாகக் கேட்டார்.

“போர்ஷேவுக்கு ஆர்டர் கொடுத்துட்டேன். கப்பு வாங்குங்க. நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத கிஃப்டெல்லாம் டீம்லே இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் இந்தியாவில் காத்துக்கிட்டிருக்கு…” சேவாக்கின் தோளைத் தொட்டு உற்சாகமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் லலித் மோடி.

அவரது மனசு வேறு கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தது.

அதுதான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்று அழைக்கப்படும் உலகின் காஸ்ட்லியான கிரிக்கெட் போட்டித் தொடர்.

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என்பதெல்லாம் வேறும் போர்ஷே காருக்கான விலையல்ல என்று அவருக்குத் தெரியும்.

120 கோடி மக்கள் நிறைந்திருந்த இந்தியாவில் இந்த டி20 போட்டிகள் செய்யப்போகும் மாயம் ஒவ்வொன்றும் அவர் கண் முன்பாக விரிந்தன்ச்.

யுவராஜ்சிங் ஆறு சிக்ஸர் விளாசியதிலிருந்து சரியாக நான்கு நாட்களில் பக்காவான ஒரு ஐபிஎல் பிளானோடு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மின்னஞ்சலில் அணுகினார் லலித்மோடி.

அவர்கள் கொட்டிக் கொடுக்க முன்வந்த தொகை எவரும் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. லட்சம் கோடிகளைத் தாண்டியது.

ஐபிஎல், கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே மாற்றப் போகிறது என்பது அவருக்குப் புரிந்தது.

சரி, ஐபிஎல் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது உலகக்கோப்பைக்கு வருவோம்.

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த தெம்போடு அடுத்த போட்டியை எதிர்கொண்டது இந்தியா.

இம்முறை அவர்கள் எதிர்கொண்டது பலமிக்க தென்னாப்பிரிக்கா அணியை. போட்டியை நடத்திக்கொண்டிருந்த அணியை.

அப்போட்டித் தொடரில் அதுவரை தோல்வியே காணாத அணியாகவும் தென்னாப்பிரிக்கா இருந்தது.

போதாக்குறைக்கு சிக்ஸர் நாயகன் யுவராஜ்சிங், ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்ததால் ஏற்பட்ட முழங்கை வலி காரணமாக அந்தப் போட்டியில் விளையாடவில்லை.

டாஸ் வென்றது இந்தியா.

வழக்கம்போல பேட்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி.

காம்பிரும், சேவாக்கும் ஓப்பனர்களாக விளாச ஆரம்பித்தனர்.

ஆனால் –

ஐந்தாவது ஓவரில் காம்பிர் அவுட்.

உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்திலேயே காலி.

அடுத்த இரு பந்துகளிலேயே சேவாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த ராபின் உத்தப்பா பதினோராவது ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

61 ரன்களுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

ரோஹித் சர்மா மட்டும் ஒரு முனையில் நின்று போராடிக்கொண்டிருக்க, அவருக்குக் கைக்கொடுக்க உள்ளே வந்தார் ‘தல’ தோனி.

கடைசி ஓவர் வரை இந்த ஜோடி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி கவுரவமான ஸ்கோராக 153-ஐ எட்டினர்.

கிப்ஸ், க்ரீம் ஸ்மித், டீவில்லியர்ஸ், கெம்ப், பவுச்சர், போல்லாக் என்று அதிரடியான பேட்டிங் வரிசையைக் கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு சுலபமான இலக்குதான்.

பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக தோனியால் விக்கெட் கீப்பிங் கூட செய்ய முடியவில்லை.

இந்திய அணியின் பாரம் மொத்தமும் பவுலர்கள் கையில் சாய்ந்தது.

அதைத் திறம்படச் சுமந்தார் ஆர்.பி.சிங்.

அவருடைய துல்லியமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையே நிலைகுலைந்தது.

அந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலேயே கிப்ஸ் எல்.பி.டபிள்யூ.

நான்காவது பந்தில் ஸ்மித்தை அகற்றினார்.

தொடர்ந்து டீவில்லியர்ஸை ஸ்ரீசாந்த் எல்.பி.டபிள்யூ செய்ய, கெம்ப் ரன் அவுட் ஆனார்.

தென்னாப்பிரிக்க அணியின் முதல் நான்கு வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்கள்.

பவுச்சரும், மார்க்கெல்லும் மட்டும் ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்க 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தென்னாப்பிரிக்கா.

அது மட்டுமில்லாமல் ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் உலகக்கோப்பையை நடத்திக்கொண்டிருந்த அந்த அணி இழந்தது. ஒரே தோல்வி. உலகக்கோப்பைக் கனவு மொத்தமாகத் தென்னாப்பிரிக்காவுக்கு காலி.

பலமான அணியை வீழ்த்திய தன்னம்பிக்கையோடு செமி ஃபைனலுக்குள் நுழைந்தது தோனி தலைமையிலான இந்தியா.

செமிஃபைனலில் இந்தியா எதிர்கொள்ள இருந்த அணி ஆஸ்திரேலியா.

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியா, முதல் டி20 உலகக் கோப்பையையும் வென்றே தீரவேண்டும் என்கிற வெறியோடு இருந்தது.

முந்தைய 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் கேவலமாக வெளியேறிப் பெற்றிருந்த அவமானத்தைத் துடைக்கும் வெறி இந்தியாவுக்கு இருந்தது.

இதற்கிடையே செமிஃபைனலுக்கு இந்தியா முன்னேறிவிட்டது என்கிற நிலையில், இந்தியாவில் டி20 வெறி உச்சத்துக்குப் போயிருந்தது.

நாட்டின் கடைக்கோடிக் குடிமகனில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கியிருந்தார்கள்.

வழக்கம்போல டாஸ் வென்று பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார் தோனி.

முழங்கை வலி குறைந்து யுவராஜ்சிங்கும் வந்திருந்தது அவருக்குத் தெம்பைக் கொடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆக்கிரோஷமான பந்துவீச்சில் ரன் சேகரிக்க இந்தியா திணறியது.

15 ஆவது ஓவரில்தான் 125 ரன்னையே எட்டியது. அப்போது உத்தப்பாவின் விக்கெட் விழ, களத்தில் இருந்த யுவராஜ் சிங்கோடு தோனி பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் –

வெறித்தனம்.

5 சிக்ஸர், 5 பவுண்டரிகளோடு 30 பந்துகளில் 70 ரன் விளாசினார் யுவராஜ்சிங்.

4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி வெறும் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் தோனி.

இவர்களது இருவரின் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் 188 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது இந்தியா.

ஆனால் –

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களும் ஊழித்தாண்டவம் ஆடினார்கள்.

ஹேடன், சைமண்ட்ஸ் இருவரும் இந்திய பவுலர்களைத் கடுமையாகத் தண்டித்தார்கள்.

கடைசி 24 பந்துகளில் 41 ரன்கள்தான் தேவை என்கிற நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதி என்றே அனைவரும் நினைத்தார்கள். கைவசம் 7 விக்கெட் வேறு இருந்து.

இந்நிலையில் ஃபுல் பிக்கப்பில் இருந்த சைமண்ட்ஸுக்கு ஸ்டெம்ப்பு எகிற வைத்தார்  இர்ஃபான் பதான்.

கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் தேவை.

ஆஸ்திரேலியாவுக்கு இது தூசுதான்.

ரொம்ப நேரம் யோசித்த தோனி, பந்தை ஹர்பஜன்சிங்கிடம் கொடுத்தார்.

ஹர்பஜனின் அனுபவம் மட்டுமே அணியைக் கரை சேர்க்க முடியும் என்று நினைத்தார்.

அவரது எதிர்ப்பார்ப்பு வீண் போகவில்லை.

அந்த ஓவரில் ஒரு விக்கெட் சாய்த்ததோடு, வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஹர்பஜன்.

கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா தடுமாற 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பீரமாக இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா.

அதே நாளில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாகவே இன்னொரு அரையிறுதிப் போட்டியின் ரிசல்ட்டும் வெளியாகி இருந்தது.

அந்த ரிசல்ட் இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பிளட் பிரஷரை எகிறச் செய்திருந்தது.

காரணம்?

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையே நடந்திருந்த அந்த அரையிறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

எனவே –

இறுதிப்போட்டி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்.

ஏனோதானோவென்று செலக்ட் செய்து அனுப்பப்பட்ட இந்திய அணி, ஃபைனலுக்கு எல்லாம் போகுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள்?

அதுவும் இறுதிப்போட்டி, பரம எதிரி பாகிஸ்தானுடன்.

கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் தலைவரான சரத்பவார், தோனிக்கு போன் போட்டுக் கிட்டத்தட்டக் கெஞ்சும் குரலில் கேட்டார்.

“இதுவரை ஜெயிச்சது எல்லாம் பெருசில்லை தம்பி. பாகிஸ்தான் கிட்டே மட்டும் தோத்துடக்கூடாது. கப் இல்லாமே கூட நீங்க ஊருக்குள்ளே வந்துடலாம். ஆனா, பாகிஸ்தானிடம் தோத்துட்டு வந்தா…”

சில மாதங்களுக்கு முன்பாக உலகக்கோப்பையில் தோற்றுவிட்டுத் திரும்பியபோது தாயகத்தில் கிடைத்த ‘மரியாதை’ தோனிக்கு நிழலாடியது. அவரது வீடு கூட ரசிகர்களால் தாக்கப்பட்டது.

எனினும் –

மிஸ்டர் கூல் கேப்டன் மிரட்சியடையவில்லை. உற்சாகமான குரலில் சொன்னார்.

“கோப்பையோட வர்றோம் சார். பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க…”

அன்றைய தேதியில் உடன் போட்டியிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் பலவீனமான பவுலர்களைக் கொண்டிருந்தது இந்தியா.

ஹர்பஜன்சிங் தவிர்த்து மற்ற பவுலர்கள், ‘காட்டான்’ பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கான திறன் படைத்தவர்களாகக் கருதப்படவில்லை.

எனவே, இந்தியாவின் வெற்றி என்பது முழுக்க பேட்ஸ்மேன்களின் தலைமீது வைக்கப்பட்ட பெரும் சுமை ஆனது.

‘தல’ எம்.எஸ்.தோனி, ‘சிக்ஸர் மன்னன்’ யுவராஜ்சிங், ‘பேட்டிங் யமஹா’ வீரேந்தர் சேவக், ‘அமைதிப் புயல்’ கவுதம் காம்பீர், ‘நம்பிக்கை நட்சத்திரம்’ ரோஹித் சர்மா என்று இறுதிப்போட்டி வரையிலான இந்தியாவின் வெற்றிநடைக்கு பேட்ஸ்மேன்களே பெரிதும் அச்சாரமாக அமைந்தார்கள்.

ஃபீல்டிங்கைப் பொறுத்தவரை முந்தைய இங்கிலாந்து டூரில் இந்தியா, கடுமையாகச் சொதப்பியிருந்தது.

ஆனால் –

எம்.எஸ்.தோனியின் தலைமை, கடுமையான உழைப்பைக் கோரும் ஃபீல்டிங் யுக்தியாக இல்லாமல், டி20 போட்டிகளுக்கே உரித்தான குயிக் விக்கெட்டுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஃபீல்டிங் முறையாக அமைந்தது.

ஒரு விக்கெட் கீப்பர் என்கிற முறையில் அவருக்கு ஸ்மார்ட் ஃபீல்டிங் யுக்தி நன்கு கைவரப்பெற்றிருந்தது.

ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பலம், பலவீனத்தை நன்கு கணித்து, அதற்கேற்ப பவுலர்களுக்கு ஆலோசனை செய்து, எப்படிப் பந்து போட்டால் எங்கே கேட்ச் ஆகும், எப்படி ரன் அவுட் செய்ய முடியும் என்பதையெல்லாம் துல்லியமாக அவரால் கணிக்க முடிந்தது.

பவுலிங், ஃபீல்டிங்கில் சற்றே பலவீனமாக இருந்த இந்திய அணிக்கு மாறாக –

இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு விளையாடத் தேர்வாகி இருந்த பாகிஸ்தானோ, பெரும்பாலும் பவுலர்களின் சாமர்த்தியத்தால் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகிய அந்தஸ்தை எட்டியிருந்தது.

எனினும் –

இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் ‘பவுல் அவுட்’ முறையில் தோற்றிருந்தது என்பதுதான் எவராலும் நம்ப முடியாத நிகழ்வாக அப்போது அமைந்திருந்தது.

போட்டிக்கு முன்பாகப் பாகிஸ்தானின் ஓய்வறையில் பேட்டிங்கைவிட, பவுலிங் மற்றும் ஃபீல்டிங் குறித்த யுக்திகளே அதிகமாக ஆலோசிக்கப்பட்டன.

அவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய சேதி ஒன்றும் இருந்தது.

ஆம்.

அதுவரை இந்தியாவுக்கு அதிரடி ஓப்பனிங் கொடுத்துக்கொண்டிருந்த சேவாக், உடல்நலிவு காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

சேவாக்குக்குப் பதிலாக யூசுப் பதான், காம்பீருடன் ஓப்பனிங் செய்ய இருந்தார்.

வழக்கம்போல தோனிதான் டாஸ் வென்றார்.

வழக்கம்போல பேட்டிங்கையே தேர்வு செய்தார்.

ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று சேவாக்கின் இடத்தைக் கைப்பற்றியதற்கு நியாயம் செய்த பதானை, மூன்றாவது ஓவரின் இறுதியிலேயே பாகிஸ்தான் வெளியேற்றி விட்டது.

அடுத்து வந்த ராபின் உத்தப்பாவையும் ஒற்றை இலக்கத்திலேயே காலி செய்தனர்.

ஆனால் –

அமைதிப் புயல் காம்பீர் அன்று ஆவேசப் புயலாக மாறி பாகிஸ்தான் பவுலர்களைக் கடுமையாகத் தண்டித்துக்கொண்டிருந்தார்.

அவரோடு கூட்டணி அமைத்த யுவராஜ்சிங், தோனி ஆகியோரை பாகிஸ்தான் பவுலர்களால் கட்டுப்படுத்த முடிந்தாலும், காம்பீரின் வெறித்தனம் அன்று எல்லை தாண்டிய பயங்கரவாதமாக அமைந்தது. 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களோடு 75 ரன் எடுத்து 18 ஆவது ஓவரின் இறுதியில்தான் அவுட் ஆனார்.

போதாக்குறைக்குக் கடைசியில் வந்த ரோஹித் சர்மாவும் விளாசு விளாசுவென்று 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார்.

எனினும் கூட –

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைத்தான் இந்தியா எடுக்க முடிந்திருந்தது.

ஒருவேளை காம்பீரைப் பாகிஸ்தான் கட்டுப்படுத்தி இருந்தால், இந்தியா 100 ரன்களுக்கே ததிங்கிணத்தோம் போட்டிருக்கும்.

157 என்பது நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய எண்ணிக்கை அல்ல.

அதே நேரம் மோசமான ஸ்கோரும் அல்ல என்பதே இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய அம்சம்.

இப்போது இந்திய அணியின் கோப்பைக் கனவு பவுலர்களின் கைகளில்.

இன்றுவரையில் இந்திய பவுலர்களில் unsung hero-வாக விளங்கும் ருத்ரபிரதாப் சிங் என்கிற ஆர்.பி.சிங் இறுதிப்போட்டியில் தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் களமிறக்கினார்.

முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் ஓப்பனர் முகம்மது ஹபீஸை வெளியேற்றினார்.

ஒரு பக்கம் இம்ரான் நசிர் புயல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தான் வீசிய அடுத்த ஓவரிலேயே கம்ரான் அக்மலை க்ளீன் பவுல்ட் செய்து டக் அவுட்டாக பெவிலியனுக்கு திரும்ப வைத்தார் ஆர்.பி.சிங்.

அனுபவமிக்க பேட்ஸ்மேனான யூனிஸ்கான் போராட, 5 ஆவது ஓவரிலேயே 50 ரன்களைk கடந்தது பாகிஸ்தான்.

அடுத்த 15 ஓவர்களில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்க, மேலும் 100+ ரன்களை எட்டினால் வெற்றி என்கிற சுலபமான சூழலில் இருந்தது.

அப்போது 14 பந்துகளிலேயே 33 ரன்களை விளாசியிருந்த இம்ரான் நசிர், துரதிருஷ்டவசமாக (பாகிஸ்தானுக்கு, அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு) உத்தப்பாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்தச் சமயத்தில் எந்தக் கேப்டனும் செய்யாத ஒரு துணிச்சலான முயற்சியை தோனி செய்தார்.

ஸ்லோ மீடியம் வீசக்கூடிய ஜோகிந்தர் சர்மா, பார்ட் டைம் பவுலரான யூசுப் பதான் ஆகியோருக்குத் தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு தந்தார்.

வேகப்பந்து வீச்சுக்கு செட்டில் ஆகியிருந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இது ரோதனையாகப் போயிற்று.

இதற்கு இந்தியாவுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதோடு அவசரப்பட்டு ஷாட் அடித்த யூனிஸ்கானையும் வெளியேற்ற முடிந்தது.

இதன் பின்னர் பந்து வீச வந்த இர்பான் பதான், பன்னிரண்டாவது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் அதிரடி மன்னன் சாஹித் அப்ரிடி இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார்.

அந்த ஓவரின் முடிவில் 78 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் தத்தளித்தது.

வெற்றி தேவதை இந்தியாவைக் கண்டு கண்ணடித்த நிலையில், தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சினர் மிசாப் உல் அக்.

அனுபவமிக்க ஹர்பஜன் சிங் வீசிய 17 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.

அடுத்த ஸ்ரீசாந்தின் ஓவரில் சோஹைல் தன்வீரும் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸர்கள் விளாச, பாகிஸ்தான் வெல்லலாம் என்கிற நிலையில் கடைசிப் பந்தில் தன்வீரை, யார்க்கர் போட்டு கில்லி எகிற வைத்தார் ஸ்ரீசாந்த்.

12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி.

19 ஆவது ஓவரில் பாகிஸ்தான் 7 ரன்கள் எடுத்ததோடு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் ஒரு விக்கெட்டுதான் இருந்தது.

ஜோஹிந்தர் சர்மா, முதல் பந்தை அகலப்பந்தாக வீசி ஒரு ரன்னைக் கொடுத்தார். இரண்டாவது பந்தை மிசாப் உல் அக், சிக்ஸருக்கு விரட்டினார்.

4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில், 3 ஆவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டும் முயற்சியில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ரிஸ்க்கான ஒரு ஷாட்டை உல் அக் அடிக்க, பந்து ஸ்ரீசாந்தின் கைகளுக்குள் அடங்கி கேட்ச் ஆனது.

வெற்றி.

ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

முதலாவது டி20 கோப்பை இந்தியாவின் வசமானது.

ஜூன் 25, 1983இல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற உலகக்கோப்பையால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வாழ்வு கிடைத்தது.

செப்டம்பர் 24, 2007இல் தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற உலகக்கோப்பையால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இருபது ஓவர் போட்டிகள், கிரிக்கெட்டுக்குப் புதுரத்தம் பாய்ச்சின.

சரித்திரம் புதியதாக திருத்தி எழுதப்பட்டது.

83இல் கபில்தேவ் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்த அந்த அரிய சாதனையை, 24 ஆண்டுகள் கழித்து 2007இல் 20 ஓவர் டி20 கிரிக்கெட்டில் செய்தவர், ‘தல’ தோனி என்பதுதான் அவரது முக்கியத்துவமே.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் பல்லாண்டுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டன.

ஆனால் –

டி20ஐப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே உலக சாம்பியன்தான்.

இத்தனைக்கும் –

அப்போதைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்கள்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் மிகக்கேவலமான வகையில் வெளியேறியிருந்தது இந்திய அணி.

எல்லாவற்றையும் விட கேப்டன் தோனிக்கும் பெரிய அனுபவமில்லை.

பேட்ஸ்மேனாக, விக்கெட்கீப்பராக அவர் சற்றுப் பெயர் பெற்றிருந்தாலும் கேப்டனாக என்னத்தைக் கிழிப்பார் என்கிற அலட்சியமே பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.

பொய் சொல்லி ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, காய்ச்சல் என்று ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு டிவி பெட்டி முன்பாகத் தவம் கிடந்த தலைமுறைக்கு அப்போது சற்றே கிரிக்கெட் சலித்துவிட்டிருந்தது.

அடுத்து வந்த தலைமுறையோ போனில் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தால் போதும் என்கிற அளவுக்குக் கிரிக்கெட் மேல் பெரிய பிடிப்பு கொள்ளாமல் இருந்தது.

எனவேதான் 2007இல் தோனி தலைமையிலான அணி பெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றியை, இன்னுமொரு வெற்றிக் கோப்பையாக மட்டுமே நம்மால் கருத முடியவில்லை.

அதுவொரு game changer.

மீண்டும் கிரிக்கெட்டை மதமாக இங்கே ஸ்தாபித்த பெருமை தல தோனியையும் அவரது தலைமையில் ஆடிய துடிப்பான இளம் வீரர்களையுமே சாரும்.

கிரிக்கெட் என்பது மெட்ரோ நகரங்களுக்கு உரியது என்கிற மாயையை முற்றிலுமாக உடைத்தெறிந்தது டி20.

கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை எனுமளவுக்குக் குக்கிராமங்களும்கூட ஆர்வத்தோடு மீண்டும் டிவி பெட்டி முன்பாகத் தவம் கிடக்கக் காரணமானது டி20.

2007 டி20 உலகக் கோப்பையில் முக்கியமான போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பிடித்த கேட்ச், கவுதம் காம்பீரின் அபாரமான மேன் ஆஃப் த மேட்ச், யுவராஜ்சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர், பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான பவுல் அவுட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் கேட்ச், ஆர்.பி.சிங் மற்றும் இர்ஃபான் பதானின் துல்லியமான பவுலிங்….

என்று நாம் என்றென்றைக்கும் சிலிர்த்துக்கொள்ள ஏராளமான பசுமையான நினைவுகள் உண்டு.

இதையெல்லாம் தாண்டிய விஷயம் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட் அணியின் தலைமைப் பண்புகளுக்கு அவர் வகுத்த புதிய இலக்கணங்கள், அவ்விளையாட்டின் எதிர்காலத்தையே தாக்கப்படுத்தி இருக்கின்றன.

சந்தேகமே இல்லை.

டி20 யுகத்தின் காட்ஃபாதர் என்று அவரை நாம் உறுதியாகவே அழைக்கலாம்.