கதவு வெளிப்புறமாகப் தாழிடப்பட்டிருந்ததைக் கண்டவுடனேயே எனக்குத் தலைக்குள், ராகவி எப்போதும் இப்படி எங்கும் போகமாட்டாளே? என்கிற வெண்கலமணி ஓங்கியொலித்தது. எங்களுடைய ஊரின் நடுவே நீதிகேட்டு நிற்கும் துடியான தெய்வமான வஞ்சியம்மன் கோவிலில், இளவட்டக் கல்லின் கனத்திற்கு இருக்கிற அந்த மணி அகாலத்தில் ஒலித்தாலே ஊருக்குள் ஏதோ இடர் உருவாகி விட்டதென உணர்ந்து கொள்வோம். அந்த ஒலியின் கனத்த சத்தத்தில் எல்லோருக்குள்ளுமே பரிதவிப்பு உருளும். அதைப் போலவான உணர்வு அப்போது எனக்குள்ளும் தன்னியல்பாகவே ஊறியது.
கீழே இறங்கிப் போய் வண்டியிலிருந்து மாற்றுச் சாவியை எடுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்து உள்ளே போனவுடன் முதலில் முகத்திலறைந்தது அலங்கோலம்தான். ராகவி இப்படியெல்லாம் வீட்டை சுத்தமின்றிப் போட்டு வைத்திருக்கக் கூடியவளும் அல்ல. கட்டிலில் போர்வைகள் மடிக்கப்படாமல், தலையணைகள் கடிகார முட்களைப் போல எதிரெதிர் திசையில் கிடந்தன. அவள் எழுந்ததுமே அவற்றை நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போலச் செப்பனிட்டு வைப்பாள். அதையொரு தவம் போலவே அவள் செய்வதைக் கண்டு, “எப்பவும் மெதப்பிலயும் சொகுசுலயுமே இருக்கற நெனைப்போ?” எனக் கிண்டல்கூட அடித்து இருக்கிறேன். தொட்டதற்கெல்லாம் எதிர்மனநிலை அப்போது எனக்குள் உருவாகியிருந்தது.
நிமிர்ந்து பார்க்காமலேயே அதை மடித்தவாறு, “அந்த நினைப்பெல்லாம் எனக்கு எப்பவோ விட்டுப் போச்சு. இருக்கற எடத்தை சுத்தமா வச்சுக்கிறதுல என்ன கிண்டல்?” எனச் சொன்னாள். வீட்டில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் சுத்தப்படுத்தி, கைகழுவுகிற இடத்தில் இருக்கிற துண்டைக்கூட தினமும் துவைத்து என அவள் எந்நேரமும் எதையாவது செய்து கொண்டே இருப்பாள். அவளுக்குக் கண்ணில் தட்டுப்படுவது பெரும்பாலும் குப்பைதான். அதைச் சுத்தப்படுத்துவாள், இல்லாவிட்டால் தேவையில்லை எனத் தூக்கி வீசிவிடுவாள்.
என்னை விட வசதி வாய்ப்பு அதிகமுள்ள குடும்பத்தில் இருந்து வந்த அவளுக்குப் பொருட்களைத் தூக்கி எறிவதில் எந்தச் சங்கடமுமே இருப்பதில்லை. கிடைக்கிற பொருளை எவ்வளவு சுகிக்க முடியுமோ அவ்வளவையும் செய்து, வீசியெறியாமல் உடன் வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்ட எனக்கு அவளுடைய செயல் விநோதமாகவே இருக்கும். மிகக் கொஞ்சமாக அழுக்குப்பட்டு விட்டது என்பதாலேயே, ஊருக்குக் கொண்டுபோகிற தோல்ப்பையையும், வாங்கி நான்கு மாதங்களே ஆன சட்டையையும் பழையதெனச் சொல்லிக் குப்பையில் தூக்கிப் போட எடுத்து வைத்திருந்தாள்.
நிறைய விஷயங்களுக்குச் சண்டை வருமென்றாலும், அதிகம் வருவது இதன்காரணமாகத்தான். “உனக்கு குப்பைன்னு தோணறது மத்தவங்களுக்கு அரிய பொருளாக்கூட இருக்கலாம். எதுக்கு எல்லாத்தையும் எடுத்து வெளீல எறியற முனைப்பிலயே இருக்க? காசு கொடுத்து எப்பன்னாலும் எதுவும் வாங்க முடியும்ங்கற நிலைமையில இருக்கவங்களோட பழக்கம் இது. எங்களை மாதிரியான ஆள்கள் இருக்கிற பொருளை அதோட கடைசி உசுரு வரை பயன்படுத்தித் தூக்கி எறியிற பழக்கமுடையவங்க. வீணான பொருளை வச்சே ஒரு வீட்டை கட்டிருவோம். எங்க மனநிலையையும் புரிஞ்சுக்கோ” என்றேன். “எல்லாருக்கும் அப்படி ஒரு காலம் இருந்திருக்கும். அதுக்காக குப்பையிலயே வாழ்வீயா? என்னால ஒரு நிமிஷம்கூட குப்பைன்னு நெனைக்கறதோட வாழவே முடியாது” என்றாள் பதிலுக்கு அவளுமே கோபமாய்.
உச்சகட்டமாக அவளைச் சீண்டும் விதத்தில், “பைத்தியங்கள்ட்ட ஒரு பொதுக்குணம் இருக்கு. அதுகதான் குப்பைத் தொட்டிக்குள்ள கைவிட்டு எதையாச்சும் கிளறிக்கிட்டே இருக்கும்ங்க. நீ அந்த லிஸ்ட்லதான் வருவ. ஆனா ஊருக்கு பாடம் எடுக்கற” என்றேன். நிமிர்ந்து பார்த்து விட்டு, “ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் உன்னை விட்டுட்டு போவேன். அன்னைக்கு யாரு பைத்தியமா திரியப்போறதுன்னு பாரு” என்றாள். அப்போது அவளிடமிருந்த தீவிரம் என் முகத்தில் அறைந்தது. அப்படியெல்லாம் போய்விடுவாள் எனக் கற்பனைகூட செய்திராததால் வந்த நடுக்கம் அது என்பதையும் உடனடியாகவே உணர்ந்தேன்.
ராகவியை என்னுடைய நண்பர்களின் கூடுகையில்தான் முதன்முதலில் சந்தித்தேன். அவளுடைய அப்பா ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தார் என்பதால், சொகுசு வண்டியில்தான் கூடுகைக்கு வந்து இறங்குவாள். நண்பர்களிடையே அவளை வளைத்துப் போட்டு விடவேண்டும் எனவொரு கண்ணோக்கம் இருந்தது. பணம் என்பதைத்தாண்டி ராகவியின் அழகுதான் முதற்காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும்.
சுருள் முடியைக் கொண்டையைப் போலத் தூக்கிக் கட்டி முழங்கால் தெரிகிற மாதிரியான குட்டைப் பாவாடையுடன், குதிகால்ச் செருப்பணிந்து அவள் நடந்து வருகையில், “அரேபியக் குதிரை தோத்திடும் போ” என முகம்தெரியாதவன் ஒருத்தன் சொன்னது எப்போதும் என்காதில் ஒலிக்கும். இரவுகளில் நடக்கும் மதுவிருந்துகளில் தவறாமல் கலந்து கொள்கிற அவளுக்கு, கொஞ்சமாய்க் குடிக்கிற பழக்கமும் உண்டு.
அந்தமாதிரிச் சமயங்களில் அவளோடு ஒட்டி உரச என்னுடைய நண்பர்கள் பலர் முயல்வதைத் தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். கிராமத்தில் இருந்து வருகிற ஒருவனுக்கு எழுகிற பொறாமையுணர்வு அப்படியான சமயங்களில் எனக்குமே எழுவதுண்டு. அதுவும் உரச முயல்கிறவர்களும் லேசுப்பட்ட ஆட்கள் கிடையாது. அவளைவிடப் பெரிய சொகுசு வண்டியில் வந்து இறங்குபவர்கள் என்பதால், அந்த நேரத்தில் எனக்குள் ஒருநடுக்கம்கூட பரவும்.
அப்படியாகப்பட்ட எவனாவது ஒருத்தனின் வலையில் எளிதில் அவள் வீழ்ந்து விடுவாள் என்பதே என்னுடைய கணிப்பாகவும் இருந்தது. பெண்களைப் புஜபலத்தோடுகூடிய பெரும்பொருளைக் காட்டி வென்று விடலாம் என்கிற ஆரம்பத்தனமான கருத்து அப்போது என்னிடமிருந்தது. அலுவலத்தில் என்னோடு வேலைபார்க்கிற ப்ரியாதான் ஓரளவிற்கு அதிலிருந்து இருந்து என்னை விடுவிக்கவும் செய்தாள்.
ஒருதடவை ராகவியோடு அவர்கள் நெருங்கிச் செல்ல முயல்வதைச் சுட்டிக் காட்டிய போது, “நீ என்ன நினைக்குற? பெண்கள் உடம்பை தொட்டவுடனேயே படுக்கைக்கு வந்திருவாங்கன்னு நெனைக்குறீயா? ஆம்பளைங்க உடம்புல இருந்து கடைசியா மனசுக்கு நகர்வாங்க. ஆனா பொம்பளைங்க மனசில இருந்து ஆரம்பிச்சு கடைசியாத்தான் உடம்புக்கு வருவாங்க. ஏன் பஸ் ஸ்டாண்டில இருக்கற மோசமான டாய்லெட்ல கூட ஆம்பளைங்க செக்ஸ் வச்சுக்க தயாரா இருப்பாங்க. ஆனா பொம்பளைங்களுக்கு அவங்க விருப்பப்பட்டவங்ககூட செக்ஸ் வச்சிக்க கூட முதல்ல பாதுகாப்பான எடம் வேணும். முதல்ல அவங்க மனசு ஒத்துழைக்கணும். அதுக்கு பெறகுதான் மத்தது எல்லாம். தொட்டவுடனேயே கரெண்ட் அடிச்சு நட்டுக்கிட்டு நிக்க அவங்கட்ட இரும்பு கம்பி ஒண்ணும் இல்லை புரிஞ்சுக்கோ” என்றாள் விலாவாரியாக.
பிரியா சொன்னதை மனதிலிருத்திப் பிறகு நிதானமாக ராகவியை மற்றவர்கள் நெருங்குகையில், அவள் வெளிப்படுத்தும் முகக்குறிகளைக் கவனித்துப் பார்த்தேன். எதிர்ப்பாலினம் நெருங்குவது குறித்த கிறக்கம் கிஞ்சித்தும் அவளது முகத்தில் தென்படவேயில்லை. மிதமான போதையில்கூட உடல்குறித்த கவனம் அவளிடம் இருந்தபடியே இருந்தது. “இப்படியே தள்ளி நின்னு பட்டிக்காட்டான் மாதிரி முட்டாய் கடையை பாத்துக்கிட்டே இருக்காத. பிடிச்சிருந்தா நெருங்கி போய் பேசு. இல்லாட்டி இப்படி அவளை பின் தொடர்ந்து போறதை நிறுத்து. இல்லாட்டி சீக்கிரம் மனநோயாளியாவே ஆயிடுவ. இப்படி ஒரு கண்ணு பின் தொடர்றது எதிர்த்தரப்புக்குமே அசௌகரியமா இருக்கும்” என்றாள் பிரியா.
அடியாழத்தில் இருக்கிற நீரூற்றை உள்ளங்கையில் தேங்காய் உருட்டி மட்டம் பார்த்துச் சொல்கிற எங்களுடைய ஊர்ச் சோதிடரைப் போல அவள் என்னைக் கண்டுபிடித்த வகையில் எனக்குமே வியப்பாக இருந்தது. “எப்டீ தெரிஞ்சது உனக்கு?” என்றேன் குதூகலக் குரலில். “நாய் எதுக்கு மோப்பம் பிடிச்சுக்கிட்டு அலையுதுன்னு பொம்பளைங்களுக்கு நல்லாவே தெரியும். அது ராகவிக்குமே நல்லா தெரியும். ஆண்டவன் மத்த விஷயங்கள்ள எப்படியோ? இந்த விஷயத்தில பொண்ணுங்களுக்கு கூர்மையான உணர்வை நல்லாவே குடுத்து அனுப்பி இருக்கார்” என்றாள். அவளிடம் இறுதியாய், “எதை வச்சு நெருங்கி வர்றதை கணிக்கிறது?” என்றேன். “தொடுகையும் முத்தமும். அதைத் தரத் தயாராயிட்டா மொத்தமா கொடுக்க போறோம்ங்கற அர்த்தம்” என்றாள்.
தொடுகையெல்லாம் இப்போது வெகுசாதாரணம் ஆனாலும், அதெப்படி எடுத்த எடுப்பில் போய் முத்தம் கொடுப்பது? அவளுடைய குதிகால்ச் செருப்பு பிய்ந்து விடும் என்பது எனக்கும் நன்றாகத் தெரிந்ததால், ஆரம்பத்தில் அவளை நெருங்குகையில் அடக்கியே வாசித்தேன். பொருளும் வேண்டும், ஆனால் அது தன்னால் வந்தடையவும் வேண்டும் என்கிற கிராமத்து நைச்சியக்காரத் தனத்துடன் செயல்பட்டேன். அப்போது எல்லாம் என்னை ராகவி நிமிர்ந்துகூடப் பார்த்தது இல்லை. சோர்வாகித் தனியாக அமர்ந்து மனதில் எந்த எண்ணவோட்டங்களும் இல்லாமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கத் துவங்கினேன். அப்பார்வையில் கோரல் ஒன்றும் இருந்தது.
ஒருதடவை அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, முதன்முறையாக என்னை நெருங்கிவந்து அமர்ந்த ராகவி, “என்ன பிரச்சினை உனக்கு?” என்றாள். “இல்லை உங்களை பிடிக்கும். அதான்” என இழுத்தேன். “அப்ப பழகிப் பாரு. எதுக்கு நேரத்தை வீணாக்கிக்கிட்டு உக்காந்திருக்க?” என்றாள் இயல்பான கிண்டலுடன். அதை அனுமதியாக எடுத்துக் கொண்டு அவளுடன் பழகத் துவங்கினேன். என்றாலும் வளர்ந்து வந்த விதத்தின் காரணமாக அவளது உடலைவிட்டு விலகியே நடந்தேன். எங்களை மாதிரியான, அக்காள் தங்கைகள், அத்தாச்சிகள் மத்தியில் வளர்ந்த ஆட்களின் அடியாழமும் அது. என்னுடைய விலகலை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்க்கவும் செய்தாள் ராகவி. அதையுமே நானும் உணர்ந்துமிருந்தேன்.
பழக்கமான அந்தக் குறுகிய காலத்தினுள் என்னைப் பற்றிய அத்தனை கதைகளையும், பேசுவதில் அலாதி விருப்பம் கொண்ட அவள் கேட்டுத் தெரிந்து கொண்டாள். மற்றவர்களைப் போலவல்லாமல் கூடுமானவரைக் கண்ணியமானவனாக அவளிடம் என்னை முன்வைத்தேன். அது நடிப்போ? அப்படி நடப்பதைத்தான் கற்றும் தந்திருக்கிறார்களோ? என்றுகூட எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் அவள் என்னை முழுமையாக நம்பத் தொடங்கி விட்டதைப் போலச் சமிக்ஞைகளைக் காண்பித்தாள். கடற்கரைக்குச் செல்கையில் அனுமதி இல்லாமலேயே இயல்பாய் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
அப்படியொருநாள் பெசண்ட்நகர் கடற்கரையில் நின்றிருந்த போது, “என்னோட அம்மா இருந்திருந்தா இந்த உறவை பத்தி வெளிப்படையா சொல்லி இருப்பேன். ஆனா எங்கப்பாட்ட எப்படிச் சொல்றதுன்னு தயக்கமா இருக்கு” என்றாள். “எந்த உறவை பத்தி?” என முட்டாள்த்தனமாக அப்போது கேட்டேன். “டேய் லூஸூ. ஒண்ணும் தெரியாத கிராமத்தானா நீயி? இல்லாட்டி அப்படி நடிக்கிறீயா? எனக்கே இப்ப குழப்பமா இருக்கு” என்றாள்.
அதற்குப் பிறகு வேகவேகமாகத் திருமணக் காரியங்கள் நடந்தன. அவளுடைய அப்பா என்னுடைய அலுவலத்திற்குத் தேடிவந்து என்னைப் பற்றி உயரதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்தார். எனக்குத் தெரியாமலேயே எங்களுடைய கிராமத்து வீட்டிற்குப் போய் விசாரித்து, நல்ல குடும்பம் என அவர் மனதளவில் முடிவுசெய்ததால் திருமணத்திற்கும் ஒத்துக் கொண்டார். அந்தச் செய்தியைக் கடத்திய அன்றைக்குத்தான் ராகவி எனக்கு முதன்முறையாக முத்தம் கொடுத்தாள். அந்த முத்தம் குறித்து மனம் விசாரணை செய்ய விரும்பிய போதும், உடலில் உருவான புதுச் சிலிர்ப்பில் அடங்கிப் போனேன், கேள்விகள் எதையும் கேட்காமல்.
எங்களுடைய பக்கத்தில் இருந்து வந்தவர்கள்தான் அவர்களுடைய வசதி வாய்ப்புகளைப் பார்த்துவிட்டு, தன்னம்பிக்கைக் குறைவால் ஒதுங்கி ஒடுங்கி அலைந்தார்கள். ஆனால் ராகவியின் சுற்றம் சகஜப்படுத்தும் நடவடிக்கைகளில் விடாப்பிடியாக இறங்கியதைக் கவனித்தேன். “அது கொஞ்ச நாள் இருக்கும். புதுசா ஒரு வீட்டுக்குள்ள நுழையுற எல்லோருக்குமே இருக்கற உணர்வை போலத்தான் அது. பழசாக பழசாக எதுவுமே பழக்கம் ஆயிடும். ஏன் உங்ககிட்டயே அந்தச் சிக்கல் இன்னமும் இருக்குதே? பொருள் முழுமையா தன்னோடதுங்கற உணர்வு வரலீயே உங்கட்ட?” என்றார் ராகவியின் அப்பா சிரித்தபடி என்னிடம்.
திருமணம் முடிந்த அன்றிரவே, “குழந்தை குட்டின்னு இப்போதைக்கு எதுவும் வேணாமே?” என்றாள் ராகவி. அவளுடைய முடிவை ஒத்துக் கொண்டேன் உடனடியாகவே. திருமண வைபவத்தின் காரணமாகத் தொடர்ச்சியாக நண்பர்கள் விருந்துகளை எங்களுக்காக நடத்திக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் தவறாமல் எங்காவது விருந்து ஒருங்கிணைப்பு நடந்துவிடும். “ஊரே விரட்டிக்கிட்டு இருந்துச்சு. ஆனா நல்லவன் மாதிரி நடிப்பை போட்டு நீ தட்டிக்கிட்டு போயிட்ட. இருந்தாலும் நல்லா இரு” என ஒருநண்பன் உற்சாக மிகுதியில் சொன்ன போது எனக்கு அடிக்க வேண்டும் போலத் தோன்றியது. என்னிடம் பொருள் இருக்கையில் எதற்காகப் பதற்றப்பட வேண்டும் எனச் சமாதானம் செய்து கொண்டேன் அந்தச் சமயத்தில்.
கண்காட்சிப் பொருளாக அவள் இருப்பது என்பது மாறி, நான் அந்தயிடத்திற்கு வந்துவிட்டதைப் போலவும் உணர்வு தட்டுப்படத் துவங்கியது. எங்களைத் தனியாக வாழ விட்டால் போதும் எனக் கத்திச் சொல்லக்கூடத் தோன்றியது. விருந்துகளில் எனக்கு உருவான ஆர்வமின்மையை ராகவியும் உற்றுக் கவனித்தபடிதான் இருந்தாள். ராகவியின் சிறுவயதுத் தோழன் தியானேஸ் தந்த விருந்தில் அவன் கன்னத்தை ராகவியின் கன்னத்தோடு வைத்து உரசினான். பதிலுக்கு அவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவனது தோளைத் தழுவிய காட்சி எனக்குள் பதற்றத்தை விதைத்தது.
வீட்டுக்குத் திரும்புகையில், “ராகவி இனிமே இந்த மாதிரி விருந்துக்கெல்லாம் ரெண்டு பேரும் போக வேண்டாம். கொஞ்சம் கட்டுப்பட்டியான குடும்பத்தில வளர்ந்தவன் நான். தயவுசெஞ்சு என்னோட மனசையும் புரிஞ்சுக்கோ” என்றேன் அழும்குரலில். நிமிர்ந்து பார்த்த அவள், “அவனும் நானும் மூணு வயசில இருந்து ஒண்ணா விளையாடறோம். கன்னத்தில சாதாரணமா கொடுத்த முத்தம் உன்னை உறுத்துதா? ஏன் தன்னம்பிக்கையே இல்லாம இருக்க? நானுமே கட்டுப்பெட்டியான குடும்பம்தான். ஊர்மேய எங்கப்பா என்னை வளர்க்கலை” என்றாள். “முத்தம். அதுலதான் எல்லாமும் ஆரம்பிக்கும்” என்றேன் சட்டென. எதுவும் பேசாமல் கண்ணாடி வழியாக சாலையில் வண்டியின் வேகத்திற்கு இணையாக ஓடுகிற மரங்களைப் பார்த்தபடி வந்தாள் ராகவி.
அவள் கோபத்தில் இருக்கிறாளா? என ஓரக் கண்ணால் கவனிக்க முயன்றேன். எந்த உணர்வுகளையும் காட்டாமல், அமைதியாக வந்த அவள் அதற்கடுத்துச் சிலநாட்கள் என்னருகிலேயே வரவில்லை. மேற்பூச்சு கொண்ட பேச்சுக்களே மத்தியில் நிலவின. தேநீர் குடித்தபடி மேன்மாடத்தில் அமர்ந்திருந்த அவளிடம் போய் நின்று, “ராகவி கொஞ்சம் புரிஞ்சுக்கோ. என்னோட மிதமிஞ்சிய அன்புதான் அப்படி வெளிப்படுது. எனக்கே எனக்கானவள் நீங்கற பதற்றம் என்னையறியாம வந்திருது. மத்தபடி தெரிஞ்சே எல்லாம் அப்படிச் சொல்ற ஆள் கிடையாது நான். இத்தனை வருஷ பழக்கத்தில என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதானா?” என்றேன். அதை அடியாழத்தில் இருந்து சொல்வதாக நானே உணர்ந்தேன்.
நிமிர்ந்து பார்த்த அவள், “எனக்கும் தெரியும் அது. ஆனா ஒரு வார்த்தையை விடறதுக்கு முன்னாடி நல்லா யோசிக்கணும். வார்த்தை கத்திக்கு சமம்” என்றாள். “தப்புதான். என்னை மன்னிச்சிரு” எனச் சொல்லிவிட்டு அன்றைக்கு அவளை என்னுடைய வழிக்குக் கொண்டு வர அத்தனை வித்தைகளையும் காட்டினேன். வீட்டிலிருந்த செயிண்ட்ரெமி மதுக்குப்பியை உடைத்து இருவரும் குடித்தோம். அவளது இறுக்கம் தளர அவளுக்கு அதிகமாகவே ஊற்றிக் கொடுத்தேன். ஒருகட்டத்தில் அவளாகவே எடுத்துக் குடிக்கவும் துவங்கினாள். இறுதியில் படுக்கையில் வேண்டுமென்றே அந்தக் காரியத்தைச் செய்துவிட்டேன்.
அவளைக் கர்ப்பமாக்கி விட்டால் அவளுடைய வெளிநடமாட்டத்தைத் தவிர்த்துவிட முடியும் எனக் குதர்க்கமாக யோசித்து அதைச் செயல்படுத்தியும் விட்டேன். காரணம் கேட்டால், போதையில் செய்து விட்டதாகச் சொல்லி விடலாம் எனவும் திட்டமிட்டேன். மறுநாள் காலையில் பல்துலக்கிக் கொண்டு இருக்கையில், “நீ வேணும்னுதான் செஞ்சேன்னு எனக்கு தெரியும். என்னோட பீரியட்ஸ் காலண்டரை நீ முந்தாநாள் எடுத்து பார்த்ததை பார்த்தேன். இப்பக்கூட ஒருவேளை உருவாகுச்சுன்னா, என்னால கலைக்க முடியும். ஆனா அது பாவம்” என்றாள்.
உடனடியாகத் திடுக்கிடல் உணர்வு எனக்குள் உருவானது. அதை மறைத்துக் கொண்டு, “நான் சாதாரணமாத்தான் மொபைலை பார்த்தேன். அப்புறம் நடந்ததுல ரெண்டு பேருக்குமே பங்கு இருக்கே? என்னை மட்டும் எப்படி குற்றம் சொல்ற? சுகம்ங்கறது ரெண்டுபேருக்கும் பொதுவானதுதானே? தவிர குழந்தை வேணும்னு நெனைக்குறது தப்பு ஒண்ணும் இல்லையே?” என்றேன் படபடப்புடன். “குழந்தை நல்லதுதான்? ஆனா அதை உருவாக்க நினைச்ச உன் நோக்கம் தப்பு. நேர்மையா சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்” என்றாள். அதற்கடுத்து நிலைக்கண்ணாடியில் விழுவதைப் போல, கண்ணிற்குத் தெரியாத நுண்ணிய விரிசல் எங்கள் இருவருக்குமிடையில் விழுந்தது.
ஆனால் இருவருமே அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ராகவி கர்ப்பமான செய்தி கிடைத்தவுடனேயே, தாயில்லாத பிள்ளை என்பதால், என்னுடைய அம்மா உடனடியாக ஊரில் போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பி வந்து விட்டாள். அம்மாவின் அன்பில் ராகவி கரைந்து போனாள் என்றுதான் சொல்லவேண்டும். ஒருவகையில் என்மீது ராகவிக்கு இருந்த வெறுப்பை ஆதரவெனும் சோப்புக்கட்டி கொண்டு அடித்துத் துவைத்தாள் அம்மா.
அம்மா அவளைத் தாங்குகிற விதத்தில் ஆழக்குளிர்ந்து போனாள் ராகவி. என்னோடுமே அப்போது சிரித்துப் பேசிப் பழைய மாதிரிப் பழகத் துவங்கினாள். “உங்கம்மாகூட இருக்கறது என்னோட அம்மாகூடவே இருக்கற மாதிரியே இருக்குது. ரெம்பநாள் கூடவே இருந்த வெறுமை இப்ப திடீர்னு காணாம போயிருச்சு. அவங்ககூட இருக்கறது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. புதுசா இருக்கு இந்த அனுபவம். இப்படி ஒரு அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளை.” என என்னிடம் சொன்னபோது, “தெரியாம செஞ்சாலும் நல்லதுக்குத்தானே செஞ்சேன்னு இப்ப உணர்றீயா? இல்லாட்டி உன்னோட வெறுமை போயிருக்குமா?” என்றேன். அப்போது என்னை ஆழமாக உற்றுப் பார்த்துவிட்டு, சரிதான் என்பதைப் போலத் தலையை மட்டும் ஆட்டினாள்.
அம்மாவின் வழியாக பக்தி, பூஜை ஆகியவற்றில் அவளுக்குத் திடீரென ஆர்வம் பொங்கி விட்டது. இருவரும் வண்டியை எடுத்துக் கொண்டு வாரத்தில் நான்கு நாட்களாகவது கோயில் குளமெனச் சுற்ற ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் ராகவியின் பக்தியைப் பார்த்துவிட்டு நானே மெய்சிலிர்த்து விட்டேன். காலையில் சாம்பிராணி என்ன? பாட்டென்ன? பூஜை என்ன? என முழுப் பக்திப் பழமாகவே மாறிவிட்டாள். அதைப் பார்த்துவிட்டு ராகவியின் அப்பா, “புதுசா ஒண்ணை பிடிச்சு போயி பழகிட்டா இப்படித்தான் அவ சின்ன வயசில இருந்தே வெறித்தனமா தொத்திக்குவா? பழகின பழக்கத்தை உசுரு போனாலும் விடவே மாட்டா? ஏன் உங்களையுமே அப்டீத்தான் தொத்திக்கிட்டா?” எனச் சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பை உதிர்த்தார். ராகவியுமே அதைக் கேட்டுவிட்டு வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
ராகவியைப் போலவே சுருள் முடியோடு எங்களுக்குப் பாப்பா பிறந்த அன்றைக்கு மொத்தக் குடும்பமும் சகல ஐஸ்வரியங்களும் வந்துவிட்டதைப் போல உணர்ந்தோம். குழந்தை வந்தபிறகிலிருந்து என்னைப் பற்றிய புகார்களைச் சுத்தமாகக் கைவிட்டு விட்டாள். அம்மா, குழந்தை என அவளுடையது தனியுலகமாக மாறிப் போனது. நானுமே இனி அந்தப் பொருள் என்கையை விட்டு எங்கும் போகாது என்கிற ஆதார நம்பிக்கைக் கிடைத்தவனாய் அலையத் துவங்கினேன். மனதில் பலகாலம் சுமந்த பாறாங்கல் வெடித்துப் பொடிப்பொடியாய் மணல்துகளாகிக் கரைந்தும் போனது.
குழந்தைக்கு ஏழுமாதங்கள் ஆனபிறகு, என்னுடைய தங்கையின் பிரசவத்தின் காரணமாக அம்மா ஊருக்குக் கிளம்பிப் போனாள். கிளம்பின அன்றைக்கு ஏதோ அவளுடைய அம்மாவே போவதைப் போல அமர்ந்து அழுதாள் ராகவி. தன்னுடைய அம்மா அழுவதை பாப்பா தீக்ஷிதா உற்று உற்றுப் பார்த்த காட்சி எனக்குள்ளுமே நெகிழ்ச்சியைக் கிளர்த்தியது. ராகவியை நீண்டநாள் கழித்து அருகில் போய் அணைத்துக் கொண்டேன். என் சட்டை நனைகிற மாதிரி அழுது தீர்த்தாள். “தாயி ஒரு மூணு மாசத்தில மறுபடி ஓடி வந்திர்றேன். அப்புறம் காலத்துக்கும் உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன். இது சத்தியம்” என அம்மா ராகவியின் தலையில் கைவைத்துச் சொன்னபிறகே அழுகை ஓரளவிற்கு அடங்கியது.
அம்மா வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு கொஞ்சநாள் இருவருக்குள்ளும் அன்னியோன்யம் நீடித்தது. குழந்தையைப் பார்க்க வருகிறேன் என்கிற சாக்கில் அவளுடைய பழைய நண்பர்கள் சாரைசாரையாக வேண்டாத கடியெறும்புகளைப் போல வீட்டிற்கு வரத் துவங்கினார்கள். அந்தத் தியானேஷுமே வந்திருந்து ராகவியைச் சொந்தப் பொண்டாட்டி போலக் கட்டிப் பிடித்த காட்சியை எனக்குக் காணச் சகிக்கவில்லை. ராகவியிடம் ஒரு நுணுக்கமான மாற்றம் வந்திருப்பதையும் கவனித்தேன்.
அதுவரை ஆண்நண்பர்களிடம் நிற்கையில், உடல்குறித்த கவனம் அவளிடம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அந்தச் சமயத்தில் அவள் தன்னுடல் குறித்து மறந்தவளாய் எல்லோரிடமும் ஒட்டி உரசிக் கொண்டு இருந்தாள். அவர்கள் தள்ளி நின்றால்கூட இவள் அருகில் போய் அவர்களது தலைமுடியைப் பிடிப்பது, தோளைத் தொடுவது என வலிய நெருங்கிப் போனாள். தூரநின்று அவளது செய்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். தட்டிக்கேட்க குரல் உள்ளுக்குள் எழுந்தாலும், எதற்கு வேண்டாத பிரச்சினை? என அமைதியாகப் பார்த்தபடி மட்டும் இருந்தேன். அவர்கள் வராத சமயத்தில்கூட விடாமல் ஆண் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து அவள் பேசிக் கொண்டு இருப்பதையும் கண்காணித்தேன்.
இதற்கெல்லாம் என்ன தீர்வு என யோசிக்கையில், ஒரு ஏற்பாட்டைக் கண்டுபிடித்தேன். வீட்டுக்கு வந்ததும் அந்தத் தரைவழித் தொலைபேசி இணைப்பைப் பொருத்தினேன். பிறகு அவளிடம், “ராகவி செல்போன் சத்தத்தால பாப்பா பதறிக்கிட்டே இருக்கா? அதனால இனிமே உன் போனை அணைச்சு வச்சிடு. வேணும்னா நான் லேண்ட் லைன்ல கூப்பிட்டுக்குவேன். என்னை விட்டா வேற உங்கப்பாதான் உன்னை கூப்பிடணும். அவருக்கு நம்பர் ஏற்கனவே தந்திட்டேன். கொஞ்சநாள் செல்போனை தவிர்த்துடு. அது உனக்கும் வளர்ற குழந்தைக்குமே நல்லது. நானுமே வீட்டுக்கு வந்ததும் செல்போனை அணைச்சு வச்சிரலாம்ணு இருக்கேன்” என்றேன் பொறுமையான குரலில்.
என்னை நிமிர்ந்து பார்த்த அவள், “என்னை அடைச்சு வைக்க பார்க்குறீயா? காற்றை கடுகு மாதிரி டப்பாவில அடைச்சு வைக்க முடியாது” என்று சொல்லிவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். அதற்கடுத்து இருவருக்குள்ளும் சூடான உரையாடல்கள் நடக்கத் துவங்கின. இன்ன காரணத்திற்காகத்தான் என்றில்லாமல் எதையெடுத்தாலும் கடுமையாகப் பேசிக் கொள்கிற மாதிரியான சூழல் அமைந்தது. பெரும்பாலும் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, என்னிருப்பையே மதிக்காமல் அவள் ஒரே வீட்டிற்குள் தனியாகப் புழங்கிக் கொண்டிருப்பது எனக்குள் எரிச்சலை மண்டச் செய்தது.
அவளுடைய அப்பாவிடம் அரசல்புரசலாகச் சொன்ன போது, “அவளோட குணம் அது. நீங்க மேற்கொண்டு நோண்டாம விட்டுட்டீங்கன்னா அவளாவே சரியாயி மறுபடி பழைய இடத்துக்கே வந்திடுவா” என்றார் அமைதிப்படுத்தும் நோக்கில். வீட்டுக்குள் நுழைந்ததும், “பிரச்சினை நம்ம ரெண்டு பேருக்குள்ளையும்தான். அடுத்தவங்கட்ட போயி ஒப்பாரி வைக்கக்கூடாது. உன்னைவிட உங்கம்மாவுக்கு நான் ரெம்ப நெருக்கம். அதுக்காக நான் போயி ஏதாச்சும் சொன்னேனா? எப்ப பார்த்தாலும் குறுக்கு வழியிலயே உன் புத்தி போகுது. சத்தியமா நீ உங்கம்மா வயித்துல பொறந்திருக்கவே மாட்ட” என்றாள்.
அதை அவள் சொன்ன விதம் எனக்குள் ஆழமான காயத்தை உண்டு பண்ணியது. “நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கற அன்னியோன்யத்தை பத்தி மாமனார்ட்ட பேசுனது தப்பே இல்லை. நீ ஊர்ல போற வர்றவனுககிட்ட எல்லாம் வம்படியா உரசிக்கிட்டு நிக்கறதை பத்தியா நான் சொன்னேன்?” என்றேன். சத்தம் வருகிற மாதிரிப் படுக்கையறைக் கதவை அறைந்து சாத்தினாள். அந்தச் சத்தத்தைக் கேட்ட பாப்பா உள்ளே இருந்து ”அப்பா” எனச் சொல்லிக் கத்தி அழத் துவங்கினாள்.
கோபம்வந்து வெளிக்கதவை நீண்டநேரமாகத் தட்டிப் பார்த்துச் சோர்ந்து வரவேற்பறையிலேயே தூங்கிவிட்டேன். இரவு எழுந்து பார்த்த போது, அவள் சமையலறைக்கு வந்து சென்ற தடயங்கள் தெரிந்தன. விடியற்காலையில் எனக்கொரு வேலை இருந்ததால் சீக்கிரமே கிளம்பிப் போய்விட்டேன். ஆனாலும் அப்படிச் சொல்லி இருக்கக்கூடாது என மனம் அலுவலகத்தில் இருக்கையில் அரித்துக் கொண்டே இருந்தது. பிரியாவிடம் தயக்கத்துடன் நடந்ததைச் சொன்ன போது, “டேய் பைத்தியமாடா நீயி? குழந்தை பெத்த அந்த நேரத்தில உடம்பு பத்தின கவனம் தற்காலிகமா போயிடும்டா?” என அவள் சொன்ன ஆழம் என் தலையில் ஏறவேயில்லை. உடனடியாகப் ராகவியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் செய்யவே மனம் துடித்தது. அலுவலத்தில் சொல்லிக் கொண்டு சீக்கிரமே கிளம்பிப் போய்ப் பார்த்த போதுதான் ராகவியைக் காணவில்லை.
வீட்டின் அலங்கோல நிலை பார்வைக்குத் தட்டுப்பட்டதும் பதற்றமாகி இழப்புணர்வை எட்டினேன். குழந்தையோடு எங்கே போயிருப்பாள்? தற்செயலாக அழைப்பதைப் போல அவளுடைய அப்பாவை அழைத்துப் பார்த்தேன். அங்கே அவள் செல்லவில்லை என்பது உறுதியானது. ஏதாவது கோயிலில் போய் அமர்ந்து இருப்பாளா? என யோசனை வந்தது. ஏனெனில் அப்படி ஒருகாட்சியை ஏற்கனவே பார்த்தும் இருக்கிறேன். மேல்மருவத்தூர் கோவிலுக்குப் போன போது, இரண்டு குழந்தைகளுடன் ஒருபெண் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து அங்கே அழுதபடி அமர்ந்திருந்தாள்.
அதில் ஒரு குழந்தை பசியில் அழுதபோது, அதற்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுக்கக்கூட வழியில்லாமல் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு, கையில் இருந்து காசை எடுத்துக் கொடுத்த சம்பவத்தையுமே நினைத்துப் பார்த்தேன். அம்மா காட்டித்தந்த ஏதாவதொரு கோயிலில் ராகவியும் குழந்தையுடன் அப்படிப் போய் அமர்ந்து இருப்பாளோ? என்கிற யோசனையும் வந்தது. ராகவியின் தோழிகள் என எனக்குத் தெரிந்த சிலரை அழைத்துப் பட்டும் படாமல் பேசிப் பார்த்தேன். அங்கேயும் அவள் செல்லவில்லையெனில், வேறு எங்குதான் போயிருப்பாள்?
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த போது, எங்களுடைய நண்பனொருத்தன் எனக்கு அழைத்து, “நாம வழக்கமா ஈ.ஸி.ஆர்ல பார்ட்டி பண்ண பங்களா ஒண்ணுக்கு போவோமே? அங்க ராகவி குழந்தையோட நடந்து போற மாதிரி சட்டுனு தெரிஞ்சுச்சு. ஆனா உறுதியா சொல்ல முடியலை. எங்க சீனியரோட கார்ல வந்துகிட்டு இருந்ததால என்னால இறங்க முடியலை. அவளோட போனுக்கு கூப்பிட்டா அது போக மாட்டேங்குது. என்னன்னு பாரு” என்றான்.
அந்தக் கணத்தில் எனக்குள் வெறி, நாய்க்கே உரித்தானதைப் போல மூர்க்கமாக எட்டிப் பார்த்தது. அந்தயிடமா? அங்கே உள்ளே புகையும் குடியும் சத்தமும் நிறைந்திருக்குமே? அங்கே ஒலிக்க விடப்படுகிற சத்தத்தைக் கேட்டால், குழந்தையின் காது செவிடாகக்கூடப் போக வாய்ப்பிருக்கிறதே? என்ன செய்கிறாள் அவள்? என விடாமல் அரற்றியது மனம். இன்னொரு விஷயமும் எனக்கு அப்போது நினைவில் வந்தது.
சாலைகளில் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுப்பவர்கள், அக்குழந்தையை வாடகைக்கு எடுத்து வருவது எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் குழந்தைகளுக்கு பான்பராக் மாதிரி ஏதாவது போதையைக் கொடுத்து தூங்கச் செய்து இருப்பார்கள். எவ்வளவு வெயிலடித்தாலும் அது கண்ணைக்கூடத் திறந்து பார்க்காமல் தூங்குவது அதன் காரணமாகத்தான். அப்படி பாப்பாவிற்கு ஏதாவது புகட்டியிருப்பாளோ ராகவி? என்கிற சந்தேகமும் எனக்குள் வந்தது.
யாருக்கும் இந்தச் செய்தி தெரிந்துவிடக்கூடாது என்கிற கவனமும் இயல்பாக எழுந்தது. பந்தயத்தில் ஈடுபடுகிறவனைப் போல வண்டியை விரைந்து ஓட்டிக் கொண்டு போகையில் சாலையில் எனக்குப் பிறகாட்சிகளே தெரியவில்லை. ராகவி இடுப்பையாட்டி ஆடுவதைப் போலவும், என் குழந்தை தனியாக நாற்காலியொன்றில் தூங்குவதைப் போலவும் காட்சிகள் எழுந்தன உள்ளுக்குள்.
அந்தயிடத்தை அடைந்ததும் இறங்கிய என்னைப் பார்த்து அங்கே நின்ற காவலாளி, “இன்னைக்கு பார்ட்டி ஒண்ணும் நடக்கலீயே இங்க” என்றான். எனக்கு உடனடியாக ஆசுவாசமாக இருந்தது. அவனைப் புறக்கணித்துவிட்டு, மெதுவாக எனக்கு நன்றாகத் தெரிந்த, மரங்களடந்த அந்த இடத்தைச் சுற்றிக் கொண்டு எண்ணங்கள் மண்டையிலறைய நடந்தேன். தூரத்தில் ஒரு மரத்தினடியில் குழந்தையை மடியில் கிடத்தி தொலைவில் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் ராகவி.
அவள் அமர்ந்திருந்த காட்சியே கருணையைக் கோருகிற மாதிரி இருந்தது. காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் பறவையொன்றிற்கு இருக்கிற கூருணர்வுடன் பட்டெனத் திரும்பிப் பார்த்தாள் ராகவி.
நான் அருகில் போனதும், “சும்மா வந்து உக்காந்துட்டு போகலாம்ணு தோணிச்சு. என்னை விட்டுறேன் கொஞ்ச நேரம்” எனச் சொல்லிவிட்டு ஓங்கிச் சத்தம் போட்டு அழத் துவங்கினாள். வெண்கலமணிச் சத்தத்தையொத்து இருந்தது அவ்வழுகை.
அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்த பாப்பாவின் உதட்டில் அழுகையினூடே முத்தம் கொடுத்தாள் அனிச்சையாய். வண்டியை நிறுத்தியிருக்கிற இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தீர்மானித்தேன்.
கருங்காகம் அங்கே ஓடுகிற எலியொன்றை விடாமல் கொத்தித் துரத்துகிற காட்சி தட்டுப்பட்டது அப்போது.