இன்னும் சித்திரை பிறக்கவில்லை. வெய்யிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருந்தது. “சாயங்காலம்தானே கூட்டம். பொழுதோரப் போகலாமே இந்த வேணா வெயிலில் போகணுமா..” என்று பழனியின் மனைவி கூட சலித்துக் கொண்டாள். இன்று கூட்டத்தில் பேசுவதற்குப் பெருமாள் சார் வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்து நாட்கள் நிறைய ஆகி விட்டது. அவருடன் இலக்கியம் பேசிக்கொண்டிருப்பது சுவாரஸ்யமாக இருக்கும். தீவிரமான இலக்கியத்தையே பேசினாலும் சலிப்புத் தோன்றாமல் இடையிடையே பல விஷயங்கள் பேசுவார். இலக்கியச் சண்டைகளைக் குறித்தும், தன்முனைப்பான சில ஆளுமைகளின் பலவீனங்கள் குறித்தும் சிரிக்காமல் சொல்லிச் சிரிக்க வைப்பார்.
பழனிக்குச் சங்கீதம் அரைகுறையாகத் தெரியும். சினிமாப் பாடல்களை என்ன ராகத்தின் அடிப்படையில் போட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி ஞானம்தான் அவனது இசையின் எல்லை. ஏதாவது ஒரு பாடலை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அதே போல இதுவும் மோகனம்தானோ என்று நினைப்பான். அதை இசை நன்கு தெரிந்தவர்களிடம் கேட்பான், சிலர், பழனியின் இசை ஆர்வம் படக்கென்று வாடி விடும்வகையில், ‘உனக்கு எதுக்கு இந்த அலசல்,” என்கிற தொனியில் பதில் சொல்லுவார்கள்..
ஆனால் பெருமாள் அப்படியில்லை. லேசாக ஸ்வரங்களையோ ஏதோ கீர்த்தனைகளையோ முனுமுனுத்துப் பார்த்து விட்டு,“ சரியாத்தான் சொல்லறீங்க என்பார். தவறாக இருந்தால், “இல்லை அது மாதிரி சாயலில் இருக்கு, ஆனா கல்யாணி என்பார். அல்லது `பொதுவாகத் திரையிசையில் ராகம் பூரணமாக இருக்காது நீங்கள் சொன்ன பாடல் `பஹாக்’ என்று அவன் கேள்விப்பட்டே இராத ராகத்தின் பெயரைச் சொல்லி அந்த ராகத்தில் உள்ள வேறு பாடல்களைச் சொல்லுவார். பதிலும் ரசமாக இருக்கும், கூடுதலாக ஏதோ தெரிந்துகொண்ட திருப்தியும் இருக்கும். அவர் காலை ரயிலில் அந்த ஊருக்கு வருகிறேன் மாலை வரை ஓய்வாகத்தான் இருப்பேன். நீங்கள் வாருங்களேன் என்று சொல்லியிருந்தார். ”கரும்பு தின்ன ராயல்ட்டியா” என்று நினைத்துக்கொண்டவன் `கண்டிப்பாக வந்து விடுகிறேன்,’ என்று சொல்லியிருந்தான்.
சுமார் ஒண்ணரை மணி நேரப் பயணம். பத்து மணிக்கு பஸ்ஸில் ஏறினவனை அந்த ஊர் நெருங்க நெருங்க முகத்தில் அடிக்கும் வெக்கைக் காற்றால் பதினொரு மணி ஏறுவெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்தது. பஸ் வழியில் ஒரு ஓரமாக ஏதோ மரத்தின் கிளைகளில் சற்று உரசியபடி நின்றது. பங்குனி மாதத்து வேப்பம் பூவின் வாசனை நாசியை நிறைத்தது. ஒரு குளுமை சுவாசம் எங்கும் பரவியது. எதிரே இருந்த சைக்கிள் கடையின் பெயர்ப் பலகையில் கோணல் மாணலாக ஊர்ப் பெயரும் எழுதியிருந்ததை வாசித்தான், `கள்ளிக்குளம்’. அது சிறிய ஊர். அங்கெல்லாம் அவன் ஏறியிருந்த விரைவுப் பேருந்து நிற்காது என்று நினைத்துக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்தவரிடம் கேட்டான், “இங்கேயெல்லாம் இந்த பஸ் நிற்குமா, என்ன?.” “இங்கே இந்த பஸ் நிற்காது ஆனா எல்லா பஸ்ஸும் நின்றுதான் போகும்” என்றவர் புதிரான தன் பேச்சுக்கு அவரே விடை சொல்வது போல,”இங்கே இந்த மரத்தடியில் தாமிரபரணித் தண்ணீர் போகிற பெரிய பைப் லைன் ஒண்ணு போகுது. இந்த ஊருக்குன்னு அதில் ஒரு சின்னக்குழாயும் நல்லியும் வச்சிருக்காங்க. மெயின் லைன் என்பதால் இருபத்திநாலு மணி நேரமும் தண்ணீர் வரும். டிரைவர்கள் எல்லாரும் இங்கே பஸ்ஸை நிப்பாட்டி ரெண்டு பாட்டில் தண்ணீர் பிடிச்சுக்குவாங்க, இல்லைன்னா இப்ப அடிக்கிற வெயிலுக்கு நடுவழியில் நா வறட்சி ஏற்பட்டால் அவங்க தண்ணிக்கி எங்கே போவாங்க” என்றார்.
பழனிக்குச் சட்டென்று பொறி தட்டிற்று “இந்தக் கள்ளிக்குளம் ஊர்லதானே செண்பகா மேடம் இருக்கறதா நண்பர்கள் சொன்னாங்க. உடம்புக்கு ரொம்ப முடியாம, இங்கே வந்து பூர்வீக வீட்டில் தங்கி இருக்கறதாச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பாத்துட்டுப் போயிடலாமே. இங்கதான் எல்லா பஸ்ஸும் நிற்பதாகச் சொன்னாரே, மேடத்தைப் பார்த்துவிட்டு அடுத்த பஸ்ஸில் போய் விடலாம். `செண்பகா மேடம்’, `மத்திய அரசில் வேலை பார்த்தவங்க வீடு எங்கே’ன்னு விசாரிச்சாத் தெரியாதா, மேடத்தின் அப்பாவும் பிரபலமானவர்தான், எப்போதும் கதர்க் குல்லா போல ஒன்று அணிந்திருப்பார்,’ அதையெல்லாம் சொன்னால் தெரிந்துவிடுமே,” மனதுக்குள் நினைப்பு ஓட ஓட, சட்டென்று எழுந்து பேருந்தைக் கிளப்ப முயற்சித்த ஓட்டுநரிடம்,“சார் இங்கே கொஞ்சம் இறங்கிக்கிடறேன்’’ என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக இறங்கினான். நடத்துநர், “சார் மெதுவா இறங்குங்க, ஆனா நீங்க இறங்க வேண்டிய இடம் இது இல்லையே,” என்றார். “ஆமா , இங்கே ஒருத்தரைப் பாக்கணும், ஸாரி சார், நன்றி சார்,” என்று பதற்றமாய்ச் சொல்லிக்கொண்டே இறங்கினான்.
வேப்ப மரத்தடியில் குளுமையாக இருந்தது. மாசியில் மரம் தளிர்த்து அடர்ந்து, இலையும் பூவுமாய் பசுமையும் வாசமுமாய் தலையாட்டிக் கொண்டிருந்தது பங்குனி மாத வேம்பு. பைப்பிலிருந்து வேகமாகக் கொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை நாலைந்து பெண்கள் குடத்தில் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பைப்பிலிருந்து சிந்தும் தண்ணீரின் பரந்து கிடந்த ஈரமும் குளிர்ச்சிக்கு ஒரு காரணம் என்று தோன்றியது.`இந்தப் பெண்களுக்கு எவ்வளவு தண்ணீர் வந்தாலும் காணாது. நேரம் காலம் இல்லாமல் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.’ என்று நினைத்துக் கொண்டான். ஓரிரு ஆண்களும் பெரிய ஜெர்ரி கேன்களில் தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்தார்கள். நல்ல தண்ணீர் என்பது எல்லோரையும் கவர்கிற விஷயம்தான் அதில் பெண் என்ன ஆண் என்ன என்றும் தோன்றியது. அதற்குள் எதிர்ப் புறத்தில் இன்னொரு பேருந்தும் வந்து நின்றது. அதிலிருந்தும் நடத்துநர் இரண்டு லிட்டர் பாட்டிலுடன் இறங்கினார்.
மரத்தடியில் ஒரு கல்லில் அமர்ந்து கறுப்பு நாயொன்றின் உடலிலிருந்து உண்ணியைப் பிய்த்து அதற்கே தின்னக் கொடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கங்கே தடவிக் கொடுத்தும் சொறிந்து கொடுத்தும் பேன் எடுப்பது போல உண்ணியை எடுத்துக்கொண்டிருந்தார். நாய், தலையைத் தாழ்த்திச் சுகமாகக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர் உள்ளங்கையில் வைத்து உண்ணியை நீட்டுகிற போது லபக்கென்று கவ்வித் தின்றது. கையைக் கடிக்காமல் லாவகமாக உண்ணியை வாங்குவதைப் பார்க்கப் பழனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் விசாரித்தான். “யாரு இந்த வரி ஆபீஸ்லயோ என்னவோ வேலை பார்த்துதே அந்த அம்மாவா, இப்படீ நேராப் போங்க ஒரு ரேஷன் கடை வரும் அதுக்கு எதிர்த்துதுக்கு அடுத்த வீடு,” என்று வழி சொன்னார். நாய் அதை ஆமோதிப்பதைப் போல லேசாகத் தொண்டைக்குள் முனகியது. “இவனுக்கு நல்லாவே தெரியும் அந்த அம்மாவை, பிஸ்கட் அம்மாடா,“ என்று அதனிடம் சொன்னார். அதற்கும் லேசான தொண்டைக்குழி முனகல் வந்தது.
அந்த வழியில் உள்ள மற்ற ஊர்களைப் போல அல்லாமல் ஊருக்குள் எங்கிருந்தோ காற்று வீசிக்கொண்டே இருந்தது. அது சாலை ஓரத்தில் வேப்பம் பூக்களை அலை போல உருட்டித் திரட்டிச் சேர்த்துக் கொண்டிருந்தது. ஊர், ஆரியங்காவு கணவாய்க்கு நேராக இருக்கும் போல, அதுதான் இந்தக் காற்று என்று நினைத்துக்கொண்டான். வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமமில்லை. வீட்டைத் திறக்க வைக்கத்தான் சிரமமாயிருந்தது. வீட்டுக்கு முன்னால், வாகைப்பூ வாசனையும், செண்பகப்பூப் போல ஒரு வாசமும் கலந்து வீசும் மரங்களுடன் சிறிய தோட்டம். சுற்றிலும் காம்பவுண்ட் அதற்கொரு கேட். சற்று உள்ளடங்கிய வீடு. செண்பகா மேடத்திற்குப் பிடித்தமான சூழல். இதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறார்களோ என்னவோ. மரங்களினடியில் புதிதாகப் போட்ட ஒரு சிமெண்ட் பெஞ்சு கிடந்தது. அதில் உட்கார்ந்து மேடம் புத்தகங்கள் படிக்க வாகாக இருக்கும்.
அப்படித்தான் புத்தகங்களாய் வாங்குவார்கள். பழனிதான் முதலில் அவர்களுக்குத் தீவிரமான இலக்கியத்தையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினான். ஆனால் அவர்கள் படித்த ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால், இவன் போட்ட கோடுகளை அற்புதமான சித்திரங்களாகத் தீட்டுகிற மாதிரி புதிது புதிதாகப் புத்தகங்கள் வாங்குவார்கள். இவன் ஒன்று சொன்னால் அதே டாப்பிக்கில் இன்னும் இரண்டு புத்தகம் வாங்குவார்கள். அவ்வளவையும் வாசிப்பார்கள், அதைப் பற்றி விவாதிப்பார்கள். நல்ல சம்பளமும் ஒரு காரணம். கல்யாணமும் பண்ணிக் கொள்ளவில்லை. எளிமையான வாழ்க்கை, வேறு செலவுகளும் கிடையாது. பழனியின் நட்பு வட்டத்திலிருந்த பல இலக்கிய ஆளுமைகளுடன் அவர்களும் நட்பை உருவாக்கிக்கொண்டார்கள். குறிப்பாக உலகநாதன் சார்.
பழனிதான் உலகநாதன் ஐயாவை ஒரு கருத்தரங்கில் வைத்து அறிமுகப்படுத்தினான். உலகநாதன் ஒரு கால் சற்று ஊனமானவர். ஆனால் அறிவு விசாலம் என்பது பிரம்மாண்டமானது. எல்லோருக்கும் அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. செண்பகா மேடத்திற்கும் சீக்கிரமே அவர் மீது அனுதாபமும் மரியாதையும் வந்துவிட்டது. அதனால் அவர் சொல்கிற, சிமெந்தி பூவா, எரிக் ஃப்ராம், ழாக் தெரிதா என்று புத்தகங்களை ஒன்று விடாமல் வாங்கிப் படித்துவிட்டு பார்க்கும்போது இருவரும் தீவிரமாக விவாதிப்பார்கள். பழனிக்கு அதில் சில புத்தகங்களை மேலோட்டமாக வாசித்த போது சில விஷயங்கள் புரியக்கூட இல்லை. “இதை சாவகாசமாகப் படிச்சுப் பாருங்க,” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தபோது, “மேடம் ஆளை விடுங்க,” என்று பழனி சொல்கிற அளவுக்கு கோட்பாடுகள் குறித்த நூல்களை விரும்பி வாசித்தார்கள். இத்தனைக்கும் பழனியைத் தேடி ஒரு ஆய்வு மாணவியான சினேகிதியுடன் அவர்கள் வந்ததே, அவனிடமுள்ள பழைய சிறு பத்திரிகைகளைத் தேடித்தான். அப்போதெல்லாம் பழனி வைத்திருந்த புத்தகங்கள் பத்திரிகைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்தான் செண்பகா மேடம்.அவர்களுக்கே ஒரு ஆராய்ச்சியாளராக வேண்டுமென்ற ஆசை கூட உண்டு. அவர் விவாதிக்கிற போது இதையெல்லாம் ஒரு கட்டுரையாக எழுதுங்கள் என்பான். அவர் கடிதமாக எழுதுவாரே தவிர கட்டுரையாக எழுத மாட்டார்.
செண்பகாவின் வாசிப்புப் பழக்கம் அவர்கள் அலுவலகத்திலும் பிரபலம். அதனால் அவர்களுக்குத் தொந்தரவில்லாத மேசைப்பணிகளே கொடுப்பார்கள். களப்பணிக்கெல்லாம் அழைக்க மாட்டார்கள். தவிரவும் அவரது ஆங்கிலத்தின் மேல் மேலதிகாரிகளுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் ஏதாவது ஒரு வரைவை எழுதினால் அதில் யாராலும் திருத்தம் சொல்ல முடியாது.
“மனித வாழ்வின் பிரச்னைகளுக்குத் திருப்தியானதும் சற்றே பைத்தியக்காரத்தனதுமான தீர்வு என்பது அன்புதான்” என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை செண்பகா மேடத்திற்கு. எல்லோரிடமும் அதிலும் குறிப்பாகப் பழனி அறிமுகப்படுத்துகிற எல்லோரிடமும் அப்படி அன்பாக இருப்பார்கள். பழனிக்குச் சமயத்தில் சங்கடமாக இருக்கும். என்ன இது இப்படிப் பைத்தியக்காரத்தனமாக, நிபந்தனை ஏதுமில்லாமல் பழகுபவராக இருக்கிறார்களே என்று தோன்றும். ஒரு நாள் சொல்லவும் செய்தான். “செண்பகா நீங்க இப்படி இருந்தீங்கன்னா உங்களை ஈசியா முட்டாளாக்கிருவாங்க,” என்று.
“அப்படில்லாம் இல்லை பழனி. நான் சின்ன வயசிலேயே அம்மாவை இழந்தவ. அண்ணனும் அக்காவும்தான் வளர்த்தாங்க. அப்பா அப்படி ஒரு கண்டிப்பானவரு. அவரையும் குறை சொல்ல முடியாது. அம்மா இல்லாத பொண்ணுங்க, ஏதாவது தப்புத்தண்டாவான பாதையில் போய்ட்டா என்ன செய்யங்கிற பயம். அப்புறம் எங்க பழக்க வழக்கப்படி கடவுளுக்கு ரொம்ப பயந்தவரு. அந்தப் பயமே எங்க மேல கண்டிப்புக் காட்டி வளக்கணும்ன்னு தோணியிருக்கும். அவர் நினைச்ச மாதிரியோ என்னவோ அக்கா எங்க சொந்தக்காரங்களில் ஒருத்தரையே கட்டிக் கிட்டு நார்த் ஈஸ்ட் பக்கம் போய்ட்டா. அது அண்ணனுக்குத் தெரியும். அதிலிருந்து அப்பா, “நீயும் அந்த ஓடுகாலி மாதிரித்தானே போகப் போறேன்னே சொல்லிக்கிட்டு இருப்பாரு. ஏன் அடிக்கக்கூட செய்வாரு.“ என்ற மேடம், “சின்ன வயசில்..” என்று சேர்த்துக்கொண்டார்.
`என்னது அடிப்பாரா, பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டாரா, சின்ன வயசிலையா செண்பகா,” என்ற பழனியிடம், “நான் ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்குப் போகக் கொஞ்சம் லேட்டாயிட்டு. வகுப்புக்கே வந்துட்டாரு. அங்கே சாருடன், அவர் கேட்ட கேள்விக்குச் சிரிச்சுப் பேசிப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். யாரையும் பொருட் படுத்தாம என் இருக்கைக்குப் பக்கத்தில் வந்து கொத்தாகத் தலை முடியைப் பிடிச்சு முதுகில் ஒரு அடி. அங்கே பிடிச்ச தலை முடியை விடவே இல்லை. பிடிச்சு வீடு வரை தெருவோட இழுத்துக்கிட்டே வந்தாரு.” இதைச் சொல்லி விட்டு அமைதியாகி விட்டார். அன்று நீண்ட நேரம் அதற்குப் பிறகு பேசவே இல்லை. சொல்லக் கூடாததைச் சொல்லி விட்ட மாதிரி ஒரு அமைதிக்குள் போய் விட்டார். வழக்கமாகச் சாப்பிட்டு விட்டே போகச் சொல்லுபவர், அன்று சாப்பிடவும் சொல்லவில்லை. பொதுவாக அவர் வீட்டில் இருக்கையில் மாலையில் விளக்கு வைத்த பின் சாப்பிட மாட்டார். அப்பா பழக்கம். வெளியே சென்றாலும் அதே பழக்கத்தைக் கூடிய மட்டும் கைக் கொள்ளுவார். ஆனால் வீட்டுக்கு வந்தவர்களுக்கு எந்நேரமானாலும் ஏதாவது சாப்பிடத் தருவார். அன்று அவரது அசாதாரண அமைதியைப் பார்த்து அவர் வாசித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து, “நான் படிச்சிட்டுத் தரட்டுமா,” என்று எடுத்துக்கொண்டு கிளம்பினான். தலையை மட்டும் அசைத்தார்.
பதவி உயர்வு காரணமாக பெங்களூர் போனார். அவ்வப்போது இந்தப் பக்கமாக வரும் போது அவசியம் பழனியை வீட்டில் வந்து சந்திக்காமல் போக மாட்டார். “பழைய அலுவலகம் போல இல்லை வேலை நிறைய இருக்கிறது. படிக்கவே முடியவில்லை, வேலையை விட்டு விடலாம் என்றால் அப்பா மறுக்கிறார். உங்களுக்குத்தான் தெரியுமே அப்பாவைத் தாண்ட முடியாது என்னால்,” என்று என ஒரு கடிதம் எழுதினார். அவ்வப்போது வரும் பெரும்பாலான கடிதங்களில் இதுதான் மையமாக இருக்கும்.
“பதவி உயர்வை மறுத்து விடுங்கள் என்று நீங்கள் சொன்ன போது நான் கேட்கவில்லை, இப்போது தவிக்கிறேன், இந்தப் புத்தகங்களை எல்லாம் எப்படிக் காப்பாற்றப் போகிறேன் தெரியவில்லை, படித்து முடித்துவிட்டாலாவது யாரிடமாவது கொடுத்து விடலாம்”, என்று எழுதியிருந்ததுதான் கடைசிக் கடிதம். அவ்வளவு ஜாக்கிரதையாகப் புத்தகங்களையும் அதற்காகச் செய்த அலமாரிகளையும் பெங்களூருக்கு அனுப்ப அவர் எடுத்துக்கொண்ட பிரயாசையைச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. பழனிக்குக் கூட லேசான சபலம், இதையெல்லாம் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டுமா, தன்னிடம் கொஞ்சத்தைக் கொடுக்கலாமே என்று. ஆனால் அப்படியெல்லாம் புத்தகங்களைப் பிரிந்து விடுகிற ஆள் இல்லை செண்பகா மேடம். இப்போது இப்படிக் கடிதம் எழுதுகிறார்கள்.
பழனி அந்தக் கடிதம் பார்த்ததுமே பெங்களூர் போகலாம் என்று கூட நினைத்தான். இவ்வளவு தவிப்பைக் காட்டிக் கொள்கிறவரோ அதை எழுதுகிறவரோ இல்லவே இல்லை செண்பகா மேடம். தன்னை மீறி எதுவும் நடக்காது என்பதிலும் நம்பிக்கை உள்ளவர். பழனிக்கே பல முறை அப்படி அறிவுரைகள் சொல்லுகிறவர். அறிவுரைகள் சொல்லுவதில்கூட ஒரு தோழமையான அன்பு இருக்கும். பழனியை விடப் பத்து வயதாவது மூத்தவர் செண்பகா. ஆனால் அப்படி ஒரு உயரமான இடத்திலிருந்து சொல்கிறவர் போலப் பேச மாட்டார். அவர் அப்படி ஏதாவது சொல்லி முடித்ததும் `ஆமா அப்படிச் செய்யலாமே, இப்படியும் யோசிக்கலாமே’, என்று பழனிக்குத் தோன்ற ஆரம்பிக்கும்.
அடைத்துக் கிடக்கும் கேட் முன்னால் நின்று கூப்பிட்டால் பத்துப் பன்னிரண்டு அடி தள்ளிக் கேட்குமா என்று சொல்ல முடியாது. வீடு இதுதான் என்பது மனதிற்குள் உறுதியாகி விட்டது. ஜன்னல்களுக்குப் பழைய சேலைகளைத் திரை மாதிரி, தானே கையால் தைத்துப் போடுகிறவர் செண்பகா மேடம். இங்கேயும் அப்படிப் போட்டிருக்கிறது. அதுவும் செண்பகா மேடம் விரும்பி எடுக்கிற உடலில் டிசைன் போடாத பார்டர் மட்டுமே வைத்த சேலைகள். துணிந்து கேட்டைத் திறந்துகொண்டு போய் வீட்டு அழிக்கதவைத் தட்டினான். மேடம் என்று அழைத்தான். பின்னாலேயே கறுப்பு நாயும் வந்து விட்டது போலும். மெதுவாகக் குரைத்தது.
பழனி கூப்பிட்டதா, நாய் அழைத்ததா எது கேட்டது என்று தெரியவில்லை, மேடம் கதவைத் திறந்தார்கள். அவர்கள் எதுவும் பேசும் முன்பே, “நான் பழனி, அடையாளம் தெரிகிறதா,”என்றான். “வாங்க வாங்க, எப்படிக் கண்டுபிடிச்சீங்க இங்கே இருக்கேன்னு” என்று கலகலவென்று பேச்சைத் துவக்கினார்கள். பேச்சின் கலகலப்பு வழக்கமான அன்பின் வெளிப்பாடாக இருந்ததே தவிர ஆள் தெளிச்சியாக இல்லை. இது வயதின் தளர்வு மட்டும் இல்லை, ஏற்கனவே அவன் லேசாகக் கேள்விப்பட்டிருந்த நோயின் பாதிப்பாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கு இப்போதெல்லாம் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளனவே. வழக்கம் போல, அவனது கலவரமான முகத்தைப் படித்துவிட்டார்கள் செண்பகா மேடம். “இருங்க, உங்களுக்குப் பிடித்தமான டீ போடறேன். ஏதாவது சாப்பாடும் தயாரிக்கறேனே,” என்றார். “சாப்பாடெல்லாம் வேண்டாம்,” என்றான். “சரி, முதல்ல டீ.” என்று அடுப்படிக்குள் போனார்கள்.
பழைய காலத்து வீடு. அடுப்படி உள்ளடங்கி இருந்தது. முன்பு டவுனில் இருந்த வீட்டில் ஹாலில் இருந்தே கிச்சன் நன்கு தெரியும், பேசிக்கொண்டே, சாம்பார் , ரசம், இரண்டு தொடுகறி, பாயாசம், அப்பளம் என்று ஒரு ராஜ சமையலை முடித்து விடுவார்கள். அவர்கள் வைக்கிற ரசத்திற்குப் பழனியின் மனைவி வேலம்மாள் அடிமை. “மேடம் எனக்கு ரசமே வைக்கத் தெரியலைன்னு இவங்க பெரிய ஆவலாதி சொல்லுவாங்க, அதுக்கு ஏத்தாப்பில நீங்க அருமையா ரசம் வைக்கறீங்க,” என்று அநேக சமயங்களில் சொல்லுவாள். “நீங்களும்தான் ரசம் அருமையா வைக்கறீங்க, நான் உங்க வீட்ல சாப்பிட்டிருக்கேனே வேல்ஸ்,” என்பார் செண்பகா. வேலம்மாளை வேல்ஸ் என்றுதான் மேடம் கூப்பிடுவார்கள்.
டீ வரத் தாமதமானது. `மேடம் நாம் சொன்னதைக் கேட்காமலே சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டார்களோ, பெருமாள் சார் வேறு தாகத்தோடு காத்திருப்பாரே,’ என்று நினைத்தான். வீட்டைச் சுற்றி நோட்டமிட்டான். ஒரு புத்தகமோ அலமாரியோ கூடக் கண்ணில் படவில்லை. டீப்பாய் போலக் கிடந்த அகல ஸ்டூலில் ஒரு பத்திரிகைச் கூடக் காணோம். பழனி சொல்லி எத்தனை பத்திரிகைக்கு சந்தா கட்டியிருப்பார்கள். வீடு காகித வாசனையே இல்லாதது போல இருந்தது. யாருக்காவது அல்லது எந்த நூலகத்துக்காவது எல்லாவற்றையும் கொடுத்திருப்பார்களோ. நாம், சீக்கிரமே வந்திருக்கலாமோ என்று நினைக்க ஆரம்பித்தபோது, டீயுடன் வந்தார்கள்.
“பாத்திரங்கள் தயாராக இல்லை, கழுவி டீ போட்டு எடுத்து வர நேரமாயிட்டு, மன்னிச்சுக்குங்க” என்றார்கள். பொதுவாக நன்றி, மன்னிப்பு எல்லாம் சொல்ல மாட்டார்கள் நல்ல நட்பில் அதற்கெல்லாம் இடமில்லை என்று சொல்லக் கூடியவர். “சொல்லுங்க பழனி, வேல்ஸ் எப்படி இருக்காங்க, பையன் பொண்ணு எல்லாம் எப்படி இருக்காங்க, பெருசா வளந்திருப்பாங்களே,” குசல விசாரிப்புடனும் தனக்கும் ஒரு டீயுடனும் உட்கார்ந்தார்கள்.
பழனி இன்னும் வீட்டை நோட்டமிடுவதை நிறுத்தவில்லை. “என்ன பாக்கறீங்க, காற்று வரலையா ஃபேனைக் கூட்டி வைக்கட்டா.” வேண்டாம் என்கிற மாதிரித் தலையை ஆட்டிவிட்டு அவனே எதிர்பாராத ஒரு நொடியில் கேட்டான்,“புக்ஸ் எல்லாம் எங்கே வச்சிருக்கீங்க, உள்ளே இரண்டாம் கட்டில் இருக்கா.” மேடம் பதில் ஒன்றும் சொல்லாமல் நிறையக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பது போல ஒரு முகத்துடன் இருந்தார்கள். எப்போதும் கலகலவென்று பேசிக் கொண்டிருக்கும் இருவருமே எதிர் பாராத ஒரு மௌனத்துள் இருந்தார்கள். ஏதோ நினைத்துக்கொண்டவன் போல, “அப்பா,” என்றான்.
மேடம், குளிர்ந்து போய்விட்ட மிச்ச டீயை ஒரே மடக்கில் குடித்து விட்டு,“அவரும் எரிஞ்சு போய்ட்டாரு புஸ்தகங்கள் கடிதங்கள் எல்லாத்தையும் எரிச்சிட்டாரு” என்றார்கள் உயிரற்ற குரலில். இப்படிப் பேசுகிற ஆளே இல்லை செண்பகா மேடம்.
பழனி உறைந்து போய் அமர்ந்திருந்தான். “நிறைய நடந்து போச்சு, பழனி. அவரது சந்தேகம் தீரவே இல்லை. திடீரென்று பெங்களூர் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை விட்டு விலகி விட்டதாக நினைத்திருந்தபோது அவர் வந்தது குறித்து நான் உண்மையாகவே சந்தோஷப்பட்டேன். இருந்த நாட்களில் என்னிடம் பெரிதாகப் பேசவில்லையென்றாலும் நான் செய்வதை விரும்பிச் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தார். ஆனால் நான் வேலைக்குப் போயிருந்த போது என்னுடைய கடிதங்களையெல்லாம் வாசித்திருக்கிறார். பூட்டி வைத்தாலும் ஏதாவது கேள்வி கேட்பார் என்று எதையும் பூட்டுவதில்லை. அவர் ஆறு மணிக்கப்புறம் சாப்பிடமாட்டார் என்பதால் அவசரமாக ஆபீஸிலிருந்து வந்து விடுவேன். ஒருநாள் வந்ததும் வராததுமாய் உலகநாதன் சாரைக் குற்றவாளியாக்குகிற மாதிரித் தாறுமாறான கேள்விகள் கேட்டார். அவன் என்ன வேணும்ன்னாலும் எழுதுவானா உனக்கு என்றார். எத்தனை லெட்டர் போட்ருக்கான், அவன் சொல்லற புஸ்தகமெல்லாம் படிக்கிற மாதிரியா இருக்கு, `செகண்ட் செக்ஸ்’ பேரே சரியில்லையே என்றார்.”
“நான் ஒன்றுமே பேசவில்லை. கண்ணீருடன் இல்லை இல்லை என்று மட்டும் தலையாட்டினேன். ஒருவேளை வாய் திறந்தே சொன்னேனா அது கூட நினைவில்லை. நேரம் ஆகிவிட்டதென்று சாப்பிடாமலே அவர் அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டார். மறுநாள் அலுவலகத்திற்கு அவசரமாக ஃபோன் வந்தது, வீட்டிலிருந்து புகையாக வருவதாக. பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தோம். பக்கத்து வீட்டுக்கார்கள் அணைக்க முயன்று கொண்டிருந்தார்கள். நடு ஹாலில் பாதி எரிந்து கருகிப் போன சேலைக்குவியல்கள், புத்தகங்கள், கடிதங்கள். அவரை வீட்டில் காணவில்லை. அவமானத்தில் குறுகிப் போனேன். அலுவலகத்திற்குப் பெரிய விடுப்பாகப் போட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தேன். என்னைத் தேடி வந்த அவர் அமைதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். பக்கத்து வீடுகளிலெல்லாம் போய் என்னைப் பற்றி, யாரெல்லாம் வருவாங்க என்பது பற்றி எல்லாம் விசாரித்திருக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவராகச் சொன்னார்கள். அதைக் கேட்க கேட்க, ஒரு பாதாளத்துக்குள் விழுவது போலிருக்கும். யோசித்து யோசித்துத் தலைவலி போல வந்துவிட்டது.”
“சக ஆபீஸர் ஒருவர் சைக்கியாட்ரிஸ்டிடம் அழைத்துப் போனாரோ கொஞ்சம் பிழைத்தேனோ… எப்படியோ கழித்தேன்… எல்லாவற்றையும் எனக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு யாரிடம் சொல்லியும் பழக்கமில்லையே. இப்போ இந்த வியாதி கொஞ்சங்கொஞ்சமாய் தின்று கொண்டிருக்கிறது. நான்காவது ஸ்டேஜாம். கடைசியாய் அண்ணனிடம் சொன்னாராம் யாராவது இந்த வீட்டில் போய் இருக்க வேண்டும் என்று. அண்ணன் என்னைப் போகச் சொல்லவில்லை என்றாலும் நான் இங்கே இருக்கலாமென்று வந்திருக்கிறேன். அவர் இறந்ததற்கு நான் போகவில்லை, ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை ஆனால் அதற்காக வருந்தாத நாளுமில்லை. அதற்காவே இங்கே வந்தேனோ என்னவோ.” துண்டு துண்டாக அவர்கள் பேசும் விதமும் தொனியும் `பேசுவதற்கு என்ன இருக்கிறது,’ என்று சொல்லாமல் சொன்னது போலிருந்தது.
கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துவிட்டார்கள் என்று தோன்றியதும், “இங்கே என்ன மருத்துவ வசதி இருக்கிறதென்று இங்கே இருக்கிறீர்கள்,” என்றான் பழனி. பட்டென்று வந்தது பதில்.“எங்கேதான் என்ன இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் பழனி, இங்கே வார்த்தைகள் குறைவான மனிதர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் நலம் விசாரிக்கிற வார்த்தைகள். இழப்புக்கு ஆறுதல் சொல்லுகிற நாலு நல்ல வார்த்தைகள். இல்லையென்றால் தங்கள் தங்கள் தொழில் சார்ந்த வார்த்தைகள். அவை போதும் என்றிருக்கிறது எனக்கு. எதற்கு எந்தெந்தப் புத்தகங்களோ படித்து புதிது புதிதாய் வார்த்தைகள் சேர்த்துக்கொண்டு, ஆனால் ஒருவரிடம் எதையாவது வெளிப்படுத்த அந்த வார்த்தைகள் கை கொடுக்காமல் சிரமப்பட்டுக்கொண்டு. அப்பாவைக் குறித்து இந்த ஊரில் நல்ல பெயரே இருக்கிறது. இப்படி நல்ல பெயரெடுத்தவரைப் பற்றி நாம், ’ஆமா அவர் நல்ல மனுஷனாச்சே,’ என்று ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு மறந்து விடுவதுதானே வழக்கம். அதிக நேரம் நினைத்து, பேசிக் கொண்டிருப்பதில்லையே நாம். அந்த வகையில் எனக்கு அவர் நல்லது செய்திருப்பதாகவே படுகிறது. அண்ணன் கூப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். எனக்கு உடலுக்கு முடியாது என்று வருகிற போது அங்கே அவனுடன் இருக்கச் சென்னைக்குப் போய் விடுவேன்.”
ஒரு நீண்ட பேச்சு, தொடர்ந்து நீண்ட மௌனம், லேசான பசி அவர்களுக்கும் பசிக்கலாம் என்ற எண்ணம், பழனியை விடை பெற வைத்தது. இன்னொரு நாள் சற்று சாவகாசமாக மனைவியுடன் வருகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினான். வெறுமனே தலையை ஆட்டி விடை கொடுத்தார்கள் செண்பகா மேடம்.
பெருமாள் சார் காத்துக் கொண்டு இருந்தார். “சாரி சார் லேட் ஆயிட்டு” என்றான். “இல்லை நான் சாப்பிடக் கிளம்பலாமா… என்று நினைத்தேன், போகலாமா,” என்றார். கொஞ்சம் ஏமாற்றமும் தனிமையும் தொனித்தது குரலில். சொன்ன நேரத்துக்கு வந்திருந்தால் வேறு எதாவது சாப்பிட்டிருக்கலாம். இப்போது முடியாது. மனதும் இல்லை. அவர் தங்கியிருந்த விடுதியிலேயே நல்ல ஓட்டல் இருந்தது. அங்கேயே சாப்பிட்டு விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். பழனி இன்னும் செண்பகா மேடம் வீட்டிலிருந்து முற்றாக வெளி வரவில்லை. அதைப் பெருமாள் உணர்ந்து கொண்டு விட்டார். அவருக்கும் செண்பகா மேடம் பற்றித்தெரியும். அவரே கேட்டார், “அந்த மேடம் எப்படி இருக்கிறார்.” பழனி, தான் போய் வந்த கதையையும் அவர் பட்ட சங்கடங்களையும் சொன்னான். உலகநாதன் சார் மாதிரி ஒரு லெஜண்ட் அப்படியெல்லாம் கடிதம் எழுதுவாரா, நம்ப முடியவில்லை” என்றான் பழனி.
அவர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை ஆழமாக உறிஞ்சிவிட்டு,“ஏன், அதெல்லாம் எழுதுவார்” என்ற பெருமாள் சார், “காமத்துக்கு ஆசைன்னு ஒரு கௌவரமான பேர் வச்சுக்கும் மனசு. தவறுகளை அந்தந்த நேரத்து நியாயம்ன்னு கூட மனசு நினைச்சுக்கும். சபலம் இயற்கைன்னு கூட விவாதிக்கும். சபலம்ங்கிறது நம்ம மத்தியில் புரையோடிப் போன ஒரு விஷயம்தான். நம்மை மாதிரி ஆளுங்க வேண்டுமானால் உளறிக் கொட்டுவோம். அவர் அழுத்தமான ஆள், நாசூக்கா கடிதம் எழுதியிருக்கார். செக்ஸ் ஒர்க்கரை நாடுகிற எத்தனை பேர் மனைவிக்கு உடல் சரியில்லைன்னு பொய் சொல்லாம இருக்கறோம். ஆண்களுக்கு இருக்கற சுதந்திரத்துக்கு அளவே இல்லை. ஆனா எல்லாத்தயும் உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டுக் கஷ்டப்படறது எதிர்பால்தான். அதனாலதான் சில அப்பாக்கள் செய்யற அநியாயங்களுக்கும் பெண்கள் ஆளாகறாங்க.”
“எனக்குத் தெரிஞ்சு அவரோட அத்தியந்த சீடர்களே சொல்லறதை வச்சுப் பார்த்தா அவரு அப்படிக் கடிதம் எழுதியிருக்கக் கூடியவர்தான். இதுக்கெல்லாம் சாட்சியா இருக்கற துர்பாக்கியம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்ன்னு நானுமே நினைக்கிறேன். வாங்க ஒரு காஃபி சாப்பிட்டுட்டு சிகரெட் வாங்கிட்டு வரலாம்.” பதிலுக்குக் காத்திராமல் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெருமாள் சார்.