உலக வெளியில் வரலாறு எப்படிப்  கட்டமைக்கப்படுகிறது? கட்டமைக்கப்பட்டது பரவலாக்கம் செய்யப்படுகிறது மற்றும் இயங்குகிறது என்பதில் கதையாடல்களுக்கும் (Narratives) தொன்மங்களுக்கும் (Myth) குறிப்பிடத்தகுந்த பங்கு இருக்கிறது. பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகங்களில் குறிப்பிட்ட கால அளவில் நிலவும் கதையாடல்களே வரலாற்றை தீர்மானிக்கின்றன. இது தொடர்ச்சியாக நிலவும் சூழலில் குறிப்பிட்ட சமூகங்களில் பல அவதாரங்கள் மற்றும் உருமாற்றங்கள் அடைந்து  குறிப்பிட்ட கால அளவில்  தொன்மமாக (Myth) நிலைகொள்கிறது. இது கிரேக்கம், ரோம், எகிப்து, இந்தியா, மெசபடோமியா, அசிரியா என பலவாறாக விரிந்துகொண்டே செல்கிறது. உலகின் 5000 ஆண்டு வரலாற்றை நோக்கிப் பின்னகர்ந்தால் அதில் தொன்மங்களில் பங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் உலகின் முதல் வரலாற்றாசிரியராக அறியப்படும் கிரேக்க அறிஞர் ஹெரோடடஸ் தன் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொன்மங்களின் வழியாகத்தான் தொடங்குகிறார்.

ஹிரோடடஸின் வரலாற்றுத் தொடக்கம் கிரேக்க நாட்டில் ஓர் அரசன் அரசி பற்றியதாக இருந்தது. கிரேக்க நாட்டில் பேராசை பிடித்த அரசன் ஒருவன் தன் மனைவியின் அழகு பற்றிய உயர்வெண்ணம் கொண்டிருந்தான். அதனைத் தன் பணியாள் மூலம் உலகிற்கு விளம்பரப்படுத்தவும் செய்தான். அதை குறித்தே எப்போதும் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். இதன் தொடர்ச்சியில் அரசன் மனைவியின் அழகை நேரில் காண முடிவு செய்த அவனின் பணியாள்  ஒரு தடவை அரசன் மனைவி குளிக்கும் போது நேரில் பார்த்து விட்டு அவளின் அழகைக் கண்டு ரசித்தான். இதனைக் கவனித்த அரசன் மனைவி அவனைக் கண்டித்ததோடு அவனின் முன்பாக இரு நிபந்தனைகளை விதித்தாள். ஒன்று இதை நான் அரசனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதன் மூலம் நீ மரணிக்க நேரிடும். இல்லையென்றால் அரசனைக் கொன்று விட்டு என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீண்ட யோசனைக்குப் பின்பு இரண்டாவது நிபந்தனையை ஒத்துக்கொண்ட பணியாள், அதன்படியே அரசனைக் கொன்றுவிட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டான். மேற்கண்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு வரலாற்றைத் தொடங்கும் ஹிரோடடஸ் உலகம் பெரும்பாலும் மன்னர்கள் பற்றிய வரலாற்றில்தான் தொடக்கம் கொள்கிறது என்றார். இதன் தொடர்ச்சியில்தான் நாம் வரலாற்றில் தொன்மங்கள், கதையாடல்கள் செலுத்தும் தாக்கம் குறித்து விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது.

தொன்மங்களின் மூலத்தை நாம் ஆராயும்போது அது மனித ஆழ்மன நம்பிக்கையில் இருந்துதான் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காலத்தின் இருப்பிலும் மனித மனங்களின் எழும் கேள்விகளின் விளைவாக உருவானவையே தொன்மங்கள். ஆரம்ப கால மனிதர்களின் வரலாற்று தேடல் உணர்வும், தங்களின் உருவாக்கம் பற்றிய கேள்விகளும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொன்மங்களையும் அது சார்ந்த கதையாடல்களையும் உருவாக்கின. உலகின் முதல் தொன்ம உருவாக்க பிரதேசம் என்பது கிரேக்கமே. அங்குதான் முதன் முதலாகத் தொன்மம் சார்ந்த பல கடவுளர்கள் உருவானார்கள். அதே நேரத்தில் இந்தியாவிலும் கடவுள் பற்றிய கருத்தாக்கம் உருவாகிவிட்டதாக உறுதியற்ற தகவல்கள் இருக்கின்றன. கிரேக்கத்தை பொறுத்தவரை வீனஸ், டாலமி, கிரேமி போன்ற கடவுள்கள் உலக உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியானார்கள். இதன் தொடர்ச்சியில் வானம், சூரியன், விண்மீன்கள், இடி, மின்னல் போன்றவை குறித்த சுவாரசியம் மிகுந்த, குவியமிக்க குறிப்புகள் இருக்கின்றன. அதில் ஒரு கடவுள் ஒருதடவை தன் பரிவாரங்களுடன் காடுகளில் பயணம் செய்வார். அப்போது மின்னலடிக்கும். இது ஏன் வருகிறது என்று அந்தக் கூட்டத்தில் உள்ளவர் சம்பந்தப்பட்ட கடவுளிடம் கேட்பார். அதற்கு அவர்  வானுலகில் தேவதைகள் ஒளி விளையாட்டு விளையாடுகிறார்கள். அந்த ஒளியானது பூமியில் மின்னலாக மாறுகிறது என்பார். அந்தத் தருணத்தில் இடி இடிக்கும். இது ஏன்  ஏற்படுகிறது என்பார்? அதற்கு அவர் தேவதைகள் அங்குப் பந்துகளை எறிந்து விளையாடுகிறார்கள் அதன் காரணமாக ஏற்படும் பெருஞ்சத்தம் இங்கு இடியாக வெளிப்படுகிறது என்பார்.  வானில் ஏன் நட்சத்திரங்கள் தெரிகின்றன என்று கேட்பார் அதற்கு  தேவதைகளின் உடலில் உள்ள ஒளியின் பிரதிபலிப்பு நட்சத்திரமாகத் தெரிகிறது என்று அந்தக் குறிப்பிட்ட கடவுள் பதிலளிப்பார். இப்படியான ஏராளமான தொன்மங்கள் பண்டைய கிரேக்க கதைகளில் நிறைந்து கிடக்கின்றன. இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்பது தொன்மங்கள் முழுக்க விரவிக்கிடந்த கிரேக்கத்தில் இருந்துதான் உலகின் முதல் வரலாற்றாசிரியர் ஹிரோடடச் உருவானார். வரலாற்றில் முரண்கள் நிறைந்த பிரதேசங்களில் இருந்துதான் மற்றொரு முரண் உருவாகும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நகர்ந்த மனித வரலாற்றில் தொன்மங்கள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இதன் மூல ஊற்று என்பது கிரேக்கம் தான். கிரேக்க வரலாற்றில் தொன்மங்கள், கதைகள் அதிகமாகவே நிரம்பி இருக்கின்றன. இதற்கு அடுத்தப்படியாக ரோம், எகிப்து, மெசபடோமியா இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் கிரேக்கத்தில் இருந்து உருவான தொன்மங்களின் பரிணாமம்தான் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசியஸ். இந்தத் தொன்மக் கதையாடல்களில் குவியமான ஒன்று என்பது புகழ்பெற்ற டிரோஜன் போர்.  இது கி.மு 12 முதல் 13 காலகட்டத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்டுகிறது. அதாவது மேற்கு அனதோலாவின் டிரோய் மன்னரான பிரியத்தின் மகன் பாரிசிற்கும் கிரேக்க மன்னன் மெனலஸ்க்கும் இடையே தனிப்பட்ட உள்விவகாரம்  காரணமாக ஏற்பட்ட போராகும். பிரியத்திற்கு அழகான மனைவியும், சில அந்தரங்க மனைவிகளும், 50 மகன் மற்றும் 12 மகள்கள் இருந்தனர். இதில் ஒரு மகனான  பாரிஸ் கிரேக்க மன்னன் மெனலஸின் மனைவி  ஹெலனைக்  கவர்ந்து சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட போராகும். இந்த நிகழ்வின் தொடர்ச்சி சார்ந்து மற்றொரு கதையும் கூறப்படுகிறது. அதாவது பாரிஸ் கிரேக்க கடவுளான அப்ரோடைட் மற்றும் ஏதனா ஆகியோரின் அழைப்பின் பெயரில் வந்தார், அப்போது அவர்கள் பாரிஸிற்கு அழகான பெண் ஒருத்தியைப் பரிசாக அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதன் தொடர்ச்சியில் அவர்கள் மன்னர் மெனலஸின் மனைவியான ஹெலனை அளித்ததாக சொல்லப்படுகிறது கிரேக்க தொன்மங்களின் அடிப்படையில் இது சுமார் பத்தாண்டுகள் நீண்டது. இறுதியில் டிரோயிடமிருந்து தன் மனைவி ஹெலனை மீட்டார் மெலனஸ். இதனைக் கிரேக்க எழுத்தாளரான ஹோமர் தொடங்கி, ஹெரோடடஸ் வரை குறிப்பிடுகின்றனர். உலகத் தொன்மவியல் வரலாற்றில் டிரோஜன் போர் அதீத வரலாற்று கவனத்திற்கும் , மிகுந்த உளவியல் ஈர்ப்பிற்கும் மாறி இருக்கிறது. வரலாற்று தேடல் மிகுந்த அனைவருமே டிரோஜன் யுத்தத்தை ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகப் பார்க்கின்றனர். இதுதான் அதன் தொடர்ச்சியான கவன ஈர்ப்பிற்குக் காரணமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேற்குத் துருக்கியில் டிரோய் மன்னர் ஆண்ட நிலப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன் சகோதரன் அகமெம்னென் துணையுடன் தன் மனைவியை மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மீட்டான். இறுதியில் மீட்டதற்கான நன்றிக் கடனாக தன் பிரதான கடவுளான அப்போலோவிற்குக் கோயில் கட்டினான் மெனலஸ்.

கிரேக்கத்திற்கு அடுத்தப்படியான குறிப்பிடத்தகுந்த தொன்மங்கள் நிறைந்ததாக இந்தியா இருக்கிறது. இங்கு நான்கு வேதங்கள் உருவான போதே தொன்மங்களும் உருவாகிவிட்டன. வேதங்களை உருவாக்கியவர் மற்றும் தொகுத்தவர் குறித்த தெளிவான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. மேலும் வேதங்களை உருவாக்கியவர்கள் ரிஷிகள் என்ற வகையில் ரிஷி மூலம் அறியப்படாத ஒன்று என்ற கதையாடல் உருவாக்கப்பட்டது. வேத காலங்களில் அல்லது ஆரியர் வருகைக்குப் பின்பு இங்கு புதிதாகக் கடவுள்கள் உருவாக்கப்பட்டனர். அந்தக் கடவுள்களின் உருவாக்கம் பற்றிய கதைகள்  உலகின் பிற தொன்மங்களை ஒத்திருக்கின்றன.  நாடோடி ஆடு மேய்ப்பர்களான ஆரியர்கள் புயல் காற்றைக் கண்டு பயந்து அது தங்களை மீறிய சக்தி ஒன்றன் உள்ளியக்கம் காரணமாக ஏற்படுகிறது என்று நம்பினர். இதன் தொடர்ச்சியில் உருவான கடவுள்தான் வாயு, இது அரேபிய சமூகத்தில் அல் குவ்ம் ஆகவும், எகிப்தில் மெக்மத் ஆகவும், கிரேக்கத்தில் அனிமோய் ஆகவும் அறியப்படுகிறது. மேலும்  உலகின் பல தொன்மக் கதைகளில் சிங்கத்தின் தலையும் மனித உடலும் இணைந்த உருவங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இது நரசிம்மம் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறாக மிருகங்களோடு மனித உருவங்களை இணைத்துக்  கடவுள்களைப் பிரதிபிம்பம் செய்யும் முறை உலகம் முழுக்கவே வழக்கத்தில் இருக்கிறது. இன்றைய சூழலில் இந்தியாவைப் பொறுத்தவரை இந்தப் பிரதிபிம்பம் மத வன்முறை அரசியலாக உருமாறி இருப்பது மாபெரும் வரலாற்று அபத்தம்.

வரலாற்றில் தொன்மங்களின் உருவாக்கத்தில் மனித எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு இருக்கிறது. மனித எண்ணங்களின் அடிப்படையில் ஈர்ப்பு விதி உருவாகி அதன் மீதான அதீத நம்பிக்கை ஏற்பட்டது. அதாவது நம் எண்ணங்கள் நல்லதாகவோ அல்லது தீயதாகவோ, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தால் அதன் விளைவுகள் அதன் அடிப்படையில்தான் இருக்கும் என்பது அக்கால நம்பிக்கையாக இருந்தது. இப்போதும் அதன் எச்சங்கள் நிலவுகின்றன. ‘’எண்ணம் போல் வாழ்வு”, ‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது”. என்ற தமிழ் வழக்காறுகளின் உருவாக்கம் இதன் தொடர்ச்சியே. ஆனால் மனிதச் சிந்தனையை பொறுத்தவரை ஒருவரின் எண்ணம் அல்லது உட்கிடக்கை என்பது  புறச்சூழலை முழுமையாக்க் கட்டுப்படுத்தாது என்பதுதான் அறிவியல் அடிப்படையாக இருக்கிறது. காரணம் ஒருவரின் எண்ணம் அல்லது ஒன்றின் மீதான ஆர்வம் என்பது நிறைவேறவோ அல்லது நிறைவேறாமல் போகவோ செய்யலாம்.  அது நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளைக்கூட ஏற்படுத்தலாம். உதாரணமாக உளவியல் நெருக்கடியின் உச்சம் மனிதனைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது. ஆனால் அது எல்லா தருணங்களிலும் நிறைவேறுவதில்லை. சில தருணங்களில் அது கடைசி தருணத்தில் தப்பிவிடுகிறது. மேலும் குறி தவறும் துப்பாக்கிக்குண்டுகள், இலக்கு தவறும் பந்துகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை எல்லாம் குறி பார்த்து, இலக்கு பார்த்துதான் முன்கூட்டியே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அது எப்போதும் நிறைவேறுவதில்லை. இம்மாதியான மனித நடவடிக்கைகள் சார்ந்த நிறைய உதாரணங்களை நாம் குறிப்பிட முடியும். இதன் அடிப்படையில் மனிதனை மீறிய இயற்கைச் சூழலை அல்லது தன் புறவயத்தை மனிதனின் எண்ணங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.  ஆகத் தொன்மங்களின் உருவாக்கத்தில் இந்த ஈர்ப்பு விதி (Law of Attraction) அதிகமாகவே வேலைசெய்து முந்தைய காலங்களில் சமூக மட்டத்தில் பல தொன்மங்களை உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக மனித அகவய அல்லது இயற்கையின் ஒவ்வொரு நடவடிக்கை சார்ந்தும் பல கடவுள்கள் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இந்த ஈர்ப்பு விதி இருக்கிறது. மழை, காற்று, வெய்யில், நெருப்பு, இடி, மின்னல், கடல்,  காடு, சமவெளி போன்ற பல இயற்கை வகைபாடுகளுக்கும், நோய், துன்பம், துயரம், மகிழ்ச்சி, தனிப்பட்ட தேவை போன்ற மனித அகவயக் கூறுகளுக்கும் பல கடவுள்கள் உருவாகி இருக்கிறார்கள். இதில் கிரேக்கம்தான் அதிகம். அதற்கு அடுத்தப்படியாக இந்தியா இருக்கிறது.

தொன்மங்களின் உருவாக்கத்தில் கனவுகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக மனிதன் கனவை உண்மையென நம்பும் இடத்தில்தான் இது ஆரம்பம் ஆகிறது. அதாவது ஒருநாளில் சராசரியாக மனிதன் சுமார் ஐந்து கனவுகளைக் காண்கிறான். இதில் குறிப்பிட்ட சதவிகித கனவுகளை அவன் விழித்தெழுந்தபோதும் உண்மையெனக் கருதி விடுகிறான். சமூக அளவில் இதன் எண்ணிக்கை அதிகமாகும்போது அந்த சமூகத்தில் அது தொன்மமாக உருவாகிவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சிறுதெய்வங்கள் குறித்த கனவுகள் இதன் வெளிப்பாடுதான். (மாரியம்மன் கனவு, மாடன் கனவு, நீத்தார் கனவு போன்றவை) கனவுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கத்தை பிராய்டு போன்றவர்கள் அளித்ததற்கு முன்பாக இம்மாதிரியான கனவு சார்ந்து உருவான தொன்மங்கள் உலகம் முழுக்க விரவிக்கிடந்தன. குறிப்பாக மதங்கள்தான் இதில் முன்னிலை வகித்தன. உலகின் பெருமதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்றவை தொன்மங்களின் அடிப்படையில் அதனை வரலாறாக உருமாற்றி அதன் அடிப்படையில் தோன்றிய மதங்கள்தான். மேலும் அவை  மற்றவற்றின் தொன்மங்களை  மறுத்துதான் உருவாயின. பிற்காலத்தில் அவை மாற்றமடையா நம்பிக்கையாகவும் மாறின. இதுதான் நவீன காலத்தில் பல சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது.

வரலாற்று உருவாக்கத்தில் கதையாடல்களின் பங்கும் கணிசமானது. பெரும்பாலும் அதிகாரச் சமூகம் மற்றும் தொடர்பு ஊடகங்கள் இவற்றால் அதிகமாக  கதையாடல்கள் உருவாக்கப்படுகின்றன. பண்டைய அதிகார சமூகங்களைப் பொறுத்தவரை மன்னர்களின் சுகபோக வாழ்வு, நாடுபிடித்தல், எதிரியை வஞ்சம் தீர்த்தல், குடிமக்களைக் கொடூரமாகக் கொல்லுதல், அநியாய வரி, பஞ்சம், பட்டினி போன்ற அனைத்து மோசமான செயல்பாடுகளுக்கும் அவருக்கு ஆதரவான கதையாடல்கள்தான் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் அது மன்னரின் சரியான, தார்மீக நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதற்கான நியாயப்பாடுகள் அரசரின் தொடர்பு ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் வரலாற்றில் ஏராளமான அநியாயக்கார மன்னர்களின் அக்கிரமங்கள் வெளியே தெரியாமல் போயின. இதன் எச்சங்களும் தொடர்ச்சியும் தான் இன்றளவும் தொடர்கின்றன. குறிப்பாக இன்றைய சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் சில தருணங்களில் கதையாடல்களாக மாற்றப்படுகின்றன. பெரும்பான்மை அடிப்படையில் ஓர் அறமற்ற, தார்மீக நெறிமுறையற்ற செயல்பாடுகள் அதற்கான உரிய நியாயங்களால் போலியாகக் கட்டமைக்கப்பட்டு சமூக வெளியில் மேலெழுந்து நிற்கின்றன. கடந்த பத்தாண்டு கால இந்தியா அதன் சாட்சியமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் தொன்மங்கள் வரலாறாக உருவாவதன் ஆபத்துகளைப் பலர் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாகக் கார்ல் மார்க்ஸ் வரலாற்றை நாம் தொன்மங்களில் இருந்து மிகவும் சலித்தெடுக்க வேண்டும் என்றார். அதன் மூலம்தான் எதார்த்த வரலாறு புலப்படும் என்றார். இது தான் சரியான அடிப்படையும்கூட. தொன்மங்களும், கதையாடல்களும் மத அரசியலாகிப் போன இன்றைய கட்டத்தில் நாம் அதன் அசல்தன்மையையும், அறிவியல் அடிப்படையையும், காலப்பொருத்தப்பாட்டையும் ஆராய்ந்து நமக்கான செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

peerzeena@gmail.com